Thursday, September 06, 2018

அபிராமி அதில் ஒருத்தி....

இரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை
மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்ற செய்தி மனதை உருத்திக்கொண்டே இருந்தது.

தாய்மைக்குள் எப்படி இந்த சுயநலம் வந்தது.அந்த குழந்தையின் பிறப்பு தாய்க்கு ஏதோ ஒரு சமூக  அவமானத்தை ஏற்படுத்தியிருக்கலாம் அவமானச்சின்னமாக அல்லது ஏமாற்றப்பட்டதன் எச்சமாக என்று மறுபக்க தார்மீக காரணங்கள் இருந்தாலும் அந்தக்குழந்தை செய்த தவறு என்னவென்றும் குறைந்தபட்சம் கொல்லாமல் விட்டுச்சென்றிருக்கலாம் என்று பல யோசனைகள்.

நிற்க

அபிராமி கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி இருக்கிறார்.
காரணமும் இருக்கு. இரு குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்டிருக்கிறது.
தாய்மை சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு தாயின் சுயநலம் இரு குழந்தைகளின் உயிர் போகக்காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்லும் இதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு தனிபட்ட விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாதா என்றும் உடல் தேவைகள் குறித்த உளவியல்களை கொண்டு சமன் செய்யப்பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பச்சிளம் குழந்தைகள் அவர் செய்த குற்றம் தான் என்ன என்றே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது?

கணவன் மனைவி உறவுச்சிக்கல்களில் கள்ளக்காதல் எங்கே தொடங்கி எப்படி முடிகிறது?  கேள்விகளை அடுக்கும் போது இந்த சமூக வலைதளம் ஒரு கட்டற்ற வெளியை திறந்துவிட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை ...

திருமணமான குழந்தைகளுடன் இருக்கும் முகப்பு படத்தை கொண்டிருக்கும் பெண்களின் புகைப்படத்தை விமர்சிப்பது தொடங்கி உடல் எடையை குறைக்
கலாமே தோழி என்று பேச்சுக்கள் நீண்டு உள்பெட்டிகள் ஒரு மர்ம தேசமாக மாறிப்போய் திடீரென அந்த ஐடி காணமல் போவது என்று விசித்திரங்கள் நிறைந்தது இந்த முகநூல்.

பேரிளம் பெண்கள் தங்களுக்கு சொந்த வீட்டில் கிடைக்காத பாராட்டை யாரோ ஒருவர் எதேச்சையாக கொடுக்கும் போது உச்சிகுளிர்ந்து போகிறார்கள்.தங்களின் பலம் மற்றும் பலகீன புள்ளிகளை சட்டென ஊரறியச்செய்யும் போது சிக்கல் அதிகமாகிறது.

அபிராமி செய்தது சரியா தவறா என்றெல்லாம் பூவா தலையா போட்டு பார்க்கத்தேவையில்லை.அவர் செய்தது மனித தன்மையற்ற செயல் என்பதில் உறுதியாக இருப்போம். கள்ளக்காதலில் எந்த வித ஒத்த கருத்தும் இருக்கத் தேவையில்லை
Image result

மேலும்,  அவர்களுக்குள்ளே எந்த உண்மைத்தன்மையும் பரஸ்பரத்தையும் எதிர்பார்க்க முடியாது. கண்டிப்பாக சுய நலமான இந்த வாழ்க்கை எதையும் செய்யத்தூண்டும் இதில் ஆண்களிடம் இருக்கும் தெளிவு பெண்களிடம் இருப்பதில்லை.ஆண்கள் எந்தப்புள்ளியிலும் இவ்வித தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை பெரும்பாலும் இந்த திரைமறைவு வாழ்க்கையை அனுபவித்துவிட்டு சேபர் சோனுக்கு வரத்தயங்குவதில்லை.

பெண்கள் அந்தரங்களை எளிதில் பகிர்ந்துகொள்வதால் ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்த சூழலை விட்டு வெளி வரமால் இதை தொடர்வதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகிறார்கள்.அபிராமி அதில் ஒருத்தி.

இங்கே ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பவர்கள் தான் அதிகம்.திருமண ஒப்பந்தம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சில வரையறைக்குள் வாழ வேண்டியிருக்கிறது.அது தான் அந்த உறவு நீடிப்பதற்கான அச்சாரம்.
எத்தனையோ சிக்கல்கள் வேறுபாடுகள் இருந்தாலும் ஏதோ ஒரு பிணைப்பு ஒட்டுதல் தான் அதனை அத்து விடாமல் தேங்காய் மூடியை நாய் உருவட்டுவது போலாவது ஆயுசுக்கும் உருட்டி கொண்டே இருக்கின்றோம்.இந்த திருமண பந்தத்தில் ஒருவர் முறை தவறினாலும் சர்வமும் நாசம்.திருமண வாழ்வை அதன் நிபந்தனைக்கு உட்பட்டு வாழ்வது தான் அறமும் ஆகும்.

சிலர் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் ஈஸி கோயிங் லைப் ஸ்டைலை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்.இவர்கள் திருமணத்தின் மீது எந்த பிடிமானமும் இல்லாதவர்கள்.நிலைப்பாட்டில் தன்வரையிலாவது தீவிரமாக இருப்பவர்கள்.
மூன்றாவது வருபவர்களுக்கு சோஷியல் ஸ்டேட்டஸூம் வேண்டும் அதே நேரம் தனக்கான ஃப்ரீ லைப்ஸ்டைலும் வேண்டும். இந்த பொருந்தாக்காமத்திற்காக எதையும் பணயம் வைக்க தயங்குவதில்லை.அபிராமி போன்றவர்கள் இந்த வகைறாவை சேர்ந்தவர்கள்.

பெரும்பான்மையான மக்கள் நிபந்தனைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஆனந்தமாகவோ அழுதழுதோ வாழ்ந்து செத்துப்போகிறார்கள். ஒரு சிறு கூட்டம் நிபந்தனைகள் அற்ற வாழ்க்கை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கற்று ஜெயித்து தோற்று ஒரு நாள் செத்துப்போகிறார்கள்.

மூன்றாவதாக ஒரு கூட்டம் நிபந்தனைக்கு உட்பட்டு வருகிறேன் என்று வந்து பின் அதிலிருந்து வழுவி தனக்கும் இல்லாமல் பிறருக்கும் இல்லாமல் ஒரு போலியான கட்டமைப்பில் சிக்கி கொலை கொள்ளை மோசடி துரோகம் என்று ஏதோ ஒன்றுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இந்த சமூகத்திற்கான ஒரு வார பேசுபொருளாகி காணாமல் போகின்றார்கள்.

அபிராமி அதிகம்போனால் ஒரு மாத பேசுபொருளாக இருக்கலாம் அதற்கு அவர் கொடுத்த விலை இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர்.

ஆக்கம் :
சபிதா காதர் (அரக்கோணம்)

No comments:

Post a comment