Saturday, July 09, 2016

பள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் ! -சாதனைப் பெண்மணி மலிக்கா ஃபாரூக்


       கவிதைநிகழ்வுகளை சுவாரசியமாக ரசிக்கவும், ரசிக்க வைக்கவும் எழுத்துக்களில் வடிக்கத் தெரிந்தவர்களுக்கு வசப்பட்ட எளிதான கலை. ஆனால் பொய்ப் புனைவுகளை விதைக்காமல், மிதமிஞ்சிய கற்பனைகளை புகுத்தாமல், ஆபாசங்களை துளியளவும் திணிக்காமல், கண்ணியம் பேணும் எழுத்துக்கள் மூலம் கவிதை படைத்து சாதிப்பதெல்லாம் எளிதான காரியமில்லை. எழுத்துக்கும் ஓர் எல்லை உருவாக்கி அதில் சாதித்துவரும் பெண் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
 • ·         இதுவரை இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார், இரண்டுமே பிரபல பதிப்பகமான  மணிமேகலை பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.
 • ·         அமீரகத்தில்  , இலங்கை காப்பியக்கோ திரு ஜின்னாஹ்  ஷரிபுதீன்  அவர்களால்  தமிழ்தேர்  மாதயிதழ்  விழாவில்  முதல் விருது வழங்கப்பட்டது 
 • ·         இவரின் முதல் கவிதை நூல் "உணர்வுகளின் ஓசை" கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையால் 2011ம் ஆண்டின் சிறந்த நூலாய் தேர்வுசெய்யப்பட்டது
 • ·         இரண்டாம் நூலான "பூக்கவா புதையவா" அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகத்தால் சிறந்து நூலென தேர்வுசெய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது.
 • ·         இலங்கை தடாகம் நடத்திய உலகலாவிய கவிதைப்போட்டியில் முதலிடம் வந்து "கவியருவி"யெனும்  பட்டம் வழங்கப்பட்டது.
 • ·         திரு  மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் "கையருகே நிலா நூல் வெளியீட்டு விழாவினை தொகுத்துவழங்கிய  இவரின் தமிழை ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘ அழகிய தமிழ் உச்சரிப்பு என  பாராட்டிச் சென்றார்.
 • ·         முத்துப்பேட்டையில் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடந்த “முதல்  பெண்கள் விழிப்புணர்வு" மாநாட்டை தொகுத்து வழங்கினார்.
இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரர் ஐந்தாம் வகுப்பையும் தாண்டாதவர் எனில் இன்னும் ஆச்சர்யம் தொற்றிக்கொள்கிறதா? சகோதரி மலிக்கா ஃபாரூக்அவர்கள் தான் இத்தனைக்கும் சொந்தக்காரர். இம்முறை சாதனைப் பெண்மணி பகுதியை அலங்கரிக்கவிருக்கிறார்.

 அச்சில் இருக்கும் அடுத்த  கவிதை நூலுக்கான வேலை நடந்துக்கொண்டிருக்க,  இணையதளத்திலும் , சமூக வலைதளங்களிலும்  தொடர்ந்து  கவிதைகளோடும் சமூக அக்கறைக்கொண்ட பதிவுகளோடும் வலம் வர,  பொழுதுபோக்காய் தன் வீட்டின் ஒரு பகுதியில் சேலை , புர்காக்களை விற்பனைக்கு வைத்து , சிங்கப்பூர்-துபாய் உட்பட பல  நாடுகளிலிருந்தும்  இறக்குமதி செய்து புதிய ரகங்களை அறிமுகப்படுத்தும் அவரின் பொட்டிக் கூட எப்போதும் பரபரப்பில்….  ரமலானில் களைகட்டும் தன் வியாபாரத்தின் நடுவில்  சகோதரி மலிக்கா ஃபாரூக் அவர்களை  சாதனைப் பெண்மணிக்காய் அமர வைத்து பேச்சை துவக்கினேன்.
எப்போதிலிருந்து கவிதை எழுத தொடங்கினீர்கள்?
14 வயதிலிருந்து. இலக்கணமோ இலக்கியமோ அறிந்திடா சிறுவயதிலிருந்தே கவியின் மீது தீராக் காதல். ஆனால் அப்போதெல்லாம் இது கவியா  இல்லை பாட்டா இல்லை வர்ணனையா என்பதெல்லாம் தெரியாது. எண்ணத்தில் ஊறுவதையெல்லாம் 2.50பைசா நோட்டுகளில் எழுதியெழுதி அதையே திரும்பப்படித்து இதெல்லாம் நாமா எழுதினோமென்று மகிழ்வேன்.

ஒருவேளை அதிகம் படித்திருந்தால் இன்னும் சாதனை படைத்திருக்கலாம் தானே?
படிப்பால் மட்டுமே வருவதல்ல சாதனைகள். அதிகம் படிக்காமலே
படிப்பினைகளிலிருந்து சாதனைகளை புரியலாமென்பதை பலர் நிருபித்து இருக்கிறார்கள்... அந்த வரிசையில் என்னையும் இடம் வைத்திருக்க இறைவன் அருள்புரிவானாக  (ஆமீன்). கல்வியென்பது கற்றறிதல் மட்டுமல்ல பெற்றறிதலிலும் போதிக்கப்படுகிறது. இறைவன் சிலருக்கு கல்விஞானத்தை அதிகப்படுதுகிறான், சிலருக்கு ஞானக்கல்வியை ஊற்றுவிக்கிறான்.இறைவன் இன்னதுதான் தரவேண்டுமென்ற ஏற்பாட்டின் பேரிலேயே எனக்கான இவ்வறிவு கொடுக்கப்படுள்ளதென நம்புகிறேன்.
கல்வி எனக்கு மறுக்கப்படவில்லை , மாறாக அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை, அதற்கும் காராணமிருக்கும் இறைவன்புறத்தில்! இக்கல்வியே எனக்கு போதுமானதாக்கி அதிலேயே நிறைவையும் அதன்மூலம் இறையுணர்வோடு கலந்த எழுத்துணர்வையும் அதன்வழியே சாதிக்கும் திறனையும் தந்து என்னை நானே வியக்கும்படி செய்யயெண்ணிய எழுத்தறிவித்தவனுக்கே என் நன்றிகள் எந்நாளும்.
                                       

பொதுவாகவே கவிதை கூடாது-  என்ற மேலோட்டமான கருத்துக்கள் ஆழமாக பதியவைக்கப்பட்டுள்ளது நம் மக்களிடத்தில். அப்படியிருக்க, விமர்சனங்களும் சந்தித்திருப்பீர்களல்லவா.அதுபற்றி
ஆம் . இதுபோன்ற சர்ச்சைகளும் அதற்கான விளக்கங்களும் அவ்வபோது நிகழ்ந்துகொண்டிருப்பவையே. எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும்  விமர்சிப்பவர்கள் ஏற்பதில்லை. சொன்னதையே திரும்பச் சொல்வார்கள்.
முதலில் ஒரு தெளிவு. தாங்கள் சொல்லியதுபோல் இறைவழி தூதர்நெறியை மேலோட்டமான புரிதல்கொண்ட இஸ்லாமியர்களுக்கு கவிதை பாரதூரமான விஷயமாக தெரிகிறதே தவிர உள்ளர்த்தம் கொண்டு இவ்வுலக வாழ்வின் அனைத்துக்கும் வழிவகுக்கும் இஸ்லாத்தில் இது  தடை செய்யப்பட்டதில்லை.

உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ளஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள். உண்மையை நுண்ணறிவைக்கொண்டு ஊடுருவி வெளிக்கொணரும் வலிமை கவிதைக்குண்டு.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்!கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.

இட்டுக்கட்டப்படும் இறைக்கு மாறுபட்டு இணைவைக்கப்படும் சொற்களைக்கொண்டு புனைக்கப்படுபவைகளையே இஸ்லாத்தாலும் இறைத்தூதராலும் தடுக்கப்பட்டுள்ளது.கவிதைகளெல்லாம் பொய்என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும்,கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.

இது அன்றையகால இறைநிராகரிப்பின் பொய்மைப்புலவ கூட்டதினருக்காக இறக்கப்பட்ட வசனங்கள் . இது இன்றைக்கும் பொருந்தும் தான். பொய்களை சுமந்து, இட்டுக்கட்டப்பட்ட இழிவான சொற்களைக்கொண்டு இறைநிராகரிப்பின்பக்கம் அழைத்துச்செல்லும் கவிதைக்கும் இச்சைகளை கற்பிக்கும் வகையில் எழுதும் கவிஞர்களுக்கும் இது பொருந்தலாம். மாறாக இறைசொன்ன இறைதூதர்சொன்ன வரம்பின்கீழ் வரக்கூடிய அனைத்து கவிதைகளும் நிராகரிக்கப்பட்டவையல்ல,ஹராமாக்கப்பட்டவைகளல்ல என்பதை அழுத்தமாய் சொல்லிக்கொள்கிறேன்.

பல பிரபல எழுத்தாளர்களின்  நட்பு வட்டத்திலும் இருக்கிறீர்கள் போலும். ஊக்குவிக்கிறார்களா? என்ன மாதிரியான அறிவுரைகள் சொல்கிறார்கள்?
பிரபலமான கற்றறிந்த அறிஞர்கள் எழுத்தாளர்களுடன் சந்திக்கும் வாய்ப்புகள் , இவ்வெழுத்தால் இந்த கத்துக்குட்டிக்கும் கிடைக்கிறது அல்ஹம்துலில்லாஹ். அவர்களில் சிலரின் ஊக்கமும் உந்துதலுடைய கருத்துக்களடங்கிய பேசுக்களும் , இன்னும் எழுத்தின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது.

 உயிரோட்டமுள்ள உணர்வுப்பூர்வமாய் அமைகிறது உன் வரிகள். மேலும் மரபையும் கற்றுக்கொள் ,மகுடமாய் அமையும்’மென அன்பு அறிவுரைகளோடு, “சிலரைபோல் பெயருக்காக புகழுக்காக கவிதையென்ற பெயரில் இச்சைகற்பிக்கும் கழிவுகளை எக்காரணம் கொண்டு உன் வரிகளுக்குள் வரக்கூடாது. உனக்கென ஒரு தனிதிறமை வைத்து ,செயல்படும் உன் போக்கிலேயே  செல். அதுவே உன் திறமைக்கு சான்றாய் அமையும்”மென உளமார்ந்த அறிவுரைகளாலும் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள் . அத்தகையவர்கள் அனைவருக்கும்  என் நெஞ்சார்ந்த நன்றிகள் இந்நேரத்தில் சமர்பிக்கிறேன். 

முதலிரு  புத்தகங்கள் பிரபலமான பதிப்பகம் வெளியிட்டது குறித்து…

தமிழ்குடும்பத்தில்(இணையதளம்) எனது எழுத்துக்கள் பிரசவித்தபின்பே பலருக்கு என்னை தெரியவும், எனக்கு பலரை அறியவும் வாய்புகள் கிடைத்தது. அதிலிருந்து அமீரக தமிழ்தேர் மாதழில் எழுத சகோதரர் சிம்மபாரதி அழைப்புவிடுத்து, அதிலிருந்து அறிமுகமான பத்திரிக்கை ஆசிரியர் சிறுகதை எழுத்தாளர் சகோதரர் திருச்சி சையத் அவர்கள் மூலமே இலங்கை காப்பியக்கோ. திரு ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள், நர்கீஸ் மாத இதழ் ஆசிரியர் அனீஸ்பாத்திமா அவர்கள் மற்றும் மணிமேகலை பிரசுரத்தின் நிறுவனர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அமீரகத்தில் கிட்டியது. அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது தங்களின் கவிதை தொகுப்பை எங்களின் பிரசுரம் வெளியிடலாமே என்றார்கள்.மனதில் பட்டாம்பூச்சி படபடக்க எவ்விதமறுப்புமின்றி நானும் என் கணவரும் சரியென்றோம். அதன் வெளிப்பாடாய் உணர்வுகளின் ஓசை என்ற முதல் தொகுப்பை அழகிய முறையில் வடிமைத்துகொடுத்தார்கள்.அதன் வெளியீடு துபையில் நடந்தது. அதன் பின்பு இரண்டாம் நூல்   அண்மையில் வெளியிட்டார்கள். அடுத்த படைப்பும் விரைவில். (இன்ஷா அல்லாஹ்) ஒரு பெரிய பிரசுரத்தால் வெளியான எனது இரு நூல்களும் சிறந்த அங்கீகாரங்களை பெற்றது மனநிறைவை தருகிறது. இன்னும் எழுதும் ஆவலை ஊட்டுகிறது.

எழுத்துக்கு எல்லை விதிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்போதிலிருந்து உங்களுக்கு தோன்றியது.
என் எழுத்து எப்போதுமே ஒரு எல்லைக்குள் இருப்பதையே
விரும்புகிறேன்.அதனை செயல்படுத்தியும் வருகிறேன். எழுதத்தொடங்கிய காலம் முதலிலேயே இதனைக் கடைப்பிடித்தும் வருகிறேன்.
இறைவனை நேசிப்பவளென்பதை சொல்லில் மட்டுமல்ல செயலிலும் இருத்தல் வேண்டுமென்பதில் கவனம் கொள்கிறேன். இறைவனின் வார்த்தைகளை மீறிநடக்க எனக்கு அனுமதியில்லை, அதை விரும்பியதுமில்லை. கவிதை என்பது எப்படியிருந்தால் நலமென்ற வரையரை வகுத்துள்ளானோ அதன் படியே செயலாற்றவே முடிந்தவரை என் கவியில் பொய்கலப்பதை தவிர்க்கிறேன். உண்மைத்தன்மையை உணர்வுகளின் வழியே. வலியாக, வாஞ்சையாக, குமுறலாக, சாடலாக, காதலாக, அதேசமயம் கண்ணியமாக எடுத்துரைக்கவே முனைகிறேன் .இனியும் அதன்படியே தொடர்வேன். (இறைநாடின்)

இன்றைய பெண்ணியம் பேசும் கவிதாயினிகளெல்லாம் புரட்சி எனும் பெயரில் ஆபாச வார்த்தைகள் கொண்டு கவிதை (?) எழுதுவதும், அவ்வார்த்தைகளையே புத்தக தலைப்பாக வைப்பதும் சக கவிதாயினியாக எப்படி பார்க்கிறீர்கள் ?
‘’ஆபாசமென்பது நோக்கும் பார்வையைப் பொருத்ததெனச்’’ சொல்லி ஆபாசத்திற்கு பாசனநீர் பாய்ச்ச விரும்பவில்லை.இச்சைகள் கற்பிக்கும், ஆபாசங்கள் புகுத்தும், எதுவுமே மனிதகுலத்திற்கு கேடுகளையே விளைவிக்கும். இது ஆணியம், பெண்ணியம் பேசும் அனைவருக்கும் பொருந்தும்.

ஆபாச உடையணிந்தது மனதை ஈர்க்கும் எழுத்தைவிட ஆத்மார்த்ததின் வழியே நிறைவடைந்து உணர்வுகளைச்சாரும் கவிதையே காலத்தால் அழியாதது. “அரைகுறையும்,அம்மணமும் ஆபாசத்தை சார்ந்ததல்ல அதை நோக்கும் எண்ணத்தை சார்ந்ததே”- என்ற குருட்டு விவாதத்தை நான் ஏற்பதில்லை.பெண்ணாகட்டும் ஆணாகட்டும் இருபாலரும்  கண்ணியமும் அதேசமயம் கடமையும் எழுத்துக்களுக்குள்ளும் பேணுதலோடு ஊடுருவச்செய்வது மிகவும் அவசியமாகும்.

எழுத்து இலக்கைநோக்கித் தாக்குவதில் ஆயுதத்தைவிட கூர்மையானது. அதேசமயம் இதயத்தை இலகுவாய் புரட்டும் நெம்புகோலும்கூட!  அதில் புரட்சியென்ற பெயரில் இச்சைகற்பித்தல், ஆபாசம் புகுத்துதல் அனைத்தும் எண்ணங்களுக்குள் கேடுகளை விதைக்கக்கூடியது.  அதனால் கிடைக்கும் பேரும் புகழும் வெறும் கானல்  என்பது என் கருத்து.

கட்டுபாடற்ற எழுத்துக்களுடன் அத்தகைய எழுத்தாளர்கள் அடங்கிய ஓட்டப்பந்தயத்தில் போட்டிபோட்டு உங்களுக்கென்று ஓர் இடம் தக்கவைப்பது சிரமம் தானே?
இல்லை எனக்கு சிரமமேயில்லை.
கவிதைக்கு பொய்யழகு என்பதையும் கடந்து, கவிக்கு மெய்யுமழகு அது மெய்யின் உணர்வு என்பதை ஊடுருவச்செய்ய எண்ணுமெனக்கு இதில் சிரமமேதுமில்லை.
கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு கடிவாளத்தை அவிழ்த்துவிட்டு, காடெது கரையெது என்று கண்மண் தெரியாது ஓடி,  கடைசியில் பத்தோடு பதினொன்றாக களத்திலிருக்க களைதிருக்க எண்ணவில்லை. மாறாக,
உணர்வுகளை உந்தச்செய்யும் எழுத்தை பிரசவித்து, உண்மைதன்மையோடு கூடிய நற்கற்பனைச் சிந்தைகளை தூண்டக்கூடிய வலுவை, படிக்கும் எண்ணங்களுக்குள் ஊடுருவச்செய்யும் தாய்மையாய் கவிதைகளின் ஓட்டப் பந்தயத்தில் களமிறக்குகிறேன் என் கவிக்குழந்தைகளை !

எனது இலக்கு பிறரை ஜெயிப்பதல்ல, என்னை ஜெயிப்பது. பொய்களின் கற்பனைக் களத்தில் உண்மைகளை  உணர்வுகளோடு கலந்து ஓடவிட்டு, அது தனதிலக்கை தொடுகையில் ஆத்மார்த்தங்களை நிரப்பி என்னோடு சேர்த்து பிறரையும் வெல்லுமென்ற  நம்புகிறேன்.

கவிதைக்களப் போட்டியில் வென்று, இடத்தை தக்கவைப்பதைவிட உணர்வுகளால் ஊடுருவி சில இதயங்களிலாவது தங்கிக்கொள்ள எண்ணுகிறேன் . தங்குவேன்!  இதயங்களில் எனக்கான இடத்தை தக்கவைப்பேன்.(இறைநாடின்)

ஹிஜாப் உடன் மேடை ஏறுவதும், தனித்து நீங்கள் தெரிவதும், அப்படி தெரிகையில் உங்களைப் பற்றி குறுகுறுக்கப் பேசுவதுமான சந்தர்ப்பங்கள் சங்கடமாய் இல்லையா??? அல்லது அப்படியான சூழல்கள் இதுவரை அமைந்ததில்லையா?
அப்படியான சூழலலை நான் இதுவரை சந்திக்கவில்லை. பலமாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் ஹிஜாப் அணிந்து அமர்ந்திருக்கையில் கெளரவிக்கப்படுவதாகவே உணர்கிறேன்.

முதல்முதலில் நான் அமீரக மேடையில் முகம் மூடியநிலையில் கவிதை வாசிக்கத்தொடங்கியபோது சிறுநடுக்கம் கலந்த தடுமாற்றம் உணர்ந்தாலும் ஏதோ ஓர் உறுதுணை என்னைச் சுற்றியிருபதுபோல் உணர்ந்துக்கொண்டு முழுக்கவிதையும் வாசித்து முடித்தபோது எழுந்த கரகொலி என் கண்களை குளமாக்கியது. மூடியிருப்பது உடலே தவிர அதனை செயல்படும் மூளையல்ல என்பதையுணர்ந்து, மனம் திடமுணர்ந்தது.

என்னை ஈமானியத்தோடு பாதுகாக்கும் ஹிஜாபோடு மேடையேறுவதையே விரும்புகிறேன். இதனால் பிறர்  என்ன நினைப்பார்கள் என்ன பேசுவார்கள்  என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. எனக்கு முக்கியத்துவம் தருவதைவிட என் எழுத்துக்கு தரப்படும் முக்கியத்துவத்தையே விரும்புகிறேன். நான் நேசிக்கும் இறைவனைப்போல் அவனுடைய கட்டளைகளையும் நேசிக்கிறேன். அதிலும் ஹிஜாப் எனது மானம், உயிர் இரண்டும் காக்கும் கேடயமாய் எண்ணுகிறேன்.

எத்தனையோ மேடைகளில் நான், தனித்திருப்பதை உணர்வேன்.  தாழ்வாக அல்ல உயர்வாக !  அவ்வெண்ணம் என்னை தனித்து கண்ணியப்படுத்தப்படுவதாய் பெருமிதமும் கொள்வேன்.
ஆயிரம் மேடையென்ன? அகிலமெங்கும் வலம் வந்தாலும் ஹிஜாபின்றி  எந்த ஓர் நிகழ்வும் செயலும் எனக்கு உயர்வுமில்லை! அதைத் துறந்த பேரும் புகழும் எனக்கு தேவையுமில்லை.

உங்கள் எழுத்துப்பயணம் எதை நோக்கியிருக்கும், எதை இலக்காக கொண்டிருக்கும். கவிதை வைத்து என்ன சாதிக்கமுடியும் என்பவர்களுக்கான உங்கள் பதில் என்ன?
எழுத்து அதிகம் கற்கா எனக்கு இறைவன் கொடுத்த ஆத்மவரம் கவிதைத்திறன்.  இதன் இலக்கு நற்சிந்தனைகளை விதைப்பதே.
கதைகள் கட்டுரைகள் அதனதன் திறமையில் தன் தனித்துவங்களை நிலைநிறுத்துகையில், எனக்குத்தெரிந்த கவிதைகள் ஓரிருவரியிலும் ஏழெட்டு நிலைகளைச்சொல்லி, சொல்லவரும் விசயத்தை பக்குவமாய் மனதில் பதிப்பதுபோல், ஆயுதங்களால் சாதிக்கமுடியாததை ஆயுத எழுத்தையுமடக்கிய அழகிய ஆத்மார்த்த எழுத்துக்களால் சாதிக்கவியலும்.
எழுத்துப்புரட்சி இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. கவிதையாலும் அதுபோன்ற மாற்றங்களை கொண்டுவரமுடியும். இறைநாடின் என் எழுத்து கூனிக்குறுகிக் கிடக்கும் சில மனங்களையாவது தட்டி நிமிர்த்தியெழுப்ப வேண்டும். சமூக அவலங்களையும். மனவுணர்களின் மெளனங்களையும் கவிதைகளின் ஓசைகொண்டு உலகுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் . குறிப்பாய்,  கவிதைக்கு பொய்யழகு என்பதையும் தாண்டி மெய்யே மெய்யுணர்வின் அழகு என்பதை சற்று உயர்த்திச்சொல்லல் வேண்டும்.
இறைசார்ந்த, இறைதூதர்கள் வாழ்ந்த, மார்க்கம் போதிக்கும் போதனைகளை, நேர்வழிகாட்டும் இஸ்லாமியத்தை எளிதாய் விளங்கி, அதனை இலகுவாய் செயல்படும்வகையில் என்னெழுத்தின் பயணத்தை அதன் இலக்குநோக்கி முன்னிறுத்தவேண்டும்.
எனக்கு தரப்பட்ட சுதந்திரத்தை கண்ணியமான முறையில் கையாள்வதோடு, இஸ்லாமியப்பெண்மணியாய் கவிதைகளத்தில் என் தனித்துவ கருத்தாளத்தை விதைத்து விருட்சம் பெறச்செய்யயியலும் என்பதை ஆல()மாக்கிடவேண்டும்.இன்ஷா அல்லாஹ்.

உங்கள்  மதிப்புமிக்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியதற்காய் எங்கள் இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களின் ஒவ்வோர் பதிலும், உங்களுக்கானதாக மட்டுமல்லாமல் பலரையும் சிந்திக்கச் செய்திருக்கிறீர்கள், பலரை சுயபரிசோதனை செய்யக்கொள்ளச் செய்துள்ளீர்கள்.  அதற்காகவும் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.  ஜஸக்கல்லாஹ் ஹைர்.   உங்கள் எழுத்துப்பயணம் வெற்றிகளை மட்டுமே இலக்காக்கிய பாதைகளால் இறைவன் ஆக்கிவைக்க பிரார்த்திக்கிறோம்.  வாழ்த்துக்கள்!

பேட்டியும் ஆக்கமும்
ஆமினா முஹம்மத்

8 comments:

 1. படிப்பிற்கும் சாதனைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று புரிந்து கொள்ள இவரை ஒரு உதாரணம்...

  கவர்ச்சியான எழுத்துக்களில் மட்டுமே நிலைத்து இருக்கலாம் என்று நினைப்பபர்களுக்கு இவர் எழுதும் எழுத்து நெத்தியடி...

  அழகான வார்த்தை கொண்டு எடுத்து சொல்லும் கருத்துக்களும் அருமை!!!

  இதேபோல தொடர அல்லாஹு உதவி செய்வானாக....

  ஆமீனா உங்க கேள்வி எப்போதுவும் போல சூப்பர்...
  தொடர்ந்து இதைபோல பலரை சந்தித்தித்து நீங்களும் சாதனை புரியுங்கள்... உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அல்ஹம்துலில்லாஹ்..
  முதலில் என்
  நெஞ்சார்ந்த நன்றிகளென்னும் ஜஷாக்கல்லாஹ்.சகோதரி
  ஆமினா முகமத் அவர்களுக்கு..

  ஒரு படைப்பாளியை ஊக்குவிப்பதும் முடக்குவதும் அவரின் படைப்புகளும் அதன்சார்ந்த பின்பலமற்ற கருத்துகளுமே..

  ஒருவருக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் குடும்பமும் சமூகமும் அக்கரைகொண்டால் நிச்சயம் நல்லததொரு படைப்பாளியை இவ்வுலகிற்கு இனங்காட்டமுடியும்
  அந்த வகையில் என் மச்சான்(கணவரும்)என்குடும்பமும் அதற்கான அடித்தளமிட்டது அதிலிருந்து நல்மனம்கொண்ட பலரோடு தற்போது சகோதரி ஆமினாவும் அதில் இலக்கிய இல்லமமைக்க உதவுகிறார்கள்.இன்ஷா அல்லாஹ்
  இஸ்லாத்தின் பேணுதலோடு
  கவிவீடு கட்டி குடிபுக இன்னும் கட்டவேண்டியவைகள் நிறைய இருக்கு. இறைநாடி அப்பணியில் சிறப்போடு செயல்பட்டு நல்வீடு அமைத்திடுவேன் அதனுள் நற்சிந்தைகளையும் குடியேற்றுவேன்..இன்ஷா அல்லாஹ்..

  மீண்டும் சகோதரி ஆமினா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 3. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
  சகோதரி சில்மியாவின் து ஆக்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.அதனோடு என்னை சிறந்தவர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக..


  தங்களைப்போன்றோரின் ஊக்கங்களே என்னை இந்தளவு எழுத்துலகில் எந்தடம் பதிக்க உதவுகிறது.. தொடர்ந்து ஆதரவளியுங்கள் சகோதரியின் நற்சிந்தனைகள் பெருக துஆச்செய்யுங்கள்...

  ஜஷாக்கல்லாஹ்..Silmiya Banu

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மலிக்கா,
  உங்கள் நேர்காணலை முழுமையாகப் படித்தேன். பரவசமடைந்தேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.. அல்லாஹ் உம்மிநபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். நீங்கள் குறைவாகப் படித்தது பற்றி எந்தவொரு கொம்பனும் அலற்றிக் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் சொல்வது போல் கற்றறிவிலும் பட்டறிவு தரும் நன்மைகளையும் மறக்கவியலாது. அல்லாஹ் உங்கள் ஹிஜாப் வழியிலேயே இன்னும் பற்பல சாதிக்க உங்களுக்குத் தேகாரோக்கியத்தையும், உங்களுக்குத் துணையான உங்கள் கணவருக்கும் பேரருள் புரிவானாக. உங்கள் கரங்கள் பலமாக வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். வாழ்வாங்கு வாழ்க!

  -தமிழன்புடன் “கவித்தீபம்” கலைமகன் பைரூஸ் (இலங்கை)

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் ஸலாம்..
   ஜஷாக்கல்லாஹ் சகோ கலைமகன்..
   தங்களின் பண்பிற்குறிய வருகைக்கும்..
   நெஞ்சார்ந்த து ஆக்களுக்கும்
   அன்பார்ந்த கருத்துகளுக்கும்
   உளமார்ந்த நன்றிகள்..

   அவன் கொடுத்த வரம்
   பாதுகாப்பேன் கண்ணியம் காப்பேன்.சில கருத்துக்களாவது மனக்
   கல்வெட்டுகளில் பதிவதுபோல் எழுத்துக்களை பதிப்பேன் படைப்பேன்.இன்ஷா அல்லாஹ்

   Delete
  2. வ அலைக்கும் ஸலாம்..
   ஜஷாக்கல்லாஹ் சகோ கலைமகன்..
   தங்களின் பண்பிற்குறிய வருகைக்கும்..
   நெஞ்சார்ந்த து ஆக்களுக்கும்
   அன்பார்ந்த கருத்துகளுக்கும்
   உளமார்ந்த நன்றிகள்..

   அவன் கொடுத்த வரம்
   பாதுகாப்பேன் கண்ணியம் காப்பேன்.சில கருத்துக்களாவது மனக்
   கல்வெட்டுகளில் பதிவதுபோல் எழுத்துக்களை பதிப்பேன் படைப்பேன்.இன்ஷா அல்லாஹ்

   Delete
 5. ஓஹ். . இப்பதான் படிக்கிறேன் நம்ம மலிக்கா அக்காவா சாதனைப் பெண்மணி. . அவுங்களுக்கே உரிய பாணியில் அழகா பதில் சொல்லிருக்காங்க . சிறப்பான கேள்விகள் . . வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும். .

  ReplyDelete
 6. பல்வேறு துறைகளில் பற்பல சாதனைகள்!எழுத்திலும் வார்த்தைகளிலும் என்னே ஒரு பக்குவம், சாமர்த்தியம். வாழ்த்துகிறேன் வாயார... வளர வேண்டுகிறேன் வானுயர....!

  ReplyDelete