Monday, November 30, 2015

நாற்பதில் நாய்க் குணம்!!


நாற்பதில் நாய்க் குணம்” என்றொரு பழமொழி(!!!) உண்டு!! நாற்பது வயதில் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ஒருவரின் குணநலன்களில் வரும் மாற்றங்களைக் குறிக்க இவ்வாறு கூறுவதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால், இப்பழமொழியின் சரியான பொருள் வேறு. ஒரு நாய் தூங்கும்போதுகூட விழிப்போடு இருக்கும். மனிதர்களும், இதுவரை எப்படி இருந்தாலும், நாற்பது வயது முதல்  அதிகபட்ச விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையே இப்பழமொழி வலியுறுத்துகிறது என்ற விளக்கத்தை ஒரு தளத்தில் கண்டபோது வியப்பு மேலிட்டது. உண்மைதானே!

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் 40-45 வயதுக்கு மேல் உடல்நலம், குடும்பம் இரண்டிலுமே மிகப் பெரும் சவால்கள் உண்டு.டல்நலம் என்று வரும்போது, வயதாவதின் பலவீனங்கள் - கால், கை, முதுகு வலிகள் போன்றவற்றோடு, மெனோபாஸ் பிரச்னைகளும் சேர்ந்து உடல் மற்றும் மனதை நலிவடையச் செய்யும். மெனோபாஸ் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். வழக்கமான ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சமயங்களில் வரும் மனநிலை மாற்றத்தையே குடும்பத்தில் யாருமே அறிந்து, புரிந்து கொள்வதில்லை. நிறைய பெண்களுக்கே அதைக் குறித்து தெரியாது!! அப்படியிருக்கும்போது, மெனோபாஸினால் வரும் ஹார்மோன் பிரச்னைகள் எங்கே தெரிந்திருக்கும்??!!குடும்பத்தில், சரியாக அந்த காலகட்டத்தில்தான், அவர்களின் பிள்ளைகள் டீனேஜில் அல்லது காலேஜில் இருப்பார்கள்.  டீனேஜ் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டாகும் மனநிலை மாற்றத்தால், அவர்களில் சிலரும் தம் பங்குக்கு தாயை வெறுப்பேற்றுவார்கள்.
சீக்கிரமே மணமுடித்த பெண்களாயிருப்பின், அவர்களின் மகள்களுக்கும் திருமணம் முடித்து மாமியார்கள் ஆகியிருப்பார்கள். மகளின் புதுவாழ்வு சீராக இருக்கவேண்டி, மகளின் புகுந்த வீட்டார்களிடம் பணிந்து போக வேண்டிய அழுத்தத்திற்கும் ஆட்பட்டிருப்பார்கள்.
குடும்பத்தில் மாமனார்-மாமியாரும், முதுமையடைந்து, ‘இரண்டாம் குழந்தைப் பருவத்தைஎட்டிப் பிடித்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு சிறு குழந்தையைப் போன்றே அவர்கள் மனநிலையும் மாறி விட்டிருப்பதால்அவர்களும் தம் பங்குக்கு பிடிவாதம், கோபம், அடம் பிடிக்கும் மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்கென தனி சமையல், அவர்களின் உடல்நலன் பேணுதல், பராமரிப்பு என்ற கூடுதல் சுமைகளும் பெண்களின் மீதே. 

அதே காலகட்டத்தில், தம் பெற்றோரும் முதுமையை எட்டியிருப்பார்கள் என்பதால், அவர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய பொறுப்பும் பெண்கள் மீது உண்டு. ஆனால், மாமனார் – மாமியார் அளவுக்குப் பெற்றவர்களை உடனிருந்து கவனிக்க முடியாத நிர்பந்தங்கள் உள்ள சிலருக்கு, கூடுதல் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

தவிர என்றுமே குழந்தையாக இருக்கும் கணவனையும் கவனிக்க வேண்டும். கணவனோ 40-ன் நாய்க் குணத்தைக் கடந்து “பேய்க் குணத்தின்” எல்லையான 50களில் இருப்பார். பிரஷர், ஷுகர் போன்றவை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ள அவரின் உடல்நலத்தைப் பேணும் பொறுப்போடு, உடல் தேவைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம். 

ஒருவேளை வேலை பார்க்கும் பெண் என்றால், அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டையும் செய்ய வேண்டிய அதிகப் பொறுப்பும், குழந்தைகள் தம் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கமுடியாத காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்வும், அவர்கள் சரியான நட்பு வட்டத்தில் இருக்கிறார்களா என்ற படபடப்பும் உடல்-மனநலத்தைப் பாதிக்கும் சூழல்.

இப்படி, பெண்ணின் வாழ்க்கையில் டீனேஜ் ஒரு முக்கியமான கட்டம் என்றால், அதைவிட மிகக் கடினமான பருவம் நாற்பதுகள்தான். ஆங்கிலத்தில் இதை Mid-life Crisis என்பார்கள். 


ஏன் பெண்ணுக்கு மட்டும் இது கடினமான கட்டம்? 

ஒரு பெண்ணின் குடும்பச் சூழ்நிலைகள் அவள் மீது அதிக அழுத்தம் தரும் காலகட்டம் அது என்பதோடு, அவளின் உடலும் அந்த வயதில்தான் பல்வித மாற்றங்களுக்கு உள்ளாகி பாதிப்புகள் ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும். ஆக, எல்லா திசைகளிலும் பாதிப்புகளை அனுபவிக்க வேண்டிய இறுக்க நிலை நிலவுவது இந்த நாற்பதில்தான்!! 

உடலில் என்ன மாற்றம்?

அவர்களது உடல் “மெனோபாஸ்” என்ற நிலையின் தொடக்கக் கட்டத்தில் இருக்கிறது. அதாவது, அதுவரை சீராக வந்துகொண்டிருந்த மாதவிலக்கு, இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் நிறுத்தப்படுவதற்கான தயாரிப்பில் உடல் ஈடுபட்டிருப்பதுதான் மெனோபாஸின் தொடக்கநிலை. 

மாதாந்திரத் தொல்லையான மாதவிலக்கு நின்றால் நல்லதுதானே என்று தோன்றினாலும், அதன் பின்ணணியில் இருக்கும் எஸ்ட்ரோஜன் & ப்ரோஜெஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள், மாதவிலக்கு, கருத்தரித்தலோடு மட்டுமின்றி உடலின் வேறு சில  இயக்கங்களும் சீராக நடக்க இன்றியமையாதவை. ஆகையால் திடீரென அவற்றின் உற்பத்தி நிற்கும்போது, உடல், உள்ளம் என மொத்தமுமாகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

உதாரணமாக, இரு ஹார்மோன்களும் எலும்பு தேய்மானத்தையும், இரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுபடுத்துகிறது. இதனால்தான் வயதான பெண்கள் அதிகமாக கை, கால், மூட்டு வலியில் அவதிப்படுகிறார்கள்.  ப்ரோஜெஸ்ட்ரோஜன் சில வகை கேன்ஸர்களைத் தடுக்கிறது. மேலும், மெனோபாஸ் தொடக்க காலங்களில், மாதவிலக்கு சுழற்சியின் ஒழுங்கு  பாதிக்கப்படும். சிலருக்கு அடிக்கடி வரும். சிலருக்கு மாதக்கணக்கில் வராமல் போகும். ஒவ்வொரு முறையும் வழக்கத்தைவிட மிக அதிக இரத்த இழப்பு இருக்கும். சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நிற்பதற்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை அதிக இரத்த இழப்பு என்பது உடலை மிகவும் பலவீனப்படுத்திவிடும். 

தவிர, சிறுநீர்ப் பிரச்னைகள், தூக்கமின்மை, Hot flashes எனப்படும் உடல் முழுதும் சூடு பரவும் உணர்வு, எரிச்சல், கோபம் போன்ற பல விளைவுகளும் உண்டு. ஒவ்வொருவரின் உடலின் இயல்பு பொறுத்து, விளைவுகள்  அமையும். 

ஆண்களுக்கு மெனோபாஸ் இல்லையா?

ஆண்களுக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி, மூப்பு காரணமாக குறையுமே தவிர ஒரேயடியாக நிற்காது. ஆகையால் பெண்கள் அளவு கடும் பாதிப்பு இல்லை.

நாற்பது வயது என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொறுப்புகள், கடமைகள் வகையில் ஒரே அளவிலான அழுத்தம்தான் என்றாலும், உடல் நிலை பொறுத்த வரையில் மனஅழுத்தம் பெண்களுக்கே கூடுதலாக இருக்கும் என்பதை அறிந்தோம். 

இதன் காரணமாகத்தான், இஸ்லாம் பெண்களின்மீது சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றி வைக்கவில்லை. சமூகப் பொறுப்புகளும் கட்டாயப்படுத்தப்படவில்லை. பெண்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மென்மைதன்மையை, இந்த ஹதீஸ் விளக்குகிறது.   

பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிக வளைந்ததாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது வளைந்தாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி 3331)

மேலும், பெண்கள் தம் குடும்பத்தவரின் உடல்நிலையில் அதிக அக்கறை கொண்டிருந்தாலும், தமது உடல்நிலை குறித்து அதிகப் பேணுதல் இல்லாதவர்கள். அதன் காரணமாகவும் அவர்களுக்குப் பாதிப்பு அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.

எந்த உடல்நலக்குறைவுக்கும் ஆறுதல் அளிப்பதில் முதன்மை வகிப்பது உறவினர்களின் புரிந்துகொள்தல் தான். நமது குடும்பங்களிலும், தாய் அல்லது அண்ணி அல்லது அக்காக்கள் நாற்பதுகளில் இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளை, உடல்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். சற்று அக்கறை எடுத்து, அவர்கள் உணவுப் பழக்கத்திலும் உடல்நிலையிலும் கவனம் செலுத்துகிறார்களா என்று கேட்டறிந்து ஆலோசனை கூறுங்கள். நாம் கேட்காமல் எத்தனையோ சமயங்களில் நம் தேவைகளை நிறைவேற்றியவர்களின் தேவைகளையும் நாம் புரிந்து கொண்டு நடத்தல் நம்மீதான கடமையாகும். பெண்கள் தம் தேவைகளை வெளியே சொல்ல சங்கோஜப்படுபவர்; அலட்சியப்படுத்துவர். அவர்களின் உடல்நலம் சீராக இருந்தால்தான் குடும்ப நலமும் சீராக இருக்கும். 

4 comments:

  1. இன்னா நாற்பது....அல்ல
    இனியவை நாற்பதென இயம்பிய பதிவு...நல்ல திரட்டுப்பால்...

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை.

    ReplyDelete