Monday, February 22, 2016

உதவி நாடுபவர்கள் (அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் வாயிலாக)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் உதவி நாடுபவர்களே. அனுதினம் அந்த ரப்பிடம் உதவி நாடி வழிகாட்டுதல் நாடி கையேந்துபவர்களே. அல்லாஹ் தனது கருணையை பேருதவியை நாடுபவனுக்கு இன்னொரு மனிதனின் வாயிலாக எத்தி வைக்கிறான். ஒவ்வொருவருக்கும் பிறருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தைக் கொடுத்து சாத்தியப்படுத்துகிறான். பிறருக்கு, அவர்கள் திருப்பித்தர இயலாத பேருதவியை அளித்துவிட்டால் அதுவே மிகப்பெரும் வெற்றி. நம் இதயத்திற்கான சிறந்த பயிற்சி, தேவையுள்ள பிறருக்கு உதவுவது என்றால் மிகையாகாது.

மேலும் பொறுமையைக்கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்.எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்க்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் பகரா 2:45

உலகம் முழுவதும் உதவி தேடுபவர்களைத் தேடிச்சென்று தான் உதவவேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றி, முக்கியமாக, நம் வீட்டில் உள்ளவர்களிலிருந்தே நாம் துவங்கலாம். நம்மால் இயன்ற அளவுக்கு எப்படி உதவ முடியும் என்பதைக் காணலாம்

முதலில் வருபவர்கள் நம் வீட்டுப்பெரியவர்கள்


நம்மைப்  பெற்றவர்கள் அவர்களைப் பெற்றவர்கள் என்று பலர் உள்ளனர். தன் இளமைக்காலம் முழுவதும் குடும்பத்திற்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்கள். வயோதிகத்தை அனுபவிப்பவர்கள். இரண்டாம் பால்யத்தை அடைந்தவர்கள்.நாம் சிறு பிள்ளைகளாய்க் குறும்புக்காரர்களாய் பிடிவாதக்காரர்களாய் இருந்த போதும் நம்மை பேணிப் பாதுகாத்தவர்கள். இப்பொழுது நம் அண்மையை எதிர்பார்த்து ஏங்குபவர்கள். அவர்களது இறுதிக்காலத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமும் முக்கியமுமாகும்.

இவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவி என்ன தெரியுமா
நமக்கான நேரத்தை அவர்களிடம் செலவு செய்வது இதைத்தான் அவர்கள் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் பழங்கதைகளையும் அறிவுரைகளையும் நாம் காது கொடுத்து கேட்கமாட்டோமா எனறு எதிர்பார்க்கிறார்கள். இதை நிறைவேற்றுவதைக்காட்டிலும் நமக்கு என்ன பெரிய வேலையிருக்கப்போகிறது?

அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்கள்


படைக்கப்பட்ட உயிரினம் அனைத்தும் மரணத்தை சுவைத்தே தீரும் என்று திருமறை தெளிவாக கூறுகிறது. அது புத்திக்கு தெரிந்தாலும் இந்த மனதுக்கு புரிவதில்லையே. கண நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு அழுது புலம்புகிறோம். ‘ஓ’வேன ஓலமிடுகிறோம். அல்லாஹ் பிழைபொறுத்துக் கொள்வானாக ரப்பையே சபிக்கிறோம். அவர்கள் முன்னே செல்பவர்கள் நாம் பின்னே செல்ல இருக்கிறோம் என்கிற உண்மையை பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.

அடுத்தது குழந்தைகள் 


குழந்தைகள் கண்முன்னே சரியானவர்களாய் வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி. அவர்கள் நம்மைத் தான் பிரதிபலிக்கிறார்கள். பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசான் என்பதை என்றும் நினைவில் இருந்து விலக்கக்கூடாது. பல பெற்றோர்கள் இதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாதது வேதனைக்குரிய விஷயம். அவர்களது சின்னஞ்சிறு வாழ்க்கையில் நம் அறிவுக்கெட்டாத பல விஷயங்கள் நிறைந்துள்ளன. அவர்களது செயல்கள் மூலம் நம்மால் பல சமயங்களில் யூகிக்க முடியாது. அவர்களுடன் அமர்ந்து பேசுவதன் மூலமே நம்மால் அறிந்துகொள்ள இயலும். குழந்தைகளின் இளம்பருவமென்பது நாம் நினைத்தாலும் நம்மால் திரும்ப அடைய முடியாது. ஆகையால், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்களுடன் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். 

இன்னும் ஒரு சில குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறந்துவிடுகிறார்களே, யா அல்லாஹ் என்ன செய்ய?

இச்சமயங்களில் அப்பெற்றோருடன் இருப்பவர்களின் பொறுப்பு அதிகரிக்கிறது. அக்குழந்தைகளின் பெற்றோர்களை ஆசுவாசப்படுத்தி நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை உண்டு. சிலருக்கு உடலில் என்றால் சிலருக்கு மனதில் குறை. குறையுள்ள குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடை எனும் வாக்கியங்கள் சொல்வதற்கு மிக எளிதானவை. கேட்பது மிக மிகக்கடினம். நமக்கு அவ்வாறான சோதனைகள் ஏற்படும்போது எவ்வாறு ஆறுதல் தேடுவோமோ அது போல் ஆறுதல் வழங்குவது மிகவும் அவசியம். அந்த ஆறுதலே அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவைத்தரும்.

மருத்துவ உலகம் முன்னேறியுள்ள தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ வழிகாட்டுதலை வழங்கலாம். நிச்சயமாக அல்லாஹ் அந்த குழந்தைகளையும் ஒரு அபாரமான திறமையுடனே படைத்திருப்பான். அதனை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வரலாம். அக்குழந்தைகளுடனும் நம் நேரத்தைச் செலவழிப்பதும் மிகப்பெரும் உதவியே.

உடலுக்கு சுகவீனம் இல்லாதது போல் மனதுக்கு சுகவீனம் இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கேலிப்பொருளாய்ப் பார்க்காமல் சக மனிதர்களாய் பாவிப்பது தான் சிறந்த உதவியாகும்

அடுத்து மணவிலக்குப் பெற்றவர்கள்

இது ஒரு அசௌகர்கய நிலை; தர்ம சங்கடம்.வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்து வரும் என்று நம்பி ஏற்ற உறவொன்று ஏதோ ஒரு புள்ளியில் பொய்த்துப் போய் இனி இதைத் தொடரவே முடியாது என்கிற கையறு நிலை.இதில் ஆண் பெண் என்கிற பேதம் இல்லை. இதைக்கடந்தும் இன்னொரு நல்ல வாழ்க்கை இருக்கிறது என்று எடுத்துரைக்கலாம்.
  
உடல் நிலை சரியில்லாதவர்கள், நோயின் தாக்கத்தால் கட்டுண்டு கிடப்பவர்கள், போன்றோர்களைச் சந்திப்பதென்பது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பாடம் அல்லவா? அதை நாம் பின் தொடர வேண்டாமா? பொருளாய்ப் பணமாய் வார்த்தைகளாய்க் குருதியாய் அவர்களுக்கு உதவலாமே!!!

சமீபத்தில் வாட்டிகா கூந்தல் எண்ணெய் விளம்பரம் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அதன் கரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி சிகிச்சையினால் தன் கூந்தலை இழக்கிறாள். பின் தன் கூந்தல் இல்லாத தோற்றத்தில் இந்த உலகத்தைப் பெரும் தடுமாற்றத்தோடு எதிர்கொள்ள எத்தனிக்கும் போது அவளின் கணவனும் நண்பர்களும் அவளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். நம்பிக்கை அளிக்கிறார்கள்.அழகு என்பது புறத்தோற்றம் அல்ல அகத்தின் நம்பிக்கையே என்று முடிகிறது விளம்பரம். என்ன  ஒரு அருமையான ஆறுதல். இந்த ஆறுதலைத்தானே மனித மனம் தேடுகிறது.

இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ பேர் கடன் தொல்லை என்றும், முதிர்கன்னி என்றும், வேலை இல்லாதவர்கள் என்றும், தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் என்றும், போரினால், இனப்படுகொலைகளால், இயற்கை சீற்றத்தால் உயிர் வீடு மனைவி மக்கள் என்று சகலத்தையும் இழந்து தவிப்பவர்கள் என்று, பலரும் நம்மைச்சுற்றி உள்ளனர். இவர்களுக்குப் பணமாய் பொருளாய் கரிசனமாய் இது எதுவுமே இல்லாவிட்டாலும் அந்த ரப்பிடம் கையேந்தி செய்யப்படும் துவாவாய் உதவலாமே சகோதர,சகோதரிகளே .  

இன்று நாம் ஒருவருக்கு அளிக்கும் ஆறுதலும் பேரன்பும் பல்கிப் பெருகி நம்மிடமே வரப்போகிறது என்பதே உண்மை.

உங்கள் சகோதரி
சபிதா காதர்

1 comment:

  1. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற நல்ல பதிவு,

    மா ஷா அல்லாஹ், பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    வாழ்த்துக்கள் அக்கா....

    ReplyDelete