Wednesday, February 25, 2015

ஆண்களின் அதிகாரம் பெண்களை அடக்குவதற்கா?


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

எல்லாப் புகழும் இறைவனுக்கே. 

உலகம் முழுவதிலும் இந்த 20ம் நூற்றாண்டிலும் அனைத்து மக்களும் இன்று ஆணுக்குப் பெண் நிகரானவரா இல்லையா என்று பட்டி தொட்டியெல்லாம் பட்டிமன்றங்கள் நடத்தியும் ஒரு முடிவுக்கு எட்டாத நிலையில், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்கள் ஆண்கள் மீது கொண்டுள்ளதை விடவும் ஆண்களே பெண்கள் மீது அதிகம் உரிமையுடையவர்கள் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து விட்டது இஸ்லாம். இவ்வுண்மையை, இறைவாக்கை ஏற்க முடியாதவர்களே பட்டிமன்றங்கள் நடத்தித் தம் வாதத் திறமையைப் பறைசாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள்.


புகாரி 5231. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 

என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். 

எதிர்காலங்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட பன்மடங்கு அதிகரிக்கும் என்று முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இம்முன்னறிவிப்பு தற்காலத்தில் உண்மையாகி வருவதையும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம் என்பது மறுக்கவியலாத உண்மையாகும். நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், பெண்கள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படும் அச்சமயங்களில் கூட பெண்களை ஆண்களுக்கு நிர்வாகிகளாக ஆக்கவில்லை. அவர்களுக்கு ஆண்களே நிர்வாகிகளாகத் தொடர்ந்து இருப்பார்களே தவிர, பெண்கள் தமக்குரிய எல்லைகுட்பட்டு வாழும் நிலையிலேயே இருப்பார்கள். 

2:228. ........ கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.

2:282 தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; 

குர் ஆனின் இவ்வசனங்கள் ஆண்கள் பெண்களை அதிகாரத்தில்மிஞ்சியிருப்பவர்களாக இருப்பதை உணர்த்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பெண்கள் இருவரை ஒரு ஆணுக்குச் சமமாகக் கூறுகிறது. அது எப்படி..பெண்களிலும் சாமர்த்தியசாலிகள் உள்ளனர். அவர்கள் மீதுள்ள கடமைகள் அதிகமிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களது திறமைகளை, அறிவுத்திறனை, உரிமைகளை எப்படி தாழ்த்தலாம் என்று கேள்வி கேட்டால் அது மடமைத்தனமாகும். படைத்த இறைவனது கூற்று.. தான் அவ்வாறு தான் பெண்ணைப் படைத்துள்ளதாக அவனே கூறும்போது நாம் அதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதனாலேயே நினைவாற்றலில் ஆண்களே பெண்களை மிகைத்து விடுகின்றனர்.

4:34. ........ எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

ஆக, மேற்கண்ட குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் நமக்குத் தெளிவுபடுத்திய விஷயம் இதுதான். ஆண்களே பெண்களை விட அதிக உரிமையுள்ளவர்களாகவும் அதே சமயம் அதிகப் பொறுப்புள்ளவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய நடைமுறை என்னவென்றால், இறைவன் தமக்காகக் கொடுத்துள்ள உரிமைகளை நெஞ்சை நிமிர்த்திப் பெற்றுக்கொள்ளும் ஆண்கள், தமது பொறுப்புகளை, கடமைகளை முழுமையாக முழுமனதுடன் நிறைவேற்றுகிறார்களா? மனைவிகளை அடியுங்கள் என்று கூறப்பட்டுள்ளதா? எள்ளளவு காரணம் கிடைத்தாலும் அவர்களை அடித்து மிதித்துத் தமது ஆண்மைத்தனத்தை நிரூபிக்கத்துடிப்பதில் தான் அவர்களது பொறுப்பைக் காண்பிப்பதா? அல்லாஹ் குறிப்பிட்டுள்ள விஷயத்தில் பெண்கள் உங்களுக்கு முரண்பட்டால், முதலில் உபதேசம் செய்யுங்கள்; அதில் வெற்றி கிடைக்காத பட்சத்தில் படுக்கையிலிருந்து விலக்குங்கள்; அதிலும் திருந்தாவிட்டால் மட்டுமே லேசாக அடிக்கக்கூறியுள்ளான்; இந்த விதிகளை எத்தனை ஆண்கள் செயல்படுத்துகின்றனர்? தன் சொல் கேட்கவில்லையா? தன் பேச்சிற்கு மறு வார்த்தை ஒன்று வெளிவந்ததா? பளார் என்று அறைவதைத் தவிர தமது ஆளுமையை வெளிப்படுத்த வழி அறியாதவர்களே ஆண்கள். உண்மையில் தகப்பனாவதும் பெண்களின் மீது அடக்குமுறைகளைக் கையாள்வதுமே ஆளுமை என்று தவறாக நம்புபவர்களே ஆண்கள். இத்தகைய வன்முறைகளைக் கையாளத்தான் படைத்த இறைவன் இத்தகைய அதிக உரிமைகளையும் பொறுப்புகளையும் அளித்துள்ளானா? 

ஆண்களையே முதன்மை சம்பாதிக்கக்கூடியவர்களாகவும் குடும்பத்தை நிர்வகிக்கக்கூடியவர்களாகவும் முழு சாட்சியமாகவும் (புகாரி 2658) பெண்களை விட அனேகர் முழுமையடைந்த இனத்தவராகவும் (புகாரி 3411) படைத்தது எதற்காக? அடிப்பதற்கும் அதிகாரத்தை திணிப்பதற்கும்தானா? இதுதான் நிர்வகிக்கும் திறனா? ஒரு அலுவலகத்தில் நிர்வாகி என்பவர் கொடூரமானவராகவும் சர்வாதிகாரம் செய்பவராகவும் இருந்தால் அவ்வலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்களா? எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் மன நிம்மதியைத் தேடி வேறு வேலை தேடிச் சென்றுவிடுவார்கள். இந்நிலையில் நஷ்டம் யாருக்கு? நிர்வாகிக்குத்தான். ஒரு நிர்வாகியும் அவரது பொறுப்பிலுள்ளவர்கள் வசிக்கும் குடும்பம் எனும் அலுவலகத்துக்கும் இது மிகவும் பொருந்தும். எத்தனை வசதிபடைத்தவர்களாயினும் நிம்மதியும் ஆறுதலும் இல்லாத குடும்பம் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்ததாகவே காணப்படும். எனில், இதற்குத் தீர்வுதான் என்ன?

கணவன்மார்கள் எனும் குடும்ப நிர்வாகிகளே, உங்கள் மனைவி, மக்களை நன்மையின் பக்கம் ஏவுவதில் உங்கள் அதிகாரத்தைக் காட்டுங்கள். அதிகமதிகம் தான, தர்மங்கள் செய்யத் தூண்டுங்கள். பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரியாக உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். சிகரெட், மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட உங்கள் வார்த்தைகளுக்கு உங்கள் மனைவி, மக்களிடம் அச்சம் மட்டுமே இருக்கும்; மரியாதை இருக்காது. 

ஜகாத், ஸதகாவில் பராமுகமாக இருக்கும் உங்கள் அன்பை ஏளனமாக எடுத்துக்கொள்வார்களே தவிர ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்பத்தினருடன் உம்ரா, ஹஜ் கடமைகளைப் பயபக்தியுடன் நிறைவேற்றுங்கள். மார்க்கத்தைப் பேணுதலை உங்கள் மனைவிகளிடம் எதிர்பார்க்கும் நீங்கள், அதே அக்கறையை உங்களிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் நடைமுறைப்படுத்துங்கள். ஸாலிஹான பிள்ளைகளை வேண்டி துஆ கேட்கும் பெற்றோர்களும் ஸாலிஹானவர்களாக இருப்பதும் அவசியம்.

ஐவேளைத் தொழுகைகளைப் பேணாமல் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்கள் மனதில் ஒட்டாது; சாத்தான் ஓதும் வேதமாகவே அவர்கள் காதில் ஏறும். பெண்களுக்கு வீடுகளில் தொழுதுகொள்ள அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை உபயோகிக்கும் ஆண்கள், பெண்கள் மீது பொறுப்புடையவர்கள் அல்லர். இரவுத்தொழுகையைக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகக் கடைபிடிப்பதில் உங்கள் அதிகாரத்தைக் காட்டுங்கள். உங்கள் குடும்பத்தினரிடையே உங்கள் மீது மரியாதை கலந்த அச்சம் ஏற்படுவது உறுதி. 

அதிகதிகம் நஃபில் தொழுகைகளை நிறைவேற்றுவதில் கடினம் காட்டுங்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் சொல்லும்முன்பே பள்ளிக்கு விரைபவர்களாக மாறுவார்கள். இதைவிட ஒரு தாய், தகப்பனுக்கு வேறென்ன பேறு வேண்டும்?

எத்தனை இல்லங்களில் மனைவி எழுப்பி, கணவர் தஹஜ்ஜத், அது கூட வேண்டாம், ஃபஜ்ர் தொழுகைக்குத் தயாராகிறார்கள்? பல்லாயிரக்கணக்கான வீடுகளில் இன்றும் தொழுகை என்பது என்னவோ பெண்களுக்காகவே கடமையாக்கப்பட்டது போல் அவர்கள் மட்டும் இரவில் எழுந்து தனியாகத் தொழுபவர்களாகவே உள்ளனர். இதுவே இல்லத்தலைவர்கள் தொழுகைகளை முறையாக இபாதத்துடன் கடைப்பிடிப்பவர்களாக இருந்தால், அவர்கள் வீட்டில் பெண்கள் தொழுகையில் அலட்சியப்படுத்துபவர்களாக இருப்பது என்பது சாத்தியமேயில்லை. குழந்தைகளும் இளமையிலேயே தொழுகையைப் பேணுபவர்களாக வளர்வார்கள்.

ஆண்களே, உங்கள் சம்பத்தியங்களை குளிர்சாதன அறைகளில் இருந்து கொண்டே ஏழை, வறியோருக்கு விநியோகம் செய்வதை விட்டும் விலகி, நேரடி களப்பணியில் இறங்குங்கள். உங்களைப் போன்ற ஆண்கள் தாம் விபத்தான இடங்களில் தம்மை சமூகப்பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களும் உங்களைப் போல் அலுவலகம் சென்று சம்பாதிப்பவர்கள் தாம்; அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் உண்டு. அவர்களால் “சமூகக்களப்பணி” ஆற்ற இயலும்போது உங்களால் இயலாமல் போனது ஏன்? உங்களை அவற்றிலிருந்தும் தடுப்பது எது? நீங்கள் நேசிக்கும் குடும்பமா? உங்கள் அநாவசிய பொழுதுபோக்குகளா? இறைவன் உங்கள் மீது அருளியிருக்கும் வசதிபடைத்த சொத்துசுகங்களா? இவைகளில் ஏதேனும் ஒன்று உங்களைத் தடுத்தாலும் அதுவே உங்களுக்கான சோதனை. அச்சோதனையில் வெற்றி பெற எட்டு வையுங்கள்.

பெண்களும் சமூகக்களப்பணியாற்றும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் வீடுகளில் புகுந்தவர்களாகப் பணத்தை இணையத்தின் மூலம் “தேவைப்படுவோருக்கு” அனுப்புவது உங்கள் நிர்வாகத்திறனல்ல.

சமூகப்பணிக்கும் சமூகக்களப்பணிக்கும் அதிக வேறுபாடு உண்டு. ஹஜ் பயணத்தில் முடியைக் களையுமாறு தம் சஹாபாக்களுக்குக் கட்டளையிட்டு, அவர்களுக்கும் முன்பாகத் தம் முடியைக் களைந்து முன்மாதிரியாக வழிகாட்டியவர்கள் நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். கட்டளையிட்டு சமூகப்பணியாற்றுவதை விடவும் தாமே முன்வந்து அக்கட்டளைகளின்படி வாழ்ந்து காட்டுவதே சமூகக்களப்பணியாகும்.

சமூக வளைத்தளங்களில் புரட்சிகரமான, விழிப்புணர்வூட்டும் கவிதையோ கட்டுரையோ எழுதுவதும் சமூகப்பணி தான். இப்பணியினை இன்றைய பெண்களும் மிக மிகச் சிறந்த முறையில் ஆற்றிவருகின்றனர். உடல் சிரமங்கள், வீட்டு வேலைகள் எல்லாவற்றிற்கும் மேலாக மஹ்ரம் என்ற ஒரு கேடயத்தையும் பேணிக்கொண்டு எத்தனையோ பெண்கள் சமூகக்களப்ப்ணியாற்றும் இவ்வுலகில் தான் நீங்களும் வாழ்கிறீர்கள். எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் குடும்பங்களுடன் வீடுகளில் தஞ்சமடைந்தவர்களாக, வீண் பொழுதுபோக்குகளில் மூழ்கியவர்களாகப்  பெண்களைப் போல் மறைமுகப் பணியாற்றும் ஆண்கள் ஒருபோதும் முழுமையடைந்தவர்களாக முடியாது. இன்றைய பல ஆண்கள் செய்யும் கடமைகள், சமூக சேவைகள் அனைத்தும், கல்வி,குடும்ப நிர்வாகம், வேலை வாய்ப்பு என அநேக முன்னேற்றங்களை அடைந்துள்ள பெண்களாலும் சிறந்த திட்டமிடுதல்கள் மூலம் சுலபமாக நிறைவேற்ற முடியும். 


பெண்களை விட அதிக அளவில் நன்மையான காரியங்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, பெண்களால் செய்ய இயலாத நன்மையான காரியங்களையும் என்று ஆண்கள் நிறைவேற்றுகிறார்களோ அன்றே இறைவன் ஆண்களுக்கு அளித்திருக்கும் சிறப்புகளுக்குத் தகுதியானவர்களாகவும் தமக்கு அதிக உரிமைகளை வழங்கிய இறைவனைக் கண்ணியப்படுத்தியவர்களும் ஆவர். 


மார்க்கப்படி பெண்கள் அடையும் முன்னேற்றங்களைத் தடுத்து அவர்களை முடக்கி ஒடுக்காமல் அவர்களையும் மேம்படுத்தித் தாமும் முன்னேறி சமூகத்தினை வளர்க்கும் பொறுப்பை இங்ஙனம் ஆண்களிடையே அல்லாஹு தஆலா வழங்கியிருப்பதை நாம் அனைவரும் ஏற்று நடைமுறைப்படுத்துதலே இம்மை, மறுமை வெற்றிக்குச் சிறந்த காரணியாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

(இது என் சொந்த கருத்தே. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்)

வஸ்ஸலாம். 


(முகநூல் குழுமமான டீக்கடை 2014ல் நடத்திய ரமழான் மாதக்கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசான ரூபாய் 1000 பெற்ற இக்கட்டுரையினை இஸ்லாமியப் பெண்மணி தளத்தில் வெளியிட அனுமதித்த டீக்கடை குழும நிர்வாகத்தினருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்)

3 comments:

 1. மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க பானு...
  ஆண்கள் உயர்ந்தவர்களா?பெண்கள் உயர்ந்தவர்களா?என்ற விவாதத்தை விட்டு விட்டு எப்படி ஒன்று சேர்ந்து பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவும்,சமூகத்தொண்டுகளில் பங்கு வகிப்பதையும் சொன்ன விதம் அருமை....
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க பானு...
  ஆண்கள் உயர்ந்தவர்களா?பெண்கள் உயர்ந்தவர்களா?என்ற விவாதத்தை விட்டு விட்டு எப்படி ஒன்று சேர்ந்து பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவும்,சமூகத்தொண்டுகளில் பங்கு வகிப்பதையும் சொன்ன விதம் அருமை....
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. சரியாகப் புரிந்து கொண்டீர்கள் அப்சரா.. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

   Delete