Sunday, July 15, 2012

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?

அபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ”உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு?” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்” என்றாள். ”ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே? உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே?” என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.“என்னது, பாஸ்போர்ட்டா, இப்பவேவா? கிழிஞ்சுது போ!! பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதே பாஸ்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா உடனே ரிஜக்ட் பண்ணிடுவாங்க.  அதெல்லாம் கல்யாணமாகி குறைஞ்சது ஒரு வருஷம் கழிச்சு, மாமியார் பெர்மிஷன் கிடைச்சாத்தான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்” என்றாள்!! ”ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ??!!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.

பேசிமுடித்த பின்னரும் அதைக் குறித்த சிந்தனைகள் மனதை நிறைத்தன. பலப்பல வருடங்களாக, தமிழக முஸ்லிம்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.  ஒரு 20 வருடங்கள் முன்பு வரை, அரபு நாட்டில் வேலை செய்யும் ஒருவர் குடும்பத்தோடு இருப்பது என்பது மிகமிக அபூர்வம். அதன் காரணங்கள் குறித்து யோசித்தால், அரபு நாடுகளில் தமிழக முஸ்லிம்களில் எத்தனை பேர் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்லுமளவு நல்ல வேலைகளில் இருந்தார்கள்? அதற்குண்டான கல்வியறிவு குறைவான சமுதாயமாக அல்லவா (அப்போது) நாம் இருந்தோம் என்பது புரிந்தது.

பின்வந்த வருடங்களில், முஸ்லிம்களிடையே இஸ்லாமிய விழிப்புணர்வோடு, கல்வி குறித்த தெளிவும் ஏற்பட ஆரம்பித்திருந்தது. ஆகையால், படிப்படியாக நம்மவர்களும் நல்ல வேலைகளில் காலூன்ற ஆரம்பித்தனர். இருப்பினும், நான் திருமணமாகி கணவரோடு அமீரகம் வந்தபோது, அதற்கு முன்பிருந்ததுபோலவேதான் குடும்பங்கள் அரிதாக இருந்தது. நல்ல வேலைகளில் இருந்தவர்கள் பலர், ஏன் இப்போது இருப்பவர்கள்கூட சிலர் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டே இருந்தது ஏனென்று புரியவில்லை.  பின்னர் பேசிப் பார்க்கும்போதுதான் புரிந்தது, காரணங்களில் முக்கியமான ஒன்று: புகுந்த வீட்டினர்!!

பொதுவாகவே, மருமகள் வந்தால், மாமியாருக்கு மிக உதவியாக இருக்கும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதற்கேற்றாற்போலவே மருமகள்களும் பெரும்பாலும் அனுசரணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும், மகன் வெளிநாட்டில் இருந்தால், மகனோடு அவரின் மனைவியும் செல்வதென்பது, மாமியாரின் அதிகாரத்தை மீறிய செயலாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம், மகன் மீதான தங்கள் பிடி விலகிவிடுமோ என்ற பயமும், மறுபக்கம் மருமகளைக் கூட்டிச் சென்றால் மகனின் செலவுகள் அதிகமாகி, பெற்றோருக்கு அனுப்பும் பணம் குறைந்துவிடும் என்ற எண்ணமும் கூட இதற்குக் காரணம்.

வெளிநாடுகளில் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணங்கள், மருத்துவம், அன்றாடச் செலவுகள் எல்லாமே இந்தியாவைவிட அதிகம்தான். ஆகையால், செலவுகள் அதிகமாகும்தான். ஆனால்,  அதற்காக மகன், தன் மனைவியைப் பிரிந்தே இருக்கவேண்டுமென நினைப்பது முறையல்லவே. அதிலும் மூத்த மகனாக இருந்துவிட்டால், தம்பி, தங்கைகள் எல்லாருமே அவரின் பொறுப்பு என்பது சொல்லப்படாத நியதியாகிவிட்டதால், அந்தத் தியாகத்தைச் செய்தே ஆகவேண்டுமென சமூகம் எதிர்பார்க்கின்றது. தம்பி, தங்கைகளின் படிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றில் அண்ணனுக்கு பங்கில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அதைச் சாக்கிட்டு, அண்ணனின் குடும்ப வாழ்வில் கைவைப்பது ஏன்?

இஸ்லாம் கணவன் மனைவியரை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்கிறீர்கள்” என்று சொல்கிறது. ஆடை எப்போதுமே அணிந்திருக்க வேண்டிய ஒன்று என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனில், முறையான காரணங்கள் இல்லாமல் கணவன் மனைவி பிரிந்திருக்கலாகுமா? பிரித்து வைத்தலாகுமா?

ஒரு ஆணுக்கு, குடும்பத்திற்குச் சம்பாதிப்பது மட்டுமே பொறுப்பு அல்ல. சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கும் பொறுப்பும் இருக்கிறதென்று “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு; அதுகுறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.” என்ற ஹதீஸ் தெரிவிக்கிறது.  மனைவிக்குக் கணவனாக மட்டுமல்ல, பிள்ளைகளுக்குத் தகப்பனாக ஆற்ற வேண்டிய கடமைகளை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது.  மனைவியாவது கட்டாயத்தினால் சூழ்நிலைகளைப் புரிந்து தன் கவலையை மறைக்கலாம்.  ஆனால், சிறுகுழந்தைகள்? குழந்தைகள் தந்தையின் அன்பை முழுதாகப் பெற முடியாதவர்களாகவே வளர்கிறார்கள்.

இத்தனை கடமைகள் அந்த ஆணுக்கு தன் மனைவி, மக்களின் பேரில் இருந்தாலும், தாய்தந்தையர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் மனைவியை வெளிநாட்டுக்கு, அதற்கான வசதியிருந்தும் அழைத்து வராத ஆண்கள் இன்னும் உண்டு!! விளைவு? பிள்ளைகள் தகப்பனிடம் ஒட்டுதல் இல்லாமலே இருக்கிறார்கள். தகப்பனின் கண்டிப்பும் இல்லாததால் இளவயதினர் வழிகேட்டில் ஆகும் நிலைகளையும் பார்க்கிறோம். சில பெண்களும் பொருளாதாரத்தைச் சரியாகப் பேணத்தெரியாமல், கணவன் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தொலைக்கின்றனர்.

தந்தையில்லாத ஒரு நண்பர், தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து, வெளிநாடு வந்து குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்கி, தங்கைகள் இருவருக்கும் திருமணம்முடித்து,  சீர்வரிசைகள் செய்து, தம்பியை வேலைக்கமர்த்தி, பின் 30+ வயதில் திருமணம் செய்துகொண்டார். விடுமுறைக்குப் பின் (தனியாகத்தான்) வெளிநாடு கிளம்பிய அவரிடம் சகோதரி சொல்கிறார், “காக்கா, நீ எனக்குப் போடவேண்டியதில் இன்னும் 8 பவுன் பாக்கி இருக்கு, மறந்துடாதே!!”  ஞாபகப்படுத்தவில்லையென்றால், அண்ணன் பணம் முழுவதையும் மனைவிக்கு அனுப்பிவிடக்கூடுமோ??!!

இன்னும் சில பாசமலர் சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அதற்கான வசதி இல்லாததால் தம் மனைவியை அழைத்துச் செல்ல முடியாததால் இங்கிருப்பார்கள். இவர்களுக்கு, தம் சகோதரன் மட்டும் மனைவியை அழைத்துச் செல்வது பொறுக்காது. ஏதாவது சொல்லி, தம்பதியரிடையே பிரச்னைகளை உருவாக்குவார்கள்.

மீரகத்தில் இருக்கும் ஃபௌஸியாவுக்கு, வெள்ளிக்கிழமை என்றாலே பயம். அன்றுதானே மாமியாரிடம் தொலைபேசியில் பேச வேண்டும்!! மகனைத் தன்னிடமிருந்து பிரித்து(!!) அழைத்துத் தனிக்குடித்தனம் சென்று விட்டதுபோல கோபமாகவே பேசுவார். இத்தனைக்கும், ஃபௌஸியாவின் கணவர் தன் பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும் (திருமணமானவர்கள் உட்பட) எந்தக் குறையும் வைத்ததில்லை. இருப்பினும் மாமியார் வன்மத்தோடே குத்திப் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

துரையைச் சேர்ந்த நசீமா, திருமணமாகி 15 வருடங்கள் கணவர் சவூதியிலும், கணவன் அழைத்துச் செல்ல முடிந்தாலும், மாமியார் தடை போட்டதால் மிகப் பொறுமையோடு, மாமியாரின் காரணமற்ற ஏச்சுபேச்சுகளைத் தாங்கிக் கொண்டு மதுரையில்தான் இருந்தாள். கணவரிடம் சொன்னால், “எனக்காகவும், இறைவனுக்காகவும் என் தாயைப் பொறுத்துக் கொள்” என்பதுதான் ஒரே பதில்!!

இவரைப் போலத்தான் பலரும். ஏன் இவர்களால் தன் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடிவதில்லை? தாயின் காலடியில் சொர்க்கம் என்பதால், சொர்க்கம் செல்லக் கிடைக்கும் எளிய வழி அடைபட்டுப் போகுமோ? தாயின் தவறை எடுத்துச் சொன்னால்கூட இறைவன் குற்றம் பிடிக்கக்கூடும் என்கிற தவறான புரிதல்.

இதுவா இஸ்லாம் சொல்லித் தந்தது? மனைவியைத் தன் தாய் வேலைக்காரி போல நடத்துவதையோ, கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதையோ எதிர்க்காமல் மௌனமாக இருப்பதா இஸ்லாம் சொல்லித் தரும் வழிமுறை? தாயை எதிர்த்துப் பேசாமல் இருப்பதால், மகன் சுவர்க்கத்துக்குச் சென்றுவிடலாம், இறைவன் நாடினால். ஆனால் அந்தத் தாய்? நீங்கள் சொர்க்கப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தாயை நரகிற்கு அனுப்பும் வழியல்லவா காட்டிக் கொடுக்கிறீர்கள்?

ஞ்சாவூர் ஷம்சின் தாயார், முதுமை, நோய் காரணமாக வீல் சேரில்தான் வாசம். துணைக்கு வேலையாள் மட்டுமே. எனினும், ஒரே மகன் ஷம்சுக்குத் திருமணம் செய்வித்து, மருமகளையும் அபுதாபிக்கு உடன் அனுப்பி வைத்திருக்கிறார். தன் நோயையை, முதுமையைக் காரணமாகக் காட்டி அவர்களைப் பிரிக்க நினைக்காத அவரின் பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

ஷார்ஜாவில் உள்ள மரியமின் மாமனார், மாமியார் சென்னையில் தனியேதான் இருக்கிறார்கள்.  ஒரு மகன் ஷார்ஜா, ஒரு மகன் அமெரிக்கா. எனினும்கூட மகனையோ, மருமகளையோ குறை சொன்னதில்லை. சென்ற வருடம் இங்கு வந்திருந்த அவர்களைச் சந்தித்தபோது, தம்பதியர் ஒன்றாக வாழவேண்டியது, இக்காலக் குழந்தைகள் பெற்றோருடன் இருந்து வளரவேண்டியது போன்ற எதார்த்தங்களை உணர்ந்தவர்களாகவே உரையாடினார்கள்.

ஒருத்தன்கிட்ட, ஒரு கற்புக்கரசி பேரு சொல்லுன்னா, அம்மா, மனைவியெல்லாம் விட்டுட்டு கண்ணகின்னானாம். அதுமாதிரி நான் என் மாமியாரை விட்டுட்டு யாரு மாமியாரையெல்லாமோ சொல்லிகிட்டிருக்கேன். என்னவர் அபுதாபி வந்த நாள்தொட்டு நான் இங்க அபுதாபியிலத்தான் இருக்கேன்.  என் நாத்தனாரின் கணவர்(மட்டும்) வெளிநாட்டில் என்ற போதிலும், இன்றும் என்னுடைய வீட்டுத் தேவைக்கான பெரும்பான்மையான பொருட்கள் வாங்கி அனுப்பித் தருவது, ஆலோசனைகள் கூறுவது எல்லாம் மைனிதான்.

இவர்களையெல்லாம் போலப் பார்த்துவிட்டு,  ஒருசில மாமனார்-மாமியார், நாத்தனார்களால் மட்டும் ஏன் இதுபோல இருக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.  இன்னும் சொல்லப்போனால், தவறு செய்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லாமல், அவர்களுக்கு தந்தை/கணவர்கள்/மகன்கள் ஒத்துப்போவதால், ’பெண்கள் அடிமைப்படுத்துதல்’ என்று இஸ்லாம் மேல் பழி விழும் சூழ்நிலையாகிறது.

ஒருவர் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரை அவருக்கு தாய் காலடியில் சுவர்க்கம்தான். ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான், தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்பதே சில இளைஞர்களுக்குப் புரியும். அதுவரை, தாயை எப்படியெல்லாமோ உதாசீனப்படுத்தியிருப்பார்கள். மனைவி வந்ததும், தான் அதுவரை செய்த அலட்சியங்களுக்குப் பகரமாக, தன் பெற்றோரைக் கவனிக்கவேண்டிய தன் கடமையை, பொறுப்பை லாகவமாக மனைவியின் தோள்களுக்கு இடம்மாற்றிவிட்டு, அவளை அடிமையாக நேர்ந்து விடுகிறார்கள்.

மேலே சொன்ன நசீமாவும் 15 வருடங்களாக கடமையை ஏற்று, பொறுமையாகத்தான் செய்துவந்தாள். ஆனால், ‘இவ எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாடா. ரொம்ம்ம்ப நல்லவ’ என்கிற ரீதியில் கடுமைகள் குறையாமல் போகவே, பெற்றோர்களோ, உடன்பிறந்தவர்களோ ஆதரவுக்கு இல்லாத அப்பேதைப்பெண் தற்கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்த பின்பே ஒருவழியாய் கணவர் சவூதிக்கு அழைத்துச் சென்றார்.

போராடிச் சென்றவளுக்கு, ஹஜ் செய்ய ஆசை, பேராசை. ஆனால், மாமியார் தானும் இந்தியாவிலிருந்து வரும்போது தன்னுடன்தான் ஹஜ் செய்யவேண்டும் என்று சொல்லிவிட, மக்காவைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும்கூட காத்திருக்கிறாள் - மூன்றாண்டுகளாக!! பல காரணங்களால் மாமியார் வருவது தள்ளிப் போகிறது. அடுத்த வருடம், பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு, மீண்டும் ஊர் திரும்ப வேண்டியிருப்பதால், இவ்வருடமே கடைசி வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ். அதன்பிறகு இந்தியாவிலிருந்து பெரும் பணம் செலவழித்து வருவதென்பது விரைவில் கைகூடும் நிலையிலில்லை.

வெளிநாடுகளில் வீட்டு வாடகை, செலவினங்கள் அதிகம் என்பது சிலருக்குக் குடும்பத்தை அழைத்துவர ஒரு முட்டுக்கட்டை. ஆனால், நானறிந்த ஒருவருக்கு இலவசமாகத் தங்கும் இடம் கிடைத்தபோதும் மனைவி குழந்தைகளை அழைத்து வரமுடியவில்லை. காரணம்? அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை! நகை, வரதட்சணை, சீர் கொடுத்து திருமணம் முடித்து, பின்னரும் பலப்பல சீர்கள் செய்து, தங்கை கணவரின் தொழில் ஆதாரத்துக்கும் முடிந்த உதவி செய்த அவரால் முடிந்தால் வீடென்ன, பங்களாவே வாங்கிக் கொடுத்திருப்பார். அவரும் மிகச் சொற்ப சம்பளத்தில் இருப்பவரே. 40 வயது தாண்டி, பெண் குழந்தைகள் வைத்திருக்கும் மகனை எப்படித்தான் இப்படிப் பிழிய மனம் வருகிறதோ பெற்ற தாய்க்கு?

மனைவியை இங்கு அழைத்து வந்து வைத்திருப்பவர்களில் ஒரு சிலர், ஏதோ அவர்கள் மனமிரங்கி மனைவிக்குக் கருணைப்பார்வை காட்டியதால்தான் இந்த அரபு நாட்டு வாசம் மனைவிக்குக் கிட்டியதென்பதாக அக்கணவர்களின் நடவடிக்கைகள் இருக்கும்.
இன்னும் மிகச்சிலர், ’நான் நினைச்சா இப்பவே உன்னை ஊருக்கு அனுப்பிவிட முடியும்’ என்று ‘நாடுகடத்தலை’ சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளின்போதுகூட மனைவிக்கு ஞாபகப்’படுத்து’வார்கள். கீழ்க்காணும் இறைவாக்கையும், ஹதீஸையும் அறிந்திராத அவர்களின் வெளிநாட்டு வாழ்வே, கம்பெனி முதலாளியின் தயவுதான் என்பது மறந்துவிடும். வெளிநாடுகளில் யாருடைய வேலையும் நிரந்தரமில்லை. ஏன், பூலோக வாழ்வே யாருக்கும் நிரந்தரமில்லை!!
[2:228]”...கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;''
”நீங்கள் நிறைவேற்ற மிகவும் கடமைப்பட்ட நிபந்தனைகள் திருமணத்தின் மூலம் நீங்கள் சுமந்துகொண்ட பொறுப்புக்கள்தான்” (நபிமொழி)
அறிவிப்பவர்: உக்பா(ரலி) நூல் : புகாரி.
ன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். எல்லாக் கடமையும் முடிந்திருக்கும். இனியாவது மகனும் மருமகளும் சேர்ந்து இருக்கட்டுமே என்றிருக்கலாம்தான். ஆனால், காற்றுள்ளபோதே தூற்றவேண்டுமே. தங்களுக்காகச் சொத்து வாங்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும். மகன், தன்  குடும்பத்தை அங்கு வைத்திருந்தால் அதற்கெல்லாம் பணம் சேர்க்க முடியாது, ஆகையால் குடும்பத்தை அனுப்பிவிட்டு, தனியாக இரு போதும் என்று சொல்லி, அவ்வப்போது அமைதியாக இருக்கும் மகனின் மனதைச் சலனப்படுத்துவார்கள். தொடர்ச்சியாக, மகன் குடும்பத்தில் சூறாவளிச் சுழலும். பெரியவர்களே, மகனின் மனநிம்மதியைவிடவா பணமும், சொத்தும் முக்கியம்?

கணவரின் வேலை நிமித்தம், வெளிநாடுகளில் வாழும் பெண்கள் அங்கு சுகபோக வாழ்வு அனுபவிக்கவில்லை. கணவரோடு இருக்கிறோம் என்ற நிம்மதி மட்டுமே அவர்களுக்கு.  புறாக்கூண்டு போன்ற வீடுகளில்தான் பெரும்பாலோனோர் இங்கு வாழ்கின்றனர்.  ஏற்கனவே சொன்னதுபோல, இங்கு விலைவாசி அதிகம் என்பதோடு, இந்தியாவில் கணவர் குடும்பத்தினரையும் தன் கணவர் ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தன் தேவைகள், ஆசைகள், விருப்பங்கள், ஏன் சில அத்தியாவசியங்களைக் கூடக் குறுக்கிக் கொண்டுதான் இங்கிருக்கிறார்கள்.

சில பெண்களின் மாமியார், மாமனார்கள் மகனோடு தங்கியிருக்கலாம் என்று மூன்று மாத விஸிட் விஸாவில் அரபு நாடுகளுக்கு வருவதுண்டு. அவர்களால் ஒரு மாதத்திற்குமேல் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே அறையில் வாழ்க்கை, அக்கம்பக்கம் பேசிப்பழக ஆட்கள் இல்லை, வெளியே போகவர சிரமம், காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை, உறவினர்கள் திருமணம், புதுவீடுபுகுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று பல காரணங்களை அடுக்குவார்கள். யோசியுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில்தானே அந்தப் பெண்ணும் இங்கே இருக்கிறாள்? காலை போனால் முன்னிரவு வீடு திரும்பும் கணவன். யாருமே இல்லாத வீடு. இந்தியாவிலோ எல்லாவேலைக்கும் வேலைக்காரர்கள் உண்டு. இங்கே விலைவாசி காரணத்தால் எல்லா வேலைகளையும்கூட அவர்களே செய்துகொள்ள வேண்டும்.  மேலும் நெருங்கிய உறவுகளின் விசேஷங்கள், வருத்தங்கள் எதிலும் நினைத்தபடி கலந்துகொள்ள முடியாத ஏக்கங்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, கணவனோடு, குழந்தைகள் சூழ இருப்பதே போதும் என்று இருக்கிறார்களே?!

பெரியவர்களே! உங்கள் மருமகள் இங்கு இருப்பதால், அதிக வசதி உங்கள் மகனுக்குத்தான், மருமகளுக்கல்ல. தனியே பேச்சிலர்களாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் புரியும்.  மனைவி உடன் இருப்பதால், சுத்தமான ஆரோக்கியமான உணவு. உடல்நலப் பாதுகாப்பு. பெற்ற குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து ரசிக்கும் பாக்கியம், மனதுக்கும் மகிழ்ச்சி. வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல்? வீட்டுச்சூழல் திருப்தியாக இருக்கும்போது, வேலைசெய்யும் நிறுவனம் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் கூடும். இவையெல்லாம் இல்லாமல், தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இன்று பரவிவரும் இஸ்லாமிய அறிவாலும், மகன்களின் தூண்டுதலாலும், திருமணத்தின்போது வரதட்சணையைத் தவிர்த்து விடுகின்றனர்.  வரதட்சணையை வேண்டாமென்று சொல்லுமளவு பெருந்தன்மை உடையவர்கள், மகனின் சுகத்தை, நிம்மதியைக் குலைத்து, அவர்களிடம் பணம் பணம் என்று பிழிந்து எடுக்க நினைப்பது ஏன்? மருமகள்தான் அதற்குத் தடையாக இருப்பதாக அவதூறு சொல்வதும், மகனிடமிருந்து அவளைப் பிரித்துவிட நினைப்பதும் ஏன்?

இந்தத் தூண்டிலில் சில மகன்களும் விழுந்து விடுகின்றனர் என்பதுதான் வேதனையான உண்மை. பெற்றவர்களை மதிக்க வேண்டும், அவர்களின் பராமரிப்பு பிள்ளையின் பொறுப்பு என்பதில் மறுகருத்து இல்லவே இல்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் - தவறாகவே இருந்தாலும்-  வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மீது கடமையில்லை. மனிதர்களான அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே என்பதை உணர்ந்து, தவறுகளை எடுத்துரைக்க வேண்டும். இதோ தவறுகளுக்கு உடந்தையாகக்கூடாது என்பதைத் திடமாக உரைக்கும் இறைவாக்கு பாருங்கள்!
[58:22] அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே!
னைவியிடமே ஆறுதலும், அமைதியும் கிடைப்பதாகச் சொல்லும் பின்வரும் இறைவசனங்கள் ஒருவருக்குப் பெற்றோர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனைவியும் முக்கியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இருதரப்பிற்கும் உரிய கடமைகளைத் தவறாது செய்து, ‘பேலன்ஸ்’ செய்வதற்காகத்தான் ஒரு ஆணிற்கு ‘அதிகப் பொறுப்பு’ கொடுத்து, ‘மேன்மையானவர்’ ஆக்கப்பட்டுள்ளது.
[2:187] அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்
[2:228] கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;''
[4:19] ...இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும், அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
[30:21] இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
மேற்கண்ட இறைவசனங்கள் மனிதனுக்கு மனைவியின் அவசியத்தையும், அவளை நல்லமுறையில் நடத்த வேண்டியதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

”உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழி. இதைச் சற்றே கூர்ந்து பார்த்தால், இதன் அருமையான அர்த்தமும், அதன் தாக்கமும் புரியும்.  ஒருவர் உலகவாழ்வில் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராகவோ, செல்வந்தராகவோ, பெரும்புகழ் பெற்றவராகவோ, அதிக நண்பர்கள் அமைந்தவராகவோ இருக்கலாம். அவரை மக்கள் போற்றலாம், புகழலாம், பின்பற்றலாம். ஆனால், அவர் தனது வீட்டினுள், தம் குடும்பத்தாருக்கு - அதாவது மனைவிக்கு - நல்லவராக இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். ஏனெனில், வீட்டில்தான் அவரது முழு குணம் வெளிப்படும்.  தாய், தந்தை, சகோதர-சகோதரிகள், பெற்ற பிள்ளைகள் ஆகியோர் இவரிடம் கோபம் இருந்தாலும், அது ரத்த பாசத்தினால் மறக்கப்பட்டு மன்னிக்கப்படலாம். அதேபோல, இவருக்கும் தொப்புள்கொடி உறவுகளிடத்தில் கோபம், வருத்தம் ஏதேனும் இருந்தாலும், ’தான் ஆடாவிட்டாலும், தன் சதை சதை ஆடும்’ என்பதாகத் தன் கடமைகளை விடாது செய்துவிடுவார்.

‘மனைவி’ என்ற உறவுக்கு ரத்தபந்தம் இல்லை. ஆனால், அந்த உறவுதான் இரத்த உறவுகளையும்விட ஒரு மனிதனுக்கு உணர்வளவில், உடலளவில் நெருக்கமானது.  அதேசமயம் அந்த உறவுதான் பலசமயங்களில் ”taken for granted" ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவேதான், எந்த ரத்தத் தொடர்பும் இல்லாத உறவான மனைவியிடம், உங்கள் அகம்-புறம் முழுமையாக அறிந்த - உங்களின் ‘மறுபக்கத்தை’, ‘நிஜமுகத்தை’ அறிந்த அந்த உறவிடம்,  நீங்கள் ‘சிறந்தவர்’ என்று பேர் எடுக்கவேண்டுமென்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, மனைவியை நீங்கள் எவ்வளவு கவனமாக, சிரத்தையோடு பேணி கண்ணியப்படுத்த வேண்டும் என்பது புரியும்.

ஸ்லாம் பெண்களுக்கு அதிக உரிமைகள் கொடுத்துள்ளது. அதைப் பெருமையுடன் பறைசாற்றவும் செய்கின்றோம். ஆனால், "உடையவன் கொடுத்தாலும் இடையவன் விடமாட்டான்" என்ற கதையாக, ஒரு சில பெண்களுக்குத் தம் கணவனுடன் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமைகூட கணவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் தயவில் இருக்கும்படி உள்ளது. இந்தத் தவறைச் செய்யும் சகோதரர்கள் மொத்த இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்றாலும் அதன் பாதிப்பு பெரிது என்பதால் இத்தவறைத் திருத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
[7:189] அவனே, உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும் அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக!

74 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  சகோதரி ஹுஸைனம்மா உரத்த சிந்தனை

  ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பமும்,குடும்பதலைவியும்,தலைவனும் பொருப்புள்ள அனைவரும் படிக்க வேண்டிய பதிவு

  ReplyDelete
  Replies
  1. ஹைதர்: வ அலைக்கும் ஸலாம் வரஹ். வபர.

   ஜஸாக்கல்லாஹ் கைர்.

   Delete
 2. ஸலாமுடன்,

  அற்புதமான பதிவு. எனக்கே எனக்கு அறிவுரை சொன்னது போன்ற பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. யாஸிர்: ஸலாம். மிகுந்த மகிழ்ச்சி.

   Delete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  பலப்பேருடைய உள்ள உணர்வுகளை வெளியிட்டுள்ள சிறந்த பதிவு . ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)

  ReplyDelete
  Replies
  1. ஜெய்லானி: வ அலைக்கும் ஸலாம் வரஹ். வபர.

   //பலப்பேருடைய உள்ள உணர்வுகளை // ஆம், சொல்லமுடியாமல் தவிப்பவர்கள் நிறைய. இந்தத் தளத்தில் அவர்கள் சார்பாக, இதைச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் அல்ஹம்துலில்லாஹ்.

   Delete
 4. Good orticle. insha allah i will expect littlebit more from you

  ReplyDelete
  Replies
  1. அப்துஸ் ஸத்தார்: நன்றிங்க.

   //i will expect littlebit more//
   இன்ஷா அல்லாஹ், துஆ செய்ங்க.

   Delete
 5. அருமையான பதிவு.

  மகனின் மகிழ்ச்சி முக்கியமில்லைன்னா எதுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு இன்னொரு பெண்ணின் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கணும்?

  இளமை போனால் திரும்ப வருமா? :(

  ReplyDelete
  Replies
  1. துளசி டீச்சர்: நன்றி டீச்சர்.

   Delete
 6. Very good post.

  by
  Manikandan

  ReplyDelete
  Replies
  1. மணிகண்டன்: நன்றிங்க.

   Delete
 7. //...போராடிச் சென்றவளுக்கு, ஹஜ் செய்ய ஆசை, பேராசை. ஆனால், மாமியார் தானும் இந்தியாவிலிருந்து வரும்போது தன்னுடன்தான் ஹஜ் செய்யவேண்டும் என்று சொல்லிவிட, மக்காவைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும்கூட காத்திருக்கிறாள் - மூன்றாண்டுகளாக!! பல காரணங்களால் மாமியார் வருவது தள்ளிப் போகிறது. அடுத்த வருடம், பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு, மீண்டும் ஊர் திரும்ப வேண்டியிருப்பதால், இவ்வருடமே கடைசி வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ். அதன்பிறகு இந்தியாவிலிருந்து பெரும் பணம் செலவழித்து வருவதென்பது விரைவில் கைகூடும் நிலையிலில்லை...//

  Atrocity at its peak !!!!.

  ReplyDelete
  Replies
  1. ரஷீத்: போன வருஷம் ஹஜ் போயிருந்தபோது, (ஹஜ் முடிந்தபின் மக்காவில்) இந்தப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அவள் கண்களின் ஏக்கம் மறக்கமுடியாது.

   Delete
 8. சலாம்!

  பல குடும்பங்களின் யதார்த்தமான சூழலை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். மனைவியோ தாயோ யாராக இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நின்றால் பல தவறுகளை தடுக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. சுவனப்பிரியன்: ஸலாம்.
   நியாயத்தின் பக்கம் - நல்ல அறிவுரை.

   Delete
 9. நல்ல பதிவு... உண்மையை உரத்தே சொல்லி உள்ளீர்கள்...
  பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் : நன்றிங்க.

   Delete
 10. யதார்த்தமாக சொல்லப்பட்ட அற்புதமான பதிவு! வாழ்த்துக்கள் மேடம்!

  ReplyDelete
  Replies
  1. தக்குடு: வருகைக்கு மகிழ்ச்சிங்க. மிகவும் நன்றி!

   Delete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..மிக அருமையான பதிவு சகோ..ஒவ்வொரு வரிகளும் நிதர்சனத்தை தெள்ளத் தெளிவாக சுட்டி காட்டுகிறது..உண்மைகள் எப்போதும் சுடத் தான் செய்யும்..அதே போல இந்த விடயமும் அந்த வேலையைத் தான் செய்கிறது..

  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியாது..ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் நடைமுறைகளில் நடை பெற்று கொண்டிருக்கும் ஒரு வழக்கம் தான் இது..

  நீங்கள் சொல்வதை போல பொருளாதார சூழ்நிலை காரணமாக குடும்பத்தை அழைத்து செல்ல முடியாதவர்களை கூட ஒரு வழியில் ஏற்றுக் கொள்ளலாம்..ஆனால் எல்லா வசதிகளும் இருந்தும் பிள்ளைகளின் நியாயமான ஆசைகளையும்,உரிமைகளையும் மறுக்கும் பெரியவர்களை எதில் சேர்த்துக் கொள்வது..

  வாழ்வில் சில காலமே வரக்கூடிய அழகான இனிமையான விசயங்கள் பிறகு என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது என்பதை எப்போது உணர்வார்களோ தெரியவில்லை..

  நல்லதொரு பதிவை கொடுத்ததற்கு நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. ஆயிஷாக்கா: வ அலைக்கும் ஸலாம் வரஹ். வபர.

   //தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் நடைமுறைகளில் நடை பெற்று கொண்டிருக்கும்//
   உண்மை அக்கா. கட்டாயப்படுத்திப் பிரித்து வைத்தால், தம்மீது வெறுப்புதான் கூடும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்களோ? அதன் பின்விளைவுகளைத் தம் முதுமை காலத்தில் சந்திக்க வேண்டி வரலாம் என்பதையும் மறந்துவிடுகிறார்கள்.

   Delete
 12. Superb..
  இதில் எதுவுமே எனக்கு சம்பந்தம் இல்லாதது என்றாலும், நான் கண்டு கேட்ட விடயங்களை அழகான முறையில் தொகுத்து வைத்து உள்ளீர்கள்..

  மனைவியை கூட்டிச் சென்று பெற்றோரை மறந்தவர்களைப் பற்றியும் எழுதலாமே! ஏனென்றால், பொறுப்பாக இருப்பவர்களை விட, பொறுப்புக்களை மறந்தவர்களே அதிகம்...:(

  ReplyDelete
  Replies
  1. jiff0777: //பெற்றோரை மறந்தவர்களைப்//
   இப்படியானவர்களைப் பற்றிப் பத்திரிகைகளில் மட்டுமே படித்து வருகிறேன். இதுவரை நான் நேரில் இப்படிப்பட்ட யாரையுமே சந்தித்ததில்லை. அல்ஹம்துலில்லாஹ். பெற்றோரின்மீது ஏதேனும் கோபதாபங்கள் இருந்தாலும், அவர்களைப் பராமரிக்கும் கடமையத் தவறாது செய்பவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். இனியும் அப்படி யாரையும் சந்திக்க நேரக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.

   Delete
 13. பெரியவர்களே! உங்கள் மருமகள் இங்கு இருப்பதால், அதிக வசதி உங்கள் மகனுக்குத்தான், மருமகளுக்கல்ல. தனியே பேச்சிலர்களாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் புரியும். மனைவி உடன் இருப்பதால், சுத்தமான ஆரோக்கியமான உணவு. உடல்நலப் பாதுகாப்பு. பெற்ற குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து ரசிக்கும் பாக்கியம், மனதுக்கும் மகிழ்ச்சி. வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல்? வீட்டுச்சூழல் திருப்தியாக இருக்கும்போது, வேலைசெய்யும் நிறுவனம் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் கூடும். இவையெல்லாம் இல்லாமல், தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?//

  ஹுஸைனம்மா, நீங்கள் எழுதி இருக்கும் எல்லாமே நன்றாக இருக்கிறது.
  எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.
  நேற்று ஜெயா டி.வியில் மக்கள் அரங்கத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சியை வைத்தார்கள். அதில் தனியாக இருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரர் இந்த உணவு பிரச்சினையை சொன்னார். காலையிலேயே உணவை வைத்து விடுவார்கள். வந்து சாப்பிடும் போது உணவு கெட்டு போய் இருக்கும்.
  குளிரில் காலையில் செய்த உணவை தொட முடியாது. வெயில் காலத்தில் உணவு கெட்டு போய் இருக்கும்.
  குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு துபாய் சொர்க்கம், தனியாக இருப்பவர்களுக்கு நரகம் என்றார்.

  பாலைவனத்தில் தவிக்கும் எத்தனை உள்ளங்கள் உள்ளனவோ.
  அவர்களுக்கு ஆண்டவன் நல்வழி காட்ட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கோமதிக்கா: வருகைக்கு மிகவும் நன்றிக்கா.
   உணவுப் ப்ரச்னைதான் பெரிய கஷ்டம். கஷடப்பட்டுச் சம்பாதிக்கும் ஒரு மனுஷனுக்கு, பசியுடன் வரும்போது ஒருபிடி சோறு இல்லை என்றால் எத்தனை கொடுமை? வெயில்காலங்களில் அடிக்கடி உணவு கெட்டுப் போய்விடும். அப்படி உண்டு, ஃபுட் பாய்ஸன் ஆவதென்பது மிகவும் சகஜமாகிவிட்டது.

   தானே சமைக்கும் பேச்சிலர்களும்கூட, மறுநாள் மதிய உணவை, முந்தைய இரவிலேயே பேக் செய்து வைத்துவிடுவார்கள். ஃப்ரிட்ஜ்கூட கிடயாது சிலரிடம். கேட்கும்போதே வயிற்றைப் பிசையும்.

   //ஆண்டவன் நல்வழி காட்ட வேண்டும்// ஆமாம்.

   Delete
 14. சலாம் ,

  அனைவருக்கும் பொதுவான நல்ல பதிவு .நிறைய தெரிந்துகொண்டேன் .....பொறுப்புள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..

  புதிய வரவுகள்:வெற்றி....வெற்றி....வெற்றி....!!,வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. திருவாளப்புதூர் முஸ்லிம்: ஸலாம். நன்றி.

   Delete
 15. நல்லதொரு அனுபவப் பகிர்வு. எல்லோரும், குறிப்பாக இந்நிலையில் தங்கள் மனைவிகளை வைத்திருக்கும் கணவர்கள் படிக்க வேண்டிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் சார்: மிகவும் நன்றியும், மகிழ்ச்சியும்!

   Delete
 16. ஹுஸைனம்மா...

  அழகான பதிவு.. அதைவிட முக்கியம், மிக்க நேர்மையான பதிவு.. யாராகினும் நீதி செலுத்துங்கள், பாதிப்பவர் உங்கள் பெற்றோராக இருந்தாலும் சரியே என்ற இறைவனின் வசனத்திற்கு ஒப்ப... ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, புகுந்த வீட்டு பெண்கள் செய்யும் அராஜகங்களை அழகாக பட்டியல் இட்டுள்ளீர்கள்... நிச்சயம் இறைவனை நம்பும் பெண்களுக்கு இதில் பல படிப்பினைகள் உள்ளன... படிப்பினை பெறுவோர் உண்டா???

  ReplyDelete
 17. /* இதுவா இஸ்லாம் சொல்லித் தந்தது? மனைவியைத் தன் தாய் வேலைக்காரி போல நடத்துவதையோ, கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதையோ எதிர்க்காமல் மௌனமாக இருப்பதா இஸ்லாம் சொல்லித் தரும் வழிமுறை? */

  இல்லை ஹுஸைனம்மா..இந்த இடத்தில் சிறு மாற்றம் தேவை...இது இஸ்லாம் சொல்லியது என்று யாரும் செய்வதில்லை..பொதுவாகவே இது தமிழக கலாச்சாரம், அந்த கலாச்சாராத்திலே வாழ்ந்ததால் இஸ்லாமிய ஆண்களும் இவ்வாறு செய்கிறார்கள்... மார்க்கம் தெரிந்து இருந்தால், தாய் தவறு செய்யும் பொழுது நிச்சயம் பார்த்துக் கொண்டு வாய் மூடி மௌனியாக இருந்து இருக்க மாட்டார்கள்.....

  ReplyDelete
 18. /* இந்தத் தூண்டிலில் சில மகன்களும் விழுந்து விடுகின்றனர் என்பதுதான் வேதனையான உண்மை. */

  சில மகன்கள் அல்ல ஹுசைனம்மா.. பல மகன்கள் இதில் விழுத்து மீழ வழி தெரியாமல் மனதிற்குள் புழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. அவர்களுக்கு உங்கள் கட்டுரை அருமையான வழி சொல்லி இருக்கிறது... படிப்பினை பெறும் சகோதரர்கள் உண்டா???

  நீதி செலுத்துங்கப்பா... அது உங்க அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, சொந்தம், பந்தம், இனம், மொழி, நாடு, உங்கள் மதத்தினர்.. யாருக்கு எதிராக இருந்தாலும் நீதி செலுத்துங்கள்...இது தான் இறைவன் விரும்புவது...

  ReplyDelete
 19. இந்த அற்புதமான கட்டுரையை இவ்வளவு லேட்டாக படித்ததற்க்காக வெட்கப்படுகிறேன்..

  ஹுஸைனம்மா...

  Jiff White சொன்னது போல், பொண்டாட்டியே கதி என்று இருந்து பெற்றோரை புறம்தள்ளிய கயவர்கள், குறிப்பாக இஸ்லாமிய கயவர்களை இஸ்லாத்தின் துணை கொண்டே கருவறுங்கள்...

  ReplyDelete
 20. அருமையான பதிவு ஹுஸைனம்மா.

  வெளிநாட்டு மோகமும் , வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் சரியான பதிலடி..
  திருமணத;திற்கு பின் எந்த சந்தர்பத்திலும் கணவன் மனைவி பிரிந்திருக்கவே கூடாது.
  தன்மகள் திருமணம் முடித்து சென்றால் கஸ்டப்படக்கூட◌ாது ஆனால் மருமகள் என்ன வேதனை என்றாலும் படலாம் என்ன நியாயம் இது?

  அல்லாஹ் பாதுகாக்கட்டும் இவ்வாறான மாமியார்களை:(

  ReplyDelete
  Replies
  1. பஸ்மின் கபீர்:

   //தன்மகள் திருமணம் முடித்து சென்றால் கஸ்டப்படக்கூடாது ஆனால் மருமகள் என்ன வேதனை என்றாலும் படலாம் என்ன நியாயம் இது?//
   ஆமாம் ஃபஸ்மின், ஒரு கண்ணில் வெண்ணெய்; ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று இதைத்தான் சொல்வார்கள்.

   Delete
 21. ஹுஸைனம்மா....

  ரொம்ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சே..பட் சொல்ல முடியல..இந்த கட்டுரை படித்ததும் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்...

  என்னைப் பொறுத்த வரை, நான் பார்த்த வரை....தமிழ் பதிவு உலகின் ஆகச் சிறந்த பெண் பதிவர் நீங்கள் தான்...

  அது என்ன பெண் பதிவர்?? ஆணாதிக்கமான்னு நினைக்காதீங்க.. பொதுவா பதிவர்னு சொன்னா நான் அதில பஸ்ட் வந்திடுவேன்.. அதுக்கு தான் பெண் என்ற அடைமொழி....

  ReplyDelete
  Replies
  1. ஹுஸைனம்மா அக்கா....

   //அது என்ன பெண் பதிவர்?? ஆணாதிக்கமான்னு நினைக்காதீங்க.. பொதுவா பதிவர்னு சொன்னா நான் அதில பஸ்ட் வந்திடுவேன்.. அதுக்கு தான் பெண் என்ற அடைமொழி....//

   இதுதான் சைக்கிள் கேப்புல ஏரோபிளேன் ஓட்டுறது.... :))))

   Delete
  2. சிராஜ்: //அந்த கலாச்சாராத்திலே வாழ்ந்ததால் இஸ்லாமிய ஆண்களும் இவ்வாறு செய்கிறார்கள்//
   மார்க்கம் தெரிந்தவர்களும்கூட, தன் சௌகரியத்திற்கேற்றவாறு வசதியானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.


   //இந்த அற்புதமான கட்டுரையை இவ்வளவு லேட்டாக படித்ததற்க்காக//
   பதிவிட்ட அன்னிக்கே படிச்சுட்டு, ஏன் இப்படி......??!! பார்த்து, அப்புறம் யாராவது ஜிங்-சக்னு பேக்ரவுண்ட் மூஸிக் போட்டுடப்போறாங்க!! :-)))


   //பொதுவா பதிவர்னு சொன்னா நான் அதில பஸ்ட் வந்திடுவேன்..//
   பதிவே எழுதாம நீங்க சிறந்த பதிவர்??!! எனக்கு ஏன் இப்ப பவர் ஸ்டார் ஞாபகம் வருது?

   Delete
 22. ஸலாம்.சகோ.ஹுசைனம்மா,

  மிகவும் நெஞ்சுரத்துடன் தீர்க்கமான எழுத்துக்களுடன் அமைந்த சத்தான ஆக்கம்..!
  சரியான இடத்தில் சொல்லபப்ட்ட முத்தான இறைவசனங்களின் தாக்கம்..!
  முழுக்க முழுக்க ஒரு முப்பது-நாப்பது வயது பெண்ணின் பார்வையில் மிக மிக நேர்மையாக எழுதப்பட்டுள்ளது..!
  பாராட்ட வார்த்தைகள் இல்லை..! ஜசாக்கல்லாஹு க்ஹைர்..!

  இன்ஷாஅல்லாஹ்,

  ////////////தஞ்சாவூர் ஷம்சின் தாயார், முதுமை, நோய் காரணமாக வீல் சேரில்தான் வாசம். துணைக்கு வேலையாள் மட்டுமே. எனினும், ஒரே மகன் ஷம்சுக்குத் திருமணம் செய்வித்து, மருமகளையும் அபுதாபிக்கு உடன் அனுப்பி வைத்திருக்கிறார். தன் நோயையை, முதுமையைக் காரணமாகக் காட்டி அவர்களைப் பிரிக்க நினைக்காத அவரின் பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளில்லை. /////////////

  --------------மகன் போல... மருமகள் போல...பாசத்துடன்...
  கவனிப்பு தரமுடியாத ஒரு கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாள் தயவில்...
  மூப்பில் இயலாமையில் உதவி புரிய மகள் ஒன்றை பெறாமல்... ஒற்றை மகனை பெற்று... நல்லதொரு பாசமான மருமகளை பெற்று...
  ஒன்றுக்கு மூன்று பேரப்புள்ளைகள் இருந்தும்...
  அவற்றை கூட கொஞ்ச என்ன... காணவே முடியாமல்...
  எஞ்சிய சொற்ப காலத்தை கணவனும் இன்றி தனிமையில் தள்ளும்
  இந்த வயதான வீல்சேர் நோயாளி தாயின் மனநிலையில் இருந்து
  ஒரு பதிவு எழுதும்...
  "ஒரு அறுபது - எழுபது வயதான இஸ்லாமிய பெண்மணி" எவரும் இந்த தளத்தில் உண்டா...?

  அவரின் பார்வையை அவர் கோணத்தில் இப்பிரச்சினையில் பார்க்க ஆசை..!

  ReplyDelete
  Replies
  1. //ஒன்றுக்கு மூன்று பேரப்புள்ளைகள் இருந்தும்...//
   இந்த வரி எங்கேயும் எழுதப்படவில்லையே????

   எனினும், அந்தத் தாயின் பார்வையில் எழுதினால், படிக்க ஆசைதான், இன்ஷா அல்லாஹ் நிறைய பாடங்கள் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

   Delete
  2. முஹம்மது ஆஷிக்: ஸலாம்.

   ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதே தன் உடல்நலமில்லாத தாயைப் பார்த்துகொள்ளத்தான் என்றால், அப்பெண்ணிற்கும், அவர்கள் வைத்திருக்கும் வேலையாளிற்கும் அவர்களின் பார்வையில் என்ன வித்தியாசம்? திருமண உறவின்மூலம் வீட்டினுள் வந்த ஒரு 20 வயதுப் பெண்ணிடம் முதல்நாள் முதலே மாமியாருக்கு அந்தரங்கப் பணிவிடைகள் செய்யுமளவு பாசம் இருக்குமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

   அப்பெண் அவர்களின் உறவினர் என்றாலோ, அல்லது திருமணத்திற்கு முன்பே இதுதான் சூழ்நிலை என்று விளக்கி, அப்பெண்ணின் சம்மதத்தைப் பெற்றிருந்தாலோ நிலைமை சுமுகமாக இருக்கலாம்.

   இல்லையெனில், ஒருவேளை உறவிற்கு, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு கவனித்துவரும் அப்பெண்ணிற்கு, உரிய பக்குவமில்லையெனில், மன அழுத்தம்தான் ஏற்படும். அது பல விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

   இதையெல்லாம் தன் வயதுக்குரிய அனுபவத்தாலும், பக்குவத்தாலும் அறிந்ததால்தான் அம்முதியவர் மருமகளை மனதார அனுப்பிவைத்திருப்பார். நாளடைவில் அப்பெண், தானும் ஒரு தாயாகும்போது, மனம் முதிரும்போது, மாற்றங்கள் நடக்கலாம், இன்ஷா அல்லாஹ்.

   இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த //தஞ்சாவூர் ஷம்சின் தாயார்// - அவரின் கணவரும் உடன் இருக்கிறார். வெகுநாளாக அவரைக் கவனித்துக் கொள்ளும் பணிப்பெண் இருக்கிறார் (வந்து செல்கிறார்). மகள் அருகில் இருந்தார். தற்போது அவரும் கணவருடன் வெளிநாடு சென்றுவிட்டார்.

   (பொதுவாக, இதுபோன்ற நிலைமைகளில், மருமகளைச் சொல்லுமளவுக்கு ஏனோ, மகளை யாருமே எதுவும் சொல்வதில்லை.)

   //"ஒரு அறுபது - எழுபது வயதான இஸ்லாமிய பெண்மணி"//
   இன்ஷா அல்லாஹ், அப்போதும் இதையே வலியுறுத்துமளவு என் மனநிலையும், உடல்நிலையும் நலமாக இருக்கப் பிரார்த்தியுங்கள்.

   Delete
  3. சகோ.ஹுசைனம்மா....
   ////ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதே தன் உடல்நலமில்லாத தாயைப் பார்த்துகொள்ளத்தான் என்றால், அப்பெண்ணிற்கும், அவர்கள் வைத்திருக்கும் வேலையாளிற்கும் அவர்களின் பார்வையில் என்ன வித்தியாசம்?////-------:-))---இல்லை சகோ. இது எனது கோணம் அல்லவே அல்ல..!

   எல்லாரும் எல்லாமும் நல்லா இருக்கும் நிலையில் கல்யாணம் ஆகி, அப்புறம் மூன்றாவது பிள்ளை இருக்கும் காலத்தில் இப்படி ஒரு சூழல் வந்தால்... அதுவரை வெளிநாட்டிலேயே "தன் குடும்பத்தோடு" இருந்த மகன் இப்போது என்ன செய்யவேண்டும் என்று அந்த நிலையில் உள்ள தாயார் என்ன நினைப்பார் என்று எழுதும் ஒரு 60-70 வயது சகோதரி எழுதுவாரா......:- இதுதான் எனது கோணம்..!

   Delete
 23. ஹுஸைனம்மாக்கா,

  மிக மிக அருமையான கட்டுரை. ஆழமான வரிகள். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. வருந்தி வாடும் அப்படிபட்ட சகோதர சகோதரிகளை சீக்கிரமே இணைய வைத்து இல்லற இனிமையை வாழ்வினில் தந்தருள அல்லாஹ் நாடிடுவானாக. ஆமீன்.

  ReplyDelete
  Replies
  1. அன்னு - //இல்லற இனிமையை வாழ்வினில் தந்தருள அல்லாஹ் நாடிடுவானாக// ஆமீன்.

   Delete
 24. does family mean only wife and kids? what about parents if u are the only son or daughter?

  ReplyDelete
 25. Every one goes to Gulf to earn money. The more money they save the faster they can return. If you go single then you can save more money and return faster and be with your family faster. The family I mean include parents.

  ReplyDelete
  Replies
  1. ஜோஸஃப் ஜார்ஜ் - //The more money they save the faster they can return//
   வெளிநாட்டிற்குச் செல்லுபவர்கள் எல்லாருமே முதலில் போகும்போது அப்படித்தான் சொல்லிச் செல்லுவார்கள். ஆனால், போனவர்கள் திரும்பியதில்லை - அரசாங்க வேலையில் 5 வருஷம் லீவுபோட்டுச் செல்பவர்களைத் தவிர.

   //what about parents if u are the only son or daughter?//
   இங்கே சிலர் பெற்றோரையும் அழைத்து உடன் வைத்திருக்கிறார்கள். ஆனால், பதிவில் சொன்னதுபோல, பல பெற்றோர்களுக்கு வெளிநாடுகள் பிடிப்பதில்லை. இந்தியாவில் இருப்பதையே விரும்புகிறார்கள்.

   Delete
 26. சரியாக சொல்லி இருக்கீங்க .. இன்னும் எங்க ஊர்ல சிங்கப்பூர் ல இருக்கிற ஒரு ஐம்பது பேர் பொண்டாட்டி குடும்பத்த ஊர்ல தான் விட்டுட்டு வருஷம் ஒரு தரம் .. இரண்டு வாரம் போய்ட்டு வராங்க .. என்ன கொடும இது..

  ReplyDelete
  Replies
  1. சீனிவாசன் - மிகவும் நன்றிங்க.

   Delete
 27. /”உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழி. / சிறந்த நபிமொழிக்கு அருமையான விளக்கம்.

  /வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல்? ....... தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?/

  -இதை ஏன் பல தாய்மார்கள் யோசிப்பதில்லை? தன் மகனுடைய சிரமம் விலகுவதைவிட மருமகளின் மீதிருக்கும் தன் அதிகாரம்தான் ஜெயிக்கவேண்டும் என நினைக்கும் தாயின் சொல்லை அந்த மகன் கேட்கத்தான் வேண்டுமா?

  தன் தாய் தனியாக இருக்கும் பட்சத்தில் ,வசதி இருந்தால், அவரையும் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமே.

  /பொதுவா பதிவர்னு சொன்னா நான் அதில பஸ்ட் வந்திடுவேன்.. அதுக்கு தான் பெண் என்ற அடைமொழி..../ ஸ்ஸ்ஸப்பா.... முடியல சிராஜண்ணே.... முடியல... ;))

  ReplyDelete
  Replies
  1. என்றென்றும் 16 - /தன் மகனுடைய சிரமம் விலகுவதைவிட மருமகளின் மீதிருக்கும் தன் அதிகாரம்தான் ஜெயிக்கவேண்டும்// கரெக்டாச் சொல்லிருக்கீங்க.

   Delete
 28. அஸ்ஸலாமு அலைக்கும் ஹூஸைனம்மா...
  மிகவும் அருமையான அழுத்தமான கருத்துக்களும்,விளக்கங்களும் கொண்ட பதிவு...oஒவ்வொருவரும் படித்து பார்க்க வேண்டிய பதிவு....
  மாஷா அல்லாஹ்....அழகிய நடையில் நச்சென்று எழுதியிருக்கும் தாங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. Assalamu alikum.....

  very nice article. it clearly shows the picture of our community.
  Insha allah Let our merciful creator solve all humans wealth problem and shower his blessing to live along with family.

  by
  ArafNur

  ReplyDelete
 31. ok i accepet the way to take care the wife but the same should get for the parents also
  1,the prophet(SAW ) cursed the person who doesnt care parents at their older age
  2,Jihad is also not farl for the person who does nt care the parents by prophet taking care of parents is equal to Jihad by Hadees
  3,One person accepts islam and he didnt see Prophet due to his older age of mother and prophet(SAW )told to Umar RA after my death the person will come for HAj and ask him make pray allah for your sins could u imagine UMAR RA is the elgible person after prophet any prophet is there informed by prophet(SAW ) and some ayats from allah similiar to the word of UMAR RA at amny occasions If UMAR RA is there shaytan will go away such a great person instructed in such a way that u ask the person who takes care mother & without seeing prophet during his life time for your sins HOW MUCH status Has been give to perso who takes care their parent
  Allah informed also to take their parents

  I inform to all as per islamic shariah wherever you , you should take care the parents helping the parents By the SON and DAUGHTER ONLY not daughter In-LAws (MAids)
  and u have to give the house for your wife and take care separetely and the same with your parents separate as per islamic way


  In the above article mostly complaining parents the real fact %wise due to daghter in laws lot of parents have been suffered,admitted in old age home are more as per my view

  ReplyDelete
 32. அருமையான பதிவு சகோதரி, நிங்கள் சொல்லும் ஒவ்வொரு சம்பங்களும் பார்த்தும் கேள்விபட்டுமாக என்னை பாதித்துமாக இருக்கு, இன்ஷா அல்லாஹ் கூடிய சிக்கிறாத்தில் முட்டையை கட்டிவேண்டியதுதான்... ஜஸாக்கல்லாஹ் கைர்.

  ReplyDelete
 33. எங்களை போன்றவர்களை பற்றிய பதிவு வெளியிட்டமைக்கு நன்றி
  திருமணம் ஆகாத ஆனால் சகோதரர்களின் படிப்பு, சகோதரிகளின் திருமணம் என்ற பொறுப்புகளுடைய ஒருவனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை/சம்பாத்தியம் தான் சரியான வழி. தாய் நாட்டு சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. ஒரு உண்மையை சொல்லட்டுமா ? “என் கணவர் பயணத்தில் இருக்கிறார் வருஷத்துக்கு ஒருதடவை தான் வருவார்” என்று நிறைய நகைகளை போட்டபடி பந்தா செய்யதான் நிறைய முஸ்லீம் பெண்கள் விரும்புகின்றார்கள். “இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வோம், வெளிநாட்டை விட்டு என்னுடன் வந்து இருங்கள்” என்ற நிலைக்கு முஸ்லிம் பெண்கள் தயாரானால் நிறைய ஆண்கள் வெளிநாட்டிலிருந்து மூட்டை கட்டி விடுவார்கள்.

  ReplyDelete
 34. husainamma
  Other point of view from kusumban in his google+
  குசும்பன் குசும்பு
  காசேதான் கடவுளடா...

  திருமணத்துக்கு முன்னாடி 5 நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தான், அவன் கூட வேலைசெய்யும் மல்லு நண்பரும் அடிக்கடி ரூமுக்கு வருவார், எனக்கும் நண்பராக ஆனார். கல்யாணம் முடிந்து வந்ததும் மனைவியை அழைத்துவர ஏற்பாடு செய்துக்கிட்டு இருக்கும் பொழுது தயங்கி தயங்கி சரவணா தப்பா எடுத்துக்காத ஒரு அட்வைஸ் என்றார்...என்ன? சொல்லுய்யா அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன் என்றேன்...

  3500 சம்பளத்தில் எப்படி மனைவியை அழைச்சிக்கிட்டு வந்து இங்க இருப்ப? ஏன் அவசரமா அழைச்சிக்கிட்டு வரனும்? ஒரு வருசம் கழிச்சி விசிட்ல வந்துட்டு போகலாமுல்ல என்றார், பாரு எனக்கு 15,000 சம்பளம் நானே இன்னும் அழைச்சிக்கிட்டு வரல, இன்னும் 2வருசத்துக்கு அழைச்சிக்கிட்டு வரும் ஐடியாவும் இல்ல என்றார்...அம்மாவுக்கு பிடிக்காம கல்யாணம் செஞ்சேன்...அதுனால ரொம்பநாள் எங்க வீட்டில் விடமுடியாது என்றேன்..இல்ல அவுங்க வீட்டில் விடேன் என்றார்...அதுவும் சரியாவராது என்றேன்..பின் ஷார்ஜாவில் சேரிங்கில் 1500 திர்ஹாமுக்கு வீடு பார்த்து அழைத்துவந்தேன்..

  பின் என்னோட நண்பனுக்கும் கல்யாணம் ஆகி அவனும் தனியாக போய்விட்டான்...பின் நண்பரின் நண்பனை பார்க்கும் சான்ஸ் குறைந்துவிட்டது...இருவருடங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக போன் செஞ்சார், வாழ்த்து சொல்லிட்டு எப்பய்யா ஊருக்கு போற என்றேன்..இல்ல இப்ப போகல..வெக்கேசன் டைம் டிக்கெட் டபுள் ரேட் சொல்றானுங்க...ஒருமாசம் கழிச்சி போகலாம் என்று இருக்கேன் என்றார்...எவ்வளோ காசு வந்தாலும் சிலரை மாற்ற முடியாது போலன்னு நினைச்சிக்கிட்டேன்..

  இரண்டுநாட்களுக்கு முன்பு நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் பொழுது எப்படிடா இருக்கார் என்று அந்த நண்பனை பற்றி விசாரிச்சேன்...ஊருக்கு போய் இருக்கான் என்றான்...எப்ப வருவான்னு தெரியல...கொஞ்சம் பிரச்சினை என்றான்...என்னடான்னா....டிவோர்ஸ்க்கு அப்ளே செஞ்சிருக்காங்க...கேஸ் விசயமா போய் இருக்கான் என்றான்.

  #இப்ப போய் இருப்பதும் வெக்கேசன் டைம்...டிக்கெட் பீக்லதான் இருந்திருக்கும்...

  ReplyDelete
 35. Husainamma.. another point of view from kusumban in his google+

  குசும்பன் குசும்பு
  காசேதான் கடவுளடா...

  திருமணத்துக்கு முன்னாடி 5 நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தான், அவன் கூட வேலைசெய்யும் மல்லு நண்பரும் அடிக்கடி ரூமுக்கு வருவார், எனக்கும் நண்பராக ஆனார். கல்யாணம் முடிந்து வந்ததும் மனைவியை அழைத்துவர ஏற்பாடு செய்துக்கிட்டு இருக்கும் பொழுது தயங்கி தயங்கி சரவணா தப்பா எடுத்துக்காத ஒரு அட்வைஸ் என்றார்...என்ன? சொல்லுய்யா அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன் என்றேன்...

  3500 சம்பளத்தில் எப்படி மனைவியை அழைச்சிக்கிட்டு வந்து இங்க இருப்ப? ஏன் அவசரமா அழைச்சிக்கிட்டு வரனும்? ஒரு வருசம் கழிச்சி விசிட்ல வந்துட்டு போகலாமுல்ல என்றார், பாரு எனக்கு 15,000 சம்பளம் நானே இன்னும் அழைச்சிக்கிட்டு வரல, இன்னும் 2வருசத்துக்கு அழைச்சிக்கிட்டு வரும் ஐடியாவும் இல்ல என்றார்...அம்மாவுக்கு பிடிக்காம கல்யாணம் செஞ்சேன்...அதுனால ரொம்பநாள் எங்க வீட்டில் விடமுடியாது என்றேன்..இல்ல அவுங்க வீட்டில் விடேன் என்றார்...அதுவும் சரியாவராது என்றேன்..பின் ஷார்ஜாவில் சேரிங்கில் 1500 திர்ஹாமுக்கு வீடு பார்த்து அழைத்துவந்தேன்..

  பின் என்னோட நண்பனுக்கும் கல்யாணம் ஆகி அவனும் தனியாக போய்விட்டான்...பின் நண்பரின் நண்பனை பார்க்கும் சான்ஸ் குறைந்துவிட்டது...இருவருடங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக போன் செஞ்சார், வாழ்த்து சொல்லிட்டு எப்பய்யா ஊருக்கு போற என்றேன்..இல்ல இப்ப போகல..வெக்கேசன் டைம் டிக்கெட் டபுள் ரேட் சொல்றானுங்க...ஒருமாசம் கழிச்சி போகலாம் என்று இருக்கேன் என்றார்...எவ்வளோ காசு வந்தாலும் சிலரை மாற்ற முடியாது போலன்னு நினைச்சிக்கிட்டேன்..

  இரண்டுநாட்களுக்கு முன்பு நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் பொழுது எப்படிடா இருக்கார் என்று அந்த நண்பனை பற்றி விசாரிச்சேன்...ஊருக்கு போய் இருக்கான் என்றான்...எப்ப வருவான்னு தெரியல...கொஞ்சம் பிரச்சினை என்றான்...என்னடான்னா....டிவோர்ஸ்க்கு அப்ளே செஞ்சிருக்காங்க...கேஸ் விசயமா போய் இருக்கான் என்றான்.

  #இப்ப போய் இருப்பதும் வெக்கேசன் டைம்...டிக்கெட் பீக்லதான் இருந்திருக்கும்...

  ReplyDelete
 36. அருமையான பதிவு . நிதர்சன உண்மையை சமூக அக்கறையோடு இங்கு எழுதிய சகோதரிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
 37. உண்மையாகவே சிந்திக்கக் கூடிய சிறப்பான படைப்பு இது....அயல் நாட்டு வாழ் ஆண்களின் உள்ளுணர்வுகளை அப்படியே வெளிக் கொணர்கிறது...பகிர்ந்த படைப்பாளிக்கும் இணைய தளத்திற்கும் மனமுவந்த வாழ்த்துகள்...வல்ல இறைவன் நன்மையாக்கி வைப்பாளாக.....
  - அன்புடன்,
  க.கா.செ,
  கடையநல்லூர்

  ReplyDelete
 38. உண்மையாகவே சிந்திக்கக் கூடிய சிறப்பான படைப்பு இது....அயல் நாட்டு வாழ் ஆண்களின் உள்ளுணர்வுகளை அப்படியே வெளிக் கொணர்கிறது...பகிர்ந்த படைப்பாளிக்கும் இணைய தளத்திற்கும் மனமுவந்த வாழ்த்துகள்...வல்ல இறைவன் நன்மையாக்கி வைப்பாளாக.....
  - அன்புடன்,
  க.கா.செ,
  கடையநல்லூர்

  ReplyDelete
 39. பெரியவர்களே! உங்கள் மருமகள் இங்கு இருப்பதால், அதிக வசதி உங்கள் மகனுக்குத்தான், மருமகளுக்கல்ல. தனியே பேச்சிலர்களாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் புரியும். மனைவி உடன் இருப்பதால், சுத்தமான ஆரோக்கியமான உணவு. உடல்நலப் பாதுகாப்பு. பெற்ற குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து ரசிக்கும் பாக்கியம், மனதுக்கும் மகிழ்ச்சி. வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல்? வீட்டுச்சூழல் திருப்தியாக இருக்கும்போது, வேலைசெய்யும் நிறுவனம் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் கூடும். இவையெல்லாம் இல்லாமல், தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?////

  உண்மைதான் .ஆனா யோசிக்கமாட்டெங்குராங்களே!!!நல்லதொரு பதிவு...மிக்க நன்றி

  ReplyDelete
 40. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..,

  பேமிலி இங்கேயா .? ஊர்லயா .?

  தலைப்பிலேயே அசத்தல் காட்டிய நீங்கள் ..,

  இடை இடையில்...

  அமீரக " பௌசியா "

  மதுரை " நசீமா "

  தஞ்சை சம்சின் அம்மா ,

  ஷார்ஜா மரியமின் மாமனார்,மாமியார் ....

  இப்படி நீங்கள் பழகிய உறவுகளிடமும் . நட்புகளிடமும் இருந்தே லீட் எடுத்து இந்த
  " Article " ஐ அருமையாக எழுதி உள்ளீர்கள் . மற்றபடி.., நீங்கள் கூறிய விசயங்களில் அதிகதிகமாக உண்மைகள் ஒளிந்து கொண்டுள்ளது என்பதை எவராலும் மறுத்து ஒதுக்க முடியாது .! அதை முழுதும் அலசி சொல்லணும் என்றால் , நானுமொரு கட்டுரை எழுதணும் . பார்க்கலாம் .

  வாழ்த்துக்கள் . நல்ல வருவிங்க .!

  ReplyDelete
 41. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..,

  பேமிலி இங்கேயா .? ஊர்லயா .?

  தலைப்பிலேயே அசத்தல் காட்டிய நீங்கள் ..,

  இடை இடையில்...

  அமீரக " பௌசியா "

  மதுரை " நசீமா "

  தஞ்சை சம்சின் அம்மா ,

  ஷார்ஜா மரியமின் மாமனார்,மாமியார் ....

  இப்படி நீங்கள் பழகிய உறவுகளிடமும் . நட்புகளிடமும் இருந்தே லீட் எடுத்து இந்த
  " Article " ஐ அருமையாக எழுதி உள்ளீர்கள் . மற்றபடி.., நீங்கள் கூறிய விசயங்களில் அதிகதிகமாக உண்மைகள் ஒளிந்து கொண்டுள்ளது என்பதை எவராலும் மறுத்து ஒதுக்க முடியாது .! அதை முழுதும் அலசி சொல்லணும் என்றால் , நானுமொரு கட்டுரை எழுதணும் . பார்க்கலாம் .

  வாழ்த்துக்கள் . நல்ல வருவிங்க .!

  ReplyDelete
 42. அருமையான பதிவு ஹூஸைனம்மா. மிக நேர்த்தியாக குர்ஆன் வசனங்களை இட்டு அழகான பதிவாக்கி இருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 43. இவ்விஷயத்தில் நான் கணவர்களைத்தான் குற்றம் சொல்லுவேன். உங்கள் கட்டுரையில், கணவர்களை நீங்கள் இன்னும் கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.

  ReplyDelete

 44. Ummah has left a new comment on your post "ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?":

  கட்டுரை மிகவும் அருமை சகோதரி ..
  என் புகுந்த வீட்டில் கூட இந்த விஷயத்தில் இப்படித்தான் :((( அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றவேண்டும் ...
  சகோதரி .. இந்த விஷயத்தால் ஏற்பட்ட பல இன்னல்களையும் அல்லாஹ்வின் கிருபையால் பொறுமையுடன் கடந்து என்னையும் என் மகளையும் அவருடனேயே வைத்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ் .. .
  நல்லதொரு பதிவு சகோதரி ...மிக்க நன்றி..

  (ஆசிரியர் குழு:-- சில காரணங்களுக்காக கமெண்ட் எடிட் செய்யப்பட்டுள்ளது)

  ReplyDelete
 45. அஸ்ஸலாமு அலைக்கும் ஹுசைனம்மா,
  அருமையான பகிர்வு...
  ஒவ்வொரு மாமியாரும் படிக்க வேண்டிய ஒன்று...

  ReplyDelete
 46. கண்ணியம் நிறைந்த சகோதரி தாங்களுக்கு, அஸ்ஸலாமு 'அலைக்கும்.

  மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். இன்று காலையில் தான் தங்களின் கட்டுரையைப் படித்தேன். உங்கள் கட்டுரை மிகவும் நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியே இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இது குறித்து எனது இணையதளத்தில் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டிருக்கின்றேன்: அதிலிருந்து சில வரிகள்:

  இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் பின் வருமாறு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது:

  கணவனின் பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும் எந்த அளவுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாம்?

  ஒளிவு மறைவின்றி அந்த அறிஞரிடமிருந்து வந்த பதில் இதோ:

  தலையிடுதல் கூடவே கூடாது! தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடுவதற்கு இரு பெற்றோர்களுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது!.....

  பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்வில் (மட்டும்) கவனம் செலுத்தட்டும். உங்களுடைய “குழந்தைகளுக்கு” நீங்கள் திருமணம் செய்து வைத்து விட்டால் – அவர்கள் இன்னும் “சின்னஞ்சிறுசுகள்” அல்ல! அவர்களை அவர்கள் வழிக்கு விட்டு விடுங்கள்! அவர்களுடைய “திருமண மாளிகையை” அவர்களே கட்டி எழுப்பிக் கொள்ளட்டும்! அவர்களும் வயதுக்கு வந்து விட்ட பெரியவர்கள் (adults) தான்! அதனால் தானே நீங்கள் அவர்களுக்குத் திருமணமே செய்து வைத்தீர்கள்?

  இங்கே நம் சமூகத்தில் உள்ள பெற்றோர்களுக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) ஒரு பெரிய “சங்கடம்” என்னவென்றால் – தங்களின் மகனுக்குத் திருமணம் ஆகி ஒரு மருமகள் வீட்டுக்கு வந்து விட்டால் – தான் “அவசியமற்ற ஒரு பிறவியாக” ஆகி விட்டது போல் அஞ்சுகிறார்கள்! இந்த அச்சத்தினால் - “தன் மகனிடமிருந்து தன்னைப் பிரிக்க வந்திட்ட எதிரியாக” தனது மருமகளைப் பார்க்கிறார்கள்.....

  “அவர்களை அவர்கள் வழியே விட்டு விடுங்கள்! அவர்கள் திருமண வாழ்வில் குறுக்கிடாதீர்கள்!....

  தொலைபேசியில் பேசினால் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்! ....மகளிடன் பேசினால், “சந்தோஷமாக இருக்கிறாயா?” என்று மட்டும் கேட்கவே செய்யாதீர்கள். “அவர் இன்னின்ன விஷயம் குறித்து என்னென்ன சொன்னார்?” என்றெல்லாம் துறுவிக் கொண்டிருக்காதீர்கள்.

  இளம் மனைவியரே! உங்கள் அம்மாக்கள் இப்படி எதையாவது உங்களிடம் கேட்டால் – “சாரிம்மா! அவர் சொல்வதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாதம்மா!” என்று அழகாக மறுத்து விடுங்கள்! ....

  உங்கள் பெற்றோர்கள் உங்கள் திருமண வாழ்வில் தேவையின்றி குறுக்கிட்டால் அதனை விவேகமான முறையில் தவிர்த்து விடுங்கள்! உங்கள் திருமண வாழ்வின் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம், உங்கள் பெற்றோர்களிடம் ஓடிக் கொண்டிருக்காதீர்கள்!

  உங்களுக்குத் திருமணம் செய்வதற்குத் தகுதி வந்து விட்டதென்றால், உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் உங்களுக்குத் தகுதி இருக்கின்றது! உங்கள் பிரச்னைகளை உங்களால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றால், பின்னர் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? (அதாவது நீங்கள் இன்னும் திருமணத்துக்குத் தயாராகவில்லை என்பதே அதன் பொருள்)....

  இந்தக் கருத்துக்களை என் உறவினர் வீட்டுப்பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார்:

  அப்படியானால் பிள்ளைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு எங்களைச் செத்துப் போகச் சொல்கிறீர்களா?

  காலா காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற “கலாச்சார” வாழ்வு தரும் “சுகத்தை” அனுபவித்துக் கொண்டு அடுத்த தலைமுறையையும் அதன் அடிப்படையிலேயே வார்த்தெடுக்க விரும்பும் இத்தகைய பெற்றோர்கள் இஸ்லாம் காட்டித் தரும் வழிகாட்டுதல்களை முற்றிலும் புறக்கணித்து விடுகிறார்கள்!....

  ReplyDelete
 47. வேறு தேடலில் ஹுசைனம்மா என்ற பெயர் பார்த்து இந்தக் கட்டுரைக்கு வந்தேன். மிக அருமையாக, நடுநிலைமை மாறாமல், பாதிக்கப்பட்டவர்கள் புரிந்துகொள்ளும் படி எழுதப் பட்டிருக்கிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete