எல்லாம்
வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும்
சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
சமீபத்தில் எல்லோராலும் பேசப்படுகின்ற, முகநூலில் விவாத தலைப்பாக பரப்பப்படுகின்ற விஷயம் கல்லாற்றில் கொடூரமாக கொலை
செய்யப்பட்ட ருக்ஷானாவை பற்றியேயாகும்.
உண்மையான முழு விவரம் தெரியுமுன்னே சமூக
வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அது அவர் தானா என்று அறியும் முன்னமே பரப்பப்பட்டு வருகிறது.
உயிரற்று போன அந்த பெண்ணை சமூக வலைத்தளங்களில் உலாவ விடுகின்றனர். மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் கொலை செய்கின்றனர்.
எல்லா விஷயங்களை போலவும், எப்போதும் போல இந்த விஷயமும்
புகைப்படங்களுடன் "Hi Friends" என்னும் ஆடியோவுடன் பலருடைய
கைப்பேசிகளில் பறந்து வருகிறது.
இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்
அவர்கள் இருவரும் எப்படி காதல் வயப்பட்டார்கள், எந்த
பிரச்சனையால் அவள் கொல்லப்பட்டாள் என்பது அல்ல. அது முடிந்து போன ஒன்று.
அதைப்பற்றி பேசி பேசி அந்த பெண்ணையும், அவள் பெற்றோரையும் குறைக் கூறுவதால் அவள் திரும்பி வரப் போவதும் இல்லை, நடந்த சம்பவம் இல்லை என ஆகப்போவதும் இல்லை. இதன் மூலம் நாம் கற்றுக்
கொள்ளவேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலம் நமக்கு
ஒவ்வொரு காலக் கட்டத்திலும்,
ஒவ்வொரு
சம்பவங்களின் மூலமும் பல படிப்பினைகளை அள்ளிக் கொடுக்கிறது..
அந்த படிப்பினையில் இருந்து நம்மை நாம் செம்மைப்படுத்தி
கொள்வதே புத்திசாலித்தனம். இது போன்ற சம்பவங்கள் நமக்கு புதிதல்ல..
அதை மேலும் மேலும் வளர்த்து கொண்டே போவதை விட நாளை நம்
வீட்டிலோ, நம்மைச் சுற்றி உள்ளவர்கள்
வீட்டிலோ இது போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி விடாமல் தடுக்க என்னென்ன
முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்க் கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்க கடமை
பட்டுள்ளோம்.
தற்காலத்தில் பெண் /ஆண்
பிள்ளைகள் 12/13 வயதில் பருவ நிலையை
அடைந்ததும் உண்டாகும் உடல் நிலை மாற்றங்களால் எதிர் பாலினங்களின் மீது அதிகமாக ஈர்ப்பு
உண்டாகிறது..
இந்த மாற்றங்களும், ஈர்ப்பும்
புது விதமான எதிர்பாலின உறவை தேடுகிறது. அது அவர்கள் செய்யும் தவறாக கருதாமல் அவர்களின்
உடலில் ஏற்படக் கூடிய ஹார்மோன் மாற்றங்களினால் வரக் கூடியவை என்பதை பெற்றோர்
புரிந்துக் கொண்டு, அந்த சூழலில் பிள்ளைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை
அறிந்து வைத்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை.
ஹார்மோன் மாற்றங்களினால் உடலளவிலும் மனதளவிலும் குழம்பி இருக்கும் பிள்ளைகளுக்கு, குடும்பத்தில் உண்டாகும் சிறு பிரச்சினைகள் கூட
அவர்களுக்கு பெரிதாய் தோன்றும். நீங்கள் எதார்த்தமாக கூறும் கடும் வார்த்தைகள் கூட,
உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும், இதனால் வீட்டில் உள்ள உறவுகளை விடுத்து
வெளியில் அன்பையும், பாசத்தையும், பிணைப்பையும் தேட ஆரம்பிக்கும்.
இந்நிலையில் உடன் படிப்பவர்களோ, அண்டை வீட்டிலோ ஒரு எதிர்பாலினர் தமக்கு
ஆறுதலாக உள்ள பட்சத்தில் அவருடன் உறவை அதிகப்படுத்த தோன்றும். அந்த தருணத்தில்
ஏற்படக்கூடிய நட்பு காதலாக மாறி, பிறகு தகாத உறவைத் தொட்டு இவ்வாறு கொலை வரை சென்றடைகிறது. சாதரணமாக ஆரம்பிக்கும் நட்பையே கண்டிப்பு என்ற பெயரில் நாம் இடப்படும் சிறு சிறு கட்டுப்பாடுகளும், வீட்டில்
உள்ள உறவுகளை நிரந்தரமாக வெறுக்கும் நிலையும் உண்டாக்குகிறது, இதனால் வெளி
ஆட்களிடத்தில் உறவு மேலோங்குகிறது. ஒரு
சமயத்தில் அந்த உறவும் கைவிட்டால் வேறொருவரை தேட தோன்றும். இதனால் தங்கள் நன்னடத்தை
பாதிக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறியாத அளவில் அவர்களின் உடல் மற்றும் மனதில் ஏற்ப்படும் பருவ வயதின் உளவியல் மாற்றத்தால் பாதிப்படைகின்றனர்.
இவ்வாறே காலம் செல்ல செல்ல "Maturity" என்னும் பருவ நிலையை அடையும்
போது தான், தான் செய்தது தவறு என்பதை
உணர்வார்கள். அதை உணர்வதற்குள், தங்களின் கற்பையே இழந்து விடும் நிலை கூட சில
பேருக்கு நிகழ்ந்திருக்கும் (அல்லாஹ் பாதுகாப்பானாக). சுற்றங்களால் இழிவுக்குள்ளாக்கப்பட்டு
பாதிப்படையும் போது மீண்டும் குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பையும் ஆதரவையும் நாடி
வருவார்கள். அவர்களின் நடத்தையின் காரணமாக வெறுப்புக்குள்ளாக்கப்பட்ட
குடும்பத்தினர் அவர்களை ஏற்க மறுத்து கை விடுவார்கள்.
எதுவும் இல்லை என்ற நிலையில்
அவர்களால் எடுக்கப்படுகின்ற முடிவு தற்கொலை அல்லது தான் தேர்ந்தெடுத்த வாழ்வு
சரியில்லை என்றறிந்தும் அந்த வாழ்வுக்குள் செல்வது.
சில பேர் மன தைரியத்துடன் தான்
தேர்ந்தெடுத்த நபர் சரியானவர் இல்லை என்று எதிர் கொள்ள நேரிடும் போது தான், ருக்ஷானாவிற்கு ஏற்ப்பட்டது போன்ற கொடூர முடிவோ அல்லது தன்னை எதிர் கொண்டு ஒதுக்கிய
பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தோடு முகத்தை சிதைப்பது, தன் நண்பர்களின் ஆதரவோடு கூட்டாக
கற்பழித்து கொலை செய்வது போன்ற பெண்களுக்கு எதிரான சமூக சீர்கேடுகள் அரங்கேறுகிறது..
இதற்கு தீர்வாக நாம் முதலில் செல்ல வேண்டியது
பெற்றோர்களிடம் தான்..
- பெற்றோர்களின் சண்டைகள் பிள்ளைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- குழந்தைகள் மேல் பெற்றோரை விட அதிக பாசமுடையவர், அக்கறையுடையவர் யாரும் இல்லை என அவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிய வைக்க வேண்டும்..
- கண்காணிக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மீது கொள்ளும் சந்தேகப்பார்வையே அவர்களை பல தீய காரியங்களில் தள்ளக் கூடும்.
- அவர்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களுக்கு அழகிய முறையில் பதில் கொடுக்க வேண்டும். நாம் வெட்கத்தோடு பதிலளிக்க மறுத்தால் அவர்கள் அதனை அறிந்துக் கொள்ள வேறு வழியை, வேறு நபர்களை தேடுவார்கள். பல நேரங்களில் அது தவறாக முடிய வாய்ப்புள்ளது.
- பெற்றோர்கள் பிள்ளைகளுடன் தோழர்களாக இருப்பது சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் சாத்தியமே. அப்படி தோழர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏதேனும் உணர்வுகளை, அவர்களுக்கு உண்டான மாற்றங்களை பகிர்ந்து கொண்டால் அதை கண்டிக்க கூடாது. பிள்ளைகளின் மனநிலை அறிந்து மென்மையுடன் கையாள வேண்டும்.
- அடுத்தது, மார்க்க ரீதியான தீர்வை எடுத்துக் கொண்டால் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே மார்க்க விஷயங்கள் போதித்து, எந்தெந்த சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மார்க்கத்தின் தீர்வு மூலம் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்
- மஹ்ரமானவர்கள் யார், மஹ்ரமற்றவர்கள் யார், மஹ்ரமற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை பருவ வயதை அடையும் முன்னமே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் ஒருவித வெட்க உணர்வுடன் வளரும் போது அந்நிய ஆண்களுடன் சகஜமாக பழகும் சூழல் அடிப்பட்டு போகும்.
- ஒழுக்க மாண்புகளைப் பற்றியும், ஹிஜாபுடைய முக்கியத்துவத்தை பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
- அவர்களை சுற்றி இஸ்லாமிய சூழலை வகுத்துக் கொடுக்க வேண்டும்.
- கட்டுகோப்பான வளர்ப்பிலும் தவறாக செல்லக் கூடிய அறிகுறிகள் தென்பட்டால், மனம் உடைந்து கடினமான சூழலை அவர்களுக்கு உருவாக்காமல், உடனடியாக சரியான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் மீதோ, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறியாது
தவறிழைத்த பிள்ளைகள் மீதோ குறைக் கூறுவதால் பயனில்லை.
வளரும் பிள்ளைகள் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்ப்பதும் சாத்தியமில்லை, அவ்வாறு வளர்ப்பதால் மட்டும் தவறுகள் செய்யாமல் தடுத்து விடவும் முடியாது. மேலும்
அவர்கள் செல்லும் பள்ளி, கல்லூரிகளில் நாம் எதிர்பார்க்கும் சூழலும், நட்பும் தான்
அமையும் என்று எதிபார்ப்பதும் தவறு. அதற்கு நாம் அடிப்படையை சரியாக அமைத்துக் கொடுத்தலே சிறந்ததது.
அடிப்படையை சரியாக அமைத்து விட்டால் கண்டம் விட்டு கண்டம்
சென்றாலும், நம்மை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்ச உணர்வு அவர்களை
எவ்வித தவறிலும் ஈடுபடச் செய்யாது. பாதுகாக்கும்.
உன்னுடைய உற்ற தோழி, தோழர் யார் என்ற கேள்விக்கு
பிள்ளைகளின் முதல் பதில் “என் அம்மா, அப்பா” என்று காலாகாலத்திற்கும் சொல்லும்
அளவில், அவர்களுடன் அனைத்திலும் இணைந்து நடத்தலே உண்மையான வெற்றியாகும்
பெற்றோர்களுக்கு.
இந்த புரிதல்கள் எல்லாம் தங்களுக்கு தாரளாமாக இருப்பது போல்,
சமூக வலைதள போராளிகள், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற சப்பைக் கட்டோடு
தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத பெண்ணின் புகைப்படங்களை பரப்பி, அவர்களின் குற்றங்களை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டோரின்
மனப்புண்ணை மீண்டும் மீண்டும் குத்தி ரணமாக்காமல் இருப்போமாக, சிந்திப்போமாக!!!
உங்கள் சகோதரி
ரிஃபானா காதர்