Wednesday, June 07, 2017

தாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு

     
     தமிழக அரசின்  தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில்.  சட்டசபையின் அத்தனை வெள்ளை வேட்டி ஆட்களின் மத்தியிலும் தனித்து தெரிகிறார். அதுவே என் கண்ணையும் கவர அவரை பற்றி  தெரிந்து கொள்ள  ஆசைப்பட்டேன்.

     அவரை சந்திப்பதற்கான நாள் குறித்து கொடுக்கப்பட்ட பின், 'தலைமைச் செயலகம்' வந்து சந்திக்கவும் என  சொல்லியிருந்தார். அத்தனை பரபரப்புக்கு மத்தியில், தலைமைச் செயலகத்தில் அவர் அலுவலகத்தில், கேள்விகளை எப்படி விரிவாக முன் வைக்க முடியும் என்ற கேள்வியுடனே   சென்றோம். எனது தயக்கத்தை முதல் பார்வையிலேயே தகர்த்தெறிந்து நீண்ட நாள் பழகியவர் போல கனிவுடன் பேசினார்.   

     "என் வாய்ஸ நீங்க ரெக்கார்ட் பண்ணும் போது நான் தப்பா பேசினா உடனே கட் பண்ணிடுங்க, ஏன்னா என் தமிழ் அப்படி"...- என செல்லக் கண்டிப்புடன் தொடங்கிய போது அந்த இடமே  இறுக்கம் குறைந்து கலகலப்பானது. அதன் பின் அவரிடம் பேசுவதில்  தோழமை குணமே வெளிப்பட்டது.  உரையாடலை துவக்கினேன். 
அமைச்சராக நிலோபர் கபீல் யார் என  எல்லோரும் அறிவார்கள். எனினும் குடும்ப பின்னணியுடன் இணைந்த அறிமுகம் தாருங்களேன்...

     ஓஹ்... தாராளமாக! என் பேரு  உங்களுக்கு தெரியும். மூன்று குழந்தைகளுக்கு தாய் நான். எல்லாருக்கும் திருமணம்  ஆகிவிட்டது. என் மூத்த மகள் பிஇ (கம்யூட்டர் இஞ்சினியர்), யூகே-ல வசிக்கிறார்.  இரண்டாவது மகன். MBBS, MD (Emergency மெடிசின்) படித்திருக்கிறார். சொந்தமாக multi speciality hospital ஒன்று நிறுவி அதனை நிர்வகித்து வருகிறார். என்  மூன்றாவது மகள்  Msc, MBA முடிச்சிருக்காங்க. இல்லத்தரசி.

     நான் பிறந்தது வாணியம்பாடி. படிச்சதெல்லாம் சென்னையில். Ewart Matriculation ஸ்கூல்ல தான் படிச்சேன். நான் தான் ஃபர்ஸ்ட் பேட்ச் +2 எக்சாம் எழுதினது. அதுக்கப்பறம் கல்யாணம் ஆகிடுச்சு. 

என்ன சொல்றீங்க.. +2 உடன் கல்யாணம் ஆகிடுச்சா? அப்பறம் குழந்தைகள்? 

     ஆமாம்.. +2 முடித்தவுடன் கல்யாணம் ஆகிடுச்சு. என் மூணு குழந்தைகளையும் பெற்றெடுத்ததுக்கு அப்பறம், எனக்கு கல்யாணமாகி 12 வருஷத்துக்கு பின்னாடிதான்  B.U.M.S படிச்சேன். அதன் பிறகு KMC ல பயிற்சியை முடித்தேன். அதனைத் தொடர்ந்து BEMS கரஸ்ல படிச்சேன். அப்புறம் காலேஜுக்கே போய் LLB முடிச்சேன்.

     அம்மா வீடு சென்னையில் இருந்ததால்  எனக்கு எளிதாக இருந்தது. அம்மா வீட்டில் தங்கி படிச்சேன். என் கணவர் ரொம்ப என்கரேஜ் செய்ததால்  எல்லாம் சாத்தியமானது. 

அரசியல்ல எப்படி ?

     1991ல் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தேன். என்றாலும்  படிக்க போனதுனால கட்சியில் எனக்கு டச் இல்லை. படிப்பு முடிஞ்சு அதன் பிறகு நான் ஊருக்கு வந்தப்ப லோக்கல் எலக்‌ஷன் நடந்தது. அப்போது கவர்மென்ட் அறிவித்த படி பெண்கள் போட்டியிட வேண்டும். அப்போது ஊர் மக்களும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் என்னை அணுகி  'படிச்சவங்களா இருக்கீங்க, நீங்க நில்லுங்களேன்'ன்னாங்க. பிறகு ஜமாத் ஆதரவு தந்தது. எந்த மறுயோசனையும் இல்லாமல் சரின்னுட்டேன். முதல்ல நான் ஜமாத் சார்பிலான போட்டியாளராக தான் நின்னேன். ஏற்கனவே அதிமுக உறுப்பினராக இருந்தாலும் எந்த பணியும் செய்யாத ஒருவரை எப்படி  போட்டியாளராக நியமிப்பாங்க? மாட்டாங்க இல்லையா. நான் ஜமாத் கேன்டிடேட்டாகவே நின்னேன்.

பொதுவாகவே பெண்கள் முன்னேற்றத்தில் ஜமாத்களுக்கு அக்கறையில்லை என்ற பேச்சு  எல்லாரிடத்திலும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் உங்கள் விஷயத்தில் அப்படி இல்லையே?!

     ஆமாம். 2001 ல  முதன் முதலாக சேர்மன் எலெக்சன்ல நின்னேன். அப்போது என்னுடைய  சின்னம் டார்ச் லைட். அதே சமயம் இன்னொரு போட்டியாளராக இருந்தவர் சாவித்ரி என்ற பெண்மணி. அவங்களுடைய சின்னம் இரட்டை இலை. வாக்குச்சீட்டு எல்லாமே ப்ரின்ட் ஆகிடுச்சு. அப்படி இருந்தும் கூட  அப்போது அங்கே அதிமுக இன்சார்ஜ்ஜாக இருந்த மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களிடம், ஜமாத்தார்கள்  என் சார்பாக ஆதரவு தரும்படி கேட்டிருந்தார்கள்.

     மாண்புமிகு பாண்டுரங்கன் அப்போது அமைச்சராக இருந்தார். அனைவரும் அம்மாவின் கவனத்திற்கு இவ்விஷயத்தை கொண்டு சென்றார்கள். அம்மாவும்  அதனை ஏற்று ஜெயா டிவியில் 'நிலோபர் கபில்-க்கு டார்ச் லைட் ல  ஓட்டு போடுங்க'ன்னு அறிவிச்சது என் வாழ்வில் டர்னிங் பாய்ன்ட்ன்னு தான் சொல்லணும். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் நின்னும் கூட, அம்மா எனக்கு வாக்களிக்கும்படி தெரிவித்தார்கள். சொல்லப்போனால் வாணியம்பாடி சரித்திரத்தில் அது முக்கியமான விஷயமும் கூட.  சுயேட்சையாக அம்மாவின் அதிமுக ஆதரவில் நின்ற ஒருவர் வெற்றி பெறுவது அது முதல் முறையும்கூட...135 ஆண்டுகால வாணியம்பாடி நகராட்சி அரசியல் வரலாற்றில் அதிமுக-வின் முதல் சேர்மன் நான்தான்...11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்று அன்று சேர்மன் ஆனேன்.  

இஸ்லாமிய கட்சிகள்  இருக்கும் போதும் நீங்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

     சேர்மன் தேர்தலில் வென்ற பின்  அடுத்து வந்த by-electionல அண்ணன் எம்பி அன்வர் ராஜா, சகோதரி பதர் சையத் ஆகியோர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் போது அவர்களுடன் இணைந்து நானும் மிக கடுமையாக அதிமுகவிற்கு பிரச்சாரம்  செய்தேன். அப்போது அவர்கள் என்னை முழுமையாக அதிமுகவில் இணையும்படியான அறிவுரை சொல்லியிருந்தார்கள்.  அம்மாவின்  ஆதரவு தான் எனக்கொரு முகவரி தந்திருந்தது. அதன் காரணமாகவே அதிமுகவை விரும்பி நேசித்தேன். 

கல்யாணம் ஆகி படிச்சீங்க. பசங்க படிக்கிற வயசில் தான் அரசியலில்  இருந்தீங்க. என்ற போதும் கல்வியில் அவர்கள் தன்னிறைவு பெறும் வகையில் நீங்கள் வளர்த்து ஆளாக்கியுள்ளீர்கள்.  அதிக நேரம் கிடைக்கக்கூடிய சராசரி பெண்களுக்கே எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வது கடினமானதாக இருக்கும்போது உங்களுக்கு எப்படி சமாளிக்க முடிந்தது ? 

     என் குழந்தைகளை நான் மட்டுமே வளர்க்கல. என்னுடன் சேர்ந்து என் பெற்றோர்தான் பக்கபலமாக இருந்தாங்க. அதே போல் தான் என் மேற்படிப்பும். என்னால் படிக்க முடிந்தது என்றால் அதற்கு முழுக்காரணம் அதே பெற்றோர்களும் கணவரும் தான். அவர்கள் இல்லாமல் எதுவும் எனக்கு சாத்தியமாகியிருக்காது. என் வளர்ச்சிக்கு என்னுடன் சேர்ந்து அவர்கள் உழைத்தனர். 

நீங்க சொல்லும் ஆண்டு அடிப்படையில் பார்த்தால் ஏறக்குறைய குறுகிய வருஷத்திலேயே அமைச்சராகியிருக்கீங்க. இந்த   வேகமான வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க.. அதுவும் ஒரு பெண்ணாக... மேலும் சொல்லப்போனால் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக...

     1991 ல சேர்ந்ததிலிருந்து கணக்கு பண்ணினால் அந்த பயணம் நீண்டதாக தான் இருக்கும். 2001 ல சேர்மன் ஆக இருந்தேன். 2006 ல கவுன்சிலராக இருந்தேன். அப்போது கவுன்சிலர்கள்தான் 
சேர்மன எலக்‌ஷன் பண்ணனும். திமுக ஆட்சி இருந்ததால  நான் சேர்மனாக நின்ன போதும்  திமுக சார்பிலான சேர்மன் வென்றார். 2011 ல மீண்டும் சேர்மன் ஆனேன். 2016 எம் எல் ஏ ஆனேன். அப்படி பார்த்தால் இந்த இடத்துக்கு வரதுக்கு நீண்ட பயணமும் வெற்றியும் தேவைப்பட்டிருந்தது.  இறைவனின் கருணையில் எனக்கு எல்லாமும் நிறைவாக எளிதாக அமைந்தது. 

அமைச்சராவது என்பது சாதாரண விஷயமல்ல. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கவனத்தை எப்படி ஈர்த்து இந்த இடத்திற்கு முன்னேறினீர்கள்? நிச்சயம் ஏதேனும் அம்மா உங்க கிட்ட சொல்லியிருக்கலாம் அல்லவா...

     ஹாஹாஹா...  எந்த மீட்டிங் இருந்தாலும் அட்டன் செய்வேன். முதலில் மாவட்ட மருத்துவர் அணி செயலாளராக பணியாற்றினேன். இப்பவும் அந்த போஸ்டிங்ல தொடர்கிறேன். மேலும் இப்பவும் மாவட்ட கழக துணை செயலாளராக பொறுப்பு வகிக்கிறேன். 

     மாவட்ட செயலாளர் ,  வணிக மற்றும் பத்திரிகை துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்கள், என் கட்சிப் பணிகளைப் பார்த்து எனக்கு ஆதரவு அளித்தார்.

     அம்மா என்னை முதலில் செயற்குழு உறுப்பினராக்கி அழகு பார்த்தார்கள் . வாணியம்பாடியாகட்டும், மாவட்ட அளவிலாகட்டும், சென்னை வரையாகட்டும் எல்லா மீட்டிங்க்ஸும் அட்டன் பண்ணிட்டு வந்தேன். எனக்கொரு ஆர்வம் அப்போதிலிருந்து. எல்லா வகையிலும் என் எல்லா வகையான முயற்சிகளையும் சேர்த்து கடினமாக உழைத்து என் பெஸ்ட் காட்டிக் கொண்டிருந்தேன்.

     ஊரிலும் கூட கட்சிகாரர்களுக்கான உதவிகளை செய்து வந்தேன். க்ளினிக் இருப்பதால், எல்லா வகையான  கட்சி பணிகளோடு, தொண்டர்களுக்கு மருத்துவ உதவி, இலவச முகாம் என்ற வகையில்  உதவி செய்திருக்கேன்.   அவையெல்லாம் அம்மாவின் கவனத்திற்கும் சென்றிருக்க கூடும். இதையெல்லாவற்றையும் விட  அம்மாவிற்கு முஸ்லிம் பெண்களின் வளர்ச்சி மிக பிடிக்கும். புர்கா அணிந்து கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் இருக்கும் பெண்களை கண்டால் அம்மாவிற்கு மிகப் பிடிக்கும்.  இவையெல்லாம் சேர்த்துத்தான் அம்மா அடுத்தடுத்த கட்டங்களுக்கு என்னை உயர்த்தினார்.

     எம்எல்ஏ நேர்காணலின் போது, அம்மா என்னைப் பார்த்தவுடன், உங்கள தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டு வர்ரேன்னு சொன்னது எனக்கு பெருமையா இருந்திச்சி...

புர்காவுடன்  மினிஸ்ட்டராக பணிபுரிவதில் எதாவது சங்கடத்தை உணர்கிறீர்களா? 

என் க்ளினிக்குள்ள உக்கார்ந்தா கூட இதே புர்காவில் தான் இருப்பேன். இந்த கம்ஃபர்ட் மற்ற ஆர்டினரி ட்ரஸ்ல என்னால உணர முடியல. 

ஆனால் புர்கா விஷயத்தில், கொள்கை கோட்பாடுகளிலான விமர்சனங்களை தவிர்க்க வேண்டி தம் அடையாளங்களை துறக்கவும் சிலர் தயங்குவதில்லை. உங்களுக்கு அப்படி தோணியிருக்கா?

     நான் அப்படி யோசித்ததில்லை. ஏன் இப்போது இருக்கும் சூழலில் நிறைய பெண்கள் புர்காவை விரும்பி அணியிறாங்க. எந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவை எளிதாக கடந்துடுறாங்க. அப்படி இருக்க அடையாளங்களை துறப்பதில்  கோட்பாடுகளை சாக்கு சொல்வது ஏற்புடையதல்ல. என்னை பொறுத்தவரை பர்சனல் ஃபேசன்-க்காக தான் புர்கா போடாம சிலர் இருக்காங்களே தவிர்த்து  விமர்சனங்களுக்காக யாரும் புர்கா அணிய தயங்குவதில்லை. புர்கா போடுவதை எதிர்த்தால் அந்த விமர்சனங்களை எளிதாக கடக்கும் மன தைரியத்தை கொண்டவர்கள் தான் அதிகம்.  என் பொண்ணுங்களும்  விரும்பி அணியிறாங்க.  

அமைச்சராக இருப்பதால் உங்களால் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாது. மரியாதை  நிமித்தம் விடுக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளையும் புறந்தள்ள முடியாது.   அங்கே நிகழ்த்தப்படும் பூமி பூஜை, குத்துவிளக்கு ஏற்றுவது முதலிய சம்பிரதாயங்களை உள்ளடைக்கக்கூடியவை என்றாலும் கூட ! இது குறித்து வரும் விமர்சனங்கள் பற்றி ?

     ஆமாம்... நிறைய விமர்சனங்கள் வரும். வாட்ஸ்அப் ல  நிறைய அனுப்புவாங்க. பேஸ்புக்ல விவாதிப்பாங்க.  என்னை பொறுத்த வரை  சர்ச்க்குள் இருந்தாலும் ஈமான் உறுதியாக இருந்தால் தொழுகவும்  முடியும். கோவிலுக்குள் குர்ஆன் ஓதவும் முடியும். பூமியில் தூய்மையான இடங்களை அல்லாஹ்வை வணங்கும் இடமாக இறைவன் ஆக்கி வைத்திருக்கிறானே... மற்ற மதங்களின் நம்பிக்கைகளுக்கு  மரியாதை தருவது என்னை பொறுத்தமட்டில் தவறில்லை. என் மனதில் இருக்கும் ஈமான் பற்றி எனக்கும்  என்னை கண்காணிக்கும் அல்லாஹ்வுக்கும் தெரிந்தால் போதாதா? அதனால்  என்ன எதிர்ப்புகள் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை நான் கண்டுகொள்வதில்லை. 

அரசியல் என்றாலே விமர்சனம் இருக்கும். எதிர்கட்சி தரப்பிலிருந்தும் சரி, உள்கட்சிக்குள்ளிருந்தும் சரி, சில நேரங்களில்  எல்லை மீறி தரம்தாழ்ந்தும் போககூடிய சூழல் நிலவும். அதாவது பெண் என வரும் போது கொச்சைப்படுத்தி  உளவியல் ரீதியாகவோ தனிநபர் தாக்குதலாகவோ அவையிருக்கும். இப்படி எதிர்கொண்டிருக்கிறீர்களா?

     முதுகுக்கு பின்  பேசுவதைப்பற்றி தெரியாது . ஏனெனில் முகத்திற்கு நேராக விமர்சனம் வைக்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. என் சுயமரியாதை சார்ந்த விஷயத்தை மிக கவனமாக  கையாள்கிறேன். என்னளவில் மிக சரியாய் இருக்கும் போது எந்த விமர்சனங்கள் வந்தாலும் அது குறித்து கவலைப்படுவதற்கு கூட என்னால் யோசித்துப்பார்க்க முடியவில்லை. 

நிலோபர் கபீல் என்றாலே பழக்கூடை தூக்கி வீசியவர் என்ற பிம்பம் மட்டுமே தான் எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. அந்த சம்பவம் பற்றி ?

     அதனை நான் நியாயப்படுத்த விரும்பல... 

     இரண்டு முறை எனது கட்சிக்காரர்கள் சொல்லிய பின்பும் அவர்கள் கடையை எடுக்கவில்லை. அவர்கள் திமுக குடும்பப் பின்னணி கொண்டவர்கள். சாலையை ஆக்கிரமித்து அந்தக் கடை வைக்கப்பட்டிருந்தது. நான் சேர்மனாக இருந்த போதே, பலமுறை எடுக்கச் சொல்லியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இப்பவும் அந்தக் கடை ரோட்லதான் இருக்கு.

     வாணியம்பாடியின் அதிமுக சார்பிலான முக்கிய அங்கம் வகிக்கும் நான்தான் எல்லா விதமான போராட்டங்களையும்  தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டும். அம்மாவின் மீது எனக்கு      அதிகமான பாசம் உண்டு. இது எப்படியானது என நான் சொன்னால் கூட அதனை உங்களால் எளிதில் உள்வாங்கிக்கொள்ள  முடியாது. 

     அது உணர்வுப்பூர்வமான பாசம்... என் தாய் ஸ்தானத்தில் வைத்திருக்கும் ஓர் இரும்புப் பெண்மணியை தலைகுனிவு கொடுத்து சிறைக்கு அனுப்பும் போது என் ஆதங்கத்தை நான் காட்டியாக வேண்டுமல்லவா. நீங்கள் அந்த ஓர் சம்பவத்தை வைத்து மட்டும் என்னை எடை போடுவீர்களாயின் என்னால் பயன் அடைந்தவர்களின்   அனுபவங்களை வைத்து என்னை போற்றி கொண்டாடியிருக்க வேண்டுமல்லவா? எனினும் அந்த சம்பவம் மட்டுமே பிரதானமாக வைத்து  இப்போது வரை வசைபாடுவதிலும் என்னின் அடையாளமாக அதனை நிறுவ முயல்வதிலும் பின்னணி மிக அழுக்கானதாக நினைக்கிறேன்.  உண்மையை சொல்ல வேண்டுமானால்  அந்த வீடியோ கூட திட்டமிட்டு   வேகமாக பரப்பப்பட்டது. எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சி ஊடகங்களும் அதனை விரைந்து, விரிவாக பரப்பியதில் இருக்கும் உள்நோக்கம் அரசியல்பூர்வமானது. என்ற போதும் அந்த சம்பவத்தை வைத்து என் மக்கள் என்னை ஒதுக்கவில்லை.    

இந்த பதவிக்கு வந்த பின் சாதிச்சுட்டதாக நீங்க நினைக்கும் விஷயங்கள் என்ன ?

     நான் செய்தவையெல்லாம் சாதனையில் வருமா வராதா என்பதெல்லாம் என் பார்வையில் இருந்து மற்றவர்கள் பார்வையில் வித்தியாசப்படலாம். என்ற போதும் நிறைய விஷயங்கள் எனக்கு மனநிறைவை கொடுத்திருக்கிறது. அந்த மனநிறைவு  ஏதோ ஒரு சாதனையை தான் எனக்கு நினைவூட்டுது. இந்த பதவிக்கு வந்த பின் நிறைய பேருக்கு வேலை கிடைக்கச் செய்திருக்கேன். ஒருவருக்கு வேலை கிடைக்கும் போது அந்த குடும்பமே  அதன் மூலம் பயன்பெறும். அப்படியானவர்கள்  என்னை அணுகி வாழ்த்து  சொல்லும்போதும் எனக்காக பிரார்த்திக்கும் போதும்  உள்ளத்தளவில் எனர்ஜி கிடைக்குது. மத்தபடி என் பணிகளை அதாவது என் கடமையை ஒவ்வொன்றாக சொல்லி அதனை என் சாதனையாக சுருக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. மனநிறைவு கிடைக்கும் வரையில் நான் ஏதோ நல்ல விஷயம் செய்துட்டிருக்கேன் என்ற எண்ணத்தை எனக்கு கொடுக்குது. 

கவுன்சிலரில் இருந்து அமைச்சராகியிருக்கீங்க. அடுத்த கட்ட வளர்ச்சியாக உங்களை என்னவாக நாங்கள் பார்ப்போம் என்பதை நீங்களே முன்கூட்டி சொல்லிடுங்களேன்.. இன்னொரு துணைக்கேள்வியும் உண்டு.    ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்தால்  எப்படி  உணர்வீர்கள் ?

     நான் முன்னமே சொன்னது போல் தான், நான் எந்த திட்டங்களும் போட்டு என் வாழ்க்கையை  அமைக்கல.  கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. பண்ணினேன். படிக்க சொன்னாங்க, டாக்டரானேன். சேர்மன் போஸ்ட்டும் அப்படியாக அமைந்தது தான். வாழ்க்கையில் எனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு என் சொந்த முயற்சிகளை வைத்து சிறப்பான  இடத்தை அடைந்திருக்கிறேன். 

     எனக்கு எது சிறந்ததாக இருக்கோ அதையே தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கிறான். நான் அவனை நம்புகிறேன், ஆகவே அவன் முடிவுப்படி தான் எல்லாமும் அமையும்.    அதேபோல் நீங்க கேட்டிருந்தீங்க, இத்துடன் அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றால் என்னாவீர்கள் என்று. அதுதான் சிறந்ததென அல்லாஹ் எனக்கு நாடியதாக எடுத்துக்கொள்வேன். என்ற போதும் என்னை உருவாக்கிய  அனைவருக்கும் நன்றியுடன் இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு இறுதி வரை பணியாற்றுவேன். கட்சியில் இந்த பதவி இல்லை என்றாலும்  அடிப்படை உறுப்பினர் என்ற தகுதி போதும், நான் கட்சிக்காக பணிகளை செய்வேன்.. 

ரொம்ப சீரியஸ்ஸான கேள்விகளாகவே போய்ட்டிருக்கு... ஒரு நகைச்சுவையுடன் முடிவுக்கு கொண்டு வருவோம்.  நிலோபர் கபிலின் இன்னொரு அடையாளம் கொஞ்சும் தமிழ்தான். அதனை கேலி செய்தாலும் நீங்கள் பெரிதுபடுத்தாமல் புன்னகையுடன் கடந்து வரும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு மேடை பேச்சு மிக முக்கியம் இல்லையா... உங்க ரோல் மாடல் யார்?  

       சீரியஸ் விஷயம் வேண்டாம்னு நீங்க  சொன்னதுனால சொல்றேன். உங்களுக்கொரு   விஷயம் தெரியுமா, மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிச்சாலும் உருது தாய்மொழியா இருந்தாலும்    நான் படிக்கும் போது தமிழ்ல  60% மார்க் எடுத்தேன்... (மழலை போன்ற அவரின் பாவணையில்  மீண்டும்  இறுக்கம் குறைந்து  அந்த இடமே கலகலப்பானது.)

       நான் சென்னையில் இருக்கும் போதும், வாணியம்பாடியில் இருக்கும் போதும்  எனக்கு தமிழ் பேசியாகணும் என்ற கட்டாயம் இருந்ததில்லை. தமிழ் மட்டுமே தாய்மொழியாக கொண்ட ஒரு நபரை அயல்நாட்டில் விட்டோம்ன்னா முதல்ல தடுமாறி தடுமாறி பேசி பின்னர் சரளமாக அந்நாட்டின் மொழியை பேசுவாரில்லையா?  இப்ப கூட எல்லா நிகழ்ச்சிகளிலும் சரளமா ஆங்கிலத்தில் என்னால் பேச முடியும்ன்னாலும்  எனக்கு ஆசை - தமிழ்ல பேசணும் ன்னு.  இது எனக்கு பயிற்சியா நினைக்கிறேன்.    ரோல் மாடல்ன்னா எப்பவும் அம்மா தான். ஆனா அம்மா போல் என்னால் பேச முடியாது. நிறுத்தி நிதானமாக பேசினாலே நாம் என்ன சொல்ல வரோம்ன்னு  மத்தவங்களை புரிஞ்சுக்க வைக்கலாம். அது போதும் எனக்கு.  செய்தி சேனல்கள், நாளிதழ்கள் தொடர்ந்து படிக்கிறேன். முன்புக்கு இப்ப பரவால்லை தானே....

*********

        மனம் விட்டு சிரித்தோம். "ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. இத்துடன் பேட்டி முடிச்சுக்கலாம். கிட்டதட்ட  இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடிச்சிருக்கும். இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி, அதுக்கும் மேல் தோழமையாக பழகி பொறுமையாக பதிலும் சொன்னீங்க. உங்கள் மேல் இருக்கும் மரியாதை அதிகமாகியது என்று சொல்வதை விடவும்  பிரியம் பன்மடங்கு அதிகரிச்சிருக்கு " என்றேன்.  திருமதி  நிலோபர் கபீல்  அவர்களும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டதோடு  தேநீர் அருந்திச் செல்லும்படி உபசரித்தார். 

       'அம்மா'வின் மீது அளவிலாப் பற்று கொண்ட அவருக்கு, அம்மாவைப் பற்றி அவர் அறியாத ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லியதும் ஆச்சரிய மிகுதியால் ஆர்வமானார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய புத்தகங்களை அன்புப் பரிசாக அமைச்சருக்கு அளித்து விட்டு விடைபெற்றேன்.

       நாம்  கட்டியமைத்திருக்கும் பிம்பத்தை முதல் பேச்சிலேயே தகர்த்தெறியும் ஆளுமை கொண்டிருக்கிறார் சகோதரி நிலோபர் கபீல்.  சில நேரம் நம் கண்ணால் காட்டப்படுவது கூட  மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பதால் தான் "கண்ணால் காண்பதும் பொய்" என்றார்களோ என்னவோ. ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அஃது அவரின் அடிப்படை அடையாளம் என கொள்ள முடியாது. சந்தர்ப்பமும் சூழலும் தான் ஒரு மனிதரின் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. அதற்கும் மேலாக அந்த சூழலை பயன்படுத்தக்கூடிய நபர்களை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியதாகிறது. சகோதரி நிலோபரின் ஆளுமையை பாராட்ட வேண்டியதன் அவசியத்தை   ஒவ்வொரு செயல்களிலும் காண்பித்துக் கொண்டிருகிறார். 

       'யாரின் தூற்றுதலும் தம் நற்பணிகளை தடுக்காது' என்றும்  'என்னை தூற்றியவரேயாகினும் அவருக்கான  நற்பயன்கள் அவருக்கு சென்று சேருவதில் நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன்' என்றும்  அவர் கூறிய சொற்கள் அவரின் உள்ளத்தின் சாயல்.

பேட்டியும் ஆக்கமும் :
ஆமினா முஹம்மத் 

33 comments:

 1. பழக்கடை சம்பவம் குறித்து நான் வீடியோவை முகநூலில் பதிந்து விமர்சித்து இருக்கிறேன்.

  நியாப்படுத்த முடியாது என்று தெளிவான விளக்கம் பெற்றுக்கொண்டேன்.

  அடுத்தவர்கள் ஈமானை எடை போட யாருக்கும் அனுமதியில்லை அதை கடந்து அவர்கள் எடுத்து இருக்கும் மக்கள் சேவை போற்றக்கூடியது.

  பேட்டி மிகவும் அருமை.

  குடும்ப பின்னணிகொண்டு கல்யாணம் முடித்து படித்து, மக்கள் சேவையில் ஜமாத்தார்கள் நன்மதிப்பு பெற்று தற்போதுவறை மக்கள் சேவையில் இருப்பது சாதனை பெண்மணிக்கு உகுந்த போற்றுதலுக்குரியது...

  வாழ்த்துக்கள் சகோதரி ஆமினா அவர்களுக்கு...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ யூசுப்

   Delete
 2. நல்லதொரு பேட்டி காணல்.. பழக்கூடையை வீசியது தப்பே இல்ல...

  ReplyDelete
 3. வ்வாவ்.

  அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கிறேன் என்பதைக் கொடுத்திருக்கிறான் என மாற்றுங்கள்.

  மிகச் சிறப்பு

  அவர் குறித்து கொண்டிருந்த எண்ணங்களனைத்தையும் தகர்த்தெறிய வைத்தது உங்களின் இந்த நேர்காணல்.

  12 ஆம் வகுப்பு முடித்த உடன் திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளுக்கும் தாயாகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்படிப்பு முடித்து, கல்லூரியே சென்று சட்டம் பயின்று... அதன் பின்னர் அரசியல் நுழைந்து... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

  நிச்சயமாக சகோதரி நிலோஃபர் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சிறந்ததொரு ரோல் மாடல்.

  அவர்கள் குறித்த இந்தத் தகவல் தமிழக முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். கூடுதல் வழிகாட்டல்களுக்கும் ஊக்குவிப்பிற்கும் இச்சகோதரியை முஸ்லிம் சமூகம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் பல விசயங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இரும்பு பெண்மணி. ஆனால், தம்மால் நிறுத்தப்பட்ட கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேட்சை ஒருவருக்கு ஓட்டளிக்க தம் தொலைக்காட்சியிலேயே தோன்றி அறிவித்தவர் என்பது நம்ப இயலாத ஆச்சரியம். அவர் குறித்த பிம்பங்களையும் நிச்சயமாக தகர்க்கிறது இத்தகவல். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் அவருக்கு விசுவாசமாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை; இருக்கவும் வேண்டும். அவ்வகையில் சகோதரி நிலோஃபரின் அம்மா பாசம் ஆழமாக புரிந்துக் கொள்ளத்தக்கதே. பழக்கூடை விவகாரம் பஞ்சாக பறந்துவிட்டது.

  ஆளுமைகள் நாம் கண்ணால் காண்பவைகளல்ல, காதால் கேட்பவைகளல்ல. அடுத்து அறிபவைகளே உண்மையாக இருக்குமென்பது சகோதரி நிலோஃபர் விசயத்தில் 100 சதம் உண்மையாகிவிட்டது. என் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைக்க வைக்கிறது. இப்போதே அவர் குறித்து என் வீட்டினருக்கு அறிமுகம் கொடுத்துவிட்டேன்.

  மிகச் சிறந்ததொரு ஆளுமையைப் புரிய வைத்தமைக்குச் சகோதரி ஆமினாவுக்கு மிக்க நன்றி.

  உங்கள் பணி தொடரவும் சிறக்கவும் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. சுட்டலுக்கு நன்றி. திருத்திவிட்டேன்.

   அருமையான பின்னூட்டம். ரசித்து வாசித்தேன்.

   ஜஸக்கல்லாஹ் ஹைர்

   Delete
 4. அருமையாக இருந்துச்சி மேடம்

  ReplyDelete
 5. அருமையன பேட்டி, இவர்களை பற்றிய தவறான புரிதல மாற்றும், வாழ்த்துக்கள் ஆமினா அக்கா...!!!

  ReplyDelete
 6. //அமைச்சராக இருப்பதால் உங்களால் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாது. மரியாதை நிமித்தம் விடுக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளையும் புறந்தள்ள முடியாது. அங்கே நிகழ்த்தப்படும் பூமி பூஜை, குத்துவிளக்கு ஏற்றுவது முதலிய சம்பிரதாயங்களை உள்ளடைக்கக்கூடியவை என்றாலும் கூட ! இது குறித்து வரும் விமர்சனங்கள் பற்றி ?

  ஆமாம்... நிறைய விமர்சனங்கள் வரும். வாட்ஸ்அப் ல நிறைய அனுப்புவாங்க. பேஸ்புக்ல விவாதிப்பாங்க. என்னை பொறுத்த வரை சர்ச்க்குள் இருந்தாலும் ஈமான் உறுதியாக இருந்தால் தொழுகவும் முடியும். கோவிலுக்குள் குர்ஆன் ஓதவும் முடியும். பூமியில் தூய்மையான இடங்களை அல்லாஹ்வை வணங்கும் இடமாக இறைவன் ஆக்கி வைத்திருக்கிறானே... மற்ற மதங்களின் நம்பிக்கைகளுக்கு மரியாதை தருவது என்னை பொறுத்தமட்டில் தவறில்லை. என் மனதில் இருக்கும் ஈமான் பற்றி எனக்கும் என்னை கண்காணிக்கும் அல்லாஹ்வுக்கும் தெரிந்தால் போதாதா? அதனால் என்ன எதிர்ப்புகள் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை நான் கண்டுகொள்வதில்லை.
  //

  முதிர்ச்சியான அணுகுமுறை..

  வாழ்த்துக்கள்.. இருவருக்கும்..

  - Mohmed Faisel

  ReplyDelete
 7. புதுசா இருந்துச்சு...

  ReplyDelete
 8. பொறுப்பான கேள்விகளும் சிறப்பான தெளிவான திடமான பதில்களும்....

  வெல்டன் மென்மேலும் சவலான நேர்காணல்கள் தேர்ந்தெடுத்து மிளிர வாழ்த்துகிறேன்...

  அமைச்சர் மீதான தனிப்பட்ட பொதுச் சேவையின் ஈர்ப்பு அவரின் தனித்துவமான வெளிப்புற ஆடையென்பதை விட அந்த இஸ்லாமிய ஆடையின் கம்பீரம்தான் ஹைலைட் !

  ReplyDelete
 9. பத்திரிக்கையாளராக நல்ல துவக்கம். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. Very nice interview. Wishing you great success as mediaperson. Alhamdhulillah

  ReplyDelete
 11. Nice and Nach. Wishing you all the best.

  ReplyDelete
 12. இந்த பேட்டிக்குப்பின் நேற்றுவரை அவர்மீது எனக்கு இருந்த பிம்பம் சற்று உடைந்ததாக நினைக்கிறேன்.நல்ல கேள்விகள் நிதானமான பதில்கள். நிலோபர் கபீலின் பணி சிறக்க பிரார்த்தனைகள், உங்கள் பணியும்தான்

  ReplyDelete
 13. ஜெயலலிதா அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பெயருள்ள பெண் அமைச்சர் இருக்கிறார், என்ற அளவுக்கே தெரிந்து வைத்திருந்தேன். நல்ல ஒரு ஆளுமையை அறிந்துகொண்டேன்.

  جزاكم الله خيرا

  ReplyDelete
 14. எனக்கு நிலோபர் கபிலின் மீது மரியாதை கூடியிருக்கிறது.
  முன்மாதிரிப் பெண்மனியாக நிலோபர் கபில் கவனத்தை ஈர்க்கிறார்

  ReplyDelete
 15. அருமையான நேர்காணல்

  ReplyDelete
 16. சிறப்பான பேட்டி, கேள்விகள், பதில்கள் சிறபாக எழுத்தப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. பேட்டி அருமை.ஆரம்பத்தில் இருந்து பழக்கூடை பற்றிய கேள்வியை எதிர்பார்த்தேன்.ஏமாற்றவில்லை நீங்கள்.
  மேலும் இதுவரை அறியா அரிய செய்திகளை அறிந்துக்கொண்டேன்.நன்றி.

  ReplyDelete
 19. அருமையான நேர்காணல் அக்கா.....

  ReplyDelete
 20. அருமையான நேர்காணல் அக்கா.....

  ReplyDelete
 21. மிகவும் நேர்தியான கேள்விகளும் மிகையில்லாத எதார்தமான பதில்களும் அருமை..

  ReplyDelete
 22. விவேகமான கேள்விகள், நேர்மையான பதில்கள் - இந்த நேர்காணல் குறித்த ஒருவரி விமர்சனம் என்றால் அது இது மட்டுமே. அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான பதிவு. இஸ்லாமிய பெண்மணி தளத்தின் எழுச்சிமிகு பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல். வாழ்த்துக்கள் சிஸ்டர்ஸ்.

  ReplyDelete
 23. good one. its totally changed her image which stained everyone's mind. But, she do nothing with her department same as his party ministers did.

  ReplyDelete
 24. பேட்டி மிகவும் அருமை.
  Weldon sister

  ReplyDelete
 25. அருமையான நேர்காணல்

  ReplyDelete
 26. அல்ஹம்துலில்லாஹ். Congrats Amina

  ReplyDelete