Wednesday, May 17, 2017

தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்

   
சமீபத்தில் வெளியான  +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா.


ரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக்கடை நடத்திவருகிறார்.  அவரிடம் முதலில் பேசினோம்.

"எங்கத்தா படிச்சது 4வது வரை, நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன், என் மனைவி பிஏ படிச்சிருக்காங்க, மளிகைக்கடை நடத்திட்டு வரேன். மூத்தப்பொண்ணு நல்லா படிச்சுச்சு.   கட்ஆப் மார்க் வச்சு  மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டிருக்காங்க, 2வது பொண்ணுதான் ரிஹானா.   கம்பத்துல தான் முதல்ல படிச்சுச்சு. நல்ல மார்க் எடுத்துட்டிருந்தாங்க,  அக்கா மாதிரியே தங்கச்சியையும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துடணும்னு தான் ஆசை எனக்கு, அதனால நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுல தரமான ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன். வித்யா விகாஸ்ல படிச்சாங்க. 1192 மார்க் எடுத்திருக்காங்க, நீட் எக்சாம் எழுதியிருக்காங்க" என வரிசையாய் எல்லாம் விவரித்தார். 
ரிஹானா பற்றி பேசத்தான் வந்தோம். ஆனால் ரிஹானாக்கு முன்பே ஒரு மருத்துவரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அறிந்து ஆச்சர்யப்பட்டோம்.  மீண்டும் தொடர்ந்தார்
"மூத்தப்பொண்ணு உம்மு ரீஷ்மன்  நல்லா படிச்சுச்சு, இன்னும் 20 மார்க் வாங்கினாங்கன்னா மெடிக்கல் கட்ஆப் கிடைக்கும்னு என் மனைவியின் உறவினர் என்னிடம் சொல்லி  மூத்தப்பெண்ணை வேறு ஸ்கூலில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது எனக்கு கட்ஆப் ன்னா என்னன்னு தெரியாது, சரி இப்படி சொல்றாங்களேன்னு நானும்  முயற்சி பண்ணி சேர்த்தேன். +2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தாங்க. இப்போது மதுரையில் தங்கி படிக்கிறாங்க". 
லகரங்கள் கொட்டினால் தான்  மருத்துவராக முடியும் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்த  இரு மாணவிகளும்  தன் மேற்படிப்புக்காக முதலீடு செய்ததெல்லாம்  படிப்பை  மட்டுமே. 

ரிஹானாவிடம் பேசினோம்,  மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்மந்தமேயில்லை என்பது உண்மையோ இல்லையோ,  ஆனால் ரிஹானா  தன் மதிபெண்களைப்போலவே மிக மதிநுட்பமான பெண்ணாய் பேசினார்.   

எந்த ஸ்கூல்ல படிச்சீங்க, வருங்கால லட்சியம் என்ன போன்ற சம்பிரதாய  கேள்விகளுக்கு வேலை இல்லை. அதைவிடவும் வாயடைக்கும் விதமாய் நிறைய  பேசினார்.

நீட் எக்சாம்  தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு தான் இல்லையா?
தேர்வு கஷ்டம் தான். இறுதி நேரத்தில் சொன்னதால் முன்னேற்பாடுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா நம்ம மாணவர்கள்  ஈசியா இந்த தேர்வை எதிர்கொள்வார்கள்.  
நீட் எக்சாம் எப்படி எழுதுனீங்க?
நீட் தேர்வுக்காக  அத்தா தனியாக கோச்சிங் க்ளாஸ் அனுப்பினாங்க.  நல்லா எழுதியிருக்கேன். ஆனால் தேர்ச்சியாக அது போதாது.
என்ன இப்படி சொல்றீங்க ? அக்காவை மாதிரி டாக்டராவது தான் உங்களின் லட்சியமும் கூட, ஆனால் மார்க் இத்தனை வாங்கியும் அக்காப்போல் எளிதாக   மெடிக்கல் சீட் கிடைக்காது போலையே? ரொம்ப மெனக்கெடவேண்டி இருக்குமோ?  
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட எல்லா மாணவர்களும் நான் எதிர்பார்க்கும் மார்க் அளவில் தான் எடுத்திருக்க முடியும் என சொல்கிறார்கள்.  அந்தளவுக்கு சவாலான விஷயமாக தான் தேர்வு இருந்தது. எனினும் நான் விடப்போவதில்லை. ஒரு வருசம் தீவிரமாய் பயிற்சி எடுத்து அடுத்த வருடம் நீட் எக்சாம் எழுதி எப்படியும்  மெடிக்கல் பீல்ட்ல அத்தாவின் ஆசையை நிறைவேற்றுவேன். 
நீட்டை நீங்க விடப்போறதா இல்லை, பாராட்டுக்கள்.   உங்க ஊர் கம்பம் என்றாலும்,  திருச்செங்கோடுல படிச்சிருக்கீங்க. நாமக்கல் கல்வி வட்டாரம்  படிப்பு விஷயத்தில் மாணவர்களை ரொம்ப அழுத்தங்களுக்குள்ளாக்கும்   அம்சம் தானே? 
கம்பத்துல படிச்சுட்டிருக்கும் போதே என் மார்க் பார்த்துட்டு அத்தா, அதை விடவும் தரமான ஸ்கூலில் சேர்க்க ஆசைப்பட்டாங்க. நாமக்கல் கல்வி முறை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். என்னால் மார்க் அதிகம் வாங்க முடியும் எனும்போது அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எனக்கு பொருட்டே அல்ல என மனதளவில் முதலில் என்னை தயார்படுத்திக்கிட்டேன்.  ஆனால் அங்கே சென்ற பின் அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை. நல்ல மார்க் எடுக்கணும்னுதான் இந்த ஸ்கூலில் சேர்த்துவிடுறாங்க, நல்ல மார்க் எடுக்க முடியாதவங்களுக்கு ஸ்கூல் நடைமுறைகள் கஷ்ட்டமாகத்தான் இருக்கும். நான் எந்த அழுத்தமும் எதிர்கொண்டதில்லை. 
ரொம்ப தெளிவா பேசுறீங்க,  என்னதான்  நம் குடும்ப சூழல் காரணமாக நாம்  கட்டுகோப்பாய் இருந்தாலும்  ஹாஸ்ட்டல் முறை என வரும்போது பல வழிகளில் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சூழல் மாறிடுதே? 
சேர்க்கும் போதே தரமான ஸ்கூலில் சேர்ப்பதுடன், தரமான நிர்வாக முறை கொண்ட ஹாஸ்ட்டலில் தேடி சேர்ப்பதும் பெற்றோரின் கடமை தான்.   எத்தனையோ ஸ்கூல் இருந்தும் கூட  வெளியூரில் தங்கி படிப்பதால் பெண்கள் தனியே படிக்கும் வித்யாவிகாஸ்-ல் சேர்க்க நினைத்தது மட்டுமல்லாமல், அதிலும் சரியான ஹாஸ்ட்டலை தரம் பிரிச்சு தந்தார்கள் என் பெற்றோர்கள்.   இறையச்சமும், பெற்றோர்களின்  அறிவார்ந்த இடத்தேர்வும் இருந்தால் எந்த மாணவ மாணவிகளும்  தடம் மாறமாட்டாங்க. ஏனோதானோன்னு பிள்ளை வளர்த்து கடமைக்கு வெளியூர் ஸ்கூலில் படிக்க வச்சா நீங்க சொன்ன  சூழல் நிலவலாம்.  
மாஷா அல்லாஹ், படிப்பு விஷயத்தில் உங்கள் பெற்றோர்களின் முயற்சி ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. அது மற்ற  பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கும் முன்னுதாரணம். ஆனாலும் அவர்கள் புறக்காரணிகளால் அதாவது உறவினர்கள் நண்பர்கள் ஆகியவற்றால் குழம்பியிருக்கக்கூடும் தானே?

ஆமாம்.  சொந்தக்காரங்க சொல்லத்தான் செஞ்சாங்க "பொம்பளப்புள்ளையை ஏன் இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்கிற. ஊர்லையே நல்ல ஸ்கூலில் படிக்க வைக்கலாமே"ன்னு. அத்தா யோசிக்கத்தான் செஞ்சாங்க, என்றாலும் எங்கள் கல்வி மேம்பாட்டில் அவருக்கு அக்கறை இருந்தது,  எங்கள் கல்வி வீணாகி விடக்கூடாது என்ற வருத்தமும் இருந்தது. தேடி தேடி நல்ல ஸ்கூல் தேர்ந்தெடுத்து தந்தாங்க.  அதிகம் படிப்பறிவு இல்லாத நிலையில் எங்கள் மேல்படிப்புக்கு என்ன விஷயங்கள் செய்யணும்னு தேடி தேடி ஒவ்வொருவரிடமும் விசாரிச்சாங்க. வெளியூர்க்கு புள்ளையை படிக்க அனுப்பினாலே ஒழுக்கம் விஷயத்தில் கெட்டுப்போய்டுவாங்க என்ற அழுத்தங்களையும் தாண்டி எங்களை அவங்க நம்பினாங்க. அதுக்கு அவங்க வளர்ப்பு முறையில்  வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். 
நம் சமுதாயப் பெண்கள் இப்போது  அதிகம்  கல்வி விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். உங்கள் பார்வையில் எப்படி தெரிகிறது?
இன்னும் மாற்றம் வரணும். நல்ல மதிப்பெண் பெற்றும் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிடக்கூடிய பெற்றோர்கள்  இன்னும் இருக்காங்க.   அடுத்து என்ன படிக்கலாம்னு தெரியாம கூட பலர் இருக்காங்க.   என்னை பொறுத்தவரைக்கும் இந்த விழிப்புணர்வு போதாது. 
நல்லமாற்றம் கிடைக்கணும்னா என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
பெண்களுக்கு கல்வியை கட்டாயமாக்குவதோடல்லாமல் உயர்கல்விக்கும் அவங்களை தயார்ப்படுத்தனும். நிறைய பெற்றோர்கள் தயங்குவதே நம்ம புள்ளையை யாரும் தப்பா பேசிடுவாங்களோ என்பதற்காகத்தான். இந்த எண்ணம்லாம் அகலணும்.   என் அம்மா பிஏ படிச்சாங்க, அதனால்   அத்தாவுக்கும் புரியவச்சு எங்களை இந்த நிலையில் நிறுத்தியிருக்காங்க. நானும் அக்காவும் எல்கேஜில இருந்து எந்த டியூசனும் போனதில்லை, அம்மாவே எங்களுக்குச் சொல்லி கொடுப்பாங்க. அதுவே எங்களுக்கு போதுமானதாக இருந்துச்சு.  அவங்க படிச்சதுனால தான் தன் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடிஞ்சது. அதே போல், நம் சமுதாய மக்கள் தம் பெண்மக்களை  அதிக கல்வி கொடுக்க முன்வரணும், இவங்களை பார்த்து மற்ற பெற்றோர்களும் தம் பெண் பிள்ளையை தைரியமாக படிக்க வைப்பார்கள். இது தொடர் நிகழ்வாகும்போது நம்  சமுதாயமும் கல்வியில் மேன்மையான இடத்தை அடையும். 
ரொம்ப அருமையா பேசுனீங்க ரிஹானா.  ஹிஜாப் பேணி சாதனை படைக்க எந்நாளும் எங்கள் பிரார்த்தனையில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இடம்பிடிப்பீர்கள்.  தனக்கு மட்டும் பெருமை சேர்க்கும் மகள்களாக அல்லாமல் சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய குழந்தைகளாக உங்களையும்  உங்கள் அக்காவையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ள  உங்கள் பெற்றோர்கள் நம் சமுதாயத்தின் மற்ற பெண்களுக்கும் உங்களை முன்மாதிரியாக்கியிருக்கிறார்கள். நீங்கள் சொன்னது போலவே  நிச்சயம் உங்களைப் பார்த்து, பல பெற்றோர்களுக்கும் தம் மகளை உயர்கல்விக்கு  அனுப்பும் ஆசை இப்போது அதிகரிக்கும். மென்மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துகள். உங்களின் ஒவ்வொரு  சாதனைக்கு பின்னும், உங்கள் சாதனையை எங்கள் இஸ்லாமியப்பெண்மணி.காம்மில் பதிந்திடவும் மறக்காதீர்கள். 

ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 
________________________________

மிக அழகிய உரையாடலாக அமைந்தது ரிஹானாவுடன் பேசியது. பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தவும் செய்தார்கள். அவருடனும் அவர் தந்தையுடனும் பேசியதில்  உள்வாங்கக்கூடிய ஆழமான விஷயமும் இருந்தது. அதிலொன்று, உங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருக்கலாம், அதை கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வதை விடுத்து  அவர்களின் அறிவுக்கும் தகுதிக்கும் தகுந்தபடி  களத்தை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொன்னார்கள்.

ஒரு அழகிய  ஹதீஸ்ஸுடன் நிறைவுக்கு வருவோம் ,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127)


பேட்டியும் ஆக்கமும்,
ஆமினா முஹம்மத்
-----------------------------------------------

நன்றி : 
அறிமுகம்  செய்தவர் - சகோதரர் இத்ரிஸ்
read more "தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்"

Tuesday, May 09, 2017

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா??? - எழுதியவர். Shakila Kadher

"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.

அப்படியானால் இந்த பூமியை. மட்டுமே மனிதர்கள் வசிக்குமிடமாக அமைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது.

பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராணவாயு நீர் ஆகியவை உள்ளதோ அங்கே தான் உயிர்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.

புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை.மற்ற கோள்களை விட இங்கு வெப்பம அதிகம். இந்தக் கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் பூமியின் ஈர்ப்பு விசையைப்போல் 3 ல் 1 பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதனால் இதில் மனிதனால் வாழ முடியாது.

வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தை போல 11 மடங்கு அதிகம். இங்கு உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனும் இல்லை.

சூரியனிலிருந்து 23 கோடி தூரத்தில் உள்ளது செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு செந்நிறமாகக் காட்டுகிறது. இதனால் இதற்கு செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

பூமியில் உள்ள காற்றில் 100ல் 1பங்கு காற்று தான் இதில் உள்ளது. அந்தக் காற்றில் கூடஒரு சதவீத அளவே ஆக்ஸிஜன் உள்ளது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.வியாழன் கோளிலும் மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போல பாறைக் கோளாக இல்லாமல் வாயுக் கோளாக உள்ளது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது.இங்கு சென்றால் நம் எடை 2 1/2 மடங்கு அதிகரிக்கும்.நம் எடையை நாம் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது.இங்கு வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க. முடியாது.யுரேனஸ், நெப்டியூன் , புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.

பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத்தேவையான நீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது.எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.

பூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உயிரினங்கள் வாழ வேண்டுமெனில் உடல் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமானது.

சூரிய ஒளிக்கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் அடங்கியுள்ளது.

சூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக்கதிர்களால் மனிதனும் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஓசோன் எனும் படலத்தை பூமியைச் சுற்றி வளையம் போல் அமைத்தான் இறைவன் அது
மட்டுமல்ல, சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளக் கூடிய வளிமண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது.இப்படி சுற்றுவதால் தான் கோடைக்காலம், குளிர் காலம் வசந்தகாலம் என பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.ஆண்டு முழுவதும் சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

மொத்தத்தில் மனிதன் வாழ்வதற்கு சாதகமான,வசதியான வாழ்விடம் அல்லாஹ் சொல்வது போல "பூமி " மட்டுமே.. !! சுப்ஹானல்லாஹ்.,. !!!
read more "மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???"

Monday, May 01, 2017

மறுவாழ்வு


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்..

மறுவாழ்வு - அறிவியல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை - எழுதியவர். சகோதரி ஹுஸைனம்மா


அலறிக் கொண்டே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பிரேக் அடித்து நிலைய வாசல் முன் நின்றது.... வேக வேகமாக வந்த ஊழியர்கள், ”சிறப்பு நோயாளியை” ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். தயாராக இருந்த மருத்துவர்கள், தம் பணியைத் தொடங்கினார்கள்.
அது என்ன சிறப்பு நோயாளி? முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம்!! இதென்ன மற்றொரு “ரமணா” கதையா என்று யோசிக்கிறீர்களா? இல்லை, உயிர்போன பின்புதான் இங்கு கொண்டு வருவார்கள். ஆகையால் ஏமாற்று வேலை ஒன்றும் இல்லை. எனில், என்ன செய்கிறார்கள் உயிரற்ற உடலை வைத்து? உறுப்பு மாற்று சிகிச்சையா? மூச்...அதெல்லாம் செய்ய முடியாது இங்கு.
முதலில் அந்த உடலில் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி.... வெயிட், வெயிட்!! எம்பால்மிங்-லாம் இல்லை.... இது வேற லெவல்... பொறுமையா வாசிங்க! இரத்தத்தை முழுமையாக வெளியேற்றிவிட்டு, உடல் பாகங்கள் உறைந்து போகாதிருக்கவும், கெட்டுப் போகாதிருக்கவும் தேவையான சிறப்பு மருந்து கலவையை உடலின் ஒவ்வொரு இண்டு இடுக்குக்கும் பரவுமாறு செலுத்துவார்கள். இப்போது, கண்ணாடி போல உள்ளிருப்பது தெரியக்கூடிய “vitreous" நிலைக்கு மாறியிருக்கும் உடலை, பெரிய ஃப்ளாஸ்க் போன்ற குடுவையில், -196 டிகிரி செல்சியஸில் இருக்கும் திரவ நைட்ரஜனில் வைப்பார்கள். இப்போ குடுவையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.
எப்போ திறப்பார்கள், உடலை எப்போ வெளியே எடுப்பார்கள்? யாருக்குத் தெரியும்? உள்ளே வைக்கும் அவர்களுக்கே தெரியாது எனும்போது, உங்களுக்கும் எனக்கும் எப்படித் தெரியும்?
என்ன குழப்புதா? இறந்து போன இந்த உடல், “CRYONICS” என்ற முறையில் கடுங்குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது!! ஆனால், இது எம்பால்மிங் அல்ல. எம்பால்மிங் உடலை அடக்கம் செய்யும் வரை பாதுகாப்பதற்காகச் செய்யப்படுவது. “CRYONICS” என்பது - தொடர்ந்து வாசிக்குமுன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் - இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவ்வுடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க செய்யபடுவது!!
ஙே....!!! ஆனால், அதுதான் உண்மை!!
#CRYONICS” என்றால் மிக மிக மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பது (குறைந்த பட்சம் -136 டிகிரி செல்ஷியஸ்) என்று பொருள். 1962-ல் Robert Ettinger என்பவர், இறந்து போனவரை உயிர்ப்பிக்கும் மருத்துவ முன்னேற்றம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்றும், அந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்போது, உயிர்ப்பிப்பதற்காக இறந்த உடல்களை உறைய வைத்து பாதுகாக்கலாம் என்றும் The Prospect of Immortality என்ற தனது புத்தகத்தில் எழுதினார். அதற்கு முன்பும், பின்புமான ஆய்வுகளைத் தொடர்ந்து, முதல் உடல் 1967-ல் உறைய வைக்கப்பட்டது.


தற்போது, இந்த “உயிர்ப்பித்தல்” ஐடியா அமரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்காவில் இரண்டு நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவில் ஒரு நிறுவனம் இந்தச் “சேவையை” வழங்கிவருகின்றன. அமெரிக்காவின் Alcor Life Extension Foundation நிறுவனம், முழு உடலைப் பாதுகாக்க $200,000 -மும், தலையை மட்டும் பாதுகாக்க $80,000 One time fees ஆக வாங்குகிறது. ரஷ்யாவின் KrioRus நிறுவனம் உடலுக்கு $36,000, தலைக்கு $18,000 கட்டணம் பெறுகிறது.
தலைதானே உடலுக்குப் பிரதானம். மூளையில்தான் எல்லா செய்திகள் - தகவல்கள் -அறிவுசார் விஷயங்கள் பதிந்து காணப்படுகின்றன. உயிர்வாழ, மூளை மிக அவசியம். அல்லது மூளை மட்டுமாவது அவசியம் என்பதால், பொருளாதார காரணம் கருதி தலையை மட்டும் பாதுகாக்கிறார்கள். உயிர்ப்பிக்கும் தொழில் நுட்பம் வந்ததும், மூளையிலிருக்கும் தகவல்களை ஒரு ரோபோவில் டவுன்லோட் செய்து ரோபாவாக வாழலாமாம்!! அட, நீங்க சுவத்துல தலைய முட்டிக்காதீங்க.... உங்க மூளை சேதாரமாச்சுன்னா பதப்படுத்த முடியாது!!
இறந்தவரை உயிர்ப்பித்தல் என்பது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி எனச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டில் சாத்தியமேயில்லை என்று உறுதியாக நம்பப்பட்ட எத்தனையோ விஷயங்கள் சாத்தியமாகும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறது உலகம். ஆனால், எப்போது சாத்தியமாகும் என்பதும் விடை தெரியாத கேள்வியே.
சிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது, மூளைக்கு இரத்தம் செலுத்த முடியாத நிலையில், பாதிப்பிலிருந்து பாதுகாக்க, மூளையை +20டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ் குளிர வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹைப்போதெர்மியா என்ற இந்த முறையில், அதிகபட்சம் அரை மணி நேரம் வரை அவ்வாறு வைத்திருக்கலாம்.
மாரடைப்பால் நின்று விடும் சில இருதயங்கள், அதிக அளவில் மின் அதிர்வு கொடுத்து மீண்டும் இயங்க வைத்திருக்கிறார்கள்.
மேலும், தற்போதைய மருத்துவ உலகில், விந்தணு, கருமுட்டை, embryo என்ற ஆரம்பநிலை கரு போன்றவை உறைநிலையில் வைக்கப்பட்டு, பின் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தப் படுகின்றன.
ஆகையால், பிற்காலத்தில் இதுவும் நடக்கலாம் என்று நம்புபவர்களும் உண்டு. பிறப்பும், இறப்பும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள். அவற்றை மனிதன் வெற்றிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அப்படியே செய்தாலும், முழுமையாக இராது. சில குறைபாடுகளோடுதான் சாத்தியம் என்போரும் உண்டு.
தொழில்நுட்ப ரீதியாக முடிந்தாலும், உளவியல் ரீதியாக இத்திட்டம் மன நலப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இறந்த ஒருவரை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து உயிர்ப்பிக்கும்போது, அக்கால கட்டத்தோடு அவரால் பொருந்திப் போக முடியாது என்றும், தனக்குத் தெரிந்த யாருமே இல்லாத உலகில் உயிர்வாழ்வது மிகுந்த மன நெருக்கடியையே அவருக்குத் தரும்; ஆகவே இத்திட்டம் தொடரக்கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
மனிதனுக்கு இறந்தவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், இறந்த உடல் தேவை. அதற்கான தொழில்நுட்பங்கள் தேவை. எல்லாம் சரியாக இருந்தாலும், முழுமையாக வெற்றியடைவார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஆனால், இறந்த உடல் முழுதும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும், எரிந்து போனாலும், எதுவுமே இல்லாமல் மனிதர்களை உயிர்ப்பிப்பவன் இறைவன் ஒருவனே!! ஆனால், மனிதர்களின் அறிவை நம்புபவர்களால், இறைவனின் ஆற்றலை நம்பமுடியாது போகிறது!!
56:47. மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
read more "மறுவாழ்வு"