Monday, April 17, 2017

வலி நிவாரணி

டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

வலி நிவாரணி - ஆஸ்பிரின் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு (இரண்டாமிடம் பெற்ற கட்டுரை) - எழுதியவர்.Nadhira Deen


நம் வாழ்வின் வழியெங்கும் வரும் விதம், விதமான வலிகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டியுள்ளது.

வலி என்பது மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல், இறப்பு வரை ஏதாவது ஒரு வகையில் கூடவே பயணம் செய்யும் அசவுகரியம். அடுக்கடுக்காய் தொல்லை தரும் அவஸ்தை. ஆளையே முடக்கி போடும் வல்லமை பெற்றது.

நம்மை அணு , அணுவாய் சித்திரவதை செய்யும் வலி முதல், ஆட்கொல்லி நோய்கள் வரை அல்லாஹ் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை.

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை...என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி பாகம் 7…அத்தியாயம் 71: ஹதீஸ் எண் 582)

கற்கால மனிதர்கள் வலி என்பது கடவுளின் தண்டனை என்றே நம்பினர். எனவே கடவுளுக்கு விலங்குகளை பலியிடுவதன் மூலமும், வேண்டுதல்கள் மற்றும் ஒலி எழுப்பும் கருவிகள் மூலம் கெட்ட ஆவியை பயமுறுத்தி வலியை குணமாக்க முயற்சித்தனர். தென் அமெரிக்கர்கள் முரட்டுத்தனமான trepanation எனப்படும் தலையில் துளையிடும் முறையை வலி போக்க பயன்படுத்தியுள்ளனர்.

அதன் பின் வந்த பண்டைய காலங்களில் வலியிலிருந்து தப்பிக்கவும், நிவாரணம் பெறவும் பல வகையான மருத்துவ முறைகள் உபயோகிப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று நபி ஸல் அவர்கள் செய்த, பரிந்துரைத்த குருதி உறிஞ்சியெடுத்தல் எனப்பட்ட ஹிஜாமா. இம்முறையை சீனர்கள், எகிப்தியர்கள் மற்றும் ரோமர்களும் கடைபிடித்துள்ளனர்.

16-ஆம் நூற்றாண்டில் ஓபியம், மார்ஃபைன் போன்ற போதை மருந்துகளை வலி நிவாரணியாக பயன்படுத்தும் வழக்கமிருந்தது. இவை சிறந்த பயனைத் தந்தாலும் அந்த போதைக்கு மக்களை அடிமையாக்கியது.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வலி மருத்துவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் ஹிப்போக்ரடீஸ். வில்லோ மரத்தின் மரப் பட்டையில் சிறு பகுதியை வாயில் வைத்து சூயிங்கம் போல மென்றால் வலி குணமானதை கண்டறிந்தார். அவ்வாறு மெல்லும்போது பிரசவ வலி கூட குறைந்ததாம். வில்லோ மரத்தின் பட்டைகளில் சாலிசைலிக் அமிலம் உள்ளது என்பதையும், அது வலியையும் , காய்ச்சலையும் போக்க உதவுகிறது என்பதையும் அப்போது விஞ்ஞானிகள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஆனால் சோதனையாக இச்சாறு பக்க விளைவை ஏற்படுத்தியது . உபயோகித்தவர்களுக்கு தலைவலி போய் வயிற்றுவலி வந்தது. 1899 -ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சார்லஸ் ஜெர்ஹார்ட் ( Charless Gerhardt ) என்பவர் இந்த சாலிசைக்ளிக் அமிலத்தோடு அசிடைல் குளோரைடு என்னும் ரசாயனத்தை சேர்த்தால் பக்க விளைவு வருவதை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். ஆனால் இதை தயாரிக்க அதிகமான நாட்கள் பிடித்ததால் அந்த முயற்சியை கை விட்டார்.


அதே பாதையில் இன்னொரு விஞ்ஞானியும் ஆராய்ச்சி செய்தார். அவர் பேயர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஹாஃப் மேன். இவர் 1868 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஜெர்மானிய ஊரில் பிறந்தவர்.

தொழிலதிபரான இவரின் தந்தை மூட்டு வலியால் வேதனைப்படுவதை பார்க்க இயலாமலேயே இவர் இவ்வாராய்ச்சியில் தீவிரமானார்..மூட்டுவலிக்கு சாலிசலைட் மருந்தை தொடர்ந்து உட்கொண்ட இவரின் தந்தை கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சாலிசைக்ளிக் அமிலத்தின் அமிலத்தன்மையை குறைக்க `அசிட்டைல்' என்ற ரசாயனப் பொருளை கலந்து , அந்த மாத்திரையின் தீமையை குறைத்தார்.

இதைத் தொடர்ந்து எளிதாக தயாரிக்க முடிந்த அசிட்டைல்சாலிசைக்ளிக் அமிலம் உதயமானது. வருடக்கணக்காக வலியில் சிரமப்பட்ட ஹாஃப்மேனின் தந்தைக்கு இம் மருந்து சிறந்த நிவாரணத்தை அளித்தது.

ஆஸ்பிரின் என்ற பெயரில் இம் மருந்து உலகப் புகழ் பெற்றது. 1899- ல் ஜூலையில் பேயர் நிறுவனம் இதை பவுடராக சந்தைப்படுத்தியது. பின்பு 1914 ஆம் ஆண்டிலிருந்து மாத்திரைகளாகவும் கிடைக்க ஆரம்பித்தது.

இம் மாத்திரையின் வலி குறைக்கும் அறிவியல் பின்னணி, பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜான் வேன் என்பவரால் 1971- ல் கண்டுபிடிக்கப்பட்டது.

மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம் என்று 1940 களின் இறுதியில், லாரன்ஸ் க்ரேவன் ( Laurence Craven ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வலி நிவாரணியாக பயன்படுவதை விட, இதய நோய்களை தடுக்கும் மருந்தாகவே ஆஸ்பிரின் அதிகமாக பயன்படுகிறது.

இதய மருத்துவர் , உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும் அபாயத்திலிருந்த என் அம்மாவுக்கு பரிந்துரைத்து ,அவர்கள் பல வருடங்கள் ஆஸ்பிரின் எடுத்து கொண்டு ஆரோக்கியமாய் வாழ்ந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

விண்வெளி வீரர்களின் பெட்டியிலும் இடம் பெற்றிருந்த பெருமை ஆஸ்பிரினுக்குள்ளது.

அத்துடன் அல்சைமர் நோய் , குழந்தையின்மை, புற்றுநோய், திடீரென பார்வை பறி போகும் நிலை போன்றவற்றிற்கெல்லாம் ஆஸ்பிரின் பலனளிக்கிறது..இது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பிரினை சாப்பிடுமுன் கவனிக்க வேண்டியவை :
ஹீமோஃபீலியா, வயிறு சம்பந்தமான உள்ளுறுப்புகளில் இரத்தம் கசியும் பிரச்சனை உள்ளவர்கள், (நான் ஸ்டீராய்டல் ஆன்டி இன்ஃப்ளம்மேட்டரி ட்ரக்) NSAID வலி நிவாரணி மாத்திரைகளுக்கு அலர்ஜியாகும் உடல்நிலை உடையவர்கள், மற்றும் ஃப்ளு, சின்னம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட இள வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்க கூடாது.

மேலும் Reye's syndrome என்ற மோசமான பாதிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் தன்மையுள்ளதால் கவனத்துடன் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் ஆஸ்பிரின் எடுப்பது நல்லதல்ல.
இன்றும் உலகில் அதிகமாக விற்பனையாகும் மாத்திரைகளில் ஒன்றாக ஆஸ்பிரின் உள்ளது.

எழுதியவர் சகோதரி. Nadhira Deen


ஆதார சுட்டிகள் :

1 comment: