Thursday, March 23, 2017

வரதட்சணையும் பெண்களும்


கோபிநாத் அந்த பெண்களை நோக்கி உங்களுக்கு உரைக்கவே இல்லயா..வரதட்சணை க்கு எதிராக ஒரு போரை நடத்திய சமுதாயத்தில் இந்த எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது என்று கேட்கிறார்..

ஆக்சுவலி அவர் அந்த கேள்வியை தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்..

அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்று நினைக்கும் பெண்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் அமர்த்தி என்னமோ எல்லா பெண்களுமே இப்படித்தான் போல என்ற மனநிலையை பிம்பப்படுத்தியுள்ள நீயா நானாவைப் பார்த்துதான் இந்த கேள்வி கேட்கப்பட வேண்டும்.

இதை தொடர்ந்து சகோதரி ஹுசைனம்மா தன்  பேஸ்புக் பக்கத்தில் பதிந்த கருத்து கவனத்தை ஈர்த்தது. அதை அப்படியே கீழே தருகிறேன் :
நான் கல்லூரி படிக்கும்போது, அத்தையின் கல்லூரித் தோழியின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். “கிராண்டாக”வே நடந்தது திருமணம். அத்தையுடன் மற்ற தோழிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் பேச்சிடையே அடிபட்ட ஒரு வார்த்தை என் கவனத்தை ஈர்த்தது - “விடுதலைப் பத்திரம்”!! அப்போது கேட்க முடியாததால், பின்னர் கல்லூரி தோழிகளிடம் கேட்டபோது விளக்கம் கிடைத்தது. திருமணமாகிச் செல்லும் பெண் - தன் தந்தை மற்றும் சகோதரர்களின் சொத்துக்களின் மீது தனக்கு எந்தப் பாத்தியதையும் கிடையாது என எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்வதே “விடுதலைப் பத்திரம்”!! அவளுக்குச் சேர வேண்டியதை எல்லாம் திருமணத்தின்போதே கணக்குப் பார்த்தோ, பார்க்காமலோ பிரித்துக் கொடுத்துவிட்டு, அதன் பிறகு மீதி இருக்கும் சொத்துக்களை அவள் எவ்விதத்திலும் உரிமை கோராமல் இருக்க உதவும் பாதுகாப்பு கவசம் இந்த ’விடுதலைப் பத்திரம்”. இது எந்தெந்த சமூகங்களில் வழக்கம் என்பதெல்லாம் தெரியவில்லை. பொதுவாக இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களில் இது செல்லுபடியாகும் என்று நினக்கிறேன். 
என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண், வேறு சாதியில் ஒருவரை காதலித்ததால், அவரைத் திருமணம் செய்வதற்கான நிபந்தனையாக இப்பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
இஸ்லாமிய சமூகங்களில் இரத்த பந்தங்களை இம்மாதிரி விடுதலைப் பத்திரங்களினால் இரத்து செய்து விட முடியாது என்பதால் முஸ்லிம்களிடையே அது பரவவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும், அதற்கும் (இபிகோ படி) வேறு வழிமுறைகள் கண்டுபிடித்திருப்பார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது, அப்பெண்கள் பேசியதன் பின்ணணி புரிந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருதரப்பிலும் தவறுகள் உள்ளன.
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு, திருமணங்கள் மிக மிக மிக எளிமையாக்கப்பட வேண்டும். சீர்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவைகளையும் செய்துவிட்டு, சொத்தும் கொடுக்க வேண்டும் என்பதால்தான் பிரச்னையே வருகிறது. பெற்றோர் எல்லா பிள்ளைகளுக்கும் - ஆண், பெண் பேதமின்றி - அன்பை மட்டுமல்ல, செய்யும் செலவுகளையும் சமமாகச் செய்ய வேண்டும்!! 
தன் பிள்ளைகளில் தனக்குப் பிடித்த ஒரு மகனுக்கு மட்டும் ஒரு ஒட்டகம் பரிசளிக்கப் போவதாகச் சொன்ன ஒரு தந்தையிடம், நபியவர்கள், “என்னே!! அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர்??!! உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்!! #உம்_மக்கள்_அனைவரும்_உம்மிடம்_ஒரேவிதமாக_பாசமும்_மரியாதையும்_செலுத்த_வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா?” என்று கோபத்துடன் வினா எழுப்பினார்கள். 

இதே பதிவின் கீழ் சகோதரி ஆமினா முஹம்மத் தன் கருத்தை பதிவிட்டிருந்தார் இப்படியாக,
சீர் , நகை, நட்டு, வரதட்சணை , மறுவீடு, வளகாப்பு , புள்ள பெக்க சீரு, , பிரசவ செலவு, அந்த புள்ளைக்கு காது குத்து சீர், சுன்னத் க்கு தாய்மாமன் சீர், பொண்ணு வயசுக்கு வந்தா அதுக்கும் சீரு, அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆனா கூட தாய்மாமன் சீர் னு - மொத்தமா மொட்டையடிக்காம இருந்தா சொத்தை விட்டு தர சகோதரனுக்கோ, தந்தைக்கோ கொஞ்சமாச்சும் மனசாட்சி வரும்! 
காலம் முழுக்க தன் சகோதரி க்கு அவளின் புகுந்த வீட்டில் பெருமையாக பேசப்பட சகோதரன் எப்போதும் செலவு செய்ய வேண்டியவனாக இருக்கிறான். 
இம்புட்டும் செஞ்சு கொடுத்துட்டு சொத்தும் வேணும்னு ஒரு பெண் எதிர்பார்ப்பது ரொம்ப அபத்தம் தானே! அதே மனநிலை தான் பெண்ணுக்கும் இருக்கும்... நமக்கு இதெல்லாம் செய்றதோட பெத்தவங்க கடமை முடிச்சுக்குவாங்க, அதுனால நமக்கு சேரவேண்டியதை நாம் தான் கரெக்ட்டா புடுங்கணும்னு அவளின் சுயநலம் வேலை செய்யத்தூண்டிவிடும் ! 
இருதரப்பின் பரஸ்பர புரிதல், மனசாட்சி இப்போதைக்கு ஒரு தீர்வு... சமூகமாற்றம் நிரந்தர தீர்வு !

நிகழ்ச்சிக்கு வருவோம்..(நிஜமாகவே இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் அந்த பெண்களின் சொந்த கருத்தாக இருந்தால்.. 

வெறுமனே பெண்களை குறை சொல்லக்கூடாது என்பதால் அலுவலகத்தில் திருமணம் ஆகாத சில பெண்களிடம் இந்த கேள்வியைக் கேட்டபோது அனைவருமே அப்படி எந்த எதிர்பார்ப்பும் தங்களுக்கு இல்லை என்றே ஒருமித்து கூறினர்.

இதுதான் உண்மை. நிதர்சனம்..99.99 சதவீதம் பெண்கள் தங்கள் பெற்றோர்கள் சிரமப்படுவதை விரும்புவதில்லை. மீதமுள்ள .01% பெண்களை 'பொறுக்கி' வந்து நிகழ்ச்சிக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர்.

அதிலும் பேசிய பல பெண்கள் தங்கள் பெற்றோர்கள் கடனாளி ஆனாலும் பரவாயில்லை, சகோதரன் கஷ்டப்பட்டாலும் கவலையில்லை., சாகுற வரைக்கும் பென்சன் வரும்ல... உயிரோட இருக்கப்பவே எழுதிக் குடுத்துடணும்.. கணவனை என்னோட என் வீட்ல வச்சுக்குக்குவேன் என்று சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகின்றது. உண்மையிலேயே அப்பெண்களின் மனநிலை அதுதான் என்றால் அது பிறழ்ந்த மனநிலைதான் என்பதில் சந்தேகமே இல்லை..

கல்வி பெற்ற திமிரில் பேசுகின்றார்கள் என்றால் சிறப்பு விருந்தினர் ராஜி சொல்லியது போல, கல்வி எந்தவித மாற்றத்தையும் இன்றைய இளைஞர்கள் மனதில் ஏற்படுத்தவில்லை..மேலும் மேலும் பண மோகம் பிடித்த பிசாசுகளாகவே உருமாற்றியுள்ளன..

இங்கே ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். வரதட்சணையை ஒழித்து மஹர் எனும் மணக்கொடை மூலம் தான் பெற்ற உரிமையை ஒரு முஸ்லிம் பெண் தனது அறிவைப் பெருக்கும் ஐம்பது புத்தகங்களை வாங்கித் தருமாறு மணமகனிடம் வைத்த கோரிக்கை மூலம் புதுமை புகுத்தினார். இதுதான் உண்மையான கல்வி மூலம் பெற்ற மாற்றமாக இருக்கமுடியும்..

தஞ்சாவூர் தாய் சொன்னது போல தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல், தான், எனது என்ற சிந்தனை மட்டுமே மேலோங்கியுள்ள இந்த பெண்கள் மூலம் உருவாகும் எதிர்கால சமுதாயத்தின் நிலையை மிகவும் வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

அடுத்தவர் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் இத்தகைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது கணவன் எதும் ப்ரச்னையில் சிக்கி இந்த சுகபோகத்தை இழக்க நேரிட்டால் அந்த கணவனது நிலை மிகவும் பரிதாபம்.. தற்கொலை அல்லது விவாகரத்து இதுவே அவர்களது முன் இருக்கும் வாய்ப்புகள் என்றால் அது மிகையல்ல..

தங்களது பெற்றோர்களையே இப்படி சிரமப்படுத்த நினைக்கும் இத்தகைய பெண்கள் நாளை மாமியாராக மாறும்போது நிலை என்னாவது..?

இறைவா இந்த பெண்களுக்கும் பெண் குழந்தைகளையே பிறக்கச் செய்வாயாக.. இந்த நிகழ்ச்சியை அந்த குழந்தைகள் பார்க்கச் செய்வாயாக என்று உதடுகள் என்னையறியாமல் பிரார்த்திப்பது எனக்கு மட்டும்தானா..?

நடிப்பாகவே இருந்தாலும் என்னால் இவ்வளவுதான் சார் பண்ண முடியும் என்று கண்ணீருடன் பேசிய அந்தத் தாயின் வார்த்தைகள் இன்றைய பெரும்பான்மை நடுத்தர குடும்பத்து பெற்றோர்களின் நிலையை எடுத்தியம்புகின்றது..

நான் கொடுத்த கார்ல என் பொண்ணு வர்றான்னு சொல்றதுல எனக்கு எந்த பெருமையும் இல்ல..

இவ்ளோ கேக்குறறீங்கள்ல, அதுக்கு ஏத்த மாதிரி எதும் வேல பாக்குறீங்களா.. போத்திக்கிட்டு தூங்குறாங்க சார்.. நச்..நாக்கைப் புடுங்கிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது புயலாக மாறிவிட்டுள்ள தென்றல்களையும் படிதாண்டி வந்துவிட்ட பாரதியின் புதுமைப் பெண்களையும் பெற்றுவிட்ட சமுகம் பாரதிதாசன் வர்ணித்த குடும்ப விளக்குகளை இழந்துவிட்டோமோ என்ற அச்சம் ஏற்படாமல் இல்லை.

என்னதான் மகன்கள் தாம் தம் எதிர்காலம் என்ற நம்பிக்கை பெற்றோரிடம் இருந்தாலும், கடைசிகாலத்தில் பாசத்தை எதிர்பார்ப்பது மகள்களிடமிருந்து தான். பெற்றவர்களுக்காக உங்கள் உள்ளங்களை அவர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் கொஞ்சமேனும் விசாலமாக்கிக்கொள்ளுங்கள் மகள்களே!

இறுதியாக ஒண்ணே ஒண்ணு..

இந்த பாழாய்ப் போன வரதட்சணையால் முப்பது வயதைக் கடந்தும் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பெற்றோர்களுடனே வாழும் ஆயிரக்கணக்கான முதிர்கன்னிகளின் பாதங்களை இந்த பெண்கள் கழுவினால் இவர்களின் மனநிலை சுத்தமாகலாம்..

ஆக்கம் ,
ஷாரா ஹசன் ,
சென்னை. 
read more "வரதட்சணையும் பெண்களும்"