Monday, October 30, 2017

பொறுப்பை உணர்வோம்!!!

எல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
சமீபத்தில் எல்லோராலும் பேசப்படுகின்ற, முகநூலில் விவாத தலைப்பாக பரப்பப்படுகின்ற விஷயம் கல்லாற்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ருக்‌ஷானாவை பற்றியேயாகும்.
உண்மையான முழு விவரம் தெரியுமுன்னே சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அது அவர் தானா என்று அறியும் முன்னமே பரப்பப்பட்டு வருகிறது. உயிரற்று போன அந்த பெண்ணை சமூக வலைத்தளங்களில் உலாவ விடுகின்றனர். மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் கொலை செய்கின்றனர்.
எல்லா விஷயங்களை போலவும், எப்போதும் போல இந்த விஷயமும் புகைப்படங்களுடன் "Hi Friends" என்னும் ஆடியோவுடன் பலருடைய கைப்பேசிகளில் பறந்து வருகிறது.
இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அவர்கள் இருவரும் எப்படி காதல் வயப்பட்டார்கள், எந்த பிரச்சனையால் அவள் கொல்லப்பட்டாள் என்பது அல்ல. அது முடிந்து போன ஒன்று.
அதைப்பற்றி பேசி பேசி அந்த பெண்ணையும், அவள் பெற்றோரையும் குறைக் கூறுவதால் அவள் திரும்பி வரப் போவதும் இல்லை, நடந்த சம்பவம் இல்லை என ஆகப்போவதும் இல்லை. இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலம் நமக்கு ஒவ்வொரு காலக் கட்டத்திலும், ஒவ்வொரு சம்பவங்களின் மூலமும் பல படிப்பினைகளை அள்ளிக் கொடுக்கிறது..
அந்த படிப்பினையில் இருந்து நம்மை நாம் செம்மைப்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம். இது போன்ற சம்பவங்கள் நமக்கு புதிதல்ல..
அதை மேலும் மேலும் வளர்த்து கொண்டே போவதை விட நாளை நம் வீட்டிலோ, நம்மைச் சுற்றி உள்ளவர்கள் வீட்டிலோ இது போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி விடாமல் தடுக்க என்னென்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்க் கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
தற்காலத்தில் பெண் /ஆண் பிள்ளைகள் 12/13 வயதில் பருவ நிலையை அடைந்ததும் உண்டாகும் உடல் நிலை மாற்றங்களால் எதிர் பாலினங்களின் மீது அதிகமாக ஈர்ப்பு உண்டாகிறது..
இந்த மாற்றங்களும், ஈர்ப்பும் புது விதமான எதிர்பாலின உறவை தேடுகிறது. அது அவர்கள் செய்யும் தவறாக கருதாமல் அவர்களின் உடலில் ஏற்படக் கூடிய ஹார்மோன் மாற்றங்களினால் வரக் கூடியவை என்பதை பெற்றோர் புரிந்துக் கொண்டு, அந்த சூழலில் பிள்ளைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்து வைத்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை. 

ஹார்மோன் மாற்றங்களினால் உடலளவிலும் மனதளவிலும் குழம்பி இருக்கும் பிள்ளைகளுக்கு,  குடும்பத்தில் உண்டாகும் சிறு பிரச்சினைகள் கூட அவர்களுக்கு பெரிதாய் தோன்றும். நீங்கள் எதார்த்தமாக கூறும் கடும் வார்த்தைகள் கூட, உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும், இதனால் வீட்டில் உள்ள உறவுகளை விடுத்து வெளியில் அன்பையும், பாசத்தையும், பிணைப்பையும் தேட ஆரம்பிக்கும்.

இந்நிலையில் உடன் படிப்பவர்களோ, அண்டை வீட்டிலோ ஒரு எதிர்பாலினர் தமக்கு ஆறுதலாக உள்ள பட்சத்தில் அவருடன் உறவை அதிகப்படுத்த தோன்றும். அந்த தருணத்தில் ஏற்படக்கூடிய நட்பு காதலாக மாறி, பிறகு தகாத உறவைத் தொட்டு இவ்வாறு கொலை வரை சென்றடைகிறது. சாதரணமாக ஆரம்பிக்கும் நட்பையே கண்டிப்பு என்ற பெயரில் நாம் இடப்படும் சிறு சிறு கட்டுப்பாடுகளும், வீட்டில் உள்ள உறவுகளை நிரந்தரமாக வெறுக்கும் நிலையும் உண்டாக்குகிறது, இதனால் வெளி ஆட்களிடத்தில்  உறவு மேலோங்குகிறது. ஒரு சமயத்தில் அந்த உறவும் கைவிட்டால் வேறொருவரை தேட தோன்றும். இதனால் தங்கள் நன்னடத்தை பாதிக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறியாத அளவில் அவர்களின் உடல் மற்றும் மனதில் ஏற்ப்படும் பருவ வயதின்  உளவியல் மாற்றத்தால் பாதிப்படைகின்றனர்.

இவ்வாறே காலம் செல்ல செல்ல "Maturity" என்னும் பருவ நிலையை அடையும் போது தான், தான் செய்தது தவறு என்பதை உணர்வார்கள். அதை உணர்வதற்குள், தங்களின் கற்பையே இழந்து விடும் நிலை கூட சில பேருக்கு நிகழ்ந்திருக்கும் (அல்லாஹ் பாதுகாப்பானாக). சுற்றங்களால் இழிவுக்குள்ளாக்கப்பட்டு பாதிப்படையும் போது மீண்டும் குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பையும் ஆதரவையும் நாடி வருவார்கள். அவர்களின் நடத்தையின் காரணமாக வெறுப்புக்குள்ளாக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்களை ஏற்க மறுத்து கை விடுவார்கள். 

எதுவும் இல்லை என்ற நிலையில் அவர்களால் எடுக்கப்படுகின்ற முடிவு தற்கொலை அல்லது தான் தேர்ந்தெடுத்த வாழ்வு சரியில்லை என்றறிந்தும் அந்த வாழ்வுக்குள் செல்வது. 

சில பேர் மன தைரியத்துடன் தான் தேர்ந்தெடுத்த நபர் சரியானவர் இல்லை என்று எதிர் கொள்ள நேரிடும் போது தான், ருக்‌ஷானாவிற்கு ஏற்ப்பட்டது போன்ற கொடூர முடிவோ அல்லது தன்னை எதிர் கொண்டு ஒதுக்கிய பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தோடு முகத்தை சிதைப்பது, தன் நண்பர்களின் ஆதரவோடு கூட்டாக கற்பழித்து கொலை செய்வது போன்ற பெண்களுக்கு எதிரான சமூக சீர்கேடுகள் அரங்கேறுகிறது..இதற்கு தீர்வாக நாம் முதலில் செல்ல வேண்டியது பெற்றோர்களிடம் தான்..
  •  பெற்றோர்களின் சண்டைகள் பிள்ளைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தைகள் மேல் பெற்றோரை விட அதிக பாசமுடையவர், அக்கறையுடையவர் யாரும் இல்லை என அவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிய வைக்க வேண்டும்..
  • கண்காணிக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மீது கொள்ளும் சந்தேகப்பார்வையே அவர்களை பல தீய காரியங்களில் தள்ளக் கூடும்.
  • அவர்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களுக்கு அழகிய முறையில் பதில் கொடுக்க வேண்டும்.  நாம் வெட்கத்தோடு பதிலளிக்க மறுத்தால் அவர்கள் அதனை அறிந்துக் கொள்ள வேறு வழியை, வேறு நபர்களை தேடுவார்கள். பல நேரங்களில் அது தவறாக முடிய வாய்ப்புள்ளது.
  • பெற்றோர்கள் பிள்ளைகளுடன் தோழர்களாக இருப்பது சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் சாத்தியமே. அப்படி தோழர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏதேனும் உணர்வுகளை, அவர்களுக்கு உண்டான மாற்றங்களை பகிர்ந்து கொண்டால் அதை கண்டிக்க கூடாது. பிள்ளைகளின் மனநிலை அறிந்து மென்மையுடன் கையாள வேண்டும்.
  • அடுத்தது, மார்க்க ரீதியான தீர்வை எடுத்துக் கொண்டால் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே மார்க்க விஷயங்கள் போதித்து, எந்தெந்த சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மார்க்கத்தின் தீர்வு மூலம் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்
  • மஹ்ரமானவர்கள் யார், மஹ்ரமற்றவர்கள் யார், மஹ்ரமற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை பருவ வயதை அடையும் முன்னமே  சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் ஒருவித வெட்க உணர்வுடன் வளரும் போது அந்நிய ஆண்களுடன் சகஜமாக பழகும் சூழல் அடிப்பட்டு போகும்.
  • ஒழுக்க மாண்புகளைப் பற்றியும், ஹிஜாபுடைய முக்கியத்துவத்தை பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • அவர்களை சுற்றி இஸ்லாமிய சூழலை வகுத்துக் கொடுக்க வேண்டும்.
  • கட்டுகோப்பான வளர்ப்பிலும் தவறாக செல்லக் கூடிய அறிகுறிகள் தென்பட்டால், மனம் உடைந்து கடினமான சூழலை அவர்களுக்கு உருவாக்காமல், உடனடியாக சரியான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் மீதோ, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறியாது தவறிழைத்த பிள்ளைகள் மீதோ குறைக் கூறுவதால் பயனில்லை.

வளரும் பிள்ளைகள் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்ப்பதும் சாத்தியமில்லை, அவ்வாறு வளர்ப்பதால் மட்டும் தவறுகள் செய்யாமல் தடுத்து விடவும் முடியாது. மேலும் அவர்கள் செல்லும் பள்ளி, கல்லூரிகளில் நாம் எதிர்பார்க்கும் சூழலும், நட்பும் தான் அமையும் என்று எதிபார்ப்பதும் தவறு. அதற்கு நாம் அடிப்படையை சரியாக அமைத்துக் கொடுத்தலே சிறந்ததது.

அடிப்படையை சரியாக அமைத்து விட்டால் கண்டம் விட்டு கண்டம் சென்றாலும், நம்மை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்ச உணர்வு அவர்களை எவ்வித தவறிலும் ஈடுபடச் செய்யாது. பாதுகாக்கும்.

உன்னுடைய உற்ற தோழி, தோழர் யார் என்ற கேள்விக்கு பிள்ளைகளின் முதல் பதில் “என் அம்மா, அப்பா” என்று காலாகாலத்திற்கும் சொல்லும் அளவில், அவர்களுடன் அனைத்திலும் இணைந்து நடத்தலே உண்மையான வெற்றியாகும் பெற்றோர்களுக்கு.

இந்த புரிதல்கள் எல்லாம் தங்களுக்கு தாரளாமாக இருப்பது போல், சமூக வலைதள போராளிகள், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற சப்பைக் கட்டோடு தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத பெண்ணின் புகைப்படங்களை பரப்பி, அவர்களின் குற்றங்களை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டோரின் மனப்புண்ணை மீண்டும் மீண்டும் குத்தி ரணமாக்காமல் இருப்போமாக, சிந்திப்போமாக!!!

உங்கள் சகோதரி
ரிஃபானா காதர்


read more "பொறுப்பை உணர்வோம்!!!"

Wednesday, June 07, 2017

தாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு

     
     தமிழக அரசின்  தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில்.  சட்டசபையின் அத்தனை வெள்ளை வேட்டி ஆட்களின் மத்தியிலும் தனித்து தெரிகிறார். அதுவே என் கண்ணையும் கவர அவரை பற்றி  தெரிந்து கொள்ள  ஆசைப்பட்டேன்.

     அவரை சந்திப்பதற்கான நாள் குறித்து கொடுக்கப்பட்ட பின், 'தலைமைச் செயலகம்' வந்து சந்திக்கவும் என  சொல்லியிருந்தார். அத்தனை பரபரப்புக்கு மத்தியில், தலைமைச் செயலகத்தில் அவர் அலுவலகத்தில், கேள்விகளை எப்படி விரிவாக முன் வைக்க முடியும் என்ற கேள்வியுடனே   சென்றோம். எனது தயக்கத்தை முதல் பார்வையிலேயே தகர்த்தெறிந்து நீண்ட நாள் பழகியவர் போல கனிவுடன் பேசினார்.   

     "என் வாய்ஸ நீங்க ரெக்கார்ட் பண்ணும் போது நான் தப்பா பேசினா உடனே கட் பண்ணிடுங்க, ஏன்னா என் தமிழ் அப்படி"...- என செல்லக் கண்டிப்புடன் தொடங்கிய போது அந்த இடமே  இறுக்கம் குறைந்து கலகலப்பானது. அதன் பின் அவரிடம் பேசுவதில்  தோழமை குணமே வெளிப்பட்டது.  உரையாடலை துவக்கினேன். 
அமைச்சராக நிலோபர் கபீல் யார் என  எல்லோரும் அறிவார்கள். எனினும் குடும்ப பின்னணியுடன் இணைந்த அறிமுகம் தாருங்களேன்...

     ஓஹ்... தாராளமாக! என் பேரு  உங்களுக்கு தெரியும். மூன்று குழந்தைகளுக்கு தாய் நான். எல்லாருக்கும் திருமணம்  ஆகிவிட்டது. என் மூத்த மகள் பிஇ (கம்யூட்டர் இஞ்சினியர்), யூகே-ல வசிக்கிறார்.  இரண்டாவது மகன். MBBS, MD (Emergency மெடிசின்) படித்திருக்கிறார். சொந்தமாக multi speciality hospital ஒன்று நிறுவி அதனை நிர்வகித்து வருகிறார். என்  மூன்றாவது மகள்  Msc, MBA முடிச்சிருக்காங்க. இல்லத்தரசி.

     நான் பிறந்தது வாணியம்பாடி. படிச்சதெல்லாம் சென்னையில். Ewart Matriculation ஸ்கூல்ல தான் படிச்சேன். நான் தான் ஃபர்ஸ்ட் பேட்ச் +2 எக்சாம் எழுதினது. அதுக்கப்பறம் கல்யாணம் ஆகிடுச்சு. 

என்ன சொல்றீங்க.. +2 உடன் கல்யாணம் ஆகிடுச்சா? அப்பறம் குழந்தைகள்? 

     ஆமாம்.. +2 முடித்தவுடன் கல்யாணம் ஆகிடுச்சு. என் மூணு குழந்தைகளையும் பெற்றெடுத்ததுக்கு அப்பறம், எனக்கு கல்யாணமாகி 12 வருஷத்துக்கு பின்னாடிதான்  B.U.M.S படிச்சேன். அதன் பிறகு KMC ல பயிற்சியை முடித்தேன். அதனைத் தொடர்ந்து BEMS கரஸ்ல படிச்சேன். அப்புறம் காலேஜுக்கே போய் LLB முடிச்சேன்.

     அம்மா வீடு சென்னையில் இருந்ததால்  எனக்கு எளிதாக இருந்தது. அம்மா வீட்டில் தங்கி படிச்சேன். என் கணவர் ரொம்ப என்கரேஜ் செய்ததால்  எல்லாம் சாத்தியமானது. 

அரசியல்ல எப்படி ?

     1991ல் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தேன். என்றாலும்  படிக்க போனதுனால கட்சியில் எனக்கு டச் இல்லை. படிப்பு முடிஞ்சு அதன் பிறகு நான் ஊருக்கு வந்தப்ப லோக்கல் எலக்‌ஷன் நடந்தது. அப்போது கவர்மென்ட் அறிவித்த படி பெண்கள் போட்டியிட வேண்டும். அப்போது ஊர் மக்களும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் என்னை அணுகி  'படிச்சவங்களா இருக்கீங்க, நீங்க நில்லுங்களேன்'ன்னாங்க. பிறகு ஜமாத் ஆதரவு தந்தது. எந்த மறுயோசனையும் இல்லாமல் சரின்னுட்டேன். முதல்ல நான் ஜமாத் சார்பிலான போட்டியாளராக தான் நின்னேன். ஏற்கனவே அதிமுக உறுப்பினராக இருந்தாலும் எந்த பணியும் செய்யாத ஒருவரை எப்படி  போட்டியாளராக நியமிப்பாங்க? மாட்டாங்க இல்லையா. நான் ஜமாத் கேன்டிடேட்டாகவே நின்னேன்.

பொதுவாகவே பெண்கள் முன்னேற்றத்தில் ஜமாத்களுக்கு அக்கறையில்லை என்ற பேச்சு  எல்லாரிடத்திலும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் உங்கள் விஷயத்தில் அப்படி இல்லையே?!

     ஆமாம். 2001 ல  முதன் முதலாக சேர்மன் எலெக்சன்ல நின்னேன். அப்போது என்னுடைய  சின்னம் டார்ச் லைட். அதே சமயம் இன்னொரு போட்டியாளராக இருந்தவர் சாவித்ரி என்ற பெண்மணி. அவங்களுடைய சின்னம் இரட்டை இலை. வாக்குச்சீட்டு எல்லாமே ப்ரின்ட் ஆகிடுச்சு. அப்படி இருந்தும் கூட  அப்போது அங்கே அதிமுக இன்சார்ஜ்ஜாக இருந்த மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களிடம், ஜமாத்தார்கள்  என் சார்பாக ஆதரவு தரும்படி கேட்டிருந்தார்கள்.

     மாண்புமிகு பாண்டுரங்கன் அப்போது அமைச்சராக இருந்தார். அனைவரும் அம்மாவின் கவனத்திற்கு இவ்விஷயத்தை கொண்டு சென்றார்கள். அம்மாவும்  அதனை ஏற்று ஜெயா டிவியில் 'நிலோபர் கபில்-க்கு டார்ச் லைட் ல  ஓட்டு போடுங்க'ன்னு அறிவிச்சது என் வாழ்வில் டர்னிங் பாய்ன்ட்ன்னு தான் சொல்லணும். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் நின்னும் கூட, அம்மா எனக்கு வாக்களிக்கும்படி தெரிவித்தார்கள். சொல்லப்போனால் வாணியம்பாடி சரித்திரத்தில் அது முக்கியமான விஷயமும் கூட.  சுயேட்சையாக அம்மாவின் அதிமுக ஆதரவில் நின்ற ஒருவர் வெற்றி பெறுவது அது முதல் முறையும்கூட...135 ஆண்டுகால வாணியம்பாடி நகராட்சி அரசியல் வரலாற்றில் அதிமுக-வின் முதல் சேர்மன் நான்தான்...11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்று அன்று சேர்மன் ஆனேன்.  

இஸ்லாமிய கட்சிகள்  இருக்கும் போதும் நீங்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

     சேர்மன் தேர்தலில் வென்ற பின்  அடுத்து வந்த by-electionல அண்ணன் எம்பி அன்வர் ராஜா, சகோதரி பதர் சையத் ஆகியோர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் போது அவர்களுடன் இணைந்து நானும் மிக கடுமையாக அதிமுகவிற்கு பிரச்சாரம்  செய்தேன். அப்போது அவர்கள் என்னை முழுமையாக அதிமுகவில் இணையும்படியான அறிவுரை சொல்லியிருந்தார்கள்.  அம்மாவின்  ஆதரவு தான் எனக்கொரு முகவரி தந்திருந்தது. அதன் காரணமாகவே அதிமுகவை விரும்பி நேசித்தேன். 

கல்யாணம் ஆகி படிச்சீங்க. பசங்க படிக்கிற வயசில் தான் அரசியலில்  இருந்தீங்க. என்ற போதும் கல்வியில் அவர்கள் தன்னிறைவு பெறும் வகையில் நீங்கள் வளர்த்து ஆளாக்கியுள்ளீர்கள்.  அதிக நேரம் கிடைக்கக்கூடிய சராசரி பெண்களுக்கே எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வது கடினமானதாக இருக்கும்போது உங்களுக்கு எப்படி சமாளிக்க முடிந்தது ? 

     என் குழந்தைகளை நான் மட்டுமே வளர்க்கல. என்னுடன் சேர்ந்து என் பெற்றோர்தான் பக்கபலமாக இருந்தாங்க. அதே போல் தான் என் மேற்படிப்பும். என்னால் படிக்க முடிந்தது என்றால் அதற்கு முழுக்காரணம் அதே பெற்றோர்களும் கணவரும் தான். அவர்கள் இல்லாமல் எதுவும் எனக்கு சாத்தியமாகியிருக்காது. என் வளர்ச்சிக்கு என்னுடன் சேர்ந்து அவர்கள் உழைத்தனர். 

நீங்க சொல்லும் ஆண்டு அடிப்படையில் பார்த்தால் ஏறக்குறைய குறுகிய வருஷத்திலேயே அமைச்சராகியிருக்கீங்க. இந்த   வேகமான வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க.. அதுவும் ஒரு பெண்ணாக... மேலும் சொல்லப்போனால் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக...

     1991 ல சேர்ந்ததிலிருந்து கணக்கு பண்ணினால் அந்த பயணம் நீண்டதாக தான் இருக்கும். 2001 ல சேர்மன் ஆக இருந்தேன். 2006 ல கவுன்சிலராக இருந்தேன். அப்போது கவுன்சிலர்கள்தான் 
சேர்மன எலக்‌ஷன் பண்ணனும். திமுக ஆட்சி இருந்ததால  நான் சேர்மனாக நின்ன போதும்  திமுக சார்பிலான சேர்மன் வென்றார். 2011 ல மீண்டும் சேர்மன் ஆனேன். 2016 எம் எல் ஏ ஆனேன். அப்படி பார்த்தால் இந்த இடத்துக்கு வரதுக்கு நீண்ட பயணமும் வெற்றியும் தேவைப்பட்டிருந்தது.  இறைவனின் கருணையில் எனக்கு எல்லாமும் நிறைவாக எளிதாக அமைந்தது. 

அமைச்சராவது என்பது சாதாரண விஷயமல்ல. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கவனத்தை எப்படி ஈர்த்து இந்த இடத்திற்கு முன்னேறினீர்கள்? நிச்சயம் ஏதேனும் அம்மா உங்க கிட்ட சொல்லியிருக்கலாம் அல்லவா...

     ஹாஹாஹா...  எந்த மீட்டிங் இருந்தாலும் அட்டன் செய்வேன். முதலில் மாவட்ட மருத்துவர் அணி செயலாளராக பணியாற்றினேன். இப்பவும் அந்த போஸ்டிங்ல தொடர்கிறேன். மேலும் இப்பவும் மாவட்ட கழக துணை செயலாளராக பொறுப்பு வகிக்கிறேன். 

     மாவட்ட செயலாளர் ,  வணிக மற்றும் பத்திரிகை துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்கள், என் கட்சிப் பணிகளைப் பார்த்து எனக்கு ஆதரவு அளித்தார்.

     அம்மா என்னை முதலில் செயற்குழு உறுப்பினராக்கி அழகு பார்த்தார்கள் . வாணியம்பாடியாகட்டும், மாவட்ட அளவிலாகட்டும், சென்னை வரையாகட்டும் எல்லா மீட்டிங்க்ஸும் அட்டன் பண்ணிட்டு வந்தேன். எனக்கொரு ஆர்வம் அப்போதிலிருந்து. எல்லா வகையிலும் என் எல்லா வகையான முயற்சிகளையும் சேர்த்து கடினமாக உழைத்து என் பெஸ்ட் காட்டிக் கொண்டிருந்தேன்.

     ஊரிலும் கூட கட்சிகாரர்களுக்கான உதவிகளை செய்து வந்தேன். க்ளினிக் இருப்பதால், எல்லா வகையான  கட்சி பணிகளோடு, தொண்டர்களுக்கு மருத்துவ உதவி, இலவச முகாம் என்ற வகையில்  உதவி செய்திருக்கேன்.   அவையெல்லாம் அம்மாவின் கவனத்திற்கும் சென்றிருக்க கூடும். இதையெல்லாவற்றையும் விட  அம்மாவிற்கு முஸ்லிம் பெண்களின் வளர்ச்சி மிக பிடிக்கும். புர்கா அணிந்து கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் இருக்கும் பெண்களை கண்டால் அம்மாவிற்கு மிகப் பிடிக்கும்.  இவையெல்லாம் சேர்த்துத்தான் அம்மா அடுத்தடுத்த கட்டங்களுக்கு என்னை உயர்த்தினார்.

     எம்எல்ஏ நேர்காணலின் போது, அம்மா என்னைப் பார்த்தவுடன், உங்கள தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டு வர்ரேன்னு சொன்னது எனக்கு பெருமையா இருந்திச்சி...

புர்காவுடன்  மினிஸ்ட்டராக பணிபுரிவதில் எதாவது சங்கடத்தை உணர்கிறீர்களா? 

என் க்ளினிக்குள்ள உக்கார்ந்தா கூட இதே புர்காவில் தான் இருப்பேன். இந்த கம்ஃபர்ட் மற்ற ஆர்டினரி ட்ரஸ்ல என்னால உணர முடியல. 

ஆனால் புர்கா விஷயத்தில், கொள்கை கோட்பாடுகளிலான விமர்சனங்களை தவிர்க்க வேண்டி தம் அடையாளங்களை துறக்கவும் சிலர் தயங்குவதில்லை. உங்களுக்கு அப்படி தோணியிருக்கா?

     நான் அப்படி யோசித்ததில்லை. ஏன் இப்போது இருக்கும் சூழலில் நிறைய பெண்கள் புர்காவை விரும்பி அணியிறாங்க. எந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவை எளிதாக கடந்துடுறாங்க. அப்படி இருக்க அடையாளங்களை துறப்பதில்  கோட்பாடுகளை சாக்கு சொல்வது ஏற்புடையதல்ல. என்னை பொறுத்தவரை பர்சனல் ஃபேசன்-க்காக தான் புர்கா போடாம சிலர் இருக்காங்களே தவிர்த்து  விமர்சனங்களுக்காக யாரும் புர்கா அணிய தயங்குவதில்லை. புர்கா போடுவதை எதிர்த்தால் அந்த விமர்சனங்களை எளிதாக கடக்கும் மன தைரியத்தை கொண்டவர்கள் தான் அதிகம்.  என் பொண்ணுங்களும்  விரும்பி அணியிறாங்க.  

அமைச்சராக இருப்பதால் உங்களால் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாது. மரியாதை  நிமித்தம் விடுக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளையும் புறந்தள்ள முடியாது.   அங்கே நிகழ்த்தப்படும் பூமி பூஜை, குத்துவிளக்கு ஏற்றுவது முதலிய சம்பிரதாயங்களை உள்ளடைக்கக்கூடியவை என்றாலும் கூட ! இது குறித்து வரும் விமர்சனங்கள் பற்றி ?

     ஆமாம்... நிறைய விமர்சனங்கள் வரும். வாட்ஸ்அப் ல  நிறைய அனுப்புவாங்க. பேஸ்புக்ல விவாதிப்பாங்க.  என்னை பொறுத்த வரை  சர்ச்க்குள் இருந்தாலும் ஈமான் உறுதியாக இருந்தால் தொழுகவும்  முடியும். கோவிலுக்குள் குர்ஆன் ஓதவும் முடியும். பூமியில் தூய்மையான இடங்களை அல்லாஹ்வை வணங்கும் இடமாக இறைவன் ஆக்கி வைத்திருக்கிறானே... மற்ற மதங்களின் நம்பிக்கைகளுக்கு  மரியாதை தருவது என்னை பொறுத்தமட்டில் தவறில்லை. என் மனதில் இருக்கும் ஈமான் பற்றி எனக்கும்  என்னை கண்காணிக்கும் அல்லாஹ்வுக்கும் தெரிந்தால் போதாதா? அதனால்  என்ன எதிர்ப்புகள் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை நான் கண்டுகொள்வதில்லை. 

அரசியல் என்றாலே விமர்சனம் இருக்கும். எதிர்கட்சி தரப்பிலிருந்தும் சரி, உள்கட்சிக்குள்ளிருந்தும் சரி, சில நேரங்களில்  எல்லை மீறி தரம்தாழ்ந்தும் போககூடிய சூழல் நிலவும். அதாவது பெண் என வரும் போது கொச்சைப்படுத்தி  உளவியல் ரீதியாகவோ தனிநபர் தாக்குதலாகவோ அவையிருக்கும். இப்படி எதிர்கொண்டிருக்கிறீர்களா?

     முதுகுக்கு பின்  பேசுவதைப்பற்றி தெரியாது . ஏனெனில் முகத்திற்கு நேராக விமர்சனம் வைக்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. என் சுயமரியாதை சார்ந்த விஷயத்தை மிக கவனமாக  கையாள்கிறேன். என்னளவில் மிக சரியாய் இருக்கும் போது எந்த விமர்சனங்கள் வந்தாலும் அது குறித்து கவலைப்படுவதற்கு கூட என்னால் யோசித்துப்பார்க்க முடியவில்லை. 

நிலோபர் கபீல் என்றாலே பழக்கூடை தூக்கி வீசியவர் என்ற பிம்பம் மட்டுமே தான் எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. அந்த சம்பவம் பற்றி ?

     அதனை நான் நியாயப்படுத்த விரும்பல... 

     இரண்டு முறை எனது கட்சிக்காரர்கள் சொல்லிய பின்பும் அவர்கள் கடையை எடுக்கவில்லை. அவர்கள் திமுக குடும்பப் பின்னணி கொண்டவர்கள். சாலையை ஆக்கிரமித்து அந்தக் கடை வைக்கப்பட்டிருந்தது. நான் சேர்மனாக இருந்த போதே, பலமுறை எடுக்கச் சொல்லியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இப்பவும் அந்தக் கடை ரோட்லதான் இருக்கு.

     வாணியம்பாடியின் அதிமுக சார்பிலான முக்கிய அங்கம் வகிக்கும் நான்தான் எல்லா விதமான போராட்டங்களையும்  தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டும். அம்மாவின் மீது எனக்கு      அதிகமான பாசம் உண்டு. இது எப்படியானது என நான் சொன்னால் கூட அதனை உங்களால் எளிதில் உள்வாங்கிக்கொள்ள  முடியாது. 

     அது உணர்வுப்பூர்வமான பாசம்... என் தாய் ஸ்தானத்தில் வைத்திருக்கும் ஓர் இரும்புப் பெண்மணியை தலைகுனிவு கொடுத்து சிறைக்கு அனுப்பும் போது என் ஆதங்கத்தை நான் காட்டியாக வேண்டுமல்லவா. நீங்கள் அந்த ஓர் சம்பவத்தை வைத்து மட்டும் என்னை எடை போடுவீர்களாயின் என்னால் பயன் அடைந்தவர்களின்   அனுபவங்களை வைத்து என்னை போற்றி கொண்டாடியிருக்க வேண்டுமல்லவா? எனினும் அந்த சம்பவம் மட்டுமே பிரதானமாக வைத்து  இப்போது வரை வசைபாடுவதிலும் என்னின் அடையாளமாக அதனை நிறுவ முயல்வதிலும் பின்னணி மிக அழுக்கானதாக நினைக்கிறேன்.  உண்மையை சொல்ல வேண்டுமானால்  அந்த வீடியோ கூட திட்டமிட்டு   வேகமாக பரப்பப்பட்டது. எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சி ஊடகங்களும் அதனை விரைந்து, விரிவாக பரப்பியதில் இருக்கும் உள்நோக்கம் அரசியல்பூர்வமானது. என்ற போதும் அந்த சம்பவத்தை வைத்து என் மக்கள் என்னை ஒதுக்கவில்லை.    

இந்த பதவிக்கு வந்த பின் சாதிச்சுட்டதாக நீங்க நினைக்கும் விஷயங்கள் என்ன ?

     நான் செய்தவையெல்லாம் சாதனையில் வருமா வராதா என்பதெல்லாம் என் பார்வையில் இருந்து மற்றவர்கள் பார்வையில் வித்தியாசப்படலாம். என்ற போதும் நிறைய விஷயங்கள் எனக்கு மனநிறைவை கொடுத்திருக்கிறது. அந்த மனநிறைவு  ஏதோ ஒரு சாதனையை தான் எனக்கு நினைவூட்டுது. இந்த பதவிக்கு வந்த பின் நிறைய பேருக்கு வேலை கிடைக்கச் செய்திருக்கேன். ஒருவருக்கு வேலை கிடைக்கும் போது அந்த குடும்பமே  அதன் மூலம் பயன்பெறும். அப்படியானவர்கள்  என்னை அணுகி வாழ்த்து  சொல்லும்போதும் எனக்காக பிரார்த்திக்கும் போதும்  உள்ளத்தளவில் எனர்ஜி கிடைக்குது. மத்தபடி என் பணிகளை அதாவது என் கடமையை ஒவ்வொன்றாக சொல்லி அதனை என் சாதனையாக சுருக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. மனநிறைவு கிடைக்கும் வரையில் நான் ஏதோ நல்ல விஷயம் செய்துட்டிருக்கேன் என்ற எண்ணத்தை எனக்கு கொடுக்குது. 

கவுன்சிலரில் இருந்து அமைச்சராகியிருக்கீங்க. அடுத்த கட்ட வளர்ச்சியாக உங்களை என்னவாக நாங்கள் பார்ப்போம் என்பதை நீங்களே முன்கூட்டி சொல்லிடுங்களேன்.. இன்னொரு துணைக்கேள்வியும் உண்டு.    ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்தால்  எப்படி  உணர்வீர்கள் ?

     நான் முன்னமே சொன்னது போல் தான், நான் எந்த திட்டங்களும் போட்டு என் வாழ்க்கையை  அமைக்கல.  கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. பண்ணினேன். படிக்க சொன்னாங்க, டாக்டரானேன். சேர்மன் போஸ்ட்டும் அப்படியாக அமைந்தது தான். வாழ்க்கையில் எனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு என் சொந்த முயற்சிகளை வைத்து சிறப்பான  இடத்தை அடைந்திருக்கிறேன். 

     எனக்கு எது சிறந்ததாக இருக்கோ அதையே தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கிறான். நான் அவனை நம்புகிறேன், ஆகவே அவன் முடிவுப்படி தான் எல்லாமும் அமையும்.    அதேபோல் நீங்க கேட்டிருந்தீங்க, இத்துடன் அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றால் என்னாவீர்கள் என்று. அதுதான் சிறந்ததென அல்லாஹ் எனக்கு நாடியதாக எடுத்துக்கொள்வேன். என்ற போதும் என்னை உருவாக்கிய  அனைவருக்கும் நன்றியுடன் இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு இறுதி வரை பணியாற்றுவேன். கட்சியில் இந்த பதவி இல்லை என்றாலும்  அடிப்படை உறுப்பினர் என்ற தகுதி போதும், நான் கட்சிக்காக பணிகளை செய்வேன்.. 

ரொம்ப சீரியஸ்ஸான கேள்விகளாகவே போய்ட்டிருக்கு... ஒரு நகைச்சுவையுடன் முடிவுக்கு கொண்டு வருவோம்.  நிலோபர் கபிலின் இன்னொரு அடையாளம் கொஞ்சும் தமிழ்தான். அதனை கேலி செய்தாலும் நீங்கள் பெரிதுபடுத்தாமல் புன்னகையுடன் கடந்து வரும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு மேடை பேச்சு மிக முக்கியம் இல்லையா... உங்க ரோல் மாடல் யார்?  

       சீரியஸ் விஷயம் வேண்டாம்னு நீங்க  சொன்னதுனால சொல்றேன். உங்களுக்கொரு   விஷயம் தெரியுமா, மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிச்சாலும் உருது தாய்மொழியா இருந்தாலும்    நான் படிக்கும் போது தமிழ்ல  60% மார்க் எடுத்தேன்... (மழலை போன்ற அவரின் பாவணையில்  மீண்டும்  இறுக்கம் குறைந்து  அந்த இடமே கலகலப்பானது.)

       நான் சென்னையில் இருக்கும் போதும், வாணியம்பாடியில் இருக்கும் போதும்  எனக்கு தமிழ் பேசியாகணும் என்ற கட்டாயம் இருந்ததில்லை. தமிழ் மட்டுமே தாய்மொழியாக கொண்ட ஒரு நபரை அயல்நாட்டில் விட்டோம்ன்னா முதல்ல தடுமாறி தடுமாறி பேசி பின்னர் சரளமாக அந்நாட்டின் மொழியை பேசுவாரில்லையா?  இப்ப கூட எல்லா நிகழ்ச்சிகளிலும் சரளமா ஆங்கிலத்தில் என்னால் பேச முடியும்ன்னாலும்  எனக்கு ஆசை - தமிழ்ல பேசணும் ன்னு.  இது எனக்கு பயிற்சியா நினைக்கிறேன்.    ரோல் மாடல்ன்னா எப்பவும் அம்மா தான். ஆனா அம்மா போல் என்னால் பேச முடியாது. நிறுத்தி நிதானமாக பேசினாலே நாம் என்ன சொல்ல வரோம்ன்னு  மத்தவங்களை புரிஞ்சுக்க வைக்கலாம். அது போதும் எனக்கு.  செய்தி சேனல்கள், நாளிதழ்கள் தொடர்ந்து படிக்கிறேன். முன்புக்கு இப்ப பரவால்லை தானே....

*********

        மனம் விட்டு சிரித்தோம். "ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. இத்துடன் பேட்டி முடிச்சுக்கலாம். கிட்டதட்ட  இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடிச்சிருக்கும். இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி, அதுக்கும் மேல் தோழமையாக பழகி பொறுமையாக பதிலும் சொன்னீங்க. உங்கள் மேல் இருக்கும் மரியாதை அதிகமாகியது என்று சொல்வதை விடவும்  பிரியம் பன்மடங்கு அதிகரிச்சிருக்கு " என்றேன்.  திருமதி  நிலோபர் கபீல்  அவர்களும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டதோடு  தேநீர் அருந்திச் செல்லும்படி உபசரித்தார். 

       'அம்மா'வின் மீது அளவிலாப் பற்று கொண்ட அவருக்கு, அம்மாவைப் பற்றி அவர் அறியாத ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லியதும் ஆச்சரிய மிகுதியால் ஆர்வமானார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய புத்தகங்களை அன்புப் பரிசாக அமைச்சருக்கு அளித்து விட்டு விடைபெற்றேன்.

       நாம்  கட்டியமைத்திருக்கும் பிம்பத்தை முதல் பேச்சிலேயே தகர்த்தெறியும் ஆளுமை கொண்டிருக்கிறார் சகோதரி நிலோபர் கபீல்.  சில நேரம் நம் கண்ணால் காட்டப்படுவது கூட  மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பதால் தான் "கண்ணால் காண்பதும் பொய்" என்றார்களோ என்னவோ. ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அஃது அவரின் அடிப்படை அடையாளம் என கொள்ள முடியாது. சந்தர்ப்பமும் சூழலும் தான் ஒரு மனிதரின் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. அதற்கும் மேலாக அந்த சூழலை பயன்படுத்தக்கூடிய நபர்களை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியதாகிறது. சகோதரி நிலோபரின் ஆளுமையை பாராட்ட வேண்டியதன் அவசியத்தை   ஒவ்வொரு செயல்களிலும் காண்பித்துக் கொண்டிருகிறார். 

       'யாரின் தூற்றுதலும் தம் நற்பணிகளை தடுக்காது' என்றும்  'என்னை தூற்றியவரேயாகினும் அவருக்கான  நற்பயன்கள் அவருக்கு சென்று சேருவதில் நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன்' என்றும்  அவர் கூறிய சொற்கள் அவரின் உள்ளத்தின் சாயல்.

பேட்டியும் ஆக்கமும் :
ஆமினா முஹம்மத் 
read more "தாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு"

Wednesday, May 17, 2017

தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்

   
சமீபத்தில் வெளியான  +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா.


ரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக்கடை நடத்திவருகிறார்.  அவரிடம் முதலில் பேசினோம்.

"எங்கத்தா படிச்சது 4வது வரை, நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன், என் மனைவி பிஏ படிச்சிருக்காங்க, மளிகைக்கடை நடத்திட்டு வரேன். மூத்தப்பொண்ணு நல்லா படிச்சுச்சு.   கட்ஆப் மார்க் வச்சு  மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டிருக்காங்க, 2வது பொண்ணுதான் ரிஹானா.   கம்பத்துல தான் முதல்ல படிச்சுச்சு. நல்ல மார்க் எடுத்துட்டிருந்தாங்க,  அக்கா மாதிரியே தங்கச்சியையும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துடணும்னு தான் ஆசை எனக்கு, அதனால நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுல தரமான ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன். வித்யா விகாஸ்ல படிச்சாங்க. 1192 மார்க் எடுத்திருக்காங்க, நீட் எக்சாம் எழுதியிருக்காங்க" என வரிசையாய் எல்லாம் விவரித்தார். 
ரிஹானா பற்றி பேசத்தான் வந்தோம். ஆனால் ரிஹானாக்கு முன்பே ஒரு மருத்துவரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அறிந்து ஆச்சர்யப்பட்டோம்.  மீண்டும் தொடர்ந்தார்
"மூத்தப்பொண்ணு உம்மு ரீஷ்மன்  நல்லா படிச்சுச்சு, இன்னும் 20 மார்க் வாங்கினாங்கன்னா மெடிக்கல் கட்ஆப் கிடைக்கும்னு என் மனைவியின் உறவினர் என்னிடம் சொல்லி  மூத்தப்பெண்ணை வேறு ஸ்கூலில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது எனக்கு கட்ஆப் ன்னா என்னன்னு தெரியாது, சரி இப்படி சொல்றாங்களேன்னு நானும்  முயற்சி பண்ணி சேர்த்தேன். +2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தாங்க. இப்போது மதுரையில் தங்கி படிக்கிறாங்க". 
லகரங்கள் கொட்டினால் தான்  மருத்துவராக முடியும் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்த  இரு மாணவிகளும்  தன் மேற்படிப்புக்காக முதலீடு செய்ததெல்லாம்  படிப்பை  மட்டுமே. 

ரிஹானாவிடம் பேசினோம்,  மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்மந்தமேயில்லை என்பது உண்மையோ இல்லையோ,  ஆனால் ரிஹானா  தன் மதிபெண்களைப்போலவே மிக மதிநுட்பமான பெண்ணாய் பேசினார்.   

எந்த ஸ்கூல்ல படிச்சீங்க, வருங்கால லட்சியம் என்ன போன்ற சம்பிரதாய  கேள்விகளுக்கு வேலை இல்லை. அதைவிடவும் வாயடைக்கும் விதமாய் நிறைய  பேசினார்.

நீட் எக்சாம்  தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு தான் இல்லையா?
தேர்வு கஷ்டம் தான். இறுதி நேரத்தில் சொன்னதால் முன்னேற்பாடுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா நம்ம மாணவர்கள்  ஈசியா இந்த தேர்வை எதிர்கொள்வார்கள்.  
நீட் எக்சாம் எப்படி எழுதுனீங்க?
நீட் தேர்வுக்காக  அத்தா தனியாக கோச்சிங் க்ளாஸ் அனுப்பினாங்க.  நல்லா எழுதியிருக்கேன். ஆனால் தேர்ச்சியாக அது போதாது.
என்ன இப்படி சொல்றீங்க ? அக்காவை மாதிரி டாக்டராவது தான் உங்களின் லட்சியமும் கூட, ஆனால் மார்க் இத்தனை வாங்கியும் அக்காப்போல் எளிதாக   மெடிக்கல் சீட் கிடைக்காது போலையே? ரொம்ப மெனக்கெடவேண்டி இருக்குமோ?  
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட எல்லா மாணவர்களும் நான் எதிர்பார்க்கும் மார்க் அளவில் தான் எடுத்திருக்க முடியும் என சொல்கிறார்கள்.  அந்தளவுக்கு சவாலான விஷயமாக தான் தேர்வு இருந்தது. எனினும் நான் விடப்போவதில்லை. ஒரு வருசம் தீவிரமாய் பயிற்சி எடுத்து அடுத்த வருடம் நீட் எக்சாம் எழுதி எப்படியும்  மெடிக்கல் பீல்ட்ல அத்தாவின் ஆசையை நிறைவேற்றுவேன். 
நீட்டை நீங்க விடப்போறதா இல்லை, பாராட்டுக்கள்.   உங்க ஊர் கம்பம் என்றாலும்,  திருச்செங்கோடுல படிச்சிருக்கீங்க. நாமக்கல் கல்வி வட்டாரம்  படிப்பு விஷயத்தில் மாணவர்களை ரொம்ப அழுத்தங்களுக்குள்ளாக்கும்   அம்சம் தானே? 
கம்பத்துல படிச்சுட்டிருக்கும் போதே என் மார்க் பார்த்துட்டு அத்தா, அதை விடவும் தரமான ஸ்கூலில் சேர்க்க ஆசைப்பட்டாங்க. நாமக்கல் கல்வி முறை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். என்னால் மார்க் அதிகம் வாங்க முடியும் எனும்போது அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எனக்கு பொருட்டே அல்ல என மனதளவில் முதலில் என்னை தயார்படுத்திக்கிட்டேன்.  ஆனால் அங்கே சென்ற பின் அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை. நல்ல மார்க் எடுக்கணும்னுதான் இந்த ஸ்கூலில் சேர்த்துவிடுறாங்க, நல்ல மார்க் எடுக்க முடியாதவங்களுக்கு ஸ்கூல் நடைமுறைகள் கஷ்ட்டமாகத்தான் இருக்கும். நான் எந்த அழுத்தமும் எதிர்கொண்டதில்லை. 
ரொம்ப தெளிவா பேசுறீங்க,  என்னதான்  நம் குடும்ப சூழல் காரணமாக நாம்  கட்டுகோப்பாய் இருந்தாலும்  ஹாஸ்ட்டல் முறை என வரும்போது பல வழிகளில் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சூழல் மாறிடுதே? 
சேர்க்கும் போதே தரமான ஸ்கூலில் சேர்ப்பதுடன், தரமான நிர்வாக முறை கொண்ட ஹாஸ்ட்டலில் தேடி சேர்ப்பதும் பெற்றோரின் கடமை தான்.   எத்தனையோ ஸ்கூல் இருந்தும் கூட  வெளியூரில் தங்கி படிப்பதால் பெண்கள் தனியே படிக்கும் வித்யாவிகாஸ்-ல் சேர்க்க நினைத்தது மட்டுமல்லாமல், அதிலும் சரியான ஹாஸ்ட்டலை தரம் பிரிச்சு தந்தார்கள் என் பெற்றோர்கள்.   இறையச்சமும், பெற்றோர்களின்  அறிவார்ந்த இடத்தேர்வும் இருந்தால் எந்த மாணவ மாணவிகளும்  தடம் மாறமாட்டாங்க. ஏனோதானோன்னு பிள்ளை வளர்த்து கடமைக்கு வெளியூர் ஸ்கூலில் படிக்க வச்சா நீங்க சொன்ன  சூழல் நிலவலாம்.  
மாஷா அல்லாஹ், படிப்பு விஷயத்தில் உங்கள் பெற்றோர்களின் முயற்சி ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. அது மற்ற  பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கும் முன்னுதாரணம். ஆனாலும் அவர்கள் புறக்காரணிகளால் அதாவது உறவினர்கள் நண்பர்கள் ஆகியவற்றால் குழம்பியிருக்கக்கூடும் தானே?

ஆமாம்.  சொந்தக்காரங்க சொல்லத்தான் செஞ்சாங்க "பொம்பளப்புள்ளையை ஏன் இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்கிற. ஊர்லையே நல்ல ஸ்கூலில் படிக்க வைக்கலாமே"ன்னு. அத்தா யோசிக்கத்தான் செஞ்சாங்க, என்றாலும் எங்கள் கல்வி மேம்பாட்டில் அவருக்கு அக்கறை இருந்தது,  எங்கள் கல்வி வீணாகி விடக்கூடாது என்ற வருத்தமும் இருந்தது. தேடி தேடி நல்ல ஸ்கூல் தேர்ந்தெடுத்து தந்தாங்க.  அதிகம் படிப்பறிவு இல்லாத நிலையில் எங்கள் மேல்படிப்புக்கு என்ன விஷயங்கள் செய்யணும்னு தேடி தேடி ஒவ்வொருவரிடமும் விசாரிச்சாங்க. வெளியூர்க்கு புள்ளையை படிக்க அனுப்பினாலே ஒழுக்கம் விஷயத்தில் கெட்டுப்போய்டுவாங்க என்ற அழுத்தங்களையும் தாண்டி எங்களை அவங்க நம்பினாங்க. அதுக்கு அவங்க வளர்ப்பு முறையில்  வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். 
நம் சமுதாயப் பெண்கள் இப்போது  அதிகம்  கல்வி விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். உங்கள் பார்வையில் எப்படி தெரிகிறது?
இன்னும் மாற்றம் வரணும். நல்ல மதிப்பெண் பெற்றும் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிடக்கூடிய பெற்றோர்கள்  இன்னும் இருக்காங்க.   அடுத்து என்ன படிக்கலாம்னு தெரியாம கூட பலர் இருக்காங்க.   என்னை பொறுத்தவரைக்கும் இந்த விழிப்புணர்வு போதாது. 
நல்லமாற்றம் கிடைக்கணும்னா என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
பெண்களுக்கு கல்வியை கட்டாயமாக்குவதோடல்லாமல் உயர்கல்விக்கும் அவங்களை தயார்ப்படுத்தனும். நிறைய பெற்றோர்கள் தயங்குவதே நம்ம புள்ளையை யாரும் தப்பா பேசிடுவாங்களோ என்பதற்காகத்தான். இந்த எண்ணம்லாம் அகலணும்.   என் அம்மா பிஏ படிச்சாங்க, அதனால்   அத்தாவுக்கும் புரியவச்சு எங்களை இந்த நிலையில் நிறுத்தியிருக்காங்க. நானும் அக்காவும் எல்கேஜில இருந்து எந்த டியூசனும் போனதில்லை, அம்மாவே எங்களுக்குச் சொல்லி கொடுப்பாங்க. அதுவே எங்களுக்கு போதுமானதாக இருந்துச்சு.  அவங்க படிச்சதுனால தான் தன் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடிஞ்சது. அதே போல், நம் சமுதாய மக்கள் தம் பெண்மக்களை  அதிக கல்வி கொடுக்க முன்வரணும், இவங்களை பார்த்து மற்ற பெற்றோர்களும் தம் பெண் பிள்ளையை தைரியமாக படிக்க வைப்பார்கள். இது தொடர் நிகழ்வாகும்போது நம்  சமுதாயமும் கல்வியில் மேன்மையான இடத்தை அடையும். 
ரொம்ப அருமையா பேசுனீங்க ரிஹானா.  ஹிஜாப் பேணி சாதனை படைக்க எந்நாளும் எங்கள் பிரார்த்தனையில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இடம்பிடிப்பீர்கள்.  தனக்கு மட்டும் பெருமை சேர்க்கும் மகள்களாக அல்லாமல் சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய குழந்தைகளாக உங்களையும்  உங்கள் அக்காவையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ள  உங்கள் பெற்றோர்கள் நம் சமுதாயத்தின் மற்ற பெண்களுக்கும் உங்களை முன்மாதிரியாக்கியிருக்கிறார்கள். நீங்கள் சொன்னது போலவே  நிச்சயம் உங்களைப் பார்த்து, பல பெற்றோர்களுக்கும் தம் மகளை உயர்கல்விக்கு  அனுப்பும் ஆசை இப்போது அதிகரிக்கும். மென்மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துகள். உங்களின் ஒவ்வொரு  சாதனைக்கு பின்னும், உங்கள் சாதனையை எங்கள் இஸ்லாமியப்பெண்மணி.காம்மில் பதிந்திடவும் மறக்காதீர்கள். 

ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 
________________________________

மிக அழகிய உரையாடலாக அமைந்தது ரிஹானாவுடன் பேசியது. பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தவும் செய்தார்கள். அவருடனும் அவர் தந்தையுடனும் பேசியதில்  உள்வாங்கக்கூடிய ஆழமான விஷயமும் இருந்தது. அதிலொன்று, உங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருக்கலாம், அதை கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வதை விடுத்து  அவர்களின் அறிவுக்கும் தகுதிக்கும் தகுந்தபடி  களத்தை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொன்னார்கள்.

ஒரு அழகிய  ஹதீஸ்ஸுடன் நிறைவுக்கு வருவோம் ,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127)


பேட்டியும் ஆக்கமும்,
ஆமினா முஹம்மத்
-----------------------------------------------

நன்றி : 
அறிமுகம்  செய்தவர் - சகோதரர் இத்ரிஸ்
read more "தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்"

Tuesday, May 09, 2017

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா??? - எழுதியவர். Shakila Kadher

"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.

அப்படியானால் இந்த பூமியை. மட்டுமே மனிதர்கள் வசிக்குமிடமாக அமைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது.

பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராணவாயு நீர் ஆகியவை உள்ளதோ அங்கே தான் உயிர்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.

புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை.மற்ற கோள்களை விட இங்கு வெப்பம அதிகம். இந்தக் கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் பூமியின் ஈர்ப்பு விசையைப்போல் 3 ல் 1 பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதனால் இதில் மனிதனால் வாழ முடியாது.

வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தை போல 11 மடங்கு அதிகம். இங்கு உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனும் இல்லை.

சூரியனிலிருந்து 23 கோடி தூரத்தில் உள்ளது செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு செந்நிறமாகக் காட்டுகிறது. இதனால் இதற்கு செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

பூமியில் உள்ள காற்றில் 100ல் 1பங்கு காற்று தான் இதில் உள்ளது. அந்தக் காற்றில் கூடஒரு சதவீத அளவே ஆக்ஸிஜன் உள்ளது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.வியாழன் கோளிலும் மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போல பாறைக் கோளாக இல்லாமல் வாயுக் கோளாக உள்ளது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது.இங்கு சென்றால் நம் எடை 2 1/2 மடங்கு அதிகரிக்கும்.நம் எடையை நாம் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது.இங்கு வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க. முடியாது.யுரேனஸ், நெப்டியூன் , புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.

பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத்தேவையான நீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது.எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.

பூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உயிரினங்கள் வாழ வேண்டுமெனில் உடல் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமானது.

சூரிய ஒளிக்கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் அடங்கியுள்ளது.

சூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக்கதிர்களால் மனிதனும் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஓசோன் எனும் படலத்தை பூமியைச் சுற்றி வளையம் போல் அமைத்தான் இறைவன் அது
மட்டுமல்ல, சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளக் கூடிய வளிமண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது.இப்படி சுற்றுவதால் தான் கோடைக்காலம், குளிர் காலம் வசந்தகாலம் என பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.ஆண்டு முழுவதும் சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

மொத்தத்தில் மனிதன் வாழ்வதற்கு சாதகமான,வசதியான வாழ்விடம் அல்லாஹ் சொல்வது போல "பூமி " மட்டுமே.. !! சுப்ஹானல்லாஹ்.,. !!!
read more "மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???"

Monday, May 01, 2017

மறுவாழ்வு


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்..

மறுவாழ்வு - அறிவியல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை - எழுதியவர். சகோதரி ஹுஸைனம்மா


அலறிக் கொண்டே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பிரேக் அடித்து நிலைய வாசல் முன் நின்றது.... வேக வேகமாக வந்த ஊழியர்கள், ”சிறப்பு நோயாளியை” ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். தயாராக இருந்த மருத்துவர்கள், தம் பணியைத் தொடங்கினார்கள்.
அது என்ன சிறப்பு நோயாளி? முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம்!! இதென்ன மற்றொரு “ரமணா” கதையா என்று யோசிக்கிறீர்களா? இல்லை, உயிர்போன பின்புதான் இங்கு கொண்டு வருவார்கள். ஆகையால் ஏமாற்று வேலை ஒன்றும் இல்லை. எனில், என்ன செய்கிறார்கள் உயிரற்ற உடலை வைத்து? உறுப்பு மாற்று சிகிச்சையா? மூச்...அதெல்லாம் செய்ய முடியாது இங்கு.
முதலில் அந்த உடலில் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி.... வெயிட், வெயிட்!! எம்பால்மிங்-லாம் இல்லை.... இது வேற லெவல்... பொறுமையா வாசிங்க! இரத்தத்தை முழுமையாக வெளியேற்றிவிட்டு, உடல் பாகங்கள் உறைந்து போகாதிருக்கவும், கெட்டுப் போகாதிருக்கவும் தேவையான சிறப்பு மருந்து கலவையை உடலின் ஒவ்வொரு இண்டு இடுக்குக்கும் பரவுமாறு செலுத்துவார்கள். இப்போது, கண்ணாடி போல உள்ளிருப்பது தெரியக்கூடிய “vitreous" நிலைக்கு மாறியிருக்கும் உடலை, பெரிய ஃப்ளாஸ்க் போன்ற குடுவையில், -196 டிகிரி செல்சியஸில் இருக்கும் திரவ நைட்ரஜனில் வைப்பார்கள். இப்போ குடுவையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.
எப்போ திறப்பார்கள், உடலை எப்போ வெளியே எடுப்பார்கள்? யாருக்குத் தெரியும்? உள்ளே வைக்கும் அவர்களுக்கே தெரியாது எனும்போது, உங்களுக்கும் எனக்கும் எப்படித் தெரியும்?
என்ன குழப்புதா? இறந்து போன இந்த உடல், “CRYONICS” என்ற முறையில் கடுங்குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது!! ஆனால், இது எம்பால்மிங் அல்ல. எம்பால்மிங் உடலை அடக்கம் செய்யும் வரை பாதுகாப்பதற்காகச் செய்யப்படுவது. “CRYONICS” என்பது - தொடர்ந்து வாசிக்குமுன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் - இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவ்வுடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க செய்யபடுவது!!
ஙே....!!! ஆனால், அதுதான் உண்மை!!
#CRYONICS” என்றால் மிக மிக மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பது (குறைந்த பட்சம் -136 டிகிரி செல்ஷியஸ்) என்று பொருள். 1962-ல் Robert Ettinger என்பவர், இறந்து போனவரை உயிர்ப்பிக்கும் மருத்துவ முன்னேற்றம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்றும், அந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்போது, உயிர்ப்பிப்பதற்காக இறந்த உடல்களை உறைய வைத்து பாதுகாக்கலாம் என்றும் The Prospect of Immortality என்ற தனது புத்தகத்தில் எழுதினார். அதற்கு முன்பும், பின்புமான ஆய்வுகளைத் தொடர்ந்து, முதல் உடல் 1967-ல் உறைய வைக்கப்பட்டது.


தற்போது, இந்த “உயிர்ப்பித்தல்” ஐடியா அமரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்காவில் இரண்டு நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவில் ஒரு நிறுவனம் இந்தச் “சேவையை” வழங்கிவருகின்றன. அமெரிக்காவின் Alcor Life Extension Foundation நிறுவனம், முழு உடலைப் பாதுகாக்க $200,000 -மும், தலையை மட்டும் பாதுகாக்க $80,000 One time fees ஆக வாங்குகிறது. ரஷ்யாவின் KrioRus நிறுவனம் உடலுக்கு $36,000, தலைக்கு $18,000 கட்டணம் பெறுகிறது.
தலைதானே உடலுக்குப் பிரதானம். மூளையில்தான் எல்லா செய்திகள் - தகவல்கள் -அறிவுசார் விஷயங்கள் பதிந்து காணப்படுகின்றன. உயிர்வாழ, மூளை மிக அவசியம். அல்லது மூளை மட்டுமாவது அவசியம் என்பதால், பொருளாதார காரணம் கருதி தலையை மட்டும் பாதுகாக்கிறார்கள். உயிர்ப்பிக்கும் தொழில் நுட்பம் வந்ததும், மூளையிலிருக்கும் தகவல்களை ஒரு ரோபோவில் டவுன்லோட் செய்து ரோபாவாக வாழலாமாம்!! அட, நீங்க சுவத்துல தலைய முட்டிக்காதீங்க.... உங்க மூளை சேதாரமாச்சுன்னா பதப்படுத்த முடியாது!!
இறந்தவரை உயிர்ப்பித்தல் என்பது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி எனச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டில் சாத்தியமேயில்லை என்று உறுதியாக நம்பப்பட்ட எத்தனையோ விஷயங்கள் சாத்தியமாகும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறது உலகம். ஆனால், எப்போது சாத்தியமாகும் என்பதும் விடை தெரியாத கேள்வியே.
சிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது, மூளைக்கு இரத்தம் செலுத்த முடியாத நிலையில், பாதிப்பிலிருந்து பாதுகாக்க, மூளையை +20டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ் குளிர வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹைப்போதெர்மியா என்ற இந்த முறையில், அதிகபட்சம் அரை மணி நேரம் வரை அவ்வாறு வைத்திருக்கலாம்.
மாரடைப்பால் நின்று விடும் சில இருதயங்கள், அதிக அளவில் மின் அதிர்வு கொடுத்து மீண்டும் இயங்க வைத்திருக்கிறார்கள்.
மேலும், தற்போதைய மருத்துவ உலகில், விந்தணு, கருமுட்டை, embryo என்ற ஆரம்பநிலை கரு போன்றவை உறைநிலையில் வைக்கப்பட்டு, பின் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தப் படுகின்றன.
ஆகையால், பிற்காலத்தில் இதுவும் நடக்கலாம் என்று நம்புபவர்களும் உண்டு. பிறப்பும், இறப்பும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள். அவற்றை மனிதன் வெற்றிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அப்படியே செய்தாலும், முழுமையாக இராது. சில குறைபாடுகளோடுதான் சாத்தியம் என்போரும் உண்டு.
தொழில்நுட்ப ரீதியாக முடிந்தாலும், உளவியல் ரீதியாக இத்திட்டம் மன நலப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இறந்த ஒருவரை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து உயிர்ப்பிக்கும்போது, அக்கால கட்டத்தோடு அவரால் பொருந்திப் போக முடியாது என்றும், தனக்குத் தெரிந்த யாருமே இல்லாத உலகில் உயிர்வாழ்வது மிகுந்த மன நெருக்கடியையே அவருக்குத் தரும்; ஆகவே இத்திட்டம் தொடரக்கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
மனிதனுக்கு இறந்தவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், இறந்த உடல் தேவை. அதற்கான தொழில்நுட்பங்கள் தேவை. எல்லாம் சரியாக இருந்தாலும், முழுமையாக வெற்றியடைவார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஆனால், இறந்த உடல் முழுதும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும், எரிந்து போனாலும், எதுவுமே இல்லாமல் மனிதர்களை உயிர்ப்பிப்பவன் இறைவன் ஒருவனே!! ஆனால், மனிதர்களின் அறிவை நம்புபவர்களால், இறைவனின் ஆற்றலை நம்பமுடியாது போகிறது!!
56:47. மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
read more "மறுவாழ்வு"

Monday, April 17, 2017

வலி நிவாரணி

டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

வலி நிவாரணி - ஆஸ்பிரின் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு (இரண்டாமிடம் பெற்ற கட்டுரை) - எழுதியவர்.Nadhira Deen


நம் வாழ்வின் வழியெங்கும் வரும் விதம், விதமான வலிகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டியுள்ளது.

வலி என்பது மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல், இறப்பு வரை ஏதாவது ஒரு வகையில் கூடவே பயணம் செய்யும் அசவுகரியம். அடுக்கடுக்காய் தொல்லை தரும் அவஸ்தை. ஆளையே முடக்கி போடும் வல்லமை பெற்றது.

நம்மை அணு , அணுவாய் சித்திரவதை செய்யும் வலி முதல், ஆட்கொல்லி நோய்கள் வரை அல்லாஹ் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை.

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை...என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி பாகம் 7…அத்தியாயம் 71: ஹதீஸ் எண் 582)

கற்கால மனிதர்கள் வலி என்பது கடவுளின் தண்டனை என்றே நம்பினர். எனவே கடவுளுக்கு விலங்குகளை பலியிடுவதன் மூலமும், வேண்டுதல்கள் மற்றும் ஒலி எழுப்பும் கருவிகள் மூலம் கெட்ட ஆவியை பயமுறுத்தி வலியை குணமாக்க முயற்சித்தனர். தென் அமெரிக்கர்கள் முரட்டுத்தனமான trepanation எனப்படும் தலையில் துளையிடும் முறையை வலி போக்க பயன்படுத்தியுள்ளனர்.

அதன் பின் வந்த பண்டைய காலங்களில் வலியிலிருந்து தப்பிக்கவும், நிவாரணம் பெறவும் பல வகையான மருத்துவ முறைகள் உபயோகிப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று நபி ஸல் அவர்கள் செய்த, பரிந்துரைத்த குருதி உறிஞ்சியெடுத்தல் எனப்பட்ட ஹிஜாமா. இம்முறையை சீனர்கள், எகிப்தியர்கள் மற்றும் ரோமர்களும் கடைபிடித்துள்ளனர்.

16-ஆம் நூற்றாண்டில் ஓபியம், மார்ஃபைன் போன்ற போதை மருந்துகளை வலி நிவாரணியாக பயன்படுத்தும் வழக்கமிருந்தது. இவை சிறந்த பயனைத் தந்தாலும் அந்த போதைக்கு மக்களை அடிமையாக்கியது.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வலி மருத்துவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் ஹிப்போக்ரடீஸ். வில்லோ மரத்தின் மரப் பட்டையில் சிறு பகுதியை வாயில் வைத்து சூயிங்கம் போல மென்றால் வலி குணமானதை கண்டறிந்தார். அவ்வாறு மெல்லும்போது பிரசவ வலி கூட குறைந்ததாம். வில்லோ மரத்தின் பட்டைகளில் சாலிசைலிக் அமிலம் உள்ளது என்பதையும், அது வலியையும் , காய்ச்சலையும் போக்க உதவுகிறது என்பதையும் அப்போது விஞ்ஞானிகள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஆனால் சோதனையாக இச்சாறு பக்க விளைவை ஏற்படுத்தியது . உபயோகித்தவர்களுக்கு தலைவலி போய் வயிற்றுவலி வந்தது. 1899 -ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சார்லஸ் ஜெர்ஹார்ட் ( Charless Gerhardt ) என்பவர் இந்த சாலிசைக்ளிக் அமிலத்தோடு அசிடைல் குளோரைடு என்னும் ரசாயனத்தை சேர்த்தால் பக்க விளைவு வருவதை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். ஆனால் இதை தயாரிக்க அதிகமான நாட்கள் பிடித்ததால் அந்த முயற்சியை கை விட்டார்.


அதே பாதையில் இன்னொரு விஞ்ஞானியும் ஆராய்ச்சி செய்தார். அவர் பேயர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஹாஃப் மேன். இவர் 1868 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஜெர்மானிய ஊரில் பிறந்தவர்.

தொழிலதிபரான இவரின் தந்தை மூட்டு வலியால் வேதனைப்படுவதை பார்க்க இயலாமலேயே இவர் இவ்வாராய்ச்சியில் தீவிரமானார்..மூட்டுவலிக்கு சாலிசலைட் மருந்தை தொடர்ந்து உட்கொண்ட இவரின் தந்தை கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சாலிசைக்ளிக் அமிலத்தின் அமிலத்தன்மையை குறைக்க `அசிட்டைல்' என்ற ரசாயனப் பொருளை கலந்து , அந்த மாத்திரையின் தீமையை குறைத்தார்.

இதைத் தொடர்ந்து எளிதாக தயாரிக்க முடிந்த அசிட்டைல்சாலிசைக்ளிக் அமிலம் உதயமானது. வருடக்கணக்காக வலியில் சிரமப்பட்ட ஹாஃப்மேனின் தந்தைக்கு இம் மருந்து சிறந்த நிவாரணத்தை அளித்தது.

ஆஸ்பிரின் என்ற பெயரில் இம் மருந்து உலகப் புகழ் பெற்றது. 1899- ல் ஜூலையில் பேயர் நிறுவனம் இதை பவுடராக சந்தைப்படுத்தியது. பின்பு 1914 ஆம் ஆண்டிலிருந்து மாத்திரைகளாகவும் கிடைக்க ஆரம்பித்தது.

இம் மாத்திரையின் வலி குறைக்கும் அறிவியல் பின்னணி, பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜான் வேன் என்பவரால் 1971- ல் கண்டுபிடிக்கப்பட்டது.

மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம் என்று 1940 களின் இறுதியில், லாரன்ஸ் க்ரேவன் ( Laurence Craven ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வலி நிவாரணியாக பயன்படுவதை விட, இதய நோய்களை தடுக்கும் மருந்தாகவே ஆஸ்பிரின் அதிகமாக பயன்படுகிறது.

இதய மருத்துவர் , உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும் அபாயத்திலிருந்த என் அம்மாவுக்கு பரிந்துரைத்து ,அவர்கள் பல வருடங்கள் ஆஸ்பிரின் எடுத்து கொண்டு ஆரோக்கியமாய் வாழ்ந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

விண்வெளி வீரர்களின் பெட்டியிலும் இடம் பெற்றிருந்த பெருமை ஆஸ்பிரினுக்குள்ளது.

அத்துடன் அல்சைமர் நோய் , குழந்தையின்மை, புற்றுநோய், திடீரென பார்வை பறி போகும் நிலை போன்றவற்றிற்கெல்லாம் ஆஸ்பிரின் பலனளிக்கிறது..இது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பிரினை சாப்பிடுமுன் கவனிக்க வேண்டியவை :
ஹீமோஃபீலியா, வயிறு சம்பந்தமான உள்ளுறுப்புகளில் இரத்தம் கசியும் பிரச்சனை உள்ளவர்கள், (நான் ஸ்டீராய்டல் ஆன்டி இன்ஃப்ளம்மேட்டரி ட்ரக்) NSAID வலி நிவாரணி மாத்திரைகளுக்கு அலர்ஜியாகும் உடல்நிலை உடையவர்கள், மற்றும் ஃப்ளு, சின்னம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட இள வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்க கூடாது.

மேலும் Reye's syndrome என்ற மோசமான பாதிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் தன்மையுள்ளதால் கவனத்துடன் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் ஆஸ்பிரின் எடுப்பது நல்லதல்ல.
இன்றும் உலகில் அதிகமாக விற்பனையாகும் மாத்திரைகளில் ஒன்றாக ஆஸ்பிரின் உள்ளது.

எழுதியவர் சகோதரி. Nadhira Deen


ஆதார சுட்டிகள் :
read more "வலி நிவாரணி "

Monday, April 10, 2017

மின்னல் பற்றிய ஆராய்ச்சி


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

தன் மகளின் பள்ளிப் பாட புத்தகத்தின் அனுபவத்துடன் மின்னல் பற்றி தனது அறிவியல் ஆராய்ச்சியை துவங்கும் சகோதரி.Umm Afnan (மூன்றாமிடம் பிடித்த கட்டுரை) 


மின்னல் 


போனவாரம் என் சின்ன மகள் பள்ளிக்கு போய் வந்து அம்மா உனக்கு ஒரு இன்ட்றஸ்ட்டிங்க் ஸ்டோரி சொல்லவா என கண்கள் விரிய கேட்டாள் சொல்லுடா தங்கம் என்றேன்.....அப்போ எனக்கு இப்படி எழுத தோணல, ஆனால் அவள் பள்ளியில் நடந்த பாடத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தவுடன் , அறிவியல் பற்றி எழுத சொன்னாங்களே போனவாரம் மகள் சொன்னதை எழுதலாமே என தோன்றியது. அதன் விளைவாக உருவானதே மின்னல் பற்றிய ஆராய்ச்சி பதிவு.

ஹைஃபா: இன்னைக்கு எங்க டீச்சர் மின்னல் பற்றி பாடம் எடுத்தாங்கமா செம இன்ட்றஸ்ட்டிங்க்கா இருந்துச்சு நீயும் கேளேன் என மகள் விழிகள் விரிய சொல்லவும் நான் கேட்க ஆரம்பித்தேன்.
ஹைஃபா: எப்படி உருவாகுது தெரியுமா?
நான்: தெரியாதே...
ஹைஃபா:: மேகங்கள் மூலம்தான் உருவாகுதாம். ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன இவை இரண்டும் உரசுவதாலேயே நமக்கு மின்னல் தெரிகிறதாம் வேகமான இடி சத்தத்தையும் நாம் கேட்கிறோம் என்று டீச்சர் சொன்னாங்கமா.
இடியின் சத்தம் நம் காதுகளை எட்டும் முன் மின்னலோட வெளிச்சத்தை நாம் பார்க்க முடியும் என கூறி அதன் வேகம் பற்றி சொன்னாங்க. எனக்கு புரியல, ஆனால் இரண்டும் ஒன்றுதான் பட் ஒலியை லேட்டாகவும் ஒளியை விரைவாகவும் பார்க்கிறோம் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

( மின்னல் ஒளியோட வேகம் பூமியை அடைய எடுத்துகொள்ளும் வேகம் ஒரு வினாடிக்கு 300000000 மீட்டராம், இடியோட ஒலி பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வினாடிக்கு 340 மீட்டராம்)

இப்படி ஏற்படும் இந்த மின்சாரம் பூமிக்கு வருகிறது
இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது ,அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.


கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 "ஈ" அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 ) இந்த அளவுக்கு வெளியாகும்
பூமிக்கு வரக்கூடிய மின்சாரம் தனக்கு அருகில் எது இருக்கிறதோ அதன் மீது முதலில் படும்.
எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமான விஷயங்கள் என் மகள் தான் கற்றதை என்னிடம் சொன்னாள்.

எச்சரிக்கை


ஹைஃபாமின்னலை பார்த்தால் நாம் என்ன செய்யனும் தெரியுமா உயரமான கட்டிடங்கள் அருகில் நிற்க கூடாது, அதன் அருகில் தாழ்வான கட்டிடம் இருந்தால்  நிற்கலாம்.

உயரமான மரங்களருகில் நிற்க கூடாது, அதன் அருகில் உயரம் கம்மியான மரமிருந்தால் நிற்கலாம். வெட்டவெளியான பூமியில் நம் பாடி பார்ட் எதுவும் படாமல் செப்பல் போட்டிருந்தால் செப்பல் மட்டும் பூமியில் படற மாதிரி உட்காரலாம். அப்பதான் நமக்கு மின்னலிலிருந்து வெளிப்படும் மின்சாரத்தால் பாதிப்பில்லை

நான்: ஏன் உயரத்திற்க்கு பக்கத்தில் நின்றால் தாக்கும், வெட்டவெளியில் தாக்கும்? உயரம் கம்மி பில்டிங் பக்கத்தில் இருந்தால் நிற்கலாம்னு சொல்றியே ஏன்? நாம் ஃப்ளைட் உயரமாதானே பறக்கிறோம் காரில் வெட்ட வெளியில் போகிறோம் அப்ப ஏன் தாக்கவில்லை?
ஹைஃபா: சின்ன சிரிப்புடன் ஹய்யோ அம்மா தனக்கு நியரஸ்ட்டா எது இருக்கோ அதன் மேலதான் மின்சாரம் படும் உயரமான பில்டிங்ல படும் அப்ப பக்கத்துல நீ நிற்க கூடாது.
கார் மற்றும் ஃபிளைட்டில் பெயின்டுக்கு உள்ளே பிளாஸ்டிக் மேற்பரப்பு வச்சுதான் தான் தயாரிப்பாங்க. அறிவியலை படிச்சுட்டுதான் அவங்க பிரிகாஷனோட தயாரிப்பாங்க.
வெட்டவெளில நீ நடக்கும்போது செப்பல் போட்டிருந்தா உன்னை மின்சாரம் தாக்காது. அந்த சமயம் பூமியில் உன் பாடி பார்ட்ஸ் எது பட்டாலும் அம்புட்டுதான்
நான்: ஹைஃபா!!!!!! 
இப்பதான் என் அம்மம்மா மேகம் இருண்டால் திட்டுவது நினைவுக்கு வருது. வானம் கருக்குது மின்னல் வெட்டும் பச்சை மரத்துக்கு கீழே நிக்காதீங்க வெளியே தனியா போகாதீங்க எதாச்சும் ஒரு மரத்துக்கு கீழே ஒதுங்காதீங்க இப்படிலாம் சொல்வாங்க.

துஆவும் ஓத சொல்வாங்க.

ஏனு கேட்டால் தென்னைமரம், பனை மரத்துல இடி இறங்கும்னு சொல்வாங்க. நானும் அது போன்ற சமயங்களில் சில நேரம் மரங்கள் எரிவதை கண்ணால பார்த்து இருக்கிறேன்.மின்னலில் உருவாகும் மின்னூட்டதின் கசிவினால் ஏற்படும் ஷாக்லதான் மரம் எறிஞ்சுச்சுனு இப்பதான் புரியுது மகளே!!

மின்னல் தாக்கி விவசாயி சாவுனு படிச்சிருக்கேன், அவங்க செருப்பு போடாமத்தான் எங்க காலத்துல நடப்பாங்க ஹைஃபா
ஹைஃபா: ஓஹ் அப்ப கிரேன்டகிரேன்ட்மாக்கு தெரிஞ்ச பாதுகாப்பு கூட உனக்கு தெரியலை வெரிகுட் மம்மி.
(மேற்கூறியது அனைத்தும் கடந்த வாரம் நடந்தது)

இன்று காலை 
நான்: அல்லாஹ் குர்ஆனில் மின்னலை பற்றி சொன்னதையும் படிக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு ஹைஃபா!!!
ஹைஃபா: மா கிரியேசன்ஸ் தான் இப்படி ஒன்று ஒன்றா ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கனும், ஆச்சரியபடனும். அவன் அனைத்துக்கும் கிரியேட்டர்மா ஹி நோஸ் ஆல் மா.....
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)
மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
(மிஃராஜ் போன புராக் பற்றி புகாரியில் 3207)
புராக் எனும் மின்னல் வேக வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது என அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக ஹதீதில் பதியப்பட்டிருக்கிறது.

நாம் மின்னலின் வேகத்தை பார்த்தோம். ஒரே இரவில் இந்த வேகம் இருந்ததாலேயே விண்வெளிக்கு போய் நபியவர்கள் திரும்பி இருக்காங்க அல்லாஹு அக்பர்.  சுப்ஹானல்லாஹ்...
மின்னல் வெட்டும் போதும், இடி இடிக்கும் போதும் நபி(ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதினார்கள்.
اَللّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَاتُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذالِك

பொருள்- யாஅல்லாஹ்.. உனது கோபாத்தால் எங்களைக் கொன்று விடாதே, உனது வேதனையால் எங்களை அழித்து விடாதே.. மாறாக அதற்கு முன் எங்களுக்கு நலத்தைத் தருவாயாக...(திர்மிதீ)

யா அல்லாஹ் அனைத்து பிள்ளைகளுக்கு ஈருலகக் கல்வியிலும் விளக்கத்தை பெறும் ஆற்றலை தருவாயாக ஆமீன்.

read more "மின்னல் பற்றிய ஆராய்ச்சி"