Monday, August 01, 2016

குழந்தையின் முதல் உரிமை!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

இவ்வுலகில் உள்ள அனைத்துமே மனிதனுக்காகத் தான். ஆனால் உண்மையென்னவெனில் இந்நவீன காலத்தில் மனிதனின் ஆரோக்கியத்தை விலைகொடுத்துத்தான் மற்ற அனைத்தும் பெறப்படுகின்றன. இதில் முதன்மையானதாக அங்கம் வகிப்பது, தாய்ப்பால். எவ்வளவு படித்தவர்களானாலும் இன்றும் தாய்ப்பாலின் அருமை புரியாமல் பிறந்த குழந்தைக்குப் புட்டிப்பால் தருவதும் தாய்ப்பாலின் குணங்கள் கொண்டதாகத் தவறாகப் பரப்பப்படும் ஃபார்முலா பால் தருவதும் அறியாமையினால் விளைவதே. (தாய்ப்பால் அறவே கொடுக்க இயலாதவர்கள் தவிர).

இன்று உலகத்தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து சில விழிப்புணர்வுத் தகவல்களைக் காண்போம். இது தாய்ப்பாலின் குணங்கள், அது குழந்தைக்கு எந்தளவு உடல்வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் உதவுகிறது என்று கூறும் பதிவல்ல.நாம் அனைவரும் இத்தகவல்கள் அனைத்தையும் அறிந்தேவைத்துள்ளோம். எனினும் தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் எல்லாம் அறிந்தவர் ஆகிவிடமாட்டார், அவற்றைச் செயல்படுத்தாதவரை. 


சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவியது. பொதுவிடத்தில் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயை, இன்னொருவர், அவரும் ஒரு பெண், கோபத்தில் திட்டுவது அந்த வீடியோவில் பதியப்பட்டிருந்தது. ஏன்? பொதுவிடத்தில் குழந்தைக்கு உணவூட்டுவது அத்தனை பெரிய குற்றமா? இச்சம்பவம் நிகழ்ந்தது அரைகுறை ஆடைக்குப் பெயர் போன மேற்கு நாட்டில் என்பது அடுத்த அதிர்ச்சி. முதலில் தன் குழந்தைக்கு உணவூட்டுவது ஒரு தாயின் உரிமை. அவ்வுரிமையைப் பறிக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமை இல்லை. அடுத்தது, அப்பெண் பாலூட்டுவது குற்றமாக, பிற ஆண்களைக் கவரக்கூடியதாகக் கருதிய அவர், அரைகுறை ஆடையணிந்து செல்லும் பெண்கள் ஒவ்வொருவரிடமும் தன் கோபத்தை வெளிப்படுத்த இயலுமா? அனைத்திற்கும் மேலாக, பசித்தழும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைக் கூட பாலுண்ர்வைத் தூண்டுவதாகக் கருதப்படும் முட்டாள்தனத்தை இச்சமூகத்தில் விதைத்தது யார்? அவர்களை நோக்கி நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளோமா? 

இவ்வாறு யாருக்கேனும் நிகழ்ந்தால் அச்சூழலை எதிர்நோக்கவுல் சில அமைப்புகள் அறிவுரைகள் வழங்கியுள்ளன:
1. தாய்ப்பால் கொடுப்பதை எதிர்ப்பவரது கருத்தை நாசூக்காகவோ நகைச்சுவை கொண்டோ எதிர்கொள்ளல்.
2. தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை அவருக்கு உணர்த்துவது
3. எதுவாகினும் அவரது கருத்துக்கு மதிப்பு கொடுத்துத் தன் உரிமையை விட்டுக்கொடுக்காமல் பதிலளித்தல்.

எந்தத் தாயும் தந்தையும் தம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தம் சக்திக்கு அப்பாற்பட்டவைத் தவிர்த்து, எக்காராணத்துக்காகவும் தளர்த்திக்கொள்ளக் கூடாது. இன்றைய தாய்மார்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவது தம் பணிச்சுமையால் குழந்தைக்குத் தாய்பால் கொடுக்க முடியாமல் போவது. தம் பணியாளர்கள் நலனில் அக்கறை கொள்ளும் நிறுவனமே சமூகத்தில் வெற்றி பெறும். பேறுகாலம் முடிந்த 2,3 மாதத்திற்குள்ளேயே பணியில் சேர நிர்ப்பந்திப்பது அப்பெண்களை மனதளவில் எந்தளவில் பாதிப்புள்ளாக்கும் என நிறுவனங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். குறைந்தது முதல் 4,5 மாதங்களுக்காவது குழந்தைகளுக்கென தனியிடம் ஒதுக்கப்பட வேண்டும். இதன்மூலம் அவர்களது பெண் ஊழியர்கள் சிறந்த முறையில்  பணியாற்ற உதவுவதை அவர்கள் கண்கூடாகக் காணலாம். என்னதான் பம்ப் செய்து தாய்ப்பாலைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு வந்தாலும் தாய்ப்பால் ஊட்டும்போது தாய்க்கும் சேய்க்குமிடையே ஏற்படும் பந்தத்தை வேலைக்குச் செல்லும் ஒரே காரணத்திற்காக இழக்கவோ பறிக்கவோ எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. 

பணியிடத்தில் சமீபத்தில் பிரசவித்த பெண்ணொருவர் படும் பாட்டை இந்த அனிமேட்டட் வீடியோவில் காணலாம்:இதுவரையில் தாய்ப்பாலின் அனைத்து நற்குணங்களும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நம்மைப் படைத்த இறைவனுக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்ததால் தான், தன் மறையிலும் தாய்ப்பால் வழங்குவதைக் குறித்து அறிவுறுத்தியுள்ளான். 


31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்...
கணவன் - மனைவி விவாகரத்து பெற்றால் கூட, மனைவி விரும்பினால் தொடர்ந்து தாய்ப்பால் குழந்தைக்கூட்டலாம். இல்லாதபட்சத்தில், செவிலித்தாய் கொண்டு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்றே கூறுகிறானே தவிர, அதற்கீடாக வேறதையும் குழந்தைக்கு வழங்குவதை அவன் அறிவுறுத்தவில்லை... சுப்ஹானல்லாஹ். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்சிலையிலும் குழந்தையின் உரிமையைப் பறிப்பது தவறு என்று நமக்கு அழகாக உணர்த்துகிறான். தக்கக் காரணமின்றி பிறர் உரிமையைப் பறிப்பவர் அநீதி இழைத்தவராவார். 

65:6. உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டுமல்ல.. ஒரே தாயிடம் பாலருந்தியவர்களும் சகோதர, சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். இவர்கள் பால்குடிச்சகோதர, சகோதரிகள் ஆவர். அதாவது, திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்டவர்கள்

2645. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்' என்று கூறினார்கள்.
Volume  Book :52

2646. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்' என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்' என்று கூறினார்கள்.
Volume  Book :52

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் நாம் அறியவேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், சிலர் அதிகப்படியாகச் சுரக்கும் தாய்ப்பாலை, தாய்ப்பாலின்றித் தவிக்கும் குழந்தைகள் உள்பட, பிற குழந்தைகளுக்கு அளிக்கின்றனர். இது மிகவும் அறிவுடைய செயல் எனினும், ஒரே தாயிடம் பாலருந்தும் குழந்தைகள் பின்னாளில் திருமண பந்தத்தில் ஈடுபட இயலாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் அவரது சந்ததிக்கும் இச்சமுகத்துக்கும் இன்றியமையாத் தேவையாகும். உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறந்த சிலமணி நேரத்தில் தாயை இழந்து தாய்ப்பால் இன்றி தவிக்கின்றன. அதேபோல் குழந்தையை இழந்த எத்தனையோ தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பதைத் தடுக்க மருந்துகள் உட்கொள்கின்றனர். இவை போன்ற எந்த பிரச்சினையுமின்றி, தவறான தகவல்களாலும் நம்பிக்கைகளாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தால் அதைவிட முட்டாள்தனம் இவ்வுலகில் வேறில்லை.

உங்கள் சகோதரி,
பானு.


1 comment: