Thursday, July 21, 2016

ஓலா விவகாரம் (?!) அடையாளங்காட்டிய ஹீரோ


ந்த ட்ரைவர்  உங்க உறவினரா?

-இல்லைங்க

முஸ்லிமா?

-இல்லைங்க

முன்னபின்ன தெரிந்தவரா?

-வேல கேட்டு வந்த  பத்து நாளைக்கு முன்னதான் தெரியும்ங்க.

அப்படிஎனில் உங்க கிட்ட வேலைக்கு சேர்ந்த பத்து நாளில்  அவரின் மீதான கரிசனம் எதற்கானது?

-கத்திய  கையிலேயே   வச்சுக்கிட்டு கொல  செய்ய அலையுற சைக்கோ இல்ல  அவன்.   படிச்சு பட்டம் வாங்கியும்  வேலையில்லாம திண்டாடும் தந்தையில்லாத   குடும்பத்துக்காக  உழைக்கும் அப்பாவி இளைஞன்.  ஓர் சிந்திக்கிற  மனுஷனா  அவனோட   தரப்பின் நியாயத்துக்கு துணை நிற்க வேண்டுமில்லைங்களா?


சிலிர்க்கச் செய்தார் காஜா ஷரீஃப். யார் அவர் ?


        நடுநிலை பேணுவதாய் நாம் நம்பிக்கொண்டிருக்கும் தி ஹிந்துவால்    ஓர் பக்க நியாயத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டும்   திடீர், குபிர், இன்ஸ்டன்ட்  போராளிகளால்  கொலைகாரன் போலச் சித்தரிக்கப்பட்டவருமான  ஓலா கேப் ஓட்டுநர் தெரியுமல்லவா? அவர்  பயன்படுத்திய காரின் உரிமையாளர் தான் காஜா ஷரீஃப்.   
         திரு மாமல்லன் அவர்களால் தன் பதிவில் (ங்கே சுட்டுக ) அற்புதமானவர் என அடையாளங்காட்டப்பட்ட  போது தான் சகோ காஜாவின்  மீதான ஆர்வம் கூடியது. உடனே அவரை தொடர்புகொண்டோம்.  " கொஞ்சம் பொறுங்க,  அஸர் தொழுதுட்டு வந்து தகவல் சொல்றேன் " என்று சொல்லிவிட்டுச்  சென்றார். பொறுமையாக வரட்டும்.. அதற்குள் அவரைப்பற்றி சேகரித்த தகவல்களை  வாசித்துவிடுங்கள்.

        காருக்கு ஓனர் என்றதும் பத்து பதினைந்து காரை வைத்து பலரையும் வேலைக்கு வைத்திருக்கும் தொழிலதிபர் காஜா என்று  நீங்கள் நினைத்திருந்தால் உங்கள்   எண்ணங்களை தூக்கிவீசுங்கள். நாங்களும் அப்படியாக நினைத்து தான் பேசினோம். 

        ஓர் பெண்ணின் கோபத்தால், பொறுப்பற்ற ஊடகங்களின் தீனிக்காய் பலிகாடாவானது ஓட்டுநர் மட்டுமல்ல. காஜா ஷரீஃப்பும் தான்.  பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை-தாம்பரம் . பி,எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு  படிப்புக்கேற்றார்போல் சம்பளம் கிடைக்காத நிலையில் தாய்நாட்டை விட்டு  பாலை மண்ணில் 9 வருடங்கள் வெந்தவர்.   பட்ட கஷ்ட்டங்களால் வெளிநாட்டு மோகம் கரைந்ததும்  சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்து சொந்த தொழில் தொடங்க போதுமான பணம் சேர்ந்த நிலையில் சொந்த மண்ணுக்கே திரும்பினார்.

        சொந்தமாய் கார் வாங்கி ஓட்ட ஆரம்பித்தார். நேர்மையின் பரிசாய், ஒழுக்கத்தின் பலனாய்  கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 3 கார்களுக்கு சொந்தக்காரர் ஆனார். விக்ரமன் படம் போல் ஒரே பாட்டில் அல்ல... கிட்டதட்ட அவரின் 6 ஆண்டுகால முன்னேற்றம் அது.

          அல்லாஹ் தன் நல்லடியார்களின் ஈமான் எத்தகையது என்பதனை அறிய சோதனைகளின் மூலம் சோதனைச் செய்வான். அப்படியாகத் தான் சென்னை பெருமழை அவரின் அன்றாட வாழ்வை புரட்டிப் போட்டிருந்தது. மழையில் அவர் வைத்திருந்த மூன்று கார்களும்  அடித்துச்செல்லப்பட, எப்படியோ இரண்டை மீட்டுவிட்டார்.   இன்னொன்றோ   மழையுடன்   காணாமல் போய் விட்டது !

        மீட்டுவிட்ட இரண்டு கார்களும் நல்ல நிலையில் இருக்கவில்லை.  அதற்கு சில லட்சம் செலவழித்து புதுப்பித்து  மீள்வதற்குள் அவரின் பலநாள் சேமிப்பு கரைந்திருந்தது.  அல்லாஹ்வின் நாட்டம் என   பொறுப்பை சாட்டிவிட்டு கடந்தார்.

        அடுத்ததாய் சோதனை-  இப்போது மாட்டிக்கொண்ட ஓட்டுநர் வழியே வந்தது.  தொழுது முடித்து  சிறிது நேரம் கழித்து நினைவில் வைத்து மீண்டும் போனில் அழைத்த  காஜா ஷஃரிப் இப்போது தொடர்ந்தார்.

        " நான்  ஒரு கார் ஓட்டுவேன். இன்னொரு கார   தெரிஞ்சவங்களுக்கு வாடகைக்கு விட்டுடுவேன். எப்பவும் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் கார் ஓட்ட கொடுக்குறது வழக்கம்.  என்னிடம் ட்ரைவராக வேலை பார்த்த நண்பர் ஒருவர்,   ஒரு பையனை கூடிட்டு வந்து “இவன் ரொம்ப கஷ்ட்டப்படுறான், தகப்பனில்லாத பையன்,  ஏற்கனவே அனுபவம் இருக்கு, நல்லா கார் ஓட்டுவான், நம்பி கொடு" என்றார்.  அவனோட ஏழ்மை என்னைய ரொம்ப யோசிக்கவிடல. என்கிட்ட ஓட்டுன பத்து நாளும் எந்த கம்ளைன்டும் இல்ல.  ரொம்ப கரேக்ட்டா இருந்தான். இந்த பிரச்சன நடந்தப்ப கூட எனக்கு தெரியாது, போலிஸ் கேஸ் ஆன பின்னாடி தான் தெரியும்.போலிஸ் எனக்கு கால் பண்ணி  விஷயத்தை சொன்னதும் ஒத்துழைப்பு கொடுக்குறதா சொன்னேன். நானே அந்த பையனையும் காரையும்  எடுத்துட்டு அவங்க சொன்ன இடத்துக்கு போய்ட்டேன். அப்பதான் அவன் எல்லா வெவரத்தையும் சொன்னான்."     என்றார்.

"என்ன இருந்த போதும் அவர் செய்தது தப்பு தானே" என நாம் கேள்வி வைத்த போது தொடர்ந்தார். 
        " நிச்சயமாக தப்பு தான்... மேல்தட்டு வர்க்கத்தினருக்கு 127 ரூபாய் அற்பமானது. ஆனால் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி  சென்னையின் நெருக்கடியில்   127 ரூபாய் எனும் உழைப்பின் கூலியை  விட்டுவிடுவது  எந்தவொரு உழைப்பாளிக்கும் சாதாரண விஷயமில்ல . அப்படியும் கூட  "பொறுக்கி"ன்னு தகாத வார்த்தைகள  ஒருவர்  அள்ளி வீசும் போது   பொறுத்துட்டு போகும் அளவுக்கு பக்குவமானவங்களா எல்லாரையும் எதிர்பார்க்கவும் முடியாதுங்களே? . நான் அவனின் செயல நியாயப்படுத்தல... இருந்தும் அவன்கிட்ட சொன்னேன் " முன்னவே சொல்லியிருந்தா  அந்த அம்மா கிட்ட போய் மன்னிப்பு கேட்டிருக்கலாமே, மன்னிப்பு கேக்குறதுனால நாம ஒன்னும் குறைஞ்சுட மாட்டோம்,  நியாயம் நம்ம பக்கமே இருந்தாலும்  ஒரு பொண்ண  மிரட்டினது தப்புதான்,  அவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணாம எங்கிட்ட வந்திருந்தா நாம அந்தம்மா மேல போலிஸ்ல கம்ளைன்ட் பண்ணியிருந்திருக்கலாம். இப்போ தேவையில்லாம நீ  மாட்டிக்கிட்ட " என்றேன்.  எதிர்காலம் குறித்து கவலைப்பட்டவனாய்  தலைகுனிந்து அமைதியானான்.    

போலிஸ்ஸின்  தரப்பு எப்படி நடந்துகொள்கிறது ?
        காலையில்  எனக்கு போன் போட்டு கார் ஓட்டின ட்ரைவர் பத்தி கேட்டாங்க.  என்கிட்ட தான் இருக்கான், கூடிட்டு வரேன் சார்-ன்னேன். அதெல்லாம் வேண்டாம் , நாங்களே வரோம்ன்னாங்க.  பரவால்ல , நானே    பேசி கூடிட்டு வந்து விடுறேன்னு சொன்னதும்   சரின்னாங்க. வாக்கு கொடுத்தபடி கொண்டு போய்  ட்ரைவரை  சேர்த்துட்டேன்.  அவன்கிட்டையும் விபரீதத்த புரியவச்சு  ,  தைரியம் சொல்லி   அவன் சகஜமானதும் கூடிட்டு போனேன்.
        போலிஸ்ஸார பொறுத்த வரைக்கும் ரொம்ப நியாயமா நடந்துக்குறாங்க.   அவங்க   வழிகாட்டுதலில் தான்  அடுத்தடுத்து ஆக வேண்டியவைகளை செய்தேன். வக்கீல்  பார்த்தது, ஜாமீன்க்கு அப்ளை பண்றதுன்னு சட்ட உதவிலாம் அவங்க  வழிகாட்டலைன்னா கஷ்ட்டம் தான்..

ஓலா-வில் உங்கள் வாகனத்துக்கான அனுமதியை  ரத்து செய்துவிட்டார்களல்லவா? இதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பற்றி… 
        ஆமாம் கடனாளியாகிட்டேன் என்பதுதான் உண்மை. ஓலாவில் 2வருடமாக என் காரை இணைத்திருந்தேன்.  அது  ஒன்றுதான்  வெள்ள பாதிப்பின் என் நிலையை மீட்டிட்டிருந்தது.  இந்த ஒரே பிரச்சனையில் மொத்தமும் அடிபட்டுவிட்டது.  இன்னொரு காருக்கான தவணை, குடும்ப செலவு, கேஸ்க்கான செலவு….  நெனச்சாவே மலைப்பா இருக்குது. இருந்தாலும் அல்லாஹ் இதுலையும் எனக்கு நன்மையை நாடியிருக்குறதா நினைக்கிறேன். 

அவரை  உங்களுக்கு தெரிந்து பத்து நாள் தானே  ஆகிறது ?  மாட்டிக்கொண்டதும் அவர் தானே?  ஏன் உங்க கைகாசை போட்டு  ஜாமீனில் எடுக்க முயற்சிக்கிறீங்க.  இப்படியொரு கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும்! நீங்களும் கஷ்ட்டமான சூழலில்  இருப்பதால் கேட்கிறேன்.
              அதெப்படிங்க விட முடியும்.   மனசு குத்தாதா?   இந்த மீடியாகாரங்க ஊதி  பெருசாக்கிய அளவுக்கு எதுவும்  நடக்கல என்பது புரிந்தும்    , உதவி கிடைக்காம தனியே நிற்பவனை அப்படியே விட்டுட்டு வர  மனசு இடங் கொடுக்கல.  நமக்கெந்த பாதிப்பும் இல்ல, தப்பிச்சுட்டோம் என பெருமூச்சு விடும் அளவுக்கு நான் அற்பமானவனா இருக்க விரும்பல. இன்னைக்கு இழந்ததெல்லாம் அல்லாஹ் நாடினால் நாளையே தருவான்னு நம்புறேன்.  இப்படிதானே போன சோதனைகளிலும் மீண்டேன்? எனக்காக துஆ செய்யுங்க.

பொதுவாகவே ஓலாவாகட்டும் இன்னபிற நிறுவனங்களாகட்டும், ஏன் தனியே கார் ஆட்டோ ஓட்டுபவராகவேயிருக்கட்டும்... அடிக்கடி இப்படியான பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார்களே? 
        மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது.  எனக்கு ஒரே கொள்கை தான். காரில்  சவாரிக்கென்று ஏறிட்டா அவங்க  என் பேமிலி  மெம்பரா நெனச்சுக்குவேன்.  நம்ம குடும்பத்தாளுங்கள எவ்வளவு கன்னியமா நடத்தி,  பக்குவமா சேர வேண்டிய இடத்தில் பத்திரமா சேர்ப்பிப்போமோ அப்படிதான் நானும் நெனைப்பேன்.  குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி இருந்துட்டா கூட   டிரைவர்களின் தரப்பிலிருந்து எந்த   பிரச்சனைகளும் நேராது. அதே போல மக்களும்  சக  மனுஷனா  டிரைவர்களை மதிக்க கத்துக்கணும்.  ட்ரைவர்லாம் இப்படிதான் என்ற இழிவான கண்ணோட்டத்தை  விடுவிச்சுக்கணும். 

மக்ரிப்க்கு டைம் ஆச்சுங்க.  இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக்குவோமா"

-என்று அவசவசரமாய் விடைபெற்றார். ஆறுதல் தேவைப்படுபவரல்லர் சகோ காஜா.   ஒவ்வொரு அடியிலும் விழக்கூடிய சராசரி மனிதரே ஆகினும், அல்லாஹ்வின் உதவியை நம்பி , மீண்டும் எழும்  அசாதரண பக்குவம் கொண்ட இறை நம்பிக்கையாளர்.    இந்நிகழ்விலிருந்தும் விரைவில் மீளவும், மன உளைச்சல்கள்   நீங்கவும்,  இழந்ததெல்லாம்  மீட்கவும் அவருக்காய் பிரார்த்திப்போம்.

        தனிநபர்கள் செய்யும் அவர்களுக்கான புரட்சிகளை ஆதரிக்கிறோம்... துணை நிற்கிறோம். தவறல்ல!  அப்புரட்சிகள்  பழிவாங்கும் நடவடிக்கையாய் மாறுகையில் அல்லது  லாபத்திற்காய் உருவெடுக்கையில்   அடிதட்டு மக்களின் வாழ்வை எந்தளவு தலைகீழாக புரட்டி போடுகிறது என்பதையும்  சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதற்காகவே இப்பதிவை மக்கள் மன்றத்தில் சமர்பிக்கிறோம். 

        அல்லாஹ் நம்மை நடுநிலையாளர்களாக்கி சிறப்பித்துள்ளான்.  சரி எது ? தவறு எது? என்று முற்றும் அறிந்திடாத போது  ஒரு பக்கமாய் சாய்ந்து இன்னொரு  தரப்புக்கு தீர்ப்பளிப்பதை  இப்பதிவில் கவனமாய் தவிர்த்திருக்கிறோம். அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன். பாதிக்கப்பட்டவருக்கு அவனே சிறந்த நீதியாளன். 

பேட்டியும் ஆக்கமும் -ஆமினா முஹம்மத் 
உதவி  : டீக்கடை முகநூல் குழுமம்

10 comments:

 1. சகோ. ஆமினா,
  அருமையான பேட்டி.
  அற்புதமான ஆக்கம்.
  ஜஸாக்கல்லாஹு க்ஹைரன்.
  சகோ.காஜா ஷரிஃப் அவர்களுக்கு, ஈருலகிலும் இறைவன் நற்கூலி வழங்கி நல்லருள் புரிவானாக. ஆமீன்.

  ReplyDelete
 2. நல்ல நேர்த்தியான எதார்த்தத்தை வெளிப்படுத்தும் பதிவு...

  சரியான கோணம்...

  தன் செயல்களின் மூலம் தன் மார்க்கத்தை அழகாக எத்தி வைக்கும் இப்படியானவர்களுக்கு அல்லாஹ் நிறைந்த நற்கூலி வழங்குவானாக...

  ReplyDelete
 3. நல்ல நேர்த்தியான எதார்த்தத்தை வெளிப்படுத்தும் பதிவு...

  சரியான கோணம்...

  தன் செயல்களின் மூலம் தன் மார்க்கத்தை அழகாக எத்தி வைக்கும் இப்படியானவர்களுக்கு அல்லாஹ் நிறைந்த நற்கூலி வழங்குவானாக...

  ReplyDelete
 4. தெளிவு ஏற்படுத்தும் சிறந்த பதிவு

  ReplyDelete
 5. உண்மை புதைவதில்லைஒருபோதும்
  புதைவதாய் தோன்றும்போது
  பிம்மங்கள் தலைதூக்கியாடும்
  பின் மாழும்...

  ReplyDelete
 6. அருமை. சிறந்த களத் தொகுப்பு சகோதரி.

  ReplyDelete
 7. நல்ல கட்டுரை. வியக்க வைக்கிறார் சகோ. ஹாஜா. எளியவர் அவரிடம் நமக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

  ReplyDelete
 8. என்னதான் நடந்தது என்று சொல்லவில்லையே... உண்மையில் என்ன நடந்தது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 9. சிறப்பான பேட்டி. காஜா அவர்களின் உழைப்புக்கும் நேர்மைக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும்.அவரது பெருந்தன்மை பாராட்டுக்குரியது

  ReplyDelete