Tuesday, July 19, 2016

கருப்பு வெள்ளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

இன்றைய தலைமுறையினர் பல துறைகளில் பெற்றிருக்கும் அறிவாற்றல் சென்ற தலைமுறையினருக்கு மிகவும் வியப்புக்குரியதாகவே உள்ளது. நாம் எட்டாம் வகுப்பில் படித்ததை நான்காம் வகுப்பிலேயே புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களாகத் திகழ்கின்றனர். இன்னும் அவர்களது பொது அறிவும் அடையும் வெற்றிகளும் தொடும் தூரங்களும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அதிகமாகிக்கொண்டே செல்வதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம், சில விஷயங்களைத் தவிர. ஆம், இன்றைய தலைமுறையினரை வெகுவாக முன்னோக்கிச் செல்லவும் பின்னோக்கிச் செல்லவும் வைக்கும் ஒரு காரணி உண்டென்றால் அது அவர்களது தோல் நிறத்தின் மீதான ஈர்ப்பும் வெறுப்புமே ஆகும்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சென்ற தலைமுறையினரால் தொடவே முடியாத பல சாதனைகளைத் தூசு போல் தட்டிப்பறிக்கும் இன்றைய இளைஞர்கள் தோல் நிறம் என்ற ஒரு மாயைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?  

ஊடகங்கள் ஊட்டும் விஷம்

ஒரு பெண் தன் தோழியை ஒரு பார்ட்டிக்கு அழைக்கிறாள். அவளோ தான் கருப்பாக இருப்பதை எண்ணி தாழ்வு மனப்பான்மை கொண்டு வர மறுக்கிறாள். அந்த பெண் அவளுக்கு ஒரு சிகப்பழகு கிரீமை பரிந்துரைக்கிறாள். அதை பயன்படுத்தி அவளுக்கு சிகப்பழகு வந்ததும் அவளை சுற்றி பட்டாம்பூச்சி பறப்பதாய் உணர்கிறாள். அவளுக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது.
ஏழே நாட்களில் சிகப்பழகு, டல் திவ்யா இப்போ தூள் திவ்யா ஆகிட்டா, அங்கவை சங்கவை , இப்படி பல சினிமாக்களும் விளம்பரங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சிவப்பு மட்டுமே அழகு, தன்னம்பிக்கை அளிக்கும் நிறம் என்று மக்கள் மனதில் பதிய வைத்து விட்டது.

இப்படி ஊடகங்கள் வாயிலாக கருப்பு நிறம் கொண்டவர்களின் மனதை நோகடித்தும் , அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தான் நினைத்ததை சாதித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர்.


நாடெங்கும் நிறைந்திருக்கும் நிற பேதம்

இனவெறி என்பது எங்கோ அமெரிக்காவிலோ , ஐரோப்பாவிலோ மட்டும் நடப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. ஐரோப்பா, ஆப்பிரிக்கா , தான்சானியா, இந்தியா, மலேசியா போன்ற பல நாடுகளை சுற்றி பார்த்துள்ள தேவ் அடாலி என்பவர் சென்ற மாதம் ஒரு பத்திரிக்கை பேட்டியில் "உலகில் அதிக இனவெறி கொண்ட நாடாக இந்தியாவை பார்க்கிறேன். அங்கு தான் சொந்த நாட்டு மக்களையே அவர்களின் நிறத்தை கொண்டும், மொழியை கொண்டும் வேறுபடுத்தி சிறுமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களின் தோற்றத்தை வைத்து பட்ட பெயர் வைத்து அழைப்பதை வெகுவாக பார்த்தேன். " என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் ரேகா என்பவர் தான் மூன்று பிள்ளைகளை ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார். அவர்கள் ஆபிரிக்கர்களை போன்று கருப்பாக இருப்பார்களாம். அதனால் பள்ளியில் அனைவரும் அவர்களை ' ப்ளாக்கீஸ்' என்று அழைத்துள்ளனர். பிள்ளைகளுக்கும் புரிந்து கொள்ளும் வயது வந்து அவர்கள் அம்மாவிடம் கூறியுள்ளனர். அவர் கோபத்தில் பள்ளிக்குச் சென்று எச்சரிக்கை விடுத்துள்ளார். (india.cf/t/) .

ஒரு பெண்ணுக்குக் கரு உண்டானால் குழந்தை சிவப்பாக பிறக்க யோசனை கொடுப்பதும், குழந்தை கருப்பாக பிறந்து விட்டால் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் ' உன் குழந்தைக்கும் ஆண்டவன் நல்ல வாழ்க்கையை வெச்சுருப்பான்' என்று கூறி அந்த தாயின் மனதை நோகடிப்பதும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று பார்ப்பதுடன் கருப்பா சிவப்பா என்றும் கவனிக்கப்படுகிறது.

தற்போதுள்ள இளைஞர்கள் பலர் இஸ்லாமிய முறைப்படி வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்துத் திருமணம் செய்கின்றனர் . நிச்சயம் இது நல்ல விஷயமே. ஆனால் அதே மாப்பிள்ளை வீட்டார் ' நாங்கள் தான் ஒன்றும் வேண்டாம் என்கிறோமே , பெண்ணாவது சிவப்பாக இருக்கட்டும் ' என்று கூறி கருப்பு நிறப் பெண்களை ஒதுக்கி விடுகின்றனர். பாவம் சிவப்பு நிற பெண்களை மணந்த பல கருப்பு நிற ஆண்களுக்கு அவர்கள் நிறத்திலேயே பிள்ளைகள் பிறந்திருக்கும் விந்தையில் நாம் உணரவேண்டிய பல உண்மைகள் உள்ளன. 

மாநிறம் கூட தற்போது டஸ்கி ஸ்கின், என்று பேஷனாகவும் ட்ரெண்டாகவும் மாறி விட்டது . ஆனால் கருப்பு நிற பெண்களின் நிலை இன்றும் திருமண சந்தையில் கேள்விக்குறியாகவே உள்ளது.

நான் சில நாட்களுக்கு முன் பல்வேறு இனத்தவர் கலந்து கொண்ட ஒரு விருந்துக்குச் சென்றேன். மற்ற அனைவரிடமும் சாதாரணமாக நடந்து கொண்ட சிலர், கறுப்பினத்தவருடன் பேசுவதையும், உணவருந்துவதையும் மட்டும் செல்பீக்களும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டிருந்தனர். நிறத்தைக் கொண்டு ஒருவரை வேறுபடுத்திப் பார்க்கும் வேதனையான விஷயம் நிச்சயம் நம் தலைமுறையோடு அழிய வேண்டும். 


தூள் திவ்யா ஆவதெப்படி?


அழகு என்பது நிறத்தில் இல்லை. குழந்தைப்பருவத்தில் இருந்தே சிகப்பு/வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவமும் ஈர்ப்பும் விதைக்கப்படுகிறது. இத்தகைய மூடச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எத்தகைய பாதகத்தைச் செயல்படுத்துகிறார்கள் என சிந்திக்க வேண்டும். தன்னுடன் பயிலும் சக மாணவர்களை நிறத்தைக் கொண்டும் தோற்றத்தைக் கொண்டும் எடை போட்டு, அவற்றிற்கேற்றவாறு பழகுவதும் வெறுப்பதும் எத்தகைய சிறிய செயல்? உண்மையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் தாம். வெள்ளையாகவோ சிகப்பாகவோ இருக்கும் காரணத்தால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும் வெற்றி வெறுவதும் பெரிய விஷயமேயல்ல. கறுப்பு நிறத்தோடு இருப்பவர் விடா முயற்சியோடு பல சாதனைகள் புரிவதே போற்றப்படவேண்டிய விஷயம். 

டல் திவ்யா பல மேக்கப்புகளைப் போட்டுக்கொண்டு தூள் திவ்யா ஆவதெல்லாம் பெரிய விஷயமேயல்ல...  டல்லான ஒருவரை யார் ஒருவர் தம்வருகையாலோ பேச்சாலோ உற்சாகமும் உத்வேகமும்   பெறச்செய்கிறாரோ  அவரே வெற்றியாளர்; சிறந்தவர். 


தோல் நிறத்தின் அடிப்படைக் காரணம் என்ன?

அழகு என்பது ஆரோக்கியத்திலும் , தூய்மையான உள்ளத்திலும் தான் இருக்கிறது என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். நம் உடம்பின் நிறம் எவ்வாறு அமைகிறது என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். நம் தோலின் நிறம் ' மெலனின்' என்னும் நிறமிகளால் தான் அமைகிறது. மெலனின் அதிகமாக சுரந்தால் அடர்த்தியான நிறமும், கம்மியாக சுரந்தால் மென்மையான நிறமும் இருக்கும். ஒருவரின் உடம்பில் சுரக்கும் மெலனின் உற்பத்தி அவர்களின் பாரம்பரியம் , வாழும் இடம் போன்ற காரணங்களால் தீர்மானிக்க படுகிறது. 

புற்று நோய், தோல் வியாதிகள் போன்றவற்றிக்குக் காரணமாக இருக்கும் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் அதிகமாக நம் உடம்பைத் தாக்காமல் மெலனின் பாதுகாக்கிறது. ஆனால் சூரியனிலிருந்து வரும் இந்த கதிர்கள் மிதமான அளவு நம் உடம்புக்கு மிக அவசியம். சூரிய ஒளி தேவையான அளவு உடம்பில் படுவது மனஅழுத்தத்தை குறைக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், குழந்தைகளுக்கு மூளை மற்றும் மன வளர்ச்சிக்கு உதவும்.. எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு மிக அவசியமான வைட்டமின் D சூரியனிலிருந்து கிடைக்கிறது.. இன்று பெரு நகரங்களில் பலரும் வெயில் படாதவாறு முகத்தை துணியால் சுற்றிக்கொண்டே செல்கின்றனர். நிறத்திற்காக இவை அனைத்தையும் இழக்க வேண்டுமா?வெயில் பட்டால் கருத்து விடுவோம் என்று பலர் சன் ஸ்க்ரீன் லோஷன்களையும் , க்ரீம்களையும் தடவிக்கொள்கின்றனர்.மெலனினை உருவாக விடாமல் தடுத்து ,தோலை வெண்மையாக்கும் வேலையை தான் சிவப்பழகு கிரீம்கள் செய்து வருகின்றன. நாம் நிறத்தை கொண்டு குழம்பிக்கொள்ளாமல் , பிற்போக்கு சிந்தனைகளை களைந்து வெற்றி நடை போட வேண்டும். நிறமா , ஆரோக்கியமா என்பதில் தெளிவு பெற வேண்டும். 

தன் நிறத்தாலோ தோற்றத்தாலோ யாரேனும் நிராகரிக்கப்பட்டால் எதிர்க்க வேண்டும். இது போன்ற ஒரு நிராகரிப்பு எவருக்கும் கிடைத்திடாமல் வழிசெய்ய போராட வேண்டும்.  தன் அறிவுத்திறனால் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

இஸ்லாம் கூறுவது என்ன?

ஒரு சீப்பின் பற்கள் போன்று அனைவரும் சமமானவர்களே என்று இஸ்லாம் கூறுகிறது. ஒருவரை விட மற்றவரை வேறுபடுத்தி காட்டுவது அவரின் அழகோ , நிறமோ இல்லை. உங்களில் உயர்ந்தவர் அதிக இறையச்சம் உடையவர்களே என்று குரான் கூறுகிறது. அது யாராக இருந்தாலும் சரியே. கருப்பு இனத்தவர் நமக்குத் தலைவராக இருந்தாலும் நாம் அவருக்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும். ( புகாரி 9:89:256)

நபி ஸல் அவர்கள் கருப்பு நிறமுடையவர்களை மிகவும் விரும்புபவராக இருந்தார்கள். அவர்களை வளர்த்த அவர்களின் வரர்ப்பு தாய் உம்மு அய்மான் கறுப்பின அடிமை பெண்ணாக இருந்தார். அவர்கள் இறக்கும் வரை நபி அவர்களின் வளர்ப்பு தாயிடம் அன்பும் , நன்றியுணர்வும் கொண்டவராக இருந்தார்கள்.

கறுப்பினத்தை சேர்ந்த உஸாமா பின்த் சையத் , ஸாத் அல் அஸ்வத், அம்மார் பின் யாசிர், மிஹஜா, அபுதர், அய்மான் பின் உபைத் . . இவர்களெல்லாம் முஹம்மது நபிக்கு உற்ற தோழர்களாக இருந்தனர். இறைவழிபாட்டுக்கு அழைக்கும் உயரிய பொறுப்பை தன் கறுப்பின நண்பர் பிலால் அவர்களுக்கே அளித்தார்கள். முடியாத நாட்களில் அவரின் கைகளில் சாய்ந்து கொண்டே மத போதனை செய்துள்ளார்கள். ( ஹெச்.ஏ.எல் .க்ரெய்க் எழுதிய பிலால் என்ற புத்தகத்திலிருந்து)

ஒரு தடவை அபுதர் (ரழி) அவர்கள் கோபமடைந்த நிலையில் பிலால் (ரழி) அவர்களைப் பார்த்து 'ஏ கறுப்பியின் மகனே!' எனக் கூறவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டபோது, 'பேச்சு எல்லை மீறிவிட்டது. இறைபக்தியாலன்றி கறுத்த பெண்ணின் மகனை விட வெள்ளைப் பெண்ணின் மகனுக்கு எவ்வித சிறப்புமில்லை' என கண்டித்தார்கள். கோபத்தின் காரணமாக நிதானத்தை இழந்த நிலையில் தான் செய்த தவறின் பாரதூரத்தை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள், உடனே நிலத்தில் கன்னத்தை வைத்துப் படுத்துக்கொண்டு 'நான் செய்த தவறுக்காக உமது காலால் எனது கன்னத்திற்கு உதைப்பீராக' என அக்கறுபடிமையிடம் கூறினார்கள் கூறினார்கள்.

இவ்வாறு ஹதீஸும் , குர்  ஆனும் நிறத்தை வைத்து ஒருவரை வேறுபடுத்திக் காட்டுவதை முற்றிலும் மறுக்கிறது.நபி ஸல் அவர்களின் காலத்திற்கு முன் கறுப்பினத்தவர்களுக்கு ஒரு கூலியும் மற்றவருக்கு ஒரு கூலியும் வழங்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தான் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. ஆனால் , இன்றோ பல வேலைவாய்ப்புகளில் சிவப்பு நிறம் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாம் தான் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் ஜாஹிலிய்யா காலத்திற்குத் திரும்பி கொண்டிருக்கிறோம்.

ஆல்ரெடி நாமெல்லாம் அழகிகளே! 


“என் இறைவனே! என் உருவத்தை அழகுபடுத்தியதுபோல், என் உள்ளத்தையும் அழகுபடுத்துவாயாக!” -இது கண்ணாடியில் முகம் காணும்போது நாம் கேட்க வேண்டிய துஆவாகும். சிவப்பாக இருப்பவர் மட்டுமோ, திராட்சை போன்ற கண்கள் உடையவர் மட்டுமோ கேட்க வேண்டிய துஆ அல்ல, அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் கேட்கவேண்டும். அதாவது, கருத்தவர் சிவந்தவர் என ஒவ்வொருவரும் அல்லாஹ்வினால் அழகான உருவம் கொடுக்கப்பட்டவரே. அவர் ஏற்கனவே உருவத்தால் அழகாகிவிட்டார். இனி அவரது வேண்டுதல், நோக்கம் எல்லாம் உள்ளம் அழகானதாக மாற வேண்டும் என்பதே இச்சிறிய துஆவில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். நிறத்தைக் கொண்டும் தோற்றத்தைக் கொண்டும் ஒருவரை நாம் வெறுத்தோமானால் நாம் அல்லாஹ்வின் அழகிய படைப்பை விமர்சித்தவர்கள் ஆவோம். 

அல்லாஹ்,  தான் அழகாக உருவாக்கியதாகக் கூறும் படைப்புகளை அழகற்றதாகக் கருதும் ஒவ்வொருவரும் அஞ்ச வேண்டிய வசனம் இதுவாகும். 

40:64அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களைஉருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
நபி ஸல் இவர்களின் இறுதி உரையில் ஒரு பகுதி :

நீங்கள் அனைவரும் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. அரேபியரை விட அரேபியர் அல்லாதவரோ, அரேபியர் அல்லாதவரை விட அரேபியரோ உயர்ந்தவர் இல்லை, வெள்ளையரை விட கருப்பாரோ , கருப்பரை விட வெள்ளையரோ உயர்ந்தவர் இல்லை. அவற்றை தீர்மானிப்பது உங்களின் நற்செயல்களும் , இறையச்சமும் ஆகும் . ( அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700).

தோற்றத்தைக் கொண்டு தூற்றுவோருக்காக அஞ்சாதீர்கள் இளைய சகோதர சகோதரிகளே! அனைவரையும் மிகைத்தவனான அல்லாஹ்வின் பார்வையில் நாம் அனைவரும் அழகானவர்களே என்ற மிடுக்கோடு நடை போடுங்கள்.

உங்கள் சகோதரி
ஷீரின் பானு

7 comments:

 1. அருமையான கட்டுரை...
  அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக... ஆமீன்...

  ReplyDelete
 2. ///தற்போதுள்ள இளைஞர்கள் பலர் இஸ்லாமிய முறைப்படி வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்துத் திருமணம் செய்கின்றனர் . நிச்சயம் இது நல்ல விஷயமே. ஆனால் அதே மாப்பிள்ளை வீட்டார் ' நாங்கள் தான் ஒன்றும் வேண்டாம் என்கிறோமே , பெண்ணாவது சிவப்பாக இருக்கட்டும் ' என்று கூறி கருப்பு நிறப் பெண்களை ஒதுக்கி விடுகின்றனர். பாவம் சிவப்பு நிற பெண்களை மணந்த பல கருப்பு நிற ஆண்களுக்கு அவர்கள் நிறத்திலேயே பிள்ளைகள் பிறந்திருக்கும் விந்தையில் நாம் உணரவேண்டிய பல உண்மைகள் உள்ளன./// Masha Allah Great article..

  ReplyDelete
 3. அனைவரையும் மிகைத்தவனான அல்லாஹ்வின் பார்வையில் நாம் அனைவரும் அழகானவர்களே என்ற மிடுக்கோடு நடை போடுங்கள்.
  A very energetic words to our society.masha Allah unnudaya pani memmelum thodara valthukkal

  ReplyDelete
 4. அனைவரையும் மிகைத்தவனான அல்லாஹ்வின் பார்வையில் நாம் அனைவரும் அழகானவர்களே என்ற மிடுக்கோடு நடை போடுங்கள்.masha Allah.A very energetic sentence for our society.keep it up.

  ReplyDelete
 5. Jazakallah everyone for your wishes. .

  ReplyDelete
 6. Jazakallah everyone for your wishes. .

  ReplyDelete
 7. Jazakallah everyone for your wishes. .

  ReplyDelete