Tuesday, July 05, 2016

மானம் எதில் இருக்கிறது?


      
        பெருநாளைக்குப் புதுத்துணி வாங்க குடும்பத்தோடு துணிக்கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் சகோதரர். அப்போது அங்கு வந்த அவரது நண்பர், “அந்தக் கடைக்கா போற? புதுக்கடையாச்சே…. ரொம்ப நவநாகரீகமா வேற இருக்கு… பொம்பளைப் புள்ளைகளை வேற கூட்டிட்டுப் போற, ட்ரஸ்ஸை அங்க வச்செல்லாம் போட்டுப் பாக்கவேணாம்.  எங்கப் பாத்தாலும் ஒரே கேமராவை ஒளிச்சி வச்சு படம் புடிச்சி, பணங்கேட்டு மிரட்டுற கதையாத்தான் இருக்கு” என்று உண்மையான அக்கறையோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்!!கடைகளில் மட்டுமல்ல, தங்கும் ஹோட்டல் அறைகளில், தியேட்டர், அலுவலகம் போன்ற இடங்களின் பெண்கள் கழிவறைகளில்… எல்லாஇடங்களிலும்  கேமராக்கள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் அபாயங்கள்!! அட, இப்போவெல்லாம் சொந்த வீட்டுக்குள்ளேயே நிம்மதியாகக் குளிக்க, உடைமாற்ற முடியாத அளவுக்கு, இந்த கேமரா அச்சம் எல்லாரையும் பிடித்தாட்டுகிறது!!இதுபோக, நம் சொந்த மொபைல் அல்லது கேமராக்களில் உள்ள நமது புகைப்படங்களை, நம் மொபைலைத் தொடாமலேயேத் திருடி எடுக்குமளவு வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பங்கள்!! திருடி, அதை நவீன சாஃப்ட்வேர்கள் மூலம் வேறு பெண்களின் நிர்வாண உடல்களோடு ஒட்டி வலைகளில் பரப்பி விடுவதும் பெருகி வருகிறது.

முன்பெல்லாம், இது போன்ற நிகழ்வுகள் நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும் ஒன்றாக இருந்தது.  ஆனால், தொழிநுட்பமும் நாகரீகமும் மலிந்துவிட்ட இந்த காலத்தில் சாதாரண வெகுஜனப் பெண்களுக்கும் இந்தக் கொடுமை நிகழ ஆரம்பித்துவிட்டது!!
இதெல்லாம் ஏன்?

முன்பு இரகசியக் கேமராக்கள் வைத்து பெண்களைப் படம்பிடிப்பது, அந்தப் படங்களை நீலப்பட (போர்ன்) உலகத்தில் விற்பதற்காகச் செய்யப்பட்டு வந்தது.  அது ஒரு தனி உலகமாகச் செயல்பட்டு வந்ததால், குடும்பப் பெண்களின் படங்களே அதில் பகிரப்பட்டாலும் அப்படங்களைப் பார்ப்பவர்கள் வெளியில் சொல்லுவதில்லை - தாம் நீலப்படம் பார்ப்பது வெளியே தெரிந்துவிடுமே என்ற அவமானம் காரணமாக.


முன்னர், பெண்களைப் பழிவாங்க – அவர்களின் முன்னேற்றத்தில் பொறாமை கொள்வோர் அவர்களின் குணத்தின் மீது வாய்மொழியாக அவதூறு கிளப்புவதுதான் வழக்கமாக இருந்துவந்தது. டெக்னாலஜி வளர வளர, அதை ஈன வழிகளில் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை “ஃபோட்டோஷாப்” வேலைகள் செய்து, இணையங்களில் புழங்க விடத் தொடங்கினார்கள்.


அதைவைத்து, அந்த ஈனர்கள் ஒன்றுமறியா அப்பாவிப் பெண்களை மிரட்டிப் பணம் பறிக்கவும், ஏன் அப்பெண்ணையே தம் கீழ்த்தர இச்சைக்குப் பயன்படுத்தவும் செய்யத் தொடங்கினர்!!


எதனால் சாத்தியமாகிறது?

ஒரு ஆண், பெண்ணை மிரட்டி பணம் பறிக்கவோ, தன் இச்சைக்குப் பணிய வைக்கவோ எப்படி சாத்தியப்படுகிறது? காரணம், “மானம்” என்பது இங்கு உயிரைவிட மேலாகக் கருதப்படுவதாகக் காலங்காலமாகச் சொல்லித்தரப்பட்டு வருகிறது.


ஆனால், எது மானம்?


மானம் என்றால் என்ன என்பதன் புரிதலில் குழப்பம் உள்ளது. ”மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது.  ஆண்களுக்கு, அது அவரின் சுயமரியாதையை, தன்மானத்தைக் காயப்படுத்தும்படி இழிவுபடுத்திப் பேசினாலோ, அல்லது மற்றவர்களின் முன் தாக்கப்பட்டாலோ, அது அவரைப் பொறுத்தவரை பழிவாங்கத் தகுதியான அவமானம். ஆனால், பெண்களைப் பொறுத்த வரை அது “உடல்” சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. 


இதில் முரண் என்னவென்றால், உடல் வெளியே தெரியும்படி ஆடை அணியும்போது அது மானக்கேடாகக் கருதப்படுவதில்லை. மாறாக, ஒரு பெண்ணை நிர்வாணமாக அல்லது உடல் அங்கங்கள் வெளியே தெரியும்படி படம் பிடித்து போடுவதுதான் – பழிவாங்க அல்ல,  உயிர்விடத் துணியுமளவுக்கு அவமானமாக கருதப்படுகிறது.

இதற்குக் காரணம், பெண் என்றால் அவளை ஒரு உயிராக – சக மனுஷியாக அல்லாமல், உடலாக மட்டுமே பிம்பப்படுத்தி வைத்திருப்பதுதான். 


இன்றைய ஊடகங்கள், திரைப்படங்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் இதைத்தான் வலியுறுத்தி வருகின்றன. பொய்யே ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அதுதான் மக்களின் மனதில் பதிந்துவிடுகிறது.


எது பிற்போக்கு?

பர்தா/ஹிஜாப் அணிவதே பிற்போக்குத்தனம், பெண்ணை உடலாகப் பார்ப்பதன் வெளிப்பாடு என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள், உடலை வெளிப்படுத்தும் ஆடை அணிவதே  பெண்ணை உயிராகப் பார்க்க வைக்கும் என்று கூறுவார்கள். என்னவொரு தவறான புரிதல்!!

ஒரு பெண் தன் உடலை முழுமையாக மறைத்து ஆடை அணியும்போதுதான், எதிரில் நிற்பவரின் கவனம் உடலை விட்டு, அவரது அறிவை நோக்கித் திருப்பப்படுகிறது. உடலைக் காட்டும் ஆடைகள் அணியும்போது அவள் ஒரு “பொருளாகத்தான்” பார்க்கப்படுகிறாள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


சமீபத்தில் ஒரு பதிவில் வாசித்ததைப் பகிர்கிறேன்: //சவுதி அரேபியாவில் ஒருவன் ஒரு பெண்ணிடம் உன்னுடைய நிர்வாணப் புகைப்படமும், வீடியோவும் இருக்கிறது. அதை நான் சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போகிறேன் என்று மிரட்டியிருக்கிறான்.


ஒரு முஸ்லிம் பெண், கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டு சூழலில் ...அந்த பெண் சொல்கிறாள், ...எனது புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ நீ வெளியிடுவதால் எனக்கு எந்த அவமானமும் கிடையாது. காரணம், அது நான் அல்ல. என் பிம்பம் மட்டுமே. யாராலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. எனவே, உன் கட்டளைக்கு நான் கட்டுப்பட முடியாது. நீ தாரளமாக அதை வெளியிடலாம் என கூறிவிட்டு காவல்துறைக்கு தெரிவிக்கிறாள்//


இதே போன்று,  அபுதாபியில் இன்னொரு அரபு நண்பருக்கும் நிகழ்ந்தது. அவரின் மகள் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக எவனோ ஒருவன் தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டினான், அவர் அசரவேயில்லை. உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டார்.


இது போன்ற சந்தர்ப்பங்களில், இந்தியாவில் நடப்பது என்ன?  இதோ வினுப்பிரியா விஷயத்தில் நடந்தது போல,  எந்தப் பெண்ணின் முகத்தையும் தொழிநுட்ப உதவியுடன், வேறு பெண்ணின் உடலோடு இணைத்துப் போட்டு அப்பெண்ணை மிரட்டலாம். அது தன் உடல் இல்லை என்று அப்பெண்ணுக்குத் தெரிந்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்லத் துணிவின்றி அல்லது நிரூபிக்க வழியின்றி, ஒன்று மிரட்டுபவனுக்குக் கட்டுப்படுவது அல்லது உயிரை மாய்த்துக் கொள்வது என்பதுதான் இந்தியாவில் நடக்கிறது.


பர்தா அணிந்தவர்கள் பிற்போக்கானவர்கள்; தம் உடல், உடை, உரிமை குறித்த குறைந்த பட்ச அறிவுகூட இல்லாதவர்கள் என்று சொல்லப்படும் ஒரு பர்தா அணியும் பெண்ணுக்கு இருக்கும் தெளிவு, 'குறைவான உடையே சுதந்திரத்தி்ன் வெளிப்பாடு' என்ற எண்ணம் பரப்பப்படும் (திணிக்கப்படும்) நம் நாட்டில் நம் பெண்களுக்கு இல்லாதது ஏன்?


இதெற்கெல்லாம் காரணம், பெண்கள் தம் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதே காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.  அதெல்லாம் ஒரு காலம். இன்று எங்கு நோக்கினும் “கேமரா மொபைல்கள்” அல்லது கண்காணிப்பு கேமராக்கள் என்றிருக்கும் உலகில், நாம் நமக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.  


இவை தவிர, இன்றும் படுக்கையறை, குளியலறை, ஹோட்டல் அறை, துணிக்கடை என்று “சீக்ரெட் கேமராக்கள்” அதிகம் பயன்படுத்தப்படுவது, பெண்களைத் தெய்வமாக,  நதி, மலை, மரம், மழை என இயற்கையாகப் போற்றிப் பூஜிக்கும் கலாச்சாரம் கொண்ட நம் நாட்டில்தான் என்பது எத்துணை முரண்??!!


என்னதான் தீர்வு?


முதலில்,  பெண்களுக்கு தம் உடல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மானம், கௌரவம், கற்பு என்பதெல்லாம் உடல் சம்பந்தப்பட்டதல்ல, மனம் சம்பந்தப்பட்டது என்று தெளிவுபடுத்த வேண்டும். அவற்றிற்கான அளவுகோல்கள் மனிதர்களல்ல என்பதை உணர வேண்டும்.


உடல்  தெரியும்படியான தனது புகைப்படங்கள் வெளியானாலோ, அல்லது பலாத்காரம் செய்யப்பட்டாலோ அதை ஒரு விபத்து நேர்ந்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அதே போல எடுத்துக் கொள்ள வேண்டும். போகும் பாதையில் அசுத்தம் நம் உடல் மேல் பட்டால், கழுவி சுத்தம் செய்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்போமே தவிர, அசுத்தம் பட்ட உடல் பகுதியை வெட்டி வீசுவோமா? அது போன்ற தெளிவுதான் இங்கும் வேண்டும்.


சிறுவர்களுக்கு பேட் டச், குட் டச் குறித்துச் சொல்லிக் கொடுக்கும்போதே, எதிர்ப்பையும் மீறி பேட் டச் செய்யப்பட்டால் அதை உரியவர்களிடம் தெரிவித்துவிட்டு, அதை மறந்துவிட்டு, வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.


இரண்டாவது, பெண் குறித்த சமூகத்தின் பார்வை மாற்றப்பட வேண்டும். சமூகம் என்றால், பெற்றோர், உறவினர்கள், மற்றுள்ளோர்.   ஒரு பெண் தனக்கு நேர்ந்த அசம்பாவிதத்தை மறக்க நினைத்தாலும், “சமூகம்” என்ற பெயரில் இவர்களின் குத்தல்  பேச்சுகளும், கேட்கும் கேள்விகளும், கொள்ளும் சந்தேகமுமே அவளைத் தற்கொலை வரை தூண்டுகிறது.  அவள் வெறும் உடல் அல்ல, உணர்வுள்ள உயிர் என்ற எண்ணம் சமூகத்திற்கும் கட்டாயமாக ஏற்றப்பட வேண்டும். 

நம் வீட்டுப் பெண்கள் மீது நாமே சந்தேகப்படுவதுதான்,  அவர்கள் பெற்றோரிடம் மறைப்பதும், அதன் மூலம் விளைவுகள் விபரீதமாவதற்கும் காரணமாகி விடுகிறது. இந்த நிலை மாற, இருதரப்புக்குமே பெண் குறித்த புரிதல்கள் வேண்டும்.


கேரளாவில் 15 வயது சுனிதா கிருஷ்ணன்  என்ற பெண் எட்டு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  அதன் பின்னர், அவரது பெற்றோர் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. எனினும், சுனிதா தனது மன உறுதியால் வெளியே வந்து இன்று பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்காக  மறுவாழ்வு இல்லம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பாலியல் பலாத்காரத்திலிருந்து மீண்டு இது போன்று தன்னம்பிக்கையோடு வலம் வரும் பெண்கள் விரல்விட்டு எண்ணிவிடுமளவு கூட  இந்தியாவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


மூன்றாவதாக, பெண்கள் குறித்த அரசின் நிலைப்பாடு. மேற்சொன்ன இரண்டும் சாத்தியப்படுவதற்கு,  சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்; ஊடகங்கள் – திரைப்படங்கள் – பத்திரிக்கைகள் ஆகியவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். விளம்பரங்கள், சினிமாக்களில் வரும் பெண் குறித்த பார்வையில் அடியோடு மாற்றம் தேவை. இதில் அரசின் பங்குதான் முதன்மையானது, அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாக்கக் கூடியது.  


சிலமாதங்கள் முன் வந்த “பாபநாசம்” என்ற படத்தின் கதாநாயகன்,  தன் டீனேஜ் மகளை ஒருவன் ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டான் என்றதும், அவனை  மகளும் மனைவியும் கெஞ்சுவது போன்ற காட்சிகள்  இடம்பெற்றிருந்தன.   இப்படம் முற்போக்கு கருத்துகள் கொண்ட நடிகர் கமலஹாஸனின் படம் என்பதுதான் அதிர்ச்சி!! ஒரு தெளிவான புரிதல் இருந்திருந்தால்,  மேலே சொன்ன சவூதி பெண்ணைப் போல ”எனது பிம்பம் குறித்த கவலை எனக்கில்லை” என்று சொல்வதாக அந்தப் படம் இருந்திருந்தால், தமிழகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கலாம்!!


மேலும், மேற்குறிப்பிட்ட இரு அரபு நாட்டு சம்பவங்களுக்கும், உரியவர்கள் மிரட்டல்காரனுக்குப் பணியாமல் உறுதியான நிலைப்பாடு எடுத்ததற்கு, அந்நாடுகளிலுள்ள கடுமையான சட்ட நடவடிக்கைகள் முக்கியக்காரணம் என்பதையும் கவனிக்க வேண்டும்.  அரசும் காவல்துறையும் குற்றத்தைத் தம்மீது திசை திருப்பி, தம்மைக் கேவலப்படுத்த மாட்டார்கள் என்கிற தைரியத்தில்தான் அவர்களால் காவல்துறையை நாடிச்சென்று குற்றவாளியை அடையாளம் காட்ட முடிந்தது.


இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு ஒரு அழகிய உதாரணம் உண்டு: நபி(ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா(ரலி) அவர்களை வேறொருவரோடு சம்பந்தப்படுத்தி ஒரு நயவஞ்சகன் அவதூறு பரப்புகிறான்.  கணவர் உட்பட, மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட அதை நம்பிவிடுகின்றனர். அப்போது இறைவன் பெண்களின்மீது அவதூறு பரப்புவர்களுக்கான கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு,  அதைக் கண்டித்துத் தடுக்காமல் விட்டவர்களை அதைவிட மிகக் கடுமையாகச் சாடி இறைகட்டளையை அனுப்புகிறான்.


24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?


24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.


24:16. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

இஸ்லாத்தில் ஏழு பெரும்பாவங்களில் ஒன்று, கற்புடைய முஃமீனான பெண்கள் மீது அவதூறு கூறுதல்.' (புகாரி, முஸ்லிம்)

இவ்வாறு பெண்களின் மீது அவதூறைச் சொல்வது, பழி போடுவது, இல்லாததைச் செய்வது/சொல்வது – மார்ஃபிங் செய்வது - போன்றவை இறைவனிடத்தில் கடும் தண்டனைக்குரிய பெரும்பாவமாகும் என்பதை நம் மக்கள் உணர்வதேயில்லை. நாக்கில் நரம்பேயில்லாமல்,  யார் வீட்டுப் பெண் என்றாலும் போகிற போக்கில் உடனே மனதில் தோன்றுவதைச் சொல்லவும் எழுதவும் செய்ய முடிவதன் காரணம், சட்டபூர்வமான தடை இல்லை என்பதே  இதை இலகுவாக செய்ய வைத்து விடுகிறது.


அதேபோல,  ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், அவளைத் தண்டிக்காமல், அவளைப் பலாத்காரம் செய்தவன் மட்டுமே கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாகும். 


16:106. ... அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.


இதுபோன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வராத வரை, இந்தியாவில் – தமிழ்நாட்டில் பாலியல் கொடுமைகள் குறைய வாய்ப்பில்லை. 

ஆக்கம் : ஹுசைனம்மா

3 comments:

  1. உண்மைதான். கற்பு என்பதைச் சொல்லிச்சொல்லியே பெண்களைக் கோழைகளாக்கி விட்டார்கள். தன்னுடைய உடல் என்ற கம்பீரம் இல்லாமல் அதைக் காட்சிப்பொருளாக்கும் வகையில் உடைகளைத் தயாரிப்பது ஆண்களால் நடத்தப்படும் அமைப்புகள்தானே. ஃபேஷன் டிஸைனர்கள்! வெளிநாடுகளிலும் பாருங்கள்..... இவன் கோட் ஃபுல் ஸூட் போட்டுப்பானாம். அவள்? முக்கால் உடம்பைக் காமிச்சுக்கிட்டுப் போகணும் பார்ட்டிகளுக்கு :-( போதுண்டா சாமி.....

    ReplyDelete