தாய்மதத்திற்கு திரும்புவதென்பது எளிதான விஷயமல்ல! வேறொரு புதிய அடையாளத்துக்கு தன்னை அழைத்துச் செல்லும் மிகப்பெரிய போராட்டம் அது. இரத்த பந்தங்களின் எதிர்ப்புகளை சந்திக்கவும், வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிர்பந்தத்தில் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத சூழலுக்கும் எடுத்துச் செல்வது அது! ஆண்களுக்கே மிகப்பெரும் சவாலாக இருக்கும் இச் சூழ்நிலையில் ஓர் பெண் இருப்பின் ?? அவள் மார்க்கத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தால் மட்டுமே 'தாய் மதம் திரும்புதல்' சாத்தியம்! அல்லாஹ் கொடுக்கும் இச்சோதனையிலும் மனம் திடமுற்று கடந்தால் வெற்றிச்சோலையில் இஸ்லாமிய சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும். அப்படியாக இஸ்லாத்தை ஏற்று தன்னை அழகாக்கி, தன் சாதனைகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்தையும் அழகாக்கிய பெருமைக்குரியவர் தான் சகோதரி டாக்டர் ஆயிஷா . இம்முறை சாதனைப் பெண்மணிக்காய் அறிமுகம் செய்கிறோம்
சகோதரி ஆயிஷா அவர்களின் பூர்வீகம் கர்நாடகம். அதிகம் கல்வி பெற்றிராத தாய் தந்தைக்கு ஒரே பெண். தன் மகளை எப்படியேனும் சமுதாயத்திற்கு பயனளிக்கும் ஓர் மருத்துவராக ஆக்கிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை. ஆரம்பக் கல்வியுடன் சேர்த்தே சமூகப் பணிகள் செய்யும் ஆர்வத்தையும் ஆரம்பத்திலேயே விதைத்தார்கள். சகோதரியின் தாய்மொழி கன்னடம், படித்ததெல்லாம் அங்கே தான். எப்படி இஸ்லாத்தை ஏற்றார், எப்போது தமிழ்நாட்டின் மருமகள் ஆனார், எப்படி சாதனைப் பெண்ணானார் என்பதெல்லாம் அவர் மூலமாகவே கேட்டறியலாம்.
இஸ்லாம் உங்களுக்கு அறியவைக்கச் செய்த அந்த தருணத்தை கூறுங்களேன்
அது ஒரு சுவாரசியமான நிகழ்வு. இஸ்லாம் என்பது கிறிஸ்தவம், புத்தம் போன்றே ஓர் மதம் என்ற அளவில் தான் சராசரி மனிதனுக்கு தெரியும் அளவுக்கு எனக்கும் தெரிந்திருந்தது.
கல்லூரியில் பயிலும் போது, ஓர் ஓய்வு வேளையில் சக மாணவ மாணவிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். வழக்கமாக எங்கள் உரையாடல்கள் ஏதேனும் ஓர் குறிப்பிட்ட தலைப்பை சுற்றி வரும். அப்போது என் முஸ்லிம் நண்பன் ஆரம்பித்தான் "ஒவ்வோர் மதமும் ஏதோ ஒரு வகையில் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்" என்றான். தினமும் கோயில் சென்று வரும் அளவுக்கு இந்துமதத்தில் பற்றுள்ள நானோ கோபங்கொண்டு " பொய் கூறக்கூடாது, திருடக்கூடாது என எல்லா மதங்களும் ஒரே விதமான ஒழுக்கநெறிகளை போதிக்கையில் எப்படி இதுபோல் வேறுபாடு காண்கிறாய், அனைத்து மதங்களும் ஒன்றே, ஒவ்வொருவரும் அதற்கென பெயர் வைத்து வரையறை வகுத்துக்கொண்டனர் " என எதிர்த்தேன். ஆனால் அவனின் அடுத்த கேள்வி என்னை வாயடைக்க வைக்கும் என எதிர்பார்க்கவில்லை . " எல்லா மதமும் ஒன்றென கூறும் உனக்கு இஸ்லாத்தை பற்றி எந்தளவுக்கு தெரியும்" என்றான்.
ஓய்வுப்பேச்சுக்கள் ஆய்வுக்கு இட்டுச்செல்லுமென அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் வாதத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டேன். எந்த மதம் பற்றியும் தெரியாமலேயே எப்படி அனைத்தும் ஒன்றென என்னால் கூற முடிந்தது ?. தோல்வி சவாலாக மாறியது. முதலாவதாக பைபிளின் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளை ஆராயத் தொடங்கினேன். அதே சமயம் ஓர் முஸ்லிம் பெண்ணிடம் மார்க்கப்பாடமும் பயின்றேன். இப்படியாகத் தான் இஸ்லாம் என்னுள் அதிகம் அறிமுகமானது.
அட! சுவாரசியமாய் இருக்கிறது. அப்படியானால் எப்போது உங்கள் மனம் இஸ்லாமிய நெறிகளை உண்மையானதென எடுத்துக்கொண்டது ?
ஒரு முஸ்லிம் பெண்மணியிடம் மார்க்கப்பாடம் பயிலச் சென்றதாகச் சொன்னேன் அல்லவா? முதல் இரு வகுப்புகள் எனக்குள் பெரிதாய் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. மூன்றாம் முறை செல்கையில் அவர் குர்ஆனில் ஏதோ ஓதிக்கொண்டிருந்தார். "இதில் அப்படி என்னதான் இருக்கிறது" என கேள்வி முன்வைத்தேன். " மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதுடன் சேர்த்து அவன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை கூறும் சட்டமும் வாழ்வியல் பாடமும் அமைந்த வழிகாட்டி" என்றார். அந்த பதில் என்னை இன்னும் அதிகம் கேள்வி எழுப்பும் ஆர்வத்தை தூண்டியது. கருவின் வளர்ச்சி, இரவுப்பகலின் சுழற்சி பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை அப்பெண் விளக்கும் போது அறிவியல் மாணவியான எனக்கு எளிதில் புரிய முடிந்தது. அது மேலும் ஆச்சர்யங்களுக்கு அழைத்துச் சென்றது. ஆர்வத்தை தூண்டியது. இந்துமதத்தையும் இஸ்லாம் மதத்தையும் ஆய்வு செய்யும் நிலைக்கு என்னை கொண்டுவந்து சேர்த்தது.
சுப்ஹானல்லாஹ்! ஆய்வு செய்ய ஆரம்பித்த நாட்களில் இஸ்லாத்தில் உங்களை கவர்ந்த விஷயங்கள் என்ன?
முதலில் பெண்களின் நிலைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்னை கவர்ந்தது. விதவைக்கும் எவ்வித உறுத்தலின்றி மறுதிருமணம் மூலம் மறுவாழ்க்கைக்கு தயார்படுத்தும் சகஜமான போக்கு என்னை வியப்புக்குள்ளாக்கியது. அடுத்ததாய் நோன்பு. நாங்கள் நோன்பு நாளில் பாலும் நீரும் கூட அருந்திக்கொள்வோம். ஆனால் ரமலானில் நோன்பு நோற்கையில் இடைபட்ட நேரத்தில் எதுவும் சாப்பிட கூடாது என்பதில் இருக்கும் நோன்பின் அர்த்தத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்டியது. ஐவேளை தொழும் முறை என் மனதை ஒருநிலைப்படுத்தியது. இதுதான் தூய மார்க்கம் என்ற முடிவுக்கு என்னை கொண்டுவந்தது இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறைதான். அதில் என்னை நானே ஈடுபடுத்திக்கொண்டபின் தான் அதன் மகத்துவம் புரிந்தது.
இஸ்லாத்தை ஏற்றதும் பெற்றோர்கள் எதிர்த்தார்களா?
இல்லை. என் தாய் நற்சிந்தனை கொண்ட பெண். ஒவ்வொருவரின் மனதையும் புரிந்து ஏற்பவர். தன் கருத்தை எவரிடத்திலும் திணிக்காதவர். முஸ்லிம் ஆன போது எனக்கு 21 வயது. மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு பயின்றுக்கொண்டிருந்தேன். இஸ்லாத்தை ஏற்றதும் அம்மாவிடம் சொன்னபோது எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டார். ஆனால் படிப்பு முடியும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாமென அறிவுரைச் சொன்னார்.
தாயும் இஸ்லாத்தை ஏற்றார்களல்லவா?
நான் முஸ்லிமான பின், சில காலம் கழித்து என் தாய் சுப்புமா இஸ்லாமிய கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமானார். ரஹீமா என தன் பெயரை மாற்றிக்கொண்டார். அப்போது அவரின் வயது 58. கூடவே ஹஜ் கடமையும் நிறைவேற்றினார்கள். உன்னதமான பெண்மணி. எனக்கான இலக்கை நிர்ணயித்துத் தந்தவர். ஆதரவற்ற பெண்களுக்கு பாதுகாப்பான அதே சமயம் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய ஓர் இல்லம் அமைக்க எனக்கு ஊக்கப்படுத்தியவரும், அதற்கான இடத்தை தந்தவரும் என் அன்னை தான். தன் 70ம் வயதில் இயற்கை எய்தினார்கள். அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்துச் சொர்க்கத்தில் நல்லடியார்களுடன் தங்கச் செய்ய நீங்களூம் என் அன்னைக்காக பிரார்த்தியுங்கள்.
கண்டிப்பாக சகோதரி எங்கள் துஆ எப்போதும் உண்டு. அதுசரி , தமிழ்நாட்டின் மருமகளான கதை ?
கல்லூரியின் இறுதியாண்டில் ஆடிட்டர் அப்துல் ஹமீத் அவர்களை சிங்கப்பூரில் சந்திக்க அந்த அறிமுகம் திருமணத்தில் கொண்டுவந்தது. அல்ஹம்துலில்லாஹ். தாய்மொழியும் தாய்மண்ணும் வெவ்வேறாகினும் இஸ்லாம் எனும் பந்தம் எங்களை ஒன்றிணைத்தது. என் முன்னேற்றத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றுபவர். திருமணத்திற்கு பின் என் கணவரின் சொந்த மாவட்டத்திலேயே குடிபுகுந்தோம். மாயவரத்தில் ஐந்து வருடங்கள் மருத்துவராக பணியாற்றினேன். அதன் பின் என் கணவர் சிங்கப்பூரில் தணிக்கை அலுவலகம் நிறுவியதால், நானும் அங்கேயே சில காலம் இருந்தேன்.
அல் ஹிதாயா எனும் ஆதரவற்றோர் இல்லம் அமைத்ததன் ஆரம்பப்புள்ளி எது ?
சிங்கப்பூரில் குடியேறியதும் என் கணவருடன் இணைந்து சமுதாயப் பணிகளும் செய்யத் துவங்கினேன். singapore converts associationல் என்னை இணைத்துக்கொண்டு சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றினேன். சிங்கப்பூரில் மார்க்கத்திற்கு திரும்புவோர்களுக்கு தகுந்த ஆலோசணைகள் பாதுகாப்புகள் வழங்க அமைப்புகள் இருப்பது போல் , குறைந்தபட்சம் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்காகவாவது , அவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்காகவாவது ஓர் இல்லம் அமைத்தால் என்ன என தோன்றியது. அங்கிருந்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதால் தமிழகம் திரும்பினேன். மாங்காட்டில் அம்மாவின் நிலம் இருந்தது. நன்மையின் பால் முந்திக்கொள்ளும் வழக்கமுள்ளவர்கள் அவர்கள். என் அம்மா கொடுத்த நிலத்தில் தான் 2000 அல்-ஹிதாயா பெண்கள் நல அறக்கட்டளை எனும் பெயரில் 50 பெண்கள் வரை தங்கிக்கொள்ளும் அளவுக்கு ஹோம் அமைத்தேன். இப்போது 40 -45 பெண்கள் வரை இருக்கிறார்கள்.
என்ன மாதிரியான பணிகளுடன் அல்-ஹிதாயா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது ?
இதன் முக்கிய நோக்கமே ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பது தான். தங்குமிடம், உணவு , அடிப்படை தேவைகள் உடன் தார்மீக ஆதரவளிப்பது இதன் நோக்கம். வெறும் தங்கிக்கொள்ளும் இடமாக அல்லாமல் வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு முன்னேற பயிற்சி வழங்குகிறோம். தையற்பயிற்சி, கணினிப்பயிற்சி, சமையற் கலை, கேட்டரிங் சர்வீஸ் பயிற்சி, ஆங்கிலம் - அரபி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ உதவியோ சட்ட உதவியோ தேவை எனில் செய்து கொடுக்கிறோம். யாரையும் சார்ந்தே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சூழலில் இருந்து விடுவித்து தேவையான தொழிற்பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
இறுக்கமான சூழலில் இருந்து அவர்களை விடுவிக்க, உளவியல் ரீதியில் அவர்களை புத்துணர்வூட்ட ஹோம்மிலேயே பொழுதுபோக்க உள்ளரங்க விளையாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். அவ்வபோது மியூசியம், பீச் க்கு அழைத்துச் செல்கிறோம். மார்க்க வகுப்புகள், கண்காட்சிகள் நடத்தச் செய்து இம்மை வாழ்வுக்கான கல்விக்கும் வழிகோலுகிறோம். இதன் மூலம் ஆதரவற்ற நிலையில் வரும் பெண்கள் தன்னம்பிக்கையோடு சமுதாயத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லாஹ்வின் உதவியால்.
பெண்களுக்கான ஹோம் தவிர்த்து அல்-ஹிதாயா மூலம் இன்னும் சில விஷயங்களும் செய்து வருகிறோம். பெண்களுக்கு பெற்றோரோடும் கணவரோடும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அவர்களை உறவுகளுடனேயே சேர்த்து வைக்கும் விதமாக பேமிலி கவுன்சிலிங்கும் கொடுக்கிறோம். மனநல ஆலோசணைகள் வழங்கி வருகிறேன். ஏழை எளியோர்க்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதும், மருத்துவ உதவிகள் செய்வதும் , ரமலான் தினங்களில் புத்தாடைகள் வழங்குவதும், தகுதியுடைய முஸ்லீம் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தியும் வைத்துள்ளோம்.
'தோழியர்' நூல் வெளியீட்டுவிழாவின் போது.. |
அல்-ஹிதாயா மூலம் மறக்க முடியாத பூரிப்பான நிகழ்வொன்றை சொல்லுங்களேன்.
நிறையச் சொல்லலாம். முதன்மையாய் ஆம்பூர் சகோதரி பற்றிச் சொல்கிறேன். முஸ்லிம் நட்புக்களின் வாழ்வியல் முறையால் கவரப்பட்டு , இஸ்லாத்தை ஏற்றார் அவர். அவரின் அன்னையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். உறவுகள் கைகழுவ செல்வதற்கு வழி தெரியாமல் தவித்த அவர்களுக்கு அல் ஹிதாயா பற்றி சொல்ல, அவர்களும் எங்கள் இல்லத்திற்கு வந்துச் சேர்ந்தார்கள். அப்பெண் நம் இல்லத்தில் தங்கி படித்தார். இப்போது அவர் பட்டதாரி. நம் அல்ஹிதாயாவின் கணினிக்கல்வியும் மார்க்கக் கல்வியும் சேர்த்து போதிக்கும் ஆசிரியை. நாம் யாருக்கு நிழல் தந்தோமோ அவர் வளர்ந்த பின்னே நம்முடன் கைகோர்த்து தாமும் பலருக்கு நிழல் தருபவராக உருவாவதை நேரில் காணும் மகிழ்ச்சி அளவில்லாதது. சுப்ஹானல்லாஹ்...
அல்லாஹு அக்பர். சத்தமில்லாமலேயே சாதித்து வருகிறீர்கள். உங்களின் செயற்பாடுகள் நிச்சயம் நம் சமுதாயப் பெண்களுக்கு வழிகாட்டும், சாதிக்க தூண்டும் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வானாக. இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்
வாசகர்களுக்கு :
சகோதரி டாக்டர் ஆயிஷா நடத்தும் இல்லம் - சென்னை மாங்காட்டில் அமைந்துள்ளது. பொருளாதார உதவிகள் அளிப்பதன் மூலம் நாமும் அப்பெண்களின் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தில் பங்களிக்க முடியும். கீழ்காணும் படத்தில் வங்கி விவரங்களும் முகவரியும் உள்ளது. உதவ நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். இறைவனின் உவப்பை பெற நன்மையின் பக்கம் விரைவோம். இன்ஷா அல்லாஹ்...
பேட்டியும் ஆக்கமும் : ஆமினா முஹம்மத்
நன்றி : பர்ஷானா தஸ்னீம் , வைகறை வெளிச்சம் இதழ் , darulislamfamily.com
நன்றி : பர்ஷானா தஸ்னீம் , வைகறை வெளிச்சம் இதழ் , darulislamfamily.com