Wednesday, June 22, 2016

உலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்


 •  தமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.  
 •   நீங்கள் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தில் பெருமிதங்கொள்ளக்கூடிய நபர் எனில் பத்திரிக்கைதுறைகளிலும், தொலைகாட்சிகளும், வானொலிகளிலும் அதிகமாக பேட்டி காணப்படும் இவரைப்பற்றி கேள்விப்படாமல்  இருந்திருக்கவாய்ப்பில்லை.
 • நீங்கள் விகடன் வாசகர் வட்டத்திலுள்ளவர் எனில் பலகல்லூரிகளில் பாடமாகவைக்கப்பட்டிருக்கும் இவரின்  திறந்திடுமனசே எனும் புத்தகம்குறித்து தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. 
 • நீங்கள் தொலைகாட்சிகளில்  பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கும் நபர் எனில் மக்கள்தொலைகாட்சியில்  “மனம்தான் மூலதனம்”  எனும் தன்னம்பிக்கை தொடரை பார்க்காமல் இருந்திருக்கவாய்ப்பில்லை. 
யார் அவர் ?????
 • உங்கள் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராய் இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்;அல்லது அழைக்கப்படுவார்.
 • ஆழ்மனம் தொடர்பானவகுப்புகள் உங்கள் ஊர்களில் இவர் ஏற்கனவே நடத்தியிருக்கிறார்; அல்லது இனி  நடத்தவிருக்கிறார்.
 • புதுக்கவிதை எழுதும் முஸ்லிம் பெண்கள் யார் என உங்களிடம் கேட்கப்பட்டால் முதல் மூன்று பேரில் நீங்கள் உச்சரிக்கப்போகும் பெயர் இவருடையதாக இருந்திருக்கும்; அல்லதுஇனிஇருக்கும்.  
 • உலகின் கவனத்தை ஈர்த்த முஸ்லிம் பெண்கள் பற்றி கேள்வி வருகையில் வெளிநாட்டுப்பெண்மணிகளின் பெயரை வரிசைப்படுத்திய உங்களின் பட்டியலில் “இதோ எங்கள் தமிழ்ப்பெண்” எனும் பேரார்வத்துடன் இவரின் பெயர் இடம்பிடித்திருக்கும் ;அல்லது புறக்கணிக்கவியலா ஆளுமையாக முத்திரை பதிக்கப்போகும் பெயராக இருக்கும்.
இவை மட்டுமா?
 • முதல் கவிதை நூலே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்பட்ட பெருமைக்குரிய இப்பெண்மணிக்கு துபாய்சங்கம் டிவி “கலைப்பேரரசி” எனும் பட்டத்தை வழங்கியிருக்கிறது.
 • குங்குமம் உட்பட பல பத்திரிக்கைகளில் இவரின் சிறுகதை , கவிதை வெளிவந்துள்ளது.
 • அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
மகிழ்ச்சித் தூதுவர் என்றும், சிறந்த குழந்தைகள் புத்தக எழுத்தாளர் என்றும் பலவாறாக போற்றப்பட்டு வரும் சர்வதேசப்புகழ் பெற்றுக்கொண்டிருக்கும் கீழக்கரைப் பெண் ஃபஜிலா ஆசாத்  அவர்களைத் தான் சாதனைப் பெண்மணிப் பகுதியை இம்முறை அலங்கரிக்கிறார். (சாதனைப் பெண்மணிகளை காண மேற்காணும் சுட்டியை சொடுக்கவும்)ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் பெற்றோர்களுக்கு-தன்பிள்ளையை சான்றோன் என சபையோரால் போற்றப்படும்பொழுது!  அதே இனிமையை ஒத்தது தன் மாணவி புகழின் உச்சியில் இருப்பதை ஆசான் காணுகையில்!
அப்படியாகத்தான் ஃபஜிலா எனக்கு அறிமுகமானார்.  கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியை ஒரு காலகட்டத்தில் கலக்கிக்கொண்டிருந்த தன் மாணவி ஃபஜிலாவைப் பற்றி  அக்கல்லூரியின் முதல்வர் சகோதரி டாக்டர் சுமையா (அவர்களைப் பற்றி வாசிக்க சொடுக்கவும்) பேசிக்கொண்டிருக்கையில் என்னையும்  அறிமுகப்படுத்தும்படி வேண்டிக் கொண்டேன். உடனே ஏற்பாடு செய்து தந்தார் சகோதரி சுமையா. 

கேள்விப்படுவதைவிடவும், நேரடியாய் பெறும் அனுபவம் வலிமையானது என்பதை மீண்டும் எனக்கு நிரூபித்த நிகழ்வுகள் அவை!  என்னை நான் அறிமுகப்படுத்தியபோது திருச்சி ஐமன் கல்லூரி ஆண்டுவிழாவில் சிறப்புவிருந்தனராக கலந்துகொள்ளவந்திருப்பதாகச் சொன்னார். மாலைக்குபின் அழைக்க எண்ணிய போது துபாயில் இருப்பதாகச் சொன்னார்.  அடுத்த ஓரிருவாரங்களில் இந்தியா வருகை, மீண்டும் துபாய், இப்போது  யூ.எஸ்!  இத்தனைக்கு மத்தியிலும் அவரை கைகொள்வது எளிதாக இருக்கவில்லை என எண்ணியபோது எவ்வித   தற்பெருமையும் இன்றி, என்னை நினைவில் வைத்து பேச அழைத்த மாத்திரத்தில் அவர் மேல் இன்னும் மதிப்புகூடியது.  குரலைப் போலவே பழகுவதிலும் மனதை கவரக் கூடியவர்.   கேள்விகளைகேட்கத் துவங்கினேன்… முன்னதாக எளிமையாய் சின்னஅறிமுகம்…

B.Com,  M.B.A (Finance) MCSE (Microsoft Certified System Engineer), MCDBA (Microsoft  Certified  Data  Base Administrator), CEH (Certified  Ethical  Hacker), CCNA (Cisco Certified Network Administrator)எனத் தொடரும் இவரின் கல்வித் தேடல் Master Hypnotist,Master NLP Practioner, Master NLP Coach(Neuro linguistic Program), Master life Coach, Master Time Paradigm Technique Practioner, Master Relationship Coach, Master RSCI Coach என்ற நிலைக்கு வந்து முடிந்ததாக பெருமூச்சுவிட்ட சமயத்தில் இன்னும் ஏதோ பயிற்சி வகுப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் இந்த துருதுரு   ஃபஜிலா.  

 தலைமைத்துவ பண்புக்கான பயிற்சிகளை ரோபின்சர்மா உள்ளிட்ட உலகளாவிய பிரபலமான பயிற்சியாளர் மூலம் சிங்கப்பூர், லெபனான் ஆகிய நாடுகளுக்குச் சென்று கற்றுக் கொண்டார். இந்தியாவின் பெல்லாரியில் 'Haco Minerals'  ன்    chief financial officer  ஆகவும் , சிங்கப்பூரின் Prosoft  நிறுவனத்திற்கு CEO  ஆகவும் , துபாயில் இருக்கும் முப்ஷி ராஜுவல்லர்ஸ் மற்றும் IBFI ஆகிய பிரபல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி விட்டு வாழ்வியல் ஆலோசகராக பல்வேறு நாடுகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சியளித்து வருகிறார். மேலும் பல்வேறு மனப்பிரச்னைக்கும் தீர்வுகாணும் தேர்ந்த மனநலசிகிச்சையாளராகவும் பரிணமிக்கிறார். துபாயிலும் சென்னை திநகரிலும் அவரின் கிளினிக் உள்ளது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….. இளைப்பாறிக்கொள்கிறேன் ! 

இப்படியாக தன் அறிவால் தன்னை முன்னேற்றிக்கொண்ட உன்னதமான பெண்மணி தான் ஃபஜிலா . அவர்களுடன் தான் கலந்துரையாட வாய்ப்பு அமைந்தது. இதோ நேரடியாகவே உங்களின் பார்வைக்கும்…


உங்க ப்ரோபைலை முழுமையாக வாசித்து முடிக்கவே நாளாகும் போலையே? எப்படி இவ்வளவும் கற்று, இவ்வளவு சாதனைகள் புரிய முடிந்தது ? வியப்பாய் இருக்கிறது

அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ் அருளால் ஒரு மனிதன் ஆழ்மனம் ரொம்பவே ஆற்றல்மிக்கது,  போற்றத்தக்கது.  அதன் ஆற்றல் எந்தளவுக்கு உள்ளதெனில்-   (1010)11 நம் ஆழ்மன ஆற்றலை பற்றி பார்க்கையில் சாதாரணமாக தெரிந்தாலும் அது இந்த அண்டத்திலிருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கைவிட அதிகமானது. விசாலமானது என ஸ்காலர்ஸ் சொல்றாங்க.  அப்படியான மனித மனதை வைத்துக்கொண்டு நாம் என்ன கற்றாலும் அது கையளவுதான்!

ஒருமுறை சர் ஐசக் நியூட்டனின் திறமையும் தகுதிகளும் பற்றி வியந்து கேட்கும் பொழுது,  அவர் சொல்கிறார் , “ இந்த உலகம் என்னை எப்படி பார்க்கிறதென்று எனக்கு தெரியாது, ஆனால் என்னை பொருத்தவரைக்கும் என் முன்னால் பெரிய கடல் இருக்க , அதன் கரையோரம் சிப்பி பொறுக்கும் சிறுபையனாகவே என்னை பார்க்கிறேன்”. ஐசக் நியூட்டனே தான் சாதித்தை பற்றியும் திறமைப்பற்றியும் அப்படி சொல்லியிருக்க, சாதாரண மனுஷி நான் என்ன சொல்ல முடியும் ?

இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களில்  75  சதவீதம் எதிர்ப்புக் கருத்துக்கள் பெண்களைச் சார்ந்தே வருகின்றன. நீங்கள் சொல்லுங்கள், இஸ்லாம் பெண்களை எப்படி பார்க்கிறது,  உங்களை இச்சமூகம் எப்படி பார்க்கிறது ? 

இன்று  மட்டுமல்ல..  என்றுமே இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சியும் அவர்களுக்கான அங்கிகாரமும் போற்றத்தக்கக்கூடியதாகவே இருந்து வந்துள்ளது. பொதுவாக சரித்திரப்புருஷர்கள் போற்றப்படும் பொழுதெல்லாம் அவர்களின் மனைவிகளின் வீரமோ விவேகமோ பெரிதாகப் பேசப்படாது.  ஆனால் நம் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி அன்னை கதிஜா (ரலி) அவர்களின் பக்குவமாகட்டும், வியாபார திறமையாகட்டும் அவ்வளவு அழகாக வரலாறுகளில் பதியவைக்கப்பட்டுள்ளது.  ஆயிஷா (ரலி)  அவர்களின்அறிவும் ஆற்றலும், உம்முசல்மா (ரலி)   அவர்களின் விவேகமும் வீரமும் ஒருவரி விடாமல் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.  இவை பெண்கள் அன்றும் இன்றும் என்றும் கண்களாகவே போற்றப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவே என்னை உணரச்செய்கிறது.

நிறைவானவன் அல்லாஹ் ஒருவனே!   ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பாதியாக நிரப்பப்படுவதாகக் கொள்வோம், அதில் நிரம்பியிருக்கும் தண்ணீரைப் பார்க்கிறோமா? அல்லது காலியான பகுதியை பார்க்கிறோமா என்பதில் தான் நம் சமூகம் நம்மை எப்படி பார்க்கிறது என்று சமூகத்தின் மீதான நம் மதிப்பீடு அமைகிறது. நாம் நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் :) !

ஒரு பக்கம் இன்னும் கற்றுக் கொள்ள பலநாடுகள் கடந்தெல்லாம் பயிற்சிகளில் கலந்து கொள்கிறீர்கள், இன்னொரு பக்கம் பல்வேறான நாடுகளுக்கும் சென்று இளைய சமுதாயத்துடன் கலந்துரையாடிகற்றதை கற்பிக்கிறீர்கள்.. மனநல ஆலோசகராக  பல்வேறு  மனப்பிரச்னைக்கும் சிகிச்சை அளிக்கிறீர்கள் . இது போக பலநிறுவனங்களில் ஆலோசகராகவும் பணியாற்றுகிறீர்கள். களைப்பாயில்லையா?

அதிகமான வேலைகளை இழுத்துபோட்டு செய்யும் போது ஸ்ட்ரஸ் ஆகுதுன்னு சொல்வாங்க. ஆனா நாம் அந்த வேலையை விரும்பி செய்கிறோமா ? விரும்பாமல் கட்டாயத்தின் பேரில் செய்கிறோமா என்பதில் தான் ஸ்ட்ரஸும் களைப்பும் வருவதற்கான காரணிகள் அடங்கியிருக்குமே தவிர அதிகமான வேலை செய்வதிலும், அடுத்தடுத்து செய்வதிலும் வராது என ஸ்காலர்ஸ் சொல்கிறார்கள்.  விரும்பி ஒரு வேலையை செய்யும் போது , அதனால் வரும் ஸ்ட்ரஸ் அனைத்தும் பாசிட்டிவ் ஸ்ட்ரஸ் தான். அவை மீண்டும் நாம் அதிகம் பணியாற்றுவதற்கான சக்தியை கொடுக்கும்.

நம் DNA யில்உள்ள local adaptation syndrome பற்றி தெரியும் போது positive stress ஸின் நன்மைகளை புரிந்து கொள்ளலாம். நாம் விரும்பி எந்த வேலையையும் செய்யும்போது நம் திசுக்களானது விரிவடைந்து கடின வேலைகளை செய்யும்  அளவுக்கு நம்மை தயார்படுத்துமே  தவிர நம் வேலைகளை தட்டி நம்மை சோர்வடையச் செய்யாது. இதுதான் லிமிட், இதுக்கு மேல் அதிகமா வேலை செய்றாங்க என்ற ஸ்ட்ரஸ்ஸ கொண்டு வராது.  விரும்பிச் செய்யச்செய்ய நம் கெப்பாசிட்டி அதிகமாகும், நம் ஆற்றல் அதிகம் பயன்படுத்தப்படும்,
நமக்கு ஸ்ட்ரஸ்ஸோ அயர்ச்சியோ வருகிறதென்றால் அந்த வேலையைச் செய்வதற்கான நாட்டமோ, செய்யத்தூண்டுவதற்கான காரணிகளோ குறைகிறதென்று அர்த்தம். அப்படியான நிலைக்கு வரும் வேளையில் அந்த வேலையை விரும்பிச்செய்வதற்கான காரணத்தை தேடி உருவாக்கி  , அவ்வேலையில் முழு மனதுடன் ஈடுபடுவதற்கான காரணிகளை உருவாக்கிகொண்டோமெனில் களைப்புகள் வராது. நானும் இதையே கடைபிடிக்கிறேன்!

இத்தகு வளர்ச்சிக்கான உங்கள் பயணங்கள் சுகமானதாக அமைந்ததா… அல்லது சுமையானதாக ஆக்கப்பட்டதா?  எப்படி கடந்தீர்கள்

ஓர் பயணத்தில் நாம் தூக்கிச் செல்ல வேண்டியது எது, விட்டுச்செல்ல வேண்டியது எது என்பதில் பயணப்படும் நாமே தான் தீர்மானிக்க வேண்டும், அதில் நாம் தான் தெளிவாக இருக்க வேண்டும்.  நாம் தெளிவாக இருந்தால் இலக்கை நோக்கிய நம் பயணமும் சுமூகமானதாகவே அமையும். அறிவார்ந்த மனிதர்களாகிய நாம் தேவையானதை விட்டு விடவும் மாட்டோம், தேவையற்றதை தூக்கி சுமந்துக்கொண்டும் இருக்க மாட்டோம்… மேலுள்ள வரிகளை என்னிலையாக்கி வாசியுங்கள் , எப்படி கடந்தேனென விளங்கும்!

மார்க்கத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டு என சொல்லிக்கொள்கிறோம். ஆனாலும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் பற்றி விமர்சிக்கப்படுகிறதே??  உங்கள் பார்வையில் ???? 

சுதந்திரம் என்றால் அங்கே விதிமுறைகள் இருக்க கூடாது என நினைப்பது சரியல்ல.  கட்டுப்பாடற்ற சுதந்திரம் கணக்கு வைக்காத வியாபாரம் போன்றது. விளையும் ஆனால் வீடு வந்து சேராது. ஒரு விளையாட்டு என்றாலும் கூட அங்கே எல்லைகளும் விதிமுறைகளும் உண்டு. அந்த விதிமுறைகளை கடைபிடித்து விளையாடுவதில் கிடைக்கும் வெற்றிதான் மதிப்புமிக்கது.  இது புரிந்தால் தேவையான கட்டுப்பாடுகள் – முடக்கிப் போடும் இரும்புக்கரங்கள் அல்ல என்பது புரியும். நம்மையும் பாதுகாத்து வேண்டிய வெற்றி இலக்கும் அடையமுடியும்.


என்ன இருந்தாலும் மார்க்கம் வரையறுத்த கட்டுப்பாடுகளுடன் சாதிப்பது ஒப்பீட்டு நோக்கின் மற்ற பெண்களைக் காட்டிலும் முஸ்லிமாகிய உங்களுக்கு கடினமானதாகத் தானே இருந்திருக்கும் ? இதுத் தவிர ஆணாதிக்க உலகின் விமர்சனங்களையும் கடந்து வர வேண்டியிருக்குமே…  என்கூற்று சரியா?

மாசற்ற எந்த செயலுக்கும் மார்க்கம் ஒரு தடையும் அல்ல! ஆண்கள் நம் எதிரியும் அல்ல! வரையறைகள் கொண்ட சுதந்திரத்தினைப் பயன்படுத்தி அதன் விதிகளை கடைபிடித்தால் முடிவில் வெற்றி நிச்சயமே!
தோல்வியே இல்லாத வெற்றியும் எதிர்ப்பே இல்லாத உறவுகளும் ஆண் பெண் இருபாலருக்கும் , எந்த மதத்தினருக்கும் சாத்தியமில்லை. வாழ்க்கை என்பதை புட்பால் விளையாட்டுப் போன்றதென்றே நினைப்பேன்.  புட்பாலில் ஒரு கோல் போடவேண்டுமென முயற்சி செய்யும் வீரரை மாதிரி தான் நாம் ஒரு குறிக்கோளை முன்னோக்கி அதை சாதிக்கணும் என நினைத்து முன்னேறுகிறோம்.  அப்படியாக விளையாட்டு வீரர் கோல் போடவேண்டுமென முன்னேற முன்னேற , அவரைத் தடுக்க ஆட்கள் இல்லாமல் எல்லாமே அவருக்கு சாதகமாகத்தான் அமைய வேண்டுமெனில் அந்த விளையாட்டில் சுவாரசியம் ஏது ? அந்த விளையாட்டுக்குத் தான்அர்த்தம் ஏது ?

அவரை  11  பேர் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதே சமயம் 11 பேர் நம்மை முன்னேற்ற பாதைக்கு கொண்டுச்செல்ல உதவுவார்கள்.  எதிராளிகளையும், ஆதரவாளர்களையும் இணங்கண்டு வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்.  நிஜவாழ்க்கையில் எதிராளிகளுடன் மல்லுக்கட்டிதான் ஆகவேண்டுமென எந்த நிர்பந்தங்களும் இல்லை.  அவர்களையும் எளிதாக கையாளும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், இல்லையேல் கண்டுகொள்ளாமல் நம் பாதையில் மேற்கொண்டு முன்னேற பயணிக்க வேண்டும். இத்தகு பயணங்கள் தான் வாழ்க்கையை சுவாரசியங்களாக மாற்றுகின்றன.  நமக்குமுன் இருக்கும்பிரச்சனைகள், சிரமங்கள் எதுவாகினும் அஃது இந்தெந்த வழிகள் வருகிறது, இந்தெந்த ரூபத்தில் பரிணாமமாகிறதென ஒவ்வொன்றுக்கும் லேபிள் போட்டுக்கொண்டே இருக்காமல் , அதில் முடங்கி கிடக்காமல், நம் குறிக்கோளில் கவனம் வைத்து நல்லசெயல்களை நம் எண்ணத்தில் வைத்து வாழ்க்கையை நிறைவாக வாழ்வோமே!

சுவராசியமாகவும் அறிவார்ந்த ஆய்வாகவும் பதிலுரைத்தீர்கள். உங்களுடைய பொண்ணான நேரத்தைல் சிறுபகுதியை எங்களுக்கென ஒதுக்கி பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றிகள். மென்மேலும் உங்களின் சேவையும், உயர்வும் இச்சமூகத்திற்கு பயனுள்ள விஷயங்களைத் தரவேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் சகோதரி ஃபஜிலா! வாழ்த்துகள் சகோதரி

பேட்டியும் ஆக்கமும்
ஆமினா முஹம்மத்
read more "உலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்"