Tuesday, March 15, 2016

உலகின் சிறந்த ஆசிரியை - பாலஸ்தீனத்தை உற்றுநோக்கச் செய்தார்

"ஒரு பாலஸ்தீன ஆசிரியையாக இந்த மேடையில் நிற்பதை பெருமையாக நினைக்கிறேன். ஒட்டுமொத்த பாலஸ்தீன ஆசிரியர்களின் வெற்றியாக இந்த விருதை ஏற்கிறேன். நாங்கள் அமைதியை விரும்புகிறோம், உலகின் சராசரி குழந்தைகளைப் போலவே எங்கள் குழந்தைகளும் அவர்களின் இளமைப் பருவத்தை அமைதியுடன் நிம்மதியாக கடப்பதை விரும்புகிறோம்"

                         இரு தினங்களுக்கு முன், ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் குரலாக , துபாய் விழா மேடையில் அப்பெண்ணின் குரல் ஒலித்தது. உலக நாடுகள் ஒடுக்க நினைக்கும் , அநீதிக்கு உள்ளாகியும் கண்டுகொள்ளப்படாத நாடான பாலஸ்தீனில் , அதுவும் அகதியாக வளர்ந்த பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு இணையான "உலகின் சிறந்த ஆசிரியை" என்ற விருதுடன் 1 மில்லியன் டாலர் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளது , வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பு.

                         இது ஆண்டுதோறும் உலகின் சிறந்த ஆசிரியராக ஒருவரை தேர்வு செய்து 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப்பரிசாக வழங்கி கவுரவித்து வருகிறது. 2ஆம் வருடமான இந்த ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல சிறப்பான ஆசிரியர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஜப்பான், இந்தியா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த பத்து ஆசிரியர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் பாலஸ்தீன பெண். துபாயில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கிறிஸ்துவ மதகுரு போப் பிரான்சிஸ் அப்பெண்மணியின் பெயரை அறிவித்தார். மகிழ்ச்சியாக , வன்முறையற்ற சமுதாயமாக , சமூகத்துடன் ஒன்றி வாழ ஒரு புதிய கல்வி முறையை விளையாட்டு சேர்ந்து குழந்தைகளை சென்றடைந்து பயன் பெற வைத்தமைக்காக அவருக்கு அந்த பரிசு வழங்குவதாகவும் அறிவித்தார்.  விருதினை துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் ரஷீத் அல் மஹ்தூம் வழங்கினார்.  இளவரசர் வில்லியம், ஐ.நா சபை பொதுச் செயலாளர், பல நாட்டு அதிர்பர்கள் என்று பலரும் அவரின் இச்செயலை வாழ்த்தினர்.  ஹாலிவுட் சார்ந்த பிரபலங்களும்,  யூகே  பிரதமர் டோனி ப்லேர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஏன் அந்த பெண்மணிக்கு இத்தகைய விருது கிடைத்தது ?  என்ன தான் செய்தார் ?
 

                         ஹானான் அல் ஹோரப் தான் அந்த பெண்மணி. பெத்லகேமில் வன்முறை செயல்களுக்கு தொடர்ந்து பலியாகி கொண்டிருந்த அகதிகள் முகாமில் வளர்ந்தவர். அந்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களின் பாதிப்பு அவர் கணவர் , குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. ராணுவத்தினரால் அவரின் கணவர் தாக்கப்பட்டார். பள்ளி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஒருவருக்கொருவர் சுட்டுக் கொல்வதைக் கண்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவரின் பச்சிளம் குழந்தைகள் , அதன் பின் அவர்களின் மனநலனில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு வருந்தினார். அவரின் குழந்தைகளை பழைய நிலைக்குக் கொண்டு வர எந்த கல்விமுறையும் கைகொடுக்கவில்லை. இதுதான் சகோதரி ஹனானை புதியதொரு பாதையை உருவாக்க தூண்டியது. அது போன்ற குழந்தைகளை வன்முறைக்கு ஆளாகாமல் வளர்க்கும் முயற்சியிலே கல்வி கற்க ஆரம்பித்தார். அவ்வாறு கற்று ஆசிரியையாக பரிமாணம் எடுத்தார். தன் குழந்தைகள் போல் வன்முறையில் அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார்.

                         தன்னுடன் வசிக்கும் அகதிகளான குழந்தைகளுக்கு பதற்றத்தை குறைக்கும் ஒரு கல்வி முறையை கண்டு பிடித்தார். விளையாட்டுடன் கூடிய கல்விமுறையில் எதிர்கால சிந்தனைகளையும் விதைத்தார். தன் குழந்தைகளின் சுயநம்பிக்கை மெருகேறுவதை உணர்ந்தார்.  சமூக சூழலுடன் ஒன்றிணைந்து சிந்திப்பதை கண்டு பூரித்தார். பாலஸ்தீன வகுப்பறைகள் எப்பொழுதும் ஒரு வித பதற்றமான சூழலிலே இருக்கும். "வன்முறையை ஒழிப்போம்" என்பதை தாரக மந்திரமாக முன்மொழிந்து அக்குழந்தைகளை அரவணைத்தார். அந்த குழந்தைகளுக்கு நம்பிக்கையையும், மரியாதையையும் , நேர்மையையும், அன்பையும் போதிப்பதிலே கவனம் செலுத்தினார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். அவரின் முன்னோக்கு பார்வைகளை பல மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு சக ஆசிரியைகளுடன் பகிர்ந்து கொண்டார். முழுமையான கல்வியால் வன்முறையை ஒழிக்க முடியும் என்று நம்பினார். கற்கும் திறனை மேம்படுத்தி , இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகள் எளிதாக கற்கும் விதமாக விளையாட்டினூடே கல்வி கற்கும் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினார் . இதைப்பற்றி விரிவாக வி லேர்ன் அண்ட் ப்ளே (we learn and play ) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

                          பரிசை வென்ற ஹானான், பெத்லகேம் நகரில் உள்ள அகதிகள் முகாமில் வளர்ந்து, பெருமைக்குரிய பாலஸ்தீன ஆசிரியையாக இந்த மேடையில் நிற்பதை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் , பரிசுத்தொகையின் பெரும்பகுதியை தனது புதிய கல்விமுறையை மேம்படுத்தி, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவும், இதர ஆசிரியர், ஆசிரியைகளின் நலனுக்காகவும் செலவழிக்கப் போவதாகவும் அறிவித்தார். ஆசிரியைகளால் மாணவர்கள் அவர்களின் உலகத்தை புரிந்து கொண்டு அத்துடன் ஒருங்கிணைந்து வாழ வைக்க முடியும் என்று கூறினார். நாம் நினைத்தால் அக்குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் , மதிப்பையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கான அழகான உலகத்தை உருவாக்க முடியும். ஆசிரியைகள் மாணவர்களுக்கு அவர்கள் கேள்வி எழுப்பவும், விமர்சனம் செய்யவும், யோசிக்கவும், அவர்கள் தங்களை வெளிப்படுத்தவும் உதவ வேண்டும்" என்றும் கூறினார்.

                          " பாலஸ்தீனமோ அல்லது உலகின் எந்த பகுதியைச் சார்ந்த ஆசிரியர்க்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்பதுவது இதுதான், நமக்கான பணி மனிதநேயத்திற்கான பணி, நமது இலக்கு உன்னதமானதாக்கிக்கொள்ள வேண்டும், நம் மாணவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியதெல்லாம் " கல்வியறிவே சிறந்த ஆயுதம்" என்பதுதான். நமக்கு மறுக்கப்பட்டதும், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதும் கிடைப்பதற்கு இதுவே மிகச் சிறந்த வழி" என்ற சகோதரி ஹனானின் முடிவுரையில் தான் எத்தகைய ஆழமான சிந்தனை. சுப்ஹானல்லாஹ்

                          போரினாலும் ,இன்ன பிற காரணங்களாலும் கல்வி கற்க முடியாத சமுதாயம் விரைவில் அழிந்து போகக்கூடிய சமுதாயமாக மாறும். கடினமான சூழலில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்து காக்க போராடும் சகோதரிக்கு இஸ்லாமியப் பெண்மணி தளத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.


உங்கள் சகோதரி
ஷிரின் பானு

நன்றி : globalteacherprize , wikipedia

7 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  அற்புதமான பெண்மணி குறித்த மிக சிறந்த கட்டுரை. மொழியாக்கமும் நேர்த்தியாக உள்ளது. வாழத்துக்கள்.

  ReplyDelete
 2. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் சகோ ஷிரின் பானு. தொடர்ந்து எழுதுங்கள் இன் ஷா அல்லாஹ்...

  ReplyDelete
 3. மா ஷா அல்லாஹ், சகோதரி ஹானானுக்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள்...
  பாலஸ்தீன குழந்தைகள் முதல் அனைவரும் நிம்மதியான நல்வாழ்வு வாழ இறைவனை பிராத்திப்போம்...

  நல்ல பதிவு சகோதரி ஷிரின் பானு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மாஷா அல்லாஹ்.. வன்முறைக்கு இடையில் பூத்த அழகிய பூ போல் சாதனை நிகழ்த்தி உலகையே தன் பக்கம், பாலஸ்தீன் பக்கம் திரும்ப செய்த சகோதரி ஹானானுக்கு வாழ்த்துகள்... இக்கட்டுரையை எழுதிய சகோதரி ஷிரின்க்கும் வாழ்த்துகள்..

  மென்மேலும் பல நல்ல கட்டுரைகளை எதிர்ப்பாக்கிறோம்..

  ReplyDelete
 5. நல்ல பதிவு...
  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. Good Article. we know about Hannan from this article. very nice. congrats

  ReplyDelete