Tuesday, March 29, 2016

நாத்திகரா மாறிடுங்க!

பசீரம்மா வீட்டு வாசலிலேயே பத்து நிமிடமாக  நின்று கொண்டிருந்தார்.

“ம்ச்.. இந்த மனுஷன் எங்க போனார்.. மணி மூணாச்சு... இன்னும் சாப்பிட வரக்காணோமே? சாப்பாடும் சாப்பிடாம மாத்திரையும் சாப்பிடல... எல்லாம் ஆறிபோச்சு.. இப்ப மறுபடி சூடு பண்ணனும்... சிலிண்டர் விக்கிற விலையில் ஒரு வேளைக்குப் பத்து முற சூடு பண்ணா என்னாகறது?”

வேறொன்றுமில்லை.. காலை டிஃபன் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற பசீர் பாய் இன்னும் வீட்டுக்கு வரலை.. அந்த விஷயத்தில் பசீரம்மாக்கு இத்தனை நுண்ணிய பிரச்சினை எல்லாம் யோசிக்க வருகிறது.

அதோ வந்துவிட்டார் பசீர் பாய்... லேட்டானதுக்கு பசீரம்மாகிட்ட திட்டு நிச்சயம்னு தெரிந்தும் கொஞ்சம் கூட கலக்கமில்லாமல் உற்சாகமாய் வருகிறாரே?? பசீர் பாய்க்கு அவ்வளவு தைரியம் எப்படி வந்தது??

“எங்கே போனீங்க இவ்ளோ நேரம்?”

“உள்ள வாம்மா.. ஏன் வெயில்ல நிக்கிற.. பாரு.. உனக்கு எப்படி வேர்த்து ஊத்துதுன்னு”

ஐஸ்.

”எல்லாம் எனக்குத் தெரியுது.. கேட்ட கேள்விக்குப் பதில் இன்னும் வரல”

”அதுவா... அது ஒரு பெரிய கதை.. முதல்ல சாப்பிடுவோம்.. ரொம்ப பசிக்குது” , பாவமாய்ச் சொன்ன பசீர்பாயைப் பார்த்ததும் பசீரம்மாவின் கோபம் தணிந்தது. சாப்பாடு எடுத்து வைத்த வேகத்தில் காலியானது.

“ம்ம்.. இப்போ சொல்லுங்க... எங்க போனீங்க.. எதும் பிரச்சினையா”

"அது ஒண்ணுமில்ல பசீரம்மா.. நம்ம நவீனத்துவன் அண்ணே இருக்காகல்ல.. அவுக நாத்திகவாதின்னு தெரியும்தானே... இன்னைக்குப் பேச்சு வாக்கில் கடவுள் இருக்கானா இல்லையான்னு ஒரு டாபிக் வந்துச்சு.... நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்து மாய்ஞ்சுட்டேன்... எதுக்குமே பிடி கொடுக்காம தான் சொன்னதையே சொல்லிட்டு இருக்காரு நவீனத்துவண்ணே. எனக்கும் பசி வயித்தைக் கிள்ளுச்சா.. சரி சாப்பிட்டுட்டு வந்து மறுபடியும் பேசுவோம்னு ரெண்டு பேரும் லஞ்ச் ப்ரேக் விட்டிருக்கோம். 

அவர்கிட்ட என்ன பேசி.. எப்படி புரிய வைக்கிறது.. ஒண்ணும் புரியல” என்றார் கவலையுடன் பசீர் பாய்.

“அவ்ளோதானே... நான் சொல்ற ஒரு பாயிண்டை மட்டும் அவர்கிட்ட சொல்லுங்க... அப்படியே வாயடச்சுப் போய் சரண்டர் ஆகிடுவார் பாருங்க”

“என்ன இவ்ளோ ஈசியா சொல்லிட்டே.. எப்படி பந்து போட்டாலும் சிக்சர் அடிக்கிறார்.. உனக்கு அவரைப் பத்தி தெரியாது....”

“நாத்திகவாதிகளிடம் பேசும்போது அவர்கள் இம்மையில் நடக்கும் விஷயங்களுக்குத் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பாங்க.. நாமளும் அவங்க போற போக்கிலேயே பேசுவதால் அவர்களுக்குப் புரியவைக்க முடியுறதில்ல... ஆனா... நம்ம கையில் இருப்பதும் சரி.. நாம முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் சரி.. அது மறுமை ஒண்ணுதான்.. அதைப் பற்றிப் பேசினால் நாத்திகவாதிகளின் வாயை அடைத்துவிடலாம்.. அதனால நான் சொல்ற மாதிரி போய்ப் பேசுங்க” என்று சில வாக்கியங்கள் எவ்வாறு முன்வைப்பது என்று விளக்கினார்.

“ம்ம்.. அதுவும் சரிதான்...அருமையான பாயிண்ட்.. நீ சொன்னமாதிரியே சொல்றேன்.. அல்லாஹ் அவருக்கு நிச்சயம் புரியவைப்பான்”


பசீர்பாய் டீக்கடைக்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் நவீனத்துவனும் வந்தார். இதுவரை நடந்த சுற்றில் வெற்றி பெற்றிருந்தாலும் நவீனத்துவனின் முகம் வாடிப்போயிருப்பதைக் கண்ட பசீர்பாய் பேச்சு கொடுத்தார். “என்ன அண்ணே.. சாப்பிட்டாச்சா? நல்ல சாப்பாடு போலயே இன்னைக்கு வீட்ல?”

கேட்டதுதான் தாமதம்.. உலகின் மீது அவர் கொண்டிருந்த கோபம் மொத்தத்தையும் வெளிப்படுத்திவிட்டார் நவீனத்துவன். 

“ஆமா பாய்... தனிமனிதனா நான் நல்லா இருக்கேன்...நல்லா சாப்பிடுறேன்.. ஆனா, உலகம் படும்பாட்டைப் பார்த்தா அதை முழுசா அனுபவிக்க முடியலையே”

புருவங்கள் உயர்த்தியவராக, பசீர்பாய் “என்ன சொல்றீங்கண்ணே.. ஒண்ணும் புரியலயே.. வீட்ல அண்ணி, அம்மாப்பா சுகம் தானே?”

”ஏன் பாய்... ஒரு மனுஷன் கவலைப்படறான்னா, அது அவன் குடும்பத்தைச் சுத்தி தான் இருக்கணுமா?”

சரிதான்... அண்ணன் ரொம்பவே கோபமா இருக்கார்... கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என நினைத்தவராக, “ம்ம் நீங்க சொல்றதும் சரிதாண்ணே”

“நாலு வயசுப்பிஞ்சுண்ணே.. அந்த பிஞ்சுக கூட நிம்மதியா இருக்க முடியல இந்த உலகத்துல... நாமல்லாம் இருந்து என்ன பாய் பிரயோசனம்?”

”நாலு வயசுக் குழந்தையாஆஆ.. என்னாச்சுண்ணே.. சொல்லுங்க.. நான் ஒரு நியூசும் கேள்விப்படலயே”

”ஒரு பக்கம் ஒருத்தன் ரேப் பண்ணிட்டான்.. இன்னொரு பக்கம் பெத்தவளே மகளைக் கொன்னுருக்கா ..இதெல்லாம் பார்த்தா செஞ்ச எல்லாரையும் நானே நேரே போய் செஞ்சிடுவேன் போல ... அவ்ளோ ஆத்திரம் வருது பாய்..”.

”பொறுமையா இருங்கண்ணே.. இந்த நியூசெல்லாம் கேட்டா நாளுக்கும் தூங்கவும் சாப்பிடவும் முடிய மாட்டேங்குது....”

”ஆமா பாய்... ஒரு நாளோட இந்த நியூசெல்லாம் நாம மறந்துடுறோம்.. அதான் இந்த மாதிரி அடிக்கடி நடக்குது.. சரியான தண்டனை இல்லாததுதான காரணம்?? என்ற நவீனத்துவன், கிசுகிசுத்து, “பாய்... நாமளே அந்த படுபாவியைக் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சுடுவோமா? அப்பதான் பாய் எனக்குத் தூக்கம் வரும்”

சற்றே அதிர்ந்தவராக, இது சமூகத்தின் அவலங்களைக் காணும் துடிப்புள்ள ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தோன்றும் ஒரு எண்ணம்தான் என்பதை உணர்ந்தவராக அமைதியானார்.

“அண்ணே... இந்த நியூஸ்ல எல்லாம் கேஸ் போட்டிருக்காங்க.. சீக்கிரம் தண்டனை கிடைச்சிடும்.... சட்டப்படி தண்டனை கடுமையாக கொடுத்துடுவாங்க...இதுதான் உலக வழக்கம்.”

”ஹ்ம்ம்.. நல்லா கொடுத்தாங்க .. போங்க.. கொடுக்கிற தண்டனை மக்கள் மனசுல பாதிப்பு உருவாக்கியிருந்தா.. இந்நேரம் உலகம் நந்தவனமா மாறியிருக்குமே...பிள்ளையை இழந்து தவிக்குறாங்க அந்த தாய் தகப்பன். ஆனா அவன் மட்டும் கொஞ்ச நாளைக்கு ஜெயில்ல இருந்துட்டு வெளியவந்துடுவான். ஒரு உயிரை எடுக்கிற அதிகாரத்தை இவனுக்கு யார் கொடுத்தா? ஒரு உயிரை எடுத்த இவன் உயிரை நாம எடுக்கிறதில் என்ன தப்பு? கடவுள் உண்டுன்னு சொல்றீங்களே எல்லாரும்… இதுதான் உங்க கடவுளோட நீதியா நியாயமா?”

மென்மையாகப் புன்னகைத்தார் பசீர் பாய்.

”ஏதாவது கேட்டா இப்படி சிரிச்சிடுங்க… பதில் இல்ல இல்ல உங்ககிட்ட எல்லாம்.. அப்ப ஏன் பாய் அந்த கடவுளுக்கு ஜால்ரா அடிக்கிறீங்க? எங்கள மாதிரி ஏதீயிஸ்டா மாறிடுங்க பாய்.”

மென்மையான புன்னகை.

”இந்த மாதிரி தப்பு பண்றவங்கள விடவும் கடவுள் தண்டிப்பார்னு சொல்ற உங்கள எல்லாம் பார்த்தா தான் அதிகமா கோவம் வருது பாய். இல்லாத ஒன்றுக்காக, கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டுக்காம இருக்கீங்க?”

”சரி.. நாங்க கடவுள் மேல பொறுப்பை ஒப்படச்சிட்டு அமைதியா பொறுமையா இருக்கோம்.. நீங்க என்ன பண்றீங்க அண்ணே?”

”போராட்டம் நடத்துறோம் பாய்.. யாருக்காகவும் நாங்க வெயிட் பண்றதில்ல… யார் மீதும் பழி போட்டு ஒதுங்கிறதில்ல..யாருக்கும் அஞ்சாமல் தப்பைத் தட்டி கேட்போம்”

”ஹா ஹா… அண்ணே… ஒருத்தன் தப்பு பண்ணா உங்களுக்கு வரும் அதே கோபமும் போராட்டமும் எங்க மத்தியிலும் இரு்க்கு… சொல்லப்போனா உங்கள விட அதிக பலம் எங்ககிட்ட தான் இருக்கு.. அது என்ன பலம் தெரியுமா? "

"அது என்னது பாய்..”

நீங்க போராட்டம் நடத்துறீங்க.. சரி.. ஏன்.. தப்பு செய்தவனுக்கு அதிகபட்ச தண்டனை கூட வாங்கித் தர்றீங்கன்னு கூட வச்சுக்குவோம். ஆனா, அவனால பாதிக்கப்பட்ட/உயிரிழந்தவருக்கு உங்களால் என்ன கொடுக்க முடியும்? அவன் இழந்தத நீங்க திருப்பி கொடுக்க முடியுமா? எனக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்னு அவன் கேட்கிறதுக்கு உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்? ஊழல் பெருச்சாளிங்க எல்லாம் என் ரத்தத்தை உறிஞ்சுட்டு நிம்மதியா வாழ்க்கையை அனுபவிச்சுட்டு மண்ணுக்குள்ள போய்டுவாங்க... நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்? சுகங்களை அனுபவிக்க அவன் எந்த விதத்தில் என்னைவிட அதிக தகுதிவாய்ந்தவனாகி விட்டான்னு அவன் கேட்கிற ஒரு கேள்விக்காவது உங்களால் பதில் சொல்ல முடியுமா? 

ஊரை ஏமாத்தி உலையில் போட்டவன் இந்த உலகத்தை ஏமாத்திடலாம். ஆனா ஒரு பாவமும் அறியாத நானும் என் குடும்பமும் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு வாழணும்? நான் எந்த விதத்தில் தகுதியிழந்தவனாகிட்டேன்?? நான் இந்த உலகில் பட்ட கஷ்டத்துக்கு எனக்கு என்ன நீதி? எனக்கு என்ன இழப்பீடு? - பதில் இருக்கா உங்ககிட்ட?

அநீதி இழைக்கப்பட்டு உயிரோடு இருப்பவனுக்கு உங்களால் ஓரளவுக்கு நீதி தேடி கொடுக்க முடியும்? இறந்தவனுக்கு என்ன நீதி? உங்களால் என்ன கொடுக்க முடியும்? 

"......."

"ஆனா எங்க பிரார்த்தனை கொடுக்கும். அவங்க இழந்ததுக்கும் அதிகமா கூட கொடுக்க முடியும். தப்பு செய்தவனுக்கு மறுமையில் தண்டனையை அதிகப்படுத்திக் கொடுன்னு கேட்கும் பிரார்த்தனை. தக்க காரணமின்றி பாதிக்கப்பட்டவங்களுக்கு, அவங்க பொறுமைக்காக, அதிக நற்கூலி கொடுன்னு உரிமையோட கேட்கும் பலம். ஆமா.. அநீதி இழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எங்க இறைவன் மறுமையில் தக்க உயர்ந்த கூலி கொடுப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கான். அந்த வாக்குதான் பாதிக்கப்பட்டவங்களுக்கு மட்டுமில்ல... தப்பு செய்றவங்களுக்கும் அச்சாணி. பாதிக்கப்பட்டவனுக்கு அது  பெரும் ஆறுதல்.. பாதிப்பு ஏற்படுத்துறவனுக்கு அதுவே கடும் எச்சரிக்கை.

இதுவரை கேட்டிராத தண்டனை காத்துக்கிட்டு இருக்குன்னு தெரிஞ்சா ஒரு பூனைக்குக் கூட பாவம் இழைக்க முடியாது.நம்ம ஊரில் நடக்கும் அநீதிக்கு மட்டுமில்ல அண்ணே.. உலகத்துல எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும் ஆறுதலுக்காகவும் தண்டனைக்காகவும் இதே அணுகுமுறை தான்.

இந்த உலக நீதிபதிகள் தவறிழைக்கலாம். ஆனால் அகில உலகின் நீதிபதி ஒரு போதும் தவறிழைக்க மாட்டான்.

நாங்க கடவுள் இருக்கிறான் என்பதை நம்பியதால் இந்த உலகில் நடக்கும் அநீதங்களுக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்று நம்புறோம்.

உங்களைப் போன்றவர்கள், இந்த உலகில் நடக்கும் அநீதங்களுக்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால், கடவுளை நம்புங்கள்; அவன் தீர்ப்பு நாளில் அளிக்கவிருக்கும் நீதியை நம்புங்கள்.”

தன் பாயிண்டுகளைப் பட படவென எடுத்து வைத்த பசீர்பாய், நவீனத்துவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தார். அதில் ஈயாடவில்லை.

அடேங்கப்பா.. நானா இவ்ளோ பேசினேன்… எல்லாப் புகழும் இறைவனுக்கே. பாயிண்ட் எடுத்துக் கொடுத்த பசீரம்மாவை நினைக்க நினைக்க பெருமிதம் கூடியது பசீர்பாய்க்கு.

உங்கள்  சகோதரி
பானு 

3 comments:

 1. இந்த பூச்சாண்டி கதையெல்லாம் உங்க ஆளுங்களே நம்பமாட்டாங்க... சவூதியின் சேக் பைஹான் அல் கம்தியை நினைவில் கொள்க.

  ReplyDelete
 2. நம்பாதவங்க யாரானாலும் நஷ்டவாளிங்க தான்...அவரவர் மனசாட்சிக்குத் தெரியும்...சவூதி ஷேக் ஆனாலும் கணக்குத் தீர்க்கப்படுவது உறுதி.

  பை தி வே.. இது பூச்சாண்டி இல்ல... யாராலும் மறுக்கமுடியாத நியாயம்.

  கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 3. சில விடயங்களுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை. பூமியில், மனித சக்திக்குட்பட்டு உச்ச நீதி வழங்க வழிகாட்டல்கள் தந்து அதை வலியுறுத்தியும் உள்ளான். இங்கு தீர்க்கப்படாத, தீர்க்கமுடியாத கணக்குகளையே இறைவனிடம் பொறுப்பு சாட்ட வேண்டும்.

  ReplyDelete