Monday, February 22, 2016

உதவி நாடுபவர்கள் (அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் வாயிலாக)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் உதவி நாடுபவர்களே. அனுதினம் அந்த ரப்பிடம் உதவி நாடி வழிகாட்டுதல் நாடி கையேந்துபவர்களே. அல்லாஹ் தனது கருணையை பேருதவியை நாடுபவனுக்கு இன்னொரு மனிதனின் வாயிலாக எத்தி வைக்கிறான். ஒவ்வொருவருக்கும் பிறருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தைக் கொடுத்து சாத்தியப்படுத்துகிறான். பிறருக்கு, அவர்கள் திருப்பித்தர இயலாத பேருதவியை அளித்துவிட்டால் அதுவே மிகப்பெரும் வெற்றி. நம் இதயத்திற்கான சிறந்த பயிற்சி, தேவையுள்ள பிறருக்கு உதவுவது என்றால் மிகையாகாது.

மேலும் பொறுமையைக்கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்.எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்க்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் பகரா 2:45

உலகம் முழுவதும் உதவி தேடுபவர்களைத் தேடிச்சென்று தான் உதவவேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றி, முக்கியமாக, நம் வீட்டில் உள்ளவர்களிலிருந்தே நாம் துவங்கலாம். நம்மால் இயன்ற அளவுக்கு எப்படி உதவ முடியும் என்பதைக் காணலாம்

முதலில் வருபவர்கள் நம் வீட்டுப்பெரியவர்கள்


நம்மைப்  பெற்றவர்கள் அவர்களைப் பெற்றவர்கள் என்று பலர் உள்ளனர். தன் இளமைக்காலம் முழுவதும் குடும்பத்திற்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்கள். வயோதிகத்தை அனுபவிப்பவர்கள். இரண்டாம் பால்யத்தை அடைந்தவர்கள்.நாம் சிறு பிள்ளைகளாய்க் குறும்புக்காரர்களாய் பிடிவாதக்காரர்களாய் இருந்த போதும் நம்மை பேணிப் பாதுகாத்தவர்கள். இப்பொழுது நம் அண்மையை எதிர்பார்த்து ஏங்குபவர்கள். அவர்களது இறுதிக்காலத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமும் முக்கியமுமாகும்.

இவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவி என்ன தெரியுமா
நமக்கான நேரத்தை அவர்களிடம் செலவு செய்வது இதைத்தான் அவர்கள் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் பழங்கதைகளையும் அறிவுரைகளையும் நாம் காது கொடுத்து கேட்கமாட்டோமா எனறு எதிர்பார்க்கிறார்கள். இதை நிறைவேற்றுவதைக்காட்டிலும் நமக்கு என்ன பெரிய வேலையிருக்கப்போகிறது?

அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்கள்


படைக்கப்பட்ட உயிரினம் அனைத்தும் மரணத்தை சுவைத்தே தீரும் என்று திருமறை தெளிவாக கூறுகிறது. அது புத்திக்கு தெரிந்தாலும் இந்த மனதுக்கு புரிவதில்லையே. கண நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு அழுது புலம்புகிறோம். ‘ஓ’வேன ஓலமிடுகிறோம். அல்லாஹ் பிழைபொறுத்துக் கொள்வானாக ரப்பையே சபிக்கிறோம். அவர்கள் முன்னே செல்பவர்கள் நாம் பின்னே செல்ல இருக்கிறோம் என்கிற உண்மையை பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.

அடுத்தது குழந்தைகள் 


குழந்தைகள் கண்முன்னே சரியானவர்களாய் வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி. அவர்கள் நம்மைத் தான் பிரதிபலிக்கிறார்கள். பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசான் என்பதை என்றும் நினைவில் இருந்து விலக்கக்கூடாது. பல பெற்றோர்கள் இதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாதது வேதனைக்குரிய விஷயம். அவர்களது சின்னஞ்சிறு வாழ்க்கையில் நம் அறிவுக்கெட்டாத பல விஷயங்கள் நிறைந்துள்ளன. அவர்களது செயல்கள் மூலம் நம்மால் பல சமயங்களில் யூகிக்க முடியாது. அவர்களுடன் அமர்ந்து பேசுவதன் மூலமே நம்மால் அறிந்துகொள்ள இயலும். குழந்தைகளின் இளம்பருவமென்பது நாம் நினைத்தாலும் நம்மால் திரும்ப அடைய முடியாது. ஆகையால், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்களுடன் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். 

இன்னும் ஒரு சில குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறந்துவிடுகிறார்களே, யா அல்லாஹ் என்ன செய்ய?

இச்சமயங்களில் அப்பெற்றோருடன் இருப்பவர்களின் பொறுப்பு அதிகரிக்கிறது. அக்குழந்தைகளின் பெற்றோர்களை ஆசுவாசப்படுத்தி நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை உண்டு. சிலருக்கு உடலில் என்றால் சிலருக்கு மனதில் குறை. குறையுள்ள குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடை எனும் வாக்கியங்கள் சொல்வதற்கு மிக எளிதானவை. கேட்பது மிக மிகக்கடினம். நமக்கு அவ்வாறான சோதனைகள் ஏற்படும்போது எவ்வாறு ஆறுதல் தேடுவோமோ அது போல் ஆறுதல் வழங்குவது மிகவும் அவசியம். அந்த ஆறுதலே அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவைத்தரும்.

மருத்துவ உலகம் முன்னேறியுள்ள தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ வழிகாட்டுதலை வழங்கலாம். நிச்சயமாக அல்லாஹ் அந்த குழந்தைகளையும் ஒரு அபாரமான திறமையுடனே படைத்திருப்பான். அதனை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வரலாம். அக்குழந்தைகளுடனும் நம் நேரத்தைச் செலவழிப்பதும் மிகப்பெரும் உதவியே.

உடலுக்கு சுகவீனம் இல்லாதது போல் மனதுக்கு சுகவீனம் இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கேலிப்பொருளாய்ப் பார்க்காமல் சக மனிதர்களாய் பாவிப்பது தான் சிறந்த உதவியாகும்

அடுத்து மணவிலக்குப் பெற்றவர்கள்

இது ஒரு அசௌகர்கய நிலை; தர்ம சங்கடம்.வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்து வரும் என்று நம்பி ஏற்ற உறவொன்று ஏதோ ஒரு புள்ளியில் பொய்த்துப் போய் இனி இதைத் தொடரவே முடியாது என்கிற கையறு நிலை.இதில் ஆண் பெண் என்கிற பேதம் இல்லை. இதைக்கடந்தும் இன்னொரு நல்ல வாழ்க்கை இருக்கிறது என்று எடுத்துரைக்கலாம்.
  
உடல் நிலை சரியில்லாதவர்கள், நோயின் தாக்கத்தால் கட்டுண்டு கிடப்பவர்கள், போன்றோர்களைச் சந்திப்பதென்பது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பாடம் அல்லவா? அதை நாம் பின் தொடர வேண்டாமா? பொருளாய்ப் பணமாய் வார்த்தைகளாய்க் குருதியாய் அவர்களுக்கு உதவலாமே!!!

சமீபத்தில் வாட்டிகா கூந்தல் எண்ணெய் விளம்பரம் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அதன் கரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி சிகிச்சையினால் தன் கூந்தலை இழக்கிறாள். பின் தன் கூந்தல் இல்லாத தோற்றத்தில் இந்த உலகத்தைப் பெரும் தடுமாற்றத்தோடு எதிர்கொள்ள எத்தனிக்கும் போது அவளின் கணவனும் நண்பர்களும் அவளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். நம்பிக்கை அளிக்கிறார்கள்.அழகு என்பது புறத்தோற்றம் அல்ல அகத்தின் நம்பிக்கையே என்று முடிகிறது விளம்பரம். என்ன  ஒரு அருமையான ஆறுதல். இந்த ஆறுதலைத்தானே மனித மனம் தேடுகிறது.

இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ பேர் கடன் தொல்லை என்றும், முதிர்கன்னி என்றும், வேலை இல்லாதவர்கள் என்றும், தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் என்றும், போரினால், இனப்படுகொலைகளால், இயற்கை சீற்றத்தால் உயிர் வீடு மனைவி மக்கள் என்று சகலத்தையும் இழந்து தவிப்பவர்கள் என்று, பலரும் நம்மைச்சுற்றி உள்ளனர். இவர்களுக்குப் பணமாய் பொருளாய் கரிசனமாய் இது எதுவுமே இல்லாவிட்டாலும் அந்த ரப்பிடம் கையேந்தி செய்யப்படும் துவாவாய் உதவலாமே சகோதர,சகோதரிகளே .  

இன்று நாம் ஒருவருக்கு அளிக்கும் ஆறுதலும் பேரன்பும் பல்கிப் பெருகி நம்மிடமே வரப்போகிறது என்பதே உண்மை.

உங்கள் சகோதரி
சபிதா காதர்

read more "உதவி நாடுபவர்கள் (அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் வாயிலாக)"

Saturday, February 13, 2016

ஆடையில்லா மனிதன்...

பிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம்!! விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .

முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா?

நாம் ஏன் ஆடை அணிகிறோம்? நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.

ஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா?

குர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும்? எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன?

2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....

உலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்!!!


டையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும்.  தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.  ஆனால், ஆடை..?  எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;

ஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில்? கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.

உடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.

கடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.

டைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப்  பேணும் முறையும் அமைகிறது.  ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.

ஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.

விசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து  அணிந்து அழகுபார்க்கிறோம்.

தற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!!

மானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள்.  மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல!

முன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதாரணமான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ? நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா?

அன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா?

றைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.

”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.

சுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும்.
read more "ஆடையில்லா மனிதன்..."

Monday, February 01, 2016

ஹிஜாபிற்கு மாறிய ஆர்.திலகம்-ஹிஜாப் டே ஸ்பெஷல்


எல்லாம்  வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம்துல்லாஹி வபாரக்காத்தஹு..

“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்றொரு வாக்கு உண்டு. இன்று மனிதர்களில் பலர்  ஆடை அணிந்தும் ஆடை  இல்லாத அரை மனிதன் போலத்தான் காட்சியளிக்கிறார்கள் என்றால் மிகையாது. நாகரீகத்தின் வெளிப்பாடு என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டாலும், ஒரு மனிதன் குறித்த மதிப்பீடு அவன் அணிந்திருக்கும் ஆடையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. குறிப்பாக, பெண்களின் சுயமரியாதை காக்கப்பட, அவர்களின் உடையும் ஒரு காரணம்.

நமக்குப் பிடித்தமான  ஆடைகளை அணிவதில் தவறில்லை, அது  நம் சுதந்திரம் என்றாலும் மற்றவர் கண்ணை உறுத்தாமல் ஆடை அணிவது என்பது நமக்கே கண்ணியத்தை வழங்குகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை. அப்படிப்பட்ட கண்ணியத்தையும், பாதுகாப்பையும் வழங்கவே  இஸ்லாம், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஹிஜாப் என்ற கேடயத்தை வழங்கியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு அது இறையின் கட்டளை, கடமை என்றாலும் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டே பல முஸ்லிமல்லாத சகோதரிகளும் கண்ணியமான உடை அணிவதில் கவனம் கொள்கின்றனர். ஏன் அவர்களுக்கு  எல்லாம்  சுதந்திரம்  இல்லையா??? சுதந்திரம்  என்பது எது, நம் உடல் அங்கங்களை வெளிப்படுத்தக் கூடிய ஆடை தான் சுதந்திரமா?? என் கற்புக்கே பங்கம் வந்தாலும் என் சுதந்திரம், என் ஆடை என்றே பல பெண்கள் முழங்குகின்றனர். நம் பாதுகாப்பில் நாமே அக்கறை கொள்ளவில்லை எனில் நம்மைத் தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? என சிந்திப்பதில்லை.

சிலர் அணியும் அரைகுறை ஆடையால் ஒட்டு மொத்த பெண்களுக்கும் அவப்பெயர் என்றாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நம்மை சரி செய்ய முயற்சி செய்து தான் ஆக வேண்டும்.

பெண்ணீயம் பேசுவது எல்லா இடங்களிலும் பொருந்தி வராது என்பதற்கு பெண்களின் ஆடை விஷயத்திற்கும் பொருந்தும்.

அனைவரும் வழக்கமாக அணிவது போல் தானும் ஆடை அணிந்தும், மற்றவர்களின் ஏளனப்பேச்சிற்கும், கழுகுப் பார்வைக்கும், துன்புறுத்தலுக்கும்  ஆளானதை மிக வருத்தத்துடன் நம்முடன் மெயில் மூலம் பகிர்ந்துக் கொண்டு, நானும் இஸ்லாமியப் பெண்களைப் போல் உடை அணிய கற்றுக் கொண்டு, அதை பின்பற்றியும் வருகிறேன், இதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக உங்கள் இஸ்லாமியப் பெண்மணி பிளாக்கில் வெளியிடுங்கள் என்று கூறுகிறார் சகோதரி ராஜதிலகம்.

என் முகம் மட்டும் காண நான் அனுமதிப்பதே என் சுதந்திரம்.


சகோதரி ராஜதிலகம் அவர்களின் மெயில்:


நான் ஹிந்துவாகப் பிறந்தேன், வளர்ந்தேன், இன்னும் ஹிந்துவாகவே இருக்கின்றேன். தினமும் கோவிலுக்குப் போவேன், கடவுள் என்றால் ரொம்பப் பிடிக்கும், கோவில் தான் எனக்கு இரண்டாவது வீடு மாதிரி.

நான் பல இடங்களில் ஒரு பெண்ணாகப் பல ஆண்களின் துன்புறுத்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆளாக்கப்பட்டேன். பஸ், ரயில், காலேஜ், ஹோட்டல், பீச், லைபரரி, ஏன் பள்ளிச்சீருடை அணிந்து சென்றால் ஒரு  சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூட தவறாகப் பேசுவர். இதை நான் யாரிடம் பகிர்ந்தாலும் என்னைத் தான்  அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்லுவாங்க.

என் வேலை சம்மந்தமாகச் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தேன். தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டிய அந்த நேரங்கள் அனுதினமும் எனக்கு ஒரு அக்னி பிரவேசம் பண்ற மாதிரி இருக்கும். அத்தனை பார்வைகள்..

ஒரு நாள் ஒருவர் என்னிடம் வந்து, இப்படி எல்லாம் ட்ரெஸ் பண்ணாதிங்க என்று கூறிச் சென்றார். எனக்கு ஒண்ணும் புரியல.. இத்தனைக்கும் துப்பாட்டா போட்டு கவர் பண்ணி தான் இருப்பேன். காற்றில் பறக்கும் துப்பாட்டவைக் கூட கண்களில் ஏந்தி நம்மை கொடூர பார்வை கொண்டு உடையைத் துளைத்து ரசிக்க வைக்கும் என்பதை அவரின் அப்போதைய வார்த்தை எனக்கு உணர்த்தியது. அதிர்ச்சியாக்கியது.

அன்று முதல் துப்பட்டாவைத் தலையோடு சேர்த்து சுத்தி பின் பண்ணிடுவேன். என்னோட கழுத்து கூட தெரிய வேணாம்னு அப்படி செய்ய ஆரம்பித்தேன்.

ட்ரைவிங் ஸ்கூல் போனால் அங்கேயும் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள  முயன்றார். இத்தனையும் என்னை தற்கொலைக்குத் தூண்டும் அளவில் துன்புறுத்தியது.

இறுதியாக என் உடல் மொத்தத்தையும் மறைக்கும் அளவில் உடை அணிய ஆரம்பித்தேன். ஹிஜாப் (தலையை மறைக்கும் ஷால், துப்பட்டா) போடுவேன். ஷார்ட் ஸ்லீவாக இருந்தாலும்  அதனை மறைக்க எக்ஸ்ட்ரா ஸ்லீவ் போட்டுப்பேன்.. என் இந்த உடை மாற்றத்தை பார்த்துத் தெரிந்தவர்கள் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. அதிலும் என்னை அதிகமா தெரிஞ்சவங்க தான் என்னை, என் உடையை கிண்டல் பண்ணாங்க.

ஆனால் என்னுடைய இந்த புதிய மாற்றத்தால் இப்போதெல்லாம் ரோட்டில் என்னை யாரும் தவறாக பார்ப்பதில்லை, பஸ்ல யாரும் இடிக்கிறதில்லை, ஒரு மரியாதையோடு தான் பார்க்கிறார்கள்.

சமீபமாக என்னுடைய தோழனின் வீட்டு விசேஷத்திற்கு  சென்றிருந்தேன், அங்கயும் நான் ஒரு இஸ்லாமிய பெண்  போல் உடை அணிந்து தான் போனேன். என்னை பார்த்து என் பேரை கேட்டவர்களிடம் என் பெயரை சொன்னதும், நான் ஒரு ஹிந்து என்று அறிந்தவுடன் முகம் சுழித்தனர். அவர்களைப் பொறுத்தவரை நான் என்னுடைய மதத்தை அவமதிக்கிறேன், ஆனால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எனக்கு  இப்படி இருக்க பிடிச்சு இருக்கு என்று சொல்வதை எந்த தெய்வம் தப்பா எடுத்துக்க போகுது, எனக்கு புரியல..

ஹிஜாப் எங்கு கிடைக்கும், எப்படி சரியாக அணிவது என்று தேடும் போது உங்கள் இஸ்லாமியப் பெண்மணி வலைதளத்தின் லிங்க் என் கண்ணில் பட்டது. என்னுடைய இந்த மாற்றத்தை உங்களுடன் பகிர்ந்து என்னை போல் உள்ள அனைவருக்கும் உடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே என் சொந்த அனுபவங்களை உங்கள் பிளாக்கில் போட எழுதினேன்.

இப்போ  என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஒரு முஸ்லிம் பொண்ணு என்று நினைக்கிற அளவில் என் உடை நேர்த்தியாக மாறி விட்டது. என்னை அவமானங்களிலிருந்து காப்பாற்றிய ஹிஜாபிற்கு என் நன்றிகள்.

(சகோதரியின் பாதுகாப்பு கருதி அவரின் சில கசப்பான அனுபவங்கள் நீக்கப்பட்டுள்ளன)


திருத்தத்தை நம்மில் துவக்குவோம்


சகோதரி அனுப்பிய மெயிலின் ஒவ்வொரு வரியும் இன்றைய பெண்களின் நிலையை நன்கு பறைசாற்றுகிறது. முழுவதுமாக உடலை மறைத்தாலும் நாமே அறியாத சிறு ஆடை விலகல்களையும் உலகம் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறது என்பதற்கு சகோதரியின் அனுபவம் நமக்கு எல்லாம் ஒரு விழிப்புணர்வு அளிக்கிறது.

இந்த விழிப்புணர்வு சில சகோதரிகளுக்கு இல்லாதது மிகவும் வருத்தமே. பார்க்கும் கண்கள் மீது பழி போடும் இக்காலப் பெண்களின் மத்தியில் திருத்தம் நம்மில் இருந்தே துவங்க வேண்டும் என்ற இச்சகோதரியின் முதிர்ச்சியான அணுகுமுறை பிறருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.

உலகின் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ முஸ்லிமல்லாத பெண்களும் ஹிஜாபை விரும்பி முன்வந்து அணிவதைக் கேட்டிருப்போம். உதாரணத்திற்கு இப்பெண்மணி கூறுவதைக் கேளுங்கள். இன்று நம் முன்னே இதோ நம் தமிழகத்தில் பல ராஜதிலகங்கள் உலாவருகின்றனர். நம் கண்ணியம் காக்க நாம் அணியும் உடையை நேர்த்தி செய்து கொள்வதில் எந்த மதம் நம்மை தடுக்கிறது, எந்த கடவுள் நம்மை விலக்கி வைக்கிறது?

நல்ல விஷயங்களைப் பின்பற்ற மதம் ஒரு தடையல்ல, மனிதனின் மனமும் இந்த சமூகமும் மட்டுமே!!!


உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன் 
read more "ஹிஜாபிற்கு மாறிய ஆர்.திலகம்-ஹிஜாப் டே ஸ்பெஷல்"