Thursday, October 27, 2016

பொதுச்சிவில் : பெண்களின் கருத்தென்ன?

ஸ்ஸலாமு அலைக்கும் .

பொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.


ஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர்

இஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ! ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி

ஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்படி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.

மனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் ! சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.

வெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.

சிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க முடியாது.

தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.
பலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறோம்.

பர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.
இறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது? ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்?
அந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்!!

13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;

மலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள்.  இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

அதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்
சரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து  அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் !  பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே!. 

ஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது,  பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும்? ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று!

மேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் ? இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில்
அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென
பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள்
நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் !

பெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி :

பொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.

சபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில்  அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன்
இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே  பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு .
எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை

சித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி :

பெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது! பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.

யாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்

பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.
இருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா?

ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”

ஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :

நாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.

இஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.
நூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.

ஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.

அதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை !

பர்வீன் அனஸ் (சென்னை) - Managing Director at BURAK India , Director (company) at Burak Lanka Private Limited.

பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.

மட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம்,விவாகரத்து,வாரிசுரிமை,சொத்துரிமை களுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?

நமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.

இந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள்,ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் மாற்றுமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

--------------
தொகுப்பு : ஆமினா முஹம்மத்


குறிப்பு : பெண்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய நினைத்தால் admin@islamiyapenmani.com மெயில் வழியாகவும், பேஸ்புக் பக்கத்தில் ( https://www.facebook.com/IslamiyaPenmani/ ) குறுந்தகவல் வழியாகவும் அனுப்பலாம்.
read more "பொதுச்சிவில் : பெண்களின் கருத்தென்ன?"

Monday, August 01, 2016

குழந்தையின் முதல் உரிமை!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

இவ்வுலகில் உள்ள அனைத்துமே மனிதனுக்காகத் தான். ஆனால் உண்மையென்னவெனில் இந்நவீன காலத்தில் மனிதனின் ஆரோக்கியத்தை விலைகொடுத்துத்தான் மற்ற அனைத்தும் பெறப்படுகின்றன. இதில் முதன்மையானதாக அங்கம் வகிப்பது, தாய்ப்பால். எவ்வளவு படித்தவர்களானாலும் இன்றும் தாய்ப்பாலின் அருமை புரியாமல் பிறந்த குழந்தைக்குப் புட்டிப்பால் தருவதும் தாய்ப்பாலின் குணங்கள் கொண்டதாகத் தவறாகப் பரப்பப்படும் ஃபார்முலா பால் தருவதும் அறியாமையினால் விளைவதே. (தாய்ப்பால் அறவே கொடுக்க இயலாதவர்கள் தவிர).

இன்று உலகத்தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து சில விழிப்புணர்வுத் தகவல்களைக் காண்போம். இது தாய்ப்பாலின் குணங்கள், அது குழந்தைக்கு எந்தளவு உடல்வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் உதவுகிறது என்று கூறும் பதிவல்ல.நாம் அனைவரும் இத்தகவல்கள் அனைத்தையும் அறிந்தேவைத்துள்ளோம். எனினும் தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் எல்லாம் அறிந்தவர் ஆகிவிடமாட்டார், அவற்றைச் செயல்படுத்தாதவரை. 


சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவியது. பொதுவிடத்தில் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயை, இன்னொருவர், அவரும் ஒரு பெண், கோபத்தில் திட்டுவது அந்த வீடியோவில் பதியப்பட்டிருந்தது. ஏன்? பொதுவிடத்தில் குழந்தைக்கு உணவூட்டுவது அத்தனை பெரிய குற்றமா? இச்சம்பவம் நிகழ்ந்தது அரைகுறை ஆடைக்குப் பெயர் போன மேற்கு நாட்டில் என்பது அடுத்த அதிர்ச்சி. முதலில் தன் குழந்தைக்கு உணவூட்டுவது ஒரு தாயின் உரிமை. அவ்வுரிமையைப் பறிக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமை இல்லை. அடுத்தது, அப்பெண் பாலூட்டுவது குற்றமாக, பிற ஆண்களைக் கவரக்கூடியதாகக் கருதிய அவர், அரைகுறை ஆடையணிந்து செல்லும் பெண்கள் ஒவ்வொருவரிடமும் தன் கோபத்தை வெளிப்படுத்த இயலுமா? அனைத்திற்கும் மேலாக, பசித்தழும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைக் கூட பாலுண்ர்வைத் தூண்டுவதாகக் கருதப்படும் முட்டாள்தனத்தை இச்சமூகத்தில் விதைத்தது யார்? அவர்களை நோக்கி நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளோமா? 

இவ்வாறு யாருக்கேனும் நிகழ்ந்தால் அச்சூழலை எதிர்நோக்கவுல் சில அமைப்புகள் அறிவுரைகள் வழங்கியுள்ளன:
1. தாய்ப்பால் கொடுப்பதை எதிர்ப்பவரது கருத்தை நாசூக்காகவோ நகைச்சுவை கொண்டோ எதிர்கொள்ளல்.
2. தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை அவருக்கு உணர்த்துவது
3. எதுவாகினும் அவரது கருத்துக்கு மதிப்பு கொடுத்துத் தன் உரிமையை விட்டுக்கொடுக்காமல் பதிலளித்தல்.

எந்தத் தாயும் தந்தையும் தம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தம் சக்திக்கு அப்பாற்பட்டவைத் தவிர்த்து, எக்காராணத்துக்காகவும் தளர்த்திக்கொள்ளக் கூடாது. இன்றைய தாய்மார்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவது தம் பணிச்சுமையால் குழந்தைக்குத் தாய்பால் கொடுக்க முடியாமல் போவது. தம் பணியாளர்கள் நலனில் அக்கறை கொள்ளும் நிறுவனமே சமூகத்தில் வெற்றி பெறும். பேறுகாலம் முடிந்த 2,3 மாதத்திற்குள்ளேயே பணியில் சேர நிர்ப்பந்திப்பது அப்பெண்களை மனதளவில் எந்தளவில் பாதிப்புள்ளாக்கும் என நிறுவனங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். குறைந்தது முதல் 4,5 மாதங்களுக்காவது குழந்தைகளுக்கென தனியிடம் ஒதுக்கப்பட வேண்டும். இதன்மூலம் அவர்களது பெண் ஊழியர்கள் சிறந்த முறையில்  பணியாற்ற உதவுவதை அவர்கள் கண்கூடாகக் காணலாம். என்னதான் பம்ப் செய்து தாய்ப்பாலைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு வந்தாலும் தாய்ப்பால் ஊட்டும்போது தாய்க்கும் சேய்க்குமிடையே ஏற்படும் பந்தத்தை வேலைக்குச் செல்லும் ஒரே காரணத்திற்காக இழக்கவோ பறிக்கவோ எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. 

பணியிடத்தில் சமீபத்தில் பிரசவித்த பெண்ணொருவர் படும் பாட்டை இந்த அனிமேட்டட் வீடியோவில் காணலாம்:இதுவரையில் தாய்ப்பாலின் அனைத்து நற்குணங்களும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நம்மைப் படைத்த இறைவனுக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்ததால் தான், தன் மறையிலும் தாய்ப்பால் வழங்குவதைக் குறித்து அறிவுறுத்தியுள்ளான். 


31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்...
கணவன் - மனைவி விவாகரத்து பெற்றால் கூட, மனைவி விரும்பினால் தொடர்ந்து தாய்ப்பால் குழந்தைக்கூட்டலாம். இல்லாதபட்சத்தில், செவிலித்தாய் கொண்டு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்றே கூறுகிறானே தவிர, அதற்கீடாக வேறதையும் குழந்தைக்கு வழங்குவதை அவன் அறிவுறுத்தவில்லை... சுப்ஹானல்லாஹ். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்சிலையிலும் குழந்தையின் உரிமையைப் பறிப்பது தவறு என்று நமக்கு அழகாக உணர்த்துகிறான். தக்கக் காரணமின்றி பிறர் உரிமையைப் பறிப்பவர் அநீதி இழைத்தவராவார். 

65:6. உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டுமல்ல.. ஒரே தாயிடம் பாலருந்தியவர்களும் சகோதர, சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். இவர்கள் பால்குடிச்சகோதர, சகோதரிகள் ஆவர். அதாவது, திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்டவர்கள்

2645. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்' என்று கூறினார்கள்.
Volume  Book :52

2646. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்' என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்' என்று கூறினார்கள்.
Volume  Book :52

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் நாம் அறியவேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், சிலர் அதிகப்படியாகச் சுரக்கும் தாய்ப்பாலை, தாய்ப்பாலின்றித் தவிக்கும் குழந்தைகள் உள்பட, பிற குழந்தைகளுக்கு அளிக்கின்றனர். இது மிகவும் அறிவுடைய செயல் எனினும், ஒரே தாயிடம் பாலருந்தும் குழந்தைகள் பின்னாளில் திருமண பந்தத்தில் ஈடுபட இயலாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் அவரது சந்ததிக்கும் இச்சமுகத்துக்கும் இன்றியமையாத் தேவையாகும். உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறந்த சிலமணி நேரத்தில் தாயை இழந்து தாய்ப்பால் இன்றி தவிக்கின்றன. அதேபோல் குழந்தையை இழந்த எத்தனையோ தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பதைத் தடுக்க மருந்துகள் உட்கொள்கின்றனர். இவை போன்ற எந்த பிரச்சினையுமின்றி, தவறான தகவல்களாலும் நம்பிக்கைகளாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தால் அதைவிட முட்டாள்தனம் இவ்வுலகில் வேறில்லை.

உங்கள் சகோதரி,
பானு.


read more "குழந்தையின் முதல் உரிமை!!"

Wednesday, July 27, 2016

ஆதரவற்றோர்களுக்கு அன்னை, ஆர்பாட்டமில்லாமல் ஓர் சாதனை - டாக்டர் ஆயிஷாதாய்மதத்திற்கு திரும்புவதென்பது எளிதான விஷயமல்ல! வேறொரு புதிய அடையாளத்துக்கு தன்னை அழைத்துச் செல்லும் மிகப்பெரிய போராட்டம் அது.   இரத்த பந்தங்களின் எதிர்ப்புகளை சந்திக்கவும், வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிர்பந்தத்தில்  அடுத்தது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத சூழலுக்கும்  எடுத்துச் செல்வது அது!    ஆண்களுக்கே மிகப்பெரும் சவாலாக இருக்கும் இச்  சூழ்நிலையில் ஓர் பெண் இருப்பின் ??  அவள் மார்க்கத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தால் மட்டுமே 'தாய் மதம் திரும்புதல்' சாத்தியம்! அல்லாஹ் கொடுக்கும் இச்சோதனையிலும் மனம் திடமுற்று கடந்தால் வெற்றிச்சோலையில் இஸ்லாமிய சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும். அப்படியாக  இஸ்லாத்தை ஏற்று தன்னை அழகாக்கி,  தன் சாதனைகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்தையும் அழகாக்கிய பெருமைக்குரியவர் தான் சகோதரி டாக்டர்  ஆயிஷா .   இம்முறை சாதனைப் பெண்மணிக்காய் அறிமுகம் செய்கிறோம்
சகோதரி ஆயிஷா அவர்களின் பூர்வீகம் கர்நாடகம்.  அதிகம் கல்வி பெற்றிராத தாய் தந்தைக்கு ஒரே பெண்.  தன் மகளை எப்படியேனும்  சமுதாயத்திற்கு பயனளிக்கும் ஓர் மருத்துவராக ஆக்கிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை.  ஆரம்பக் கல்வியுடன் சேர்த்தே  சமூகப் பணிகள் செய்யும் ஆர்வத்தையும்  ஆரம்பத்திலேயே விதைத்தார்கள். சகோதரியின் தாய்மொழி கன்னடம், படித்ததெல்லாம் அங்கே தான்.  எப்படி இஸ்லாத்தை ஏற்றார், எப்போது தமிழ்நாட்டின் மருமகள் ஆனார், எப்படி சாதனைப் பெண்ணானார் என்பதெல்லாம் அவர் மூலமாகவே கேட்டறியலாம்.

இஸ்லாம் உங்களுக்கு அறியவைக்கச் செய்த  அந்த தருணத்தை கூறுங்களேன்

அது ஒரு சுவாரசியமான நிகழ்வு.  இஸ்லாம் என்பது  கிறிஸ்தவம், புத்தம் போன்றே ஓர் மதம் என்ற அளவில் தான் சராசரி மனிதனுக்கு தெரியும் அளவுக்கு  எனக்கும் தெரிந்திருந்தது.

கல்லூரியில் பயிலும் போது,  ஓர் ஓய்வு வேளையில் சக மாணவ மாணவிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். வழக்கமாக எங்கள் உரையாடல்கள் ஏதேனும் ஓர் குறிப்பிட்ட தலைப்பை சுற்றி வரும்.  அப்போது என் முஸ்லிம் நண்பன் ஆரம்பித்தான் "ஒவ்வோர் மதமும் ஏதோ ஒரு வகையில் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்" என்றான்.  தினமும் கோயில் சென்று வரும் அளவுக்கு இந்துமதத்தில் பற்றுள்ள நானோ கோபங்கொண்டு "   பொய் கூறக்கூடாது, திருடக்கூடாது  என எல்லா மதங்களும்  ஒரே விதமான ஒழுக்கநெறிகளை போதிக்கையில் எப்படி இதுபோல் வேறுபாடு காண்கிறாய், அனைத்து மதங்களும் ஒன்றே, ஒவ்வொருவரும் அதற்கென பெயர் வைத்து வரையறை வகுத்துக்கொண்டனர் " என எதிர்த்தேன்.  ஆனால் அவனின் அடுத்த கேள்வி என்னை வாயடைக்க வைக்கும் என எதிர்பார்க்கவில்லை . " எல்லா மதமும் ஒன்றென கூறும்  உனக்கு இஸ்லாத்தை பற்றி எந்தளவுக்கு தெரியும்" என்றான்.

ஓய்வுப்பேச்சுக்கள் ஆய்வுக்கு இட்டுச்செல்லுமென அப்போது நான் எதிர்பார்க்கவில்லை.  என் வாதத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டேன். எந்த மதம் பற்றியும் தெரியாமலேயே எப்படி அனைத்தும் ஒன்றென என்னால் கூற முடிந்தது ?. தோல்வி சவாலாக  மாறியது. முதலாவதாக பைபிளின் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளை ஆராயத் தொடங்கினேன். அதே சமயம் ஓர் முஸ்லிம் பெண்ணிடம் மார்க்கப்பாடமும் பயின்றேன். இப்படியாகத் தான் இஸ்லாம் என்னுள் அதிகம் அறிமுகமானது.


அட! சுவாரசியமாய் இருக்கிறது. அப்படியானால் எப்போது  உங்கள் மனம் இஸ்லாமிய நெறிகளை உண்மையானதென எடுத்துக்கொண்டது ?

ஒரு முஸ்லிம் பெண்மணியிடம் மார்க்கப்பாடம் பயிலச் சென்றதாகச் சொன்னேன் அல்லவா? முதல் இரு வகுப்புகள் எனக்குள் பெரிதாய் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.  மூன்றாம் முறை செல்கையில் அவர் குர்ஆனில் ஏதோ ஓதிக்கொண்டிருந்தார். "இதில் அப்படி என்னதான் இருக்கிறது" என கேள்வி முன்வைத்தேன். " மனிதன் எப்படி வாழ வேண்டும்   என்பதுடன் சேர்த்து அவன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை கூறும் சட்டமும் வாழ்வியல் பாடமும் அமைந்த வழிகாட்டி" என்றார். அந்த பதில் என்னை இன்னும் அதிகம் கேள்வி எழுப்பும் ஆர்வத்தை தூண்டியது.  கருவின் வளர்ச்சி, இரவுப்பகலின் சுழற்சி பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை அப்பெண் விளக்கும் போது அறிவியல் மாணவியான எனக்கு  எளிதில் புரிய முடிந்தது. அது மேலும் ஆச்சர்யங்களுக்கு அழைத்துச் சென்றது. ஆர்வத்தை தூண்டியது. இந்துமதத்தையும் இஸ்லாம் மதத்தையும் ஆய்வு செய்யும் நிலைக்கு என்னை கொண்டுவந்து சேர்த்தது.
 
சுப்ஹானல்லாஹ்! ஆய்வு செய்ய ஆரம்பித்த நாட்களில் இஸ்லாத்தில் உங்களை கவர்ந்த விஷயங்கள் என்ன?

முதலில் பெண்களின் நிலைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்னை கவர்ந்தது. விதவைக்கும் எவ்வித உறுத்தலின்றி மறுதிருமணம் மூலம் மறுவாழ்க்கைக்கு தயார்படுத்தும் சகஜமான போக்கு என்னை வியப்புக்குள்ளாக்கியது. அடுத்ததாய் நோன்பு. நாங்கள் நோன்பு நாளில் பாலும் நீரும் கூட அருந்திக்கொள்வோம். ஆனால் ரமலானில் நோன்பு நோற்கையில் இடைபட்ட நேரத்தில் எதுவும் சாப்பிட கூடாது என்பதில் இருக்கும் நோன்பின் அர்த்தத்தை  மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்டியது. ஐவேளை தொழும் முறை என் மனதை ஒருநிலைப்படுத்தியது. இதுதான் தூய மார்க்கம் என்ற முடிவுக்கு என்னை கொண்டுவந்தது இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறைதான். அதில் என்னை நானே ஈடுபடுத்திக்கொண்டபின் தான் அதன் மகத்துவம் புரிந்தது.


இஸ்லாத்தை ஏற்றதும்  பெற்றோர்கள் எதிர்த்தார்களா?

இல்லை. என் தாய் நற்சிந்தனை கொண்ட பெண்.  ஒவ்வொருவரின் மனதையும் புரிந்து  ஏற்பவர். தன் கருத்தை எவரிடத்திலும் திணிக்காதவர். முஸ்லிம் ஆன போது எனக்கு 21 வயது. மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு பயின்றுக்கொண்டிருந்தேன்.  இஸ்லாத்தை ஏற்றதும் அம்மாவிடம் சொன்னபோது எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டார். ஆனால் படிப்பு முடியும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாமென அறிவுரைச் சொன்னார்.

தாயும் இஸ்லாத்தை ஏற்றார்களல்லவா?
 
 நான் முஸ்லிமான பின், சில காலம் கழித்து என் தாய் சுப்புமா   இஸ்லாமிய கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமானார். ரஹீமா என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.  அப்போது அவரின் வயது 58.   கூடவே ஹஜ் கடமையும் நிறைவேற்றினார்கள். உன்னதமான பெண்மணி.  எனக்கான இலக்கை நிர்ணயித்துத் தந்தவர்.  ஆதரவற்ற பெண்களுக்கு பாதுகாப்பான அதே சமயம்  வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய ஓர் இல்லம் அமைக்க எனக்கு ஊக்கப்படுத்தியவரும், அதற்கான இடத்தை தந்தவரும் என் அன்னை தான். தன் 70ம் வயதில் இயற்கை எய்தினார்கள். அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்துச் சொர்க்கத்தில் நல்லடியார்களுடன்  தங்கச் செய்ய நீங்களூம் என் அன்னைக்காக பிரார்த்தியுங்கள். 


கண்டிப்பாக சகோதரி எங்கள் துஆ எப்போதும் உண்டு.   அதுசரி , தமிழ்நாட்டின் மருமகளான கதை ?

 கல்லூரியின் இறுதியாண்டில் ஆடிட்டர் அப்துல் ஹமீத் அவர்களை சிங்கப்பூரில் சந்திக்க அந்த அறிமுகம் திருமணத்தில் கொண்டுவந்தது. அல்ஹம்துலில்லாஹ். தாய்மொழியும் தாய்மண்ணும் வெவ்வேறாகினும் இஸ்லாம் எனும் பந்தம் எங்களை ஒன்றிணைத்தது. என் முன்னேற்றத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றுபவர்.  திருமணத்திற்கு  பின்  என் கணவரின் சொந்த மாவட்டத்திலேயே குடிபுகுந்தோம். மாயவரத்தில் ஐந்து வருடங்கள் மருத்துவராக பணியாற்றினேன். அதன் பின் என் கணவர் சிங்கப்பூரில் தணிக்கை அலுவலகம் நிறுவியதால், நானும் அங்கேயே சில காலம் இருந்தேன்.

அல் ஹிதாயா எனும் ஆதரவற்றோர் இல்லம் அமைத்ததன் ஆரம்பப்புள்ளி எது  ? 
 
 சிங்கப்பூரில் குடியேறியதும் என் கணவருடன் இணைந்து சமுதாயப் பணிகளும் செய்யத் துவங்கினேன். singapore converts associationல் என்னை இணைத்துக்கொண்டு சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றினேன்.   சிங்கப்பூரில் மார்க்கத்திற்கு திரும்புவோர்களுக்கு தகுந்த ஆலோசணைகள் பாதுகாப்புகள் வழங்க அமைப்புகள் இருப்பது போல் , குறைந்தபட்சம் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்காகவாவது , அவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்காகவாவது ஓர் இல்லம் அமைத்தால்  என்ன என தோன்றியது.    அங்கிருந்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதால்  தமிழகம் திரும்பினேன்.   மாங்காட்டில் அம்மாவின் நிலம் இருந்தது.  நன்மையின் பால் முந்திக்கொள்ளும் வழக்கமுள்ளவர்கள் அவர்கள்.  என் அம்மா கொடுத்த நிலத்தில் தான் 2000 அல்-ஹிதாயா பெண்கள் நல அறக்கட்டளை எனும் பெயரில் 50 பெண்கள் வரை தங்கிக்கொள்ளும் அளவுக்கு   ஹோம் அமைத்தேன். இப்போது 40 -45 பெண்கள் வரை இருக்கிறார்கள். 


என்ன மாதிரியான  பணிகளுடன்  அல்-ஹிதாயா  நடைபோட்டுக் கொண்டிருக்கிறது ?

இதன் முக்கிய நோக்கமே ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பது தான்.  தங்குமிடம், உணவு , அடிப்படை தேவைகள்  உடன் தார்மீக ஆதரவளிப்பது இதன் நோக்கம்.  வெறும் தங்கிக்கொள்ளும் இடமாக அல்லாமல்  வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு முன்னேற பயிற்சி வழங்குகிறோம். தையற்பயிற்சி, கணினிப்பயிற்சி, சமையற் கலை,  கேட்டரிங் சர்வீஸ் பயிற்சி,  ஆங்கிலம் - அரபி  பயிற்சிகள்  நடத்தப்படுகின்றன.  மருத்துவ உதவியோ சட்ட உதவியோ தேவை எனில்  செய்து கொடுக்கிறோம்.   யாரையும் சார்ந்தே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சூழலில் இருந்து விடுவித்து தேவையான தொழிற்பயிற்சிகள் அளித்து வருகிறோம்.   

இறுக்கமான சூழலில் இருந்து அவர்களை விடுவிக்க, உளவியல் ரீதியில் அவர்களை புத்துணர்வூட்ட ஹோம்மிலேயே  பொழுதுபோக்க உள்ளரங்க விளையாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். அவ்வபோது மியூசியம், பீச் க்கு அழைத்துச் செல்கிறோம்.  மார்க்க வகுப்புகள், கண்காட்சிகள் நடத்தச் செய்து இம்மை வாழ்வுக்கான கல்விக்கும் வழிகோலுகிறோம். இதன் மூலம் ஆதரவற்ற நிலையில் வரும் பெண்கள் தன்னம்பிக்கையோடு சமுதாயத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லாஹ்வின் உதவியால்.

பெண்களுக்கான ஹோம் தவிர்த்து அல்-ஹிதாயா மூலம் இன்னும் சில விஷயங்களும் செய்து வருகிறோம். பெண்களுக்கு பெற்றோரோடும் கணவரோடும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அவர்களை உறவுகளுடனேயே சேர்த்து வைக்கும் விதமாக பேமிலி கவுன்சிலிங்கும் கொடுக்கிறோம். மனநல ஆலோசணைகள்  வழங்கி வருகிறேன்.   ஏழை எளியோர்க்கு  ஸ்காலர்ஷிப் வழங்குவதும், மருத்துவ உதவிகள் செய்வதும் , ரமலான்  தினங்களில் புத்தாடைகள் வழங்குவதும்,  தகுதியுடைய முஸ்லீம் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தியும் வைத்துள்ளோம்.

'தோழியர்' நூல் வெளியீட்டுவிழாவின் போது..

அல்-ஹிதாயா மூலம் மறக்க முடியாத பூரிப்பான நிகழ்வொன்றை சொல்லுங்களேன்.  
 
 நிறையச் சொல்லலாம். முதன்மையாய் ஆம்பூர் சகோதரி பற்றிச் சொல்கிறேன்.  முஸ்லிம்  நட்புக்களின் வாழ்வியல் முறையால் கவரப்பட்டு , இஸ்லாத்தை ஏற்றார் அவர்.  அவரின் அன்னையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.  உறவுகள் கைகழுவ  செல்வதற்கு வழி தெரியாமல் தவித்த அவர்களுக்கு அல் ஹிதாயா பற்றி சொல்ல, அவர்களும் எங்கள் இல்லத்திற்கு வந்துச் சேர்ந்தார்கள். அப்பெண் நம் இல்லத்தில் தங்கி படித்தார். இப்போது அவர் பட்டதாரி. நம் அல்ஹிதாயாவின் கணினிக்கல்வியும் மார்க்கக் கல்வியும் சேர்த்து போதிக்கும் ஆசிரியை. நாம் யாருக்கு நிழல் தந்தோமோ அவர் வளர்ந்த பின்னே நம்முடன் கைகோர்த்து தாமும் பலருக்கு நிழல் தருபவராக உருவாவதை நேரில் காணும் மகிழ்ச்சி அளவில்லாதது. சுப்ஹானல்லாஹ்...

அல்லாஹு அக்பர். சத்தமில்லாமலேயே சாதித்து வருகிறீர்கள்.  உங்களின் செயற்பாடுகள் நிச்சயம் நம் சமுதாயப் பெண்களுக்கு  வழிகாட்டும், சாதிக்க தூண்டும் என்பதில் ஐயமில்லை.  அல்லாஹ் உங்களை  பொருந்திக்கொள்வானாக. இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்

வாசகர்களுக்கு :
சகோதரி டாக்டர் ஆயிஷா நடத்தும்  இல்லம் - சென்னை மாங்காட்டில் அமைந்துள்ளது.  பொருளாதார உதவிகள்  அளிப்பதன் மூலம் நாமும்  அப்பெண்களின்  வாழ்க்கைக்கான  முன்னேற்றத்தில் பங்களிக்க முடியும். கீழ்காணும் படத்தில் வங்கி விவரங்களும் முகவரியும் உள்ளது.  உதவ நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். இறைவனின் உவப்பை பெற  நன்மையின் பக்கம் விரைவோம்.  இன்ஷா அல்லாஹ்... 
பேட்டியும் ஆக்கமும் : ஆமினா முஹம்மத்
நன்றி : பர்ஷானா தஸ்னீம் ,  வைகறை வெளிச்சம் இதழ் , darulislamfamily.com
read more "ஆதரவற்றோர்களுக்கு அன்னை, ஆர்பாட்டமில்லாமல் ஓர் சாதனை - டாக்டர் ஆயிஷா"

Thursday, July 21, 2016

ஓலா விவகாரம் (?!) அடையாளங்காட்டிய ஹீரோ


ந்த ட்ரைவர்  உங்க உறவினரா?

-இல்லைங்க

முஸ்லிமா?

-இல்லைங்க

முன்னபின்ன தெரிந்தவரா?

-வேல கேட்டு வந்த  பத்து நாளைக்கு முன்னதான் தெரியும்ங்க.

அப்படிஎனில் உங்க கிட்ட வேலைக்கு சேர்ந்த பத்து நாளில்  அவரின் மீதான கரிசனம் எதற்கானது?

-கத்திய  கையிலேயே   வச்சுக்கிட்டு கொல  செய்ய அலையுற சைக்கோ இல்ல  அவன்.   படிச்சு பட்டம் வாங்கியும்  வேலையில்லாம திண்டாடும் தந்தையில்லாத   குடும்பத்துக்காக  உழைக்கும் அப்பாவி இளைஞன்.  ஓர் சிந்திக்கிற  மனுஷனா  அவனோட   தரப்பின் நியாயத்துக்கு துணை நிற்க வேண்டுமில்லைங்களா?


சிலிர்க்கச் செய்தார் காஜா ஷரீஃப். யார் அவர் ?


        நடுநிலை பேணுவதாய் நாம் நம்பிக்கொண்டிருக்கும் தி ஹிந்துவால்    ஓர் பக்க நியாயத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டும்   திடீர், குபிர், இன்ஸ்டன்ட்  போராளிகளால்  கொலைகாரன் போலச் சித்தரிக்கப்பட்டவருமான  ஓலா கேப் ஓட்டுநர் தெரியுமல்லவா? அவர்  பயன்படுத்திய காரின் உரிமையாளர் தான் காஜா ஷரீஃப்.   
         திரு மாமல்லன் அவர்களால் தன் பதிவில் (ங்கே சுட்டுக ) அற்புதமானவர் என அடையாளங்காட்டப்பட்ட  போது தான் சகோ காஜாவின்  மீதான ஆர்வம் கூடியது. உடனே அவரை தொடர்புகொண்டோம்.  " கொஞ்சம் பொறுங்க,  அஸர் தொழுதுட்டு வந்து தகவல் சொல்றேன் " என்று சொல்லிவிட்டுச்  சென்றார். பொறுமையாக வரட்டும்.. அதற்குள் அவரைப்பற்றி சேகரித்த தகவல்களை  வாசித்துவிடுங்கள்.

        காருக்கு ஓனர் என்றதும் பத்து பதினைந்து காரை வைத்து பலரையும் வேலைக்கு வைத்திருக்கும் தொழிலதிபர் காஜா என்று  நீங்கள் நினைத்திருந்தால் உங்கள்   எண்ணங்களை தூக்கிவீசுங்கள். நாங்களும் அப்படியாக நினைத்து தான் பேசினோம். 

        ஓர் பெண்ணின் கோபத்தால், பொறுப்பற்ற ஊடகங்களின் தீனிக்காய் பலிகாடாவானது ஓட்டுநர் மட்டுமல்ல. காஜா ஷரீஃப்பும் தான்.  பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை-தாம்பரம் . பி,எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு  படிப்புக்கேற்றார்போல் சம்பளம் கிடைக்காத நிலையில் தாய்நாட்டை விட்டு  பாலை மண்ணில் 9 வருடங்கள் வெந்தவர்.   பட்ட கஷ்ட்டங்களால் வெளிநாட்டு மோகம் கரைந்ததும்  சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்து சொந்த தொழில் தொடங்க போதுமான பணம் சேர்ந்த நிலையில் சொந்த மண்ணுக்கே திரும்பினார்.

        சொந்தமாய் கார் வாங்கி ஓட்ட ஆரம்பித்தார். நேர்மையின் பரிசாய், ஒழுக்கத்தின் பலனாய்  கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 3 கார்களுக்கு சொந்தக்காரர் ஆனார். விக்ரமன் படம் போல் ஒரே பாட்டில் அல்ல... கிட்டதட்ட அவரின் 6 ஆண்டுகால முன்னேற்றம் அது.

          அல்லாஹ் தன் நல்லடியார்களின் ஈமான் எத்தகையது என்பதனை அறிய சோதனைகளின் மூலம் சோதனைச் செய்வான். அப்படியாகத் தான் சென்னை பெருமழை அவரின் அன்றாட வாழ்வை புரட்டிப் போட்டிருந்தது. மழையில் அவர் வைத்திருந்த மூன்று கார்களும்  அடித்துச்செல்லப்பட, எப்படியோ இரண்டை மீட்டுவிட்டார்.   இன்னொன்றோ   மழையுடன்   காணாமல் போய் விட்டது !

        மீட்டுவிட்ட இரண்டு கார்களும் நல்ல நிலையில் இருக்கவில்லை.  அதற்கு சில லட்சம் செலவழித்து புதுப்பித்து  மீள்வதற்குள் அவரின் பலநாள் சேமிப்பு கரைந்திருந்தது.  அல்லாஹ்வின் நாட்டம் என   பொறுப்பை சாட்டிவிட்டு கடந்தார்.

        அடுத்ததாய் சோதனை-  இப்போது மாட்டிக்கொண்ட ஓட்டுநர் வழியே வந்தது.  தொழுது முடித்து  சிறிது நேரம் கழித்து நினைவில் வைத்து மீண்டும் போனில் அழைத்த  காஜா ஷஃரிப் இப்போது தொடர்ந்தார்.

        " நான்  ஒரு கார் ஓட்டுவேன். இன்னொரு கார   தெரிஞ்சவங்களுக்கு வாடகைக்கு விட்டுடுவேன். எப்பவும் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் கார் ஓட்ட கொடுக்குறது வழக்கம்.  என்னிடம் ட்ரைவராக வேலை பார்த்த நண்பர் ஒருவர்,   ஒரு பையனை கூடிட்டு வந்து “இவன் ரொம்ப கஷ்ட்டப்படுறான், தகப்பனில்லாத பையன்,  ஏற்கனவே அனுபவம் இருக்கு, நல்லா கார் ஓட்டுவான், நம்பி கொடு" என்றார்.  அவனோட ஏழ்மை என்னைய ரொம்ப யோசிக்கவிடல. என்கிட்ட ஓட்டுன பத்து நாளும் எந்த கம்ளைன்டும் இல்ல.  ரொம்ப கரேக்ட்டா இருந்தான். இந்த பிரச்சன நடந்தப்ப கூட எனக்கு தெரியாது, போலிஸ் கேஸ் ஆன பின்னாடி தான் தெரியும்.போலிஸ் எனக்கு கால் பண்ணி  விஷயத்தை சொன்னதும் ஒத்துழைப்பு கொடுக்குறதா சொன்னேன். நானே அந்த பையனையும் காரையும்  எடுத்துட்டு அவங்க சொன்ன இடத்துக்கு போய்ட்டேன். அப்பதான் அவன் எல்லா வெவரத்தையும் சொன்னான்."     என்றார்.

"என்ன இருந்த போதும் அவர் செய்தது தப்பு தானே" என நாம் கேள்வி வைத்த போது தொடர்ந்தார். 
        " நிச்சயமாக தப்பு தான்... மேல்தட்டு வர்க்கத்தினருக்கு 127 ரூபாய் அற்பமானது. ஆனால் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி  சென்னையின் நெருக்கடியில்   127 ரூபாய் எனும் உழைப்பின் கூலியை  விட்டுவிடுவது  எந்தவொரு உழைப்பாளிக்கும் சாதாரண விஷயமில்ல . அப்படியும் கூட  "பொறுக்கி"ன்னு தகாத வார்த்தைகள  ஒருவர்  அள்ளி வீசும் போது   பொறுத்துட்டு போகும் அளவுக்கு பக்குவமானவங்களா எல்லாரையும் எதிர்பார்க்கவும் முடியாதுங்களே? . நான் அவனின் செயல நியாயப்படுத்தல... இருந்தும் அவன்கிட்ட சொன்னேன் " முன்னவே சொல்லியிருந்தா  அந்த அம்மா கிட்ட போய் மன்னிப்பு கேட்டிருக்கலாமே, மன்னிப்பு கேக்குறதுனால நாம ஒன்னும் குறைஞ்சுட மாட்டோம்,  நியாயம் நம்ம பக்கமே இருந்தாலும்  ஒரு பொண்ண  மிரட்டினது தப்புதான்,  அவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணாம எங்கிட்ட வந்திருந்தா நாம அந்தம்மா மேல போலிஸ்ல கம்ளைன்ட் பண்ணியிருந்திருக்கலாம். இப்போ தேவையில்லாம நீ  மாட்டிக்கிட்ட " என்றேன்.  எதிர்காலம் குறித்து கவலைப்பட்டவனாய்  தலைகுனிந்து அமைதியானான்.    

போலிஸ்ஸின்  தரப்பு எப்படி நடந்துகொள்கிறது ?
        காலையில்  எனக்கு போன் போட்டு கார் ஓட்டின ட்ரைவர் பத்தி கேட்டாங்க.  என்கிட்ட தான் இருக்கான், கூடிட்டு வரேன் சார்-ன்னேன். அதெல்லாம் வேண்டாம் , நாங்களே வரோம்ன்னாங்க.  பரவால்ல , நானே    பேசி கூடிட்டு வந்து விடுறேன்னு சொன்னதும்   சரின்னாங்க. வாக்கு கொடுத்தபடி கொண்டு போய்  ட்ரைவரை  சேர்த்துட்டேன்.  அவன்கிட்டையும் விபரீதத்த புரியவச்சு  ,  தைரியம் சொல்லி   அவன் சகஜமானதும் கூடிட்டு போனேன்.
        போலிஸ்ஸார பொறுத்த வரைக்கும் ரொம்ப நியாயமா நடந்துக்குறாங்க.   அவங்க   வழிகாட்டுதலில் தான்  அடுத்தடுத்து ஆக வேண்டியவைகளை செய்தேன். வக்கீல்  பார்த்தது, ஜாமீன்க்கு அப்ளை பண்றதுன்னு சட்ட உதவிலாம் அவங்க  வழிகாட்டலைன்னா கஷ்ட்டம் தான்..

ஓலா-வில் உங்கள் வாகனத்துக்கான அனுமதியை  ரத்து செய்துவிட்டார்களல்லவா? இதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பற்றி… 
        ஆமாம் கடனாளியாகிட்டேன் என்பதுதான் உண்மை. ஓலாவில் 2வருடமாக என் காரை இணைத்திருந்தேன்.  அது  ஒன்றுதான்  வெள்ள பாதிப்பின் என் நிலையை மீட்டிட்டிருந்தது.  இந்த ஒரே பிரச்சனையில் மொத்தமும் அடிபட்டுவிட்டது.  இன்னொரு காருக்கான தவணை, குடும்ப செலவு, கேஸ்க்கான செலவு….  நெனச்சாவே மலைப்பா இருக்குது. இருந்தாலும் அல்லாஹ் இதுலையும் எனக்கு நன்மையை நாடியிருக்குறதா நினைக்கிறேன். 

அவரை  உங்களுக்கு தெரிந்து பத்து நாள் தானே  ஆகிறது ?  மாட்டிக்கொண்டதும் அவர் தானே?  ஏன் உங்க கைகாசை போட்டு  ஜாமீனில் எடுக்க முயற்சிக்கிறீங்க.  இப்படியொரு கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும்! நீங்களும் கஷ்ட்டமான சூழலில்  இருப்பதால் கேட்கிறேன்.
              அதெப்படிங்க விட முடியும்.   மனசு குத்தாதா?   இந்த மீடியாகாரங்க ஊதி  பெருசாக்கிய அளவுக்கு எதுவும்  நடக்கல என்பது புரிந்தும்    , உதவி கிடைக்காம தனியே நிற்பவனை அப்படியே விட்டுட்டு வர  மனசு இடங் கொடுக்கல.  நமக்கெந்த பாதிப்பும் இல்ல, தப்பிச்சுட்டோம் என பெருமூச்சு விடும் அளவுக்கு நான் அற்பமானவனா இருக்க விரும்பல. இன்னைக்கு இழந்ததெல்லாம் அல்லாஹ் நாடினால் நாளையே தருவான்னு நம்புறேன்.  இப்படிதானே போன சோதனைகளிலும் மீண்டேன்? எனக்காக துஆ செய்யுங்க.

பொதுவாகவே ஓலாவாகட்டும் இன்னபிற நிறுவனங்களாகட்டும், ஏன் தனியே கார் ஆட்டோ ஓட்டுபவராகவேயிருக்கட்டும்... அடிக்கடி இப்படியான பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார்களே? 
        மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது.  எனக்கு ஒரே கொள்கை தான். காரில்  சவாரிக்கென்று ஏறிட்டா அவங்க  என் பேமிலி  மெம்பரா நெனச்சுக்குவேன்.  நம்ம குடும்பத்தாளுங்கள எவ்வளவு கன்னியமா நடத்தி,  பக்குவமா சேர வேண்டிய இடத்தில் பத்திரமா சேர்ப்பிப்போமோ அப்படிதான் நானும் நெனைப்பேன்.  குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி இருந்துட்டா கூட   டிரைவர்களின் தரப்பிலிருந்து எந்த   பிரச்சனைகளும் நேராது. அதே போல மக்களும்  சக  மனுஷனா  டிரைவர்களை மதிக்க கத்துக்கணும்.  ட்ரைவர்லாம் இப்படிதான் என்ற இழிவான கண்ணோட்டத்தை  விடுவிச்சுக்கணும். 

மக்ரிப்க்கு டைம் ஆச்சுங்க.  இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக்குவோமா"

-என்று அவசவசரமாய் விடைபெற்றார். ஆறுதல் தேவைப்படுபவரல்லர் சகோ காஜா.   ஒவ்வொரு அடியிலும் விழக்கூடிய சராசரி மனிதரே ஆகினும், அல்லாஹ்வின் உதவியை நம்பி , மீண்டும் எழும்  அசாதரண பக்குவம் கொண்ட இறை நம்பிக்கையாளர்.    இந்நிகழ்விலிருந்தும் விரைவில் மீளவும், மன உளைச்சல்கள்   நீங்கவும்,  இழந்ததெல்லாம்  மீட்கவும் அவருக்காய் பிரார்த்திப்போம்.

        தனிநபர்கள் செய்யும் அவர்களுக்கான புரட்சிகளை ஆதரிக்கிறோம்... துணை நிற்கிறோம். தவறல்ல!  அப்புரட்சிகள்  பழிவாங்கும் நடவடிக்கையாய் மாறுகையில் அல்லது  லாபத்திற்காய் உருவெடுக்கையில்   அடிதட்டு மக்களின் வாழ்வை எந்தளவு தலைகீழாக புரட்டி போடுகிறது என்பதையும்  சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதற்காகவே இப்பதிவை மக்கள் மன்றத்தில் சமர்பிக்கிறோம். 

        அல்லாஹ் நம்மை நடுநிலையாளர்களாக்கி சிறப்பித்துள்ளான்.  சரி எது ? தவறு எது? என்று முற்றும் அறிந்திடாத போது  ஒரு பக்கமாய் சாய்ந்து இன்னொரு  தரப்புக்கு தீர்ப்பளிப்பதை  இப்பதிவில் கவனமாய் தவிர்த்திருக்கிறோம். அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன். பாதிக்கப்பட்டவருக்கு அவனே சிறந்த நீதியாளன். 

பேட்டியும் ஆக்கமும் -ஆமினா முஹம்மத் 
உதவி  : டீக்கடை முகநூல் குழுமம்
read more "ஓலா விவகாரம் (?!) அடையாளங்காட்டிய ஹீரோ"

Tuesday, July 19, 2016

கருப்பு வெள்ளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

இன்றைய தலைமுறையினர் பல துறைகளில் பெற்றிருக்கும் அறிவாற்றல் சென்ற தலைமுறையினருக்கு மிகவும் வியப்புக்குரியதாகவே உள்ளது. நாம் எட்டாம் வகுப்பில் படித்ததை நான்காம் வகுப்பிலேயே புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களாகத் திகழ்கின்றனர். இன்னும் அவர்களது பொது அறிவும் அடையும் வெற்றிகளும் தொடும் தூரங்களும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அதிகமாகிக்கொண்டே செல்வதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம், சில விஷயங்களைத் தவிர. ஆம், இன்றைய தலைமுறையினரை வெகுவாக முன்னோக்கிச் செல்லவும் பின்னோக்கிச் செல்லவும் வைக்கும் ஒரு காரணி உண்டென்றால் அது அவர்களது தோல் நிறத்தின் மீதான ஈர்ப்பும் வெறுப்புமே ஆகும்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சென்ற தலைமுறையினரால் தொடவே முடியாத பல சாதனைகளைத் தூசு போல் தட்டிப்பறிக்கும் இன்றைய இளைஞர்கள் தோல் நிறம் என்ற ஒரு மாயைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?  

ஊடகங்கள் ஊட்டும் விஷம்

ஒரு பெண் தன் தோழியை ஒரு பார்ட்டிக்கு அழைக்கிறாள். அவளோ தான் கருப்பாக இருப்பதை எண்ணி தாழ்வு மனப்பான்மை கொண்டு வர மறுக்கிறாள். அந்த பெண் அவளுக்கு ஒரு சிகப்பழகு கிரீமை பரிந்துரைக்கிறாள். அதை பயன்படுத்தி அவளுக்கு சிகப்பழகு வந்ததும் அவளை சுற்றி பட்டாம்பூச்சி பறப்பதாய் உணர்கிறாள். அவளுக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது.
ஏழே நாட்களில் சிகப்பழகு, டல் திவ்யா இப்போ தூள் திவ்யா ஆகிட்டா, அங்கவை சங்கவை , இப்படி பல சினிமாக்களும் விளம்பரங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சிவப்பு மட்டுமே அழகு, தன்னம்பிக்கை அளிக்கும் நிறம் என்று மக்கள் மனதில் பதிய வைத்து விட்டது.

இப்படி ஊடகங்கள் வாயிலாக கருப்பு நிறம் கொண்டவர்களின் மனதை நோகடித்தும் , அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தான் நினைத்ததை சாதித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர்.


நாடெங்கும் நிறைந்திருக்கும் நிற பேதம்

இனவெறி என்பது எங்கோ அமெரிக்காவிலோ , ஐரோப்பாவிலோ மட்டும் நடப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. ஐரோப்பா, ஆப்பிரிக்கா , தான்சானியா, இந்தியா, மலேசியா போன்ற பல நாடுகளை சுற்றி பார்த்துள்ள தேவ் அடாலி என்பவர் சென்ற மாதம் ஒரு பத்திரிக்கை பேட்டியில் "உலகில் அதிக இனவெறி கொண்ட நாடாக இந்தியாவை பார்க்கிறேன். அங்கு தான் சொந்த நாட்டு மக்களையே அவர்களின் நிறத்தை கொண்டும், மொழியை கொண்டும் வேறுபடுத்தி சிறுமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களின் தோற்றத்தை வைத்து பட்ட பெயர் வைத்து அழைப்பதை வெகுவாக பார்த்தேன். " என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் ரேகா என்பவர் தான் மூன்று பிள்ளைகளை ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார். அவர்கள் ஆபிரிக்கர்களை போன்று கருப்பாக இருப்பார்களாம். அதனால் பள்ளியில் அனைவரும் அவர்களை ' ப்ளாக்கீஸ்' என்று அழைத்துள்ளனர். பிள்ளைகளுக்கும் புரிந்து கொள்ளும் வயது வந்து அவர்கள் அம்மாவிடம் கூறியுள்ளனர். அவர் கோபத்தில் பள்ளிக்குச் சென்று எச்சரிக்கை விடுத்துள்ளார். (india.cf/t/) .

ஒரு பெண்ணுக்குக் கரு உண்டானால் குழந்தை சிவப்பாக பிறக்க யோசனை கொடுப்பதும், குழந்தை கருப்பாக பிறந்து விட்டால் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் ' உன் குழந்தைக்கும் ஆண்டவன் நல்ல வாழ்க்கையை வெச்சுருப்பான்' என்று கூறி அந்த தாயின் மனதை நோகடிப்பதும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று பார்ப்பதுடன் கருப்பா சிவப்பா என்றும் கவனிக்கப்படுகிறது.

தற்போதுள்ள இளைஞர்கள் பலர் இஸ்லாமிய முறைப்படி வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்துத் திருமணம் செய்கின்றனர் . நிச்சயம் இது நல்ல விஷயமே. ஆனால் அதே மாப்பிள்ளை வீட்டார் ' நாங்கள் தான் ஒன்றும் வேண்டாம் என்கிறோமே , பெண்ணாவது சிவப்பாக இருக்கட்டும் ' என்று கூறி கருப்பு நிறப் பெண்களை ஒதுக்கி விடுகின்றனர். பாவம் சிவப்பு நிற பெண்களை மணந்த பல கருப்பு நிற ஆண்களுக்கு அவர்கள் நிறத்திலேயே பிள்ளைகள் பிறந்திருக்கும் விந்தையில் நாம் உணரவேண்டிய பல உண்மைகள் உள்ளன. 

மாநிறம் கூட தற்போது டஸ்கி ஸ்கின், என்று பேஷனாகவும் ட்ரெண்டாகவும் மாறி விட்டது . ஆனால் கருப்பு நிற பெண்களின் நிலை இன்றும் திருமண சந்தையில் கேள்விக்குறியாகவே உள்ளது.

நான் சில நாட்களுக்கு முன் பல்வேறு இனத்தவர் கலந்து கொண்ட ஒரு விருந்துக்குச் சென்றேன். மற்ற அனைவரிடமும் சாதாரணமாக நடந்து கொண்ட சிலர், கறுப்பினத்தவருடன் பேசுவதையும், உணவருந்துவதையும் மட்டும் செல்பீக்களும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டிருந்தனர். நிறத்தைக் கொண்டு ஒருவரை வேறுபடுத்திப் பார்க்கும் வேதனையான விஷயம் நிச்சயம் நம் தலைமுறையோடு அழிய வேண்டும். 


தூள் திவ்யா ஆவதெப்படி?


அழகு என்பது நிறத்தில் இல்லை. குழந்தைப்பருவத்தில் இருந்தே சிகப்பு/வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவமும் ஈர்ப்பும் விதைக்கப்படுகிறது. இத்தகைய மூடச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எத்தகைய பாதகத்தைச் செயல்படுத்துகிறார்கள் என சிந்திக்க வேண்டும். தன்னுடன் பயிலும் சக மாணவர்களை நிறத்தைக் கொண்டும் தோற்றத்தைக் கொண்டும் எடை போட்டு, அவற்றிற்கேற்றவாறு பழகுவதும் வெறுப்பதும் எத்தகைய சிறிய செயல்? உண்மையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் தாம். வெள்ளையாகவோ சிகப்பாகவோ இருக்கும் காரணத்தால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும் வெற்றி வெறுவதும் பெரிய விஷயமேயல்ல. கறுப்பு நிறத்தோடு இருப்பவர் விடா முயற்சியோடு பல சாதனைகள் புரிவதே போற்றப்படவேண்டிய விஷயம். 

டல் திவ்யா பல மேக்கப்புகளைப் போட்டுக்கொண்டு தூள் திவ்யா ஆவதெல்லாம் பெரிய விஷயமேயல்ல...  டல்லான ஒருவரை யார் ஒருவர் தம்வருகையாலோ பேச்சாலோ உற்சாகமும் உத்வேகமும்   பெறச்செய்கிறாரோ  அவரே வெற்றியாளர்; சிறந்தவர். 


தோல் நிறத்தின் அடிப்படைக் காரணம் என்ன?

அழகு என்பது ஆரோக்கியத்திலும் , தூய்மையான உள்ளத்திலும் தான் இருக்கிறது என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். நம் உடம்பின் நிறம் எவ்வாறு அமைகிறது என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். நம் தோலின் நிறம் ' மெலனின்' என்னும் நிறமிகளால் தான் அமைகிறது. மெலனின் அதிகமாக சுரந்தால் அடர்த்தியான நிறமும், கம்மியாக சுரந்தால் மென்மையான நிறமும் இருக்கும். ஒருவரின் உடம்பில் சுரக்கும் மெலனின் உற்பத்தி அவர்களின் பாரம்பரியம் , வாழும் இடம் போன்ற காரணங்களால் தீர்மானிக்க படுகிறது. 

புற்று நோய், தோல் வியாதிகள் போன்றவற்றிக்குக் காரணமாக இருக்கும் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் அதிகமாக நம் உடம்பைத் தாக்காமல் மெலனின் பாதுகாக்கிறது. ஆனால் சூரியனிலிருந்து வரும் இந்த கதிர்கள் மிதமான அளவு நம் உடம்புக்கு மிக அவசியம். சூரிய ஒளி தேவையான அளவு உடம்பில் படுவது மனஅழுத்தத்தை குறைக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், குழந்தைகளுக்கு மூளை மற்றும் மன வளர்ச்சிக்கு உதவும்.. எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு மிக அவசியமான வைட்டமின் D சூரியனிலிருந்து கிடைக்கிறது.. இன்று பெரு நகரங்களில் பலரும் வெயில் படாதவாறு முகத்தை துணியால் சுற்றிக்கொண்டே செல்கின்றனர். நிறத்திற்காக இவை அனைத்தையும் இழக்க வேண்டுமா?வெயில் பட்டால் கருத்து விடுவோம் என்று பலர் சன் ஸ்க்ரீன் லோஷன்களையும் , க்ரீம்களையும் தடவிக்கொள்கின்றனர்.மெலனினை உருவாக விடாமல் தடுத்து ,தோலை வெண்மையாக்கும் வேலையை தான் சிவப்பழகு கிரீம்கள் செய்து வருகின்றன. நாம் நிறத்தை கொண்டு குழம்பிக்கொள்ளாமல் , பிற்போக்கு சிந்தனைகளை களைந்து வெற்றி நடை போட வேண்டும். நிறமா , ஆரோக்கியமா என்பதில் தெளிவு பெற வேண்டும். 

தன் நிறத்தாலோ தோற்றத்தாலோ யாரேனும் நிராகரிக்கப்பட்டால் எதிர்க்க வேண்டும். இது போன்ற ஒரு நிராகரிப்பு எவருக்கும் கிடைத்திடாமல் வழிசெய்ய போராட வேண்டும்.  தன் அறிவுத்திறனால் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

இஸ்லாம் கூறுவது என்ன?

ஒரு சீப்பின் பற்கள் போன்று அனைவரும் சமமானவர்களே என்று இஸ்லாம் கூறுகிறது. ஒருவரை விட மற்றவரை வேறுபடுத்தி காட்டுவது அவரின் அழகோ , நிறமோ இல்லை. உங்களில் உயர்ந்தவர் அதிக இறையச்சம் உடையவர்களே என்று குரான் கூறுகிறது. அது யாராக இருந்தாலும் சரியே. கருப்பு இனத்தவர் நமக்குத் தலைவராக இருந்தாலும் நாம் அவருக்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும். ( புகாரி 9:89:256)

நபி ஸல் அவர்கள் கருப்பு நிறமுடையவர்களை மிகவும் விரும்புபவராக இருந்தார்கள். அவர்களை வளர்த்த அவர்களின் வரர்ப்பு தாய் உம்மு அய்மான் கறுப்பின அடிமை பெண்ணாக இருந்தார். அவர்கள் இறக்கும் வரை நபி அவர்களின் வளர்ப்பு தாயிடம் அன்பும் , நன்றியுணர்வும் கொண்டவராக இருந்தார்கள்.

கறுப்பினத்தை சேர்ந்த உஸாமா பின்த் சையத் , ஸாத் அல் அஸ்வத், அம்மார் பின் யாசிர், மிஹஜா, அபுதர், அய்மான் பின் உபைத் . . இவர்களெல்லாம் முஹம்மது நபிக்கு உற்ற தோழர்களாக இருந்தனர். இறைவழிபாட்டுக்கு அழைக்கும் உயரிய பொறுப்பை தன் கறுப்பின நண்பர் பிலால் அவர்களுக்கே அளித்தார்கள். முடியாத நாட்களில் அவரின் கைகளில் சாய்ந்து கொண்டே மத போதனை செய்துள்ளார்கள். ( ஹெச்.ஏ.எல் .க்ரெய்க் எழுதிய பிலால் என்ற புத்தகத்திலிருந்து)

ஒரு தடவை அபுதர் (ரழி) அவர்கள் கோபமடைந்த நிலையில் பிலால் (ரழி) அவர்களைப் பார்த்து 'ஏ கறுப்பியின் மகனே!' எனக் கூறவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டபோது, 'பேச்சு எல்லை மீறிவிட்டது. இறைபக்தியாலன்றி கறுத்த பெண்ணின் மகனை விட வெள்ளைப் பெண்ணின் மகனுக்கு எவ்வித சிறப்புமில்லை' என கண்டித்தார்கள். கோபத்தின் காரணமாக நிதானத்தை இழந்த நிலையில் தான் செய்த தவறின் பாரதூரத்தை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள், உடனே நிலத்தில் கன்னத்தை வைத்துப் படுத்துக்கொண்டு 'நான் செய்த தவறுக்காக உமது காலால் எனது கன்னத்திற்கு உதைப்பீராக' என அக்கறுபடிமையிடம் கூறினார்கள் கூறினார்கள்.

இவ்வாறு ஹதீஸும் , குர்  ஆனும் நிறத்தை வைத்து ஒருவரை வேறுபடுத்திக் காட்டுவதை முற்றிலும் மறுக்கிறது.நபி ஸல் அவர்களின் காலத்திற்கு முன் கறுப்பினத்தவர்களுக்கு ஒரு கூலியும் மற்றவருக்கு ஒரு கூலியும் வழங்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தான் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. ஆனால் , இன்றோ பல வேலைவாய்ப்புகளில் சிவப்பு நிறம் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாம் தான் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் ஜாஹிலிய்யா காலத்திற்குத் திரும்பி கொண்டிருக்கிறோம்.

ஆல்ரெடி நாமெல்லாம் அழகிகளே! 


“என் இறைவனே! என் உருவத்தை அழகுபடுத்தியதுபோல், என் உள்ளத்தையும் அழகுபடுத்துவாயாக!” -இது கண்ணாடியில் முகம் காணும்போது நாம் கேட்க வேண்டிய துஆவாகும். சிவப்பாக இருப்பவர் மட்டுமோ, திராட்சை போன்ற கண்கள் உடையவர் மட்டுமோ கேட்க வேண்டிய துஆ அல்ல, அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் கேட்கவேண்டும். அதாவது, கருத்தவர் சிவந்தவர் என ஒவ்வொருவரும் அல்லாஹ்வினால் அழகான உருவம் கொடுக்கப்பட்டவரே. அவர் ஏற்கனவே உருவத்தால் அழகாகிவிட்டார். இனி அவரது வேண்டுதல், நோக்கம் எல்லாம் உள்ளம் அழகானதாக மாற வேண்டும் என்பதே இச்சிறிய துஆவில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். நிறத்தைக் கொண்டும் தோற்றத்தைக் கொண்டும் ஒருவரை நாம் வெறுத்தோமானால் நாம் அல்லாஹ்வின் அழகிய படைப்பை விமர்சித்தவர்கள் ஆவோம். 

அல்லாஹ்,  தான் அழகாக உருவாக்கியதாகக் கூறும் படைப்புகளை அழகற்றதாகக் கருதும் ஒவ்வொருவரும் அஞ்ச வேண்டிய வசனம் இதுவாகும். 

40:64அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களைஉருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
நபி ஸல் இவர்களின் இறுதி உரையில் ஒரு பகுதி :

நீங்கள் அனைவரும் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. அரேபியரை விட அரேபியர் அல்லாதவரோ, அரேபியர் அல்லாதவரை விட அரேபியரோ உயர்ந்தவர் இல்லை, வெள்ளையரை விட கருப்பாரோ , கருப்பரை விட வெள்ளையரோ உயர்ந்தவர் இல்லை. அவற்றை தீர்மானிப்பது உங்களின் நற்செயல்களும் , இறையச்சமும் ஆகும் . ( அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700).

தோற்றத்தைக் கொண்டு தூற்றுவோருக்காக அஞ்சாதீர்கள் இளைய சகோதர சகோதரிகளே! அனைவரையும் மிகைத்தவனான அல்லாஹ்வின் பார்வையில் நாம் அனைவரும் அழகானவர்களே என்ற மிடுக்கோடு நடை போடுங்கள்.

உங்கள் சகோதரி
ஷீரின் பானு
read more "கருப்பு வெள்ளை"