Saturday, December 19, 2015

பேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )

ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின்  வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது.  கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவரும் தன்னார்வலர்களாக மாறி சென்னையை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்தார்கள்!

இது ஒருபுறமிருக்க,  எள்ளி நகையாடப்பட்ட இஸ்லாமியப் பெண்  சுதந்திரத்தின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டினர் எம் இஸ்லாமியப் பெண்கள். "அடுத்தொரு  மழை வந்தால்  உயிரும் உடமையும்  தொலைப்போமே" என பலரும் அலறியடித்துக்கொண்டு  சென்னை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, தன் கணவனுடனும் சகோதரனுடனும் இணைந்து களப்பணியாற்றினார்கள்  . அத்தகைய பெண்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி !

read more "பேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )"

Monday, December 14, 2015

இளவயது திருமணம் - ஏனிந்த அவசரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

வாழ்வின் அர்த்தங்கள் விளங்கத்தெரியாத மனநிலையில், போதிய க்குவமற்ற பருவத்தில் முடிக்கப்படும் திருமணங்கள் யாவுமே இளவயது திருமணங்கள் எனலாம். 

உளவியலில் மனவயது , கால வயது என்று இரு வகையாக வயது என்ற சொல்லைக் கையாள்வார்கள் உளவியலாளர்கள். கால வயதென்பது ஆ்ண்டுளின் அடிப்படையில் கணக்கிடப்படுவது மற்றும் மன வயது என்பது குழந்தைகளின் அறிவு,திறன்,ஆளுமைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதனைத் தான் நம் முன்னோர் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என சொல்லிவைத்துள்ளார்கள். திருமணத்திற்குத் தகுதியான வயது என்ன? என்பது பற்றி 4:6 வசனத்தில் தெளிவாகவே பெசுகிறது.

4:6. அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
இதற்கு குர்ஆன் இரு கருத்துக்களை நம்முன் வைக்கிறது. அனாதைகளின் சொத்துகளை நிர்வாகம் செய்பவா் அவா்கள் பருவ வயதை அடையும் காலம் வரை சோதித்து வரவேண்டும். சோதனை எதற்கு ? அவா்கள் அறிவு போதுமான முதிர்ச்சியைப் பெற்றுவிட்டதா? என்பதனை கண்டறிவதற்கே அந்த சோதனை. அடுத்து அவா்களின் சொத்துகளை அவா்களிடம் ஒப்படைக்கும் காலம், அவா்கள் பருவ வயதை அடைந்த பின்னர் தங்கள் காரியங்களை தாங்களாகவே நிர்வாகம் செய்து கொள்ளும் ஆற்றல் பெறும் காலம். அந்த ஆற்றலையும் திறனையும் பெற்றுவிட்டால் மட்டுமே அவா்களின் சொத்துகளை அவா்களிடம் ஒப்படைத்துவிடுமாறு குா் ஆன் பணிக்கிறது. இதனையே திருமணம் புரிவதற்கான வயது என்பது ஓா் ஆணுக்கும் பெண்ணுக்கும் பகுத்துணர்ந்து பார்க்கும் போதுமான அறிவு முதிர்ச்சியும் மனப்பக்குவமும் பெற்றிருக்கும் காலம் தான் என்பதை குர்ஆன் தெளிவு படுத்துகிறது.
பிள்ளைப்பருவம் முடித்து குமரப்பருவம் (அதாவது டீன் ஏஜ்) தொடங்கும் வயதினை குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு என்று குறிப்பிடுவோரும் உளவியலில் உண்டு. இந்த இரண்டாம் பிறப்பில் குழந்தைகளுக்கு நேசத்துடன் கூடிய முறையான வழிகாட்டுதலும் போதிய அரவணைப்பும் தந்து வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளையும் அவற்றிற்குத் தீர்வு காணும் உத்திகளையும் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுடையது. ஆக, டீன் ஏஜ் பருவத்தின் இறுதியில் தான் நம்மில் பலருக்கு நிதர்சனங்களைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் உருவாகிறது.


இந்த இடத்தில் நமது மூத்த தலைமுறையினரெல்லாம் பன்னிரண்டு , பதிமூன்று வயதுகளில் மணமுடித்து ஏழெட்டு பிள்ளைகளை பெற்று நலமுடன் வாழவில்லையா என்ற கேள்வி எழலாம்.

நமது முந்தைய தலைமுறையினருக்கும் நமது தலைமுறையில் வாழ்பவா்களுக்கும் தான் எவ்வளவு மாறுபட்ட உணவுப் பழக்கம், உடலுழைப்பு, வாழ்க்கை முறைகள் காணப்படுகின்றன. நமது தாத்தா படித்த எட்டாம் வகுப்பிற்கும் நாம் படிக்கும் டிகிரிக்கும் உள்ள வித்தியாசம் போல. எட்டாம் வகுப்பு படித்த தாத்தா கிராம நிா்வாக அலுவலகத்தில் பணிரிவதும் பட்டப்படிப்பு முடித்த பேரன் வேலையின்றி திரிவதுமே நல்லதொரு உதாரணம் தான். உண்மையில் அவா்கள் அந்த காலத்தில் அவா்கள் அறிந்திருந்த பட்டறிவுகளும் பெற்றிருந்த பக்குவங்களும் ஏராளம். 

மேலும் அவர்களுக்கிருந்த உடல்வலிமையும் நம்மிடையே அறவே இல்லை. அதிகளவு தொழில்நுட்பங்கள் உடலுழைப்பு என்பதை நீக்கிவிட்டன. தற்காலத்தில் 10ம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்கு காபி கூட போட தெரியாது என்பதையும் சில பெற்றொர்கள் பெருமையாக மெச்சிக்கொள்ளும் நிலையை அனுதினமும் காண முடிகிறது. 15 வயது வரை தேநீ்ர் கூட தயாரிக்க கற்றுக்கொள்ளாமல் வளர்ந்துவிட்டவள் அடுத்தாண்டு முதல் மணமுடித்து கொடுக்கப்படும் இல்லறம் இனிமையாக அமையுமா என்பது கேள்விக்குறியே. 

பிள்ளைகளுக்குப் பொறுமையயும் நிதானத்தையும் கற்றுக்கொடுக்கத் தவறுகிறோம். இக்காலங்களில் பிள்ளைகள் அவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதை மட்டுமே முதல் கடமையாகக் கொள்கின்றனர். அதற்குப் பெற்றோரரும் பள்ளிக்கூடங்களும் அளிக்கும் மன உளைச்சல்களும் அதிகம். பள்ளியில் மதிப்பெண் தவிர வேறெதுவுமே அறியாத இப்பிள்ளைகளுக்கு திடீரென திருமணம் எனும் மிகப்பெரும் பொறுப்பைச் சுமத்துவது எப்படி நியாயமாகும்? மதிப்பெண்கள் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையைத் தந்துவிடுமா?

பெற்றோர்களின் பாரம் குறைந்து விடவேண்டும், தினமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதை போல இருக்கிறது என்பதற்காகவும் நல்ல சம்பந்தம் தேடி வருகிறது நம் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும் எனும் அவசரத்தால் பெரும்பாலும் இளவயது திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. 

நமது மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவதென்றால் என்ன? நல்ல கணவன் கிடைத்து விட்டால் எல்லாம் பூர்த்தி ஆகிவிடுமா? நமது பிள்ளை அந்த வாழ்க்கைக்கு உடலாலும் உள்ளத்தாலும் தகுதியுடையவளாக இருக்க வேண்டாமா?

மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து அவள் ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் ஏராளம், நமது குடும்பம், கணவா், பிள்ளைகள் , கணவரைப் பெற்றவா்கள் என்று அனைவரையும் கவனித்துக்கொள்வதும் அன்பு செலுத்தி பணிவிடைகள் புாிவதும் ஒரு இல்லத்தரசியின் பொறுப்பல்லவா? ஆனால், இவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்காததன் விளைவே இன்றைய பெருகிவரும் விவாகரத்துகளின் மூல காரணம். 

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கணவன் உடல்நலக்குறைவினாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ உழைத்துதர முடியாத நிலைக்கு தள்ளப்படால் இச்சிறு பெண்ணின் நிலை என்ன? அதிக பட்சம் அவள் பெற்றெடுத்த பிள்ளைகளின் வாழ்வாதராங்களைப் பேணிட அவளுக்கு ஒரளவுக்கேணும் கல்வி அல்லது கைத்தொழில் தேவைப்படுமல்லவா? 

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை லாவமாக இல்லாவிட்டாலும் அதற்கான மூலகாரணத்தையும் தீர்வுகளையும் புரிந்து கொள்ளும் பக்குவமாவது அவர்களுக்கு உள்ளதா என்பதைப் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். வீட்டுப் பிரச்சினைகளை யாரிடம் கொண்டு செல்வது/யாரிடம் கூறக்கூடாது என்பது கூட இக்காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை என்பதே உண்மை. வாழ்வாதாரங்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமானால் ஏட்டுக்கல்வி உதவலாம். அமைதியான வாழ்க்கைக்கான விதையை நாம்தான் அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

பள்ளிக்கூடம் செல்லும் வரை சிறு பிள்ளையை போல பாவிக்கப்பட்டவள் அடுத்தாண்டில் ஒரு குடும்பதலைவியாகிறாள் எனில் அப்பெண்ணுக்குத் தனது பிரச்சினைகளை எதிர்க்கொண்டு சமாளிக்கும் திறனும் மார்க்க அறிவுடன் கண்ணியமும் ஒழுக்கமும் கற்பித்து உறவுகளைப் பேணி அனுசரித்து போகவும் தமது குடும்பத்தை எந்நிலையிலும் தூக்கி நிறுத்தும் திறனும் வழங்கப்படவேண்டியது பெற்றவா்களின் தலையாய கடமையே.திருமணமென்பது பொதுவாக பெற்றோர்களின் ஏற்பாட்டிலும் குடும்ப சூழ்நிலை, மற்றும் வாழ்வியல் முறைகளின் படி முடிவு செய்யப்படுகிறது. எனினும் அந்த வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்வதற்குக் குறைந்த பட்ச கல்வியறிவும் கைத்தொழிலும் மன ஆளுமைகளும் அவசியமென்பது மறுக்க முடியாத ஒன்று. முதிர்வு அடையாத மனநிலையில் மணமுடிததுக்கொடுப்பதால் பிள்ளைகள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினை கருத்தில் கொள்ளுதல் அவசியம். சில இடங்களில் மணமுடித்து கொடுத்த மகள்களை தாய் வீட்டிலே தங்க வைத்து அவள் பெற்றெடுத்த பிள்ளைகளையும் பேணி வளர்க்கும் பெற்றோர்களைக் கூட எதார்த்தமாக காண முடிகிறது. இது மிக மிக தவறான முன்னுதாரணமாகவே அமையும். வாழ்க்கையை அனுபவிக்க விடாமல் பெற்றோரே வழிவகுக்கின்றனர். மகிழ்ச்சியின் மறுபக்கமான துயரங்கள், வலிகள், துரோகங்கள் இவற்றையும் கடந்து செல்ல பழக்கிக் கொடுப்பது அவசியமாகிறது.

உங்கள் சகோதரி
ஹசீனா அப்துல் பாசித்
read more "இளவயது திருமணம் - ஏனிந்த அவசரம்"