Monday, November 30, 2015

நாற்பதில் நாய்க் குணம்!!


நாற்பதில் நாய்க் குணம்” என்றொரு பழமொழி(!!!) உண்டு!! நாற்பது வயதில் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ஒருவரின் குணநலன்களில் வரும் மாற்றங்களைக் குறிக்க இவ்வாறு கூறுவதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால், இப்பழமொழியின் சரியான பொருள் வேறு. ஒரு நாய் தூங்கும்போதுகூட விழிப்போடு இருக்கும். மனிதர்களும், இதுவரை எப்படி இருந்தாலும், நாற்பது வயது முதல்  அதிகபட்ச விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையே இப்பழமொழி வலியுறுத்துகிறது என்ற விளக்கத்தை ஒரு தளத்தில் கண்டபோது வியப்பு மேலிட்டது. உண்மைதானே!

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் 40-45 வயதுக்கு மேல் உடல்நலம், குடும்பம் இரண்டிலுமே மிகப் பெரும் சவால்கள் உண்டு.டல்நலம் என்று வரும்போது, வயதாவதின் பலவீனங்கள் - கால், கை, முதுகு வலிகள் போன்றவற்றோடு, மெனோபாஸ் பிரச்னைகளும் சேர்ந்து உடல் மற்றும் மனதை நலிவடையச் செய்யும். மெனோபாஸ் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். வழக்கமான ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சமயங்களில் வரும் மனநிலை மாற்றத்தையே குடும்பத்தில் யாருமே அறிந்து, புரிந்து கொள்வதில்லை. நிறைய பெண்களுக்கே அதைக் குறித்து தெரியாது!! அப்படியிருக்கும்போது, மெனோபாஸினால் வரும் ஹார்மோன் பிரச்னைகள் எங்கே தெரிந்திருக்கும்??!!குடும்பத்தில், சரியாக அந்த காலகட்டத்தில்தான், அவர்களின் பிள்ளைகள் டீனேஜில் அல்லது காலேஜில் இருப்பார்கள்.  டீனேஜ் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டாகும் மனநிலை மாற்றத்தால், அவர்களில் சிலரும் தம் பங்குக்கு தாயை வெறுப்பேற்றுவார்கள்.
சீக்கிரமே மணமுடித்த பெண்களாயிருப்பின், அவர்களின் மகள்களுக்கும் திருமணம் முடித்து மாமியார்கள் ஆகியிருப்பார்கள். மகளின் புதுவாழ்வு சீராக இருக்கவேண்டி, மகளின் புகுந்த வீட்டார்களிடம் பணிந்து போக வேண்டிய அழுத்தத்திற்கும் ஆட்பட்டிருப்பார்கள்.
குடும்பத்தில் மாமனார்-மாமியாரும், முதுமையடைந்து, ‘இரண்டாம் குழந்தைப் பருவத்தைஎட்டிப் பிடித்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு சிறு குழந்தையைப் போன்றே அவர்கள் மனநிலையும் மாறி விட்டிருப்பதால்அவர்களும் தம் பங்குக்கு பிடிவாதம், கோபம், அடம் பிடிக்கும் மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்கென தனி சமையல், அவர்களின் உடல்நலன் பேணுதல், பராமரிப்பு என்ற கூடுதல் சுமைகளும் பெண்களின் மீதே. 

அதே காலகட்டத்தில், தம் பெற்றோரும் முதுமையை எட்டியிருப்பார்கள் என்பதால், அவர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய பொறுப்பும் பெண்கள் மீது உண்டு. ஆனால், மாமனார் – மாமியார் அளவுக்குப் பெற்றவர்களை உடனிருந்து கவனிக்க முடியாத நிர்பந்தங்கள் உள்ள சிலருக்கு, கூடுதல் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

தவிர என்றுமே குழந்தையாக இருக்கும் கணவனையும் கவனிக்க வேண்டும். கணவனோ 40-ன் நாய்க் குணத்தைக் கடந்து “பேய்க் குணத்தின்” எல்லையான 50களில் இருப்பார். பிரஷர், ஷுகர் போன்றவை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ள அவரின் உடல்நலத்தைப் பேணும் பொறுப்போடு, உடல் தேவைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம். 

ஒருவேளை வேலை பார்க்கும் பெண் என்றால், அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டையும் செய்ய வேண்டிய அதிகப் பொறுப்பும், குழந்தைகள் தம் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கமுடியாத காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்வும், அவர்கள் சரியான நட்பு வட்டத்தில் இருக்கிறார்களா என்ற படபடப்பும் உடல்-மனநலத்தைப் பாதிக்கும் சூழல்.

இப்படி, பெண்ணின் வாழ்க்கையில் டீனேஜ் ஒரு முக்கியமான கட்டம் என்றால், அதைவிட மிகக் கடினமான பருவம் நாற்பதுகள்தான். ஆங்கிலத்தில் இதை Mid-life Crisis என்பார்கள். 


ஏன் பெண்ணுக்கு மட்டும் இது கடினமான கட்டம்? 

ஒரு பெண்ணின் குடும்பச் சூழ்நிலைகள் அவள் மீது அதிக அழுத்தம் தரும் காலகட்டம் அது என்பதோடு, அவளின் உடலும் அந்த வயதில்தான் பல்வித மாற்றங்களுக்கு உள்ளாகி பாதிப்புகள் ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும். ஆக, எல்லா திசைகளிலும் பாதிப்புகளை அனுபவிக்க வேண்டிய இறுக்க நிலை நிலவுவது இந்த நாற்பதில்தான்!! 

உடலில் என்ன மாற்றம்?

அவர்களது உடல் “மெனோபாஸ்” என்ற நிலையின் தொடக்கக் கட்டத்தில் இருக்கிறது. அதாவது, அதுவரை சீராக வந்துகொண்டிருந்த மாதவிலக்கு, இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் நிறுத்தப்படுவதற்கான தயாரிப்பில் உடல் ஈடுபட்டிருப்பதுதான் மெனோபாஸின் தொடக்கநிலை. 

மாதாந்திரத் தொல்லையான மாதவிலக்கு நின்றால் நல்லதுதானே என்று தோன்றினாலும், அதன் பின்ணணியில் இருக்கும் எஸ்ட்ரோஜன் & ப்ரோஜெஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள், மாதவிலக்கு, கருத்தரித்தலோடு மட்டுமின்றி உடலின் வேறு சில  இயக்கங்களும் சீராக நடக்க இன்றியமையாதவை. ஆகையால் திடீரென அவற்றின் உற்பத்தி நிற்கும்போது, உடல், உள்ளம் என மொத்தமுமாகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

உதாரணமாக, இரு ஹார்மோன்களும் எலும்பு தேய்மானத்தையும், இரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுபடுத்துகிறது. இதனால்தான் வயதான பெண்கள் அதிகமாக கை, கால், மூட்டு வலியில் அவதிப்படுகிறார்கள்.  ப்ரோஜெஸ்ட்ரோஜன் சில வகை கேன்ஸர்களைத் தடுக்கிறது. மேலும், மெனோபாஸ் தொடக்க காலங்களில், மாதவிலக்கு சுழற்சியின் ஒழுங்கு  பாதிக்கப்படும். சிலருக்கு அடிக்கடி வரும். சிலருக்கு மாதக்கணக்கில் வராமல் போகும். ஒவ்வொரு முறையும் வழக்கத்தைவிட மிக அதிக இரத்த இழப்பு இருக்கும். சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நிற்பதற்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை அதிக இரத்த இழப்பு என்பது உடலை மிகவும் பலவீனப்படுத்திவிடும். 

தவிர, சிறுநீர்ப் பிரச்னைகள், தூக்கமின்மை, Hot flashes எனப்படும் உடல் முழுதும் சூடு பரவும் உணர்வு, எரிச்சல், கோபம் போன்ற பல விளைவுகளும் உண்டு. ஒவ்வொருவரின் உடலின் இயல்பு பொறுத்து, விளைவுகள்  அமையும். 

ஆண்களுக்கு மெனோபாஸ் இல்லையா?

ஆண்களுக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி, மூப்பு காரணமாக குறையுமே தவிர ஒரேயடியாக நிற்காது. ஆகையால் பெண்கள் அளவு கடும் பாதிப்பு இல்லை.

நாற்பது வயது என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொறுப்புகள், கடமைகள் வகையில் ஒரே அளவிலான அழுத்தம்தான் என்றாலும், உடல் நிலை பொறுத்த வரையில் மனஅழுத்தம் பெண்களுக்கே கூடுதலாக இருக்கும் என்பதை அறிந்தோம். 

இதன் காரணமாகத்தான், இஸ்லாம் பெண்களின்மீது சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றி வைக்கவில்லை. சமூகப் பொறுப்புகளும் கட்டாயப்படுத்தப்படவில்லை. பெண்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மென்மைதன்மையை, இந்த ஹதீஸ் விளக்குகிறது.   

பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிக வளைந்ததாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது வளைந்தாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி 3331)

மேலும், பெண்கள் தம் குடும்பத்தவரின் உடல்நிலையில் அதிக அக்கறை கொண்டிருந்தாலும், தமது உடல்நிலை குறித்து அதிகப் பேணுதல் இல்லாதவர்கள். அதன் காரணமாகவும் அவர்களுக்குப் பாதிப்பு அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.

எந்த உடல்நலக்குறைவுக்கும் ஆறுதல் அளிப்பதில் முதன்மை வகிப்பது உறவினர்களின் புரிந்துகொள்தல் தான். நமது குடும்பங்களிலும், தாய் அல்லது அண்ணி அல்லது அக்காக்கள் நாற்பதுகளில் இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளை, உடல்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். சற்று அக்கறை எடுத்து, அவர்கள் உணவுப் பழக்கத்திலும் உடல்நிலையிலும் கவனம் செலுத்துகிறார்களா என்று கேட்டறிந்து ஆலோசனை கூறுங்கள். நாம் கேட்காமல் எத்தனையோ சமயங்களில் நம் தேவைகளை நிறைவேற்றியவர்களின் தேவைகளையும் நாம் புரிந்து கொண்டு நடத்தல் நம்மீதான கடமையாகும். பெண்கள் தம் தேவைகளை வெளியே சொல்ல சங்கோஜப்படுபவர்; அலட்சியப்படுத்துவர். அவர்களின் உடல்நலம் சீராக இருந்தால்தான் குடும்ப நலமும் சீராக இருக்கும். 
read more "நாற்பதில் நாய்க் குணம்!!"

Tuesday, November 17, 2015

யார் ஏமாளி?

இன்றைக்கு தொலைகாட்சியைத் திறந்தால் நாம் காண விரும்பும் நிகழ்ச்சிகளை விட அதிகம் ஆக்கிரமித்திருப்பவை விளம்பரங்கள் மட்டுமே.

சினிமா நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், விளம்பர மாடல்கள் என்று அனைவரும் இந்த தொலைக்காட்சி வாயிலாக ”இதை வாங்குங்க” ”இந்த கடையில் வாங்குங்க” ”இதுக்கு இதை இலவசமாக வாங்குங்க” ”இவ்வளவு விலை குறைப்பு செய்து தருகிறோம்” ”எங்களை போல இந்த உலகத்திலும் கிடையாது” என்று டிசைன் டிசைனாக வலை விரிக்கிறார்கள். காண்பவரும் அப்படியே மதி மயங்கிவிடுவதும் மனித இயல்பு.

உண்மையிலேயே ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவருடைய ஆசையை முதலில் தூண்டி விட வேண்டும். அதைத்தான் இன்றைய விளம்பரங்கள் பிரமாண்டம் என்றும் தள்ளுபடி என்றும் தூண்டில் போடுகிறார்கள்.அவர்களின் நிலையை சொல்லியும் குற்றமில்லை. வீட்டில் உட்கார்ந்த படியே இணையத்தில் அனைவரும் பொருட்களை வாங்கிவிட்டால் எதைச்சொல்லி அவர்களை கடையை நோக்கி இழுப்பது என்பதுதானே அவர்களது கவலை.

கோடிகள் பல கொடுத்து அழைத்து வருகிற சினிமா நட்சத்திரங்களுக்கான செலவும் நம் தலையில் தான் விழுகிறது என்று தெரியாத முட்டாள்கள் யாரும் இங்கே இல்லை. சிகப்பழகு தன்னம்பிக்கையைத் தருகிறது என்கிற 25 ஆண்டு கால ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைக் காணும் போது (ஆசிட்)திராவக வீச்சினால் முகஅழகு மாறிப்போனாலும் உள்ளத்தால் உருமாறி போகாதவர்களாய் அபாரமான தன்னம்பிக்கையுடன் டெல்லியில் உணவகம் நடத்தும் எம் சகோதரிகள் இயல்பாய் மனதில் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த ஃபேர் அண்ட் லவ்லியா தன்னம்பிக்கையினை விதைத்தது? தன்னம்பிக்கை என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது என்று மக்கள் விளங்கிக்கொள்ளும் நாள் என்று வரும்?

ஆக்ஸ் எனும் ஸ்ப்ரேயை அடித்து கொண்டு செல்பவர் பின்னாடி பத்து பெண்கள் அவரது ஆண்மையைப் பரிசோதிக்க துரத்துகிறார்களாம். எவன் ஒருவன் பெண்ணை சக மனிஷியாய் பாவித்து நடத்துகிறானோ அவனே ஆண்மையுள்ள ஆண்மகன்.இப்படி பட்ட விளம்பரங்கள் தான் பெண்ணைப் போகப்பொருளாய்ப் பார்க்கும் வக்கிரத்தை நெஞ்சில் விதைக்கிறது. இத்தகைய விளம்பரத்தினை இயக்கியவருக்குத் தன்னம்பிக்கை சுத்தமாக இல்லை என்பதையே அவரது இந்த வக்கிரக் கருத்து கூறுகிறது.

விவசாய நிலங்கள் விலை நிலங்களாக்கப்பட்டு அதை விளம்பரப்படுத்தவும் விற்காத பெரிய ப்ராண்ட் தயாரிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும் இவர்கள் மெனெக்கெடுவதைப் பார்த்தால் அத்தனை வியப்பு தான் வரும். இந்த மெனெக்கெடல்களைத் தம் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளுக்குச் செலவிட்டிருந்தால் அவை தானாக மக்களிடையே பிரபலமாகியிருக்குமே? இதனை மக்கள் சிந்திப்பார்களா?

விளம்பரங்களின் பாதிப்புகளில் சில


ஒரு டிவி ஷோரூமில் நின்று கொண்டிருந்தேன். அந்த தொலைக்காட்சியின் பெயரைஅதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இதப் பற்றி 40 வயதுக்குட்பட்ட தம்பதி விசாரித்துக் கொண்டிருந்தனர். ”சூர்யா இந்த டிவிக்கு வெளம்பரத்த்துல வரான்... அப்ப லோக்கல் டிவி லாம் இல்ல...தரமானதாகத் தான் இருக்கும். வெலயும் கம்மியா இருக்கு ..இதே வாங்கிடலாம்"என முடிவெடுத்து வாங்கினர். 

இப்படித்தான் போலியான நம்பகத்தன்மை விதைக்கப்படுகிறது. பொருள்களின் விளம்பரங்களில் வரும் நடிகர், நடிகைகளால் சில பொருட்கள் பிரபலமாகின்றன என்றால் பொருட்களின் விளம்பரத்தால் சில நடிகைகள் பிரபலமாகின்றனர். இவற்றிற்கிடையே மக்கள் ஏமாறுகின்றனர். சினிமாவில் பொய்யாக டயலாக் பேசுவதுபோல் தான் இவர்கள் விளம்பரங்களிலும் பேசுகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய சமூகப்பொறுப்பென்பது சிறிதும் இல்லாத இந்நடிகர்களை மானசீகக் குருவாகவும் முன்னுதாரணமாகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு விரைவில் மறைய வேண்டும்.  


என்றாலும் அத்தி பூத்தது போல ஒன்றிரண்டு விளம்பரங்கள் மனதை நெகிழச்செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. புற்று நோயை எதிர்த்து போராடும் பெண் ஒருவர் தயக்கத்தோடு இந்த உலகத்தை எதிர்கொள்ளும் போது கணவன் மற்றும் நண்பர்கள் தைரியமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட வாடிக்கா விளம்பரம் ஒரு மைல் கல்.நம் நாட்டின் பன்முகத்தன்மை தன்னுடைய தயாரிப்பின் இரண்டறக் கலந்த AMUL THE TASTE IF INDIA என்ற விளம்பரம் பால்ய காலம் தொட்டு என் மனதுக்கு நெருக்கமானவை.

உண்மையிலேயே மக்கள் மனதில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய விளம்பரங்கள் காமெடி ஆக்கப்படுகிறது என்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்கிற விளம்பரம் மக்களை சென்றடைந்தாலும் அதன் நோக்கம் மக்களை சேரவில்லை .ஆணுறைகள் பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவாமல்  தடுக்கலாம் .விளம்பரம் சொல்லும் கருத்து இது தான்.இது எத்தனை பேரை சென்றடைந்தது?

நுரையீரல் ஒரு பஞ்சு போன்ற உறுப்பு என்று ஆரம்பிக்கும் முகேஷ் விளம்பரம் புகைப்பிடித்தலின் கேடுகளை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டது. அதைக்கூட ஒரு சினிமாவில் கேலியாகத் தானே சித்தரித்தனர்?

உலகமயமாக்களின் முக்கியமான அங்கம் வகிப்பது விளம்பரங்களே என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக நீங்கள் காதில் சுத்தும் பூவை நம்புவதற்கு எல்லோரும் தயார் இல்லை என்பதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட 4G விளம்பரமும் அது குறித்த விழிப்புணர்வும் தக்க சான்று.

மேகியில் ஈயம் அதிகமாக உள்ளது என வெளியிடப்ப ஆய்வறிக்கையினால் பல இந்திய மாநிலங்களில் உடனடியாகத் தடையும் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்தியாவில் விற்கும் பொருளுக்கு அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேகியில் ஆபத்து இல்லை என்று மீண்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? அப்படியெனில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தவறானவையா? இவை போன்ற வழக்குகள் மூலம் தான் மக்களுக்குத் தான் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்பதே புரிகிறது.

மக்களை ஏமாற்றும் இத்தகைய விளம்பரங்கள் இன்னும் வருவதையும் நம் எதிர்கால சந்ததியினரை ஏமாற்றுவதையும் தடுக்க வேண்டுமென்றால் மக்கள் விழிக்க வேண்டும். நடிகர், நடிகைகள் கூறுவதெல்லாம் உண்மை என்ற எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். என்ன கூறினாலும் பொருட்கள் விற்பனையாகும் என்ற தயாரிப்பாளர்களின் நோக்கத்தை மக்கள் தாம் அழிக்க வேண்டும். உதாரணத்திற்கு இமாமியின் விளம்பரத்தில் நடித்த நடிகர் இரண்டே வாரங்களில் சிகப்பழகு என விளம்பரப்படுத்த, அதனை எதிர்த்து ஒரு சமூக ஆர்வலர் வழக்குத் தொடுத்து தன் வாதத்தில் வெற்றியும் பெற்றார்.

இன்னும் பிரபல கல்லூரிகளின் விளம்பரத்தில் நடித்த நடிகைகள் “விளம்பரத்தில் நடித்தது தவிர அந்நிறுவனத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பிறகு பின்வாங்கியதிலிருந்தாவது மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் சகோதரி
சபிதா காதர்.
read more "யார் ஏமாளி?"

Saturday, November 07, 2015

ஆண்கள் குறித்தும் கவலைகொள்வோம்! 
கோட் அணிந்த மெஞ்ஞானபுர பள்ளி ஆசிரியைகள்
               இன்றைய நவநாகரீக உலகில் ஆண்,பெண் இருபாலாரும் முகம் சுழிக்கும் ஒரு பெரும் பிரச்சினை தான் ஆடைக் குறைப்பு. ஆடைக் குறைப்பு என்பது முஸ்லிம்களால் மட்டும் எதிர்க்கப்படுவது அன்று . பெண்களின் கண்ணியம் காக்கத் துடிக்கும் பல தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.   18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளை கேலி செய்வதும், கிண்டல் செய்யும் சம்பவங்களால் கல்வித்துறையே அதிர்ச்சியடைந்தது. இவ்வாறான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அரசு தரப்பில் ஆய்வும் முயற்சியும் மேற்கொண்டு வரும் நிலையில்  தமிழகத்தில், முதன்முறையாக, திருச்செந்தூர் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியைகள், வெள்ளை நிற, "கோட்' அணிந்து, வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம்  முன்மாதிரி  கட்டளை பிறப்பித்தது பல தரப்பிலிருந்தும்  ஆதரவு கிடைத்துள்ளது. ஆடைகுறைப்பு பற்றிய  விவாதம் நீயா நானாவில் நடந்தது. அதில் ஒரு சகோதரரின் பேச்சு கவனிக்கத்தக்கது. கீழே விடியோவில் பார்க்கவும்.


ஆனால் இன்றைய ஹிஜாப்கள் இந்த கோட்பாட்டில் வருகின்றதா? எனில் இல்லை என்றே பதில் சொல்லத் தோன்றுகிறது!

இன்றைய பெண்களின் ஹிஜாப் உடை எவ்வாறு உள்ளது என்று சற்று சிந்தித்தால் அவை வெறும் அழகிற்காக அணியப்படும் நவநாகரீக ஆடையாகவே உள்ளது என்பதில் ஐயம் இல்லை. இன்று அநேகப் பெண்கள் கருப்பு நிற ஹிஜாப் அணியும் பாங்கிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் வீதிகளில் ஹபாயா,ஹிஜாப் அணிந்து சில பெண்கள் சென்றால், ஆண்கள் தன்னாலே திரும்பிப்பார்க்கும் நிலையிலேயே அவர்கள் அணிந்துள்ள ஹிஜாப்கள் "பள பள” ஜிகினாக் கற்களாலும்,மணிகளாலும்,அலங்கார முத்துக்களாலும் கண்ணைக் கவர்ந்து காண்போரை கண்களால் பரவசப்படுத்தும் நிலையிலேயே உள்ளன. போதாக்குறைக்கு எதையெல்லாம் மறைக்கும் படி குர் ஆனும்,ஹதீசும் கட்டளை இட்டதோ அவற்றையெல்லாம் அப்பட்டமாக "ஆடை அணிந்தும் அணியாத" தோற்றத்திலேயே உடுத்துகிறார்கள்.  அங்க அளவுகள் எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம்   நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. ந’ஊதுபில்லாஹ்.

இன்னும்  அனார்கலி மாடல் புர்காக்கள் வந்துவிட்டது! அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான்!  தலைக்கணியும்   ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின்  பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது.     இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை  மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி!!  அந்தத் துணியில் ஹபாயா தான் இப்போதைய "பேஷனாம்". அதை அணியும் போது மனசாட்சியே சொல்லும் இதை அணிந்து  வீதியில் சென்றால் அத்தனை கண்களும் நம்மையே நோக்கும் என்று.  ஆனாலும்  நாகரீக மோகம் பேஷனை விட்டுத் தர இடம் கொடாது.

நம் மார்க்கம் காட்டித் தந்த ஹிஜாப் இதுவன்று. தன் கைகளையும்,முகத்தையும் தவிர அனைத்து உறுப்புகளையும்,கவர்ச்சி இல்லாமல் மறைக்கும் ஆடை தான் ஹிஜாப்,ஹபாயா ( திரை )

கடைகளில்  ஹிஜாப் என்று கேட்டால் கூட அங்கே இஸ்லாம் காட்டிய முறையில் கிடைக்காது.  நமக்கு பிடித்த தளர்வான புர்காக்களை கேட்டால் வேற்றுகிரக வாசிகளைப் போல் பார்ப்பவர்களும் உண்டு. அதெல்லாம் அந்த காலம், இப்பலாம் யாரும் அந்த மாதிரியான புர்கா வாங்குவதில்லை என ஒற்றை பதிலைச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள்? நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே? அதனால் தான் அவர்களும் அதையே நீட்டுகிறார்கள். 1500 ரூபாய்க்கு குறைந்த புர்க்காக்களே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர் பேஷன் விரும்பும் நம் மங்கைகள்!

இன்றெல்லாம் சாதாரண ஹபாயாக்கள் தேடுபவருக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலை விரைவில் மாற வேண்டும். அதற்கு முதலில் ஹிஜாபின் நோக்கங்கள் நம்மால் முழுமையாக உணரப்பட வேண்டும். இத்தகைய அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை. அல்லாஹ் அழகை நேசிக்கக் கூடியவன், எப்போதும் அழுக்கான ஆடைகளே  உடுத்தி, கிழிந்தும் பார்ப்பதற்கே அருவருப்பான உடைகளுமே  அணிந்து அனைவரின் கண்ணுக்கும் மட்டமாக பெண்களை நிற்கச் சொல்ல வில்லை. அழகானதையே தேர்ந்தெடுக்கச் சொல்கிறான். அவை கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்த மாத்திரத்தில் விதைக்க வேண்டும் என்பதற்காக!  ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல! ஆனால் அவை எல்லையை மிகைக்காத வரையில் சரியானவையே!
 இஸ்லாமிய ஆண்களும் சளைத்தவர்களா என்ன???  பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும்  பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர்!  பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை!  பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆண்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா சீர்கெட்டு அலையும் இளைஞர்களின் போக்கு குறித்து ????

இன்றைய காலத்தில் பார்க்கும் இடம் எல்லாம் அனாச்சாரங்கள் மலிந்துவிட்டன. கண்ணால் பார்க்கும்,காதால் கேட்கும் எந்த செய்தியிலும் "கற்பழிப்பு" என்ற சொல் வரவில்லையானால் அதிசயமே! அந்த அளவில் ஆடைக்குறைப்பு மனிதனை பாடாய்ப்படுத்துகிறது.இவற்றிற்கு மனிதன் தீர்வினைத் தேடுவானாயின் அதற்கு ஒரே வழி பெண்கள் மட்டுமல்ல  ஆண்களும் "ஹிஜாப்" பேண வேண்டும் என்ற உண்மை விளங்கும். ஆம், ஆண்களும் பெண்களுக்கீடாகத் தம் ஹிஜாப் பேண வேண்டும். அதைத் தான் சமநிலை  பேணும் இஸ்லாமிய மார்க்கம் எடுத்துரைக்கிறது. ஒரு கை தட்டலில் ஓசை வராது என்ற கோட்பாட்டினை இஸ்லாம் கொண்டுள்ளது. சமுதாய மாற்றம் என்பது ஆண்களாலும் பெண்களாலும் தான்  கொண்டு வர முடியும் என்பதனை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஆண்களுக்கும் ஹிஜாப் என்பதனை கட்டாயமாக்கியது. ஹிஜாப் என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல!

"ஹிஜாப்" என்றால் என்ன?? ஹிஜாப் என்பது திரை. தன்னை, தன் கற்பை பார்வையாலும், ஆடையாலும் காத்துக்கொள்ள இஸ்லாம் காட்டித் தந்த சிறந்த வழி முறை தான் ஹிஜாப். ஆண், பெண் இருபாலருக்குமான மனரீதியான ஹிஜாபிற்கு வித்தியாசமில்லையென்றாலும் உடையளவில் மட்டும் சற்று வேறுபாடு உண்டு. பெண்களுக்கு எந்த அளவு ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறதோ, ஆண்களுக்கும் அவ்வலியுறுத்தல் சற்றும் குறைவில்லாதது.

காலைப்பொழுதும் மாலைப்பொழுதும்  பார்க்கில்  நடமாடவோ, வாக்கிங் செல்லவோ  அவ்வளவு அசவுகரியம் .  உடல் முழுதும் மூடிக்கொண்டு ஓட்டப்பந்தயங்களில் ஓட முடியாதா, டென்னீஸ் விளையாட முடியாதா என கேட்பவர்களுக்கும் இதே கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஏன் முழு உடை அணிந்து ஆண்களால் ஜாக்கிங் செல்ல முடியாதா? விளையாட முடியாதா?  சஹாபாக்களிலேயே அதிகம் வெட்கப்படுபவரான உஸ்மான் ரழி அவர்களைக் கண்டதும் தமது உடையை ஒழுங்குபடுத்தினார்கள் நம் நபி (ஸல்). வெட்கம் ஈமானின் ஓர் அங்கம் என்பதை நாம் அறியவில்லையா? பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும்.  பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும்  வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும்  சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக ?????     உள்ளாடைகளும்    தெரியும் வண்ணம்,  தரையோடும் இழுத்துச் செல்லப்படும் கால்சட்டைகளையும் அணிவதை இன்று பல முகச்சுளிப்புகளுடன் பெண்கள்  கடந்து விடுகிறோம். இவர்களெல்லாம் திருந்தப்போவது எப்போது ?

தாம் அணிந்திருக்கும் அழகிய உடைகளைப் பிறர் காண வேண்டும் என்று பெருமையுடன் நடக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, கீழ்வரும் ஹதீஸை மனதில் நிறுத்திக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

4240. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 37
ஆடையொழுக்கமும்,. கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமும் இருபாலினரும் கடைபிடிக்கும் போது தான் சமுதாயத்தில் நிகழும் கலாச்சார சீரழிவுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும். இன்ஷா அல்லாஹ் இனி ஹிஜாப் பற்றி பேசுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே உரைப்போம்!  வளமான சமுதாயத்தினை அமைத்திட இருதரப்பினரையும்  உருவாக்க முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்...

உங்கள் சகோதரி,
உம்மு ஜாக்கி, இலங்கை

read more " ஆண்கள் குறித்தும் கவலைகொள்வோம்!"