Thursday, October 22, 2015

வாடகைத்தாய் - வரமா? சாபமா?

பிஸ்மில்லாஹ்
குழந்தை பெற்றுக்கொள்ள உடலால் இயலாதவர்கள் ஒரு காலத்தில் பலரது ஏளனப்பார்வைக்கு ஆளாகிவந்த காலம் இன்று மலையேறிவிட்டது. பல்வேறு உடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு பலருக்குத் தாய்மையினை வழங்கியுள்ளது இன்றைய மருத்துவத்துறையின் நவீன கண்டுபிடிப்புகள். இந்த மருத்துவங்கள் பெண்களுக்கு இழைக்கும் பக்கவிளைவுகளை யாரும் கணக்கில் கொள்வதில்லை. பெண்கள் தாம் சுமைதாங்கிகளாகிவிட்டனரே. குழந்தையின்மையினை சமூகம் அந்த அளவிற்கு மக்கள் மனதில் பாறை போன்ற பாரத்தை விதைத்துவிட்டதே இதற்குக் காரணம்.
அத்தகைய மருத்துவத்தில் ஒன்றுதான் வாடகைத்தாய். சிலருக்குக் கர்ப்பகாலம் என்பதே உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்ற நிலையையும் இன்று வாடகைத்தாய் எனும் திட்டத்தின் மூலம் “பெற்றோர்” ஆகும் வாய்ப்பை அடைந்தனர். இங்கு வேடிக்கை என்னவென்றால், யாருக்கு மருத்துவம் தேவைப்படுகிறதோ அவரை விட்டுவிட்டு அவரைக் குணப்படுத்துவதற்காக, வேறொருவருக்கு மருத்துவம் வழங்கப்படுகிறது.
வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் 2002ல் அனுமதியளிக்கப்பட்டு பலரும் குழந்தை வரம் பெற்று வருகின்றனர். குழந்தைப்பேறு பெற இயலா இந்தியர்கள் மட்டுமின்றி அந்நிய நாட்டவர்களும் இந்தியப்பெண்களையே வாடகைத்தாய் வரம் கொடுக்க நாடுகின்றனர். காரணம், அவர்கள் நாட்டைவிட, இந்தியாவில் அவர்கள் குழந்தைக்கான விலைமதிப்பு குறைவு என்பதே.
வாடகைத்தாய் முறையில் பல வகைகள் உள்ளன. வாடகைத்தாயாக இருப்பவரின் கருவும் சில சமயங்களில் கருமுட்டைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த சமயங்களில் தான் குழந்தையின் உண்மையான தாய் யாரென்பதில் குழப்பங்களும் கலவரங்களும் இலகுவாக உருவாகின்றன. இன்னும் சில வகைகளில் தந்தையாக ஊர் பெயர் தெரியாத யாரோ ஒருவர் பங்கெடுக்கிறார். சில வகைகளில் மட்டுமே வளர்ப்புப்பெற்றோரே மரபணு பெற்றோராகவும் இருக்கின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சியாகினும் தொழில்நுட்ப வளர்ச்சியாகினும் அவற்றுள் காணப்படும் நன்மைகளைக் கண்டவுடன் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் அந்தரத்தில் தொங்கவிடுவது நிச்சயம் எதிர்காலத்தில் பலப்புது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவ்வளர்ச்சிகள் தரும் புதுமைகளை, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் உலகிற்கும் வருங்கால தலைமுறையினருக்கும் கேடு தான் விளையும்.
அந்த வகையில் விஞ்ஞானத்தின் அசுர கண்டுபிடிப்பான வாடகைத்தாய் முறையினையும் அனைத்துத்தரப்பினரின் நியாயங்களையும் கணக்கில் கொண்டு நோக்க வேண்டும். இஸ்லாம் கூறுவதும் இதுவே.
ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் வந்து நியாயம் கேட்டாலும் எதிராளி வரும் வரை தீர்ப்பை தாமதிக்க வேண்டும்.. ஒரு வேளை, எதிராளிக்கு இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டுருக்கலாம் என்பது நபிமொழி.

வாடகைத்தாய் முறையில் கையாளப்படும் அநீதிகள்:


  • வழக்கம்போல், இங்கும் பணம்படைத்தவர்களின் வருத்தங்களே பெரிதாகப் பார்க்கப்படுகின்றன. குழந்தை பெற்றுத்தரும் அந்த பெண்ணின் கர்ப்பகால மனநிலையோ பிரசவத்திற்குப் பிறகான அவரது உடல்,மன உளைச்சல்களோ சிறிதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கர்ப்பகாலம் முழுவதும் தம் குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து தனிமைச்சிறையில் வைத்து ஊட்டச்சத்து உணவுகள் கொடுத்து பராமரிக்கப்படுகிறார்கள். அந்த சமயத்தில் அவரது சொந்த குழந்தைகள் தம் தாயைப் பிரிந்து வாடுகின்றனர். யாருக்கோ குழந்தை பெற்றுக்கொடுக்க, தம் குழந்தைகளைத் திடீரென்று பத்து மாதங்கள் பிரிந்து வாழும் அநீதி சர்வசாதாரணமாக நிகழ்கிறது.
  • பல சந்தர்ப்பங்களில் சுமந்து, பெற்றவள் உண்மையான தாயா அல்லது வளார்ப்பவளா என்றும் வழக்குகள் நடந்த கதைகளும் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு தெற்காசிய நாட்டில் நடந்தததோ இன்னும் அதிகம். ஒரு அந்நிய நாட்டு தம்பதியருக்கு வாடகைத்தாய் பெற்றெடுத்த இரட்டைக்குழந்தைகளில் ஒன்று குறைபாட்டோடு பிறக்க, பூரண சுகத்துடன் இருந்த ஒரு குழந்தையை மட்டும் எடுத்துச்சென்றுவிட்டனர். இன்று குறைபாடுள்ள குழந்தையுடன் வாடகைத்தாய் வாழும் சூழல். ஏனென்று கேட்பாரில்லை.
  • குழந்தை உருவாக்கப்படுதலில் உள்ள பல விஷயங்கள் வாடகைத்தாய்க்குத் தெரிவிக்கப்படுவதில்லை. பிரசவத்தின் போது வாடகைத்தாய் உயிரிழந்தால் என்ன இழப்பீடு, அவர் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் என்று எதுவும் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதுமில்லை. அவ்வாறு பிரசவத்திற்குப் பிறகு இறந்துவிட்ட பிரமீளா எனும் பெண்ணின் மரணத்தை ஒரு விபத்து என்று கோப்பு மூடப்பட்டும்விட்ட பயங்கரங்களும் நடந்துள்ளன.
  • வாடகைத்தாய் முறைக்கென பல சட்டங்கள் முறையாகக் கண்டிப்புடன் வகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை மீறுதலும் மிக எளிதாகவே நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு, வாடகைத்தாயாக இருக்கவேண்டியவர், ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால், சட்டப்படி அடுத்த இரு வருடங்களுக்குப் பிறகே அவர் வாடகைத்தாயாக முடியும். ஆனால், பணத்தேவையும் குழந்தைதேவையும் இரு தரப்பினருக்கும் பொறுமையை வழங்குவதில்லை. மேற்கண்ட இந்த விதிமுறை எளிதில் மீறப்படுகிறது. முன்னுரிமை, கவனம், அக்கறை எல்லாம் பணம் கொடுப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றன. மேலும், கர்ப்பகாலத்தின்போதும் பிரசவத்தின் போதும் உடலில் நிகழும் சில மாற்றங்கள் வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியவை. ஆயுள் முழுதும் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. வாடகைத்தாயின் உடல்நிலையைப் பற்றி கவனத்தில் கொள்ளாததற்கு இந்த உதாரணமே போதுமானது. வெகுசிலர், அரிதிலும் அரிதாக, குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் வாடகைத்தாயின் குடும்பத்தினருக்குப் பணம்/பொருள் உதவி செய்கின்றனர்.

வாடகைத்தாய்மார்கள் தம் வாடகைக்கர்ப்பகாலத்தில்

வாடகைத்தாய் முறையை ஆதரிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:

பத்து மாதங்கள் சுமந்து பெற்றால் தான் தன் பிள்ளையாக முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு தாயும் ஒரு தந்தையும் மட்டுமே பெற்றோராக முடியும். இவ்வாறிருக்கையில், தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார்? கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா? கருமுட்டையையும் பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா? (அமெரிக்காவில் 1987ல் இது போன்ற வழக்கு ஒன்று போடப்பட்டதும் வரலாறு)
இவ்வனைத்து பிரச்சினைகளுக்கும் குர் ஆன் எளிதாக விடையளிக்கிறது.
58:2 இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள்
42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
இறைவன் தனக்கு விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் விதியினை மாற்றியமைப்பதென்பது அவனது படைப்பாற்றலை ஏற்க மறுத்து அவனது ஆற்றலை கையில் எடுப்பதற்கு ஈடாகும். தன் கணவரல்லாதவரின் விந்தணுவை ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்படுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. அதனையே விபச்சாரம் என்றும் கூறுகிறது. 

பிறக்கும் குழந்தைக்கு நிகழும் அநீதிகள்:

1. இங்கு மரபணு பெற்றோரில் யாரேனும் ஒருவர் தமது விந்தணுவையோ கருமுட்டையையோ வழங்கினால் போதுமாதாக உள்ள சூழ்நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் தமது கருமுட்டையையோ/விந்தணுவையோ மட்டும் தானமாக வழங்கி எளிதில் பெற்றோராகி விடுகின்றனர். பிறக்கும் அக்குழந்தையோ, அவ்வோரினச்சேர்க்கை தாய்களுடனோ அல்லது தந்தைகளுடனோ மட்டும் வளரும் விபரீதத்திற்கு ஆளாகி, அதன் எதிர்காலம் இருளில் செல்கிறது.
2. வாடகைத்தாய் முறையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களைத் தவிர, 99% சதவிகித குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மறுக்கப்படுகிறது. குழந்தைக்குத் தாய்ப்பாலின் அவசியம் அறியாத ஒருவரால் எவ்வாறு ஒரு தாயாக இருக்க முடியும்? வாடகைத்தாய்க்குப் பலவித ஊசிகள் மூலம் பால் சுரப்பது தடைசெய்யப்படுகிறது. பிறந்த அக்குழந்தைக்கோ செயற்கை உணவுகள் ஊட்டப்படுகிறது. குழந்தை அருந்த வேண்டிய தாய்ப்பாலைத் தடுப்பதுதான் இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட முன்னேற்றமா? இது நிச்சயமாக எதிர்கால சந்ததியினரின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாத பண முதலைகளின் கண்டுபிடிப்பல்லவா?
3. குழந்தையின் வளர்ச்சியில் கர்ப்பகாலம் மிகப்பெரும் பங்கு வகிப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதனால் தான் கர்ப்பகாலத்தில் மிக மிக அதிகமாகக் கவனிப்பு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்களது மன, உடல் ஆரோக்கியம் நுண்ணிய அளவில் கண்காணிக்கப்படுகிறது. பணத்திற்காகக் குழந்தையைச் சுமக்கப்படும் ஒரு தாயால் எப்படி அக்குழந்தைக்கு நல்ல மன நலத்தை விதைக்க முடியும்?
4. இன்னும் சில சந்தர்ப்பங்களில் பெற்ற தாயின் தாய்ப்பாலைக் குழந்தைக்குத் தடுத்துவிட்டு, யாரோ ஒருவர் தாய்ப்பால் வங்கிக்குத் தானமாக வழங்கிய தாய்ப்பாலைக் குழந்தைக்கு வழங்கும் அவலமும் நிகழ்கிறது. தாய்ப்பால் வங்கிக்கும் தடாவா என அதிரும் உங்களில் எத்தனை பேர், தாய்ப்பால் வங்கியில் பெறப்படும் பாலில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிவீர்கள்?
5. ஒரே தாயிடம் தாய்ப்பால் அருந்திய அத்தனை குழந்தைகளும் பால்குடி சகோதரர், சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். பால்குடி சகோதர சகோதரிகளுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. அறிவுடையோர், பால்குடி சகோதரர்களுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதை வெறுப்பர். இவ்வாறு அறியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் பலர், தம் திருமணத்திற்குப் பின் தாம் இருவரும் பால்குடி சகோதர,சகோதரி என்பதை அறிந்து பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஆக, பால்குடி தாய் / வாடகைத்தாய் யார் என்பதை அறியாதிருந்தால் அது இன்னும் பலப்பல சிக்கல்களை உருவாக்குகிறது.
6. இந்தியாவில் வாடகைத்தாய் மருத்துவத்தின் தலைநகரமாக விளங்கும் குஜராத், ஆனந்த் நகரத்தின் புகழ்பெற்ற அகான்ஷா மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான நயானா பட்டேல் முதல் வாடகைத்தாய் குழந்தையை உருவாக்கினார். அக்குழந்தையின் வாடகைத்தாயாக இருந்தவர் யார் தெரியுமா? குழந்தையின் மரபணுத்தாயின் தாய். அதாவது தன் பாட்டிக்குப் பிரசவமானது. ஆரம்பமே இத்தனை சிக்கல்களைக்கொண்ட மருத்துவம் தான் இந்த வாடகைத்தாய் முறை. குழந்தைபேறில்லா தம்பதியினருக்கு ஒரு குழந்தை மற்றும் பணம் கொழிக்கும் மருத்துவத்துறை - இவ்விரண்டைத் தவிர அனைத்துமே கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்ததுதான் வாடகைத்தாய் முறை.
7. இன்னும் சிலர் அறிவுப்பூர்வமாக வாதாடுவதாக எண்ணி, வாடகைத்தாயையும் செவிலித்தாயயும் ஒப்பிடுகின்றனர். செவிலித்தாய் பாலுட்டும் குழந்தையின் பெற்றோர் யாரென்று குழப்பம் இருப்பதில்லை. இங்கு பால்குடி தாயும் சகோதரர்களும் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் வாடகைத்தாய் முறையில் அடித்தளமே பதிலற்ற கேள்வியாகவே வாழ்க்கை முழுவதும் கழிகிறது.
கர்ப்பப்பை என்பது ஒரு பெண்ணின் மானசீகமானதும், எல்லா உணர்வுகளுக்கும் மேலான தாய்மை உணர்வைத் தருவதுமான ஓர் அந்தரங்கம். உணர்ச்சிகளைக் கொன்று புதைக்கும் பணவர்த்தகத்தில் இந்த தாய்மையும் கர்ப்பப்பையும் விலை போவது மிக மிக வருத்தத்திற்குரியதாகும். இன்று ஆபத்பாந்தவனாகத் தோன்றும் இந்த வாடகைத்தாய் முறையில், வரும்காலத்தில் பிள்ளை பெற்றுக்கொள்வது உடலழகைப் போக்கிவிடும் என்று எண்ணும் பெண்களும் பணத்தை விட்டெறிந்து பிள்ளைகளை “பெற்றுக் கொள்ளும் ஆபத்தாக” மாறிவிடும். பணமிருந்தால் நியாயத்தைத் தன் பக்கம் ஆக்கிக்கொள்ளலாம் என்பவர்களுக்கும் இன்றைய போலி அரசியல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனிதனின் ரத்தத்தைக் குடிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இது. இன்று தவிர்க்கவில்லையெனில் நாளை தடுக்கமுடியாது.
குழந்தையைத் தானே சுமந்து தானே பெற்ற ஒருவரால் வாடகைத்தாய் முறையை எளிதில் குறைகூறிவிட்டு நகர்ந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கும்,யாரோ ஒருவரின் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து உருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் வைத்துப்பெற்றெடுத்து வளர்ப்பவர்களுக்கும், ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். வாடகைத்தாய்க்குப் பிறக்கும் குழந்தையைவிட, யாரோ ஒருவருக்குப் பிறந்து, இன்று அனாதையாக, அன்புக்கு ஏங்கித் தவிக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்தல் பன்மடங்கு மேலானது. அந்த பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்.

ஃபாலோ-அப்

islamqa.info
onislamnet
beautifulislam.net
http://www.businessinsider.com/


7 comments:

  1. A very detailed & excellent piece of article

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ்.. கருத்திற்கு நன்றி சகோ

      Delete
  2. Replies
    1. கருத்திற்கு நன்றி சகோ

      Delete
  3. Selvadurai
    October 23, 2015 at 5:29 PM

    எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு பலமுறை கருத்தரித்தும் சில மாதங்களில் கலைந்து போகின்றது. டாக்டர்கள் பரிசோதித்துப பார்த்ததில் கருவினை முழுக்காலத்திற்கும் சுமக்கும் பெலன் அவளின் கருப்பைக்கு இல்லை எனத் தெரிவித்து விட்டனர். இப்பெண்ணுக்கு என்னதான் வழி? வாடகைத்தாய் ஒனறே வழி. இது போன்ற கேள்விகள் அவள் மனதினைப் புண் படுததாதா?

    ReplyDelete
  4. அதற்குத்தான் இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கிறேன் நண்பர். வாடகைத்தாய் மூலமாக அவருக்குக் குழந்தை கிடைத்துவிடலாம். ஆனால் அந்த வாடகைத்தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் நேரும் விபரீதங்களைப் பார்த்தீர்களா?

    இத்தனை சிரமங்களுக்குப் பிறகு அச்சகோதரிக்கு நிச்சயம் குழந்தையின் அருமை அதிகமாகவே புரிந்திருக்கும். அன்புக்குத் தவிக்கும் பரிதாப நிலையிலிருக்கும் ஒரு குழந்தைக்கு அவரால் நிச்சயம் ஓர் உன்னத வாழ்வை வழங்க முடியும்.

    இதனை அச்சகோதரி சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. சவாலான விஷயத்தை அழகாக கையாண்டுள்ளீர்கள்.

    நல்ல தெளிவு தரும் பதிவு

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete