Monday, October 19, 2015

களப்பணியில் ஆலிமாக்கள்


லிமா என்பவர் யார்? குர் ஆன் வசனங்கள், ஹதீதுகள், இஸ்லாமிய சட்டங்கள், வழிமுறைகள், நபிமார்களின் வரலாறுகள், பற்றி முறையாகப் படித்து அறிந்தவர். இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இஸ்லாம் குறித்த வழிகாட்டியாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால், நபி(ஸல்) அவர்கள் எப்படி இறைவனிடமிருந்து தாம் பெற்ற செய்தியை, தன் உம்மத்துகளுக்கு எத்தி வைத்தார்களோ, அதே பணியை இன்றைய காலத்தில் அதன் வரைமுறைக்குட்பட்டு, தொடர்பவர்கள்தான் ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள்.

ஆலிமாக்களுக்குரிய பொறுப்புகள்:


ஒரு மதரஸாவில் சிற்சில மாணவிகளுக்கு குர் ஆன் ஓதக் கற்பித்தல் என்பது மட்டுமே என்பதாகத்தான் மக்களின் புரிதல் இருக்கிறது. இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு ஆலிமாக்களின் செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. 

ஆலிமாக்களும் ஆசிரியர்களே. பணம் சம்பாதிக்க மட்டுமே உதவுகிற ஏட்டுக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களே ‘குரு’வாக மதிக்கப்படும் இந்நாளில், ‘வாழ்வியல் நெறி’யைப் போதித்து வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக்கூடிய திறனுடைய ஆலிமாக்கள் அதனினும் மேலானவர்கள். சுருங்கச் சொன்னால், ‘தன் பலமறியா யானை’ போன்ற சூழலில் இருப்பவர்கள் அவர்கள்.

ஆலிமா என்ற சொல், ‘இல்ம்’ – அறிவு என்ற சொல்லை வேர்ச்சொல்லாக உடையது. அறிவை உடையவர்கள் ஆலிமாக்கள். அந்த அறிவைப் பரப்ப வேண்டிய கடமைப்பட்டவர்கள். ”ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் முழுதும் கற்றமைக்குச் சமம்” என்பது இந்த வாழ்வியல் நெறி போதிக்கும் கல்விக்குத்தான் சிறப்பாகப் பொருந்தும். 

சமூகத்தில் பெண்கள்:


நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அறிவு தேடலில் ஈடுபட்டார்கள். சமூகத் தளங்களில் பணியாற்றியுள்ளார்கள். பொருளீட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். நபியவர்களின் மனைவியரான கதீஜா(ரலி) மற்றும் ஜைனப்(ரலி) அவர்களும் வியாபாரம் செய்து பொருளீட்டியுள்ளனர். ஆயிஷா(ரலி) அவர்கள் ஹதீதுகள் சேகரித்துக் கொடுத்து, அறிவுப் பணி செய்துள்ளார்கள். அக்காலத்து நபித்தோழியர்கள் எனப்படும் ஸஹாபியப் பெண்கள் பலரும் வீட்டோடு தம் கடமைகளைச் சுருக்கிக் கொள்ளாமல், போர்க்களம் வரை தன் கடமைகளைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட வீரமும், அறிவுச் செறிவும் நிறைந்த வரலாற்றுப் பெருமை கொண்ட சமுதாயத்தில்தான் இன்று பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியவர்கள்; பிள்ளைகளைச் சிறப்புற வளர்த்துவிடுவது மட்டுமே அவர்கள் கடமை என்று “மாயக்கோடு” வரைய முற்படுகிறார்கள் சிலர்.

இதன் பலன், பெண்களுக்கான துறைகளில்கூட பெண்களே இல்லாமல் போய்விட்டார்கள்!! பெண்களுக்கான துறைகள் என்றதும் அனைவருக்கும் உடன் நினைவுக்கு வருவது, ஆசிரியர் பணி மட்டுமே!! ஆசிரியப் பணி மட்டுமா பெண்கள் பங்கேற்க வேண்டிய துறை? எல்லாருமே ஆசிரியர்கள் ஆகிவிட்டால். சமூகத்தின் மற்ற பணிகளை யார் ஏற்றெடுப்பது?

ஆசிரியர்கள் மட்டுமே சமுதாயத்திற்குத் தேவையானவர்கள் அல்ல. தந்தை - தாய் – குழந்தைகள் – தாத்தா-பாட்டி-சித்தப்பா-சின்னம்மா-அத்தை-மாமா என்று அனைவரும் இணைந்ததுதான் ஒரு கூட்டுக் குடும்பம் ஆகும். அதுபோல எல்லா துறைகளிலும் பெண்கள் பங்களிப்பு இருந்தால்தான் அந்தச் சமூகம் முழுமை பெறும். 

ஆலிமாக்கள் கடமை:


ஒரு சமூகத்திற்குத் தேவையான அத்தனை துறை வல்லுநர்களையும் பெண்களிலிருந்து உருவாக்கித் தரவேண்டியது ஒரு ஆசிரியரின் – ஆலிமாவின் கடமை. ஆலிமாவின் பணி மாணவிகளின் ஆர்வம், திறமை அறிந்து, முறையாகப் பயிற்சியளித்து ஊக்குவிப்பதே.

அதற்கான முதற்படியாக, மாணவிகளிடம் நம் ஸஹாபியப் பெண்களின் வீர வரலாறுகளைக் கூறுங்கள். உம்மு உமாரா என்ற நுஸைபா(ரலி) அவர்கள் போர்க்களத்தில் வாளோடு சுழன்று சுழன்று எதிரிகளை வீழ்த்திய கதைகளைச் சொல்லுங்கள். கவ்லா பின்த் அல் அஸ்வர் , எதிரிக் கூட்டத்தினுள் நுழைந்து போரிட்டதையும், எதிரியால் பிடிக்கப்பட்டதையும், எதிரிப் படைத் தளபதி, தன்னை மணந்து கொள்ளக் கேட்டபோது, “உன்னை என் ஒட்டகங்களின் மேய்ப்பனாகக் கூட வைத்திருக்க இலாயக்கில்லாதவன்” என, துளியும் அச்சமின்றி அவன் முகத்திலடித்தாற்போல் பதிலுரைத்த துணிவை மாணவிகளுக்கு ஊட்டுங்கள். 

உம்முல் மூமின்களின் பொருள் தேடல் முயற்சிகளை விளக்குங்கள். வீட்டுக் கடமைகளோடு, சுய தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டியதை எடுத்துரைத்து தொழிலதிபர்களை உருவாக்குங்கள். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி –இறக்குமதி செய்து பெரும் பிஸினஸ் புள்ளியாக இருந்ததைச் சொல்லுங்கள். தொழிலதிபர்களாகி, பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தொழிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கச் செய்யுங்கள்.

கலீஃபா உமர்(ரலி அவர்கள் மஹர் தொகையைக் குறைக்க முற்பட்டபோது, ”இறைவன் பெண்களுக்குக் கொடுத்த உரிமையைப் பறிக்க நீங்கள் யார்?” என்று கலீஃபாவிடமே எதிர்க்கேள்வி எழுப்பினாரே ஒரு சாதாரணப் பெண் பிரஜை – அத்தைரியம் எப்படி வந்தது அவருக்கு? சட்டங்கள் தெரிந்திருந்ததால் வந்தது!! அதுபோல நாட்டின் சட்டங்களைப் படித்து, அநீதிகளைத் தட்டி கேட்கும் வக்கீல்களை உருவாக்குங்கள்!!

குர் ஆனின் வசனங்கள் அனைத்தும் ஆண்களை நோக்கியே சொல்லப்படுகிறதே, பெண்களை ஏன் குறிப்பிடுவதில்லை என்று உம்மு உமாரா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பியதும், இறைவன் உடனே பெண்களின் நற்செயல்களும் வீணாவதில்லை என்று குறிப்பிடும் சூரா அஹ்ஸாப் 35 வசனத்தை (33:35) இறக்கித் தந்ததை எடுத்துரைத்து, பெண் தன் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதில் எந்தத் தடையுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்!!

உமர் (ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில், மதீனாவில் நகரச்சந்தையை நிர்வாகிப்பவராக “உம் அல் ஷிஃபா” என்ற பெண்மணியை நியமித்திருந்தார். ஆண்களே அதிகம் புழங்கும் வியாபார ஸ்தலத்துக்கு ஒரு பெண்ணைப் பொறுப்பாளராக நியமித்ததன் மூலம், நமக்கு உமர்(ரலி) அவர்கள் சொல்லும் சேதியை மாணவிகளுக்கு எத்தி வையுங்கள். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்கெடுக்கக் கூடாது என்று கூவுபவர்களுக்கு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியிலேயே, ஒரு துறைக்குத் தலைவியாக ஒரு பெண் இருந்தார் என்று அழுத்தமான பதிலடி கொடுங்கள்.

இதே உம் அல் ஷிஃபா ஒரு சிறு மருத்துவரும்கூட. இவர்கள் தம்மை நபி(ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, அவரது மருத்துவ அறிவை தன் மனைவியான ஸைனப் (ரலி) அவர்களுக்கு பயிற்றுவிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பெண் மருத்துவர்களின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்த அளவு நாம் அறிந்திருந்தால், நம் சமூகம் இன்று எந்தவொரு பிணிக்கும் ஆண் மருத்துவர்களையே நாட வேண்டிய அவலம் நேர்ந்திருக்காதென்பதை மனதில் பதிய வையுங்கள்.

ஏன் ஆலிமாக்கள்….


இதை ஏன் ஆலிமாக்கள் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும். ஒருகணம் சிந்தியுங்கள்: மேற்கூறப்பட்ட உதாரணங்களில், எல்லாமே நபிகளார் காலத்துப் பெண்களாகவே இருக்கின்றனரே, ஏன் சமகாலத்தில் யாருமே இந்நிலைக்கு உயரவில்லையா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா உங்கள் மனதில்? ஆம், பெண்குழந்தைகளைக் கொல்லும் காலமெனினும், இஸ்லாம் தரப்பட்டபோது, இருதரப்பும் அதை முறையாகப் பேணியதால் பெண்ணடிமைத்தனம் இல்லாமலிருந்தது. ஆனால், பெண் சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் இந்நவீன யுகத்தில்தான் பெண்கள் கடமைகளிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். அதுவும் எந்தமார்க்கத்தின் பெயரால் பெண்களின் நிலையை நபிகளார் மேம்படுத்தினார்களோ, அதே மார்க்கத்தின் பெயரால்தான் என்பது எத்தனை இழுக்கானது?

மார்க்கத்தின் பெயராலேயே பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, கடமைகள் உதிர்க்கப்படும்போது, மார்க்கத்தில் இதற்கெல்லாம் எந்தத் தடையுமில்லை என்று உறுதியாக எடுத்துச் சொல்ல மார்க்கம் படித்த ஆலிமாக்களே அதிகம் கடமைப்பட்டவர்கள்!! 

ஆனால், ஆலிமாக்கள் எனும் அந்த சக்தி வாய்ந்த ஒரு தரப்பு, இதே சமூகம் தன்மீதும் கட்டியுள்ள ”இதெல்லாம் பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை” என்கிற மாயக்கயிற்றுக்குக் கட்டுப்பட்டு, இழுத்தால் அறுபடக்கூடிய சிறு கயிற்றால் கட்டப்பட்ட யானை போல ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விழித்தெழுந்து தம் பாதையைச் செப்பனிட்டால் போதும். பின்தொடரும் முஸ்லிம் சமுதாயம் சரியான பாதையில் செல்லத் துவங்கும். 

எந்த வாய்ப்புமே தராமல், வழிவகையுமே செய்துகொடுக்காமல் சமைத்து, உண்டு உறங்கி வீட்டோடு இரு போதும் என்று எல்லாப் பெண்களிடமும் சொல்வது நம் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஒவ்வொருவருக்கும் தன் மனதைக் கொண்டுச் செய்ய வேண்டிய குடும்பக் கடமைகளோடு, தன் அறிவை – திறமையைக் கொண்டு தன் இனத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு என்பதை நபிகளின் இன்றைய வாரிசுகளான ஆலிமாக்கள்தாம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.

எவ்வாறு…இல்ம் என்றால் அறிவு என்றறிவோம். இச்சொல், அடிப்படை அறிவு கோல்களான குர் ஆனையும், ஹதீஸையும் மட்டும் குறிப்பதல்ல. அதனோடு, பரந்த உலகறிவு, வரலாற்று ஞானமும் வேண்டும். எல்லாம் சேர்ந்ததே ‘இல்ம்’. எல்லாம் ஒருசேரப் பெற்றவரே ‘ஆலிமா’ ஆவார். ஆகையால், அவர்களது முதற்பணி தம் அறிவை விரிவுபடுத்திக் கொள்வதே.


ஒரு குருவி தன் அலகில் தண்ணீரை அள்ளியதைக் கண்ட கிள்று (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், “என் அறிவும், உங்கள் அறிவும், இன்னும் படைக்கப்பட்டவைகளின் மொத்த அறிவும் சேர்ந்தாலும், இக்குருவியின் வாயிலுள்ள தண்ணீரைவிட அதிகமானதல்ல” என்று கூறினார்கள். . (Sahih Al-Bukhari, Volume 6, Book 60, Number 251) எனில், நம் அறிவு எத்துணை அற்பமானது என்றுணர வேண்டும்.


இல்ம் என்பது முடிவில்லாதது. படித்துப் பெறுகின்ற பட்டம் தரும் அறிவு சொற்பமானதே. அதனைத் தேடி நம்மை மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவு விரிவடைந்தால்தான், ஆலிமாக்களின் நிலை சமூகத்தில் மெச்சத்தக்க வகையில் அமையும். அவர்களின் அறிவுரைகளும் செவிமடுத்துக் கேட்கப்படும். வழிகாட்டுதல்கள் மதிக்கப்படும். இன் ஷா அல்லாஹ்.


(திருபுவனம் அன்னை ஆயிஷா(ரலி) பெண்கள் மதரஸாவின் கட்டிடத் திறப்பு விழா சிறப்பு மலரில் வெளியானது)

1 comment:

  1. Masha allah ..a very inspiring article for women.

    ReplyDelete