Saturday, October 31, 2015

வாடகைத்தாய் - வரமா? சாபமா? : ஃபாலோ-அப்


வாடகைத்தாய் முறையில் வாடகைத்தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் நேரும் அபாயங்கள் குறித்து விரிவாகக் கடந்த பதிவில் வெளியானது.

உலகளவில் வாடகைத்தாய் மையமாகக் கருதப்படும் இந்தியாவில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் கோடிக்கணக்கில் பண வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்தியாவின் நவீன மருத்துவ முன்னேற்றம் மற்றும் குறைந்த விலையால் வெளிநாட்டவர் பலர் இந்தியாவை நாடி வருவதால் லட்சங்களுக்காக விதிமுறைகள் கட்டுப்படுத்த இயலா அளவில் மீறப்பட்டும் வந்தன. 

தரகர்களாலும் மருத்துவமனைகளாலும் வாடகைத்தாய்களால் லட்சங்கள் சம்பாதித்தாலும் உடலையும் உயிரையும் வருத்தி குழந்தை பெறும் வாடகைத்தாய் அதில் பொறியளவு வருமானம் பெற்று ஏமாறுகின்றனர். இச்சூழ்நிலையில், இத்தகைய அநீதிகளையெல்லாம் கண்டு வருந்திய மனிதாபமானமிக்க ஒருவர் தொடுத்த வழக்கால் சமீபத்தில் இந்திய அரசு மிக முக்கியமான ஒரு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


”வெளிநாட்டவர் இனி இந்திய வாடகைத்தாய்களை நாடி பயன் பெற இயலாது.” இது மிக மிக வரவேற்கத்தக்க சட்ட நடவடிக்கையாகும்.


ஐரோப்பியாவின் பல நாடுகளில் இந்த வாடகைத்தாய் முறை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது போல், இந்தியாவிலும் விரைவில் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். உணர்வுகள் பணத்துடன் போட்டியிட்டு தோற்றுவிடும் முன் இந்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் மருத்துவ முன்னேற்றங்கள் இந்தியாவிற்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் நன்மையே பெற்றுத்தருவதாக இருக்க வேண்டும்.

http://www.bbc.com/
read more "வாடகைத்தாய் - வரமா? சாபமா? : ஃபாலோ-அப்"

Thursday, October 22, 2015

வாடகைத்தாய் - வரமா? சாபமா?

பிஸ்மில்லாஹ்
குழந்தை பெற்றுக்கொள்ள உடலால் இயலாதவர்கள் ஒரு காலத்தில் பலரது ஏளனப்பார்வைக்கு ஆளாகிவந்த காலம் இன்று மலையேறிவிட்டது. பல்வேறு உடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு பலருக்குத் தாய்மையினை வழங்கியுள்ளது இன்றைய மருத்துவத்துறையின் நவீன கண்டுபிடிப்புகள். இந்த மருத்துவங்கள் பெண்களுக்கு இழைக்கும் பக்கவிளைவுகளை யாரும் கணக்கில் கொள்வதில்லை. பெண்கள் தாம் சுமைதாங்கிகளாகிவிட்டனரே. குழந்தையின்மையினை சமூகம் அந்த அளவிற்கு மக்கள் மனதில் பாறை போன்ற பாரத்தை விதைத்துவிட்டதே இதற்குக் காரணம்.
அத்தகைய மருத்துவத்தில் ஒன்றுதான் வாடகைத்தாய். சிலருக்குக் கர்ப்பகாலம் என்பதே உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்ற நிலையையும் இன்று வாடகைத்தாய் எனும் திட்டத்தின் மூலம் “பெற்றோர்” ஆகும் வாய்ப்பை அடைந்தனர். இங்கு வேடிக்கை என்னவென்றால், யாருக்கு மருத்துவம் தேவைப்படுகிறதோ அவரை விட்டுவிட்டு அவரைக் குணப்படுத்துவதற்காக, வேறொருவருக்கு மருத்துவம் வழங்கப்படுகிறது.
வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் 2002ல் அனுமதியளிக்கப்பட்டு பலரும் குழந்தை வரம் பெற்று வருகின்றனர். குழந்தைப்பேறு பெற இயலா இந்தியர்கள் மட்டுமின்றி அந்நிய நாட்டவர்களும் இந்தியப்பெண்களையே வாடகைத்தாய் வரம் கொடுக்க நாடுகின்றனர். காரணம், அவர்கள் நாட்டைவிட, இந்தியாவில் அவர்கள் குழந்தைக்கான விலைமதிப்பு குறைவு என்பதே.
வாடகைத்தாய் முறையில் பல வகைகள் உள்ளன. வாடகைத்தாயாக இருப்பவரின் கருவும் சில சமயங்களில் கருமுட்டைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த சமயங்களில் தான் குழந்தையின் உண்மையான தாய் யாரென்பதில் குழப்பங்களும் கலவரங்களும் இலகுவாக உருவாகின்றன. இன்னும் சில வகைகளில் தந்தையாக ஊர் பெயர் தெரியாத யாரோ ஒருவர் பங்கெடுக்கிறார். சில வகைகளில் மட்டுமே வளர்ப்புப்பெற்றோரே மரபணு பெற்றோராகவும் இருக்கின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சியாகினும் தொழில்நுட்ப வளர்ச்சியாகினும் அவற்றுள் காணப்படும் நன்மைகளைக் கண்டவுடன் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் அந்தரத்தில் தொங்கவிடுவது நிச்சயம் எதிர்காலத்தில் பலப்புது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவ்வளர்ச்சிகள் தரும் புதுமைகளை, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் உலகிற்கும் வருங்கால தலைமுறையினருக்கும் கேடு தான் விளையும்.
அந்த வகையில் விஞ்ஞானத்தின் அசுர கண்டுபிடிப்பான வாடகைத்தாய் முறையினையும் அனைத்துத்தரப்பினரின் நியாயங்களையும் கணக்கில் கொண்டு நோக்க வேண்டும். இஸ்லாம் கூறுவதும் இதுவே.
ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் வந்து நியாயம் கேட்டாலும் எதிராளி வரும் வரை தீர்ப்பை தாமதிக்க வேண்டும்.. ஒரு வேளை, எதிராளிக்கு இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டுருக்கலாம் என்பது நபிமொழி.

வாடகைத்தாய் முறையில் கையாளப்படும் அநீதிகள்:


  • வழக்கம்போல், இங்கும் பணம்படைத்தவர்களின் வருத்தங்களே பெரிதாகப் பார்க்கப்படுகின்றன. குழந்தை பெற்றுத்தரும் அந்த பெண்ணின் கர்ப்பகால மனநிலையோ பிரசவத்திற்குப் பிறகான அவரது உடல்,மன உளைச்சல்களோ சிறிதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கர்ப்பகாலம் முழுவதும் தம் குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து தனிமைச்சிறையில் வைத்து ஊட்டச்சத்து உணவுகள் கொடுத்து பராமரிக்கப்படுகிறார்கள். அந்த சமயத்தில் அவரது சொந்த குழந்தைகள் தம் தாயைப் பிரிந்து வாடுகின்றனர். யாருக்கோ குழந்தை பெற்றுக்கொடுக்க, தம் குழந்தைகளைத் திடீரென்று பத்து மாதங்கள் பிரிந்து வாழும் அநீதி சர்வசாதாரணமாக நிகழ்கிறது.
  • பல சந்தர்ப்பங்களில் சுமந்து, பெற்றவள் உண்மையான தாயா அல்லது வளார்ப்பவளா என்றும் வழக்குகள் நடந்த கதைகளும் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு தெற்காசிய நாட்டில் நடந்தததோ இன்னும் அதிகம். ஒரு அந்நிய நாட்டு தம்பதியருக்கு வாடகைத்தாய் பெற்றெடுத்த இரட்டைக்குழந்தைகளில் ஒன்று குறைபாட்டோடு பிறக்க, பூரண சுகத்துடன் இருந்த ஒரு குழந்தையை மட்டும் எடுத்துச்சென்றுவிட்டனர். இன்று குறைபாடுள்ள குழந்தையுடன் வாடகைத்தாய் வாழும் சூழல். ஏனென்று கேட்பாரில்லை.
  • குழந்தை உருவாக்கப்படுதலில் உள்ள பல விஷயங்கள் வாடகைத்தாய்க்குத் தெரிவிக்கப்படுவதில்லை. பிரசவத்தின் போது வாடகைத்தாய் உயிரிழந்தால் என்ன இழப்பீடு, அவர் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் என்று எதுவும் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதுமில்லை. அவ்வாறு பிரசவத்திற்குப் பிறகு இறந்துவிட்ட பிரமீளா எனும் பெண்ணின் மரணத்தை ஒரு விபத்து என்று கோப்பு மூடப்பட்டும்விட்ட பயங்கரங்களும் நடந்துள்ளன.
  • வாடகைத்தாய் முறைக்கென பல சட்டங்கள் முறையாகக் கண்டிப்புடன் வகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை மீறுதலும் மிக எளிதாகவே நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு, வாடகைத்தாயாக இருக்கவேண்டியவர், ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால், சட்டப்படி அடுத்த இரு வருடங்களுக்குப் பிறகே அவர் வாடகைத்தாயாக முடியும். ஆனால், பணத்தேவையும் குழந்தைதேவையும் இரு தரப்பினருக்கும் பொறுமையை வழங்குவதில்லை. மேற்கண்ட இந்த விதிமுறை எளிதில் மீறப்படுகிறது. முன்னுரிமை, கவனம், அக்கறை எல்லாம் பணம் கொடுப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றன. மேலும், கர்ப்பகாலத்தின்போதும் பிரசவத்தின் போதும் உடலில் நிகழும் சில மாற்றங்கள் வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியவை. ஆயுள் முழுதும் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. வாடகைத்தாயின் உடல்நிலையைப் பற்றி கவனத்தில் கொள்ளாததற்கு இந்த உதாரணமே போதுமானது. வெகுசிலர், அரிதிலும் அரிதாக, குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் வாடகைத்தாயின் குடும்பத்தினருக்குப் பணம்/பொருள் உதவி செய்கின்றனர்.

வாடகைத்தாய்மார்கள் தம் வாடகைக்கர்ப்பகாலத்தில்

வாடகைத்தாய் முறையை ஆதரிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:

பத்து மாதங்கள் சுமந்து பெற்றால் தான் தன் பிள்ளையாக முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு தாயும் ஒரு தந்தையும் மட்டுமே பெற்றோராக முடியும். இவ்வாறிருக்கையில், தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார்? கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா? கருமுட்டையையும் பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா? (அமெரிக்காவில் 1987ல் இது போன்ற வழக்கு ஒன்று போடப்பட்டதும் வரலாறு)
இவ்வனைத்து பிரச்சினைகளுக்கும் குர் ஆன் எளிதாக விடையளிக்கிறது.
58:2 இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள்
42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
இறைவன் தனக்கு விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் விதியினை மாற்றியமைப்பதென்பது அவனது படைப்பாற்றலை ஏற்க மறுத்து அவனது ஆற்றலை கையில் எடுப்பதற்கு ஈடாகும். தன் கணவரல்லாதவரின் விந்தணுவை ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்படுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. அதனையே விபச்சாரம் என்றும் கூறுகிறது. 

பிறக்கும் குழந்தைக்கு நிகழும் அநீதிகள்:

1. இங்கு மரபணு பெற்றோரில் யாரேனும் ஒருவர் தமது விந்தணுவையோ கருமுட்டையையோ வழங்கினால் போதுமாதாக உள்ள சூழ்நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் தமது கருமுட்டையையோ/விந்தணுவையோ மட்டும் தானமாக வழங்கி எளிதில் பெற்றோராகி விடுகின்றனர். பிறக்கும் அக்குழந்தையோ, அவ்வோரினச்சேர்க்கை தாய்களுடனோ அல்லது தந்தைகளுடனோ மட்டும் வளரும் விபரீதத்திற்கு ஆளாகி, அதன் எதிர்காலம் இருளில் செல்கிறது.
2. வாடகைத்தாய் முறையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களைத் தவிர, 99% சதவிகித குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மறுக்கப்படுகிறது. குழந்தைக்குத் தாய்ப்பாலின் அவசியம் அறியாத ஒருவரால் எவ்வாறு ஒரு தாயாக இருக்க முடியும்? வாடகைத்தாய்க்குப் பலவித ஊசிகள் மூலம் பால் சுரப்பது தடைசெய்யப்படுகிறது. பிறந்த அக்குழந்தைக்கோ செயற்கை உணவுகள் ஊட்டப்படுகிறது. குழந்தை அருந்த வேண்டிய தாய்ப்பாலைத் தடுப்பதுதான் இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட முன்னேற்றமா? இது நிச்சயமாக எதிர்கால சந்ததியினரின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாத பண முதலைகளின் கண்டுபிடிப்பல்லவா?
3. குழந்தையின் வளர்ச்சியில் கர்ப்பகாலம் மிகப்பெரும் பங்கு வகிப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதனால் தான் கர்ப்பகாலத்தில் மிக மிக அதிகமாகக் கவனிப்பு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்களது மன, உடல் ஆரோக்கியம் நுண்ணிய அளவில் கண்காணிக்கப்படுகிறது. பணத்திற்காகக் குழந்தையைச் சுமக்கப்படும் ஒரு தாயால் எப்படி அக்குழந்தைக்கு நல்ல மன நலத்தை விதைக்க முடியும்?
4. இன்னும் சில சந்தர்ப்பங்களில் பெற்ற தாயின் தாய்ப்பாலைக் குழந்தைக்குத் தடுத்துவிட்டு, யாரோ ஒருவர் தாய்ப்பால் வங்கிக்குத் தானமாக வழங்கிய தாய்ப்பாலைக் குழந்தைக்கு வழங்கும் அவலமும் நிகழ்கிறது. தாய்ப்பால் வங்கிக்கும் தடாவா என அதிரும் உங்களில் எத்தனை பேர், தாய்ப்பால் வங்கியில் பெறப்படும் பாலில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிவீர்கள்?
5. ஒரே தாயிடம் தாய்ப்பால் அருந்திய அத்தனை குழந்தைகளும் பால்குடி சகோதரர், சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். பால்குடி சகோதர சகோதரிகளுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. அறிவுடையோர், பால்குடி சகோதரர்களுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதை வெறுப்பர். இவ்வாறு அறியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் பலர், தம் திருமணத்திற்குப் பின் தாம் இருவரும் பால்குடி சகோதர,சகோதரி என்பதை அறிந்து பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஆக, பால்குடி தாய் / வாடகைத்தாய் யார் என்பதை அறியாதிருந்தால் அது இன்னும் பலப்பல சிக்கல்களை உருவாக்குகிறது.
6. இந்தியாவில் வாடகைத்தாய் மருத்துவத்தின் தலைநகரமாக விளங்கும் குஜராத், ஆனந்த் நகரத்தின் புகழ்பெற்ற அகான்ஷா மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான நயானா பட்டேல் முதல் வாடகைத்தாய் குழந்தையை உருவாக்கினார். அக்குழந்தையின் வாடகைத்தாயாக இருந்தவர் யார் தெரியுமா? குழந்தையின் மரபணுத்தாயின் தாய். அதாவது தன் பாட்டிக்குப் பிரசவமானது. ஆரம்பமே இத்தனை சிக்கல்களைக்கொண்ட மருத்துவம் தான் இந்த வாடகைத்தாய் முறை. குழந்தைபேறில்லா தம்பதியினருக்கு ஒரு குழந்தை மற்றும் பணம் கொழிக்கும் மருத்துவத்துறை - இவ்விரண்டைத் தவிர அனைத்துமே கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்ததுதான் வாடகைத்தாய் முறை.
7. இன்னும் சிலர் அறிவுப்பூர்வமாக வாதாடுவதாக எண்ணி, வாடகைத்தாயையும் செவிலித்தாயயும் ஒப்பிடுகின்றனர். செவிலித்தாய் பாலுட்டும் குழந்தையின் பெற்றோர் யாரென்று குழப்பம் இருப்பதில்லை. இங்கு பால்குடி தாயும் சகோதரர்களும் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் வாடகைத்தாய் முறையில் அடித்தளமே பதிலற்ற கேள்வியாகவே வாழ்க்கை முழுவதும் கழிகிறது.
கர்ப்பப்பை என்பது ஒரு பெண்ணின் மானசீகமானதும், எல்லா உணர்வுகளுக்கும் மேலான தாய்மை உணர்வைத் தருவதுமான ஓர் அந்தரங்கம். உணர்ச்சிகளைக் கொன்று புதைக்கும் பணவர்த்தகத்தில் இந்த தாய்மையும் கர்ப்பப்பையும் விலை போவது மிக மிக வருத்தத்திற்குரியதாகும். இன்று ஆபத்பாந்தவனாகத் தோன்றும் இந்த வாடகைத்தாய் முறையில், வரும்காலத்தில் பிள்ளை பெற்றுக்கொள்வது உடலழகைப் போக்கிவிடும் என்று எண்ணும் பெண்களும் பணத்தை விட்டெறிந்து பிள்ளைகளை “பெற்றுக் கொள்ளும் ஆபத்தாக” மாறிவிடும். பணமிருந்தால் நியாயத்தைத் தன் பக்கம் ஆக்கிக்கொள்ளலாம் என்பவர்களுக்கும் இன்றைய போலி அரசியல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனிதனின் ரத்தத்தைக் குடிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இது. இன்று தவிர்க்கவில்லையெனில் நாளை தடுக்கமுடியாது.
குழந்தையைத் தானே சுமந்து தானே பெற்ற ஒருவரால் வாடகைத்தாய் முறையை எளிதில் குறைகூறிவிட்டு நகர்ந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கும்,யாரோ ஒருவரின் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து உருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் வைத்துப்பெற்றெடுத்து வளர்ப்பவர்களுக்கும், ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். வாடகைத்தாய்க்குப் பிறக்கும் குழந்தையைவிட, யாரோ ஒருவருக்குப் பிறந்து, இன்று அனாதையாக, அன்புக்கு ஏங்கித் தவிக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்தல் பன்மடங்கு மேலானது. அந்த பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்.

ஃபாலோ-அப்

islamqa.info
onislamnet
beautifulislam.net
http://www.businessinsider.com/


read more "வாடகைத்தாய் - வரமா? சாபமா?"

Monday, October 19, 2015

களப்பணியில் ஆலிமாக்கள்


லிமா என்பவர் யார்? குர் ஆன் வசனங்கள், ஹதீதுகள், இஸ்லாமிய சட்டங்கள், வழிமுறைகள், நபிமார்களின் வரலாறுகள், பற்றி முறையாகப் படித்து அறிந்தவர். இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இஸ்லாம் குறித்த வழிகாட்டியாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால், நபி(ஸல்) அவர்கள் எப்படி இறைவனிடமிருந்து தாம் பெற்ற செய்தியை, தன் உம்மத்துகளுக்கு எத்தி வைத்தார்களோ, அதே பணியை இன்றைய காலத்தில் அதன் வரைமுறைக்குட்பட்டு, தொடர்பவர்கள்தான் ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள்.

ஆலிமாக்களுக்குரிய பொறுப்புகள்:


ஒரு மதரஸாவில் சிற்சில மாணவிகளுக்கு குர் ஆன் ஓதக் கற்பித்தல் என்பது மட்டுமே என்பதாகத்தான் மக்களின் புரிதல் இருக்கிறது. இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு ஆலிமாக்களின் செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. 

ஆலிமாக்களும் ஆசிரியர்களே. பணம் சம்பாதிக்க மட்டுமே உதவுகிற ஏட்டுக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களே ‘குரு’வாக மதிக்கப்படும் இந்நாளில், ‘வாழ்வியல் நெறி’யைப் போதித்து வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக்கூடிய திறனுடைய ஆலிமாக்கள் அதனினும் மேலானவர்கள். சுருங்கச் சொன்னால், ‘தன் பலமறியா யானை’ போன்ற சூழலில் இருப்பவர்கள் அவர்கள்.

ஆலிமா என்ற சொல், ‘இல்ம்’ – அறிவு என்ற சொல்லை வேர்ச்சொல்லாக உடையது. அறிவை உடையவர்கள் ஆலிமாக்கள். அந்த அறிவைப் பரப்ப வேண்டிய கடமைப்பட்டவர்கள். ”ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் முழுதும் கற்றமைக்குச் சமம்” என்பது இந்த வாழ்வியல் நெறி போதிக்கும் கல்விக்குத்தான் சிறப்பாகப் பொருந்தும். 

சமூகத்தில் பெண்கள்:


நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அறிவு தேடலில் ஈடுபட்டார்கள். சமூகத் தளங்களில் பணியாற்றியுள்ளார்கள். பொருளீட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். நபியவர்களின் மனைவியரான கதீஜா(ரலி) மற்றும் ஜைனப்(ரலி) அவர்களும் வியாபாரம் செய்து பொருளீட்டியுள்ளனர். ஆயிஷா(ரலி) அவர்கள் ஹதீதுகள் சேகரித்துக் கொடுத்து, அறிவுப் பணி செய்துள்ளார்கள். அக்காலத்து நபித்தோழியர்கள் எனப்படும் ஸஹாபியப் பெண்கள் பலரும் வீட்டோடு தம் கடமைகளைச் சுருக்கிக் கொள்ளாமல், போர்க்களம் வரை தன் கடமைகளைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட வீரமும், அறிவுச் செறிவும் நிறைந்த வரலாற்றுப் பெருமை கொண்ட சமுதாயத்தில்தான் இன்று பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியவர்கள்; பிள்ளைகளைச் சிறப்புற வளர்த்துவிடுவது மட்டுமே அவர்கள் கடமை என்று “மாயக்கோடு” வரைய முற்படுகிறார்கள் சிலர்.

இதன் பலன், பெண்களுக்கான துறைகளில்கூட பெண்களே இல்லாமல் போய்விட்டார்கள்!! பெண்களுக்கான துறைகள் என்றதும் அனைவருக்கும் உடன் நினைவுக்கு வருவது, ஆசிரியர் பணி மட்டுமே!! ஆசிரியப் பணி மட்டுமா பெண்கள் பங்கேற்க வேண்டிய துறை? எல்லாருமே ஆசிரியர்கள் ஆகிவிட்டால். சமூகத்தின் மற்ற பணிகளை யார் ஏற்றெடுப்பது?

ஆசிரியர்கள் மட்டுமே சமுதாயத்திற்குத் தேவையானவர்கள் அல்ல. தந்தை - தாய் – குழந்தைகள் – தாத்தா-பாட்டி-சித்தப்பா-சின்னம்மா-அத்தை-மாமா என்று அனைவரும் இணைந்ததுதான் ஒரு கூட்டுக் குடும்பம் ஆகும். அதுபோல எல்லா துறைகளிலும் பெண்கள் பங்களிப்பு இருந்தால்தான் அந்தச் சமூகம் முழுமை பெறும். 

ஆலிமாக்கள் கடமை:


ஒரு சமூகத்திற்குத் தேவையான அத்தனை துறை வல்லுநர்களையும் பெண்களிலிருந்து உருவாக்கித் தரவேண்டியது ஒரு ஆசிரியரின் – ஆலிமாவின் கடமை. ஆலிமாவின் பணி மாணவிகளின் ஆர்வம், திறமை அறிந்து, முறையாகப் பயிற்சியளித்து ஊக்குவிப்பதே.

அதற்கான முதற்படியாக, மாணவிகளிடம் நம் ஸஹாபியப் பெண்களின் வீர வரலாறுகளைக் கூறுங்கள். உம்மு உமாரா என்ற நுஸைபா(ரலி) அவர்கள் போர்க்களத்தில் வாளோடு சுழன்று சுழன்று எதிரிகளை வீழ்த்திய கதைகளைச் சொல்லுங்கள். கவ்லா பின்த் அல் அஸ்வர் , எதிரிக் கூட்டத்தினுள் நுழைந்து போரிட்டதையும், எதிரியால் பிடிக்கப்பட்டதையும், எதிரிப் படைத் தளபதி, தன்னை மணந்து கொள்ளக் கேட்டபோது, “உன்னை என் ஒட்டகங்களின் மேய்ப்பனாகக் கூட வைத்திருக்க இலாயக்கில்லாதவன்” என, துளியும் அச்சமின்றி அவன் முகத்திலடித்தாற்போல் பதிலுரைத்த துணிவை மாணவிகளுக்கு ஊட்டுங்கள். 

உம்முல் மூமின்களின் பொருள் தேடல் முயற்சிகளை விளக்குங்கள். வீட்டுக் கடமைகளோடு, சுய தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டியதை எடுத்துரைத்து தொழிலதிபர்களை உருவாக்குங்கள். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி –இறக்குமதி செய்து பெரும் பிஸினஸ் புள்ளியாக இருந்ததைச் சொல்லுங்கள். தொழிலதிபர்களாகி, பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தொழிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கச் செய்யுங்கள்.

கலீஃபா உமர்(ரலி அவர்கள் மஹர் தொகையைக் குறைக்க முற்பட்டபோது, ”இறைவன் பெண்களுக்குக் கொடுத்த உரிமையைப் பறிக்க நீங்கள் யார்?” என்று கலீஃபாவிடமே எதிர்க்கேள்வி எழுப்பினாரே ஒரு சாதாரணப் பெண் பிரஜை – அத்தைரியம் எப்படி வந்தது அவருக்கு? சட்டங்கள் தெரிந்திருந்ததால் வந்தது!! அதுபோல நாட்டின் சட்டங்களைப் படித்து, அநீதிகளைத் தட்டி கேட்கும் வக்கீல்களை உருவாக்குங்கள்!!

குர் ஆனின் வசனங்கள் அனைத்தும் ஆண்களை நோக்கியே சொல்லப்படுகிறதே, பெண்களை ஏன் குறிப்பிடுவதில்லை என்று உம்மு உமாரா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பியதும், இறைவன் உடனே பெண்களின் நற்செயல்களும் வீணாவதில்லை என்று குறிப்பிடும் சூரா அஹ்ஸாப் 35 வசனத்தை (33:35) இறக்கித் தந்ததை எடுத்துரைத்து, பெண் தன் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதில் எந்தத் தடையுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்!!

உமர் (ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில், மதீனாவில் நகரச்சந்தையை நிர்வாகிப்பவராக “உம் அல் ஷிஃபா” என்ற பெண்மணியை நியமித்திருந்தார். ஆண்களே அதிகம் புழங்கும் வியாபார ஸ்தலத்துக்கு ஒரு பெண்ணைப் பொறுப்பாளராக நியமித்ததன் மூலம், நமக்கு உமர்(ரலி) அவர்கள் சொல்லும் சேதியை மாணவிகளுக்கு எத்தி வையுங்கள். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்கெடுக்கக் கூடாது என்று கூவுபவர்களுக்கு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியிலேயே, ஒரு துறைக்குத் தலைவியாக ஒரு பெண் இருந்தார் என்று அழுத்தமான பதிலடி கொடுங்கள்.

இதே உம் அல் ஷிஃபா ஒரு சிறு மருத்துவரும்கூட. இவர்கள் தம்மை நபி(ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, அவரது மருத்துவ அறிவை தன் மனைவியான ஸைனப் (ரலி) அவர்களுக்கு பயிற்றுவிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பெண் மருத்துவர்களின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்த அளவு நாம் அறிந்திருந்தால், நம் சமூகம் இன்று எந்தவொரு பிணிக்கும் ஆண் மருத்துவர்களையே நாட வேண்டிய அவலம் நேர்ந்திருக்காதென்பதை மனதில் பதிய வையுங்கள்.

ஏன் ஆலிமாக்கள்….


இதை ஏன் ஆலிமாக்கள் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும். ஒருகணம் சிந்தியுங்கள்: மேற்கூறப்பட்ட உதாரணங்களில், எல்லாமே நபிகளார் காலத்துப் பெண்களாகவே இருக்கின்றனரே, ஏன் சமகாலத்தில் யாருமே இந்நிலைக்கு உயரவில்லையா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா உங்கள் மனதில்? ஆம், பெண்குழந்தைகளைக் கொல்லும் காலமெனினும், இஸ்லாம் தரப்பட்டபோது, இருதரப்பும் அதை முறையாகப் பேணியதால் பெண்ணடிமைத்தனம் இல்லாமலிருந்தது. ஆனால், பெண் சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் இந்நவீன யுகத்தில்தான் பெண்கள் கடமைகளிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். அதுவும் எந்தமார்க்கத்தின் பெயரால் பெண்களின் நிலையை நபிகளார் மேம்படுத்தினார்களோ, அதே மார்க்கத்தின் பெயரால்தான் என்பது எத்தனை இழுக்கானது?

மார்க்கத்தின் பெயராலேயே பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, கடமைகள் உதிர்க்கப்படும்போது, மார்க்கத்தில் இதற்கெல்லாம் எந்தத் தடையுமில்லை என்று உறுதியாக எடுத்துச் சொல்ல மார்க்கம் படித்த ஆலிமாக்களே அதிகம் கடமைப்பட்டவர்கள்!! 

ஆனால், ஆலிமாக்கள் எனும் அந்த சக்தி வாய்ந்த ஒரு தரப்பு, இதே சமூகம் தன்மீதும் கட்டியுள்ள ”இதெல்லாம் பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை” என்கிற மாயக்கயிற்றுக்குக் கட்டுப்பட்டு, இழுத்தால் அறுபடக்கூடிய சிறு கயிற்றால் கட்டப்பட்ட யானை போல ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விழித்தெழுந்து தம் பாதையைச் செப்பனிட்டால் போதும். பின்தொடரும் முஸ்லிம் சமுதாயம் சரியான பாதையில் செல்லத் துவங்கும். 

எந்த வாய்ப்புமே தராமல், வழிவகையுமே செய்துகொடுக்காமல் சமைத்து, உண்டு உறங்கி வீட்டோடு இரு போதும் என்று எல்லாப் பெண்களிடமும் சொல்வது நம் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஒவ்வொருவருக்கும் தன் மனதைக் கொண்டுச் செய்ய வேண்டிய குடும்பக் கடமைகளோடு, தன் அறிவை – திறமையைக் கொண்டு தன் இனத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு என்பதை நபிகளின் இன்றைய வாரிசுகளான ஆலிமாக்கள்தாம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.

எவ்வாறு…இல்ம் என்றால் அறிவு என்றறிவோம். இச்சொல், அடிப்படை அறிவு கோல்களான குர் ஆனையும், ஹதீஸையும் மட்டும் குறிப்பதல்ல. அதனோடு, பரந்த உலகறிவு, வரலாற்று ஞானமும் வேண்டும். எல்லாம் சேர்ந்ததே ‘இல்ம்’. எல்லாம் ஒருசேரப் பெற்றவரே ‘ஆலிமா’ ஆவார். ஆகையால், அவர்களது முதற்பணி தம் அறிவை விரிவுபடுத்திக் கொள்வதே.


ஒரு குருவி தன் அலகில் தண்ணீரை அள்ளியதைக் கண்ட கிள்று (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், “என் அறிவும், உங்கள் அறிவும், இன்னும் படைக்கப்பட்டவைகளின் மொத்த அறிவும் சேர்ந்தாலும், இக்குருவியின் வாயிலுள்ள தண்ணீரைவிட அதிகமானதல்ல” என்று கூறினார்கள். . (Sahih Al-Bukhari, Volume 6, Book 60, Number 251) எனில், நம் அறிவு எத்துணை அற்பமானது என்றுணர வேண்டும்.


இல்ம் என்பது முடிவில்லாதது. படித்துப் பெறுகின்ற பட்டம் தரும் அறிவு சொற்பமானதே. அதனைத் தேடி நம்மை மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவு விரிவடைந்தால்தான், ஆலிமாக்களின் நிலை சமூகத்தில் மெச்சத்தக்க வகையில் அமையும். அவர்களின் அறிவுரைகளும் செவிமடுத்துக் கேட்கப்படும். வழிகாட்டுதல்கள் மதிக்கப்படும். இன் ஷா அல்லாஹ்.


(திருபுவனம் அன்னை ஆயிஷா(ரலி) பெண்கள் மதரஸாவின் கட்டிடத் திறப்பு விழா சிறப்பு மலரில் வெளியானது)
read more "களப்பணியில் ஆலிமாக்கள்"

Tuesday, October 06, 2015

காவு வாங்கிய முக்காடு! சைக்கோ தனத்தின் வெளிப்பாடு

                        த்திர பிரதேஷத்தில் பரேலியில் சாப்பிடும் போது தலை முக்காடு நழுவியதை கவனிக்காததால் நான்கு வயது சிறுமி தன் தந்தையால் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக்  கண்டு அதிர்ந்தோம். ஆழ்ந்த அனுதாபங்களையும் வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறோம்.
  ஹிஜாப் என்பதே அவசியப்படாத இடத்தில், கட்டாயமாக்கபடாத வயதில்  அறியாமையும் வெறித்தனமும் நிறைந்த ஒரு மனித மிருகத்தால்  நிகழ்ந்த இச்சம்பவம் உண்மையில் வேதனைக்குரியது.    

                        ஹிஜாப் கோட்பாட்டில் இரு பகுதி உள்ளது. ஒன்று அகம் சார்ந்தது. பார்வை தாழ்த்துவது, தீய எண்ணங்களை தவிர்ப்பது, மானக்கேடான விஷயங்களை நாடாது இருப்பது இந்த பிரிவில் சேரும். மற்றொன்று புறம் சார்ந்தது. மொத்தமாக ஆடை சார்ந்த விஷயம். தளர்வான ஆடை அணிவது, தலையை மறைப்பது இதில் அடங்கும். அகமும் புறமும் சார்ந்த விஷயங்களின் சேர்க்கை தான் ஹிஜாப்.

                        சரி இந்த ஹிஜாப் எதற்கு ? எப்போது ? ஏன் பயன்படுத்த வேண்டுமென்பதை குர்ஆன் தெளிவாக விளக்கியுள்ளது. அந்நிய ஆண்களுக்கு அந்நிய பெண்ணின் உடலோ அழகோ மீது ஈர்ப்பும் ஆசையும் வந்துவிட கூடாது என்பதற்காகவும் தானும் பாதுகாக்கப்படவும் உதவுவது தான் ஹிஜாப்.  தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள்,  மாமனார்கள்,    தம் புதல்வர்கள் , தம் கணவர்களின் புதல்வர்கள்,   தம் சகோதரர்கள் ,   தம் சகோதரர்களின் புதல்வர்கள்,   தம் சகோதரிகளின் புதல்வர்கள்,   தங்கள் பெண்கள்,   தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,  ஆடவர்களில் தம்மை அண்டி வாழும்  பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் முன் ஹிஜாப் அணிய அவசியமில்லை. இதை குர்ஆன் தான் சொல்கிறது. ஆக வீட்டார் முன் ஹிஜாப் இல்லாமல் ஒரு பெண் இருப்பதற்கு தடையே யில்லை இஸ்லாத்தில்.   அந்நிய ஆண் முன் , தொழுகை  -இங்கே மட்டும்  ஹிஜாப் அவசியம்.

             இதை புரியாத மக்கள் , முக்காடு என்பதை தலையில் பெவிகால் போட்டு ஒட்டவேண்டிய ஆடை என்ற ரீதியில் கருதுகிறார்கள். பெண்களும் கூட கூடுதல் பேணுதலாக தூங்கும் போதும், உணவு உண்ணும் போதும், பாங்கு சொல்லும் போதும் , எந்த விஷயத்தை செய்யும் போதும் துணியினை தலையில் சுற்றிக்கொள்கிறார்கள். இந்த கூடுதல் பேணுதல் பின்னாளில் மார்க்கமாக பார்க்கப்பட்டது. சில வீடுகளில் தலையில் துணியில்லை என்றால் தெய்வகுத்தம் போல் 'தாம்தூம்' என்று குதிப்பார்கள். இவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுப்பாருங்கள்... குர் ஆனில் இப்படி செய்யச் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளதா என ஆதாரம் கேட்டுப்பாருங்கள்... ம்ஹூம்.. கிடைக்காது.  இப்படியாக அறியாமையில் முக்காடு என்பது வீட்டிலும்  தேவையேயில்லாமல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 

               உலகமே அறியாத 4 வயது சிறுமியை, ஹிஜாப் தேவைப்படாத அப்பாவியை , தானும் தன் மனைவியும் மட்டுமே இருக்கும் வீட்டில் சாப்பிடும் போது முக்காடு நழுவியதற்கு ஒருவன் கொலை செய்கிறான் எனில் ஒன்று இவன் எவ்வளவு சைக்கோவாக இருந்திருக்க வேண்டும் ?    அல்லது செய்தியை மிகைப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மார்க்கத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவன் என்றே அவன் மீது முடிவுக்கு வரவேண்டியுள்ளது. என்னவாக இருந்த போதும் இச்செயல் இஸ்லாத்துடன் சற்றும் சம்மந்தமில்லாதது. அல்லாஹ்வே கட்டளையிடாத விஷயங்களில் தன் அதிகாரத்தை செலுத்துவது அபாயகரமானது. இதனை எந்த இஸ்லாமியனும் ஏற்கமுடியாது. பெண் குழந்தையின் மகத்துவத்தை இஸ்லாம் மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளது.
யார் இரண்டு பெண் குழந்தைகளை பருவ வயதை அடையும் வரையில் பொறுப்பாக வளர்க்கின்றாரரோ அவர் நாளை மறுமையில் என்னுடன் இப்படி இருப்பார் என்று நபியவர்கள் தன்னுடைய கை விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள் - முஸ்லிம் 2631, திர்மிதி 1837, அஹ்மத் 12089
யாருக்கு மூன்று பெண் பிள்ளைகள் அல்லது மூன்று சகோதரிகள் அல்லது இரண்டு பெண் பிள்ளைகள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து அவர்களுடன் மிக நல்ல முறையில் நடப்பதுடன் அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கின்றாரோ அவருக்கு சுவர்க்கம் இருக்கின்றது - திர்மிதி 1835
  யார் இந்தப் பெண் குழந்தைகளால் ஓரளவுக்கேனும் சோதிக்கப்படுகின்றார்களளோ அவர்கள் அவருக்கும் நரகத்துக்குமிடையில் தடையாக இருப்பார்கள் - புகாரி 1352
(ஒரு நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
இவ்வாறாக இஸ்லாம் பெண் குழந்தைகளின் மகத்துவத்தை போற்றியுள்ளதையும் கவனத்தில் அனைவரும் கொள்ளவேண்டும்.

இது ஒரு புறம் இருக்க ,

                  மாட்டிறைச்சி வைத்திருந்ததால் ஹிந்துத்துவத்தீவிரவாதிகளால் அடித்தே கொல்லப்பட்டார் ஒரு பெரியவர். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே இந்தியாவின் மீது காரி உமிழ, அந்த அவமானம் தாங்க முடியாதவர்கள் இந்த சம்பவத்தை வைத்து "இஸ்லாமியர்களின் லட்சணத்தை பாரீர்"ன்னு கூவ ஆரம்பிச்சிருக்காங்க . ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தை கை நீட்டும் கதை தான் இது!

                     அறியாமையின் விளைவால் நடந்த இச்சம்பவத்தினை எதிர்த்து அம்மிருகத்திற்கு தண்டனை பெற்றுதருவதை நோக்கமாக கொள்ளாமல் இதனை வேறுவித அரசியல்க்கு ஆட்படுத்த முயல்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ இதுதான் சந்தர்ப்பமென்று இஸ்லாத்தை தூற்றி வருகிறார்கள். சமூக ஆர்வலர் என்ற போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டுள்ள , பலமுறை முகத்திரை கிழிக்கப்பட்ட ஒரு நபர் முகநூலில் இந்த சம்பவத்தினை இவ்வாறாக தொடர்பு படுத்துகிறார் " மாட்டுக்கறி போராட்டம் நடத்தியவர்கள் இந்த சிறுமிக்காக முக்காடு போராட்டம் நடத்துவார்களா ?" . சகோதரர் மாட்டுக்கறி தின்னும் போராட்டத்தால் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் ஒட்டுமொத்தமாக இந்தியர்களை போராட்டத்திற்கு கூப்பிடாமல் தானும் அது பற்றி சிந்திக்காமல் மாட்டுக்கறி போராட்டம் நடத்தியவர்களை போராட்டம் செய்ய அழைக்கிறார். ஏன் சார் ? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

                      முட்டாள்தனங்களுக்கெல்லாம் இஸ்லாமியர்கள் எப்போதும் துணைப் போவதில்லை. அந்த மிருகத்தை தண்டிப்பதிலும் எதிர்ப்பதிலும் முதல் குரல் எங்கள் குரலாகவே தான் இருக்கும். நடுநிலையை எங்களுக்கு கற்பிக்காதீர்கள்... அது ஏற்கனவே எங்களுக்கு குர்ஆன் மூலம் கடமையாக்கப்பட்டுள்ளது.

                          பெண் சிசு என்றால் அது கேவலமாக நடத்தும் நிலை இஸ்லாத்தில் இல்லை. ஏனென்றால் பெண்சிசுகொலையை 1400 வருடங்களுக்கு முன்பே தடை செய்த மார்க்கம் இஸ்லாம்.  கள்ளிப்பால் கொடுத்தும் நெற்பயிர் கொடுத்தும் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டு வந்த நிலை இன்றும் சில இடங்களில் தொடரவே செய்கிறது. அதனை சமூக அவலமாகவே தான் பார்க்கிறோமே அன்றி  மதத்தின் கோட்பாடாக பார்க்கவில்லை.  அதையே  முஸ்லிம்  பெயர் தாங்கிவிட்ட காரணத்தால்  ஒரு கொடூரன் செய்தால் அதனை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்துவதா? 

                  முஸ்லிம்களிடத்தில் மட்டுமா இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன? சமீபத்தில் பெற்ற பிள்ளையையே கொன்ற இந்தியவாழ் வெளிநாட்டு பெண் செய்தி அதிகமாக பரபரப்பாக பேசப்பட்டது. பிலிப்பைன்ஸில் ஒரு பெண் நாயைப்போல் தன் மகனை கயிற்றில் கட்டி நாய் உண்ணும் உணவை உண்ண வைத்து பேஸ்புக்கில் படம் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.  குடிகார தந்தையால் கொலை செய்யப்பட்டும் கற்பழிக்கபடும் சிறுமிகள் பற்றிய செய்திகள் வாரத்தில் ஒருமுறையேனும் வாசிக்க முடியவில்லை என்றால் ஆச்சர்யம் என்ற நிலையில் தான் இன்று நிலைமை இருக்கிறது. ஆருஷி கொலை வழக்கும் அறிவோம்,   இந்திராணி தன் மகளை கொலை செய்து மறைத்த விஷயமும் இப்போது பரபரப்பாய் பேசப்படுகிறது. இப்படி எத்தனையோ முஸ்லிம்களால் செய்யப்படாத குற்றங்களை பட்டியலிடலாம். ஆனால் அப்போதெல்லாம் பொங்காதவர்கள் முஸ்லிம் என்றதும் குற்றவாளியை விட்டுவிட்டு இஸ்லாத்தை குறை கூறிவருகிறார்கள்.   நான் விதிக்கும் கட்டுபாடுகளுக்கு மட்டுமே தான் நான் பொறுப்பாக முடியும். இல்லையா?

                           குழந்தைகளுக்கு எதிரான ஒவ்வொரு சம்பவமும் துரதிஷ்ட்டமே! ஆனால் இதற்கு ஓர் சமூகத்தின் கோட்பாட்டை பொறுப்பாக்க முயல்வது அறிவுடைமையாகாது. நடுநிலை பேணுவோம் மக்களே!! ஒவ்வொரு பெண்ணும் பாதுகாக்கப்படவேண்டியவளே.. அதற்கு எதிராக இருக்கும் எந்த ஒரு  செயலையும் ஒருமித்த குரலில் எதிர்ப்போம்.. தடுப்போம்.


உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
read more "காவு வாங்கிய முக்காடு! சைக்கோ தனத்தின் வெளிப்பாடு"

Thursday, October 01, 2015

போராட்டங்களைக் கடந்து வந்த போர்க்கள நாயகி - தவக்குல் கர்மான்

தவக்குல் கர்மான்- யார் இவர் ?


நோபல் பரிசு பெரிசு பெற்ற முதல் அரேபிய பெண்மணி எப்படி போர்க்கள நாயகி ஆனார் ?  இவர் பற்றிய சுவாரஸ்யங்கள் ஏராளம் உண்டு. தவக்குல் பிறந்தது ஏமன் நாட்டில். 2011 ல்  'அலி அப்துல்லா சாலே' அரசுக்கு  எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்து எதிர்த்ததும் அதனைத் தொடர்ந்து அவர் சிறை சென்றும் கூட விடுதலையான அடுத்த நாளே மீண்டும் பெரும் போராட்டத்தை நிகழ்த்தியதும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று இருக்கும் இந்த இடத்திற்கு அவர் அத்தனை எளிதில் வந்துவிடவில்லை என்பதைக் காணும்போது நம் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.


இஸ்லாமிய நாட்டில் பெண்கள் வீதிக்கு வந்து போராடியது ஏன்? இதற்கான விடை தெரிய வேண்டுமானால் ஏமனின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் பரவிக்கிடக்கும் நாடு தான் ஏமன். வடக்கே சவுதி அரேபியா கிழக்கில் ஓமான். 19 நூற்றாண்டின் ஏமனின் ’சனா’வைத்  தலைநகரமாகக் கொண்டு துருக்கிய  ஒட்டமான்கள் ஆட்சி செய்தனர். ஏமன் ஒரே நாடாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வடக்கு ஏமன் தனியானதாகவும் பிரிடிஷ் காலனியாகத் தெற்கு ஏமன் தனியானதாகவும் கருதப்பட்டன.

1962 ம் ஆண்டில் ஒரு கிளர்ச்சியில் மன்னராட்சி முடிவுக்கு வந்து வடக்கு ஏமன் அரபுக் குடியரசு என்றும் 1967 ம் ஆண்டில் தெற்கு ஏமன் பிரிட்டிஷ் பிடியில் இருந்து விடுபட்டு ஏமன் மக்கள் ஜனநாயக கட்சியும் மலர்ந்தது. இப்போது  நம்ம பெரிய அணணன் அதாங்க அமெரிக்கா சவுதியோடு சேர்ந்து கொள்ள,மத்திய கிழக்கில் அமைந்த ஒரே கமியூனிச நாடான தெற்கு ஏமனை யாரு ஆதரிச்சிருப்பா? வேறு யாரு ரஷ்யா தான். அய்யோ பாவம் ரஷ்யாவும் சிதறிப்போன பின் தெற்கு ஏமன் நிலை குலைந்துப்போனது .  


ஆனால் வட தென் ஏமனின் எல்லைப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது.சும்மா இருப்பாரா பெரிய அண்ணன்?? சரி சரி நீங்க இனி சண்டை அடிச்சுக்க வேண்டாம் ஒன்றாக இருந்துக்கங்க என்று ரெண்டு பேரையும் பழம் விட வைத்து 1990 ஆம் ஆண்டு ஏமன் ஒரே நாடானது .  ஒருகிணைந்த ஏமனுக்கு கர்னல் அலி அப்துல்லாஹ் சாலே அதிபராகப் பொறுப்பேற்றார்.வட ஏமன் ஷியா பிரிவு தென் ஏமன் சன்னி பிரிவு. எண்ணையும் தண்ணீரும் கலக்குமா?

தெற்கு ஏமன் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொருளாதார நெருக்கடி வறுமை உணவுத் தட்டுப்பாடு என்று மக்கள் அல்லல் பட்டு வேறு வழியில்லாமல் போராட ஆரம்பித்தார்கள். 2004 ஆம் ஆண்டு ஹூசைன் அல் ஹூத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து சாலே அரசை எதிர்த்தார்.  ஆதலால் அவர்  கொல்லப்பட்டார். ஆனால் அவரது இயக்கம் அரசுக்கு எதிராய் வலுத்தது . 

தவக்குலின் தந்தை அப்தெல் சலாம் ஒரு வழக்கறிஞர். சாலே வின் கட்சியின் சட்ட அமைச்சராக இருந்தாலும் அதை வெறுத்தார். இவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக்  கொடுத்தார். தந்தையின் ஊக்கத்தோடு வளர்ந்த தவக்குல் இள நிலை வணிகவியல் முதுநிலை பொலிட்டிக்கல் சயின்ஸும் படித்தார். இதன் நடுவே முஹம்மது அல் நஹ்மியை சில நிபந்தனைகளை முன் வைத்தே திருமணத்தை ஏற்றுக்கொண்டார். 

அவை:
* திருமணத்திற்குப் பின் என் படிப்பை நிறுத்தக்கூடாது.
* பர்தா அணிவதால்  முடங்கிப் போக மாட்டேன்.
* இந்த சமூகத்துக்காகவும்  பெண்களுக்காகவும் களம் இறங்கிப் போராடுவேன்.


கர்மானின்  நிபந்தனைகளை நஹ்மியும் ஏற்றுக்கொண்டு அவருக்கு பக்கபலமாய்  உதவினார். சாலேவின் சர்வதிகார ஆட்சிக்கு எதிராக  இவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் "பேனா''. சக பெண்கள் ஏழு பேருடன் சேர்ந்து "சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’( women journalists without chains) பத்திரிகைச் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பை நிறுவி அதன் மூலம் அநீதிக்கு எதிராய் களமாடினார் கர்மான் .


முகத்திரை அணிவது பாரம்பரிய வழக்கமே தவிர அதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்று துணிந்து கூறினார்.  தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து இந்த சமூகத்தை எதிர்கொண்டார். யாரும் பேசத்தயங்குவதையும் யாரும் செய்யாததையும் புதிதாய் செய்யும் போது இந்த சமூகம் எப்படி பார்க்குமோ அப்படிதான் கர்மானை பார்த்தது. பைத்தியக்காரி பெண்ணே அல்ல பேய், தண்டிக்கப்பட வேண்டியவள் என்றும் பல வசை மொழிகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.  துனிசீயாவில் ஏற்பட்ட ஜாஸ்மின் புரட்சியும் 30 ஆண்டுகளாக எகிப்தை ஆண்ட ஹொஸ்னி முபாரக் இளைஞர் புரட்சியால் தூக்கி எறியப்பட்டார்.

இவை அனைத்தையும் அப்படியே ஏமன் மக்களிடம் முன்வைத்தார் தவக்குல். 2011 ஆம் ஆண்டு அரேபிய வசந்தம் என்னும் ஏமன் மக்கள் புரட்சி ஆரம்பமானது.

ஆயுதப்போராட்டங்கள் என்றைக்கும் தீர்வைத் தரப்போவதில்லை காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா இவர்களின் அகிம்சையே நம் ஆயுதம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் தவக்குல்.மார்ச் மாதம் இவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 13 பேர் இன்னொரு போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.  அழுகையை விழுங்கி எஞ்சியுள்ளோரை மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் போராட்ட சதுக்கத்துக்கு வருகிறார் இந்த போர்க்களப் பூ. எத்தனை பேரைக் கொன்றாலும் போராட்டம் ஓயாது என்கிறார். 

2012 பிப்ரவரி மாதத்தில் 34 ஆண்டுகள் ஆண்டு அனுபவித்த அதிபர் பதவியை சாலே துறந்தார்.அதுவரை துணை அதிபராக இருந்த மன்சூர் ஹாதி ஏமனின் புதிய அதிபரானார். உள்நாட்டு குழப்பம், ஐ.எஸ் அமைப்பின் மிரட்டல், மனித வெடிகுண்டு தாக்குதல், மறுபடியும் ஹூத்தி கிளர்ச்சிப் படைகள் தலை நகர் சனாவை கைப்பற்றியதாக அறிவிக்க, அதிபர் ஹாதி சவுதிக்குத் தப்பிச்சென்றார்.இப்போது சவுதி விமானங்கள் குண்டு மழைப்பொழிய ஏமனின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. 

அகிம்சை வழியில் ஏமனின் வரலாற்றில் பெரும்பங்கற்றிய கர்மான், 2011ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காகப் பெற்றார். இதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் அரேபிய பெண்  மற்றும்  2ம் முஸ்லிம் பெண் என்ற பெருமையும் பெற்றார். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். சமீபத்தில் தான் இந்த இடம் வேறொரு பெண்ணால் நிரப்பப்பட்டது.  


சகோதரி கர்மான்  பேச்சுத்திறன் மிக்கவரும் கூட. ஒருமுறை அவர் அணிந்திருக்கும் ஹிஜாப்  பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித்தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்: 'பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.' என்றார் நெத்தியடியாக. ஏமன் நாட்டு மக்களால் இரும்பு பெண்மணி என்றும் புரட்சித்தாய் என்றும் புகழப்படுகிறார் கர்மான். 

அச்சுறுத்தல்கள் பல பக்கங்களில் இருந்து வந்தாலும் தன் கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்து கொண்டிருக்கிறார் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய். "வரலாற்றை திருப்பிப் பாருங்கள் மக்கள் புரட்சிக்குப் பிறகு உடனே எங்குமே ஜனநாயகம் மலர்ந்து விடுவதில்லை. அதற்குக் காலம் கொஞ்சம் எடுக்கும்.  ஏமனில் ஒரு நாள் ஜனநாயகம் மலரும்" என்று நம்புகிறார் இந்த போர்க்கள நாயகி. இன்ஷா அல்லாஹ் 

உங்கள் சகோதரி 
சபிதா காதர்

நன்றி:
விகடன், 
தி ஹிந்து,
 விக்கிப்பீடியா
read more "போராட்டங்களைக் கடந்து வந்த போர்க்கள நாயகி - தவக்குல் கர்மான்"