Monday, September 07, 2015

சிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க! ( அரசியலும் பெண்களும் )


ணுக்குப் பெண் சமமென்பவர்களுக்கு ஒரு கேள்வி:

       அரசியலுக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை முஸ்லிம் பெண்களிடம் மட்டுமல்ல! அனைத்து சமுதாயப் பெண்களிடமும் பெரும்பாலும் காணப்படுகிறது. ஆண்களுக்கீடான உரிமைகள் வேண்டி போராட்டங்கள் நடத்தும் பெண்களில் எத்தனை பேர், பெண்களுக்கென ஒதுக்கவிருக்கும் 33% சதவீத இடங்களை நிரப்ப தயாராக இருக்கின்றனர்?? எத்தனை பெண்கள் அரசியல் என்ற துறையில் காலூன்றி மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கின்றனர்? 

       கணிணி, மருத்துவம், அறிவியல், விண்வெளி என்று பல துறைகளில் சாதிக்கும் பெண்கள் கூட அரசியலைக் கண்டால் ஒதுங்கும் நிலையே இன்று இருக்கிறது. கிராமப்புறங்களில் கூட பெண்கள் சிறு சிறு பதவிகள் வகிக்கின்றனர். ஆனால் நகரங்களில் வாழும் படித்த மேல்தட்டு பெண்கள், கை நிறைய சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வெளிநாடுகளை நாடிப் பயணிக்கும் பரிதாப நிலையினைக் காண்கிறோம். இதற்கெல்லாம் என்ன காரணம்?

       பெண்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. இந்நிலைக்குச் சில ஆண்களும் அவர்களது பிற்போக்குவாத எண்ணங்களும் முக்கிய காரணமாகும். ஆண்களாகிய நாங்கள் நாட்டை ஆள்கிறோம். நீங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று முற்காலங்களில் ஒதுக்கியதன் விளைவே வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம்நாடு எப்படி போனால்  எனக்கென்ன என்ற  எண்ணம் நம் மனங்களில் ஆழப்பதிந்து விட்டது. நாட்டைக் குறித்துக் கவலைகொள்வதோ அக்கறை கொள்வதோ நமக்கு அவசியமற்றது என்று நினைக்கும் கோழைகளாக மாறிவிட்டோம்.

       “ஒரு பெண்ணின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கும் எந்த சமுதாயமும் முன்னேறாது” என்ற ஹதீஸைக் காட்டுவதும் ஒரு காரணமாகும். சமூக நலனில் அக்கறை உள்ள அனைவருமே தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கேனும் நிகழ்த்தப்படும் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுப்பவர்கள், அதே பெண்களுக்கு அவர்கள் அமைப்புகளில் ஒரு தொண்டர் பதவி கூட மனமுவந்து வழங்க முன்வருவதில்லை. ஹிஜாப் பேணிக்கொண்டு சமூகப்பணிகளில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நமது இயக்கங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். 

       பெண்ணும் இந்நாட்டின் குடிமகள் தான்ஒரு நாட்டின் உயர்வு தாழ்வுகளில் வெற்றி தோல்விகளில் பெண்களுக்கும் சம பங்குண்டு. இந்தியச் சட்டங்கள் அதன் குடிமக்களான ஆண், பெண் இருவருக்கும் சேர்த்தே வகுக்கப்படும்போது, அச்சட்ட இயக்கங்களில் பெண்கள் பங்கில்லையெனில் அவை பெண்களின் தேவைகளை ஒருபோதும் நிறைவேற்றிவிட முடியாது. பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறதோ, அப்பாதுகாப்பைச் சாத்தியமாக்குவதிலும் பெண்களின் பங்கு அவசியம்.

       பெண்களுக்கு எத்தனையோ திறமைகள் வாய்த்திருக்கலாம். பேச்சு, எழுத்து, அறிவு, சாதுர்யம், என்று பெண்கள் இன்று நுழைந்து வெற்றியை நிலைநாட்டாத துறைகளே இல்லை. ஆனால், இத்துறைகளில் பெண்களின் பங்கு தொடர்ந்து நிலைபெற வேண்டுமெனில் அதற்கு நாடாளும் ஆட்சியாளர்களின் உதவி நிச்சயம் தேவை. அவர்களது உழைப்பிற்கான ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்க ஆட்சியாளர்களின் குறுக்கீடு அவசியம் என்பதில் மறுப்பில்லை. பெண்களின் புற அழகிற்கு முக்கியத்துவம் தருபவர்களை ஒதுக்கிவிட்டு, அறிவுக்கும் ஆற்றலுக்கும் வாய்ப்புகள் தருபவர்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.   

 பெண்களுக்குச் சமூகத்தில் எண்ணிலடங்கா பிரச்சனைகள் உள்ளன.சமுதாய  நலச்சிந்தனை கொண்ட பெண்களாக  நாம் இருக்க வேண்டும்நலிவுற்ற  பெண்களின் முனங்கல்கள் நம் காதுகளில் கேட்க வேண்டும். அவர்களின் வலியிலும் வேதனையிலும் பங்கு பெறுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்வழி காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.


 ஆஃப்கன் பெண் அரசியல்வாதிகள், ஹிலாரி க்ளிண்டனுடன்
       பிற்படுத்தப்பட்ட பெண்களையும், ஒடுக்கப்பட் சமுதாயத்தையும் வைத்துதான் ஆட்சியாளர்கள் சட்டதிட்டங்கள் வகுக்கின்றனர். உதாரணங்கள் சில:
·         கல்வித்திட்டம்.
·         மருத்துவத்திட்டம்,,
·         திருமணத்திட்டம்
·          மகப்பேறுதிட்டம்,
·         மகளிர் முன்னேற்ற திட்டம்,
·         கருத்தடைதிட்டம்

       ஆனால் என்ன விந்தை எனில், இத்திட்டங்களின் பலன்கள் ஏதும் உரியவர்களைச் சென்றடைவதில்லைநலத்தைப்பற்றியும், வளத்தைப் பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.

       பெண்களே! கொஞ்சம் வெளியில் வந்து பாருங்கள். நலன் என்றால் என்னவளம் என்றால் என்ன? என்று தெரியாத மக்கள் ஏராளமாக உள்ளனர்உங்கள் கண்களுக்கு சுரண்டலும், பதுக்கலும், லஞ்சமும் ,ஊழலும் தலை விரித்தாடும் அரசியல்தான் தெரிகிறதுசீரிய சிந்தனையுடனும்சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் தீமைகளையும் களைய பெண்களாகிய நாம் விழுமம் சார்ந்த அரசியலில் நம்மை இணைத்துக் கொண்டு சாதி,சமய வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பணி செய்ய முன்வர வேண்டும்.

       மருத்துவம் பார்க்க பெண்  மருத்துவரிடம் போகிறோம்
வக்கீலைச் சந்திக்க வேண்டுமானால், பெண் வக்கிலை சந்திக்கிறோம்;
காவல்துறையிலும் மகளிர் காவல்துறையினரை அணுகுகின்றோம்;
ஆனால் அரசியல் என்றால் மட்டும் பெண்கள் பின் தங்கி இருக்கும் நிலை மாற வேண்டும்பெண்களின் துயரை  பெண்கள் தான் தீர்க்க முடியும்.

       வீட்டு வேலை மட்டும் தான் பெண்களின் கடமை என்று ஆயிஷா (ரழி) அவர்கள் நினைத்திருந்தால் இத்தனை ஹதீஸ்கள் நமக்குக் கிடைத்திருக்குமா? 

        ஒரு சாதாரண பெண்மணி உலகம் முழுவதும் "மதர் தெரஸாஎன அறிமுகமானது எப்படிமக்கள் பணி செய்ததால் தானே.

       நாம் அரசியல் என்பதைப் உலகின் அனைத்து தீங்குகள் நிறைந்ததாகவே காண்கிறோம். அங்கு சாமானியர்களுக்கு மதிப்பிருக்காது என்றும் புரிந்துவைத்திருக்கிறோம். கால தாமதத்தில் மறு உருவமாகவே நம் இந்திய அரசியலை நினைக்கின்றோம். பண முதலைகள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக நினைத்து அஞ்சுகிறோம். 

       ஆனால் அரசியல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விரும்பவும் செய்கிறோம்:-

அரசியல் என்றால்,
மக்களுக்காக பணி செய்வது,
மக்கள் நலம் நாடுவது,
மக்களின் துயரம் களைவது,
மக்களுக்கு உதவி செய்வது,
மக்களோடு வாழ்வது.

       ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று நாம் நினைத்தோமானால், நாட்டின் மீது அக்கறை இல்லாத, மக்கள் சேவையில் மகேசன் சேவையை அனுபவிக்கத் தெரியாத, சுயநலவாதிகள், பொருள்,புகழாசை உள்ளவர்கள், இன, மதவெறியர்கள், பெண் சக்தியைக் கண்ணியப்படுத்தாதவர்கள் தாம் நாடாள்வர். இப்படியானவர்களின் நோக்கமானது, கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பைத் தமக்கும் தாம் சார்ந்த கட்சிக்கும் இயக்கத்திற்கும் ஆதாயம் தேடிக்கொள்ளவே பயன்படுத்துவது மட்டுமே.

       அரசியலில் பெண்களின் சேவை மிகவும் தேவை என்ற காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்ஒழுக்கமுள்ள, நல்ல சிந்தனை உள்ளவர்களும், நாட்டு நலனில் அக்கறை உள்ள நல்ல பெண்களும் களத்தில் இறங்க வேணடும். களைகளைக் களைய வேண்டும். முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டை முன்னேறிய நாடாக்க நம்மால் இயலும். நாம் மற்றவர்கள் போல் அல்லஈமானும் இறையச்சமும் கொண்டவர்கள்.

       சமூகப்பணிகளில் பெண்கள் பங்கு என்பது ஓட்டுப் போடுவதும் ஊர்வலங்களில் கோஷம் எழுப்பவதும் தான் என்றிருக்கும் சூழலை மாற்றிட பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் உறுதுணை புரிய வேண்டும்.

"சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் "

ஆக்கம் : 

ஜரினா ஜமால்
வெல்வேர் பார்ட்டி ஆப் இந்தியா
மாநில மகளிரணி தலைவி.

2 comments:

 1. //“ஒரு பெண்ணின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கும் எந்த சமுதாயமும் முன்னேறாது” என்ற ஹதீஸைக் காட்டுவதும்//

  குர் ஆனில் பல்கீஸ் ராணியின் ஆட்சியை நல்லவிதமாகவே இறைவன் அறிமுகப்படுத்துகின்றான். பெண் ஆட்சி செய்வதா என்ற கண்டனம் செய்யவில்லை இறைவன்.

  ReplyDelete
 2. பெண் குழந்தைகளை வளர்க்கும்போதே, அவர்களின் கடமை கணவனுக்குப் பணிவிடை செய்வதும், குழந்தைகளை வளர்ப்பது #மட்டுமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வளர்க்கப்படுகிறார்கள். அதற்கேற்ப, பெண்குழந்தைகளையும், பெண்களையும் அலங்காரத்தில் அதிக நாட்டம் கொள்ளுமாறான சூழலில்தான் வளர்க்கப்படுகிறார்கள். மேக்கப், நகை, உடைகளில் கவனம் செலுத்தப்பட்டு வளரும் பெண் பின்னாளில் உலக விவகாரத்தில் எப்படி நாட்டம் கொள்வாள்?

  சிறு வயதிலேயே உலக விவகாரங்கள், அரசியல், சமூகப் பிரச்னைகள் என்று கவனம் செலுத்தச் செய்தால், அரசியலிலும் ஆர்வம் தன்னால் வரும்.

  மிகச் சிறப்பான கட்டுரை. ஜஸாக்கல்லாஹ் கைர் ஜரீனாக்கா.

  ReplyDelete