Monday, September 21, 2015

தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா


            பெரிதும் வளர்ச்சியடையாத நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைபட்ட ஓர் ஊர்... அங்கே கிட்டதட்ட 70 ஆண்டு பழமைவாய்ந்த பாழடைந்த ஓர் அரசுப் பள்ளி கட்டிடம்.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் படிக்க வரும் குழந்தைகள்... இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் ? " சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்" என தோணுமா தோணாதா? அதுவும் நீங்கள் ஒரு பெண் என்றால் ????

               ஆனால் இவை எதுவும் அந்த பெண்மணியை சாய்த்துவிடவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தார். 2004ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டவர் இரண்டே வருடங்களில் பாழடைந்த கட்டிடத்தின் நிலையை மாற்றிக்காட்டினார். ஆங்கிலவழிக் கல்வியின் மோகத்தாலும், அரசு பள்ளிகளின் மீதான அதிருப்தியாலும் அனைவரும் தனியார் பள்ளிகளை நோக்கி பணங்களை வாரியிறைத்து தன் குழந்தைகளை சேர்த்துக்கொண்டிருக்க, அரசு பள்ளியிலும் தரமான ஆங்கிலவழிக்கல்வியை போதித்துக் கொடுக்க முடியுமென்று செயல்வழி நிறுவினார். அவர் தான் நம் சாதனைப் பெண்மணி சகோதரி ஜெலீலா பீவி

               அமைச்சர் கையால் விருது வாங்கிய கையோடு சகோதரியை தொடர்புகொண்டு இஸ்லாமியப் பெண்மணி தளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். உற்சாகம் பொங்க நம்முடன் அவருடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். "நான் இந்த ஸ்கூல்க்கு வரும் போது பழைய கட்டிடமா இருந்தது. இரண்டு முறை சுற்றுச்சுவர் இடிந்தது. நல்லவேளையாக மாணவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. இப்படியான கட்டமைப்பில் இருந்தால் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கிதானே படையெடுப்பார்கள்? எப்படியேனும் கட்டடத்தை சீர் செய்வது என முடிவெடுத்தேன். கவுன்சிலர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் முறையிட்ட அதே வேளையில் தக்கலைவாழ் மக்களிடமும் உதவி கோரி நின்றேன். பலர் தாராளமாக கொடுத்துதவினார்கள். அரசு உதவியோடும், ஊர் மக்களின் உதவியோடும் எங்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து புது கட்டிடத்தை உருவாக்கினோம்" என்றார்.
 
பழைய பள்ளிக்கூடம்
             கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கட்டிடத்தை எழுப்பியதுடன் சகோதரியின் பணிகள் ஓய்ந்துவிடவில்லை. பள்ளிக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் உங்களை வந்தடையும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சுகாதாரமான கழிப்பறையும் போக மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி கழிப்பறை வசதியும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த தக்கலை அளவிலான சதுரங்கப் போட்டியில் தனியார் பள்ளிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் பள்ளி மாணவ மாணவிகள் முதல் மற்றும் இரண்டாமிடம் பிரித்தனர். இப்போது பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எப்படி இவை சாத்தியமானது என கேள்வியை முன்வைத்தோம். "கட்டடம் கட்டப்பட்ட பின் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு ஊரின் ஒவ்வோர் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டேன், என் பள்ளி ஆசிரியர்களும் உதவினார்கள். ஆங்கில வழிக் கல்வி பயில வைப்பதற்காகத் தான் மற்ற பள்ளிகளுக்கு அனுப்புகிறீர்கள் எனில் அதே கல்வியை நம் அரசுப் பள்ளி வாயிலாக கொடுக்க உறுதியளிப்பதாகச் சொன்னேன். என் உறுதிமொழி ஏற்று பலர் தம் பிள்ளைகளை சேர்த்தனர். தனியாக எல்.ஜே.ஜி, யூ கே ஜி செக்சன் ஆரம்பித்து தனி ஆசிரியர்கள் நியமித்து கற்பிக்க வைத்தேன். கணினிக் கல்வியும் ஏற்படுத்திக் கொடுத்தோம். தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பை உருவாக்கியதால் பெற்றோர்களும் உற்சாகத்துடன் எம் பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர்" என்றார்.
 
இன்றைய பள்ளிக்கூடம்
                  இவ்வளவும் அரசு பள்ளியில் எப்படி செய்ய முடிந்தது ? அரசு எப்படி
நிதி ஒதுக்குகிறது ? அரசிடம் மட்டும் முறையிட்டுக்கொண்டிருந்தால் நம் இலக்கை எட்ட முடியாது என்பதனை சகோதரி ஜெலீலா உணர்ந்தார். தக்கலை மக்களிடம் நேரடியாக பொருளுதவி கேட்டார். ஊர் செல்வந்தர்கள் அரசு பள்ளிக்காக நிதியுதவி செய்தனர். அதன் மூலம் பல வசதிகளை பள்ளியில் தோற்றுவித்தார். இதன் மூலம் தனியாக நிறுவப்பட்ட நர்சரி வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடிகிறது. ததஜ இலவசமாக கணினிகளை வழங்கியது. இதன் மூலம் கணினி வகுப்புகள் தொடங்க முடிந்தது. அதிக புரவலர்களை இணைத்ததற்காக ஆட்சியர் கையால் பாராட்டும் விருதும் சகோதரிக்கு கிடைத்துள்ளது.

                
நல்லாசிரியர் விருது பெற்றபோது(2015)
            தனது 31 ஆண்டு கால ஆசிரியைப் பணியினை மிக மிக நேசித்து செய்ததினால் மற்றவர்களை விடவும் தனித்து நிற்கிறார் சகோதரி ஜெலீலா. தன் பெண் குழந்தைகளையும் ஆண்குழந்தைகளுக்கு நிகராக படிக்க வைத்து அவரவர் துறைகளில் ஜொலிக்கச் செய்துள்ளார். "ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கடமைகளுக்கும் அப்பால் சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் நமக்கான கடமைகளை தகுதியான நபர்கள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். அந்த  வகையில் என் கடமைகளையெல்லாம் என் கணவர் பீர்கண்ணு மைதீன் பங்குபோட்டுக்கொண்டதால் என்னால்  நேரமொதுக்கி என் பள்ளியின் வளர்ச்ச்சிக்காக பாடுபட முடிந்தது.  ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை அனுப்ப குடும்பத்தார் விரும்புவத்தே நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவார்கள், வாரத்தில் இருநாளும்,  தேர்வு விடுமுறைகளும் இருப்பதால் தான். ஆனால் அத்தகைய விடுமுறை நாட்களை என் பணிகள் ஆக்ரமித்த போதும், இரவு காலம் தாழ்த்தி வீடு வந்தாலும் பொறுமை காத்து என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார் அவர். ஒருவேளை என் கணவர் ஆதரவு இல்லை எனில் என்னால் இவ்வாறு சாதித்திருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை" என்றவர் பள்ளி விட்டு வந்ததும் நேராக தன் கணவரின் கடைக்கு சென்று அவருக்கு உதவியும் வருவதை குறிப்பிட்டார். இருவரும்  அவரவர் பணிகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அருமையான ஜோடியல்லவா...

              தங்கள் ஊருக்கு கிடைத்த பொக்கிஷமாகவே தக்கலை மக்கள் சகோதரி ஜெலீலாவைக் கொண்டாடுகிறார்கள். அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட போது தக்கலை வாழ் மக்கள் பலர் தம் பேஸ்புக்கில் பதிவிட்டு சகோதரியின் சாதனைகளை நினைவுக்கூர்ந்தார்கள். பின்னே... சாதாரண பெண்மணியா இவர் ? தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு அதிலும் வென்ற சாதனைப் பெண்மணி அல்லவா...

            இன்று அலைபேசியில்  உரையாடிக்கொண்டிருக்கும் போது  இன்றைய நாள் வந்த அறிவிப்பை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். கன்னியாகுமரி கல்வி மாவட்டத்தில் சிறந்த  பள்ளிக்கூடமாக  தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளியை தமிழக அரசு  தேர்ந்தெடுத்துள்ளது. விரைவில் அதற்கான கேடயமும், பரிசுதொகையும் பெறவிருக்கிறார்  நாம் சாதனைப் பெண்மணி. தொடர் சாதனைகளுக்கு  வாழ்த்துக்கள்  சகோதரி ஜெலீலா


                  உங்கள் துஆவில் சகோதரியை இணைத்துக்கொள்ளுங்கள். இன்னுமின்னும் பல சாதனைகள் புரிந்து சமுதாய மக்களுக்கு பயன்படும்படி அல்லாஹ் செய்வானாக ஆமீன்.
-----

ஆக்கம் மற்றும் பேட்டி : ஆமினா முஹம்மத்

நன்றி :

அறிமுக உதவி : Mohamed Rameem , Barveen banu anas
தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புக்கொள்ள உதவி : சகோ தக்கலை ஆட்டோ கபீர்
சாதனைப் பெண்மணி புகைப்படம் : சகோ நாகூர் மீரான்

4 comments:

 1. ஒன்றுக்கும் உதாவாதவர்களாக பெண்களை படம்போட்டு காட்டும் மனிதவர்க்கத்திற்க்கு சகோதரி ஜலிலா ஓர் எடுத்து.காட்டு.
  " பிச்சை புகினும் கற்கை நன்றே " என்ற கொன்றை வேந்தன் பாடல் நினைவிற்கு வருகிறது.

  சமுதாய உயர்வில் நல்லெண்ணம் கொண்டோர்களால் மட்டுமே இப்படி நடக்க முடியும்
  குடத்திலிட்ட விளக்காக அடையாளம் காட்டப்படாத எத்தனை ஜலிலாக்களோ நம் சமுதாயத்தில்.

  வைரங்களாய் ஜொலிக்கும் இவர்களை வெளிஉலகிற்கு காட்டிக்கொடுக்கும் ஆமினாவிற்க்கு மனமார்ந்தத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. wonderful post about a great woman. masha allah May Allah save sister Jazeela for the welfare of the society

  ReplyDelete
 3. அல்ஹம்துலில்லாஹ்!

  அழிவின் விளிம்பில் நின்ற ஒரு கல்விசாலைக்கு ஒரு தலைமை ஆசிரியராக சகோதரி அவர்கள் பல கடினமான முயற்ச்சிகள் மூலம் உயிரூட்டி இருக்கின்றார்கள். அவர்களின் முயற்ச்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.

  அரசு பள்ளியில என பலரும் அதிருப்தி தெரிவித்தாலும் எனது இரண்டு குழந்தைகளும் அங்கு தான் பயிலுகிறார்கள். அரசு பள்ளி என அலட்சியம் செய்யாமல் மக்கள் ஆர்வத்தோடு குழந்தைகளை சேர்ப்பார்கள் எனில் அந்த பள்ளி இறைவன் நாடினால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் தலைசிறந்த ஆரம்ப பள்ளியாக மிளிரும் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்! அதற்காக பிரார்தனை செய்வோம்!!

  ReplyDelete
 4. நானும் இந்தப் பள்ளியில்தான் படித்தேன். முதல் 4 வருடங்கள். அன்று இது அழகிய பள்ளியாக இருந்தது. இன்றைய ஆங்கில மோகம் அன்று இந்த அளவுக்கு இல்லை.

  //இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் ? " சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்" என தோணுமா தோணாதா?// அந்த அளவுக்கு பின்தங்கிய ஊர் அல்ல அது.

  மேலும் இந்த தலைமை ஆசிரியை என் வீட்டிருக்கு அருகாமையில்தான் குடியிருக்கிறார். ஒரு முறை ததஜ சார்பில் சில கணிப்பொறிகள் இந்த பள்ளிக்கு வழங்குவதாக இருந்ததாக நினைவு. அது தொடர்பாக பேசுகையில் அரசுப்பளிக்களில் குழந்தைகளுக்கு கணினி கல்வி கிடைக்காமல் இருப்பதும், அது கிடைக்க இவர்களின் ஏக்கமும் என்னை பாதித்தது. அரசு பள்ளிகளிலேயே படித்துவிட்டு கல்லூரிகளுக்கு சென்ற பின்தான் கணினியை கையால் தொடும் பாக்கியம் கிடைத்த என் போன்றவர்களுக்கு அந்த ஏக்கம் விளங்கும்.

  ReplyDelete