Tuesday, September 22, 2015

லெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்

]                               ஓரிறையின் நாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்...
அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

                           பெண்களின் அனுமதி இன்றி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து அட்டைப்படத்தில் போட்டு சீப் பப்ளிசிட்டி தேடிக்கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு இஸ்லாமியப் பெண்மணி வலை தளத்தின் வன்மையான கண்டனங்கள்..!!! ஆனால் பத்திரிக்கைக்காக கவரேஜ் செய்ய சென்ற ரிப்போர்ட்டரை விட பல மடங்கு வன்மமும்,வக்கிரமும்  கொண்டு அலையும் மிருகங்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத இந்த காலகட்டத்தில் இப்படி அரை குறை ஆடை அணிந்து கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொது இடங்கலில் அலையும் பெண்களுக்கும் ஒரு பெண்ணாக என் சார்பில் மிக மிக கடுமையான கண்டனங்கள்..!!!

                              சுடும் என்று தெரிந்தே நெருப்பில் கை விட்டு விட்டு நெருப்பில் கை விடுவது என் சுதந்திரம் ,  இந்த இருபதாம் நூற்றாண்டில் சுடாமல் இருக்க நெருப்புதான் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எந்த அளவு அபத்தமோ அதை விட அபத்தம் நான் எவ்வளவு கேவலமாக,கீழ்த்தரமாக,  ஆடை அணிய முடியுமோ அணிவேன்.. ஆண்தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உளறுவதும்..!!

                         ஐந்து வயது குழந்தையை கூட விட்டு வைக்காத கொடூரமான கயவர்கள் நிரம்பிய உலகம் இது... உங்கள் உடல் உங்களின் பொக்கிஷம் அல்லவா? அதை கண்ணியமான உடை அணிந்து மறைக்காமல் கண்டவன் கண்களுக்கும் விருந்தாக்கி செல்வதுதான் நீங்கள் படித்து தெளிந்த நாகரீகமா???

                  பத்திரிக்கையில் போடப்பட்டதற்கே இவ்வளவு கொதிக்கிறீங்களே... அது எவவ்ளவு அபத்தம்னு உங்களுக்கு புரியலையா? ஒரு தொடுதலில் உலகம் முழுக்க உங்களின் ஆடை விலகலை பதிவேற்ற முடியுமான நெட் யுகத்தில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் சகோதரிகளே....! ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிந்தோ அறியாமலோ  நம்மை சுற்றி இது போல பல்லாயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. நம்மை சுற்றி எங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இன்று சமூகவளைதளங்களில் ஆண்களால் பதிவேற்றப்பட்டு கேவலப்படுத்தும் பெண்கள்  உங்களில் யாரோ ஒருவர் தான். நாளை நீங்களாகவும் இருக்கலாம்.

               எனக்கு தெரியாமல் என்னை போட்டோ எடுப்பதால் எனக்கொன்றும் கவலை இல்லை  அது போன்ற ஈன செயலை செய்யும் ஆண்தான் வெக்கப்பட வேண்டும் என கொதிக்கும்  பெண் ஈய போராளிகளுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன், நீங்கள் சொல்வது ஓரளவுக்கு நியாயம் தான் எனினும் சம்மந்தப்பட்ட ஆணின் மனதில் சிறு பொறியாய் கனன்று கொண்டிருக்கும் பெண் மீதான வக்கிர எண்ணங்களுக்கு  எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டெறிய செய்து அவனின் உணர்வுகளுக்கு வடிகாலாய்  இருப்பதற்காக தியாகத்தின் மறு உருவமாய் லெகின்ஸ், அல்லது உடலை இறுக்கி பிடிக்கும் உடை அணிந்து திரியும் பெண்களே அவன் செய்வது ஈன செயல் என்றால் அதை விட கேவலமானது நீங்கள் ஆடை  சுதந்திரம் எனும் பெயரில் செய்யும் அபச்சாரங்கள்!!

                    அவனென்ன எங்களை தெரியாமல் படம் பிடிப்பது? இதோ எடுத்துக்கொள்ளுங்கள் எனும் முட்டாள்தனமான பதிவேற்றங்கள் நேற்றுமுதல் அரங்கேறிவருகின்றன. அவன் நிர்வாண படங்களை வெளியிட்டால் இதே பெண்ணிய போராளிகள்  தங்கள் படங்களை பதிவேற்றுவார்களா. பதிவேற்றட்டுமே?? இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நட்டம் என்பது சிந்திக்கும் மக்களுக்கு புரியும். மாக்களுக்கு புரியாது.

               பெண் சுதந்திரம் என்பதும் பெண்ணியம் என்பதும் ஆடைக்குறைப்பும் ஆடை சுதந்திரமும் மட்டுமே என்று ஊடகங்களும் ஆணாதிக்க சிந்தனை உடையவர்களாலும் காலம்காலமாக நம்ப வைக்கப்பட்டு வருகின்றீர்கள். என்பதை உணராமல் இன்னமும் கற்காலத்திலேயே இருக்க முயலுகிறீர்களே பெண்களே!

                   பெண்ணியம்  உங்கள் கல்வி அறிவிலும் ஆணை விஞ்சும் நிர்வாகத்திறனிலும் கண்ணியமான உங்கள் நடை உடை பாவனையிலும் மிளிரட்டும்.                      நம் பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்கமாக,கண்ணியமான உடை அணிய சொல்லித்தரும் அதே வேளையில் நம் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை மதிக்கவும்  சொல்லி தருவோம்.
 
உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்                               
read more "லெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும் "

Monday, September 21, 2015

தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா


            பெரிதும் வளர்ச்சியடையாத நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைபட்ட ஓர் ஊர்... அங்கே கிட்டதட்ட 70 ஆண்டு பழமைவாய்ந்த பாழடைந்த ஓர் அரசுப் பள்ளி கட்டிடம்.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் படிக்க வரும் குழந்தைகள்... இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் ? " சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்" என தோணுமா தோணாதா? அதுவும் நீங்கள் ஒரு பெண் என்றால் ????

               ஆனால் இவை எதுவும் அந்த பெண்மணியை சாய்த்துவிடவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தார். 2004ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டவர் இரண்டே வருடங்களில் பாழடைந்த கட்டிடத்தின் நிலையை மாற்றிக்காட்டினார். ஆங்கிலவழிக் கல்வியின் மோகத்தாலும், அரசு பள்ளிகளின் மீதான அதிருப்தியாலும் அனைவரும் தனியார் பள்ளிகளை நோக்கி பணங்களை வாரியிறைத்து தன் குழந்தைகளை சேர்த்துக்கொண்டிருக்க, அரசு பள்ளியிலும் தரமான ஆங்கிலவழிக்கல்வியை போதித்துக் கொடுக்க முடியுமென்று செயல்வழி நிறுவினார். அவர் தான் நம் சாதனைப் பெண்மணி சகோதரி ஜெலீலா பீவி

               அமைச்சர் கையால் விருது வாங்கிய கையோடு சகோதரியை தொடர்புகொண்டு இஸ்லாமியப் பெண்மணி தளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். உற்சாகம் பொங்க நம்முடன் அவருடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். "நான் இந்த ஸ்கூல்க்கு வரும் போது பழைய கட்டிடமா இருந்தது. இரண்டு முறை சுற்றுச்சுவர் இடிந்தது. நல்லவேளையாக மாணவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. இப்படியான கட்டமைப்பில் இருந்தால் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கிதானே படையெடுப்பார்கள்? எப்படியேனும் கட்டடத்தை சீர் செய்வது என முடிவெடுத்தேன். கவுன்சிலர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் முறையிட்ட அதே வேளையில் தக்கலைவாழ் மக்களிடமும் உதவி கோரி நின்றேன். பலர் தாராளமாக கொடுத்துதவினார்கள். அரசு உதவியோடும், ஊர் மக்களின் உதவியோடும் எங்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து புது கட்டிடத்தை உருவாக்கினோம்" என்றார்.
 
பழைய பள்ளிக்கூடம்
             கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கட்டிடத்தை எழுப்பியதுடன் சகோதரியின் பணிகள் ஓய்ந்துவிடவில்லை. பள்ளிக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் உங்களை வந்தடையும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சுகாதாரமான கழிப்பறையும் போக மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி கழிப்பறை வசதியும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த தக்கலை அளவிலான சதுரங்கப் போட்டியில் தனியார் பள்ளிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் பள்ளி மாணவ மாணவிகள் முதல் மற்றும் இரண்டாமிடம் பிரித்தனர். இப்போது பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எப்படி இவை சாத்தியமானது என கேள்வியை முன்வைத்தோம். "கட்டடம் கட்டப்பட்ட பின் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு ஊரின் ஒவ்வோர் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டேன், என் பள்ளி ஆசிரியர்களும் உதவினார்கள். ஆங்கில வழிக் கல்வி பயில வைப்பதற்காகத் தான் மற்ற பள்ளிகளுக்கு அனுப்புகிறீர்கள் எனில் அதே கல்வியை நம் அரசுப் பள்ளி வாயிலாக கொடுக்க உறுதியளிப்பதாகச் சொன்னேன். என் உறுதிமொழி ஏற்று பலர் தம் பிள்ளைகளை சேர்த்தனர். தனியாக எல்.ஜே.ஜி, யூ கே ஜி செக்சன் ஆரம்பித்து தனி ஆசிரியர்கள் நியமித்து கற்பிக்க வைத்தேன். கணினிக் கல்வியும் ஏற்படுத்திக் கொடுத்தோம். தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பை உருவாக்கியதால் பெற்றோர்களும் உற்சாகத்துடன் எம் பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர்" என்றார்.
 
இன்றைய பள்ளிக்கூடம்
                  இவ்வளவும் அரசு பள்ளியில் எப்படி செய்ய முடிந்தது ? அரசு எப்படி
நிதி ஒதுக்குகிறது ? அரசிடம் மட்டும் முறையிட்டுக்கொண்டிருந்தால் நம் இலக்கை எட்ட முடியாது என்பதனை சகோதரி ஜெலீலா உணர்ந்தார். தக்கலை மக்களிடம் நேரடியாக பொருளுதவி கேட்டார். ஊர் செல்வந்தர்கள் அரசு பள்ளிக்காக நிதியுதவி செய்தனர். அதன் மூலம் பல வசதிகளை பள்ளியில் தோற்றுவித்தார். இதன் மூலம் தனியாக நிறுவப்பட்ட நர்சரி வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடிகிறது. ததஜ இலவசமாக கணினிகளை வழங்கியது. இதன் மூலம் கணினி வகுப்புகள் தொடங்க முடிந்தது. அதிக புரவலர்களை இணைத்ததற்காக ஆட்சியர் கையால் பாராட்டும் விருதும் சகோதரிக்கு கிடைத்துள்ளது.

                
நல்லாசிரியர் விருது பெற்றபோது(2015)
            தனது 31 ஆண்டு கால ஆசிரியைப் பணியினை மிக மிக நேசித்து செய்ததினால் மற்றவர்களை விடவும் தனித்து நிற்கிறார் சகோதரி ஜெலீலா. தன் பெண் குழந்தைகளையும் ஆண்குழந்தைகளுக்கு நிகராக படிக்க வைத்து அவரவர் துறைகளில் ஜொலிக்கச் செய்துள்ளார். "ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கடமைகளுக்கும் அப்பால் சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் நமக்கான கடமைகளை தகுதியான நபர்கள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். அந்த  வகையில் என் கடமைகளையெல்லாம் என் கணவர் பீர்கண்ணு மைதீன் பங்குபோட்டுக்கொண்டதால் என்னால்  நேரமொதுக்கி என் பள்ளியின் வளர்ச்ச்சிக்காக பாடுபட முடிந்தது.  ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை அனுப்ப குடும்பத்தார் விரும்புவத்தே நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவார்கள், வாரத்தில் இருநாளும்,  தேர்வு விடுமுறைகளும் இருப்பதால் தான். ஆனால் அத்தகைய விடுமுறை நாட்களை என் பணிகள் ஆக்ரமித்த போதும், இரவு காலம் தாழ்த்தி வீடு வந்தாலும் பொறுமை காத்து என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார் அவர். ஒருவேளை என் கணவர் ஆதரவு இல்லை எனில் என்னால் இவ்வாறு சாதித்திருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை" என்றவர் பள்ளி விட்டு வந்ததும் நேராக தன் கணவரின் கடைக்கு சென்று அவருக்கு உதவியும் வருவதை குறிப்பிட்டார். இருவரும்  அவரவர் பணிகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அருமையான ஜோடியல்லவா...

              தங்கள் ஊருக்கு கிடைத்த பொக்கிஷமாகவே தக்கலை மக்கள் சகோதரி ஜெலீலாவைக் கொண்டாடுகிறார்கள். அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட போது தக்கலை வாழ் மக்கள் பலர் தம் பேஸ்புக்கில் பதிவிட்டு சகோதரியின் சாதனைகளை நினைவுக்கூர்ந்தார்கள். பின்னே... சாதாரண பெண்மணியா இவர் ? தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு அதிலும் வென்ற சாதனைப் பெண்மணி அல்லவா...

            இன்று அலைபேசியில்  உரையாடிக்கொண்டிருக்கும் போது  இன்றைய நாள் வந்த அறிவிப்பை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். கன்னியாகுமரி கல்வி மாவட்டத்தில் சிறந்த  பள்ளிக்கூடமாக  தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளியை தமிழக அரசு  தேர்ந்தெடுத்துள்ளது. விரைவில் அதற்கான கேடயமும், பரிசுதொகையும் பெறவிருக்கிறார்  நாம் சாதனைப் பெண்மணி. தொடர் சாதனைகளுக்கு  வாழ்த்துக்கள்  சகோதரி ஜெலீலா


                  உங்கள் துஆவில் சகோதரியை இணைத்துக்கொள்ளுங்கள். இன்னுமின்னும் பல சாதனைகள் புரிந்து சமுதாய மக்களுக்கு பயன்படும்படி அல்லாஹ் செய்வானாக ஆமீன்.
-----

ஆக்கம் மற்றும் பேட்டி : ஆமினா முஹம்மத்

நன்றி :

அறிமுக உதவி : Mohamed Rameem , Barveen banu anas
தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புக்கொள்ள உதவி : சகோ தக்கலை ஆட்டோ கபீர்
சாதனைப் பெண்மணி புகைப்படம் : சகோ நாகூர் மீரான்
read more "தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா"

Monday, September 14, 2015

அவதூறுகள் பரப்புவதற்காகவா சமூகவலைதளங்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துலில்லாஹி வ பரக்காதுஹு

                        நாம் அன்றாட வாழ்வில் மிக மிக அசாதாரணமாக கடந்து செல்லும் நிகழ்வுகளில் ஒன்றாகி போனது பிறரை குறித்தான அவதூறை பரப்புவதும் இட்டுகட்டுவதும்.  நாம் பழகியவர்களையே குறை கூறி புறம் பேச தயங்காத நம் கையில், முகம்பாராமல் பழகும் வகையிலான நட்பினை ஏற்படுத்தி தந்த   சமூக வலைதளங்களில் இத்தகைய அவதூறுகளுக்கும் புறங்களுக்கும் எல்லையே இல்லை !   இத்தகைய செயல் ஒருவகையான மனநோயே என்பதை தவிர வேறொன்றும் இருக்க முடியாது. காரணம் அவதூறு என்பது என்ன அதனால் ஏற்படும் தண்டனை என்ன என்றெல்லாம் தன் வாழ்நாளில் சிந்திக்க தொடங்கினார்கள் என்றால் அத்தகைய இழிவான செயலை ஒருபோதும் செய்ய துணியவே மாட்டார்கள்.


                        போகின்ற போக்கில் ஒருவரை குறித்து அவர் செய்யாத அல்லது செய்தாரோ இல்லையோ என்று கூட தெரியாமல்,அவரின் மீது ஒரு அபாண்டத்தை ஏற்படுத்தியும் வீண்பழி சொல்லியும் அவதூறுகளையும் பரப்பிவிடுகின்றனர். இரு ஆண்களுக்குள் நடக்கும் சண்டையென்றால் சொல்லவே தேவையில்லை, நிச்சயம் அங்கே தத்தமது வீட்டுப்பெண் பற்றி பல அவதூறுகளை கிளப்பிவிடுகிறார்கள். அவை உண்மையா பொய்யா என்பதெல்லாம் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, அவர்களுக்கு முக்கியம் எதிராளியை அசிங்கப்படுத்துவது மட்டுமே! இத்தகைய  அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை என்னவென்று தெரியுமா ?
“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (49:12)”
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
33:58. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் :
“எவரொருவரின்  நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
சிந்தித்துப்பாருங்கள் !   நமது மார்க்கம் பிறர் நலம் பேணுவதில் எவ்வளவு அக்கரை எடுத்துக்கொள்கிறது என்று !

இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் :
“ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல : புகாரி
                        இதுபோன்ற அவதூறு சொல்லும் நபர்கள்,  தாங்கள் பரப்பும் பொய்யான அல்லது ஆதாரமற்ற அல்லது செவிவழிச் செய்தி அவதூறுகளால் சம்மந்தப்பட்டவரின்,வாழ்க்கையில் என்ன இடர்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்று  எள்ளளவும் எண்ணி பார்ப்பதில்லை. இத்தகைய அவதூறுகளால் எத்தனையோ பேர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டும்,  செய்யாத குற்றத்துக்கு பழிகளை சுமந்தும் சமூகத்தால் புறக்கணிக்க பட்டு  வாழ்க்கையையே சூனியமாக்கி கொள்ளும் நிலைக்கு கூட தள்ள படுகிறார்கள்.சிலநேரம் தற்கொலை செய்யக்கூடிய அளவுக்கு கூட அவர்கள் தள்ளப்படுகிறார்கள். காரணம் கேள்விப்பட்ட அவதூறுகளை யாரும் அது ஒரு நம்பகமான தகவலாகத்தான் பார்க்கிறார்களே தவிர அது உண்மையோ பொய்யோ என்றெல்லாம் ஆராய்வதில்லை.அதனால் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கும்,  ஏச்சு பேச்சுக்கும் அவர்கள் ஆளாக வேண்டிருக்கிறது. 

                        சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு பிரபலப் பெண்மணி தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்தி வந்தது. அவரின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்றால் அனைத்து பதிவுகளும் அவரின் மனதைரியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. இப்படியான தைரியமிக்கப் பெண்  தற்கொலை செய்ய முயற்சித்ததன் காரணம் என்னவென்று விசாரித்த போது தான் தெரிந்தது,  முன்பகை காரணமாக அவரைப் பற்றி அவரின் நண்பர்கள்  பரப்பிய அவதூறுகள் தான் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இம்முடிவை எடுக்க வைத்துள்ளது. இதுபோல் பல சம்பவங்களை நாம் பார்க்க முடியும்.   இதில் ஆண்கள் பெண்கள் என்று யாரும் விதி விலக்கு கிடையாது.

                        இதுபோன்ற அவதூறு எனும் கோடாரி எவரையும் விட்டு வைப்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விசயங்களை கேள்விப்படுகிறோம்.தங்களின் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை ஆண்கள் திரிகிறார்கள்.அவர்களின் ஆசை வார்த்தைக்கும் இச்சைக்கும் கட்டுபாடாத போது ஒரு பெண் எத்தனை சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கபடுகிறாள் என்பது  பல சம்பவங்கள் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலம். வெறுமனே போகின்ற போக்கில் அந்த பெண்ணை குறித்தும் சம்மந்தமே இல்லாமல் பிறருடன் பொய்யாக சம்மந்தப்படுத்தி அவதூறுகளை சொல்லி இட்டுக்கட்டப்படுகிறாள்.இதனால் தான் செய்யாத தப்புக்கு தண்டனையாக வீட்டிலும் சமூகத்திலும் , திருமணமான பெண்ணாக இருந்தால் புகுந்தவீட்டிலும் எத்தனை எத்தனை அவமானங்களையெல்லாம் அவள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது ?   அவமானம் என்பது அந்த பெண்ணோடு முடிந்து போகிறதா ? இல்லை அவர்கள் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் என்று எவரையும் விட்டு வைப்பதில்லை. அதுபோலவே எந்த தவறுமே செய்யாத கண்ணியமான ஆண்களின் மீது இட்டுக்கட்டப்படும் அவதூறுகளினால் சமூகத்தில் மதிப்பையும் மரியாதையும் இழக்க நேரிடுகிறது .
“புறம் என்றால் என்ன என்பதைபற்றி நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அறிவீர்களாக என கேட்டபோது, அல்லாஹ்வும், அவன் தூதருமோ தவிர மிகவும் அறிந்தவர் என தோழர்கள் கூறினார்கள். (புறம் என்பது) உன் சகோதரன் வெறுப்பதை நீ பேசுவதற்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அவ்வாறு நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தால் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீ சொல்வது அவரிடம் இருந்தால் புறம் பேசி விட்டாய். அவ்வாறு அவரிடம் இல்லை என்றால் அவர் மேல் இட்டு கட்டிவிட்டாய் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
இறையச்சம் மிகுந்த ஆண்களும் பெண்களும் தன் தொடைகளுக் கிடையில் உள்ள மர்ம ஸ்தானத்தை பேணிக்கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் மறுமை நாளில் மகத்தான கூலியுண்டு.இத்தகையோர்கள் மீது எவர்கள் அவதூறுகளை பரப்புகின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும் மறுமை நாளில் அவர்களுக்கு நோவினை செய்யும் நரகத்தின் தண்டனை காத்திருக்கிறது .
60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
                        சமூகமாற்றத்துக்கும் நல்ல பல ஆரோக்கியமான விசயங்களை பகிர்ந்துகொள்ளவும் அசுர வேகத்தில் அது மக்களை சென்றடைய அரிதாக கிடைத்த முகநூல் வாட்சப் போன்ற ஊடகங்கள் மூலம் இப்போது மிகவும் அசுர வேகத்தில் பரப்பபடுவ தென்னவோ அவதூறுகள்தான் .முகநூலில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியையும் மாணவனும் ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் என்ற புகைப் படத்துடன் கூடிய செய்தி.எட்டுதிக்கும் பரப்பப்பட்டது . அதே செய்தி மறுநாள் நாளிதழில்களில் செய்தியாக வந்ததோ முற்றிலும் வேறு..முதல் நாள் பரப்பபட்ட புகைப்படமும் மறுநாள் பிரசுரிக்கப்பட்ட புகைப்படமும் ஒன்றுகொன்று சற்றுமே தொடர்பில்லாதது .இதில் தவறு இழைக்காத ஒரு பெண்ணின் புகைபடத்தை பரப்பினார்களே, இதை காணும் அந்த பெண்ணின் மனநிலை என்னவாகியிருக்கும்  என்று யாரும் சிந்தித்து பார்த்தார்களா ? அப்படி சிந்தனை செய்திருந்தால் அதுபோன்ற தவறை செய்திருப்பார்களா? இதில் ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் கூட நாங்களும் இதில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று பொய்யான புகைப்படத்தை வெளியிட்டு பிறகு நீக்கிவிட்ட கன்றாவி காட்சிகளும் அரங்கேறியது. அவதூறுகள் பரப்புவதில் இவர்களுக்கெல்லாம் எத்தனை அவசரம். என்ன மாதிரியான மனநிலை கொண்ட மனிதர்களாக இருப்பார்கள் இவர்கள்.

                        இதேபோன்றுதான் வேறொரு சம்பவம் முக்காடு  அணிந்த இஸ்லாமிய சகோதரியை ,சகோதர சமூகத்தை சேர்ந்த இளைஞர் முத்தமிடுவதைப்போல் புகைப்படம் வாட்சப் மூலமும் அதை வாயிஸ் மெசேஜிலும் பரப்பும்படி,தகவல் பரப்பப்பட்டது.ஆனால் இந்த சம்பவம் அந்த ஊரில் நிகழ்ந்ததா என்று விசாரிக்கப்பட்டபோது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் மறுத்திருக்கிறார்கள்.இப்படி கேட்டதையெல்லாம் செவிமடுத்து பரப்பியவர்கள் என்ன பலனை தேடிகொண்டார்கள் என்பது தெரியவில்லை .குறிப்பிட்ட அந்த ஊரின்மீது களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு பரப்பபட்ட அவதூறே அல்லாது வேறு என்னவாக இருக்க முடியும்.

                        நண்பர்களையும் நாம் அவதூறு கூறுவதில் இருந்து விட்டு வைப்பதில்லை . அவர்கள் நம் எவ்வளவு நெருக்கத்திற்குரிய நண்பராக இருந்தாலும் அவருடன் நமக்கும் அவருக்கும் ஒரு சின்ன கோபம் வந்தாலும் அவர்கள் மேல் இருக்கும் வெறுப்பால் அவதூறு பரப்புகிறோம்.. என்னதான் நம்மோடு நெருங்கி பழகிய நபராக இருந்தாலும் அவரை பற்றி நாம் அவதூறு கூறாமல் இருப்பதில்லை. அவதூறு கூறுவது தவறு என தெரிந்தும் கூட நாம் அந்த தவறை விட்டு விலகுவதுமில்லை. எந்த ஒரு விஷயத்திற்கும்  இரு பக்கங்கள் உண்டு. அதனை அல்லாஹ்வே அறிவான்.  மறுமையை நம்பும் மக்கள் மறுமையில் அல்லாஹ் தண்டனை வழங்குவான் என்பதனையும் அறிந்தே  வைத்துள்ளார்கள். அப்படியிருக்க, தன்னால் உறுதி செய்யப்படாத கேள்விபட்ட விஷயங்களை பரப்பி இம்மையிலேயே தண்டனை வாங்கிக்கொடுக்க துடிக்கும் இவர்கள், அது பொய்யான செய்தி என  தெரியவரும் போது அதற்குரிய தண்டனையை ஏற்பார்களா? இழந்த மரியாதையை மீட்டுக்கொடுப்பார்களா?

                        இதில் ஆண்களும் விதிவிலக்கில்லை ..சில வீடுகளில் பெண்களை சொல்லி திருத்த வேண்டிய அவர்களே அதை சேர்ந்து பேசுவதும் அதை ஆதரிப்பதும் வேதனைக்குரியது. முன்பெல்லாம் புறம் பேசுவதும் அவதூறு பரப்புவதும் பெண்களே என்ற நிலை மாறி இப்போது ஆண்களும் தங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் பகிர பயப்படும் விஷயத்தையும்  எளிதாக ஆண்களின் டைம்லைன்களில் காண முடிகிறது.

அல்லாஹுவின் தூதர் ஸல் அவர்களின் எச்சரிக்கை..
முஃமீன்களை தெரிந்து கொள்ளுங்கள்! அவதூறு பரப்பியும் புறம் பேசியும் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான் உண்டாகும்..
                        ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்ற சொல்வழக்கு நடைமுறையில் இருப்பதைப்போல்., குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கவே வேண்டும் .அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவே முடியாது. ஆனால் எந்த காரணம்கொண்டும் தவறே இழைக்காத ஆண்களானாலும் பெண்ளானாலும் சரி அவதூறை கொண்டு,அவர்களை உயிருடன் நடை பிணமாக்காதிருக்க அவர்கள் மீது கருணை காட்டுவோம். மறுமையை நம்பி அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுவோம். இங்கே நாம் படைக்கப்பட்டது அடுத்தவரின் குறைகளை வெளிபடுத்துவதற்கு அல்ல... எது  உண்மை எது பொய் என்பதை பலகீனமான நாம் அறியமாட்டோம். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.  அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சிகொள்வோம். கேள்விபட்டதெல்லாம் வைத்து  தீர்ப்பு வழங்கும்  அநீதியாளர்களாய்  ஆவதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக..ஆமீன்

உங்கள் சகோதரி
ஜுலைஹா ( ப்ரான்ஸ் )
read more " அவதூறுகள் பரப்புவதற்காகவா சமூகவலைதளங்கள்?"

Monday, September 07, 2015

சிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க! ( அரசியலும் பெண்களும் )


ணுக்குப் பெண் சமமென்பவர்களுக்கு ஒரு கேள்வி:

       அரசியலுக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை முஸ்லிம் பெண்களிடம் மட்டுமல்ல! அனைத்து சமுதாயப் பெண்களிடமும் பெரும்பாலும் காணப்படுகிறது. ஆண்களுக்கீடான உரிமைகள் வேண்டி போராட்டங்கள் நடத்தும் பெண்களில் எத்தனை பேர், பெண்களுக்கென ஒதுக்கவிருக்கும் 33% சதவீத இடங்களை நிரப்ப தயாராக இருக்கின்றனர்?? எத்தனை பெண்கள் அரசியல் என்ற துறையில் காலூன்றி மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கின்றனர்? 

       கணிணி, மருத்துவம், அறிவியல், விண்வெளி என்று பல துறைகளில் சாதிக்கும் பெண்கள் கூட அரசியலைக் கண்டால் ஒதுங்கும் நிலையே இன்று இருக்கிறது. கிராமப்புறங்களில் கூட பெண்கள் சிறு சிறு பதவிகள் வகிக்கின்றனர். ஆனால் நகரங்களில் வாழும் படித்த மேல்தட்டு பெண்கள், கை நிறைய சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வெளிநாடுகளை நாடிப் பயணிக்கும் பரிதாப நிலையினைக் காண்கிறோம். இதற்கெல்லாம் என்ன காரணம்?

       பெண்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. இந்நிலைக்குச் சில ஆண்களும் அவர்களது பிற்போக்குவாத எண்ணங்களும் முக்கிய காரணமாகும். ஆண்களாகிய நாங்கள் நாட்டை ஆள்கிறோம். நீங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று முற்காலங்களில் ஒதுக்கியதன் விளைவே வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம்நாடு எப்படி போனால்  எனக்கென்ன என்ற  எண்ணம் நம் மனங்களில் ஆழப்பதிந்து விட்டது. நாட்டைக் குறித்துக் கவலைகொள்வதோ அக்கறை கொள்வதோ நமக்கு அவசியமற்றது என்று நினைக்கும் கோழைகளாக மாறிவிட்டோம்.

       “ஒரு பெண்ணின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கும் எந்த சமுதாயமும் முன்னேறாது” என்ற ஹதீஸைக் காட்டுவதும் ஒரு காரணமாகும். சமூக நலனில் அக்கறை உள்ள அனைவருமே தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கேனும் நிகழ்த்தப்படும் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுப்பவர்கள், அதே பெண்களுக்கு அவர்கள் அமைப்புகளில் ஒரு தொண்டர் பதவி கூட மனமுவந்து வழங்க முன்வருவதில்லை. ஹிஜாப் பேணிக்கொண்டு சமூகப்பணிகளில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நமது இயக்கங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். 

       பெண்ணும் இந்நாட்டின் குடிமகள் தான்ஒரு நாட்டின் உயர்வு தாழ்வுகளில் வெற்றி தோல்விகளில் பெண்களுக்கும் சம பங்குண்டு. இந்தியச் சட்டங்கள் அதன் குடிமக்களான ஆண், பெண் இருவருக்கும் சேர்த்தே வகுக்கப்படும்போது, அச்சட்ட இயக்கங்களில் பெண்கள் பங்கில்லையெனில் அவை பெண்களின் தேவைகளை ஒருபோதும் நிறைவேற்றிவிட முடியாது. பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறதோ, அப்பாதுகாப்பைச் சாத்தியமாக்குவதிலும் பெண்களின் பங்கு அவசியம்.

       பெண்களுக்கு எத்தனையோ திறமைகள் வாய்த்திருக்கலாம். பேச்சு, எழுத்து, அறிவு, சாதுர்யம், என்று பெண்கள் இன்று நுழைந்து வெற்றியை நிலைநாட்டாத துறைகளே இல்லை. ஆனால், இத்துறைகளில் பெண்களின் பங்கு தொடர்ந்து நிலைபெற வேண்டுமெனில் அதற்கு நாடாளும் ஆட்சியாளர்களின் உதவி நிச்சயம் தேவை. அவர்களது உழைப்பிற்கான ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்க ஆட்சியாளர்களின் குறுக்கீடு அவசியம் என்பதில் மறுப்பில்லை. பெண்களின் புற அழகிற்கு முக்கியத்துவம் தருபவர்களை ஒதுக்கிவிட்டு, அறிவுக்கும் ஆற்றலுக்கும் வாய்ப்புகள் தருபவர்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.   

 பெண்களுக்குச் சமூகத்தில் எண்ணிலடங்கா பிரச்சனைகள் உள்ளன.சமுதாய  நலச்சிந்தனை கொண்ட பெண்களாக  நாம் இருக்க வேண்டும்நலிவுற்ற  பெண்களின் முனங்கல்கள் நம் காதுகளில் கேட்க வேண்டும். அவர்களின் வலியிலும் வேதனையிலும் பங்கு பெறுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்வழி காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.


 ஆஃப்கன் பெண் அரசியல்வாதிகள், ஹிலாரி க்ளிண்டனுடன்
       பிற்படுத்தப்பட்ட பெண்களையும், ஒடுக்கப்பட் சமுதாயத்தையும் வைத்துதான் ஆட்சியாளர்கள் சட்டதிட்டங்கள் வகுக்கின்றனர். உதாரணங்கள் சில:
·         கல்வித்திட்டம்.
·         மருத்துவத்திட்டம்,,
·         திருமணத்திட்டம்
·          மகப்பேறுதிட்டம்,
·         மகளிர் முன்னேற்ற திட்டம்,
·         கருத்தடைதிட்டம்

       ஆனால் என்ன விந்தை எனில், இத்திட்டங்களின் பலன்கள் ஏதும் உரியவர்களைச் சென்றடைவதில்லைநலத்தைப்பற்றியும், வளத்தைப் பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.

       பெண்களே! கொஞ்சம் வெளியில் வந்து பாருங்கள். நலன் என்றால் என்னவளம் என்றால் என்ன? என்று தெரியாத மக்கள் ஏராளமாக உள்ளனர்உங்கள் கண்களுக்கு சுரண்டலும், பதுக்கலும், லஞ்சமும் ,ஊழலும் தலை விரித்தாடும் அரசியல்தான் தெரிகிறதுசீரிய சிந்தனையுடனும்சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் தீமைகளையும் களைய பெண்களாகிய நாம் விழுமம் சார்ந்த அரசியலில் நம்மை இணைத்துக் கொண்டு சாதி,சமய வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பணி செய்ய முன்வர வேண்டும்.

       மருத்துவம் பார்க்க பெண்  மருத்துவரிடம் போகிறோம்
வக்கீலைச் சந்திக்க வேண்டுமானால், பெண் வக்கிலை சந்திக்கிறோம்;
காவல்துறையிலும் மகளிர் காவல்துறையினரை அணுகுகின்றோம்;
ஆனால் அரசியல் என்றால் மட்டும் பெண்கள் பின் தங்கி இருக்கும் நிலை மாற வேண்டும்பெண்களின் துயரை  பெண்கள் தான் தீர்க்க முடியும்.

       வீட்டு வேலை மட்டும் தான் பெண்களின் கடமை என்று ஆயிஷா (ரழி) அவர்கள் நினைத்திருந்தால் இத்தனை ஹதீஸ்கள் நமக்குக் கிடைத்திருக்குமா? 

        ஒரு சாதாரண பெண்மணி உலகம் முழுவதும் "மதர் தெரஸாஎன அறிமுகமானது எப்படிமக்கள் பணி செய்ததால் தானே.

       நாம் அரசியல் என்பதைப் உலகின் அனைத்து தீங்குகள் நிறைந்ததாகவே காண்கிறோம். அங்கு சாமானியர்களுக்கு மதிப்பிருக்காது என்றும் புரிந்துவைத்திருக்கிறோம். கால தாமதத்தில் மறு உருவமாகவே நம் இந்திய அரசியலை நினைக்கின்றோம். பண முதலைகள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக நினைத்து அஞ்சுகிறோம். 

       ஆனால் அரசியல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விரும்பவும் செய்கிறோம்:-

அரசியல் என்றால்,
மக்களுக்காக பணி செய்வது,
மக்கள் நலம் நாடுவது,
மக்களின் துயரம் களைவது,
மக்களுக்கு உதவி செய்வது,
மக்களோடு வாழ்வது.

       ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று நாம் நினைத்தோமானால், நாட்டின் மீது அக்கறை இல்லாத, மக்கள் சேவையில் மகேசன் சேவையை அனுபவிக்கத் தெரியாத, சுயநலவாதிகள், பொருள்,புகழாசை உள்ளவர்கள், இன, மதவெறியர்கள், பெண் சக்தியைக் கண்ணியப்படுத்தாதவர்கள் தாம் நாடாள்வர். இப்படியானவர்களின் நோக்கமானது, கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பைத் தமக்கும் தாம் சார்ந்த கட்சிக்கும் இயக்கத்திற்கும் ஆதாயம் தேடிக்கொள்ளவே பயன்படுத்துவது மட்டுமே.

       அரசியலில் பெண்களின் சேவை மிகவும் தேவை என்ற காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்ஒழுக்கமுள்ள, நல்ல சிந்தனை உள்ளவர்களும், நாட்டு நலனில் அக்கறை உள்ள நல்ல பெண்களும் களத்தில் இறங்க வேணடும். களைகளைக் களைய வேண்டும். முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டை முன்னேறிய நாடாக்க நம்மால் இயலும். நாம் மற்றவர்கள் போல் அல்லஈமானும் இறையச்சமும் கொண்டவர்கள்.

       சமூகப்பணிகளில் பெண்கள் பங்கு என்பது ஓட்டுப் போடுவதும் ஊர்வலங்களில் கோஷம் எழுப்பவதும் தான் என்றிருக்கும் சூழலை மாற்றிட பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் உறுதுணை புரிய வேண்டும்.

"சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் "

ஆக்கம் : 

ஜரினா ஜமால்
வெல்வேர் பார்ட்டி ஆப் இந்தியா
மாநில மகளிரணி தலைவி.

read more " சிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க! ( அரசியலும் பெண்களும் )"

Wednesday, September 02, 2015

உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி


ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி எனும் இஸ்லாமியப்பெண்மணி வாழ்ந்தது 9ஆம் நூற்றாண்டில் என்றாலும் இன்றும் அவரது பெயர் இங்கு நிலைத்திருக்கிறது. அவர் செய்தது என்ன? இன்றளவும் இவரது பெருமை பேசப்படும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார் ? என்ற கேள்விகள் எழலாம்.
இக்காலகட்டத்திலும் பலர் வியக்கக்கூடிய ஒரு காரியத்தையே ஃபாத்திமா அவர்கள் 9ம் நூற்றாண்டில் வெற்றிகரமாகச் செய்து முடித்தார் எனில் அது மிகையில்லை.  உயர்கல்வியோடு சேர்ந்து பட்டங்களையும் வழங்கும்  பல்கலைக்கழகங்களின் முன்னோடியாகத் திகழும்  பல்கலைக்கழகமான அல் கராவியின் பல்கலைக்கழகத்தை (Al Qarawiyyin University) நிறுவியவர். UNESCO மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் தகவலின்படி இத்தகைய நடைமுறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த கல்வி நிறுவனம் இதுவே தான். 

ஃபாத்திமா அவர்களின் எளிமையான குடும்பம்


பாத்திமா அல் ஃபிஹ்ரி குடும்பத்தாருடன் 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கய்ராவனிலிருந்து (தற்போதைய துனிசியா) மொரக்கோவில் உள்ள (Fez) (ஃபெஸ் ) நகரத்திற்கு குடிப்பெயர்ந்தனர். அச்சமயத்தில் சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளர் இத்ரிஸ் II கய்ராவனில் ஆட்சி புரிந்து வந்தார். ஃபெஸ் நகரம் கலாச்சாரங்களின் சிறந்த கலவையாகவும் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஓர் இஸ்லாமிய நகரமாகவும் திகழ்ந்தது. அந்த வருட இறுதியில் ஃபாத்திமாவிற்குத் திருமணமும் ஆனது .


வறுமையிலிருந்து வாழ்வு வரை:


ஃபெஸ் நகரத்திற்கு வந்த ஆரம்ப காலங்கள் கடுமையான உழைப்பு மற்றும் போராட்டங்கள் நிறைந்ததாகக் கழிந்தன. பின்னர் இறைவன் அருளால் ஃபாத்திமாவின் குடும்பம் மிகுந்த வளமிக்கதாக மாறியது. ஃபாத்திமாவின் தந்தை முஹம்மது பின் அப்துல்லாஹ் அல் ஃபிஹ்ரி அவர்களின் வியாபாரம் வெற்றிகரமாக அமைந்ததில் அவரது குடும்பம் செல்வச்செழிப்போடு வளமாக வாழத் துவங்கியது.
அடுத்து வந்த சில நாட்களில் மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அடுத்தடுத்து பாத்திமாவின் கணவர், தந்தை மற்றும் சகோதரன் என மிகப்பெரிய இழப்புகள் நேர்ந்தன. அவர்களின் இறப்பிற்குப்பின் பாத்திமாவுடன் இருந்தவர் அவரது சகோதரி மரியம் மட்டுமே. நாமாக இருந்திருந்தால் இந்நிலையில் மிகவும் துவண்டு போய் மூலையில் முடங்கியிருப்போம். ஆனால் அந்த சகோதரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ?
தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பரம்பரைச் சொத்திலிருந்து கணிசமான செல்வம் அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. இது அவர்களின் நிதி நிலையில் அவர்களுக்குப் போதிய உதவி அளித்தது. இருவருமே நன்றாகக் கற்றவர்களாய் இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த செல்வம் முழுவதையும் சிறந்த திட்டங்கள் மூலம் தம் சமூகத்தாரின் நன்மைக்காக அர்ப்பணித்தனர்.

சகோதரிகள் சாதனை:


ஃபெஸ் நகரில் இருந்த உள்ளூர்ப் பள்ளிவாசல்கள் வளர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அதில் பலர் ஸ்பெயினிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் இருந்தனர். இந்நிலையில் மரியம் அவர்கள் அங்கு மிகப்பெரிய பள்ளிவாசலான ஆண்டலூசியன் பள்ளிவாசலை (Andalusion mosque) 859ம் ஆண்டு கட்டினார்.

பாத்திமா, அல் கராவியின் எனும் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதிகமான வரலாற்று ஆசிரியர்களால் இது உலகின் மிகப்பழமையானது என்றும் 1200 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குகின்ற ,  பட்டம் வழங்கும் முறையினை முதன் முதலில் அறிமுகம் செய்த பல்கலைக்கழகம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


  பல்கலை உருவான விதம்:


வரலாற்றுக் குறிப்புகளில், தமக்குக் கட்டுமானப் பணிகளில் நிபுணத்துவம் இல்லையென்றாலும் கூட தானே தனது பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு, வழிநடத்தி, சிறப்பான விவரங்களுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாத்திமா முதலில் குறிப்பிட்ட இடத்தில் கட்டிடப்பணிகளைத் துவங்கியவர், பின் அதற்கு அருகில் அடுத்தடுத்து இருந்த இடங்களை வாங்கி பல்கலைக்கழகத்தின் அளவை விரிவுபடுத்தினார். தம் திட்டம் நல்ல முறையில் நிறைவேற விடாமுயற்சியுடன் தம் வாழ்வின் பெரும் பகுதியையும் பெரும் செல்வத்தையும் செலவிட்டார். கட்டுமானப்பணி 859ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தொடங்கியதிலிருந்து நோன்பு நோற்பதாக சபதம் ஏற்றார், இஸ்லாத்தின் மேல் அளவு கடந்த பக்தி உடைய ஃபாத்திமா அவர்கள். இறைவனின் அருளாலும் தன் அயராத உழைப்பினாலும் இரண்டு வருடங்களுக்குப் பின் பள்ளிவாசலுடன் இணைந்த பல்கலைக்கழகத்தை ஆவலுடனும் அக்கறையுடனும் முழுமையாகக் கட்டி முடித்தார். உடனே அதே பள்ளியில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துத் தொழுதார்.


 அல் கராவிய்யின்

மஸ்ஜித் அல் கராவியின் (Masjid Al Qarawiyyin) வட ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்று. மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேம்பட்ட சிறந்த கல்வியைக் கற்பிக்கும் மிக முக்கிய பல்கலைக்கழகமாக வளர்ந்தது.

அல் கராவியின் விதைத்த முத்துகள்:


அல் கராவியின், பல சிறந்த புகழ் பெற்ற இஸ்லாமியச் சிந்தனையாளர்களை வழங்கியுள்ளது. அப்பாஸ், சட்ட நிபுணரான முஹம்மத் அல் ஃபாஸி, லியோ ஆஃபரிகனஸ் போன்ற எழுத்தாளர்கள், மாலிக் சட்ட நிபுணர் அல் அரபி, வரலாற்று ஆசிரியர் கல்துன், வானிலையாளர் அல் பித்ருஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முஸ்லிமல்லாத மக்களும் இதன் சிறப்பை அறிந்து கல்வி கற்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் போப் சில்வெஸ்டர் II, யூத மருத்துவரும் தத்துவவாதியுமான மைமோனிடஸ் ஆவர்.

14ஆம் நூற்றாண்டின் அல் கராவியின் நூலகம் (Al Qarawiyyin Library) உருவானது. இது உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது . இந்நூலகத்தில் இஸ்லாத்தின் மிக முக்கிய கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன.(இமாம் மாலிக் அவர்களின் பதப்படுத்தப்பட்ட தோலில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும், இப்னு இஸ்ஹாக் உடைய சீராவும் சுல்தான் அஹமது அல் மன்சூர் என்பவரால் 1602 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குர்ஆனின் நகலும் உள்ளன)

ஏறத்தாழ 1200 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்தப் பல்கலை இன்றும் பல மாணவர்களைப் பட்டதாரிகளாக ஆக்கிக் கொண்டுவருகிறது . 

ஃபாத்திமா அலி ஃபிஹ்ரி, தம் சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் , கால நேரம் பார்க்காமல் தம் வாழ்வின் பெரும்பகுதியையும் செலவிட்டு மிகுந்த அர்பணிப்பு உணர்வுடன் செயல் பட்டதோடு தம் வாழ்நாள் முழுவதையும் இறைவனின் திருப்திக்காகவே வாழ்ந்து மறைந்தவர். ஒரு பெண்ணாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் ? என்ற கேள்விக்கு 1200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் வரலாற்றில் பதில் இருக்கிறது. இறைவன் அவரது செயலை பொருந்திக்கொள்வானாக. ஆமீன் .

உங்கள் சகோதரி 
நூர் அல் ஹயா

தகவல் உதவி: whyislam.org
read more "உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி"