Thursday, August 13, 2015

அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப்பெண்மணி (2ம் பாகம்)


                 பெண்களுக்கான பொறுப்புகள் என்பது இறைவனால் ஒப்படைக்கப்பட்ட அமானிதம். அதனை சரியாக நிறைவேற்றுவதற்காகவே அல்லாஹ்   பக்குவம், திறன், அறிவு முதலியவற்றை சிறப்பாக வழங்கியுள்ளான். ஆனால் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்தி, இவ்வுலக வாழ்வை  திருப்தியுடன் கழிக்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. பல பெண்களுக்கு இவ்வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அதன்  காரணம் ஆணாதிக்கமே அன்றி இஸ்லாம் அல்ல.. அதனாலேயே  ஆணாதிக்கமற்ற இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கும்   பெண்கள்     ஜொலிக்கின்றனர். அத்தகைய வைரத்திலொன்று தான் சகோதரி பாத்திமா இஸ்மாயில்.


போனப்பதிவின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.

                  பார்த்துக்கொண்டிருந்த அரசு உதவி மின் பொறியலாளர் பணியில் தொடர் அழுத்தங்கள், பணியிட மாறுதல்களைச் சமாளித்துக்கொண்டு வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சிந்திக்கத் தொடங்கினார். அப்போது கணவர் துபாயில் வேலையில் சேர்ந்திருந்தார். தனித்தனியே இருப்பதை விட துபாய்க்கே தானும் கணவருடன் சென்று விடலாம் என தீர்மானித்தார். ஆனாலும் தன் பெற்றோரின் கனவும், தன்னுடைய லட்சியமும் எந்த விதத்திலும் தடைபட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.  தனது இரு மகள்களையும் தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு துபாய்க்கு பயணமானார். குழந்தைகள் பாட்டியின் அரவணைப்பில் இரு வருடங்கள் இருந்தனர்.

துபாய்,1996.

                 புது சூழல்! புது உலகம்...   வேறு வழியில்லை, ஆரம்பத்திலிருந்து மீண்டும் முன்னேறத்தான் வேண்டும். தன்னால் முடிந்தவற்றையெல்லாம் நிரூபிப்பதன் மூலம் வளர்ச்சியை எட்டலாம் என்பது சகோதரி பாத்திமாவின் திட்டம். Al ghandi switchgear industryல் சாதாரண Estimation Engineer  ஆக பணியை தொடங்கி 2001 வரை  தொடர்ந்தார்.

                 அமீரகத்தில் வந்து இறங்கியதும்  உடன்பிறந்த தம்பி அனஸ்  தன் அக்காவிற்கான துறையில் வேலைக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.   " என்னுடைய உயர்வுக்கும், உழைப்புக்கும் சிறந்த பக்க பலமாக,ஆதரவாக,தூண்டுதலாக இருந்தவர்கள் என் சகோதரர்கள் தான்.   துபாயில்  எனக்கு உதவிய அனஸ் மற்றும் அவர் மனைவியை அவரின்   என்னால் ஒரு போதும் நினைவு கூறாமல் இருக்க இயலாது. " என்று கூறி தன் சகோதரர்களை  நினைவு கூர்ந்தார்.  சகோதரர் அனஸ் அவர்களின் மனைவி பர்வீன் பானு  நம் இஸ்லாமியப் பெண்மணி ஆசிரியர்களில்  ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                 துபாய், எட்ட முடியா  வளர்ச்சிக்கு சொந்தமான பூமி என்றாலும்   நம் இந்தியாவைப் போன்றே  சவால்மிக்க பணிகளை பெண்களுக்கு கொடுக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் கூட இருந்து வருகிறது. ஆனால் 2008ம் ஆண்டு MASSEERA INDUSTRIAL SWITCHGEAR  என்ற சார்ஜாவிலுள்ள கம்பெனியின் முதல்வர் வியாபாரத்தை தனி ஆளாக நடத்தக்கூடிய திறமையை பாத்திமாவிடம்   இருப்பதைக் கண்டார். சாதாரண ஒரு பெண் தானே, என்ன பெரிதாய் சாதித்து விட முடியும் என்றெல்லாம் அந்த மனிதர் நினைக்கவில்லை.  பணிப் பொறுப்புகள் உயர்த்தப்பட்டதால் சகோதரியின்  திறமையைப் பாராட்டி 3 வருடங்களில் Manager- operations   என்ற பொறுப்பு தரப்பட்டு கம்பெனி முழுவதும் சகோதரியின்  பொறுப்பில் ஒப்படைத்தார். 60 முதல் 70 வரை பணியாளர்கள் இருக்கும் ஒரு தொழிற்சாலையை திறம்பட நிர்வகிக்கும்   வாய்ப்பை , நல்ல முறையில் நிறைவேற்றினார்.


                 ஹிஜாப் அணிந்திருந்தாலே ஆண்களுடன்   சரிநிகராய் நின்று பேசமாட்டார்கள், வெளிநாடுகளுக்கு  பணி நிமித்தம் பயணம் செய்ய மாட்டார்கள், அச்சமுடையவர்கள், வியாபாரம் செய்யும் தகுதியற்றவர்கள் என்று எண்ணி தான் இக்கம்பெனியின் நிறுவனரும்,  எஸ்டிமேஷன் மட்டுமே செய்தால் போதுமென கூறி பணிக்கு அமர்த்தினார்கள். ஆனால்  "இவரால் முடியாது" என சொன்னவற்றையல்லாம் "என்னாலும் முடியும்" என்று   உடையில் மட்டுமல்ல  தன் செயல்களிலும் ஹிஜாப் பேணி செய்துகாட்டினார்.   எல்லாத் தடைகளையும் இடித்து நகர்த்தி மிகச்சிறந்த பதவியை மிகக் குறைந்த காலத்தில் அடைந்தார். புது பரிணாமமாய் அவரின்  அசூர வளர்ச்சியின் தொடக்கம் பற்றி கேட்டபோது அவர் அளித்த பதில் "இறைவனின் கிருபையால் என்னுடைய முதலாளியும் அதற்கேற்றார் போன்று என்னை எல்லாவிதமான துறைகளிலும் ஊக்குவித்து,கார் டிரைவிங் லைசென்ஸ் , கார் எல்லாம் கொடுத்து , பெரிய  சாதனைகள் படைக்குமளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கொடுத்தது இறைவன் எனக்கு தந்த பாக்கியம்" என்றார்.

                 2008ம் ஆண்டு வரை  MASSEERA வில் பணி தொடர்ந்தார். மின்சாரப் பாதுகாப்புக்காக உபயோகப்படுத்தப்படும் switchgear தொழிற்சாலைப்  பற்றிய    வியாபார நுணுக்கங்கள், தயாரிக்கும் முறைகள், Production,Design போன்ற எல்லாவிதமான திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இங்கு தான் இறைவன் ஏற்படுத்தி தந்தான். அதன் பின்  சகோதரி  பாத்திமாவின் சகோதரர்களும், கணவரும் இணைந்து  புதிதாக  தொழில் தொடங்க திட்டமிட்டனர். இத்தனை ஆண்கள் இருந்தும் கூட   ஒட்டுமொத்த ஆண்களும் தாங்கள் நிறுவிய START ELECTRICAL SWITCHGEAR   கம்பெனிக்கு  ஒரு பெண்ணை தான் Managing Director ஆக நியமனம் செய்து அழகு பார்த்தனர். 2012 வரை இந்த கம்பெனி சிறப்பாக செயல்பட்டது.  அதன் பின் தற்காலிக பங்குதாரர்களின் அழுத்தத்தால், அங்கு ஏற்பட்ட பெரிய திருட்டாலும்  கைநழுவிப்போனது.  ஆனால் இறைவன் ஒரு கதவை அடைத்து பல வழிகளை காட்டினான்.

                 தன் கனவு சிதைவதை காணும் எந்த ஒரு பெண்ணும் துவண்டுவிடுவாள்.  இனி இதற்குமேல் எதுவும் செய்யவேண்டாமென முடிவெடுப்பாள். ஆனால் சகோதரி பாத்திமா மனதளவில் வருத்தங்கொண்டிருந்தாரே ஒழிய தன் திறமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த நேரத்தில்  தம்பி இஸ்மாயில் தனது தொழிலுக்காக வைத்திருந்த முதலை தன் அக்காவிற்காக தியாகம் செய்து மீண்டும் புது தொழிற்சாலை அமைக்க ஊக்கப்படுத்தினார். அப்படி உருவான   CONNECT SWITCHGEAR தான் இப்போது   சார்ஜா, அபுதாபி, சவூதி அரேபியா, நைஜீரியா ஆகிய இடங்களிலும்  பல கிளைகளுடன் இயங்கி வருகிறது.  . கணவர் இஸ்மாயில் சேர்மனாக பதவி ஏற்றுக்கொண்டு தன் மனைவியின் வளர்ச்சிக்கு இடைவிடாது உழைத்துக்கொண்டிருக்கிறார்.   UAE ல் மட்டும் 478க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. ஆனால் அந்த  தொழில் முனைவோர் பட்டியலில்   இடம் பெற்ற ஒரே பெண் சகோதரி பாத்திமா தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

                 டென்மார்க்,ஜெர்மனி,ஸ்ரீலங்கா ,பிரான்ஸ்,ஸ்பெயின்,சிங்கப்பூர்,சவுதி அரேபியா,கத்தார்,ஓமன் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து   அந்த நாடுகளிலுள்ள சிறந்த நடைமுறை,வியாபார,தயாரிப்பு கூடங்களின் சிறந்த அணுகுமுறைகளை தன்னுடைய தொழிற்சாலையிலும் உருவாக்கி உலகத்தரமிக்க சாதனங்களை விநியோகிக்கிறார்.    வேலையில்லாமல் சிரமப்பட்டுவரும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கும் வேலை வாய்ப்பு தருவதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் உதவ முடிந்தது. தற்போது அவரின் கீழ் 70க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகிறார்கள்.  கடந்த ரமலான்க்காக அவர் குடும்பத்தினர் அனைவரும் தன் சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தனர். சகோதரி மட்டும் வரவில்லை! அவரை சந்திக்க முடியாத ஏமாற்றத்தில் அலைபேசியில் விசாரித்தேன். "நான் சந்தோஷங்களைத் தேடிக்கொண்டால் என்னை நம்பியவர்களின் (வேலைசெய்பவர்கள்) சந்தோஷம் தொலைந்துவிடுமே" என்றார். சில நொடிகள்  வார்த்தைகளற்று நின்றேன். தன்னுடைய வழிகாட்டியான BSA அப்துர்ரஹ்மான் அவர்களை போன்று பன்னாட்டு நிறுவனங்களை நிறுவி அதிகமதிகம் சமுதாயத்தில் வேலையில்லாமல் சிரமபட்டுவரும் நம் சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும், உலகளாவிய அளவில் ஒரு Microsoft நிறுவனம் போன்ற உயரிய  இடத்தை பிடிப்பதும் சகோதரியின் லட்சியமாகும் ! அதற்கான பாதையில் தான் பயணிக்கிறார். அல்லாஹ் இச்சகோதரியின் ஹலாலான செயல்களை அங்கீகரித்து அதில் வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்


                 இப்படி  போராட்டங்களுக்கும்  வெற்றிகளுக்கும்  சொந்தக்காரரான சகோதரி பாத்திமாவை பற்றி பார்த்தோம். வீட்டு நிர்வாகத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா?    இருவருடங்களுக்கு பின் துபாய்க்கு அழைத்துக்கொண்டி  அங்கேயே நல்லதொரு பள்ளியில் மகளைகளை சேர்த்து தரமான கல்வியை புகட்டினார். தன் வேலை பரபரப்புகளுக்கு மத்தியிலும் தன் இரு மகள்களின் கல்விக்கு பெரும் உதவி புரிந்தார்.  இரு பெண் குழந்தைகளையும் மார்க்க ஒழுங்கிலும், தனித்திறமைகளிலும் சீரிய பயிற்சி தந்து உருவாக்கினார். இதில் கணவரின் ஒத்துழைப்பு அபாரமானது.    சகோதரி அடிக்கடி நினைவுகூறுவார், " இரண்டு பொறுப்புகளும் என்னை சுமையாக அழுத்திய போது என் சிரமங்களை எல்லாம் சுமைதாங்கியாக நின்று என் மகள்களின்   கவனிப்பில் பங்குபோட்டு என்னை மிக்க ஆர்வமூட்டி எல்லா விதமான சாதனைகளையும் நிகழ்த்த உதவி செய்தவர் என் கணவர்தான். இறைவன் எனக்கு சிறந்த பெற்றோர்களையும், சிறந்த கணவரையும், சிறந்த பெண் குழந்தைகளையும் பாக்கியமாக்கி தந்தான். ஒரு பெண்ணுக்கு சிறந்த பெற்றோர்களும் மிக சிறந்த வாழ்க்கை துணையும் அமைந்து விட்டால் எத்தனை விதமான தடைகளையும் தாண்டி எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு என் வாழ்க்கை சிறந்த எடுத்துகாட்டு" என சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது.

                 மூத்த மகள் ஹுசைனா 95 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்து சென்னையில் MBBS பட்டம் பெற்றார். பொறியியல் வல்லுனரான இஜாஸ் அகமது காசிம் எனும் சாலிஹான கணவரின் ஒத்துழைப்புடன்   மருத்துவராக பணி செய்து வருகிறார்.  இரண்டாவது மகள் ரபீக்காவும் அதைப்போலவே 95 சதவீதம் மதிப்பெண் பெற்று   தற்போது மருத்துவ கல்வி இறுதியாண்டு பயின்று வருகிறார்.  அவர்களின் குடும்ப வழியில் முதல் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இவர்களே! தன் அன்னையை போலவே மகளும்  மருத்துவ கல்லூரியிலும் மார்க்க பேணுதலோடு ஹிஜாப் அணிந்தே பயின்று வந்தார்கள். தொழுகை,நோன்பு அனைத்து மார்க்க விசயங்களையும் விடாது கடைபிடிப்பவர்கள். சகோதரி பாத்திமா குடும்பத்தினரின் கனவு அரவிந்த் கண் மருத்துவமனை,சென்னை ஷைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் ,சென்னை ஹார்ட் பௌண்டேசன் போன்று தமிழ் நாட்டில் இலவச Multispeciality hospital தொடங்குவதும் , பெண்களுக்கான மருத்துவக்கல்லூரி ஏற்படுத்துவதுமாகும் ! மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக ! ஆமீன் !

                 ஒரு தொழிலதிபராய் உயர்ந்தும் கூட தன் சாதனைகளை தனதாக சொந்தமாக்கிக்கொள்ள சகோதரி முயற்சிக்கவில்லை.  ஒவ்வொரு முறையும்  தன் பயணங்களையெல்லாம் சொல்லும்போதெல்லாம் இறைவனின் கருணையை போற்றிக்கொண்டிருந்தார். இறுதியாக தன் பேட்டியை தன் சகோதரர்களுக்கு பிராத்தனை செய்து  இவ்வாறாக முடித்துக்கொண்டார் " தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் அனைவரும் என்னுடைய குடும்பத்திற்கு செய்த உதவிகள்,ஆதரவுகள்  காரணமாகவே நான் இந்த நிலையில் இருக்க முடிகிறது. அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் இறைவன் மென்மேலும் உயர்த்தி வைப்பானாக ! ஆமீன்"

                 முஸ்லிம் பெண்களுக்கு தகுந்த கல்வியும், பயிற்சியும் கொடுத்தால் அவர்கள் சமுதாயத்தில் ஆணுக்கு இணையான வளர்ச்சியை கொடுக்க முடியும் என்பதற்கு  இச்சாதனைப் பெண்மணிகள் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தனையோ சாதனைப்பெண்மணிகளை இந்த இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கிறது. கேமராக்களின் வெளிச்சத்தில் அகப்படாததால் யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கலாம். ஆனாலும் இவர்கள் தன்னை காண்போர்க்கெல்லாம் "நான் யாருக்கும் அடிமையில்லை" என்பதை தன் வாழ்வியல் மூலமாகவே உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில நாளில் ஹிஜாப் அணிந்த பெண்களை பரிதாபமாய் நோக்கும் பார்வை மாறும், புருவங்கள் உயரும், ஏன் ஹிஜாப் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வேலையே இல்லாது போகும் .. இன்ஷா அல்லாஹ்!    பெண்களின் வளர்ச்சி என்பது இச்சமுதாயத்தின் கூட்டுமுயற்சியால்   இன்னுமின்னும் பாதுகாப்பனதாகவும் அமையும். அவர்களுக்கான வழிகாட்டுதலும், உதவியும் செய்துகொடுத்தாலே பெண்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்து சமுதாயத்தில் ஜொலிப்பார்கள். இன்னுமின்னும் பல சாதனைப்பெண்மணிகளை  உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம் இன்ஷா அல்லாஹ்

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

-----

பேட்டி மற்றும் கட்டுரை உதவிக்கு : நன்றி

சகோதரி பர்வீன் பானு
சகோதரி உஷானா

2 comments:

 1. // சகோதரி பாத்திமா குடும்பத்தினரின் கனவு அரவிந்த் கண் மருத்துவமனை,சென்னை ஷைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் ,சென்னை ஹார்ட் பௌண்டேசன் போன்று தமிழ் நாட்டில் இலவச Multispeciality hospital தொடங்குவதும் , பெண்களுக்கான மருத்துவக்கல்லூரி ஏற்படுத்துவதுமாகும் ! மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக ! ஆமீன் ! //

  ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!

  ReplyDelete
 2. God bless you!
  Immanuel
  (Catholic blogwalking)

  ReplyDelete