Tuesday, August 04, 2015

முஸ்லிம் பெண்களும், விளையாட்டுப் போட்டிகளும்


                 விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட செயற்பாடு ஆகும். விளையாடுவதால் மனிதன் உடல்நலத்தையும் மன நலத்தையும் பெறலாம் என்பது நாம் அறிந்ததே. அதன் மூலம் சமூக நலத்தையும் பெறலாம். ஆம்   விளையாட்டுக்களில் பங்குப்பெறுவதால் தலைமைத்துவத் தன்மை வளர்கின்றது, ஒற்றுமை வளர்கின்றது. ஆனால் இவையெல்லாம் ஆண்களுக்கான உடைமையாக்கிவிட்டு பெண்களை ஒதுக்கி வைத்துள்ளோம் என்பது வருத்ததிற்குரிய செய்தி.

ஏன் பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் தேவை ? :
                                விளையாட்டுப் போட்டிகளில் பெண் குழந்தைகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.பெற்றோரும் ஊக்குவிப்பதில்லை. அதனால் அவர்கள் இழப்பது ஏராளம். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது ஒரு சுவாரஸ்யத்திற்காக வைக்கப்பட்ட முறையே.அதில் கலந்து கொண்டு தோற்கும் போது தோல்வியை சகஜமாக எண்ணப் பழகிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் தங்கள் வாழ்வில் ஏற்படும் தோல்விகளிலிருந்தும் நெருக்கடிகளில் இருந்தும் வெளியேற முடியாமல் அவதிப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.
கலந்து கொண்டு வெற்றி பெரும் பட்சத்தில் அளவிலா சந்தோஷமும் புத்துணர்ச்சியும் மேலும் மேலும் ஜெயிக்க வேண்டுமென்ற உத்வேகமும் ஏற்படுகிறது. போட்டிகள் நடக்கும் வேளையிலே சக போட்டியாளரை வீழ்த்த சடுதியில் உதிக்கும் யுக்திகளும், அதனை சரியாக கையாண்டு வெற்றி பெருவதும், பெண்கள் தங்கள் வாழ்க்கையில்அதனை செயல்படுத்த உதவுகிறது.

பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் பிள்ளைப்பேறுக்குப் பின் ஆரோக்கியத்தில் கவனமற்று போய் விடுகின்றனர். ஏற்கனவே போட்டிகளில் விளையாடிய அனுபவமிருந்தால், அதனைத் தொடர்வது உடல் ஆரோக்கியத்தோடு மன நலனையும் சீரடையச் செய்யும். உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

  • கிரிக்கெட்டில் 150 கிலோமீட்டர் வேகத்தில் யார்க்கர் பந்து வீசும்போது ஸ்டம்ப் பெயறுவதைத் தவிர வேறு வழியே இல்லை.ஆனால் அதையும் சிக்ஸராக்கி விடுவார் திறன்மிக்க விளையாட்டாளர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை இதில் அறியலாம்.
  • டென்னிஸில் எல்லைக்கோட்டருகே விழும் பந்து அதிவேகத்தின் காரணமாக உள்ளே வெளியே கணிக்க முடியாத போது ஸ்கேன் செய்து கண்டுபிடிப்பது தொழில்நுட்பத்தின் உச்சம். அந்த நேரத்தில் போட்டியாளரின் வெற்றியை நிர்ணயிப்பது அரை மில்லிமீட்டர்.
  • பேட்மிட்டணில் எடுக்கவே முடியாத ஸ்னேஷ் போட்டியாளரின் சக்தியின் அளவீடு.கால்பந்தாட்டத்தில் உள்ள நுணுக்கங்கள் பிரமிப்பானவை.
 விளையாட்டுப் போட்டிகளில் சந்தோஷிக்கவும் சிலாகிக்கவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன. அவை மனதிற்கு புத்துணர்ச்சி தந்து, ஆர்வத்துடன் நம்மை செயல்பட வைக்கும். 
வேறு என்னெல்லாம் தடை ? : 

                          முஸ்லிம் மாணவிகளை விளையாட்டில் பங்கேற்க விடாததற்கு இன்னொரு முக்கியக் காரணம், பள்ளி நேரம் முடிந்து பயிற்சி செய்ய வேண்டியிருப்பதும் , தனியே நேரங்கழித்து வீட்டிற்கு வரவேண்டியிருப்பதும், போட்டிகளில் பங்கேற்க வேறு ஊர்களுக்கு அனுப்ப பெற்றோர் விரும்பாததும் காரணங்களாகும். நம்முடைய பிள்ளைகளின் மன உறுதியையும் நம்பிக்கையையும் மேம்படுத்த பெற்றோர்கள் சில தியாகங்களை செய்தாக வேண்டும். விளையாட்டுக்களும் வாழ்வின் ஓர் அங்கமாய் நினைத்து ஊக்கப்படுத்துவதோடு அதில் பங்குபெறுவதற்கான பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்படுத்தலாம். வீட்டருகே பள்ளியை அமைத்துக்கொள்வது, அல்லது தனி பயிற்சியாளரை நியமிப்பது போன்ற விஷயங்கள் செய்துகொடுக்கலாம். பயிற்சி நேரங்களில் பெற்றோரும் பெண்ணுக்கு துணையாக இருக்கலாம். வெளியூர் மற்றும் வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் நேரடியாக தன் கண்காணிப்பின் கீழ் தன் பெண்ணை அழைத்துச் செல்லலாம். யாரோ ஒருவரின் வழிகாட்டலை விட அவளை நன்கு புரிந்துக்கொண்ட பெற்றோர்களின் ஊக்கமும் தைரியமும் உறுதியை ஏற்படுத்தும்.

உடையொரு தடையா?
 
                        இப்பொழுதெல்லாம் இஸ்லாமிய பெண்கள் முழு ஹிஜாபுடன் வாகை சூடுகின்றனர்.எவ்விதத்திலும் உடை தடையாய் இருந்ததில்லை. பஹ்ரைனை சேர்ந்த அல் கஸ்ரா என்ற வீராங்கனை.  2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் 100 மீட்டரில் வெண்கலமும் வென்றார். ஹிஜாப் அணிந்தே தான் இந்த சாதனையைப் படைத்தார்.   ஹிஜாப் எவ்விதத்திலும் அவருக்குத் தடையாய் இருக்கவில்லை. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் அவர் மட்டுமே ஹிஜாப் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

                       உலகத்தர போட்டிகளில் ஹிஜாபுடன் விளையாட பல போட்டிகளில் அனுமதிப்பதில்லை.அனைத்து உடற்தகுதியை பெற்றிருந்தும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர்.அவ்வேளையில் போட்டியை தவிர்த்து வெளியேறி விடுகின்றனர். எடை தூக்கும் அமெரிக்க வீராங்கனை குல்ஸும் அப்துல்லாஹ் ஹிஜாப் அணிவதால் தேசியாளவில் நடந்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார் .  ஜோர்தானுடனான லண்டன் ஒலிம்பிக் தகுதிகாண் மகளிர் கால்பந்து போட்டியில் ஹிஜாப் அணிந்து
விளையாட களமிறங்கிய ஈரான் அணி மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டது. இதற்காக எந்த எதிர்ப்பையும் நம்மால் தெரிவிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. ஆனால் நம் உரிமைகள் மறுக்கப்படும் போது வளைந்து கொடுக்காது தலைநிமிர்வதில் இருக்கும் கர்வம் இறைவனிடத்தில் உவப்பானது இல்லையா ?

                         இஸ்லாமிய பெண்களுக்கு உடை கட்டுப்பாடு இருப்பதால் தொடர்வதில் சிக்கல் இருப்பதாக நினைக்கலாம். அவ்வபோது அத்தகைய செய்திகள் வருவதால்தேவையில்லாமல் ஏன் போட்டியில் கலந்துக்கொள்ள செல்லவேண்டும் எனும் மனநிலையில் , விளையாட்டுபோட்டிகளில் இருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். மேலும் நம்மால் வெற்றிபெற முடியாதோ என்றும் அச்சம்கொள்கின்றனர். வெற்றியின் மற்றொரு வடிவமே தோல்வி. வெற்றி மகிழ்ச்சி என்றால் தோல்வி தருவதோ நிறைவு.நம்மை அவள் போராடித் தானே வென்றாள்? நாம் அவளின் வெற்றியை சுலபமாக்க வில்லையே? என்பதே மிகப்பெரிய மனநிறைவு.


ஓரிடத்தில் பார்த்த இந்த வரி என்னை மிகவும் கவர்ந்தது. இப்பதிவுக்கு பொருந்துமென இங்கே கொடுக்கிறேன்
தோல்வி பழகாத வெற்றி
தோற்கத் தாங்காது.
தோல்வி பழகிய வெற்றி
தோற்றாலும் தளராது.
                              ஆபாசம் நிறைந்த திரைப்படங்கள், எதுவுமே இல்லாத குடும்பப் பிரச்சனையை பெரிதுப்படுத்த கற்றுத்தரும் நாடகங்கள், இவற்றை பார்ப்பதை தவிர்த்து விட்டு விளையாட்டுப் போட்டிகளை பார்ப்பதை ஊக்குவிக்கலாம். முடிந்தவரை வாய்ப்புள்ள போட்டிகளில் ஹிஜாபுடன் கலந்து கொள்ள முயற்சிக்கலாம், முடியவில்லை எனில் விட்டு விலகலாம்.
இம்மையை விட மறுமையின் வெற்றி மகத்தானது என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக தெரியாது. புர்கா அணிந்துதான் விளையாட வேண்டும் என்பதில்லை.  முழு காற்சட்டை, கைச்சட்டை, நன்றாக கவர் பண்ணிய ஸ்கார்ஃப் போதுமானது. சிறப்பான பயிற்சியாளரை நியமிப்பது  மூலமும்  சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும்  பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்வதை ஊக்கப்படுத்த ஆவன செய்யவேண்டும்.


                              சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்களை விளையாட்டுக் களங்களிலும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். வீட்டு்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் நாமல்ல என்று சமுதாயத்திற்கு விளங்க வைக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் அவையங்களை மறைத்து அறிவோடு தீரத்தையும் திண்ணத்தோடு வெளிப்படுத்த நாம் நம் பெண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். எதிர்காலத்தில் அல் கஸ்ரா போன்ற பலர் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து உருவாக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். ஹராம் என ஹலானாதையெல்லாம் ஒதுக்கி தனித்து நிற்காமல் , நம் பெண்களின் திறமைகளையும் உலகறிய செய்ய உலக நீரோட்டத்தில் கலப்போம் இன்ஷா அல்லாஹ்....

உங்கள் சகோதரி
சித்தி நிஹாரா

No comments:

Post a comment