Wednesday, August 26, 2015

ப்ளாஸ்டிக் 'குப்பை மலை'கள் 'பணமழை'யாக மாறும் அதிசயம்

             நம் வீட்டில் ஒரு விஷேஷம் என்றால், கடைக்கு போய் "அந்த ப்ளாஸ்டிக் ப்ளேட் இருபது டஜன் தாங்க, கூடவே ப்ளாஸ்டிக் கப் ஐம்பது டஜன், ப்ளாஸ்டிக் கவர் பெரிய சைஸ் ஒரு ஐநூறு, சிறிய சைஸ் ஒரு ஐநூறு கொடுங்க" என ஒரு கடையில் கடகடவென நம் லிஸ்டை ஒப்பித்து, பொருட்களை வாங்கிவிட்டு, பக்கத்து கடையில் மினரல் வாட்டர் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை லிட்டர் லிட்டராக வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.

             வீடுகளில் எங்கு பார்த்தாலும் யூஸ் & த்ரோ வகை சாதனங்கள் தான். அதில் பெரும்பாலும் ப்ளாஸ்டிகால் ஆனவை தான். பல்வேறு அழகிய நிறங்கள், மாடல்கள், கையடக்க நவீன பேஷனாக நாம் அனைவரும் உபயோகித்து,  தூக்கி எறிவது தான் இவை. விலையோ மிக குறைவு, வசதிகளோ ஏராளம் என்பது தான் இதன் நாம் பயன்படுத்துவதின் நோக்கம்.

(சரி விஷயத்துக்கு வருவோம்)

             ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருவது இந்த ப்ளாஸ்டிக் குப்பைகள் தான். பல நாடுகளில் மலைகள் உள்ளதோ இல்லையோ, மலைமலையாக குமிந்துக் கிடக்கின்றன இந்த ப்ளாஸ்டிக் குப்பைகள். நம் இந்தியாவை போல கோடிக்கணக்கான டன் எடை ப்ளாஸ்டிக் குப்பைகள் எகிப்திலும் கொட்டி கிடக்கிறது.

             'சுற்றுச்சூழலை பற்றி நமக்கென்ன கவலை?' என்று இல்லாமல், ப்ளாஸ்டிக் குப்பைகளுக்கான தீர்வை யோசிக்க ஆரம்பித்தார் எகிப்தில் உள்ள அலெக்ஜான்ட்ரியாவை சேர்ந்த இளம் பெண் அஜ்ஜா ஃபயத். அவர் கண்டுபிடித்து இருக்கும் ஆராய்ச்சி ஏற்கனவே இருக்கும் முறைகளை விட மிகவும் குறைவான செலவில் செய்யக் கூடியது. இந்த முறையை செயல்படுத்தினால் வருடத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் லாபம் பெற முடியும்.

 
             பொதுவாக ஆராய்ச்சிகூடங்கள் தங்கள் இடங்களில் இவரை போன்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி அளிக்கமாட்டார்கள். ஆனால் அஜ்ஜாவின் யோசனைகளும் ஆராய்ச்சிகளும் மிகவும் நுணுக்கமாகவும் தேர்ச்சி பெற்றதாகவும் இருந்த காரணத்தினால், எகிப்து பெட்ரோல் ஆராய்ச்சி நிறுவனம் (Egyptian Petroleum Research Institute) இவரின் ஆராய்ச்சியை மேலும் பயனளிக்கக்  கூடிய வகையில் மெருகூட்ட தங்கள் கூடத்தில்  அனுமதி தந்துள்ளது.

             அஜ்ஜா  மிகவும் குறைந்த செலவில் அதிகமாக கிடைக்கக்கூடிய கேடலிஸ்டான(catalyst) 'அலுமினோசிலிகேட்' (aluminosilicate) பயன்படுத்துவதால், மற்ற முறைகளை விட இந்த முறையை கையாண்டால் பெருத்த செலவினை மிச்சம் பிடிக்கலாம். ப்ளாஸ்டிக் குப்பைகளை அலுமினோசிலிகேட் பயன்படுத்தி மீத்தேன் மற்றும் ப்ரோப்பேன் வாயுக்களாக மாற்றிய பின்னர் எத்தனால்(Ethanol) வாயுவாக மாற்றப்படுகிறது.

             காய்கறி போன்ற இயற்கை கழிவுகளில் இருந்து  எத்தனால் (ethanol) தயாரிக்கப்படுவதால்,  அது  தாவர எரிவாயு (biofuel) என அழைக்கப்படுகிறது. அஜ்ஜாவின் ஆராய்ச்சியின் முடிவில் அதே எத்தனால் வாயு கிடைப்பதால் அதை biofuel எனற பெயரை பெறுகிறது.

             இவரின் ஆராய்ச்சியில் எத்தனாலுடன் வேறு சில வேதி பொருட்களும் கிடைக்கிறது. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ய ஏதுவானதாக உள்ளது கூடுதல் சிறப்பம்சம். எகிப்தில் உள்ள ப்ளாஸ்டிக் குப்பைகளை மட்டும் வைத்து இந்த முறையின் மூலம் வருடத்திற்கு $78 கோடிகள் பெறமுடியும் என கணக்கிட்டுள்ளனர்.

             முழு மூச்சாக இன்னும் ப்ளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை இவர் ஆராய்ச்சியின் மூலமாக மாற்றினால், வருடத்திற்கு $163 கோடி வருமானம் வரை அதன் தொகையை உயர்த்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அஜ்ஜா.

             நாளைய எதிர்காலத்தை சிறப்பிக்கும்படியான ஆராய்ச்சியில் ஈடுபடுவதே என் பள்ளி கனவுகளாக இருந்தது என்கிறார் அஜ்ஜா பொறுப்புணர்வுடன். இந்த ஆராய்ச்சிக்காக அவர் கனடா, நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு   வலம் வருகிறார்.

             '14 முதல் 18 வயது இளம் விஞ்ஞானிகளுக்கான European Union contest for young scientists 2011 போட்டியில் என்னுடைய ப்ராஜெக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. 15 வயதில் நான் செய்த பள்ளிக்கால ப்ராஜெக்ட் தான் என்னை இவ்வளவு தூரம் சிந்திக்க வைத்து, விஞ்ஞானியாக மாற்றியது. உங்கள் இளமை காலத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள்", என தான் செல்லும் நாடுகளில் உள்ள மாணவர்களை ஊக்குவித்து வருகிறார் அஜ்ஜா ஃபயத்.

             இஸ்லாமிய பெண்கள் தன் தலையை மறைப்பதோடு தன் மூளைக்கும் மூடி போடப்பட்டு வீட்டில் முடக்கப்படுகிறார்கள் என்ற மூடர்களின் கருத்தினை முறியடித்த, மற்றுமொரு சாதனைப்பெண் அஜ்ஜா என்பதில் சந்தேகமில்லை. மா ஷா அல்லாஹ்.

நாமும் அவரை பாராட்டி, நன்கு பயனளிக்கும் விதமாக அவரின் ஆராய்ச்சி வெளிவர இறைவனை பிரார்த்திப்போமாக.


உங்கள் சகோதரி,
தாஹிரா பானு.

read more "ப்ளாஸ்டிக் 'குப்பை மலை'கள் 'பணமழை'யாக மாறும் அதிசயம்"

Thursday, August 13, 2015

அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப்பெண்மணி (2ம் பாகம்)


                 பெண்களுக்கான பொறுப்புகள் என்பது இறைவனால் ஒப்படைக்கப்பட்ட அமானிதம். அதனை சரியாக நிறைவேற்றுவதற்காகவே அல்லாஹ்   பக்குவம், திறன், அறிவு முதலியவற்றை சிறப்பாக வழங்கியுள்ளான். ஆனால் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்தி, இவ்வுலக வாழ்வை  திருப்தியுடன் கழிக்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. பல பெண்களுக்கு இவ்வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அதன்  காரணம் ஆணாதிக்கமே அன்றி இஸ்லாம் அல்ல.. அதனாலேயே  ஆணாதிக்கமற்ற இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கும்   பெண்கள்     ஜொலிக்கின்றனர். அத்தகைய வைரத்திலொன்று தான் சகோதரி பாத்திமா இஸ்மாயில்.


போனப்பதிவின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.

                  பார்த்துக்கொண்டிருந்த அரசு உதவி மின் பொறியலாளர் பணியில் தொடர் அழுத்தங்கள், பணியிட மாறுதல்களைச் சமாளித்துக்கொண்டு வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சிந்திக்கத் தொடங்கினார். அப்போது கணவர் துபாயில் வேலையில் சேர்ந்திருந்தார். தனித்தனியே இருப்பதை விட துபாய்க்கே தானும் கணவருடன் சென்று விடலாம் என தீர்மானித்தார். ஆனாலும் தன் பெற்றோரின் கனவும், தன்னுடைய லட்சியமும் எந்த விதத்திலும் தடைபட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.  தனது இரு மகள்களையும் தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு துபாய்க்கு பயணமானார். குழந்தைகள் பாட்டியின் அரவணைப்பில் இரு வருடங்கள் இருந்தனர்.

துபாய்,1996.

                 புது சூழல்! புது உலகம்...   வேறு வழியில்லை, ஆரம்பத்திலிருந்து மீண்டும் முன்னேறத்தான் வேண்டும். தன்னால் முடிந்தவற்றையெல்லாம் நிரூபிப்பதன் மூலம் வளர்ச்சியை எட்டலாம் என்பது சகோதரி பாத்திமாவின் திட்டம். Al ghandi switchgear industryல் சாதாரண Estimation Engineer  ஆக பணியை தொடங்கி 2001 வரை  தொடர்ந்தார்.

                 அமீரகத்தில் வந்து இறங்கியதும்  உடன்பிறந்த தம்பி அனஸ்  தன் அக்காவிற்கான துறையில் வேலைக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.   " என்னுடைய உயர்வுக்கும், உழைப்புக்கும் சிறந்த பக்க பலமாக,ஆதரவாக,தூண்டுதலாக இருந்தவர்கள் என் சகோதரர்கள் தான்.   துபாயில்  எனக்கு உதவிய அனஸ் மற்றும் அவர் மனைவியை அவரின்   என்னால் ஒரு போதும் நினைவு கூறாமல் இருக்க இயலாது. " என்று கூறி தன் சகோதரர்களை  நினைவு கூர்ந்தார்.  சகோதரர் அனஸ் அவர்களின் மனைவி பர்வீன் பானு  நம் இஸ்லாமியப் பெண்மணி ஆசிரியர்களில்  ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                 துபாய், எட்ட முடியா  வளர்ச்சிக்கு சொந்தமான பூமி என்றாலும்   நம் இந்தியாவைப் போன்றே  சவால்மிக்க பணிகளை பெண்களுக்கு கொடுக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் கூட இருந்து வருகிறது. ஆனால் 2008ம் ஆண்டு MASSEERA INDUSTRIAL SWITCHGEAR  என்ற சார்ஜாவிலுள்ள கம்பெனியின் முதல்வர் வியாபாரத்தை தனி ஆளாக நடத்தக்கூடிய திறமையை பாத்திமாவிடம்   இருப்பதைக் கண்டார். சாதாரண ஒரு பெண் தானே, என்ன பெரிதாய் சாதித்து விட முடியும் என்றெல்லாம் அந்த மனிதர் நினைக்கவில்லை.  பணிப் பொறுப்புகள் உயர்த்தப்பட்டதால் சகோதரியின்  திறமையைப் பாராட்டி 3 வருடங்களில் Manager- operations   என்ற பொறுப்பு தரப்பட்டு கம்பெனி முழுவதும் சகோதரியின்  பொறுப்பில் ஒப்படைத்தார். 60 முதல் 70 வரை பணியாளர்கள் இருக்கும் ஒரு தொழிற்சாலையை திறம்பட நிர்வகிக்கும்   வாய்ப்பை , நல்ல முறையில் நிறைவேற்றினார்.


                 ஹிஜாப் அணிந்திருந்தாலே ஆண்களுடன்   சரிநிகராய் நின்று பேசமாட்டார்கள், வெளிநாடுகளுக்கு  பணி நிமித்தம் பயணம் செய்ய மாட்டார்கள், அச்சமுடையவர்கள், வியாபாரம் செய்யும் தகுதியற்றவர்கள் என்று எண்ணி தான் இக்கம்பெனியின் நிறுவனரும்,  எஸ்டிமேஷன் மட்டுமே செய்தால் போதுமென கூறி பணிக்கு அமர்த்தினார்கள். ஆனால்  "இவரால் முடியாது" என சொன்னவற்றையல்லாம் "என்னாலும் முடியும்" என்று   உடையில் மட்டுமல்ல  தன் செயல்களிலும் ஹிஜாப் பேணி செய்துகாட்டினார்.   எல்லாத் தடைகளையும் இடித்து நகர்த்தி மிகச்சிறந்த பதவியை மிகக் குறைந்த காலத்தில் அடைந்தார். புது பரிணாமமாய் அவரின்  அசூர வளர்ச்சியின் தொடக்கம் பற்றி கேட்டபோது அவர் அளித்த பதில் "இறைவனின் கிருபையால் என்னுடைய முதலாளியும் அதற்கேற்றார் போன்று என்னை எல்லாவிதமான துறைகளிலும் ஊக்குவித்து,கார் டிரைவிங் லைசென்ஸ் , கார் எல்லாம் கொடுத்து , பெரிய  சாதனைகள் படைக்குமளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கொடுத்தது இறைவன் எனக்கு தந்த பாக்கியம்" என்றார்.

                 2008ம் ஆண்டு வரை  MASSEERA வில் பணி தொடர்ந்தார். மின்சாரப் பாதுகாப்புக்காக உபயோகப்படுத்தப்படும் switchgear தொழிற்சாலைப்  பற்றிய    வியாபார நுணுக்கங்கள், தயாரிக்கும் முறைகள், Production,Design போன்ற எல்லாவிதமான திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இங்கு தான் இறைவன் ஏற்படுத்தி தந்தான். அதன் பின்  சகோதரி  பாத்திமாவின் சகோதரர்களும், கணவரும் இணைந்து  புதிதாக  தொழில் தொடங்க திட்டமிட்டனர். இத்தனை ஆண்கள் இருந்தும் கூட   ஒட்டுமொத்த ஆண்களும் தாங்கள் நிறுவிய START ELECTRICAL SWITCHGEAR   கம்பெனிக்கு  ஒரு பெண்ணை தான் Managing Director ஆக நியமனம் செய்து அழகு பார்த்தனர். 2012 வரை இந்த கம்பெனி சிறப்பாக செயல்பட்டது.  அதன் பின் தற்காலிக பங்குதாரர்களின் அழுத்தத்தால், அங்கு ஏற்பட்ட பெரிய திருட்டாலும்  கைநழுவிப்போனது.  ஆனால் இறைவன் ஒரு கதவை அடைத்து பல வழிகளை காட்டினான்.

                 தன் கனவு சிதைவதை காணும் எந்த ஒரு பெண்ணும் துவண்டுவிடுவாள்.  இனி இதற்குமேல் எதுவும் செய்யவேண்டாமென முடிவெடுப்பாள். ஆனால் சகோதரி பாத்திமா மனதளவில் வருத்தங்கொண்டிருந்தாரே ஒழிய தன் திறமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த நேரத்தில்  தம்பி இஸ்மாயில் தனது தொழிலுக்காக வைத்திருந்த முதலை தன் அக்காவிற்காக தியாகம் செய்து மீண்டும் புது தொழிற்சாலை அமைக்க ஊக்கப்படுத்தினார். அப்படி உருவான   CONNECT SWITCHGEAR தான் இப்போது   சார்ஜா, அபுதாபி, சவூதி அரேபியா, நைஜீரியா ஆகிய இடங்களிலும்  பல கிளைகளுடன் இயங்கி வருகிறது.  . கணவர் இஸ்மாயில் சேர்மனாக பதவி ஏற்றுக்கொண்டு தன் மனைவியின் வளர்ச்சிக்கு இடைவிடாது உழைத்துக்கொண்டிருக்கிறார்.   UAE ல் மட்டும் 478க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. ஆனால் அந்த  தொழில் முனைவோர் பட்டியலில்   இடம் பெற்ற ஒரே பெண் சகோதரி பாத்திமா தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

                 டென்மார்க்,ஜெர்மனி,ஸ்ரீலங்கா ,பிரான்ஸ்,ஸ்பெயின்,சிங்கப்பூர்,சவுதி அரேபியா,கத்தார்,ஓமன் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து   அந்த நாடுகளிலுள்ள சிறந்த நடைமுறை,வியாபார,தயாரிப்பு கூடங்களின் சிறந்த அணுகுமுறைகளை தன்னுடைய தொழிற்சாலையிலும் உருவாக்கி உலகத்தரமிக்க சாதனங்களை விநியோகிக்கிறார்.    வேலையில்லாமல் சிரமப்பட்டுவரும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கும் வேலை வாய்ப்பு தருவதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் உதவ முடிந்தது. தற்போது அவரின் கீழ் 70க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகிறார்கள்.  கடந்த ரமலான்க்காக அவர் குடும்பத்தினர் அனைவரும் தன் சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தனர். சகோதரி மட்டும் வரவில்லை! அவரை சந்திக்க முடியாத ஏமாற்றத்தில் அலைபேசியில் விசாரித்தேன். "நான் சந்தோஷங்களைத் தேடிக்கொண்டால் என்னை நம்பியவர்களின் (வேலைசெய்பவர்கள்) சந்தோஷம் தொலைந்துவிடுமே" என்றார். சில நொடிகள்  வார்த்தைகளற்று நின்றேன். தன்னுடைய வழிகாட்டியான BSA அப்துர்ரஹ்மான் அவர்களை போன்று பன்னாட்டு நிறுவனங்களை நிறுவி அதிகமதிகம் சமுதாயத்தில் வேலையில்லாமல் சிரமபட்டுவரும் நம் சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும், உலகளாவிய அளவில் ஒரு Microsoft நிறுவனம் போன்ற உயரிய  இடத்தை பிடிப்பதும் சகோதரியின் லட்சியமாகும் ! அதற்கான பாதையில் தான் பயணிக்கிறார். அல்லாஹ் இச்சகோதரியின் ஹலாலான செயல்களை அங்கீகரித்து அதில் வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்


                 இப்படி  போராட்டங்களுக்கும்  வெற்றிகளுக்கும்  சொந்தக்காரரான சகோதரி பாத்திமாவை பற்றி பார்த்தோம். வீட்டு நிர்வாகத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா?    இருவருடங்களுக்கு பின் துபாய்க்கு அழைத்துக்கொண்டி  அங்கேயே நல்லதொரு பள்ளியில் மகளைகளை சேர்த்து தரமான கல்வியை புகட்டினார். தன் வேலை பரபரப்புகளுக்கு மத்தியிலும் தன் இரு மகள்களின் கல்விக்கு பெரும் உதவி புரிந்தார்.  இரு பெண் குழந்தைகளையும் மார்க்க ஒழுங்கிலும், தனித்திறமைகளிலும் சீரிய பயிற்சி தந்து உருவாக்கினார். இதில் கணவரின் ஒத்துழைப்பு அபாரமானது.    சகோதரி அடிக்கடி நினைவுகூறுவார், " இரண்டு பொறுப்புகளும் என்னை சுமையாக அழுத்திய போது என் சிரமங்களை எல்லாம் சுமைதாங்கியாக நின்று என் மகள்களின்   கவனிப்பில் பங்குபோட்டு என்னை மிக்க ஆர்வமூட்டி எல்லா விதமான சாதனைகளையும் நிகழ்த்த உதவி செய்தவர் என் கணவர்தான். இறைவன் எனக்கு சிறந்த பெற்றோர்களையும், சிறந்த கணவரையும், சிறந்த பெண் குழந்தைகளையும் பாக்கியமாக்கி தந்தான். ஒரு பெண்ணுக்கு சிறந்த பெற்றோர்களும் மிக சிறந்த வாழ்க்கை துணையும் அமைந்து விட்டால் எத்தனை விதமான தடைகளையும் தாண்டி எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு என் வாழ்க்கை சிறந்த எடுத்துகாட்டு" என சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது.

                 மூத்த மகள் ஹுசைனா 95 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்து சென்னையில் MBBS பட்டம் பெற்றார். பொறியியல் வல்லுனரான இஜாஸ் அகமது காசிம் எனும் சாலிஹான கணவரின் ஒத்துழைப்புடன்   மருத்துவராக பணி செய்து வருகிறார்.  இரண்டாவது மகள் ரபீக்காவும் அதைப்போலவே 95 சதவீதம் மதிப்பெண் பெற்று   தற்போது மருத்துவ கல்வி இறுதியாண்டு பயின்று வருகிறார்.  அவர்களின் குடும்ப வழியில் முதல் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இவர்களே! தன் அன்னையை போலவே மகளும்  மருத்துவ கல்லூரியிலும் மார்க்க பேணுதலோடு ஹிஜாப் அணிந்தே பயின்று வந்தார்கள். தொழுகை,நோன்பு அனைத்து மார்க்க விசயங்களையும் விடாது கடைபிடிப்பவர்கள். சகோதரி பாத்திமா குடும்பத்தினரின் கனவு அரவிந்த் கண் மருத்துவமனை,சென்னை ஷைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் ,சென்னை ஹார்ட் பௌண்டேசன் போன்று தமிழ் நாட்டில் இலவச Multispeciality hospital தொடங்குவதும் , பெண்களுக்கான மருத்துவக்கல்லூரி ஏற்படுத்துவதுமாகும் ! மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக ! ஆமீன் !

                 ஒரு தொழிலதிபராய் உயர்ந்தும் கூட தன் சாதனைகளை தனதாக சொந்தமாக்கிக்கொள்ள சகோதரி முயற்சிக்கவில்லை.  ஒவ்வொரு முறையும்  தன் பயணங்களையெல்லாம் சொல்லும்போதெல்லாம் இறைவனின் கருணையை போற்றிக்கொண்டிருந்தார். இறுதியாக தன் பேட்டியை தன் சகோதரர்களுக்கு பிராத்தனை செய்து  இவ்வாறாக முடித்துக்கொண்டார் " தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் அனைவரும் என்னுடைய குடும்பத்திற்கு செய்த உதவிகள்,ஆதரவுகள்  காரணமாகவே நான் இந்த நிலையில் இருக்க முடிகிறது. அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் இறைவன் மென்மேலும் உயர்த்தி வைப்பானாக ! ஆமீன்"

                 முஸ்லிம் பெண்களுக்கு தகுந்த கல்வியும், பயிற்சியும் கொடுத்தால் அவர்கள் சமுதாயத்தில் ஆணுக்கு இணையான வளர்ச்சியை கொடுக்க முடியும் என்பதற்கு  இச்சாதனைப் பெண்மணிகள் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தனையோ சாதனைப்பெண்மணிகளை இந்த இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கிறது. கேமராக்களின் வெளிச்சத்தில் அகப்படாததால் யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கலாம். ஆனாலும் இவர்கள் தன்னை காண்போர்க்கெல்லாம் "நான் யாருக்கும் அடிமையில்லை" என்பதை தன் வாழ்வியல் மூலமாகவே உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில நாளில் ஹிஜாப் அணிந்த பெண்களை பரிதாபமாய் நோக்கும் பார்வை மாறும், புருவங்கள் உயரும், ஏன் ஹிஜாப் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வேலையே இல்லாது போகும் .. இன்ஷா அல்லாஹ்!    பெண்களின் வளர்ச்சி என்பது இச்சமுதாயத்தின் கூட்டுமுயற்சியால்   இன்னுமின்னும் பாதுகாப்பனதாகவும் அமையும். அவர்களுக்கான வழிகாட்டுதலும், உதவியும் செய்துகொடுத்தாலே பெண்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்து சமுதாயத்தில் ஜொலிப்பார்கள். இன்னுமின்னும் பல சாதனைப்பெண்மணிகளை  உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம் இன்ஷா அல்லாஹ்

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

-----

பேட்டி மற்றும் கட்டுரை உதவிக்கு : நன்றி

சகோதரி பர்வீன் பானு
சகோதரி உஷானா

read more "அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப்பெண்மணி (2ம் பாகம்)"

Tuesday, August 11, 2015

She-Taxi புதுமையான அத்தியாவசிய முயற்சி

                 
                லகில் அன்றாடம் பெண்ளுக்கெதிரான வன்முறைகள் பெருகி வருவதையும் அவற்றைக் கவலையுடன் கடந்து செல்வதும் அப்போதைக்குப் போராட்டங்கள் நிகழ்த்துவதும் பாதுகாப்பினை மேற்கொள்வதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது.

               உதவுவதைக் காட்டிலும் உழைப்பதற்கான வழிகளைக் காண்பித்துக் கொடுப்பதே உயர்வானதும் இன்றியமையாததுமாகும். அப்பொழுது தான் ஆண்கள் தரும் சொற்ப வருமானத்திற்காக அவர்களது கொடுமைகளைப் பொறுத்துப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறையும். மகளிர் பேருந்து, மகளிர் ரயில் இவற்றின் வரிசையில் இந்தியாவிலேயே முதல்முறையாகக் கேரள மாநிலத்தில் நவம்பர் 2013ல் ஷீ டேக்ஸி She-Taxi அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெற்றிகரமான பலன்கள் ஷீ பஸ் She-Bus என்ற புதிய பரிணாமத்திற்கு வழிவகுத்துள்ளது. 

5 ஓட்டுநர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஷீ டேக்சி ஓட்டுநர்களில் ஒரு பெண் முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது
                மும்பையில் ப்ரியதர்ஷினியாகவும் டெல்லியில் ஜிகேப்ஸாகவும் பெண் டேக்ஸி ஓட்டுனர்கள் வலம்வந்தாலும் இவ்வனைத்திலிருந்தும் ஷீ டேக்ஸி பல விஷயங்களில் தனித்து நிற்கிறது. கேரள அரசின் சமூகநீதித்துறையின் கீழ் 'ஜென்டர் பார்க்' மூலமாகத் துவங்கப்பட்ட ஷீ டேக்ஸியின் ஓட்டுனர்கள் மட்டுமின்றி அவற்றின் உரிமையாளர்களும் முற்றிலும் பெண்களே.
 
                வாகன ஓட்டுனர் அருகிலும் பயணிப்பவர் அருகிலுமாகப் பொருத்தப்பட்டுள்ள இரு எச்சரிக்கை அலாரங்கள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கவை.  பெண்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை என்பதால் வாகனக் கட்டணங்கள் அனைவரும் விரும்பும் வண்ணம் குறைவாகவே வகுக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் மாதம் ரூ. 15000 - 20000 வரை பொருளீட்டுகின்றனர். ஷீ டேக்ஸியின் வெற்றியைப் பாராட்டிய உலகவங்கி ஷீ பஸ்ஸின் She-Bus உருவாக்கத்திற்கு உதவுகிறது.
பல்வேறு மாநிலப்பெண்களுக்குக் கிட்டியிருக்கும் இந்த மகளிர் டேக்ஸி பாதுகாப்புச் சேவை, தமிழகப் பெண்களுக்குக் கிடைக்குமா? பெண் முதலாளிகள் உருவாக்கப்படுவார்களா? அரசு அக்கறை காட்டுமா?

உங்கள் சகோதரி,
பானு

-------------
தகவல்:
NDTV
She Taxi official website
Wikipedia
read more " She-Taxi புதுமையான அத்தியாவசிய முயற்சி"

Tuesday, August 04, 2015

முஸ்லிம் பெண்களும், விளையாட்டுப் போட்டிகளும்


                 விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட செயற்பாடு ஆகும். விளையாடுவதால் மனிதன் உடல்நலத்தையும் மன நலத்தையும் பெறலாம் என்பது நாம் அறிந்ததே. அதன் மூலம் சமூக நலத்தையும் பெறலாம். ஆம்   விளையாட்டுக்களில் பங்குப்பெறுவதால் தலைமைத்துவத் தன்மை வளர்கின்றது, ஒற்றுமை வளர்கின்றது. ஆனால் இவையெல்லாம் ஆண்களுக்கான உடைமையாக்கிவிட்டு பெண்களை ஒதுக்கி வைத்துள்ளோம் என்பது வருத்ததிற்குரிய செய்தி.

ஏன் பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் தேவை ? :
                                விளையாட்டுப் போட்டிகளில் பெண் குழந்தைகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.பெற்றோரும் ஊக்குவிப்பதில்லை. அதனால் அவர்கள் இழப்பது ஏராளம். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது ஒரு சுவாரஸ்யத்திற்காக வைக்கப்பட்ட முறையே.அதில் கலந்து கொண்டு தோற்கும் போது தோல்வியை சகஜமாக எண்ணப் பழகிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் தங்கள் வாழ்வில் ஏற்படும் தோல்விகளிலிருந்தும் நெருக்கடிகளில் இருந்தும் வெளியேற முடியாமல் அவதிப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.
கலந்து கொண்டு வெற்றி பெரும் பட்சத்தில் அளவிலா சந்தோஷமும் புத்துணர்ச்சியும் மேலும் மேலும் ஜெயிக்க வேண்டுமென்ற உத்வேகமும் ஏற்படுகிறது. போட்டிகள் நடக்கும் வேளையிலே சக போட்டியாளரை வீழ்த்த சடுதியில் உதிக்கும் யுக்திகளும், அதனை சரியாக கையாண்டு வெற்றி பெருவதும், பெண்கள் தங்கள் வாழ்க்கையில்அதனை செயல்படுத்த உதவுகிறது.

பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் பிள்ளைப்பேறுக்குப் பின் ஆரோக்கியத்தில் கவனமற்று போய் விடுகின்றனர். ஏற்கனவே போட்டிகளில் விளையாடிய அனுபவமிருந்தால், அதனைத் தொடர்வது உடல் ஆரோக்கியத்தோடு மன நலனையும் சீரடையச் செய்யும். உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

  • கிரிக்கெட்டில் 150 கிலோமீட்டர் வேகத்தில் யார்க்கர் பந்து வீசும்போது ஸ்டம்ப் பெயறுவதைத் தவிர வேறு வழியே இல்லை.ஆனால் அதையும் சிக்ஸராக்கி விடுவார் திறன்மிக்க விளையாட்டாளர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை இதில் அறியலாம்.
  • டென்னிஸில் எல்லைக்கோட்டருகே விழும் பந்து அதிவேகத்தின் காரணமாக உள்ளே வெளியே கணிக்க முடியாத போது ஸ்கேன் செய்து கண்டுபிடிப்பது தொழில்நுட்பத்தின் உச்சம். அந்த நேரத்தில் போட்டியாளரின் வெற்றியை நிர்ணயிப்பது அரை மில்லிமீட்டர்.
  • பேட்மிட்டணில் எடுக்கவே முடியாத ஸ்னேஷ் போட்டியாளரின் சக்தியின் அளவீடு.கால்பந்தாட்டத்தில் உள்ள நுணுக்கங்கள் பிரமிப்பானவை.
 விளையாட்டுப் போட்டிகளில் சந்தோஷிக்கவும் சிலாகிக்கவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன. அவை மனதிற்கு புத்துணர்ச்சி தந்து, ஆர்வத்துடன் நம்மை செயல்பட வைக்கும். 
வேறு என்னெல்லாம் தடை ? : 

                          முஸ்லிம் மாணவிகளை விளையாட்டில் பங்கேற்க விடாததற்கு இன்னொரு முக்கியக் காரணம், பள்ளி நேரம் முடிந்து பயிற்சி செய்ய வேண்டியிருப்பதும் , தனியே நேரங்கழித்து வீட்டிற்கு வரவேண்டியிருப்பதும், போட்டிகளில் பங்கேற்க வேறு ஊர்களுக்கு அனுப்ப பெற்றோர் விரும்பாததும் காரணங்களாகும். நம்முடைய பிள்ளைகளின் மன உறுதியையும் நம்பிக்கையையும் மேம்படுத்த பெற்றோர்கள் சில தியாகங்களை செய்தாக வேண்டும். விளையாட்டுக்களும் வாழ்வின் ஓர் அங்கமாய் நினைத்து ஊக்கப்படுத்துவதோடு அதில் பங்குபெறுவதற்கான பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்படுத்தலாம். வீட்டருகே பள்ளியை அமைத்துக்கொள்வது, அல்லது தனி பயிற்சியாளரை நியமிப்பது போன்ற விஷயங்கள் செய்துகொடுக்கலாம். பயிற்சி நேரங்களில் பெற்றோரும் பெண்ணுக்கு துணையாக இருக்கலாம். வெளியூர் மற்றும் வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் நேரடியாக தன் கண்காணிப்பின் கீழ் தன் பெண்ணை அழைத்துச் செல்லலாம். யாரோ ஒருவரின் வழிகாட்டலை விட அவளை நன்கு புரிந்துக்கொண்ட பெற்றோர்களின் ஊக்கமும் தைரியமும் உறுதியை ஏற்படுத்தும்.

உடையொரு தடையா?
 
                        இப்பொழுதெல்லாம் இஸ்லாமிய பெண்கள் முழு ஹிஜாபுடன் வாகை சூடுகின்றனர்.எவ்விதத்திலும் உடை தடையாய் இருந்ததில்லை. பஹ்ரைனை சேர்ந்த அல் கஸ்ரா என்ற வீராங்கனை.  2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் 100 மீட்டரில் வெண்கலமும் வென்றார். ஹிஜாப் அணிந்தே தான் இந்த சாதனையைப் படைத்தார்.   ஹிஜாப் எவ்விதத்திலும் அவருக்குத் தடையாய் இருக்கவில்லை. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் அவர் மட்டுமே ஹிஜாப் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

                       உலகத்தர போட்டிகளில் ஹிஜாபுடன் விளையாட பல போட்டிகளில் அனுமதிப்பதில்லை.அனைத்து உடற்தகுதியை பெற்றிருந்தும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர்.அவ்வேளையில் போட்டியை தவிர்த்து வெளியேறி விடுகின்றனர். எடை தூக்கும் அமெரிக்க வீராங்கனை குல்ஸும் அப்துல்லாஹ் ஹிஜாப் அணிவதால் தேசியாளவில் நடந்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார் .  ஜோர்தானுடனான லண்டன் ஒலிம்பிக் தகுதிகாண் மகளிர் கால்பந்து போட்டியில் ஹிஜாப் அணிந்து
விளையாட களமிறங்கிய ஈரான் அணி மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டது. இதற்காக எந்த எதிர்ப்பையும் நம்மால் தெரிவிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. ஆனால் நம் உரிமைகள் மறுக்கப்படும் போது வளைந்து கொடுக்காது தலைநிமிர்வதில் இருக்கும் கர்வம் இறைவனிடத்தில் உவப்பானது இல்லையா ?

                         இஸ்லாமிய பெண்களுக்கு உடை கட்டுப்பாடு இருப்பதால் தொடர்வதில் சிக்கல் இருப்பதாக நினைக்கலாம். அவ்வபோது அத்தகைய செய்திகள் வருவதால்தேவையில்லாமல் ஏன் போட்டியில் கலந்துக்கொள்ள செல்லவேண்டும் எனும் மனநிலையில் , விளையாட்டுபோட்டிகளில் இருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். மேலும் நம்மால் வெற்றிபெற முடியாதோ என்றும் அச்சம்கொள்கின்றனர். வெற்றியின் மற்றொரு வடிவமே தோல்வி. வெற்றி மகிழ்ச்சி என்றால் தோல்வி தருவதோ நிறைவு.நம்மை அவள் போராடித் தானே வென்றாள்? நாம் அவளின் வெற்றியை சுலபமாக்க வில்லையே? என்பதே மிகப்பெரிய மனநிறைவு.


ஓரிடத்தில் பார்த்த இந்த வரி என்னை மிகவும் கவர்ந்தது. இப்பதிவுக்கு பொருந்துமென இங்கே கொடுக்கிறேன்
தோல்வி பழகாத வெற்றி
தோற்கத் தாங்காது.
தோல்வி பழகிய வெற்றி
தோற்றாலும் தளராது.
                              ஆபாசம் நிறைந்த திரைப்படங்கள், எதுவுமே இல்லாத குடும்பப் பிரச்சனையை பெரிதுப்படுத்த கற்றுத்தரும் நாடகங்கள், இவற்றை பார்ப்பதை தவிர்த்து விட்டு விளையாட்டுப் போட்டிகளை பார்ப்பதை ஊக்குவிக்கலாம். முடிந்தவரை வாய்ப்புள்ள போட்டிகளில் ஹிஜாபுடன் கலந்து கொள்ள முயற்சிக்கலாம், முடியவில்லை எனில் விட்டு விலகலாம்.
இம்மையை விட மறுமையின் வெற்றி மகத்தானது என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக தெரியாது. புர்கா அணிந்துதான் விளையாட வேண்டும் என்பதில்லை.  முழு காற்சட்டை, கைச்சட்டை, நன்றாக கவர் பண்ணிய ஸ்கார்ஃப் போதுமானது. சிறப்பான பயிற்சியாளரை நியமிப்பது  மூலமும்  சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும்  பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்வதை ஊக்கப்படுத்த ஆவன செய்யவேண்டும்.


                              சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்களை விளையாட்டுக் களங்களிலும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். வீட்டு்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் நாமல்ல என்று சமுதாயத்திற்கு விளங்க வைக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் அவையங்களை மறைத்து அறிவோடு தீரத்தையும் திண்ணத்தோடு வெளிப்படுத்த நாம் நம் பெண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். எதிர்காலத்தில் அல் கஸ்ரா போன்ற பலர் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து உருவாக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். ஹராம் என ஹலானாதையெல்லாம் ஒதுக்கி தனித்து நிற்காமல் , நம் பெண்களின் திறமைகளையும் உலகறிய செய்ய உலக நீரோட்டத்தில் கலப்போம் இன்ஷா அல்லாஹ்....

உங்கள் சகோதரி
சித்தி நிஹாரா
read more " முஸ்லிம் பெண்களும், விளையாட்டுப் போட்டிகளும்"