Monday, July 13, 2015

AIPMT ஐ எதிர்த்து போராடுவேன்: ஆனால் உரிமையை விடமாட்டேன்

வள் பெயர் பாத்திமா. 18 வயது இளம்பெண் என்பதை உங்களால் நம்ப முடியாத அளவுக்கு பக்குவமும் தைரியமும் மிகுந்த பெண்.  நல்லதொரு படித்த முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நவநாகரிக மங்கை என்றாலும் ஹிஜாப் பேணுவதை தன் சுதந்திரமாக நினைப்பவள்.


          90 சதவீத மதிப்பெண்களை பத்தாம் மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற பாத்திமாவின் கனவு  ,  சிறந்த ஒரு டாக்டராக வேண்டும் என்பது தான். அதற்காக வரும் 25ம் தேதி ஜூலையில் CBSE யின்  அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (AIPMT) எழுதவிருக்கிறார்.

        இந்நிலையில் தான், கடந்த 9ம் தேதி AIPMT ஓர்  அறிவிப்பை வெளியிட்டு நாடு முழுவதும் கொத்தளிப்பை ஏற்படுத்தியது.  அதில் நுழைவுத்தேர்வில் கலந்துக்கொள்பவர்களுக்கு தலைக்கு அணியும் முக்காடு (ஸ்கார்ப்) வகை துணிகளுக்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் மென்மையான மற்றும் ஸ்லீவ்லெஸ்  வகை குர்தா, ஷர்ட், டீசர்ட் க்கு மட்டும் அனுமதி தந்துள்ளது.  இவை இரண்டும் இஸ்லாமியர்களின் ஒழுங்குடன் மோதும் விஷமமான அறிவிப்பு என்பதை பார்த்ததும் அனைவரும் அறிவர். இதை அறிந்ததும் பாத்திமா உட்பட பல முஸ்லிம் பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.

       "முக்காடும் , முழுக்கை உடையும் ஹிஜாப்பின்  முக்கிய அங்கம். ஹிஜாபைப் பொறுத்தமட்டில் நமது உடல் அங்கங்கள் வெளியில் தெரியாமல் இருக்கும் வண்ணம் நாம் என்ன அணிகிறோம் என்பதில் தான்  கவனம் செலுத்த வேண்டுமே அன்றி எவற்றையெல்லாம் வெளியில் காட்டவிருக்கிறோம் என்பதில் அல்ல " என்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பாத்திமா.

           மேலும் பாத்திமா கூறுகையில், "ஹிஜாப் என்று நேரடியாக சொல்வதால் பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலேயே சுற்றி வளைத்து முக்காடிற்கும் முழுக்கை உடைக்கும் இவ்வமைப்பு தடை விதித்துள்ளது. ஆனால் உண்மையில் இஃது இஸ்லாமிய ஹிஜாப்பை தான் தடை செய்துள்ளது. இப்போது இவர்கள் நுழைவுத்தேர்வில் இதனை நடைமுறைப்படுத்தவிருக்கிறார்கள். இப்படியே சென்றால் படிப்படியாக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களிலும் நடைமுறைப்படுத்துவார்கள் " என காட்டமாக பதிலளித்துள்ளார்.

           என்ன உடுத்த ஆசைப்படுகிறேனோ, எப்படி உடுத்த வேண்டுமென என் மார்க்கம் எனக்கு சுதந்திரமளித்துள்ளதோ அதில் அப்பட்டமாக   AIPMT தலையிட்டு   உரிமையை பறிப்பதாக  கூறிய பாத்திமா ,  ”  நம் விருப்பப்படி உடை உடுத்துவது நமக்கான சுதந்திரம்"  என்றும் கூறினார். மேலும்  பாத்திமா   சீக்கியர்களின் டர்பன் குறித்தான AIPMT யின் நிலைபாடு குறித்தும் கேள்வி எழுப்பினார். " சீக்கியர்களால் டர்பன் அணிந்துகொண்டு நுழைவுத்தேர்வு எழுத முடியும் எனில் நிச்சயமாக ஸ்கார்ப்பும் விதிமுறையை மீறுவதாக இருக்காது என்பது நிதர்சனம். இத்தனைக்கும் டர்பனுக்குள் எளிதாக ப்லூதூத் வகை கருவிகளை  ஒளித்துக்கொள்ள முடியும். ஒருவேளை இத்தகைய டர்பன்களில் இவர்களுக்கு எவ்வித ஒழுங்கு பிரச்சனையும் காண முடியவில்லை எனில்  முக்காட்டிலும் எவ்வித பிரச்சனையும் காண முடியாது " என்றார்.


        பாட்னாவின்   பத்தாம் வகுப்பில்  90.4 சதவீத மதிப்பெண் பெற்றும், லக்னோவில்  12ம் வகுப்பில் 92.6 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றுமுள்ள பாத்திமா பத்தாம் வகுப்பு படிக்கும் முதலே முழு ஹிஜாப் பேணத் தொடங்கியுள்ளார். "ஹிஜாப் அணிவதை சவுகரியமாக உணர்கிறேன். ஹிஜாப் காரணமாக பள்ளியிலோ , மார்க்கெட்டிலோ இன்ன பிற பொது இடங்களிலோ பிரச்சனைக்கு நான் ஆட்பட்டதில்லை" என  கூறும் போதே அவரின் கர்வம் நம்மை கவர்ந்தது.

             தன் உடை சுதந்திரத்தில் இத்துனை உறுதியாக இருக்கும் பாத்திமாவிற்கு, ஹிஜாப்   எதிர்ப்பை சந்திக்கும் முதல் சம்பவம் அல்ல இது. கடந்த நான்கு வருடங்களில் தன் ஹிஜாப்  உரிமைக்காக இருமுறை சண்டையிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

             10ம் வகுப்பில் ஹிஜாப் அணிய ஆரம்பித்த போது அவர் பயின்ற பாட்னாவின் செயின்ட் ஜோசப் கான்வட் ஓர் சுற்றறிக்கை அனுப்பியது. அதில் டீசர்ட்டும் குட்டைப்பாவாடையும்  அணிவதை பள்ளிச்சீருடையாக அறிவித்திருந்தது. பாத்திமாவும் அவருடன் சேர்ந்த மாணவிகளும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு,   உடல் அங்கம் மறைக்கும் வண்ணம் உடுத்தும் சல்வார் க்கு அனுமதி கேட்டனர். இறுதியாக நிர்வாகம் இசைந்தது.  12ம் வகுப்பில் லக்னோவிலிருக்கும் பள்ளிக்கு மாறியிருந்தார். பெரும் போராட்டத்திற்கு பின்னர்  அவரால் உடல்மறைக்கு முழுமையான உடை அணிந்து பள்ளிக்கு வர முடிந்தது. அந்த பள்ளியில் ஹிஜாப் அணிந்து சென்ற ஒரே மாணவி பாத்திமா மட்டுமே.  மாஷா அல்லாஹ்

            இம்முறையும் முழுமையான உடை அணிய  CBSE க்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். பாத்திமாவின் இந்த உறுதி மிக்க முடிவுகள் காட்டுவது நிர்வாகத்துடனான அவரின் ஒத்துழையாமையை அல்ல. மாறாக ஏதேனும் கருவிகள் தான் மறைத்து வைத்திருப்போம் எனும் சந்தேகம் கொண்டிருப்பின்  பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு முழுமையாக சோதனையிடட்டும், அவர்கள் முன்னிலையில் ஹிஜாப் அவிழ்த்து எங்களை சோதனையிட்டுக்கொள்ள அனுமதிக்கிறோம், ஆனால் அதன் பின் ஹிஜாப்புடன் தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

            இந்த இளம் வயதிலும் இரும்பு கோட்டை போன்ற அவரின் உறுதி வியப்பளிக்கிறது. "ஒருவேளை   நிர்வாகம் ஹிஜாப் உடன் எழுத அனுமதிக்கவில்லை எனில் அவர்களுக்கு அடிபணிந்து முக்காடில்லாமல், கையில்லாத/அரைக்கை உடையுடன் வந்து தேர்வெழுதுவதற்கு மாறாக , போராட்டம் செய்து என் உரிமையை நிலைநாட்டுவேன் அல்லது தேர்வெழுதுவதை நானே நிராகரித்துக்கொள்வேன்" என்றார். இதனால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுமே என்ற கவலையும் சுயநலமும் அவரிடமில்லை, மாறாக அது குறித்து இறுதியாக  இவ்வாறாக சொன்னார்,  "நம் வாழ்வின் திருப்பங்கள்  அனைத்தும் அல்லாஹ்வின் விருப்பங்களே"

சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ் இப்பெண்ணை பொருந்திக்கொள்வானாக.


                  AIPMTயின் இந்த அறிக்கை முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் எதிர்த்துள்ளனர். டெல்லியின் பிரபல பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் "முட்டாள்தனமான அறிக்கை" என்று சாடியுள்ளார். முஸ்லிம்கள் குற்றச்சாட்டுகள் மட்டும் நான் எதிர்ப்பதற்கு காரணமல்ல. இந்த அறிக்கையானது என்ன உடை உடுத்த வேண்டுமென்ற பெண்களின் உரிமை மீது கைவைப்பதாக உள்ளது" என்றார்

                 சகோதரி பாத்திமாவின் முடிவுக்கு  பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும்  இத்தகைய கட்டுபாட்டை கைவிடுவதற்கு AIPMT க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அல்லாஹ் நம் ஹலாலான காரியங்களை அங்கிகரித்து அதில் வெற்றியை உரித்தாக்குவானாக. ஆமீன்

 நன்றி : இந்தியாடுமாரோ.நெட்
 தகவல் உதவி   : சகோ அபுல் ஹசன் ராஜா

3 comments:

 1. மாஷா அல்லாஹ்

  ஹிஜாப் பெண்களின் உரிமை என்பதை சகோதரி தனது போராட்டத்தின் வாயிலாக நிறுவுகிறார்.

  ReplyDelete
 2. தமிழகத்தின் மேல்தட்டுக்கான தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் முட்டு வரையிலான ஸ்கர்ட்தான் யூனிஃபார்ம் ஆக இருக்குறது. அதை ஏன் யாரும் தட்டிக் கேட்பதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
 3. //மென்மையான மற்றும் ஸ்லீவ்லெஸ் வகை குர்தா, ஷர்ட், டீசர்ட் க்கு மட்டும் அனுமதி தந்துள்ளது.//

  ஹிஜாப் அணியும் முஸ்லிம்கள் மட்டுமல்ல... நாகரீக உடை அணிய விரும்பும் அனைவரும் எதிர்க்க வேண்டிய விதிமுறை இது.

  ReplyDelete