Tuesday, July 28, 2015

UPSC தேர்வில் முதலிடம் : கொல்கத்தா பெண் சாதனை

                இந்தியாவின் மிகவும் பின் தங்கிய சமுதாயமாகவே இஸ்லாமியச் சமுதாயம் எப்போதுமே இருந்து வருகிறது . இப்போது கொஞ்சம் நிலைமை மாறி வருவது மனதுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது . சமீப காலங்களில் பொதுவாகவே முஸ்லிம்களை பற்றி நிலவி வந்த கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு வருகின்றன.  அதிலும்  அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட  முஸ்லிம் பெண்கள் தன் சாதனைகள் மூலம் எல்லா விமர்சனங்களையும் சுக்குநூறாக்கி கொண்டிருப்பதைக் காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வரிசையில் போன வாரம் ஓர் சாதனையை படைத்தார் ஓர் இஸ்லாமியப் பெண்மணி -  ஸைனப் சயீத்.

              UPSC ( Union Public Service Commission ) என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட  இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். இதில்  சிவில் சர்வீஸ்க்கான தேர்வில் தான் ஸைனப் சாதனை நிகழ்த்தினார்.


                          2014- ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் பீகாரின் முதல் முஸ்லிம் ஐ. பி .எஸ் அதிகாரியாக குன்சா சனோபர் தேர்வு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடியது நினைவிருக்கும் . இன்று மற்றுமொரு முஸ்லிம் பெண் தன் வெற்றிகளால் இந்திய இஸ்லாமிய சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளார். அவர்தான் கொல்கத்தாவை சேர்ந்த 25 வயதான ஸைனப் சயீத் .  இவர் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சேர்ந்த மாணவி. ஸைனப் 2011-ல் தனது முதுகலைப் படிப்பான மாஸ் கம்யுனிகேசனை ஜாமியாவில் முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கோச்சிங்கில் முழு மூச்சாக இறங்கினார். ஒரு தவத்தை போல , உலகின் சந்தடிகளில் இருந்து விலகி ,படிப்பில் மூழ்கி மூன்றாவது முறையாக வெற்றி என்னும் முத்தை எடுத்து கரையேறினார்.

                                நேர்க்காணல் தேர்வில்
அதிகபட்சமாக இவர் 275 க்கு 220 ( 80 சதவீதம் )  மதிப்பெண்கள் எடுத்து 107 வது இடத்தை பிடித்துள்ளார்.  போன வருடம் முதலிடம் பெற்ற இரா சிங்கால் என்ற பெண் 167 மதிப்பெண் பெற்றிருந்தார். அவரை  விட கூடுதலாக 58 மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் சகோதரி ஸைனப். பிரிலிமினரி, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று சுற்றுகளிலும் முதன்மையாளராக வந்துள்ளார்..மாஷா அல்லாஹ்..!! 

                               ஸைனப் தனது கல்விப் பயணத்தில் தனது பெற்றோர் மற்றும் கணவரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். சிவில் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணமும் ஆனது . ஸைனபின் கணவர் ஹுசைன் இசி தன் மனைவி படிப்பதற்கு தேவையான டைம் டேபிள் தயார் செய்வது போன்ற உதவிகளால் அவரை உற்சாகமூட்டி வந்துள்ளார்.

                                தனது வெற்றிக்கு உதவிய ஜாமியா மற்றும் ஜகாத் பௌண்டேசன் போன்ற சிறந்த கோச்சிங் சென்டர்கள் நாடு முழுவதும் அதிகமாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த ஸைனப் ,நமது முஸ்லிம் பெண்களை நன்றாக படிக்க அனுமதித்தால் அவர்களும் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று நமது இஸ்லாமிய சமுதாயம் முன்னிலைக்கு வரும்.  பெண்களுக்கு கல்வியை வழங்குவதோடு வழிகாட்டுதலும் கொடுக்கப்பட வேண்டும்   என்று கூறினார்.

                               தனது முதல் விருப்பமாக ஐ.ஏ.எஸ் பணியை தேர்வு செய்துள்ள ஸைனப் , அடுத்ததாக ஐ.ஆர்.எஸ் பணியை விரும்புவதாக தெரிவித்தார். இவர் தனது ஹிஜாபுடனேயே இவை அனைத்தையும் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணலின் போது அவரிடம்  பல சுவாரசிய கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் ஹிஜாப் அணிவது பற்றி நேர்காணலில் கேள்வி எழுப்பிய போது அவர் பணிவாகச் சொன்னது என்னவென்றால், ஒருவர் தனக்கு செளகரியமான   ஆடையை அணிவது  அவருக்கான சுதந்திரம் தானே?! நம் பிரதமர் தனக்கு வசதியான ஆடையாக தனது டர்பனை அணிவதும் மத அடையாளம்தானே" என்று கூறினார். அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல இறைவன் , இச்சகோதரி மூலம்  நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்கள் கிடைக்கச் செய்வானாக. ஆமீன்

உங்கள் சகோதரி,
நதிரா

--------- 

தகவல் உதவிக்கு நன்றி: இந்தியா டுடே
read more "UPSC தேர்வில் முதலிடம் : கொல்கத்தா பெண் சாதனை"

Sunday, July 26, 2015

அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனைப் பெண்மணி பாத்திமா இஸ்மாயில்

 திவை வாசிக்கும் முன்னர் சிறு முன்னோட்டம்...

60'களில் பிறந்த நடுத்தர குடும்ப இஸ்லாமியப் பெண் ,  இராமநாதபுரத்தின் கடற்கரை கிராமம்   தான் பிறந்து வளர்ந்த ஊர் , இவர்   தான் மூத்த மகள், இவருக்கு பின் 6 பிள்ளைகள் . இந்த   அறிமுகத்துடன் அந்த  காலக்கட்டத்தில் பயணிக்கும்  போது நம்  கற்பனைக்கு வந்த கதாபாத்திரம் இப்படியிருந்திருக்க கூடும்..
 • லைமை ஆசிரியரான தந்தையின் கடுங்கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டு பள்ளிக்கூட வாசனையை நுகராதவர்?
 • ணவன் கொண்டு  வரும்  போதாத மாத சம்பளத்தில் வீட்டை நிர்வகிக்கும்  அம்மாவால் சொல்லப்படும்  வீட்டு வேலைகளால்  கசக்கி பிழியப்பட்டு எந்நேரமும் களைப்புடனும், எண்ணெய் வழியும் முகத்துடனும் நான்கு சுவருக்குள் முடங்கி கிடப்பவர் ?
 • ள்ளிக்குச் செல்லும் தன் சகோதரர்களுக்கு எடுபிடி வேலை செய்துக்கொண்டு எதிர்காலம் குறித்த கனவு காண கூட சுதந்திரமல்லாதவர்?
 • "சனியன் தொலஞ்சா போதும்" என பருவமடைந்தவுடனே திருமணம் செய்துவைக்கப்பட்டு கணவன் வீட்டில்,  மாமியாரின் அதிகாரத்தில் அடங்கியிருப்பவர் ?
 • க்குவம் பெறாத  வயதிலேயே கணவனின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு  இருப்பவர் ??
போதும் போதும்... நம் கற்பனைகள் நீளலாம். ஆனால்  அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தவர் தான், நாம் பார்க்கவிருக்கும் சாதனைப் பெண்மணி.

 • டிக்கும் போதே தேசிய அளவில் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகள் குவித்தவர்,
 • "திறமையான மாணவி" என அடையாளம் காணப்பட்டு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்றவர்,
 • கிரசண்ட் கல்லூரியில் ஹிஜாபை கட்டாயமாக்க காரணமாக இருந்தவர்,
 • ராமநாதபுர மாவட்டத்தில் மின்சார வாரியத் துறையில் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி என நாளிதழ்களில் அதிகம் பேசப்பட்டவர்,
 • ப்போது 60க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருக்கும் தொழில் அதிபர்.
இதுமட்டுமல்ல... இன்னும் இன்னும் ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தமானவர் தான்  பாத்திமா  இஸ்மாயில்.

              நம்புதாழை என்பது  இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்திருக்கும் முஸ்லிம்களும்,  கட்டுப்பாடுகளும் மிகுந்த கிராமம்.  பொதுவாகவே  இம்மாவட்டத்தில்  கல்வி விழிப்புணர்வு மிகவும் குறைவே.  இதற்கு ஆணாதிக்கச் சிந்தனை  என்று கூட நீங்கள் பெயர் சூட்டிக்கொள்ளலாம். ஆனால் அதே ஆண்களால் தான்  கல்வி இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்கப்பெற்றது.  படித்த ஆண்கள் தங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்களாகினர். அதன் விளைவாக தன் வீட்டுப்பெண்களுக்கு கல்வி புகட்டியதோடு அல்லாமல் சமுதாயத்தில் மிளரவும் வைத்தனர்.

             நம்புதாழையின் இத்தகைய சூழலில் வளர்ந்த     ஜக்கரியா,  உற்றார்  உறவினர்கள்,  நண்பர்கள்  ஆலோசனைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் மூத்த மகளான பாத்திமாவை, தன் ஆண் குழந்தைகளுக்கு  நிகராக படிக்க வைக்கத் தீர்மானித்தார். அந்த காலக்கட்டத்தில் இதொன்றும் சாதாரண விஷயமல்ல! ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எதிர்க்கொண்டு தன் பெண்ணின்  வளர்ச்சிக்கு முதல் விதையை ஆழமாக விதைத்த பெருமை தந்தை ஜக்கரியாவையே சேரும். இதில் அம்மா கைருன்னிஷா அவர்களின் தூண்டுதலும்  ஒத்துழைப்பும்  மகத்தானது.  அதிகம் கல்வியறிவு பெற்றிடாத பெண்மணியாய் இருந்தும் பழமைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் இரையாகாத இன்னுமொரு சாதனைப்பெண்மணி இவர்.

விதை தூவிய தருணம் :

            
                           இளையான்குடியில் சாதாரண கணக்கு ஆசிரியராய் வேலைப்பெற்ற தந்தையால்  ஆரம்ப கல்வி இளையான்குடியிலும் ,  விரைவிலேயே   கீழக்கரையின் Hameediah Boys Higher secondary school லில் தலைமையாசிரியராய் தந்தை  பணி உயர்வு பெற்றதால் 3ம் வகுப்பு முதல் Hameediah girls Higher secondary schoolலும் கல்வி பயின்றார். பலரின் எதிர்ப்பையும் மீறி வளமான கட்டமைப்பில் விதைத்த பயிர் தன் வளர்ச்சியை துளிர்விடும்  பருவத்திலேயே அனைவருக்கும் காட்டியது. பள்ளியில் அவுட்ஸ்டான்டிங் ஸ்டூடண்ட். பள்ளி பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் பாத்திமா பிந்த் ஜக்கரியா பெயர் ஒலிக்காமல் நிறைவு பெற்றதில்லை. பேச்சுப் போட்டியாகட்டும் இன்ன பிற போட்டிகளாகட்டும் அனைத்திலும் தன் திறமையை காட்டிக்கொண்டிருந்த வேளையில் பல்வேறு  பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் மாவட்ட அளவிலும்  மாநில அளவிலும் பரிசுகள் பெற்று தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர்.  தன் மகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிகளை பார்த்த தாயும் தந்தையும் மகளை செதுக்க ஆரம்பித்தனர். தந்தையின் சகோதரியான லதிபாவின் பங்கும் மிக அதிகம். கணவர் இறந்ததால் தன் சகோதரனுடன் தங்கிவிட்ட மாமி லதிபா தான் ,  சகோதரி பாத்திமா இரவில் தூங்கும் வரையிலும் விழித்திருந்து உதவிகளை செய்யக்கூடியவர்.  தன் சகோதரன் மகளின் படிப்பின் மீது அதிக அக்கறை கொண்டவர்.

                இப்படியாக ஒவ்வொருவரும் செதுகக்ச் செதுக்க பளபளக்க ஆரம்பித்தார் சகோதரி பாத்திமா. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழக அரசால் திறமையான மாணவி என அடையாளம் காணப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பெற்றவர். அதன் தொடர்ச்சியாக அடுத்த 4 ஆண்டுகளுக்கான  கல்விச் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள ,  விடுதியில் தங்கியபடியே தேவகோட்டை செயின்ட் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ராமநாதபுரம்  செயின்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிபடிப்பை தொடர்ந்தார். தேவைக்கோட்டைக்கு சென்றதும் மொத்த குடும்பமும் அவருக்காக தேவக்கோட்டை சென்று அங்கு குடியிருந்தது.

               சகோதரி  பாத்திமாவிற்கு மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து அவரின் ஓர் சகோதரிக்கும், 5 சகோதரர்களுக்கும் தரமான கல்வியை தந்தை ஊட்டினார். ஆனால் தன் வருமானம் போதாததாக இருந்தது. சொத்துக்கள் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத நிலையில் உறவினர்களும் உதவி செய்ய மறுத்த சூழல் நிலவியது.  தலைமை ஆசிரியராய் இருந்தபோதும்  வருமானம் தன் லட்சியங்களையும்  பிள்ளைகளின் கனவையும் நனவாக்க உதவாது என்பதை உணர்ந்த அவர், தன் கனவுகளை புதைத்துவிட்டு தலைமை ஆசிரியர் பதவியை துறந்து சார்ஜா சென்று அங்கே வேலை செய்ய எத்தனித்தார். இது பற்றி சகோதரி பாத்திமாவின் அன்னை கைருன்னிஷாவிடம் கேட்டபோது " என் கணவர் கொண்டு வரும் 1500 ரூபாய் ஊதியத்தில் 25 ஆயிரம் அளவுக்கு நன்கொடையும் செமஸ்டர் , ஹாஸ்ட்டல் மற்றும் இன்ன பிற படிப்பு செலவுகளையும் சமாளிக்க போததாக இருந்ததால் தன் கனவுப்படி மகளை இஞ்சினியர் படிக்க வைக்க ஆசைபட்டு அவளுக்காகவே அவ்வயதில் சார்ஜா சென்றார்" என்றார்.

அன்னை கைருன்னிஷா - கல்வி உதவிதொகை வழங்கும்  நிகழ்ச்சியில்

                 இளமைக் காலமெல்லாம் தன் மனைவி மக்களுடம் கழித்துவிட்டு ஓய்வெடுக்கும் வயதில் குடும்பம் பிரிந்து வளைகுடா செல்வது எவ்வளவு கொடுமையானது ?  இந்த நிலையில் தான் சகோதரி பாத்திமா உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்திருந்தார்.  பெண்பிள்ளை தானே என்று  உடனே ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கோ,    பேருக்கு பின் போட்டுக்கொள்ள சாதாரண பட்டம் பெற்றால் போதும் என  கலைக்கல்லூரிக்கோ அனுப்பிவிட நினைக்கவில்லை தந்தை. தன் ஆண்  பிள்ளைகளை போலவே பெண்பிள்ளைகளும் பொறியியல் துறையில் பயில வேண்டும் என்ற கனவு அவருக்கிருந்தது.    பெண்களுக்கா? பொறியியல் கல்லூரியா? அந்த காலகட்டத்தில் இது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

                  அப்போது தான் சென்னை கிரசண்ட் கல்லூரியில் பொறியியல்-கான துறை 1984ம் வருஷம்  தொடங்கப்பட்டது.  ஹாஸ்ட்டலில் தான் அடுத்த நான்கு வருடங்களில் தங்கியாக வேண்டும், தந்தை வளைகுடாவில் இருக்கும் காரணத்தால் ஆண் துணை அல்லாத தாயால் அடிக்கடி சென்னை சென்று வர முடியாத சூழல் நிலவும்,  பயண வசதிகள் சுலபமல்லாத கால கட்டத்தில் இருந்தபடியால் தனியே  தகுந்த துணை அல்லாமல் பயணித்து அடிக்கடி சென்னையிலிருந்து தன் கிராமத்திற்கும் வர முடியாது போகலாம், தந்தை எப்போது  ஊருக்கு வருகிறாரோ அப்போது வந்தால் மட்டும் போதும்- இந்த கன்டிஷன்களுக்கு ஓக்கே என்றால்  சென்னை கல்லூரியில் சேர்க்கத் தயார் என்றார் தாயார். கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என ஒப்புக்கொண்ட சகோதரி பாத்திமா சென்னை கிரசண்ட்டில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை தேர்ந்தெடுத்து  சேர்ந்தார்.  அடுத்த நான்கு வருடங்களில் நான்கு முறை மட்டுமே அவர் விடுமுறையில் ஊருக்குச் செல்ல முடிந்தது. ஆனாலும் தனிமை அவரை  வாட்டவில்லை,  தன் அருகில் யாருமில்லையே என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கிடைக்கும் விடுமுறைகளிலெல்லாம் உடன் தங்கியிருக்கும் மாணவிகள் ஊருக்கு சென்றுவிட அன்றைய நாட்களிலும் அவர் ஏங்கவில்லை. மாறாக கிடைத்த  நேரங்களையெல்லாம் தன்  புத்தகத்திற்காக செலவிட்டார்.    தன் கல்லூரி தனிமை வாழ்வைப்பற்றிய நினைவுகளில் தனக்கு உதவியவர்களை சகோதரி பாத்திமா நினைவு கூர்ந்தார் , " கல்லூரி இயற்பியல் துறையில் பேராசிரியரும் தற்போதைய துறைத் தலைவருமான சமீம் பானு அவர்களும், கணிதத்துறை  பேராசிரியராக பணியாற்றிய ஆமினா பீவி அவர்களும் தென் மாவட்டத்திலிருந்து தனியா வந்ததால் வந்த பரிதாபத்தில்  பெற்றோராக இருந்து எந்த ஒரு குறையும் இன்றி குடும்பத்தை பிரிந்திருந்த வருத்தமுமின்றி மிக அன்பாக அரவணைத்துப் பாதுகாத்து வந்தனர் "

தந்தை மர்ஹூம் . ஜக்கரியா

                    கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில் தம் பிள்ளைகளின் மார்க்க ஒழுக்கம் மற்றும் இஸ்லாமிய அறிவை ஊட்டுவதிலும் பெற்றோர்கள் தவறவில்லை. இஸ்லாமியச் சூழலில் பயின்றதால் மார்க்க நடைமுறைகள் அவருக்கு சுமையாக இருக்கவில்லை. அதனால் தான் கல்லூரியில் பயின்ற  அத்தனை மாணவிகளுக்கு மத்தியிலும் தனி ஆளாய் ஹிஜாப் பேணி வந்தார்.  இதனால் கல்லூரியில் அனைவரும்   வித்தியாசமாகவே பார்த்தார்கள்,  பழகினார்கள்.   முஸ்லிம் பெண்கள் மேற்படிப்புக்கு வரும் போது கல்லூரிகளிலும்,பணியிடங்களிலும் ஹிஜாப் அணிவதை பெரும் பிரச்சனையாகவும் அநாகரிகமாகவும் கருதிய காலம். அதற்கு காரணம் அறியாமை என்றே கூற வேண்டும். கல்லூரி பேராசிரியையாக இருந்தாலும் சரி,மாணவிகளாக இருந்தாலும் சரி யாருமே ஹிஜாப் அணிவது புழக்கத்தில் இல்லாத நிலையாயிருந்தது. இதில் தான்  சகோதரி பாத்திமா தனித்து தெரிந்தார்கள்.  அச்சமயத்தில் தான் கல்லூரியின் சேர்மன் மர்ஹூம்   அப்துர்ரஹ்மான் அவர்கள் அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகளையும் அழைத்து சகோதரி பாத்திமாவை  எடுத்துகாட்டாக நிறுத்தி “ இந்த பெண்ணால் கல்லூரி மற்றும் செய்முறை கூடங்களில் (laboratories) ஹிஜாப் அணிந்து வர முடிகிறதெனில்  எல்லாருக்கும் அது சாத்தியமே” என்று கூறி  எல்லாரையும் ஹிஜாப் அணிய வைக்க பெரும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்கள்.  எதிர்பாராமல்  கிடைத்த அந்த பாராட்டையும் அமைதியாய் ஓர் செயல்முறை தாவாவையும் நிகழ்த்திகாட்டிய அந்த தருணத்தை பற்றி கேட்டபோது   சகோதரி பாத்திமா , " அந்த பாராட்டே என்னை இன்னும் இஸ்லாத்தை முழுமையாக நம் சமுதாயம் ,பணியிடம் என எல்லா இடங்களிலும் தைரியமாக செல்ல உதவி செய்தது.  இறைவன் அவர்களுக்கு சொர்க்க பதவி வழங்குவானாக! என்னுடைய பெற்றோர்களுக்கும் அருள் பாலிப்பானாக! ஆமீன் !" என்றார்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு : 

          
                       நான்கு ஆண்டு பொறியியல் கல்வி முடித்த கையோடு அதே வருடம் 1988 ஆகஸ்ட் 8ல் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு அமர்ந்தார்கள். பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் பொறியாளராக ( operation and maintenance field engineer) பணியமர்ந்தார்கள். இராமநாதபுர மாவட்டத்தில் மின்சார வாரியத் துறையில் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி என்று நாளிதழ்களில் பிரசூகரிக்கப்பட்டது. தனது 21ம் வயதிற்குள்ளாகத்தான் இத்தனையும் சாதித்திருந்தார் சகோதரி பாத்திமா. எல்லா புகழும் இறைவனுக்கே ! அமைதியான ஆசிரியப்பணியிலிருந்து சவால் மிக்க பணியை தேர்ந்தெடுத்தது சிரமமாக இல்லையா என கேட்டபோது "என் உடன் வேலை புரிந்தவர்கள் அனைவரும் வயதில் மூத்த ஆண்கள். சவாலான field வொர்க் நிறைந்த அசிஸ்டன்ட் engineer வேலையை என் பெற்றோர் தந்த ஊக்கத்தால் நிறைவாக செய்ய முடிந்தது. என் பெற்றோர் தந்த தைரியம், நம்பிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக    இறை நம்பிக்கை என்னை பதவியில் மிக சிறந்த முறையில் மிக்க தைரியத்துடன் ஐம்பதுக்கும் மேலான தொழிலாளர்களையும் பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்களையும் சந்திக்க வழிவகுத்து எந்த வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்தது" என்றார்.

திருமண வாழ்க்கை :

      
                        TNEBயில் வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடமே 1989 ல் சகோதரி பாத்திமாவிற்கு திருமணம் ஆனது. கணவர் இஸ்மாயில் மதுரையில் இரும்பு வியாபாரம் செய்துகொண்டு வந்தார். திருமணத்திற்கு பின்னும் 1988 முதல் 1996 வரை சகோதரி  பணியில் தொடர்ந்தார். ஆணுக்கு நிகராய் வேலை செய்யக்கூடிய சவால் மிக்க, இரவோ பகலோ எந்த நேரத்தில் பிரச்சனை என்றாலும் உடனே  பணியிடத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பணியை எந்த ஒரு பெண்ணும் விரும்பி செய்வதில்லை. இது பெண்ணின்  கனவாகவே இருந்தாலும் கணவன் பொதுவாக இவற்றை விரும்புவதில்லை. ஆனால் பெற்றோர்கள் தன் மகளுக்கு பொருத்தமான துணையை அல்லவா தேர்ந்தெடுத்து தந்தார்கள்? சகோதரி பாத்திமாவின் பணி காலங்களில் கணவரின் ஒத்துழைப்பு மிக மிக மகத்தானது. ஆச்சர்யத்துடன் அது பற்றி வினவினோம்.  "என்னுடைய கணவர் என் பெற்றோர்களின்  முழுப்பொறுப்பையும் எடுத்து கொண்டு எனக்கு உறுதுணையாக அமைந்தது மட்டுமின்றி என்னை என் பெற்றோர் எவ்வாறு ஆண் ஸ்தானத்தில் வைத்து தைரியமும் நம்பிக்கையும் ஊட்டினார்களோ அதே இடத்தை  தந்தவர் . உறவினர்களால் அக்காலத்திய மனநிலையில்  பலவிதமான எதிர்ப்புகள் வந்தபோதும் என் கணவர் தனி மனிதராக எனக்கு உறுதுணையாக நின்று சாதனைகள் பல நிகழ்த்த வழி வகுத்தவர். என் பெற்றோர்கள் கனவு கடமையென்று எனக்கு துணையாக இருந்திருக்கலாம். அது பெரிய விஷயமல்ல. ஆனால் கணவனின் முதல் எதிர்பார்ப்பு சிறந்த மனைவியாக ,தாயாக,குடும்பப்பெண்ணாக இருப்பதே என்றிருக்கும். அதையெல்லாம் தாண்டி என்னுடைய எதிர்பார்ப்புகளுக்காக ,என் இலட்சியங்களையே குறிக்கோளாக ,என் கனவினை நனவாக்க என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை உண்மையாக்க எனக்கு உறுதுணையாக நின்றவர் என் கணவர்தான்"  என்றார்.

  போராட்டங்கள் மிகுந்த காலகட்டம் :

                
                 பணியிடத்தில் அதிக சிரமங்களையும்,எதிர்ப்புகளையும்  சந்திக்க வேண்டிய சூழல் வந்தது. உச்சகட்டமாக பணியினை துறக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார் சகோதரி பாத்திமா. இதனால் அருப்புகோட்டைக்கு பணி மாறுதல் பெற்றார். ஆனாலும் அழுத்தங்கள் தொடர்ந்தது. பணியை துறந்து வேலை தேடி துபாய்க்கு பயணமானார்.

எப்படி மீண்டார் , எப்படி சரிவை சரிக்கட்டினார் , 60க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் நபராக எப்படி உயர்ந்தார்  என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்

தொடரும் .....

ஆக்கம் : ஆமினா முஹம்மத்
read more " அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனைப் பெண்மணி பாத்திமா இஸ்மாயில்"

Thursday, July 23, 2015

ஹிஜாப் அணிய 2 மாணவிகளுக்கு அனுமதி - கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

            ஜூலை   25ம் தேதி யில் நடைபெறவிருக்கும் CBSE யின்  அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (AIPMT) க்கு முன்னதாக அதில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கான ஆடை வரம்பை நிர்ணயித்திருந்ததை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தோம் . பார்க்க
                இந்த  விதிமுறை இஸ்லாமிய உடை சட்டத்தோடு மோதுவதாக பல முஸ்லிம் மாணவிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இத்தேர்வை எழுதவிருக்கும்  கேரளாவை சேர்ந்த நிதா ரஹீம் மற்றும் ஆசியா அப்துல் கரீம் என்ற இரு மாணவிகள் கடந்த 17ம் தேதி  கேரளா உயிர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.   AIPMT கொண்டு வந்த விதிமுறை  உரிமை மீறல் என்றும்,   சட்டத்திற்கு புறம்பானது என்றும் இஸ்லாமிய ஆடை சுதந்திரத்தை பறிப்பதையும் சுட்டிகாட்டினர். தாங்கள் மத உரிமை அடிப்படையில் ஹிஜாப் அணிவதாகவும் அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

              நீதிபதி வினோத் சந்திரன் முன் கடந்த செவ்வாய் கிழமை (17-7-15) விசாரணைக்கு வந்தது. காப்பியடிப்பதை தடுப்பதற்கான  ஆடைக்குறியீடு விஷயத்தில் சிபிஎஸ்ஈ யின் முடிவில் முழுவதுமாக தலையிட முடியாது என்று குறிப்பிட்டது. ஆனால் மத கோட்பாட்டை பின்பற்றும் உரிமை அடிப்படையில் இரு பெண்களும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளித்துள்ளது.  தேர்வு ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பெண் கண்காணிப்பாளரின் சோதனைக்கு சம்மதிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளது. இதனடிப்படையில் சகோதரிகள் இருவரும் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத முடியும். அல்ஹம்துலில்லாஹ்..

            சிபிஎஸ்சி  கவுன்சிலைச் சேர்ந்த தேவன் ராமச்சந்திரன் இத்தீர்ப்பை பற்றி தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் , " மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. பாதுகாப்பு முறையில்  பொதுத்தன்மையை கொண்டுவர விரும்புகிறோம்.ஆனாலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு மாணவிகளுக்கு  அனுமதி வழங்கப்படும்" .

               இதனை தொடர்ந்து  இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  தேர்வு எழுதவிருக்கும் சகோதரி மரியம் நசீர் , சகோதரி சபானா பானு , சகோதரி ஆயிஷா கான் இவர்களுடன் எஸ்ஐஓவின் தேசிய செயலாளர் லயீக் அஹமது கான் ஆகியோர் மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

              உரிமைகள் மீறப்படும் போது புரட்சிகள் உண்டாவது நியதி.  ஹிஜாப்க்கு எதிரான உரிமை மீறல்களின் நீட்சி,  ஹிஜாப் குறித்தான இஸ்லாமியப் பெண்களின் தீர்க்கமான பார்வையையும் , தன் உரிமையின் மீதான அவர்களின் காதலையும்  உரக்கச்சொல்லிக்கொண்டிருப்பது மிகப்பெரும் வெற்றிதான்... அல்ஹம்துலில்லாஹ்

நன்றி :
zee news
sio official website
Times of India


Follow-up :

                அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த உடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ புதன்கிழமை அறிவித்துள்ளது முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினாலும் ஊடகங்களின்  விமர்சனங்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

                  சிபிஎஸ்இன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாரம்பரிய உடை அணிவதற்கும் மோசமான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் உடைக் கட்டுப்பாடு இல்லை என்றும் இத்தகைய மாணவர்கள் தேர்வு அறைக்குள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வருகை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 
 indiatomorrow.net
read more "ஹிஜாப் அணிய 2 மாணவிகளுக்கு அனுமதி - கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு"

Monday, July 13, 2015

AIPMT ஐ எதிர்த்து போராடுவேன்: ஆனால் உரிமையை விடமாட்டேன்

வள் பெயர் பாத்திமா. 18 வயது இளம்பெண் என்பதை உங்களால் நம்ப முடியாத அளவுக்கு பக்குவமும் தைரியமும் மிகுந்த பெண்.  நல்லதொரு படித்த முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நவநாகரிக மங்கை என்றாலும் ஹிஜாப் பேணுவதை தன் சுதந்திரமாக நினைப்பவள்.


          90 சதவீத மதிப்பெண்களை பத்தாம் மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற பாத்திமாவின் கனவு  ,  சிறந்த ஒரு டாக்டராக வேண்டும் என்பது தான். அதற்காக வரும் 25ம் தேதி ஜூலையில் CBSE யின்  அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (AIPMT) எழுதவிருக்கிறார்.

        இந்நிலையில் தான், கடந்த 9ம் தேதி AIPMT ஓர்  அறிவிப்பை வெளியிட்டு நாடு முழுவதும் கொத்தளிப்பை ஏற்படுத்தியது.  அதில் நுழைவுத்தேர்வில் கலந்துக்கொள்பவர்களுக்கு தலைக்கு அணியும் முக்காடு (ஸ்கார்ப்) வகை துணிகளுக்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் மென்மையான மற்றும் ஸ்லீவ்லெஸ்  வகை குர்தா, ஷர்ட், டீசர்ட் க்கு மட்டும் அனுமதி தந்துள்ளது.  இவை இரண்டும் இஸ்லாமியர்களின் ஒழுங்குடன் மோதும் விஷமமான அறிவிப்பு என்பதை பார்த்ததும் அனைவரும் அறிவர். இதை அறிந்ததும் பாத்திமா உட்பட பல முஸ்லிம் பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.

       "முக்காடும் , முழுக்கை உடையும் ஹிஜாப்பின்  முக்கிய அங்கம். ஹிஜாபைப் பொறுத்தமட்டில் நமது உடல் அங்கங்கள் வெளியில் தெரியாமல் இருக்கும் வண்ணம் நாம் என்ன அணிகிறோம் என்பதில் தான்  கவனம் செலுத்த வேண்டுமே அன்றி எவற்றையெல்லாம் வெளியில் காட்டவிருக்கிறோம் என்பதில் அல்ல " என்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பாத்திமா.

           மேலும் பாத்திமா கூறுகையில், "ஹிஜாப் என்று நேரடியாக சொல்வதால் பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலேயே சுற்றி வளைத்து முக்காடிற்கும் முழுக்கை உடைக்கும் இவ்வமைப்பு தடை விதித்துள்ளது. ஆனால் உண்மையில் இஃது இஸ்லாமிய ஹிஜாப்பை தான் தடை செய்துள்ளது. இப்போது இவர்கள் நுழைவுத்தேர்வில் இதனை நடைமுறைப்படுத்தவிருக்கிறார்கள். இப்படியே சென்றால் படிப்படியாக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களிலும் நடைமுறைப்படுத்துவார்கள் " என காட்டமாக பதிலளித்துள்ளார்.

           என்ன உடுத்த ஆசைப்படுகிறேனோ, எப்படி உடுத்த வேண்டுமென என் மார்க்கம் எனக்கு சுதந்திரமளித்துள்ளதோ அதில் அப்பட்டமாக   AIPMT தலையிட்டு   உரிமையை பறிப்பதாக  கூறிய பாத்திமா ,  ”  நம் விருப்பப்படி உடை உடுத்துவது நமக்கான சுதந்திரம்"  என்றும் கூறினார். மேலும்  பாத்திமா   சீக்கியர்களின் டர்பன் குறித்தான AIPMT யின் நிலைபாடு குறித்தும் கேள்வி எழுப்பினார். " சீக்கியர்களால் டர்பன் அணிந்துகொண்டு நுழைவுத்தேர்வு எழுத முடியும் எனில் நிச்சயமாக ஸ்கார்ப்பும் விதிமுறையை மீறுவதாக இருக்காது என்பது நிதர்சனம். இத்தனைக்கும் டர்பனுக்குள் எளிதாக ப்லூதூத் வகை கருவிகளை  ஒளித்துக்கொள்ள முடியும். ஒருவேளை இத்தகைய டர்பன்களில் இவர்களுக்கு எவ்வித ஒழுங்கு பிரச்சனையும் காண முடியவில்லை எனில்  முக்காட்டிலும் எவ்வித பிரச்சனையும் காண முடியாது " என்றார்.


        பாட்னாவின்   பத்தாம் வகுப்பில்  90.4 சதவீத மதிப்பெண் பெற்றும், லக்னோவில்  12ம் வகுப்பில் 92.6 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றுமுள்ள பாத்திமா பத்தாம் வகுப்பு படிக்கும் முதலே முழு ஹிஜாப் பேணத் தொடங்கியுள்ளார். "ஹிஜாப் அணிவதை சவுகரியமாக உணர்கிறேன். ஹிஜாப் காரணமாக பள்ளியிலோ , மார்க்கெட்டிலோ இன்ன பிற பொது இடங்களிலோ பிரச்சனைக்கு நான் ஆட்பட்டதில்லை" என  கூறும் போதே அவரின் கர்வம் நம்மை கவர்ந்தது.

             தன் உடை சுதந்திரத்தில் இத்துனை உறுதியாக இருக்கும் பாத்திமாவிற்கு, ஹிஜாப்   எதிர்ப்பை சந்திக்கும் முதல் சம்பவம் அல்ல இது. கடந்த நான்கு வருடங்களில் தன் ஹிஜாப்  உரிமைக்காக இருமுறை சண்டையிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

             10ம் வகுப்பில் ஹிஜாப் அணிய ஆரம்பித்த போது அவர் பயின்ற பாட்னாவின் செயின்ட் ஜோசப் கான்வட் ஓர் சுற்றறிக்கை அனுப்பியது. அதில் டீசர்ட்டும் குட்டைப்பாவாடையும்  அணிவதை பள்ளிச்சீருடையாக அறிவித்திருந்தது. பாத்திமாவும் அவருடன் சேர்ந்த மாணவிகளும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு,   உடல் அங்கம் மறைக்கும் வண்ணம் உடுத்தும் சல்வார் க்கு அனுமதி கேட்டனர். இறுதியாக நிர்வாகம் இசைந்தது.  12ம் வகுப்பில் லக்னோவிலிருக்கும் பள்ளிக்கு மாறியிருந்தார். பெரும் போராட்டத்திற்கு பின்னர்  அவரால் உடல்மறைக்கு முழுமையான உடை அணிந்து பள்ளிக்கு வர முடிந்தது. அந்த பள்ளியில் ஹிஜாப் அணிந்து சென்ற ஒரே மாணவி பாத்திமா மட்டுமே.  மாஷா அல்லாஹ்

            இம்முறையும் முழுமையான உடை அணிய  CBSE க்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். பாத்திமாவின் இந்த உறுதி மிக்க முடிவுகள் காட்டுவது நிர்வாகத்துடனான அவரின் ஒத்துழையாமையை அல்ல. மாறாக ஏதேனும் கருவிகள் தான் மறைத்து வைத்திருப்போம் எனும் சந்தேகம் கொண்டிருப்பின்  பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு முழுமையாக சோதனையிடட்டும், அவர்கள் முன்னிலையில் ஹிஜாப் அவிழ்த்து எங்களை சோதனையிட்டுக்கொள்ள அனுமதிக்கிறோம், ஆனால் அதன் பின் ஹிஜாப்புடன் தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

            இந்த இளம் வயதிலும் இரும்பு கோட்டை போன்ற அவரின் உறுதி வியப்பளிக்கிறது. "ஒருவேளை   நிர்வாகம் ஹிஜாப் உடன் எழுத அனுமதிக்கவில்லை எனில் அவர்களுக்கு அடிபணிந்து முக்காடில்லாமல், கையில்லாத/அரைக்கை உடையுடன் வந்து தேர்வெழுதுவதற்கு மாறாக , போராட்டம் செய்து என் உரிமையை நிலைநாட்டுவேன் அல்லது தேர்வெழுதுவதை நானே நிராகரித்துக்கொள்வேன்" என்றார். இதனால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுமே என்ற கவலையும் சுயநலமும் அவரிடமில்லை, மாறாக அது குறித்து இறுதியாக  இவ்வாறாக சொன்னார்,  "நம் வாழ்வின் திருப்பங்கள்  அனைத்தும் அல்லாஹ்வின் விருப்பங்களே"

சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ் இப்பெண்ணை பொருந்திக்கொள்வானாக.


                  AIPMTயின் இந்த அறிக்கை முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் எதிர்த்துள்ளனர். டெல்லியின் பிரபல பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் "முட்டாள்தனமான அறிக்கை" என்று சாடியுள்ளார். முஸ்லிம்கள் குற்றச்சாட்டுகள் மட்டும் நான் எதிர்ப்பதற்கு காரணமல்ல. இந்த அறிக்கையானது என்ன உடை உடுத்த வேண்டுமென்ற பெண்களின் உரிமை மீது கைவைப்பதாக உள்ளது" என்றார்

                 சகோதரி பாத்திமாவின் முடிவுக்கு  பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும்  இத்தகைய கட்டுபாட்டை கைவிடுவதற்கு AIPMT க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அல்லாஹ் நம் ஹலாலான காரியங்களை அங்கிகரித்து அதில் வெற்றியை உரித்தாக்குவானாக. ஆமீன்

 நன்றி : இந்தியாடுமாரோ.நெட்
 தகவல் உதவி   : சகோ அபுல் ஹசன் ராஜா
read more " AIPMT ஐ எதிர்த்து போராடுவேன்: ஆனால் உரிமையை விடமாட்டேன்"

Wednesday, July 08, 2015

அழும் குழந்தை - தொழுகையில் தொந்தரவா???


"பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதை விட பெண்கள் தங்கள் வீட்டில் தொழுவது சிறந்தது" என்பது நபிமொழி. ஆனாலும், பள்ளிவாசலுக்கு சென்று தொழ விரும்பினால் அவர்களை தடுக்க வேண்டாமெனவும் கூறப்பட்டு உள்ளது. பள்ளிவாயில்களுக்கு பெண்கள் தொழ வருவது எளிதான விஷயம் இல்லை என்பது நாம் அறிந்ததே. பல வேலைகளுக்கு (வேலை, குழந்தைகள், சமையல், வீட்டுபராமரிப்பு) இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர வேண்டி இருக்கும். இதில் பல அசௌகரியங்கள் உண்டு.

அதையும் மீறி பெண்கள் வருவது, கூட்டு தொழுகையில் பங்குபெற்று, அதிக ஆர்வத்துடன் தொழுவதற்கே. தனியாகத் தொழுவதை விட பலருக்கு ஜமாத்தாக தொழும்போது நீண்டநேரம் தொய்வு இல்லாமல் தொழ ஏதுவாக இருக்கும். ஒரு பாசிடிவ் வைப்ஸ் இருக்கும்(தனியாக செய்வதை விட கூட்டாக ஒரு வேலையை செய்யும் போது மலைப்பு தெரியாது)

தனியாக விட்டுவர முடியாமலும், கவனிக்க வேறு ஆட்கள் இன்றியும் குழந்தைகளை கூடவே பெண்கள் அழைத்து வர வேண்டி உள்ளது. அப்பொழுது குழந்தைகள் அவ்வளவு பெரிய கூடத்தை, மற்றும் பிற குழந்தைகளை பார்க்கவும் தன் சேட்டைகளை துவங்கிவிடுவார்கள். சிறு குழந்தைகளோ சில நேரம் தூக்க கலக்கம், பசி போன்றவற்றால் அழ தொடங்கிவிடுகின்றனர்.

இது போன்ற குழந்தைகளை தொந்தரவாக நினைக்கும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களை விட தொழுகையில் ஈடுபாடு இன்றி அரட்டை அடிப்பதற்காகவே ஜமாத்தை நாடுபவர்கள், வீண் வெட்டி பேச்சு, ஊர் கதை, கேலி, கிண்டல்களில் உள்ள ஆர்வத்தில் இமாம் பேசுவதை கேட்க விடாமல் செய்யும் ஆடவர்கள்/பெண்கள் தான் தொழ வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டியவர்கள். எல்லாம் தெரிந்தும் மற்றவர்களின் தொழுகையை தொந்தரவு செய்யும் அவர்களுக்கு தான் முதலில் கற்று தர வேண்டி உள்ளது.

அதே போல யார் தொழுகைக்கு தொந்தரவாக இருந்தால் நமக்கென்ன என்பது போல குழந்தைகளை கண்காணிக்காமல், எவ்வித பழக்கங்களையும் கற்று தராமல், நானும் தொழ வந்தேன் என்று பெயருக்காக தொழ வருவதில் அர்த்தம் இல்லை. தாய்மார்களுக்கு தன் குழந்தைகளை பற்றி நன்கு தெரியும். சிறு குழந்தைகள் என்றால் முடிந்தவரை நன்றாக பகலில் உறங்க வைத்து, பசியமர்த்தி அழைத்து வருவது அவசியம். ஆனால் ஓயாமல் அழும் குழந்தை அல்லது துளியும் சொல் பேச்சு கேட்காமல் சேட்டை செய்யும் சிறுவர்/சிறுமியர் உள்ள அம்மாக்கள் என்றால் ஜமாத்தாக தொழ மஸ்ஜிதிற்கு அழைத்து வருவதை தவிர்க்க முயற்சிக்கலாம். 

சில மஸ்ஜிதுகளில் கையாளப்படும் வழிகள் :

 • சில நாடுகளில் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்காகவே தனி அறை ஒதுக்கப்படுகிறது.
 • சில இடங்களில் விபரமறிந்த சற்று பெரிய சிறுமிகள் அல்லது தொழுகை இல்லாத பெண்கள் எல்லா குழந்தைகளை கவனித்து கொள்கின்றனர்.
 • சில இடங்களில் மஸ்ஜிதிற்கு உள்ளே ஒரு தனி அறையில் கட்டணம் ஏதும் இன்றி, நன்மையை நாடி பேபி சிட்டிங் வகுப்புகள் (பிள்ளைகளுக்கு பிடித்த ஏதாவது விளையாட்டுகள், கதை சொல்வது போன்ற விஷயங்கள்) நடத்தப்படுகின்றன.
 • சில நாடுகளில் உள்ள மஸ்ஜிதுகளில் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய பள்ளிகூடங்கள் உண்டு. எனவே அங்கு விளையாட்டுக் கூடங்களும் இருக்கும். ஃபர்ல், வித்ர், ஜும்மா போன்ற சில தொழுகைகளை முடித்தபின் விளையாட அனுப்புகிறேன் என பொற்றோர் ஊக்குவித்து அழைத்து வருவார்கள். பிள்ளைகள் நம் சொல் கேட்டு தொழுதது போலவும் இருக்கும், அவர்கள் ஆசைக்கு விளையாடியது போலவும் இருக்கும்.
 • சிறு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்காக எதாவது திண்பண்டங்களை எடுத்து வந்து, மற்ற சின்ன குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை விதைக்கின்றனர் (தொழுகை முடிந்து போகும் போது, பண்டங்கள் எதாவது சிந்தி இருந்தால், அந்த தாய்மார்கள் தாமாக அதனை எடுத்து இடத்தை சுத்தம் செய்துவிடுகின்றனர்). இதனால் அவர்கள் ஓரளவு அமைதியாக இருப்பார்கள்.
சில இடங்களில் இப்படி எதுவும் ஒதுக்க இயலாமல், எல்லா பெண்களும் தொழும் இடத்தில் ஒன்றாக தொழ வேண்டி இருக்கும். நம் ஊர் மஸ்ஜிதுகள் பெரும்பாலும் இந்த நிலையில் தான் உள்ளது.

இருந்தாலும் சிரமம் பார்க்காமல் ஜமாத்தாக குழந்தையுடன் தொழ வரும் பெண்களை, மற்ற பெண்கள் இன் முகத்துடன் வரவேற்று உதவி செய்கின்றனர். சிலரோ, குழந்தையின் சத்தம், விளையாட்டு, அழுகை, பேச்சு முதலியன தொழுகைக்கு தொந்தரவாக இருப்பதாக எண்ணி சிடுசிடுப்பார்கள். அதே போல ஆண்கள் தொழும் பகுதியிலும் இதே நிலை தான். அங்கும் குழந்தைகள் வரவை இடைஞ்சலாக தான் சிலர் பார்க்கின்றனர்.

சிலர் நேரடியாகவே சொல்லிவிடுவார்கள், "குழந்தையை அழைத்துக்கொண்டு ஏன் தொழவருகின்றீர்கள்?" என்று. மஸ்ஜிதிற்கு வந்து தொழுவது கட்டாயமில்லை தான், அது குழந்தைகளின் தாய்மார்களுகாக மட்டும் சொல்லப்பவில்லை. அனைத்து பெண்களுக்கும் தான் சொல்லப்பட்டது. குழந்தையை காரணமாக வைத்து அவர்களுக்கு மட்டும் இந்த அறிவுரை கூறுவது முறையல்ல.

தொழுகையின் இடையே சிறு குழந்தைகள் அழ நேர்ந்தால், குழந்தையின் தாய் தொழுகையை பாதியில் விட்டுவிட்டு குழந்தையை சமாதானம செய்வதை காணலாம். பிறருடைய தொழுகைக்கு தன்னாலான வகையில் இடைஞ்சல்கள் தராமல் பார்த்துக்கொள்கின்றனர். அதையும் மீறி நிறுத்தாமல் அழும்போது, சூழ்நிலையை புரிந்து அவர்களே வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள்.

எல்லாவற்றை விட குழந்தைகள் தொந்தரவு செய்யும் முன்பே, குழந்தையுடன் வருபவர்களை எரிச்சலாக சிலர் பார்ப்பதை காணமுடிகிறது. வீட்டில் தொழும்போது கூட குழந்தைகளின் அழுகை, சத்தம், பேச்சு, விளையாட்டு இல்லாமல் ஒரு அறையில் பூட்டி வைத்த பின் நாம் தொழுவது இல்லையே.  சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி, பாட்டி போன்றவர்களுக்கும் அந்த சத்தம் தொந்தரவாக தெரிவது இல்லை.

இஸ்லாம் என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மார்க்கம். மஸ்ஜிதிற்கு வரும் குழந்தைகளை தன் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மகன், மகளின் குழந்தைகளாக பார்த்தால் அவர்களின் சத்தம் சங்கடமாகத் தெரியாது. 
நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழவைத்த போது, சிறு குழந்தையாக இருந்த ஹசன்(ரலி) நபி அவர்கள் சஜ்தா செய்யும்போது மேல் அமர்ந்து கொள்ள, அவர் ஆசை தீர கீழ் ங்கும் வரை நபி(ஸல்) அவர்களும், அவரை பின் பற்றி தொழுத சஹாபாக்களும் சஜ்தாவிலேயே இருந்தார்கள். ( நஸயீ)

சிறு வயது முதல் குழந்தைகளுக்கு நம் மார்க்கத்தையும், தொழுகையின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பழக்க வேண்டியது அவசியம். தினமும் தொழும் வழக்கம் உள்ள பெற்றோர் எனில், இரண்டு வயது குழந்தைக்கு கூட தொடர்ந்து அழுது தொல்லை தராமல் அமைதியை கையாள வேண்டுமென்பது பழக்கத்தில் தெரிந்து இருக்கும்.

சில தாய்மார்களுக்கு தொழுகையின் போது குழந்தை அழுதால் சமாதானம் செய்ய முடியாமல் குழந்தைகளின் அழுகையையும் மீறி  தொழுவார்கள். அழுகும் குழந்தையை தூக்கிக்கொண்டு தொழலாம் என்ற விஷயத்தை அறியாததே இதன் காரணம்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள். (புஹாரி 516)
சில குழந்தைகள் கவனத்தை ஈர்ப்பதற்காக அழுகும், ஆனால் அம்மா தொழ ஆரம்பித்துவிட்டால்  ஸ்விட்ச் போட்டது போல சமர்த்து பிள்ளையாக அழுகையை நிறுத்திவிடும். வீட்டிலேயே பழக்கப்படுத்தினால் மட்டுமே இது போல சாத்தியம்.

குழந்தைகளை ஒதுக்கிவிட்டு தொழுவது நபி வழி இல்லை. பிற்காலத்தில் கட்டாயப்படுத்தி தொழ வைக்க வேண்டி வராமல் இருக்க வேண்டுமென்றால், பிள்ளைகளுக்கு சிறுவராய் இருக்கும் போதே பழக்கப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒதுக்கியே வைத்தால், திடீரென ஒரு நாள் ஞானோதயம் பிறந்தது போல தொழுகையில் ஈடுபாடு வந்து விடாது.
உண்மையாக தொழவேண்டும் என்ற ஈடுபாட்டோடு குழந்தைகளுடன் வருபவர்களை எரிச்சலாக பார்ப்பது நபி வழி கிடையாது.
நபி(ஸல்), "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'. - புஹாரி 707
நபி(ஸல்) அவர்கள், "தொழுகைக்கு இடையூறு விளைவிக்கிறாய், உன்னால் மற்றவர்களும் தொழுகையில் கவனம் செலுத்த முடியவில்லை" என அந்த தாயை கண்டிக்கவில்லை. மாறாக தொழுகையைத்தான் சுறுக்கமாக முடித்துக் கொண்டார்கள்.நாம் தொழும்போது, பிள்ளைகளை அங்கு விடாமல் தள்ளி வைத்தோமானால், அவர்களும் தொழுகையை தள்ளிவைத்து விடுவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் தான் சஹாபாக்களோடு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார்கள். புதிதாக வரும் வஹி செய்திகளையும் அறிவிப்பார்கள், தொழுகை நடத்துவார்கள். அதை பார்த்து தான் சஹாபாக்களும் தொழுகையை, வஹி செய்தியை, குர்ஆனை கற்றுக்கொண்டார்கள். அவ்வளவு முக்கிய நிகழ்வுகளுக்கு இடையிலும் குழந்தைகளை ஒதுக்கி வைக்கவில்லை. மாறாக கூடவே வைத்திருந்தார்கள். அவர்களின் வரவை ரசித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தும் போது அவர்களது பேரர் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து தத்தித் தத்தி வந்தனர். உடனே நபி(ஸல்) அவர்கள் மிம்பரை விட்டும் இறங்கி இரு சிறுவர்களையும் சுமந்து மிம்பரில் அமரவைத்தார்கள். ... ... ... பின்னர் ‘நான் இந்த எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தத்தித் தத்தி வந்தனர். என்னால் அவர்களைச் சுமந்து இங்கே அமர்த்தும் வரை பேச்சைத் துண்டிக்காது பொறுமையாக இருக்க முடியவில்லை’ எனக் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)
குத்பா உரையை கூட நிறுத்திவிட்டு, பேரக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தந்து,  தூக்கி வந்து பின்னர் உரையை தொடர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். (புஹாரி - 3746) 
இப்படி தொழுகை, சொற்பொழிவு போன்ற எல்லா முக்கிய நேரங் களிலும் நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளை ஒதுக்காமல்    நேசிக்கும்போது, நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்??? 

நாம் தொழும்போது, பிள்ளைகளை அங்கு வர விடாமல் தள்ளி வைப்பதால், பின்னாளில் அவர்களும் தொழுகையை தள்ளிவைத்தால், அது யாருடைய குற்றம்?? பெண்களுக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்பையும் குழந்தையை காரணம் சொல்லி தட்டி கழிப்பது அவர்களின் உரிமையை பறிப்பதாகும். அதே போல குழந்தையை கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு.

 நாம் இதனை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக்காட்டுவானாக. ஆமீன்...

உங்கள் சகோதரி,
தாஹிரா பானுநன்றி : டீக்கடை ஃபேஸ்புக் குழுமம்
read more "அழும் குழந்தை - தொழுகையில் தொந்தரவா???"

Sunday, July 05, 2015

ஏன் ஹிஜாப்?- பானுப்ரியா (மூன்றாம் பரிசு பெற்றது)


      வ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் முஸ்லிமல்லாதவர்களுக்கான பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மூன்றாம் பரிசான ரூபாய். 2000/-த்தை  வென்ற  சகோதரி பானுப்பிரியா அவர்களின் கட்டுரை:

ஏன் ஹிஜாப்?:

          ஹிஜாப் என்பதை பெண்களை காக்கும் உடல் கவசம் என்று கூறலாம். ஏன் என்றால் நம் உடலை முழுவதும் மூடி  மறைப்பதற்கு ஹிஜாப் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இக்கால சூழ்நிலையில் வெயிலில் இருந்தும்  மற்றும்  தூசு, மாசு ஆகியவற்றிலிருந்தும் நம்மை காத்துக்கொள்ளவும் உதவுகிறது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது. அவர்களுக்கு ஆபத்துகள் அதிகமாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எவ்வளவு தான் வந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு  முக்கிய காரணம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் தான் காரணம் . அவர்கள் அணியும் ஆடைகள் தான் இதற்கு முழுமுதல் முக்கிய காரணம் என்று கூறலாம். முன்பெல்லாம் ஒரு பெண் செல்லும் பொழுது ஆண் அவள் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கக்கூடாது. அதுபோல்  பெண்கள் செல்லும் பொழுது ஆண்கள் இருக்கும் பக்கம் செல்லக்கூடாது நிமிர்ந்தும் பார்க்க கூடாது. ஆனால் தற்போதைய நிலைமை வேறு! காலம் மாறமாற அவைகளும் மாறிவிட்டன. அவர்களின் பண்பு நலன்கள் ஒழுக்கங்கள் உடைகள் அனைத்தும் மாறிவிட்டன.

       இத்தகைய எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எப்படி ஒரே இறைவன் இருக்கின்றானோ, அப்படி  பெண்கள் அனைவருக்கும் ஒரே பாதுகாப்பான உடை ஹிஜாப்பாக இருக்க முடியும் என்பது என்னுடைய சிந்தனையின் சிறு கருத்து

-பானுப்பிரியா
read more " ஏன் ஹிஜாப்?- பானுப்ரியா (மூன்றாம் பரிசு பெற்றது)"

Thursday, July 02, 2015

இஸ்லாமிய உடையே சிறந்தது : ஏற்றுக்கொண்டது அமெரிக்கா

       மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் சமீபகாலமாகவே இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப் பற்றிய நேர்மறையான விஷயங்கள் பரபரப்புச் செய்திகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில்  ஹிஜாப் அணியும் பழக்கத்திற்கு எதிரான கருத்துக்களை அடித்து நொறுக்க வந்துள்ளது இச்செய்தி. 

       அமெரிக்காவின் நியு ஜெர்சியில் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில் பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்த அப்ரார் ஷாஹின் என்ற முஸ்லிம் பெண் சிறந்த ஆடை அணியும் சீனியர் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உடலையும், தலையையும் எளிமையாக மறைக்கும் விதத்தில் ஷாஹின் அணிந்திருந்த ஆடை அமெரிக்க உயர் நிலைப் பள்ளிகளில் ஒழுக்கமான உடைகளுக்கான ஆதரவு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

      கிளிப்டன் ஹை ஸ்கூலில் இந்த அவார்டை வென்றதன் மூலம் ஷாஹின் அமெரிக்காவில் இஸ்லாமிய உடை நாகரிகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். ''பொதுவாக சியர் லீடர்களும், புகழ் பெற்ற பெண்களும் வெற்றி பெரும் போட்டியில் ஹிஜாப் அணியும் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது'' என்று ஷாஹின் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கர்கள் தன்னுடைய ஹிஜாபை மட்டும் பார்த்து, சமமாக நடத்துவது தனக்கென ஓர் அங்கீகாரத்தை அளித்துள்ளதாகவும் ஹிஜாப் அணியும் பெண்ணாக இருப்பதை என்றும்  பெருமையாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார் .
அப்ரார் ஷாஹின்
       3300 மாணவர்கள் படிக்கும் கிளிப்டன் ஹை ஸ்கூலில் 52 சதவிகிதத்தினர் இலத்தீன் அமெரிக்கர்கள் , 35 சதவிகித வெள்ளை இனத்தவர், 8 சதவிகித ஆசியர்கள், 5 சதவிகித கறுப்பின மாணவர்கள் படிக்கின்றனர் . ஷாஹின் மட்டுமல்லாது மற்றுமொரு முஸ்லிம் மாணவரான ஆபிரகாம் செய்டன், ஆண்கள் பிரிவில் சிறந்த ஆடை அணியும் மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இஸ்லாம் ஹிஜாபை வரையறுக்கப்பட்ட உடை நாகரீகமாக அன்றி , மத அடையாளமாகக் கூறவில்லை என்பது தெளிவாகிறது.
       சரி இதெல்லாம் போகட்டும்! ஹிஜாப் பரவலாக அனைவரிடமுடம் சென்று சேரும் அதே தருணத்தில் அல்லாஹ் வரையறுத்த ஹிஜாப் இதுதானா என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஹிஜாப் என்பது தலையை மறைத்தல் என்பதாக மட்டும் பலர் தவறாக கருதுகின்றனர். மாறாக அது உடை மட்டுமல்லாமல் உள்ளத்தோடும் சம்பந்தப்பட்ட விஷயம். அல்லாஹ்வின் கட்டளையை உள்ளச்சத்தோடு முழுமையாக நிறைவேற்ற வேண்டுமே அன்றி வெறும் கண்துடைப்பாகக் கடைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். என்னதான் உடலை முழுவதும் மறைத்தாலும் இறுக்கமான ஆடை உடல் அங்கங்களை வெளிபடுத்துவதால் ஹிஜாபின் வரைமுறையே மீறப்படுகிறது. ஹிஜாப் எனும் உடையை, உள்ளத்தோடு தொடர்புடைய ஒழுக்கமுறையாக ஏன் எதற்காக எப்படி பேண வேண்டுமென்ற ஆய்வை ஒவ்வொரு பெண்ணும், ஆணும் மேற்கொண்டு தீர்க்கமாகப் பின்பற்ற வேண்டும்.  எச்சூழ்நிலையிலும் எதற்காகவும் சமரசப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவ்வாறு அணிந்தாலே ஹிஜாப் நமக்களிக்கும் கண்ணியத்தை நாளடைவில் நாமே உணர்வோம்.
        இஸ்லாத்தைத் தீவிரமாக எதிர்ப்பதாகச் சித்தரிக்கப்படும் அதே உலக நாடுகளில் தாம், பொதுமக்களிடையே இஸ்லாமிய ஆடை குறியீடுகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். 

உங்கள் சகோதரி

நதிரா
read more "இஸ்லாமிய உடையே சிறந்தது : ஏற்றுக்கொண்டது அமெரிக்கா"