Sunday, June 07, 2015

மர்யம் (அலை) முழுமையான வரலாறுசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்களுக்குத் தாயாராக இறைவன் தேர்ந்தெடுத்தான். மனிதஜின் இனங்களிலேயே சிறந்த இனத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்கள் (2:47) பின்னாளில் அல்லாஹ்விற்கு மாறு செய்து வரம்பு மீறலாயினர். அவனது மார்க்கத்தை தம் மனோ இச்சையின்படி நடந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து அவனது அருட்கொடைகளுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்டனர்.

2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.

அல்லாஹ்வினால் அனுப்பபட்ட நபிமார்களின் தூதுச்செய்திகளை ஆணவத்துடன் மறுத்துநபிமார்களைக் கொலை செய்தும் வந்தனர்.  அவர்களது வரம்புமீறல்களை அல்லாஹ் (சூரா மாயிதா:70) வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.

5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.

இத்தகைய குழப்பங்களிடையேயும் யூதர்கள் தமது வேதங்களில் சொல்லப்பட்ட இரட்சிப்பவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தான் மர்யம் (அலை) அவர்கள் பிறந்தார்கள். நல்லடியாராக இவரைத் தான் தேர்ந்தெடுத்ததை அல்லாஹ் தன் திருமறையில் 
சூரா ஆல இம்ரானில் 3:45,46 கூறுகிறான்

3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்."

3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

சத்தியமார்க்கத்தை விட்டும் விலகி இணைவைத்து வந்த மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக மர்யம்(அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்த இறைவன்அவரது பிறப்புகுடும்பம்மகனது பிறப்புமக்கள் கூறிய அவதூறுகளை அல்லாஹ்விற்காக அமைதியாகத் தாங்கி நின்ற குணம் ஆகியவற்றை குர் ஆனில் சிறப்பித்து கூறுகிறான்.

இம்ரானின் குடும்பத்தை அல்லாஹ் மேன்மைப்படுத்தல்


ஆல இம்ரான் அத்தியாயத்தின் (33-34 ) வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்:
இம்ரானின் குடும்பத்தினர் ஆதம் (அலை)நூஹ் (அலை) மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களின் சந்ததியின் நல்லடியார்களாவர். யூதர்கள் மாறு செய்து வந்த சமயத்திலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவன் விதித்த சட்டங்களை உளமாற ஏற்று அவன் மீதே பொறுப்பை சாட்டியவர்கள் அவர்கள். இத்தகைய மேன்மையான குடும்பத்தில் இருந்து தான் மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

3:33 ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.

3:34 (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.


மர்யம் (அலை) அவர்களின் பிறப்பு


இம்ரானின் மனைவி தான் கர்ப்பமுற்றதை அறிந்ததும் அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் தன் மகவை அவனுக்கே முற்றிலும் அடிபணிந்ததாக அர்ப்பணிக்கவும் பிரார்த்தனைப் புரிந்தார். இம்ரானின் சமுதாயத்தினர் தம் ஆண் பிள்ளைகளைப் 'பைத்துல் மக்தஸ்' எனும் புனித பூமிக்குப் பணி செய்வதற்காக நேர்ச்சை செய்பவர்களாக இருந்தனர். அப்பள்ளிக்கு நேர்ச்சை செய்யப்பட்டவர்கள், எந்த வீண் விஷயங்களிலும் ஈடுபாடு காட்டாமல் அதிகமதிக வணக்கத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தனர்.

இம்ரானின் மனைவி, ஒரு பெண் குழந்தையை  மகவாக பெற்றதும்  அவர் அதற்கு மர்யம் (அல்லாஹ்விற்கு முழுமையாக விரும்பிக் கட்டுப்பட்டு வணங்குபவர்) எனப் பெயரிட்டு கேட்ட  பிரார்த்தனையாவது, 
(ஆல இம்ரான் 35-36)

3:35 இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

'முஹர்ரீன்' எனும் அரபி வார்த்தைக்கு (உங்களது சேவைக்கு) அர்ப்பணிக்கப்பட்டஅதாவது இம்மை ஆர்வம் சிறிதுமின்றி மறுமை குறித்த சிந்தனைகள் மட்டுமே கொண்ட 'தீவிர பக்தியுடையவர்' என்று பொருள். உண்மையான சுதந்திரம் என்பது அல்லாஹ்விற்கு சேவகம் புரிவதிலும் அவனுக்கு மட்டுமே அடிபணிவதிலும் மனிதர்களுக்காகவன்றி அல்லாஹ்வுக்காகவே வாழ்வதிலுமே உள்ளது. ஆகையால் தான் மர்யமின் தாயார் தனது கர்ப்பத்தில் உள்ளதை உலக விஷயங்களிலிருந்தும் விடுபட்டு யாருடைய ஒப்புதலும் அவசியமின்றிஅல்லாஹ்விற்காக முற்றிலும் அடிபணிந்து சேவகம் செய்ய விரும்பியதாலேயே அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து விட்டதாக வாக்குரைத்தார்.

மர்யமின் தாயார் அல்லாஹ்விடம் தமது அனைத்து குழந்தைகளுக்கும் அவனது திருப்பொருத்தத்தையும் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்பையும் வேண்டி துஆ செய்தார்கள். அவரது இம்மனமார்ந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் மர்யமை பூரண ஆரோக்கியத்துடனும் அழகுடனும் வளரச்செய்தான். (சூரா 3:37) மர்யம் (அலை) அவர்கள் மிகச்சிறந்த பரிபாலிப்பையும் உயர்ந்த குணநலன்களையும் பெற்று வளர்ந்தார்கள்.

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.

மர்யமின் தாயாருக்கிருந்த அல்லாஹ்வின் மீதான பற்றுதலையும் அனைத்து காரியங்களையும் அவன் மீதே பொறுப்பை ஒப்படைத்து சாட்டிவிடுதலையும் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினையாக உள்ளது.

ஜக்கரிய்யா (அலை) அவர்களை பாதுகாப்பாளராக நியமித்தல்


மர்யமின் தாயார் கேட்ட துஆவிற்காக, மர்யமைத் தான் பொறுப்பெடுத்துக் கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான். அவர் தன் நேர்ச்சையை நிறைவேற்றும் பொருட்டு தன் குழந்தையை பைத்துல் மக்தஸிற்கு விட்ட பிறகு, பெண்ணாக இருப்பதால் மர்யமை யார் பொறுப்பெடுப்பது என்ற கேள்வி எழுந்தது.
இறைநாட்டத்தால் ஜக்கரியா (அலை) அவர்கள் தாம் மர்யமிற்குக் கல்வி பயிற்றுவிப்பவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமக்கு வழங்கப்பட்ட பணியினை மிகச்சிறப்பாகச் செய்பவர்களாக இருந்தார்கள். மர்யமின் சகல விஷயங்களையும் அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். மர்யம் (அலை) பைத்துல் மக்தஸிலேயே தங்கி பக்குவமான பெண்ணாக வளர்ந்தார்கள். மர்யமின் வாழ்வில் நிகழ்ந்த பல இறை அற்புதங்களுக்குச் சான்று பகர்பவர்களாகவும், அனைவரது பிரியத்திற்குட்பட்டவராகத் திகழ்ந்ததை நேரில் கண்டவராகவும் ஜக்கரிய்யா(அலை) அவர்கள் இருந்தார்கள் (சூரா 3:37).

3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.

ஜக்கரியா (அலை) அவர்களுக்கு ரப்பின் மீது உண்மையான பற்றுதலை வழங்கி அவரை உயர்த்திய அல்லாஹ் அவரை நேரிய வழியில் செலுத்தினான். அல்லாஹ்வின் மீதான அவருக்கிருந்த பயபக்தியையும் அவரது உயரிய குணங்களையும் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்: (சூரா அல் அன் ஆம்:85 87)

6:85 இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

6:86 இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

6:87 இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.


மர்யம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தல்


அவர்களது குடும்பத்தினர் போலவேமர்யம் (அலை) அவர்கள் இயல்பிலேயே அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவர்களாகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்து அவனைத் தொழுபவர்களாகவும் இருந்தார்கள். இம்ரானின் குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்த இறைவன் மர்யம் அவர்களையும் மற்ற அனைத்து பெண்மணிகளிலும் சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுத்தான். அவரது மேன்மையையும் தூய்மையையும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டு நமக்கு எடுத்தறிவிக்கிறான். (ஆல இம்ரான் 42-43
Surat at-Tahrim: 12, Surat al-Anbiya': 91

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),

3:43 “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.


ஜிப்ரீல் மர்யம் (அலை ) அவர்களைச் சந்தித்தல்


மர்யம் (அலை) அவர்கள் அவருடைய வாழ்நாள் முழுவதுமே எண்ணிலடங்கா அதிசயங்களை சந்தித்திருந்தார்தாம் வாழ்ந்த குடும்பம் ,சமூகத்தை விட்டு  வெளியேறி கிழக்கு நோக்கி சென்று வாழ்ந்து வருபவராகத் திகழ்ந்தார். அங்கு ஜிப்ரீல்(அலை) அவர்களை மர்யம் அலை அவர்கள் நல்லதொரு திடகாத்திரமான மனித உருவத்தில் சந்தித்தார் .

19:16 (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராகஅவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கிகிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,

19:17அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

ஜிப்ரீலை கண்டதும் மர்யம் (அலை) அவர்கள் நான் உங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை ,நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால், என்னை நெருங்காதீர்கள் என்று அவரை எச்சரிக்கை செய்தார் (சூரா மர்யம் 19). இவ் வார்த்தைகள் மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதனையும்தனது கற்பு மற்றும் இறைவனுக்கான தனது அச்சம்  எவ்வளவு முக்கியமானது என்பதனையும்மேலும் முக்கியமாக யாரென்று அறியாத ஒருவரையும் அல்லாஹ்வை அஞ்சவும் கண்ணியப்படுத்தவும் தூண்டின என்பதனையும் தெளிவாகக் கூறுகின்றன .

ஜிப்ரீல் மர்யம் (அலை) அவர்களின் கலந்துரையாடல்


ஜிப்ரீல் (அலை) நான் அல்லாஹ்விடமிருந்து  அனுப்பப்பட்டுள்ள தூதுவனாவேன் என்று தன்னை அறிமுகப்படுத்தி மேலும்  ,அவன்  உங்களுக்கு ஒரு பரிசுத்தமான மகனை வழங்க வல்லவன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 19 )

19:19 “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.


ஜிப்ரீல் : “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ்மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும்மறு உலகத்திலும் கண்ணியம் மிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார் (அல்குர்ஆன் 45 ) என்று நற்செய்தி கூறினார்.

3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

மர்யம் : ஜிப்ரீலிடம் என்னை எந்த ஒரு ஆணும் தொடாமல் இது எப்படி சாத்தியமாகும் நான் பத்தினி பெண் இல்லையா என்று வினவ (அல்குர்ஆன் மர்யம் 19 :20 

19:20 அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.

ஜிப்ரீல் : அல்லாஹ் எதையேனும் நடந்தேற விரும்பிவிட்டால் அவன் அதை படைத்துவிடுவான். அவன் முடிவெடுத்துவிட்டால் அதை தடுப்பவர் எவருமில்லை என்று கூறுகிறார் ( ஆல இம்ரான் :47 ),

3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”


மேலும் இது அவனுக்கு மிகவும் சுலபமாதாகும் . அவன் இக்குழந்தையை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும் பரக்கத் நிறைந்தவராகவும் அந்த ஆண் மகவை ஆக்கவுமுள்ளான். இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விசயமாகும் என்றும் கூறினார். இதற்குப் பின்பு மர்யம் (அலை) அவர்கள் அந்த கருவைச் சுமந்த வண்ணமே வேறு ஒரு ஊருக்கு தொலைவில் சென்று வாழ்ந்து வந்தார்.  (அல்குர்ஆன் : 19 : 21 - 22)

19:21 “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.

19:22 அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

மர்யம் (அலை) அவர்களின் பிரசவம்


அல்லாஹ்  மர்யம் (அலை ) அவர்களை அவரின்  சமுதாயத்தினரிடமிருந்து பல காரணங்களுக்காக விலக்கி வைத்திருந்தான் . உதாரணமாக ,மக்கள்  மர்யம் (அலை)அவர்களின் அற்புத நிலைமையை புரிந்து கொள்ளாமல் அவரை விமர்சனத்திற்குள்ளாக்கினர். எனவே  அவர்களை அங்கிருந்து விலக்கி தொலைவில் வாழ வைத்தான். இதனால்  அவருடைய பிரசவிக்கும் வரையில் அவருக்கும் அவருடைய கருவிற்கும் மன நிம்மதியும் சமாதானமும் கிடைத்தது.

அல்லாஹ்வின் உதவியும்நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும்


அல்லாஹ், மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பகாலம் முழுவதும் அவருக்குத் துணைபுரிந்தான்இவை எல்லாவற்றையும் விட உதவிக்கென மருத்துவரோ ,மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் தனியாகத் தானே பிரசவிப்பது என்பது  ஓர் அசாத்தியமான அனுபவமாகும்இருப்பினும்மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது தனக்கே உண்டான தனது முழு நம்பிக்கையையும் வைத்தார்.  பிரசவ வலியில் சொல்லொன்னா துயரில் துடித்து அலறிய மர்யம் (அலை ) அவர்கள் எனக்கு "இவ்வேதனைக்கு பதிலாக மரணித்து விடக் கூடாதா" என்று கதறினார்கள். அவ்வேளையில் அல்லாஹ், "இவ்வேதனைக்குப் பகரமாக நாம் உங்களின் பாதங்களுக்கு கீழே ஒரு ஆற்றினையும் பேரித்த மரங்களையும் உருவாக்கியுள்ளோம். அந்த ஆற்றின் நீரினையும்மிகச் சுவையான பேரித்தம் பழங்களையும் நீங்கள் உண்டு பருகுவீர்கள். அது உங்கள் கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியாக அமையும்" என்று நற்செய்தி கூறுகின்றான். இதன் விளைவாக அவர்கள் பிரசவம் எளிதாக நிகழ்ந்தது .(அல்குர்ஆன் 19 23 26 )

19:23 பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.

19:24 (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்

19:25 “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

19:26.“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.


அல்லாஹ்வின் அருளையும்பாதுகாப்பையும் இந்த சூழ்நிலையில் நாம்  தெளிவாக காணக்கூடியதாக அமைகின்றது.  உண்மையில்அவனுடைய ஆலோசனை நவீன அறிவியல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்த ஆலோசனைகளை நாம் இப்பொழுது சில விளக்கங்களின் மூலம் காண்போம் 

துயரம் தவிருங்கள்


மேலும் அல்லாஹ் பிரசவ வேதனையில் துவண்டுவிட்ட மர்யம்(அலை) அவர்களுக்குத் துயரத்தைக் கைவிடுமாறு ஆறுதல் வழங்கினான். இந்த ஆலோசனையின்படி, இஸ்லாமியர்களாகிய நாம் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்து மனதளவிலும் உடலளவிலும் சோதனையின் ஆரம்பக்கட்டத்தில் அருளாளனையே,  அவனையே ,  அவன் மீதே நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று தெளிவாகின்றது.

நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இது தேவையான ஆலோசனையாகும்நவீன மருத்துவ உலகில் மருத்துவர்களும் இதை உறுதி படுத்தியுள்ளனர்.  கருவுற்ற பெண்களிடம்சோகம்மனவுளைச்சல்களைத் தவிர்த்து கருவை சுமக்கும் பொழுதும்பிரசவிக்கும்பொழுதும், ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களையே மனதில் வைக்கும்படி அறிவுறுத்துகின்றனர் . 

பேரித்தம் பழத்தின் பயன்கள்


அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களுக்கு புதிதான சுவைமிக்க 
பேரித்தம்  பழங்களை உண்ண நற்செய்தி கூறினான். அவ்வகையான பேரித்தம் பழங்களில் அதிக மருத்துவ குணமும் பத்துக்கும் மேற்பட்ட உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதில் இருக்கின்றது என்று இன்றைய நவீன மருத்துவ உலகமும் அறிவியல் அறிஞர்களும் கூறுகின்றனர்.

நவீன மருத்துவ உலகம் கர்ப்பிணி பெண்களுக்கு பேரீத்தம் பழங்களை பரிந்துரைக்கின்றது .மேலும் மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு பிருக்டாஸ் என்னும் சத்து அதிகமுள்ள உணவுபொருள்களை பேறுகாலத்தின் பொழுது அதிகம் உட்கொள்ள சொல்கின்றனர்இதன் மூலம் சத்துக் குறைவான பெண்களுக்கு அதிகம் சத்துக்கள் கிடைக்குமென்றும்பால் உற்பத்தி செய்யும் ஹார்மோன் களுக்கு அதிக சத்துக்கள் கிடைத்துகுழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் அதிகம் கிடைக்க வழிவகை செய்கிறது என்றும் கூறுகின்றனர்.

பேரித்தம்பழத்தின் நன்மைகளை மேலும் அறிந்துகொள்ள - லின்க்


அல்லாஹ் ஏற்படுத்திய ஓடை

அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களிடம் கூறுகின்றான்: உங்களின் பாதங்களின் கீழே ஓடை ஒன்றை  ஏற்படுத்தியுள்ளோம் என்றும் , அது உங்களின் தாகத்தைத் தீர்க்க வல்லதுஅதனை நீங்கள் பருகலாம். மேலும் அது உங்களுடைய கண்களுக்கு குளிர்சியினையும் அளிக்கும் என்றும் கூறுகிறான் .
தண்ணீரும் பேரித்தம் பழத்தினை போன்றே கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் பெரிதளவில் உதவுகின்றது. மேலும் தசை வலிகளை இது நீக்குகின்றதுதற்பொழுதுள்ள சில நவீன மருத்துவமனைகளிலும் மகப்பேறு நடக்கும் அறைகளில் சிறிய ஓடை போன்ற ஒரு செயற்கை  நீருற்றினை வைத்துள்ளனர் .

மகப்பேற்றில் தண்ணீரின் இன்றியமையாத தன்மைகள்  குறித்து மேலும் அறிந்து கொள்ள - லின்க்


மர்யம் (அலை)பேரித்தம் மரத்தினை உலுக்குதல்

அல்லாஹ்,  மர்யம்  (அலை) அவர்கள் பிரசவ வேதனையின் போது அங்குள்ள பேரித்தம் மரத்தின் கிளையினை உலுக்குமாறு அறிவுறுத்துகிறான்.(அல்குர்ஆன் 19 :25 )

19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

இன்றைய மருத்துவம் கூறுவதாவது, இப்படி அழுத்துவதால் தசைகளுக்குக் கூடுதலான சக்தி கிடைத்து பிரசவம் எளிதில் சம்பவிக்க மிகவும் உதவுகின்றது.  இதற்காகவே  கர்ப்பம் தரித்த நாட்களிலிருந்து சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலம் பிரசவத்தில் எற்படும் சில சிக்கல்கள்  தவிர்க்கப்படுகின்றன .

பிரசவ நேரத்தில் உடலுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் எவ்வாறு உதவுகிறது என்றறிந்து கொள்ள: - லின்க்


மர்யம் (அலை) தம் சமூகத்தாரிடம்  திரும்புதல்


மர்யம் (அலை) அவர்கள் தாம் பெற்றெடுத்த மகவுடன் தன் சமுதாய மக்களிடம் திரும்பிய பொழுது அவர்கள்இறைவனின் அருளையும் அதிசயத்தினையும் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் அவரை அநாகரீகமான வார்த்தைகளாலும் அவதூறுகளாலும் நோவினை செய்தனர்மர்யம் (அலை) அவர்கள் இம்ரானின் குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தும் அக்குடும்பத்தார் எவ்வாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் பயமும் கொண்டவர்கள் என்பதனை அறிந்தும் மர்யம் (அலை) அவர்கள் எவ்வாறு தன்மானம் மிக்கவர்கள் என்பதனை அறிந்தும் அவரின்  நடத்தையில் சந்தேகம் கொண்டனர். அல்லாஹ் பின்வருமாறு இறைமறையிலே அந்த அவதூறுகளைப் பற்றி குறிப்பிடுகின்றான் .

சந்தேகத்திற்கிடமின்றி மர்யம் (அலை) அவர்களுக்கு இது மிகப்பெரிய சோதனை  ஆகும்.

மர்யம் (அலை)அவர்களின் தீர்க்கமான உறுதிமொழி


அல்லாஹ் அவரின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பதில் அளித்தான். மேலும் அவருக்கு மன நிம்மதியையும் அளித்தான். எந்த மனிதரிடமும் பேசுவதில்லை என்று அவதூறு உரைப்பவர்களிடம் தெரிவிக்குமாறு  அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் (அல்குர்ஆன் மர்யம் 19 26 )

19:26 “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.

இதன்பின் மர்யம் (அலை) அவர்கள் இந்த குழந்தை அல்லாஹ்வின் அருளால் தனக்கு வழங்கப்பட்டது என்றும் இவர்  வளர்ந்து நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருப்பார் என்றும் கூறினார்கள் (அல்குர்ஆன் ஆல இம்ரான் 46).

3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

இந்நிலையில் அல்லாஹ் தனது அதிசயத்தினை நிகழ்த்திக் காட்டினான்.  தாம் அல்லாஹ்வினால் இஸ்ரேலியர்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதுவன் என்றும் அக்குழந்தை  கூறியது .

அப்பொழுது எப்படி பிறந்த குழந்தை பேசுமென்று மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு,  தான் இறைவனின் தூதுவன் என்றும் எனக்கென்று தனியாக ஒரு இறைமறையும் இறைவன் வழங்கியுள்ளான் என்றும் தன்னை நபியாகவும் ஆக்கியுள்ளான் என்றும் குழந்தை ஈஸா கூறினார் . மேலும் தான் அவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்யவேண்டுமென்றும் ,ஜக்காத்தினை சரியாக வழங்கவும்  , தன் தாயின் மீது கருணை பொழிய வேண்டுமென்றும் இறைவனால் பணிக்கப்பட்டுள்ளதாக கூறினார் . இறைவன் என்னை அரக்கனாகவும் அராஜகம் புரிபவனாகவும் படைக்கவில்லை என்றும் , நான் பிறந்தது முதல் இறக்கும் வரை என் மீது அமைதியையும் சமாதானத்தையும்   
பொழிந்துள்ளான் என்றும் கூறினார் . மேலும் தான் அவனளவில் உயர்த்தப்பட்டு மீண்டும் வாழ்விக்கப்படுவேன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 29 34 )

19:29 (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.

19:34இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).

இந்த அதிசயத்தக்க நிகழ்வினை அல்லாஹ் பின்வருமாறு இறை மறையிலே கூறுகின்றான் (சூரா அன்பியா 91 )மேலும் இறைவன் மர்யம் (அலை) மற்றும் அவரின் மகன் ஈஸா (அலை)அவர்கள் இருவரையும் மக்களிலேயே உயர்வானவர்களாக்கி வைத்தான் . மர்யம் (அலை) அவர்களை அவதூறு கூறியவர்களின் முன் குழந்தை  ஈஸா அவர்களின் பேச்சானது மர்யம் (அலை) அவர்களின் புனிதத் தன்மையையும் கர்ப்பினையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்தியது .

21:91 இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

மர்யம் (அலை) அவர்களின் உயரிய நன்னடத்தை


மர்யம் (அலை) அவர்கள் உலக பெண்களுக்கு உதாரணமாவார்.  ஏனென்றால் அவர்கள் தன்வாழ்நாள் முழுவதும் உயரிய நெறிகளோடு வாழ்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை விரும்பத்தக்க அழகு வாய்ந்த செடியினை போன்று உயர்த்தினான். மேலும் அவருக்கென்று அல்குர்ஆனிலே ஒரு முக்கிய இடத்தினையும் பொறுப்பினையும் வழங்கினான். அல்லாஹ் அவரை இம்ரானின் குடும்பத்தில் தேர்ந்தெடுத்து பிறக்க வைத்தான் ,அதிக இறை பக்தியும் இறை அச்சமும் ,இறைவன் மீது ஒப்பற்ற அளவு மரியாதையும் கொண்டவராக ஆக்கி மக்களிடையே மிக உயர்ந்த நன்னடத்தை கொண்டவராக ஆக்கி வைத்தான் .

ஜக்கரியா (அலை) அவர்களின் வளர்ப்பின்  மூலம் மர்யம் (அலை) அவர்கள் நன்நடத்தையினை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அந்த வழிகாட்டுதலின் மூலமே மர்யம் (அலை) அவர்கள் இந்த மிகப்பெரிய உயர்வினை அடைய முடிந்தது .

இன்னொரு முக்கியமான  நன்னடத்தை என்னவென்றால் மர்யம் (அலை) அவர்கள்  சோதனையின் ஆரம்ப கட்டத்திலும்  , அவருடைய மக்கள் அவரின் பொறுமையினை சோதித்த பொழுதும்,  அவர்களின் சுய கணிப்பினாலும் நடக்காத ஒன்றினை நடந்ததாக கூறி அவர் மீது அவதூறு கூறியபோதும் ,அவர் தனது  உயரிய நிலையை  இழக்கவில்லை இந்நிலையில் அவரின் பொறுமையையும் , ஈமானையும் , இறை உறுதியையும் அவர் நம்பிக்கையையும் ,  தைரியத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது .

இன்னொரு முக்கியமான விசயத்தினை நாம் இங்கு கவனிக்கவேண்டும்.  இந்த சோதனை அவருடைய மக்கள் அவரை ஏற்றுக் கொள்வதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது . அந்நிலையில் அவர் தன்  புனிதமான ஈமானின் மூலம்  அல்லாஹ்விடம் சரண் அடைந்தார்கள். இதன் மூலமே அவர்கள் அம்மக்களின் அவதூறு மற்றும் அநாகரீகமான பேச்சுக்களிலிருந்தும் பாதுகாப்பு பெற்றார்கள்.  அவரின் முழும்யான இறை பக்தியையும் இறை அச்சத்தையும் அல்லாஹ் மிக விரும்பி அவருடைய பிரார்த்தனைக்குத் தன் அருளலால் பதில் கொடுத்தான் .

நாம் இரண்டு வகைகளில்  நன்னடத்தையினை வெளிப்படுத்த முடியும் .  ஒன்று வார்த்தைகளாலும், இரண்டாவது   வாழும் முறையாலும் .  இதில் இரண்டாம் வகை மிகவும் உயர்வானதும் முக்கியமானதும் மிக சிறப்பு வாய்ந்த உண்மையான வழியுமாகும் என்பதனை  மர்யம் (அலை) அவர்களின் 
நன்னடத்தையின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள இயலும் . மேலும் ஒருவருடைய  நன்னடத்தையின் மூலமே அவரின்   இறை நம்பிக்கையையும் அவருடைய உண்மையான நிலையையும்  அவரின் இதயத்தையும் அறிந்து கொள்ள முடியுமென்பது தெளிவாகின்றது. 

இத்தகைய சிறப்பு மிக்க மர்யம் அலை அவர்களிடம் நம் இஸ்லாமியப் பெண்மணிகளுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. எத்தகைய சோதனைகளை அல்லாஹ் நம் மீது விதித்த போதும்  அவனிடமே பொறுப்பைச் சாட்டி  பொறுமைகொள்ள மர்யம் அலை வாழ்க்கையில் நமக்கு பல படிப்பினை உள்ளது.   அல்லாஹ் நம் அனைவர் மீதும் சாந்தியையும் சமாதானத்தையும் அருள்வானாக.... ஆமீன்

http://www.womaninthequran.com/01.html - இவ்வாங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்தவர் சகோதரி ஹசினா மர்யம்

Ref: Islamkalvi.com

2 comments:

  1. You have translated in an interesting and lively way. Hats off to u sister. May allah protect and guide u well.

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்...சகோதரி ஹஸினா அவர்களின் இம் மொழிப்பெயர்பானது மிக சிறப்பாக, எளிமையான நடையில் அமைந்து உள்ளது பாராட்டுக்குரியதாகும்.. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete