Wednesday, June 10, 2015

கலர் பேப்பரில் கரன்சி பேப்பர் அள்ளும் சிறுமி

            சென்ற வாரம் முழுவதும் 7ம் வகுப்பு  சிறுமி ஷகினா பர்வீன் பேஸ்புக்கில் வலம் வந்தாள். அவளை தொடர்புகொள்ள முயற்சித்தேன்.

              கொண்டு வந்திருந்த பாதி தோடுகள் விற்ற உற்சாகத்துடன் சிறுமி ஷகினா  தொலைபேசியில் பேசினாள். அவள் உற்சாகத்தில் பங்குகொள்ளும் விதமாக   எத்தனை தோடு  விற்பனையானது எனக் கேட்டேன், பல்லை கடித்துவிட்டு "ப்ச்..கவுண்ட் பண்ணலையே " என்றாள்  அவள் வயதுக்கே உரிய  குழந்தை தனத்துடன்....  அடுத்த  நாள் மீண்டும் போன் செய்வேன், எனக்கு கவுண்ட் பண்ணி சொல்லணும் என்று சொன்னதும் அதே பாணியில் சொன்னாள் , "ம்..கண்டிப்பா"

யார் ஷகினா???

               தமிழகம் முழுவதும் "மக்கள் சங்கமம் " நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, அதன் தொடர்ச்சியாக இராமநாதபுர மாவட்டத்தின் கடற்கரை ஊரான பெரியப்பட்டிணத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அந்நிகழ்ச்சியில் எதுயெதுவெல்லாம் மக்களை கவர்ந்ததோ இல்லையோ சிறுமி ஷகினாவும் அவள் டேபிளில் பரப்பியிருந்த வண்ண வண்ண தோடுகளும் அனைவரின் பார்வையையும் அவள் பக்கம் திருப்பியது. குவில்லிங் இயரிங்  கிராப்ட் எனப்படும் சிறிய வகை வண்ணப்பேப்பரில் பல மாடல்களில் கைவினைத் தோடுகளை விற்பனைக்கு பரப்பியிருந்தாள் ஷகினா. டேபிளில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாடல்களில்  வீற்றிருந்த தோடுகள் அனைத்தும் அவளே செய்தது தான் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

              ஷகினா இராமநாதபுரம் நேஷனல் அகாடெமி யில் இவ்வாண்டு ஏழாம் வகுப்பு செல்கிறாள். படிப்பில் சுட்டி, மார்க்க ஒழுங்கில் அவள் வயதினருக்கு முன்மாதிரி. பள்ளியில் கற்றுகொடுக்கப்பட்ட பத்து வகை க்வில்லிங் இயரிங்கை வைத்து தன் கற்பனைக்கேற்பவும், டிவி பேப்பர்களில் காட்டப்படும் பெண்களின் தோடுகளை கவனிப்பதன் மூலமும்  100கும் மேற்பட்ட டிசைன் செய்துள்ளார். டேபிளில் இருப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடல்.  இது தவிர உல்லன் நூல் கொண்டு பொம்மைகள் செய்வது, பெயிண்டிங் என வெளுத்து கட்டுகிறார். தானாக கரு உருவாக்கி அதனை வைத்து கதை எழுதுவதும் இவர் பொழுதுபோக்கில் ஒன்று. "இதெல்லாம் செய்றத பார்த்தா அம்மா திட்ட மாட்டாங்களா என கேட்டேன், " திட்டத்தான் செய்வாங்க" என சளிப்புடன் சொல்லி "ஆனா நா லீவ்ல டைம் ஒதுக்கி செஞ்சுக்குவேன்" என உற்சாகத்துடன் முடித்தாள்.

               அவளின் தந்தை 11 வருடங்களுக்கு முன் துபாயில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். அம்மா இல்லத்தரசி. அக்கா கோவையில் ஏரோனாடிகல் இன்ஞினியரிங் படிக்கிறார். இவர்கள் மூவரும் இப்போது பாட்டி வீட்டில் வசிக்கின்றனர்.  பொருளாதார தேவையும் தந்தைக்குரிய பொறுப்பையும் தாய்மாமன்கள் இருவர் பூர்த்தி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நிறைந்த செல்வாக்கும் மகத்தான வெற்றிகளும் உரித்தாக்குவானாக..  ஆமீன்..

         முதல் நாள் சொன்னபடியே  அடுத்த நாளும் தொடர்பு கொண்டேன். இருநாள் நிகழ்ச்சியில்   கடைசி நாளான அன்று காலைக்குள்  மூவாயிரம் ரூபாய் வரை இச்சுட்டிப்பெண் தன் தோடுகளை விற்றிருக்கிறாள்.   "இன்னும் கொஞ்சம் தான் இருக்கு, நைட்க்குள்ள வித்துடும்" என குதூகலத்துடன் சொன்ன ஷகினாவிடம் " உன் வருங்கால திட்டம் என்ன?" என கேட்டது தான் தாமதம். யோசிக்காமல் உடனே சொன்னாள், மின்னல் வெட்டி மறைந்த வேகத்தில் " ஐ ஏ எஸ் " . அவளின் ஆசை நிறைவேற நிறைந்த துஆவுடன்  போன் உரையாடலில் இருந்து விடைபெற்றேன். நீங்களும் அவளுக்காக துஆ செய்யுங்கள்...

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

தொடர்புகொள்ள உதவி & போட்டோ உதவி : சகோ ஷாகுல் ஷா, பெரியப்பட்டிணம்

4 comments:

 1. மாஷஅல்லாஹ்.. இந்த சின்னவயதில் இவ்வளவு திறமையா..!!!


  யா அல்லாஹ் ..இச்சிறுமியின் திறமை மென்மேலும் வளர்ந்து அவளின் எதிர்காலதிட்டமான ஐ.எ.எஸ். ஆசையை நிறைவேரச்செய்திடுவாயாக அல்லாஹ்..!!

  ReplyDelete
 2. அருமை நல்ல அறிவான குடும்பம் .மேன்மேலும் சிறக்க அல்லாஹ் அருள்செய்ய பிரார்த்திக்கின்றேன்

  ReplyDelete
 3. அவள் எண்ணமெல்லாம் நிறைவேற வேண்டும்.

  ReplyDelete