Sunday, June 07, 2015

பிரசவத்தில் அங்கம் வகிக்கும் தண்ணீரும் உடலுக்குத் தேவைப்படும் அழுத்தமும்



பிரசவ அறையில் தண்ணீரும் அழுத்தம் கொடுக்க உதவும் கைப்பிடியும்
தண்ணீர் மனித வாழ்வில் மிக இன்றியமையாத ஒன்றாகும். இது உடல் சூட்டினைத் தணிக்கவும் ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் உடலிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லவும் உதவுகிறது. மேலும் தேவையற்ற கழிவுகளையும் நமது உயிர் செல்களிலிருந்து நீக்குகின்றது. மேலும் நமது அனைத்து எலும்பு மூட்டுப்பகுதிகள் சீராகச் செயல்பட உதவுகின்றது. தோலின் ஈரப்பதமும் நெகிழ்வுத்தன்மையையும் பாதுகாத்து வருகிறது. நமது ஜீரண உறுப்புகள் அனைத்தும் செவ்வனே இயங்கவும் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும் பேருதவி புரிகின்றது. அதிகப்படியான மன அழுத்தத்தையும் போக்கி ஹார்மோன்களின் உற்பத்தியினை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 

கர்ப்ப காலத்தில் தண்ணீர் பல்வேறு முக்கியக் காரணங்களுக்குத் தேவைப்படுவதால் அதனை அதிகளவில் பருகுவதும் அத்தியாவசியமாகிறது. கருவிற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தாயிடமிருந்து தண்ணீர் வழியாக எடுத்துச்செல்லப்படுகின்றன. அதே போல், தண்ணீர் அதிகம் பருகுவதின் விளைவாக வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தேவையான இரத்தம்  கிடைக்கின்றது. தண்ணீர் அதிகளவில் பருகுவது தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கிறது. தாய் பாலில் 87 சதவிகிதம் தண்ணீரே மிகைத்துள்ளதால் , தண்ணீரின் தேவையினை  எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். நீர்ச்சத்து குறைவு குறைபிரசவத்திற்கு வழிவக்கும். நீர்ச்சத்து குறைவினால் ஹார்மோன்கள் அதிகப்படியாக வெளியாகிக் கடுமையான பிரசவ வலியினை உருவாக்கும். 

மேற்கூறப்பட்ட தற்கால அறிவியல் விளக்கங்கள், அல்லாஹ் மர்யம் அலை அவர்களுக்கு ஓடை வழங்கியதின் பிண்ணனியில் உள்ள  உண்மையை நமக்கு மேலும் தெளிவுபடுத்துகிறது. இவை அனைத்தும் அல்லாஹ்வே மிகுந்த ஞானம் மிக்கவன் என்பதற்கும் மிக சிறந்த அத்தாட்சிகளாகும். 

பிரசவ வேதனையின் போது கர்ப்பிணிகளைத் தம் தலையினை உயர்த்தி நன்கு அழுத்தம் கொடுக்குமாறு மருத்துவர்கள்  கூறுகின்றனர். இதன் மூலம் ஒரு ஈர்ப்பு விசை கிடைக்கின்றது என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாகவே மருத்துவமனைகளின் மகப்பேறு நடைபெறும் அறைகளில் உள்ள கட்டில்களின்  தலைப்பகுதி சற்று உயரமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இது  பிரசவம் எளிமையான வழியில் நடைபெற ஏதுவாக அமைகின்றது .


இன்னும் சில மருத்துவர்கள் ஒரு பாதியாக இடுப்பினைப்  பின்னோக்கித் தள்ளி அமர்ந்த வண்ணமும் கர்ப்பிணிப்பெண்களை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட இருக்கைகளில் பிரசவ சமயத்தில் அமரச்செய்கின்றனர். இன்றைய நவீன மருத்துவ முறைகள் வருவதற்கு முன்பு , பிரசவ அறைகளில் மேலே கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவர்கள் தலையினை உயர்த்தும் பொழுது பிடித்துக்கொள்ள ஏதுவாக அதனை அங்கு வைத்திருப்பர். பிரசவ நிகழ்வு விரைவாகவும் எளிதாகவும் நடைபெற இது வழிவகை செய்யும். இவ்வனைத்து முறைகளும் செயல்முறைப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டவையாகும்.

இதன் காரணமாகவே அல்லாஹ் மர்யம் அலை அவர்களை தலையினை உயர்த்தும்பொழுது பேரித்தம் பழத்தின் கிளைகளை குலுக்குமாறு கூறினான்.(அவனே சிறந்ததை அறிந்தவன் ) 

No comments:

Post a Comment