Sunday, June 14, 2015

உணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி?

பிஸ்மில்லாஹிர்ரர்ஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் எண்ணற்ற கொடைகளில் மிக மிக முக்கியமானது உணவு. மில்லியன் ட்ரில்லியனுக்கும் மேலான மக்கள் பலருக்கும் வழங்கப்படாத கொடையினை அல்லாஹ் நமக்கு வாரி வாரி வழங்கியிருக்கிறான். ஆனால் அதற்கான நன்றியினை நாம் அவனுக்கு செலுத்துவதில்லை. மனிதன் மிக சொற்பமாகவே நன்றி கூறுபவன். எத்தனையோ மக்களில் அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுத்து அருளியிருக்கும் நிஃமத்திற்கு நாம் தகுதியானவர்களாக நடந்துகொள்கிறோமா என்ற சுயபரிசோதனையில் அனைவரும் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்.

உணவில் வீண் விரயம் என்பது பெரிய பெரிய விருந்திற்குட்பட்டது மட்டுமல்ல.. நம் அன்றாட உணவுப்பழக்கத்திலும் கடைபிடிக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும் 

உணவில் வீண் விரயம் என்பதாவது:

 • Ø  உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் தேவைக்கு அப்பாற்பட்ட வகைவகையான உணவுகளை அடிக்கடி சமைப்பது அல்லது வாங்குவது. (என்றேனும் சில நாட்களில் ஆசையினாலோ தவிர்க்க முடியாத சூழலிலோ உண்பதில் தவறில்லை)
 • Ø  தம் குடும்பத்தின் கவுரவத்தைப் பிறர் மெச்சுவதற்காகப் பலவித உணவுகளைப் பரிமாறுவது.
 • Ø  தன்னால் வாங்க இயன்ற இத்தகைய உணவுவகைகள், எளியோருக்கும் ஆசையை விதைத்து வாங்கத் தூண்டும் என்பதையும் அது சமூகத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உணராமல் தன் சுய விருப்பத்திற்கும் ஆடம்பரத்திற்கும் மட்டும் அடிபணிவது.
 • Ø  தன்னுடைய விருந்துகளில் ஏழைகளைப் புறக்கணித்து பணக்காரர்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது. (இத்தகைய விருந்து, விருந்துகளிலேயே மிக மோசமான விருந்தாகும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் (முஸ்லிம் 2819) 

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து மூன்று வேளை உணவுண்டதாக சரித்திரமில்லை என்பதன் மூலமே நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் உணவு எனும் பரக்காவின் அருமையினை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். ஆனால், விளங்கிக்கொள்வதெல்லாம் நமக்கு ஏட்டோடு அல்லவா முடிந்துவிடுகிறது? அறிவுள்ளவர்களை ஏன் அல்லாஹ் சிந்திக்கக்கூறுகிறான்? சிந்திக்கும் அறிவுள்ளவர்கள் தாம் விளங்கிக்கொண்ட விஷயங்களைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து மேற்கொள்வார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அறிவுள்ளவர்களாக விளங்குமாறு ஏவுகிறான்.இதிலும் பெருமையா?


பலர் வீடுகளில் காலை, மதியம், இரவு என்று தனித்தனியாக சமையல் நடக்கும். இது நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் என்றேனும் ஒரு நாளில் ஒரு வேளையில் உணவு மீந்தமாகிவிட்டது என்றால் அதனைச் சற்றும் யோசிக்காமல் குப்பையில் கொட்டிவிடுகின்றனர்கேட்டால், நாங்கள் பழைய உணவை உண்பதில்லை என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். மீதமான அவ்வுணவு உண்ணும் பதத்தில் இருக்கும்போதும் அந்த பழைய உணவு கூட கிடைக்காதவர்கள் நம்மருகிலேயே வாழ்கின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்றாக இருக்கிற நிலையிலும் அதனை வீணாக்குவதில் என்ன பெருமை? இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் இதிலும் நம் ஈமான் வெளிப்படுகிறது என்பதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்விற்குப் பயந்து நன்றி செலுத்தும் அடியார்கள் ஒரு சோற்றுப்பருக்கையினை வீணடிக்கவும் அஞ்சுவார்கள். உணவு வீணாகிறதே எனும் எண்ணத்தைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு நாம் மறுமையில் பதில் சொல்லவேண்டுமே என்ற எண்ணம் தோன்றும்பொழுது அங்கு கஞ்சத்தனம் மறைகிறது; ஈமான் வெளிப்படுகிறது. ஆகையால், இது குடும்பத்தலைவி ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதைத் தாண்டி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் ஈமானையும் உள்ளடக்கியுள்ளது என்பதே உண்மை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், வீட்டினுள் சிக்கனத்தைக் கடைபிடிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய விருந்துகளுக்கு ஏற்பாடு செய்தாலும் அதிலும் தம்மால் இயன்ற சிக்கனத்தை நிச்சயம் மேற்கொள்வர். நமக்குத்தான் தினமும் சாதத்தையும் குழம்பையும் குப்பையில் கொட்டி பழக்கமாகிவிட்டதே…. அந்த பழக்கம் தான் இன்றைய திருமணவிழாக்களில் வெட்டவெளிச்சமாகிறது. சுப்ஹானல்லாஹ்திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது என்பதைத் தாண்டி, குடும்பத்தின் கவுரவத்தை நிலைநாட்ட முயலும் ஒரு அனாச்சாரமாக உருவெடுத்துவருவது மிக மிகக் கண்டிப்பிற்குரியதாகும். திருமண நிச்சயத்தில் துவங்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் குழந்தை பெற்று அதற்குத் திருமணம் என்ற ரீதியில் தொடரும் இந்த வீண் விரயங்கள் என்று தான் முடிவிற்கு வரும்? ஏன்? எதற்காக இத்தனை வகை உணவுகள்? ஒரு வயிற்றுக்குத் தேவையான அளவு உண்ணும்மனிதர்களைத்தானே திருமணங்களுக்கு அழைக்கிறோம்?! ”நாங்கள் மீந்துவிட்ட உணவை அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் வழங்குகிறோம்என்று கூறுபவர்களா நீங்கள்? பிறர் சாப்பிட்டு மீந்ததை நாம் விரும்புவோமா? ஆனால் நம் வீட்டில் மீந்ததைப் பிறருக்கு வழங்குவதைப் பெருமையடிக்கிறோம். “தனக்கு விருப்பமில்லாததைத் தன் சகோதரனுக்கு(வழங்குவதையு)ம் விரும்பாததையே இஸ்லாம் வலியுறுத்துகிறது(புஹாரி 13 ). மீந்து போன உணவை வழங்குவதற்கும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் உள்ள வேறுபாட்டினை உணராதவர்களா நாம்

ஒரு டம்ளர் தண்ணீரும் திருமண விழாக்களும்:


எளிமையான, இலகுவான மார்க்கத்தைப் பின்பற்றும் நாம் நம் செயல்களில் படாடோபத்தையும் ஆடம்பரத்தையும் பிறருக்குப் பெருமையுடன் காண்பித்துக்கொள்ளவே துடிக்கிறோம்.  பாலஸ்தீனில் துவங்கி எகிப்து, சிரியா, இன்று பர்மா என்று நம் முஸ்லிம் சகோதரர்கள் அங்கங்கு நடைபெறும் கலவரங்களினால் விளைந்த உணவுத்தட்டுப்பாட்டில் அலைக்கழிக்கப்படுவதைக் கண்கொண்டு பார்க்கிறோம். அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீருக்காக ஏங்கும் அதே சமயத்தில் இங்கு நம் ஊர்த் திருமணவிருந்துகளைக் கண்டால் உணவு உள்ளே இறங்க மறுக்கிறது.

உணவைக் கொண்டு எப்படி நன்றி செலுத்துவது:


நம் சகோதரர்கள் உணவுப்பஞ்சத்தில் இருக்கும்பொழுது நாமும் பட்டினியாக இருக்கவேண்டும் என்று கூறவில்லை. பிறருக்குக் கிடைக்காத அருள்வளம் நமக்குக் கிடைத்ததை எண்ணி நாம் நன்றி செலுத்துவது அவசியம் என்று கூறுவதே நோக்கம். நன்றி கூறுதல் என்றால் நம் துஆவில் அவனுக்கு நன்றியையும் பெருமையையும் உரித்தாக்குவதோடு நின்றுவிடுவதல்ல. மாறாக, அவ்வருளை நாம் உபயோகப்படுத்தும் வகையிலும் நம் ஈமானை அல்லாஹ் காண்கிறான். நன்றி செலுத்துவது என்பது பலவிதங்களில் அமைகிறது.

 1. அவ்வருட்கொடையை நீதமான முறையில் பயன்படுத்துவது.
 2. அதனை பயன்படுத்தாமல் சேமித்து கஞ்சத்தனம் செய்து உதாசீனப்படுத்தக்கூடாது. 
 3.  தானும் பயன்பெற்று பிறருக்கும் வழங்குவது அல்லது வழங்குமாறு துஆ செய்வது.
 4. அந்த நிஃமத் வழங்கப்படாத நிலை நமக்கும் நாளை வந்துவிடுமோ என்று அஞ்சுவது.
 5. நம்முடைய முயற்சி சிறிதுமின்றி முழுக்க முழுக்க அல்லாஹ்வின் புறத்தில் இருந்தே வந்தது என்று மனத்தாழ்மையுடன் நம்புவது. ஏனெனில் முயற்சி செய்யும் அனைவருக்கும் வழங்காமல் தான் நாடியோருக்கே அல்லாஹ் வழங்குகிறான்.

இவ்வனைத்தும் உணவு என்ற அருட்கொடைக்கு மட்டுமின்றி, செல்வம், குழந்தைகள், அறிவு, ஆரோக்கியம் என்று அல்லாஹ் வழங்கியிருக்கும் பலவித ரிஸ்குகளுக்கும் பொருந்தும்.

கைவினைத் திறமையை எவ்வாறு பயன்படுத்துவது?


உணவு என்பது வயிற்றுக்குத் தேவையான அளவிலும் நேரத்திலும் உண்பது என்பது மறைந்து பொழுதுபோக்கிற்காகச் சமைப்பதும் உண்பதும் பெருகிவிட்டதும் மறுக்கமுடியாத உண்மை. விரும்பிய உணவை விரும்பிய வகையில் சமைத்து உண்பது ஒவ்வொருவருக்கும் உரிமைதான். தினம் தினம் விதவிதமாகச் சமைப்பதற்காகவே பலர் நேரத்தையும் பணத்தையும் அறிவையும் செலவிடுகின்றனர். இதற்காகவா நாம் படைக்கப்பட்டோம்? சமையலில் காட்டும் கிரியேட்டிவிட்டியையும் ஆர்வத்தையும் நாம் பலவகையில் இல்லாதோருக்கு உபயோகப்படும் வகையில் பயன்படுத்தலாமே?! குழந்தைகளையும் அனைத்து வித உணவுகளையும் எந்த வடிவில் கொடுத்தாலும் உண்பதற்கு நாம் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கும் நமக்கும் நல்லது.

இஃப்தார் விருந்துகள் அவசியமா?:


வருடத்தில் அனைத்து நாட்களிலும் ஆசைதீர விதவிதமாக உண்டு மகிழ்ந்தாலும், ரமழான் எனும் ஒரு மாதத்தில் மட்டும் நோன்பு வைக்கவும் திறக்கவும் பலர் படும்பாடு பெரும்பாடாக அமைந்துவிடுகிறது. இபாதத்தில் ஈடுபடுவதை விட, சஹருக்கும் இஃப்தாருக்கும் உணவு சமைப்பதில் தான் நம் நேரமும் சிந்தனையும் ரமழானில் அமைகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த நடைமுறையாகும். “நீங்கள் பசியோடு உணவை எதிர்பார்க்கும் வேளையிலும் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற வசனத்தின் மூலம் வயிறு நிறைந்த நிலையை விடவும் பசியோடும் தாகத்தோடும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவதன் சிறப்பை உணரலாம்.

மற்ற நாட்களைக் காட்டிலும் ரமழானில் மக்கள் அதிகம் உணவுப்பொருட்கள் வாங்குவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், அதிக உணவு விரயங்களும் ரமழானில் ஏற்படுவதாகவும் நாம் அறிகிறோம். இவை எல்லாம் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல... மாறாக, நம் ஒவ்வொருவருவர் வீட்டிலும் நடந்தேறிக்கொண்டிருக்கும் தினசரி நிலை. வீட்டினருக்குப் பக்குவமாக உணவு விரையமாவதை எடுத்துரைத்து, சஹருக்கும் இஃப்தாருக்கும் அளவான உணவுகளை உண்பதே ஆரோக்கியம் என்பதை விளக்க வேண்டும்.

ரமழானில் கண்ணையும் மனதையும் ஈர்க்கும் ஆஃபர்கள்

ரமழான் மாதமானது இறைவனை வணங்குவதற்காகவும் அதன் மூலம் நம் பாவங்களைப் போக்கி அவனளிக்கும் கூலிகளை, மற்ற மாதங்களைக் காட்டிலும், பன்மடங்கில் சுலபமாகப் பெற்றுக்கொள்வதற்காக அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பாகும். அதில் இஃப்தார் விருந்து வைத்து பல நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வகைவகையான உணவு பரிமாறுதலைத் தவிர்ந்து தனிமையில் இறைவனைத் திக்ரு செய்வதில் ஈடுபடவேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளில் வீண் விரயம் என்பது தவிர்க்கப்படவே இயலாது. விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றமத நண்பர்களாயினும் இவை போன்ற இஃப்தார் விருந்துகளில் உணவு மற்றும் வீண்பேச்சுகளுக்கே அதிக நேரம் விரயமாகிறது. நோன்பாளி வகைவகையான, அதிகளவு உணவு உண்பது உடலுக்கும் நல்லதல்ல. இஃப்தார் விருந்துகளைத் தவிர்த்துவிட்டு அளவான, ஆரோக்கியமான உணவுவகைகளைத் தயாரித்தோ வாங்கியோ அல்லாஹ்வின் நன்மைகளை எதிர்பார்த்து ஏழை எளியோருக்கு வழங்குவது இன்றியமையாதது. ஆகையால் விருந்தழைப்புகளைப் பெருநாட்களுக்கும் மற்ற நாட்களுக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு ரமழானில் எளிமையான உணவிற்கும் அதிகதிகமாக நீண்ட தொழுகைக்கும் குர் ஆன் ஓதுவதற்கும் இறைஞ்சிக் கேட்கப்படும் துஆக்களுக்கும் நேரம் ஒதுக்குவதே எண்ணற்ற கூலிகளைப் பெற்றுத்தரும்.

சொர்க்கத்தில் இருப்பவர்கள் யார்?


சஹாபாக்கள் பலர் பட்டினி கிடந்தாலும் நம்மை விட ஈமானில் மிஞ்சிவிட்டனர். நாமோ, சஹாபாக்களைக் காட்டிலும், அல்லாஹ்வின் வாழ்வாதாரங்களைப் பலவகைகளில் அனுபவித்தாலும் ஈமானில் பின் தங்கியவர்களாக உள்ளோம். வாழ்வாதாரங்கள் வழங்கப்படுவதும் பறிக்கப்படுவதும் வழங்கப்படாமலே இருப்பதும் நம்  ஈமான் சோதிக்கப்படவேயன்றி வேறு எதற்கும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் பணக்காரர்களாக வாழ்வதையே விரும்புகிறோம். அல்லது பணக்காரர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் கண்ட பலர் இம்மையில் ஏழைகளாக வாழ்ந்தவர்களாவர். ஆகையால் நமக்கு இறைவன் ஒரு நிஃமத் வழங்குகிறான் என்றால், அதன் மூலம் நம் ஈமானை வளப்படுத்தி நன்றி செலுத்த வேண்டுமே தவிர, அதனை நன்கு அனுபவித்து வாழ்வதில் மட்டும் நாம் கவனம் செலுத்தக்கூடாது. 

வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்” 

சிந்திப்போம்; தெளிவுபெறுவோம்; செயல்படுவோம்.


ரிஸ்க்: வாழ்வாதாரம்
ஈமான்: இறையச்சம்
பரக்கா, நிஃமத்: அருட்கொடை
சஹர்: நோன்பு வைக்கும் நேரம்
இஃப்தார்:நோன்பு துறக்கும் நிகழ்வு

6 comments:

 1. இந்தப் பதிவின் ஒவ்வொரு வரியையும் ஆமோதிக்கின்றேன். எழுதியவருக்கு என் பாராட்டுகளும், துஆக்களும். ரமதான் வருகிறது என்றாலே எனக்கு பயம்தான் வரும் - அச்சமயத்தில் நடக்கும் வீண் விரயங்களை நினைத்து!! ரமதான் அல்லாத காலங்களிலும் சிலர் வீடுகளில்/ஹோட்டல்களில் செய்யும் அட்டூழியங்களையும் (உணவு வீணாக்குதல் என்பது என்னைப் பொறுத்தவரை அட்டூழியமே) பார்த்து மனம் வெம்பும். இறைவன் நழ்வழி தரட்டும் அனைவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அல்ஹம்துலில்லாஹ்...

   நிறைந்த மனதுடன் இறைவனுக்கு நன்றி சொல்லும் வழக்கம், வீண் விரயம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும். அதற்கு, போதுமென்ற மனதினை இறைவன் நம் அனைவருக்கும் நல்குவானாக. ஆமீன்.

   ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

   Delete
 2. ரொம்பச்சரி சகோ. உணவை வீணாக்குவது கொடிய பாவம்:-(

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி.... நாம் அனைவரும் அதனை உணர வேண்டும். :(

   Delete
 3. மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் அருமையான நினைவூட்டல். "பிடிக்க வில்லை என்றால் குப்பைல போட்டுவிடு "என்று சொல்லி வரும்கால சந்ததிகளையும் இந்த வீண் விரயத்தில் தள்ளுவது வேதனையான விஷயம்.எளிதாக நமக்கு கிடைத்து விட்டது என்பதற்காக எவ்வளவு வீணாக்குகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நமது ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கின்றனர். அவர்களுக்கு நம்மால் இயன்றவரை நல்ல உதாரணங்களையே அளிக்க வேண்டும். ஆனால் நாம், நம் சிந்தனையற்ற பழக்கங்கள் மூலம் அவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாகி வருகிறோம் என்பது வேதனைக்குரியதே.

   Delete