Tuesday, June 30, 2015

ஏன் ஹிஜாப்?-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற்றது)

இவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ரூ 4 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்களின் கட்டுரை:

மரப்பட்டைகளை அணிந்து,  பட்டாடைகளை அணிந்து  பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம்.   நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே.  இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.     இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள்.  இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.

(நபியே!) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும், தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்.  இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும்.  அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக இறைவன் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

மேலும், (நபியே!) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்.  தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்.  தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்.  அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர, மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)

இந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும்  தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்டலாம்.

Ruqaya Al-Ghasra

2006 டிசம்பர் 11 அன்று  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா.  இதில் என்ன அதிசயம் எனில்,   இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான்.  அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:
பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’ 
   இஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக  இருப்பதில்லை  என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப்  போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.

முக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது.   இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை  அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.
read more "ஏன் ஹிஜாப்?-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற்றது)"

Monday, June 22, 2015

”ஏன் ஹிஜாப்?” போட்டியில் முதலிடம் வென்ற கட்டுரை- சூர்யா கனகசபை

          வ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரைகள் முன்பு வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து, முதல் மூன்று இடங்களைப் பெற்ற கட்டுரைகள் இன்ஷா அல்லாஹ் இடம்பெறவிருக்கின்றன. 

மற்ற பரிசு இடங்களைக் காட்டிலும் இம்மூன்று போட்டியாளர்களும் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் என்பது இன்ப அதிர்ச்சி. இஸ்லாமியர்களை, அவர்களது நடவடிக்கைகளை, இஸ்லாம் கூறும் வாழ்க்கைநெறிகளை மற்ற மத சகோதர, சகோதரிகள் எவ்வாறு கூர்ந்து கவனித்து அவற்றை அழகிய முறையில் ஏற்று, நடைமுறைப்படுத்துவதை ஆதரிக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் காணமுடிவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.   இஸ்லாமியக் கோட்பாடுகளை எதிர்த்து கூப்பாடு போடுபவர்கள்    “ஏன் ஹிஜாப்?” போட்டி முடிவுகளைக் காணுங்கள்; வாயடைத்துப் போவீர்கள்.


முதலிடம் பெற்ற சகோ. சூர்யா கனகசபை அவர்களின் கட்டுரை:

  ஹிஜாப் ஏன் சிறந்தது!


   ஹிஜாப் ஒரு பெண்ணை முழுமைப்படுத்துகிறது, கண்ணியப்படுத்துகிறது, பாதுகாப்பு அளிக்கிறது.  முஸ்லிம் அல்லாதவர்கள் பார்வையில் ஹிஜாப் பெண்களின் அடிமைத்தனம், "இதை எப்படி அணிந்து கொண்டு செல்கிறார்களோ, இது பெண்களின்  சுதந்திரத்தை அடியோடு பறிக்கிறது" என்று பலரும் கூறுகின்றனர். இப்படி கூறுபவர்கள் எதற்காக அணிகிறார்கள்? இதன் நோக்கம் என்ன ? என்று ஒரு போதும் சிந்திப்பதில்லை. நானும் உட்பட . என்னையும் சிந்திக்க வைத்ததற்கான இந்த அறிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

பொதுவாக ஆடைகளின் ஏற்ற தாழ்வுகளினால் பேசப்படும் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகளை தகர்த்து எரிந்து அனைவரும் சமம் என்ற உணர்வினை தூண்டும் விதமாக ஹிஜாப் அமைகிறது. பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் கவசமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு பெண் ஹிஜாப் அணிந்தும், மற்றொரு பெண் ஹிஜாப் அணியாமலும் வருகையில் ஆண்களின் பார்வை ஹிஜாப் அணியாத பெண்ணின் மீது தான் படுகிறது. அவள் நடையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதற்கு  முக்கிய காரணமாக அமைவது அவளின் உடை . இங்கே இருவரில் யாருடைய சுதந்திரம் பறிக்கப்படுகிறது ?

பெண்களே பெண்களின் உடைகளை ரசிக்கும் பொழுது ஆண்கள் ரசிப்பதில் வியப்பேதும் இல்லை!  பெண்களை காட்சிப்பொருளாக பார்க்கும் கண்களுக்கு ஹிஜாப் ஒரு சவுக்கடி.

அணியும் நகைகளை ,மறைக்கும் விதமாக ஹிஜாப் அமையும் போது திருட்டு என்பது அங்கே கேள்விக்குறி தானே! ஹிஜாப் அணிந்து செல்லும் எந்த ஒரு பெண்ணும் இம்மாதிரியான பிரச்சனைகளில் சிக்கியது இல்லை என்பதை சிந்தியுங்கள்! மதங்களின் அடிப்படையில் பார்க்காமல் முரண்பாடுகளை அகற்றி திறந்த மனதுடன் பார்த்து ஹிஜாப் அணிய அனுமதியுங்கள். அணிவதன்  நன்மையினை அவர்களும்,  அனுமதித்ததற்கான நன்மையினை நீங்களும் பெறுவீர்கள்.

 எதற்காக அணிகின்றோம் என்றே தெரியாமல் அணிவது உடையல்ல!

அடையாளத்தை காட்டுவது முகம் மட்டுமே!
முகத்தை மட்டுமே அடையாளமாக காட்டும் ஹிஜாபே சிறந்தது !

இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சிறந்த, பாதுகாப்பான , கண்ணியமிக்க, முழுமைப்படுத்தும் ஹிஜாபை நானும் அணிந்து செல்வதற்கான நொடியின் தொடக்கத்தினை எதிர்பார்த்து .....

-சகோ சூர்யா கனகசபை
read more "”ஏன் ஹிஜாப்?” போட்டியில் முதலிடம் வென்ற கட்டுரை- சூர்யா கனகசபை"

Sunday, June 14, 2015

உணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி?

பிஸ்மில்லாஹிர்ரர்ஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் எண்ணற்ற கொடைகளில் மிக மிக முக்கியமானது உணவு. மில்லியன் ட்ரில்லியனுக்கும் மேலான மக்கள் பலருக்கும் வழங்கப்படாத கொடையினை அல்லாஹ் நமக்கு வாரி வாரி வழங்கியிருக்கிறான். ஆனால் அதற்கான நன்றியினை நாம் அவனுக்கு செலுத்துவதில்லை. மனிதன் மிக சொற்பமாகவே நன்றி கூறுபவன். எத்தனையோ மக்களில் அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுத்து அருளியிருக்கும் நிஃமத்திற்கு நாம் தகுதியானவர்களாக நடந்துகொள்கிறோமா என்ற சுயபரிசோதனையில் அனைவரும் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்.

உணவில் வீண் விரயம் என்பது பெரிய பெரிய விருந்திற்குட்பட்டது மட்டுமல்ல.. நம் அன்றாட உணவுப்பழக்கத்திலும் கடைபிடிக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும் 

உணவில் வீண் விரயம் என்பதாவது:

  • Ø  உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் தேவைக்கு அப்பாற்பட்ட வகைவகையான உணவுகளை அடிக்கடி சமைப்பது அல்லது வாங்குவது. (என்றேனும் சில நாட்களில் ஆசையினாலோ தவிர்க்க முடியாத சூழலிலோ உண்பதில் தவறில்லை)
  • Ø  தம் குடும்பத்தின் கவுரவத்தைப் பிறர் மெச்சுவதற்காகப் பலவித உணவுகளைப் பரிமாறுவது.
  • Ø  தன்னால் வாங்க இயன்ற இத்தகைய உணவுவகைகள், எளியோருக்கும் ஆசையை விதைத்து வாங்கத் தூண்டும் என்பதையும் அது சமூகத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உணராமல் தன் சுய விருப்பத்திற்கும் ஆடம்பரத்திற்கும் மட்டும் அடிபணிவது.
  • Ø  தன்னுடைய விருந்துகளில் ஏழைகளைப் புறக்கணித்து பணக்காரர்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது. (இத்தகைய விருந்து, விருந்துகளிலேயே மிக மோசமான விருந்தாகும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் (முஸ்லிம் 2819) 

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து மூன்று வேளை உணவுண்டதாக சரித்திரமில்லை என்பதன் மூலமே நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் உணவு எனும் பரக்காவின் அருமையினை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். ஆனால், விளங்கிக்கொள்வதெல்லாம் நமக்கு ஏட்டோடு அல்லவா முடிந்துவிடுகிறது? அறிவுள்ளவர்களை ஏன் அல்லாஹ் சிந்திக்கக்கூறுகிறான்? சிந்திக்கும் அறிவுள்ளவர்கள் தாம் விளங்கிக்கொண்ட விஷயங்களைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து மேற்கொள்வார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அறிவுள்ளவர்களாக விளங்குமாறு ஏவுகிறான்.இதிலும் பெருமையா?


பலர் வீடுகளில் காலை, மதியம், இரவு என்று தனித்தனியாக சமையல் நடக்கும். இது நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் என்றேனும் ஒரு நாளில் ஒரு வேளையில் உணவு மீந்தமாகிவிட்டது என்றால் அதனைச் சற்றும் யோசிக்காமல் குப்பையில் கொட்டிவிடுகின்றனர்கேட்டால், நாங்கள் பழைய உணவை உண்பதில்லை என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். மீதமான அவ்வுணவு உண்ணும் பதத்தில் இருக்கும்போதும் அந்த பழைய உணவு கூட கிடைக்காதவர்கள் நம்மருகிலேயே வாழ்கின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்றாக இருக்கிற நிலையிலும் அதனை வீணாக்குவதில் என்ன பெருமை? இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் இதிலும் நம் ஈமான் வெளிப்படுகிறது என்பதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்விற்குப் பயந்து நன்றி செலுத்தும் அடியார்கள் ஒரு சோற்றுப்பருக்கையினை வீணடிக்கவும் அஞ்சுவார்கள். உணவு வீணாகிறதே எனும் எண்ணத்தைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு நாம் மறுமையில் பதில் சொல்லவேண்டுமே என்ற எண்ணம் தோன்றும்பொழுது அங்கு கஞ்சத்தனம் மறைகிறது; ஈமான் வெளிப்படுகிறது. ஆகையால், இது குடும்பத்தலைவி ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதைத் தாண்டி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் ஈமானையும் உள்ளடக்கியுள்ளது என்பதே உண்மை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், வீட்டினுள் சிக்கனத்தைக் கடைபிடிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய விருந்துகளுக்கு ஏற்பாடு செய்தாலும் அதிலும் தம்மால் இயன்ற சிக்கனத்தை நிச்சயம் மேற்கொள்வர். நமக்குத்தான் தினமும் சாதத்தையும் குழம்பையும் குப்பையில் கொட்டி பழக்கமாகிவிட்டதே…. அந்த பழக்கம் தான் இன்றைய திருமணவிழாக்களில் வெட்டவெளிச்சமாகிறது. சுப்ஹானல்லாஹ்திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது என்பதைத் தாண்டி, குடும்பத்தின் கவுரவத்தை நிலைநாட்ட முயலும் ஒரு அனாச்சாரமாக உருவெடுத்துவருவது மிக மிகக் கண்டிப்பிற்குரியதாகும். திருமண நிச்சயத்தில் துவங்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் குழந்தை பெற்று அதற்குத் திருமணம் என்ற ரீதியில் தொடரும் இந்த வீண் விரயங்கள் என்று தான் முடிவிற்கு வரும்? ஏன்? எதற்காக இத்தனை வகை உணவுகள்? ஒரு வயிற்றுக்குத் தேவையான அளவு உண்ணும்மனிதர்களைத்தானே திருமணங்களுக்கு அழைக்கிறோம்?! ”நாங்கள் மீந்துவிட்ட உணவை அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் வழங்குகிறோம்என்று கூறுபவர்களா நீங்கள்? பிறர் சாப்பிட்டு மீந்ததை நாம் விரும்புவோமா? ஆனால் நம் வீட்டில் மீந்ததைப் பிறருக்கு வழங்குவதைப் பெருமையடிக்கிறோம். “தனக்கு விருப்பமில்லாததைத் தன் சகோதரனுக்கு(வழங்குவதையு)ம் விரும்பாததையே இஸ்லாம் வலியுறுத்துகிறது(புஹாரி 13 ). மீந்து போன உணவை வழங்குவதற்கும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் உள்ள வேறுபாட்டினை உணராதவர்களா நாம்

ஒரு டம்ளர் தண்ணீரும் திருமண விழாக்களும்:


எளிமையான, இலகுவான மார்க்கத்தைப் பின்பற்றும் நாம் நம் செயல்களில் படாடோபத்தையும் ஆடம்பரத்தையும் பிறருக்குப் பெருமையுடன் காண்பித்துக்கொள்ளவே துடிக்கிறோம்.  பாலஸ்தீனில் துவங்கி எகிப்து, சிரியா, இன்று பர்மா என்று நம் முஸ்லிம் சகோதரர்கள் அங்கங்கு நடைபெறும் கலவரங்களினால் விளைந்த உணவுத்தட்டுப்பாட்டில் அலைக்கழிக்கப்படுவதைக் கண்கொண்டு பார்க்கிறோம். அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீருக்காக ஏங்கும் அதே சமயத்தில் இங்கு நம் ஊர்த் திருமணவிருந்துகளைக் கண்டால் உணவு உள்ளே இறங்க மறுக்கிறது.

உணவைக் கொண்டு எப்படி நன்றி செலுத்துவது:


நம் சகோதரர்கள் உணவுப்பஞ்சத்தில் இருக்கும்பொழுது நாமும் பட்டினியாக இருக்கவேண்டும் என்று கூறவில்லை. பிறருக்குக் கிடைக்காத அருள்வளம் நமக்குக் கிடைத்ததை எண்ணி நாம் நன்றி செலுத்துவது அவசியம் என்று கூறுவதே நோக்கம். நன்றி கூறுதல் என்றால் நம் துஆவில் அவனுக்கு நன்றியையும் பெருமையையும் உரித்தாக்குவதோடு நின்றுவிடுவதல்ல. மாறாக, அவ்வருளை நாம் உபயோகப்படுத்தும் வகையிலும் நம் ஈமானை அல்லாஹ் காண்கிறான். நன்றி செலுத்துவது என்பது பலவிதங்களில் அமைகிறது.

  1. அவ்வருட்கொடையை நீதமான முறையில் பயன்படுத்துவது.
  2. அதனை பயன்படுத்தாமல் சேமித்து கஞ்சத்தனம் செய்து உதாசீனப்படுத்தக்கூடாது. 
  3.  தானும் பயன்பெற்று பிறருக்கும் வழங்குவது அல்லது வழங்குமாறு துஆ செய்வது.
  4. அந்த நிஃமத் வழங்கப்படாத நிலை நமக்கும் நாளை வந்துவிடுமோ என்று அஞ்சுவது.
  5. நம்முடைய முயற்சி சிறிதுமின்றி முழுக்க முழுக்க அல்லாஹ்வின் புறத்தில் இருந்தே வந்தது என்று மனத்தாழ்மையுடன் நம்புவது. ஏனெனில் முயற்சி செய்யும் அனைவருக்கும் வழங்காமல் தான் நாடியோருக்கே அல்லாஹ் வழங்குகிறான்.

இவ்வனைத்தும் உணவு என்ற அருட்கொடைக்கு மட்டுமின்றி, செல்வம், குழந்தைகள், அறிவு, ஆரோக்கியம் என்று அல்லாஹ் வழங்கியிருக்கும் பலவித ரிஸ்குகளுக்கும் பொருந்தும்.

கைவினைத் திறமையை எவ்வாறு பயன்படுத்துவது?


உணவு என்பது வயிற்றுக்குத் தேவையான அளவிலும் நேரத்திலும் உண்பது என்பது மறைந்து பொழுதுபோக்கிற்காகச் சமைப்பதும் உண்பதும் பெருகிவிட்டதும் மறுக்கமுடியாத உண்மை. விரும்பிய உணவை விரும்பிய வகையில் சமைத்து உண்பது ஒவ்வொருவருக்கும் உரிமைதான். தினம் தினம் விதவிதமாகச் சமைப்பதற்காகவே பலர் நேரத்தையும் பணத்தையும் அறிவையும் செலவிடுகின்றனர். இதற்காகவா நாம் படைக்கப்பட்டோம்? சமையலில் காட்டும் கிரியேட்டிவிட்டியையும் ஆர்வத்தையும் நாம் பலவகையில் இல்லாதோருக்கு உபயோகப்படும் வகையில் பயன்படுத்தலாமே?! குழந்தைகளையும் அனைத்து வித உணவுகளையும் எந்த வடிவில் கொடுத்தாலும் உண்பதற்கு நாம் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கும் நமக்கும் நல்லது.

இஃப்தார் விருந்துகள் அவசியமா?:


வருடத்தில் அனைத்து நாட்களிலும் ஆசைதீர விதவிதமாக உண்டு மகிழ்ந்தாலும், ரமழான் எனும் ஒரு மாதத்தில் மட்டும் நோன்பு வைக்கவும் திறக்கவும் பலர் படும்பாடு பெரும்பாடாக அமைந்துவிடுகிறது. இபாதத்தில் ஈடுபடுவதை விட, சஹருக்கும் இஃப்தாருக்கும் உணவு சமைப்பதில் தான் நம் நேரமும் சிந்தனையும் ரமழானில் அமைகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த நடைமுறையாகும். “நீங்கள் பசியோடு உணவை எதிர்பார்க்கும் வேளையிலும் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற வசனத்தின் மூலம் வயிறு நிறைந்த நிலையை விடவும் பசியோடும் தாகத்தோடும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவதன் சிறப்பை உணரலாம்.

மற்ற நாட்களைக் காட்டிலும் ரமழானில் மக்கள் அதிகம் உணவுப்பொருட்கள் வாங்குவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், அதிக உணவு விரயங்களும் ரமழானில் ஏற்படுவதாகவும் நாம் அறிகிறோம். இவை எல்லாம் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல... மாறாக, நம் ஒவ்வொருவருவர் வீட்டிலும் நடந்தேறிக்கொண்டிருக்கும் தினசரி நிலை. வீட்டினருக்குப் பக்குவமாக உணவு விரையமாவதை எடுத்துரைத்து, சஹருக்கும் இஃப்தாருக்கும் அளவான உணவுகளை உண்பதே ஆரோக்கியம் என்பதை விளக்க வேண்டும்.

ரமழானில் கண்ணையும் மனதையும் ஈர்க்கும் ஆஃபர்கள்

ரமழான் மாதமானது இறைவனை வணங்குவதற்காகவும் அதன் மூலம் நம் பாவங்களைப் போக்கி அவனளிக்கும் கூலிகளை, மற்ற மாதங்களைக் காட்டிலும், பன்மடங்கில் சுலபமாகப் பெற்றுக்கொள்வதற்காக அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பாகும். அதில் இஃப்தார் விருந்து வைத்து பல நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வகைவகையான உணவு பரிமாறுதலைத் தவிர்ந்து தனிமையில் இறைவனைத் திக்ரு செய்வதில் ஈடுபடவேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளில் வீண் விரயம் என்பது தவிர்க்கப்படவே இயலாது. விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றமத நண்பர்களாயினும் இவை போன்ற இஃப்தார் விருந்துகளில் உணவு மற்றும் வீண்பேச்சுகளுக்கே அதிக நேரம் விரயமாகிறது. நோன்பாளி வகைவகையான, அதிகளவு உணவு உண்பது உடலுக்கும் நல்லதல்ல. இஃப்தார் விருந்துகளைத் தவிர்த்துவிட்டு அளவான, ஆரோக்கியமான உணவுவகைகளைத் தயாரித்தோ வாங்கியோ அல்லாஹ்வின் நன்மைகளை எதிர்பார்த்து ஏழை எளியோருக்கு வழங்குவது இன்றியமையாதது. ஆகையால் விருந்தழைப்புகளைப் பெருநாட்களுக்கும் மற்ற நாட்களுக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு ரமழானில் எளிமையான உணவிற்கும் அதிகதிகமாக நீண்ட தொழுகைக்கும் குர் ஆன் ஓதுவதற்கும் இறைஞ்சிக் கேட்கப்படும் துஆக்களுக்கும் நேரம் ஒதுக்குவதே எண்ணற்ற கூலிகளைப் பெற்றுத்தரும்.

சொர்க்கத்தில் இருப்பவர்கள் யார்?


சஹாபாக்கள் பலர் பட்டினி கிடந்தாலும் நம்மை விட ஈமானில் மிஞ்சிவிட்டனர். நாமோ, சஹாபாக்களைக் காட்டிலும், அல்லாஹ்வின் வாழ்வாதாரங்களைப் பலவகைகளில் அனுபவித்தாலும் ஈமானில் பின் தங்கியவர்களாக உள்ளோம். வாழ்வாதாரங்கள் வழங்கப்படுவதும் பறிக்கப்படுவதும் வழங்கப்படாமலே இருப்பதும் நம்  ஈமான் சோதிக்கப்படவேயன்றி வேறு எதற்கும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் பணக்காரர்களாக வாழ்வதையே விரும்புகிறோம். அல்லது பணக்காரர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் கண்ட பலர் இம்மையில் ஏழைகளாக வாழ்ந்தவர்களாவர். ஆகையால் நமக்கு இறைவன் ஒரு நிஃமத் வழங்குகிறான் என்றால், அதன் மூலம் நம் ஈமானை வளப்படுத்தி நன்றி செலுத்த வேண்டுமே தவிர, அதனை நன்கு அனுபவித்து வாழ்வதில் மட்டும் நாம் கவனம் செலுத்தக்கூடாது. 

வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்” 

சிந்திப்போம்; தெளிவுபெறுவோம்; செயல்படுவோம்.


ரிஸ்க்: வாழ்வாதாரம்
ஈமான்: இறையச்சம்
பரக்கா, நிஃமத்: அருட்கொடை
சஹர்: நோன்பு வைக்கும் நேரம்
இஃப்தார்:நோன்பு துறக்கும் நிகழ்வு

read more "உணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி?"

Wednesday, June 10, 2015

கலர் பேப்பரில் கரன்சி பேப்பர் அள்ளும் சிறுமி

            சென்ற வாரம் முழுவதும் 7ம் வகுப்பு  சிறுமி ஷகினா பர்வீன் பேஸ்புக்கில் வலம் வந்தாள். அவளை தொடர்புகொள்ள முயற்சித்தேன்.

              கொண்டு வந்திருந்த பாதி தோடுகள் விற்ற உற்சாகத்துடன் சிறுமி ஷகினா  தொலைபேசியில் பேசினாள். அவள் உற்சாகத்தில் பங்குகொள்ளும் விதமாக   எத்தனை தோடு  விற்பனையானது எனக் கேட்டேன், பல்லை கடித்துவிட்டு "ப்ச்..கவுண்ட் பண்ணலையே " என்றாள்  அவள் வயதுக்கே உரிய  குழந்தை தனத்துடன்....  அடுத்த  நாள் மீண்டும் போன் செய்வேன், எனக்கு கவுண்ட் பண்ணி சொல்லணும் என்று சொன்னதும் அதே பாணியில் சொன்னாள் , "ம்..கண்டிப்பா"

யார் ஷகினா???

               தமிழகம் முழுவதும் "மக்கள் சங்கமம் " நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, அதன் தொடர்ச்சியாக இராமநாதபுர மாவட்டத்தின் கடற்கரை ஊரான பெரியப்பட்டிணத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அந்நிகழ்ச்சியில் எதுயெதுவெல்லாம் மக்களை கவர்ந்ததோ இல்லையோ சிறுமி ஷகினாவும் அவள் டேபிளில் பரப்பியிருந்த வண்ண வண்ண தோடுகளும் அனைவரின் பார்வையையும் அவள் பக்கம் திருப்பியது. குவில்லிங் இயரிங்  கிராப்ட் எனப்படும் சிறிய வகை வண்ணப்பேப்பரில் பல மாடல்களில் கைவினைத் தோடுகளை விற்பனைக்கு பரப்பியிருந்தாள் ஷகினா. டேபிளில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாடல்களில்  வீற்றிருந்த தோடுகள் அனைத்தும் அவளே செய்தது தான் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

              ஷகினா இராமநாதபுரம் நேஷனல் அகாடெமி யில் இவ்வாண்டு ஏழாம் வகுப்பு செல்கிறாள். படிப்பில் சுட்டி, மார்க்க ஒழுங்கில் அவள் வயதினருக்கு முன்மாதிரி. பள்ளியில் கற்றுகொடுக்கப்பட்ட பத்து வகை க்வில்லிங் இயரிங்கை வைத்து தன் கற்பனைக்கேற்பவும், டிவி பேப்பர்களில் காட்டப்படும் பெண்களின் தோடுகளை கவனிப்பதன் மூலமும்  100கும் மேற்பட்ட டிசைன் செய்துள்ளார். டேபிளில் இருப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடல்.  இது தவிர உல்லன் நூல் கொண்டு பொம்மைகள் செய்வது, பெயிண்டிங் என வெளுத்து கட்டுகிறார். தானாக கரு உருவாக்கி அதனை வைத்து கதை எழுதுவதும் இவர் பொழுதுபோக்கில் ஒன்று. "இதெல்லாம் செய்றத பார்த்தா அம்மா திட்ட மாட்டாங்களா என கேட்டேன், " திட்டத்தான் செய்வாங்க" என சளிப்புடன் சொல்லி "ஆனா நா லீவ்ல டைம் ஒதுக்கி செஞ்சுக்குவேன்" என உற்சாகத்துடன் முடித்தாள்.

               அவளின் தந்தை 11 வருடங்களுக்கு முன் துபாயில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். அம்மா இல்லத்தரசி. அக்கா கோவையில் ஏரோனாடிகல் இன்ஞினியரிங் படிக்கிறார். இவர்கள் மூவரும் இப்போது பாட்டி வீட்டில் வசிக்கின்றனர்.  பொருளாதார தேவையும் தந்தைக்குரிய பொறுப்பையும் தாய்மாமன்கள் இருவர் பூர்த்தி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நிறைந்த செல்வாக்கும் மகத்தான வெற்றிகளும் உரித்தாக்குவானாக..  ஆமீன்..

         முதல் நாள் சொன்னபடியே  அடுத்த நாளும் தொடர்பு கொண்டேன். இருநாள் நிகழ்ச்சியில்   கடைசி நாளான அன்று காலைக்குள்  மூவாயிரம் ரூபாய் வரை இச்சுட்டிப்பெண் தன் தோடுகளை விற்றிருக்கிறாள்.   "இன்னும் கொஞ்சம் தான் இருக்கு, நைட்க்குள்ள வித்துடும்" என குதூகலத்துடன் சொன்ன ஷகினாவிடம் " உன் வருங்கால திட்டம் என்ன?" என கேட்டது தான் தாமதம். யோசிக்காமல் உடனே சொன்னாள், மின்னல் வெட்டி மறைந்த வேகத்தில் " ஐ ஏ எஸ் " . அவளின் ஆசை நிறைவேற நிறைந்த துஆவுடன்  போன் உரையாடலில் இருந்து விடைபெற்றேன். நீங்களும் அவளுக்காக துஆ செய்யுங்கள்...

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

தொடர்புகொள்ள உதவி & போட்டோ உதவி : சகோ ஷாகுல் ஷா, பெரியப்பட்டிணம்
read more "கலர் பேப்பரில் கரன்சி பேப்பர் அள்ளும் சிறுமி "