Sunday, May 10, 2015

இஸ்லாத்தில் அனுதினமும் அன்னையர் தினமே!


"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது" பெண்மையைப் போற்ற மகிழ்விக்க இதைவிட அற்புத வாசகம் எதுவும் அவசியமில்லை.


பெண்களைப் பெருமைப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும், இறைவனால் அளிக்கப்பட்ட கௌரவமே தாய்மை. பெண்களுக்கு அதிகப்படியான வேதனை என்பதெல்லாம் உருவகப்படுத்தப்பட்டதே.

இறைவன் எந்த ஜீவனுக்கும் சக்திக்கு மீறிய வேதனையைத் தர மாட்டான். மிகவும் பலவீனமாக பெண்களைப் படைத்து, உச்சபட்ச வலியைத் தாங்கும் சக்தியை தந்த இறைவன் எவ்வளவு மகத்தானவன்?

பெண் குழந்தைகளை பால்ய பருவத்திலிருந்தே, பின்னாளில் பிரசவ வலியைத் தாங்குவதற்காக, அதை சாப்பிடு இதை சாப்பிடு என்று அந்நிகழ்வைப் பயமுறுத்தியே வளர்க்கிறார்கள்.

தாய்மை என்பது முழுக்க முழுக்க அனுபவித்து மகிழக்கூடிய ஒன்றே.நான்காவது மாதத்தில் ஏற்படும் முதல் துடிப்பும், அதன் பின்பு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், கடைசி இரு மாதங்களில் அதிகப்படியான உதையும் துள்ளலும் சந்தோஷ பிரளயம்.

மண்ணிலிருந்தும், பின் விந்திலிருத்தும் நாமே படைத்தோம். அலக் என்ற தசைக்கட்டியாக்கி உயிரூட்டி, எலும்புகளுக்கு சதைகளை அணிவித்தோம் என இறைவன் அழகாகக் கருவறை நிகழ்வுகளை திருமறையில் சொல்கிறான்.

அழகான, அற்புத செயலை கேலிக்கூத்தாக்கும் வகையில் "வாடகைத்தாய்" என்னும் பெயரில் கொச்சைப் படுத்துவது காலத்தின் கோலம்.

தாய்க்குக் கொடுக்க வேண்டிய மரியாதை பற்றி நபிகளார் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

"மனிதர்களுள் யாருக்கு நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” நபித்தோழரின் வினா.

"தாய்" என்றார்கள் நபிகளார்.

அடுத்து யார்? என அவர் கேட்க, தாய் என்றே கூறினார்கள்.

மூன்றாவது முறையாகவும் தாய் என்றே பதிலளித்த நபிகளார் நான்காவது முறை தந்தை என்றார்கள். (புகாரி. 4979)


ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய், தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையை விட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம்.

"அவனுடைய அன்னை அவனை சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள்.சிரமப்பட்டுத்தான் அவனை பெற்றெடுத்தாள். மேலும் அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.(அல் குர்ஆன் 46:15)

குழந்தைக்குத் தாய் செய்யும் தியாகத்தை அவள் பாக்கியமாக கருதுகிறாள். குழந்தைக்கு நோயென்றால் தான் பத்தியம் இருக்கிறாள். நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாத போது நலமாயுள்ள தாய் தானும் சிறிது குடிக்கிறாள்.ஏன்? குழந்தை, தனக்கும், தாய்க்கும் ஒரே நோய்தான் என்றெண்ணி ஆறுதல் அடைவதற்காக.

"தாய் தந்தையரிடம் மிகக் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை "சீ" என்று கூட கூறாதீர்.மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர்.மாறாக அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக (17:23)என்று திருமறையில் எடுத்தியம்புகிறான்.

வீட்டின் பெயரோ அன்னை இல்லம், அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பதே சில இடங்களில் இன்றைய நிலை.

உபரி வணக்கங்களை மிக அதிகமாக ஊக்குவிக்கும் அதே சமயம், இத்தகைய வணக்கங்களை விடவும் தாய்க்கு நன்மை செய்வதற்கு இஸ்லாம் முன்னுரிமை அளிக்கிறது.

அன்னையின் அருமையை வருடந்தோறும் மட்டுமின்றி, நாள்தோறும் உணர்ந்து பெருமைப்பட கண்டிப்புடன் வலியுறுத்துகிறது இஸ்லாம்.

இத்தகைய நிலைகளில் நம் அனைவருக்கும் உதவி செய்து.....பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் நற்பாக்கியத்தை நமக்கு இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பில் ஆலமீன்!

உங்கள் சகோதரி,
சித்தி நிஹாரா.

3 comments:

 1. மா ஷா அல்லாஹ்... தோழி சித்தி நிஹாரா...

  முக்கிய விஷயங்களை அழகாக ரத்தின சுறுக்கமாய் குறிப்பிட்டுள்ளீர்கள்...

  ஜஸாக்கில்லாஹ் ஹைர்...

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ்...சூப்பர் ரொம்ப சிம்பிள வத வதனு இல்லாம அதே நேரம் ரொம்ப அழகவும் தெளிவாவும் எழுதிருக்கேங்க சிஸ் வாழ்த்துக்கள் தொடர்ந்து இதே போல நல்ல ஆக்கங்களை எழுதுங்க சிஸ்

  ReplyDelete
 3. மாஷா அல்லாஹ்... அருமையாக எழுதி உள்ளீர்கள்
  .. பாராட்டுக்கள்

  ReplyDelete