Monday, May 25, 2015

விருந்தோம்பல் எனப்படுவது யாதெனில்..?

நம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக.

 “அட…. எப்படி இருக்கீங்க?வீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு?அவசியம் சாப்பிடும் படி வந்து விட்டு போங்கம்மா….” இப்படி நம் உறவினர்களை பார்த்தாலோ,தெரிந்தவர்களை பார்த்தாலோ இன்முகத்தோடு வீட்டிற்கு அழைப்பது நம் தமிழர்களின் பண்பாடும்,வழக்கமுமாக இருந்து வந்தது…. என்ன இருந்து வந்தது என்று இறந்த காலத்தில் சொல்கிறேன் என்கின்றீர்களா?ஆம்… என் பார்வையில் இந்த பழக்கமும்,வழக்கமும் குறைந்து விட்டதாக தான் நான் எண்ணுகிறேன்.

நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையிலும் சரி,நாம் முஸ்லீம்கள் என்றாலும் சரி.. ஒருமித்த கருத்தாகவும்,பழக்கத்திலும்,சிறப்பாகவும் சொல்லப்படுகின்ற விஷயங்களில் ஒன்று தான் இந்த விருந்தோம்பல் என்பது…அத்தகைய விருந்தோம்பலின் நிலை இன்று எப்படி பெருமளவு குறைந்து வருகிறது என்பதை பற்றிய ஒரு சிறிய ஆய்வுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

விருந்தோம்பல் என்பது :

முதலில் விருந்தோம்பல் என்றால் என்ன? எப்படி நாம் அதை புரிந்து வைத்திருக்கின்றோம்?திருமண நிகழ்ச்சிகள்,வீடு புகும் விழா,பெயர் சூட்டும் விழா இப்படியான விஷேசங்களில் ஊரே பேசும்படி பெரிய பெரிய விருந்துகள் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவது என்பதா?இல்லை பயணம் போனா விருந்து,வந்தா விருந்துன்னு இப்படி ஏற்பாடு செய்யப்படுவது மட்டும்தானா…? என்றால் நிச்சயமாக இல்லை.நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று... இருப்பதைக் கொண்டு அன்புடன் மனதார செய்யும் உபசரிப்பு தான் விருந்தோம்பல் என்பதின் முழுமையான அர்த்தம்.

அன்றையக் காலத்தின் வழக்கம் எவ்வாறாக இருந்தது?

பண்டைக்காலத்தில் நம் தமிழர்களின் வரலாறுகளை தமிழ் வகுப்புகளில் படித்திருப்போம்.அதை கொஞ்சம் அப்படியே திரும்பி பார்த்தோமேயானால்,அவர்கள் தினமும் தன் வீட்டிற்க்கு யாரேனும் வருவதையே விரும்பினார்கள்.அவ்வாறே தினமும் எதிர்பார்த்த வண்ணமும் காத்திருப்பார்களாம்.தன் வசதிக்கேற்றவாறு உணவுகளை தந்து அன்போடு பரிமாறுவதை தங்களது வழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.

அப்படியே நம் இஸ்லாமிய வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தாலும் நமக்கெல்லாம் வழிக்காட்டியாக வாழ்ந்து வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் சரி,அவர்களை பின்பற்றிய ஸஹாபாக்களும் சரி,கஷ்டங்களிலும், போராட்டங்களிலும் மற்றவர்களை உபசரிப்பதில் சிறந்தே விளங்கினார்கள் என்பதை பல வரலாற்று குறிப்புகளின் (ஹதீஸ்களின்)மூலம் பார்க்க முடிகின்றது.

யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

அத்தகைய நற்குணங்கள் அவர்களுக்குள் இருந்ததால் தான் மக்காவிலிருந்து மதீனாவிற்க்கு புலம் பெயர்ந்த நம் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும்,அவர்களை தொடர்ந்து வந்த ஸஹாபாக்களையும் குடும்பத்துடன் இன்முகத்தோடு வரவேற்று ஒவ்வொரு அன்சாரிகளும் ஒருவரை தங்களோடு இணைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கவும் செய்தனர்….

இன்றைய நம் நடைமுறையில் இருப்பது:

இப்படி சிறப்பு மிக்க விருந்தோம்பல் இன்றைய அவசர உலகில் எப்படி இருந்துக் கொண்டு வருகிறது?விருந்தினரை எதிர்பார்க்கும் காலம் போய், ஐய்யோ…. யாராவது விருந்தாளியாய் வீட்டுக்கு வந்து விடுவார்களோ என அச்சம் கொள்வதை தான் நாம் பல இடங்களில்  பார்க்க முடிகின்றது…. அப்படி வீட்டிற்க்கு ஒருவர் வந்து விட்டாலும்,அவர்களுக்கு ஒரு காஃபி போட்டு வைக்கக்கூட யோசிக்கும் சிலரை பார்க்கிறோம்…. அதிலும் நாசுக்காக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்… “நீங்க சாப்பிட்டு போங்கன்னா இருக்கவா போறீங்க… சமைச்சு வச்சிட்டுல்ல வந்திருப்பீங்க” இப்படி சிலர் சொல்லிவிடுவர்… இப்படி சொல்வதை கேட்டதும் அங்கே அதற்கு மேல் இருக்க தோணுமா என்ன?இன்னும் சிலர் நாம் போனதிலிருந்து பேசிக் கொண்டே இருப்பர்… சரி கிளம்புறோமா….. எனக் கூறிவிட்டு கிளம்பும்போது, “இப்படி காஃபி கூட குடிக்காம போறீங்களேம்மா….?”என்று கூறுபவர்களையும் பார்க்கிறேன்… எதையும் எதிர்ப்பார்த்து ஒரு வீட்டிற்கு போக வேண்டும் என்று நான் சொல்ல வில்லை.ஆனால்..? வீட்டிற்கு ஒருவர் வரும் போது நாம் அன்போடு நம்மால் இயன்றதை பரிமாறும் போது அதன் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெரிய விஷேச விருந்துகளில் கூட கிடைக்காது.

“அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு மனிதரிடம் சென்றபோது, அவர் எனக்கு விருந்தளிக்கவில்லை. அதன் பின்னர், அவர் என்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க வேண்டுமா? அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வால் தமது தந்தை வழியாக, நூல்: திர்மிதீ

அதனால் தான் வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவர்கள் கேட்டார்களோ… இல்லையோ…முதலில் உடனே ஒரு சொம்பு தண்ணீர் தருவதை நம் தமிழர்கள் பழக்கமாக வைத்திருப்பர்…காரணம்.. வந்திருப்பவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டு வந்திருக்கக் கூடும்.களைப்பாக இருக்கக்கூடும் என்பதால்தான்…. இன்று நாம் அதைக்கூட செய்கிறோமா என சற்றே சிந்தித்து பார்க்க வேண்டியதாக உள்ளது….

நம் வீட்டில் என்ன செய்திருக்கிறோமோ அதை இன்னும் ஏதேனும் சேர்த்து செய்து, வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவது என்றெல்லாம் இருக்கும் காலம் போய்விட்டது. அப்படி செய்து வைத்தால், “நான் போயிருக்கேன் என்ன செய்து வைத்திருக்காங்க பாரு” எனக் குறை கூறுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.அதையும் மறுப்பதற்கில்லை.இன்றைக்கு அனைவரிடத்திலும் செல்ஃபோன் வந்துவிட்டதால் பெரும்பாலும் முன்பே வருகிறேன் என்று அறிவித்து விட்டுதான் வருகிறார்கள்.நாமும் செல்கிறோம்.முன்பெல்லாம் இந்த வசதிகள் இல்லாத நிலையில்,திடீரென்று உறவினர்கள் வருவர்.அதன் பிறகு தான் கோழியை பிடித்து,வெட்டி,சமைப்பது என்று இருக்கும்.கேஸ் அடுப்பு,மிக்ஸி வசதிகள் கூட இருக்காது இருப்பினும் மணக்க மணக்க சமைத்து பரிமாறும் அந்த சுவையே தனிதான்.

இன்று பாருங்கள்….விருந்தாளிகள் வருவது பெரும்பாலும் முன் கூட்டியே அறிவிக்கப் படும்.முதல் நாளே பொருட்கள் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து விடலாம்.இல்லை ஃபோன் செய்த அடுத்த நொடி வேண்டிய பொருட்கள் அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்… கேஸ்,மிக்ஸி என எத்தனை விதமான வசதி,வாய்ப்புகள் பெருகியுள்ளது.ஆனால் அன்புடன் கூடிய உபசரிப்போ… குறைந்து போய்விட்டது என்பது தான் இங்கே நினைத்து பார்க்கிறேன்.அதிலும் வெளிநாட்டு வாழ் மக்களை இந்த இடத்தில் குறிப்பிடவே விரும்புகிறேன்….

இன்றைக்கு உலகத்தின் பல இடங்களில் எல்லோரும் குடும்பமாக வாழ்கின்ற நிலை இருந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதும், வியப்புக்குரியதும் ஆகும். அவ்வாறு நம் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் இப்போது நான் இருக்கும் சிங்கப்பூரும் ஒன்று… இங்கே ஒருவரையொருவர் சந்திப்பது என்பதையே அபூர்வமாக கொண்டிருப்பார்கள்.அப்படி சந்திப்பது என்றால் கல்யாண வரவேற்பறை விருந்துகளில் தான் இருக்கும்… தப்பித் தவறி ஏதும் ஷாப்பிங் மாலிலோ,வேறேதும் இடங்களிலோ சந்தித்தாலும் கூட நல்லா இருக்கீங்களா..?நல்லா இருக்கேன் அவ்வளவுதான்… நாம் நமக்கே உரிய பழக்கத்தில் வீட்டிற்கு சாப்பிடுவது போல் வாங்கமா என்று கூறினாலும் சிலர் ரொம்ப யோசிப்பாங்க இது ஒரு வகையினர் என்றால்,ம்ம் வருகிறோம் என்று வருவார்கள்.மீண்டும் நான் ஃப்ரீயா இருக்கும்போது இதேப்போல் உங்க வீட்டுக்கு வர்றேன் என கூறுவார்களே தவிர பேச்சுக்கு கூட நீங்களும் வீட்டுக்கு வாங்க எனக் கூற மாட்டார்கள்…. நாமாகவே நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க சும்மா கொஞ்ச நேரம் வந்துட்டு போறோம்னு சொன்னா கூட…  “ நேரமே இல்லமா பசங்களுக்கு ட்யூஷன், வெளியில வேலைன்னு சரியா இருக்குமா… நீங்க ஏன்மா சிரமப்படுறீங்க…. நான் ப்ரீயா இருக்கும் போது நானே உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று சொல்வார்கள்… இதை குறை கூறுவதாக யாரும் எண்ண வேண்டாம்…. நான் சுட்டிக்காட்டி இருப்பதோ ஒரு சில விஷயங்களே…. இதேப்போல் நிறைய உதாரணங்களை அனுபவங்களோடு உணர்ந்துவிட்டேன்.இப்படிப்பட்டவர்கள் நிறையப் பேரை சந்தித்தப் பின் ஏற்பட்ட ஒரு ஆதங்கம் தான் இந்த கட்டுரை எழுத தூண்டியது

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். விருந்தாளிக்குப் பரிசு ஓர் இரவும் ஒரு பகலும், அதிகப்படியாக விருந்து உபசரிப்பு மூன்று நாட்களாகும், அதற்கு பின்னால் உள்ள உபசரிப்பு தர்மமாகும். விருந்தாளி விருந்து கொடுப்பவருக்கு கஷ்டம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. குவைலித் பின் அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

இனி வரும் காலங்களில் நம்முடைய ஒவ்வொரு நடைமுறைகளையும்,பழக்கவழக்கங்களையும் கொண்டு தான் நம் சந்ததிகள் இறைவனின் உதவியால் வளர்ந்து வருவார்கள்… இப்படி யாருடனும் ஒரு ஒட்டுதலும்,உறவுகளின் நெருக்கங்களும், அனைவரும் பகிர்ந்து அன்போடு சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் இல்லையெனில் எப்படிப்பட்ட சுயநலமிக்க குடும்ப சூழ்நிலை உண்டாகுமோ என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கு பயமாக உள்ளது…. இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக….

இதற்கு என்ன தான் வழி:

நம் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழு வயிறு அளவு உணவுக் கூட உண்பதற்கு இல்லாமல் வெறும் பேரிச்சை கொண்டு பசியை போக்கியவர்களாக வாழ்ந்த போதிலும்,அந்த நேரத்தில் பசி என்று வருபவர்களுக்கு இருப்பதையும் கொடுத்து விட்டு தான் வாழ்ந்திருக்கிறார்கள்….அதே போன்று அடுத்தடுத்து வாழ்ந்த ஸஹாபாக்களும்,கலீஃபாவாக இருந்த போதிலும் இந்த நிலையில்தான் வாழ்ந்திருந்திருக்கின்றார்கள்.இருப்பினும் ஒரு நாள் பொழுதில் ஏதேனும் நல்ல உணவுகள் சமைக்க நேர்ந்தாலோ,அல்லது யாரேனும் கொடுத்தாலோ,அதை அனைவரும் பகிர்ந்து உண்கின்ற செய்தியினை வரலாற்றில் பார்க்கின்றோம்.எனவே ஒரு வீட்டிற்கு செல்பவர்களும் சரி,அந்த வீட்டில் உள்ளவர்களும் சரி,மூன்று நான்கு வகைகளாக செய்து சாப்பிட்டால் தான் விருந்து என்று எண்ணம் கொள்ளாமல்.. வீட்டில் இருப்பதைக் கொண்டு சமைப்பதை மனதார சந்தோஷத்துடன் எல்லோரும் பகிர்ந்து சாப்பிடும்போது,அதில் பரக்கத் தான் அல்லாஹ் அளிப்பான்….அதே போல் ஒருவரையொருவர் வீட்டிற்கு அழைப்பது மகிழ்ச்சியோடு செய்யக்கூடிய விஷயம் அதை ஏன் பாரமாக பார்க்க வேண்டும் என எனக்கு புரியவில்லை.

ஒருவேளை பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்வதால் இந்த நிலை என்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக இது போன்ற உறவுகளிடம் நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் விடுவதால் தான் மனம் விட்டு சிரித்து பேசக்கூட ஆளில்லாமல் இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்… நாலு பேரோடு சேர்ந்து விரும்பியதை சமைத்து ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது மனதிற்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இது ஆண்களை விட பெண்களின் கையில் தான் இருக்கின்றது…

ஏன் அவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் ஆண்கள் வீட்டிற்கு ஒருவரை அழைக்க யோசிப்பதே எங்கே மனைவி கோபமடைந்து விடுவாளோ என்ற அச்சம் தான்… அதை தவிர்க்க பெண்கள் பெரும்பாலும் முயற்சி செய்திடுவது நன்று… வேலைக்கு செல்கின்ற பெண்கள் கிடைகின்ற விடுமுறை நாட்களிலும் ஓய்வெடுக்காமல் போய் விடுமே என்று எண்ணுவதும் சரிதான். அதற்காக இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது சரியில்லை… இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன…. அடுப்பு ஊதி சமைக்கும் நிலை இறைவனின் உதவியால் பெரும்பாலும் இல்லை…. அதே போல் உணவுகளை சமைத்து கொடுக்க பல்வேறு வசதிகளும் வந்து விட்ட நிலையில் முடிந்த வரை அவ்வப்போது உறவினர்களை,நண்பர்களை,தெரிந்தவர்களை சந்திப்பது,கலந்துரையாடுவது போன்ற அழகிய சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்தி நம் பிள்ளைகளுக்கும் அவ்வழி கொடுத்து,பகிர்ந்து இன்முகத்தோடு சாப்பிடுவதோடு உறவுகளுடன் கலந்துரையாடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்தலாம் அல்லவா?மனம் விரும்பினால் செயல் என்றென்றும் சிறப்புடன் இலகுவாக அமையும்.

எனவே இந்த விருந்தோம்பல் என்ற சிறப்பான விஷயத்தை உணர்ந்து அதை அவ்வபோது நாம் பழக்கத்தில் கொண்டு செயல்படுத்தி,நம் சந்ததியினரும் அதை பழக்கத்தில் கொண்டு செயல்படுத்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் முனைவோமாக.

யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

சகோதரி
அப்சரா பாரிஸ்

1 comment:

 1. தாயகத்தில் வாழும் மக்களின் விரும்தோம்பலில்,
  தாங்கள் சுட்டிக்காட்டும் அவல நிலை
  நிச்சயமாக இல்லவே இல்லை!

  திடீரென வருகைத் தந்தோர்க்கு பரிமாறிட
  புதிதாக எதையும் சமைக்க இயலாவிட்டாலுங்கூட, இருப்பதைப் பகிர்ந்து உண்ணும் அன்பும் அரவணைப்பும் இன்றளவும் குறைந்திடவே இல்லை! அல்ஹம்துலில்லாஹ்!

  ஆண்டிற்கோர்முறை விடுமுறையில்
  தாயகம் வந்து சென்றுங்கூட,
  மிக நெருக்கமான உறவுமுறை
  சொந்தங்களையே அறிந்திராவர்களாகத்தான் வெளிநாடுகளிலேயே பிறந்து வளரும்,
  வாழும் பிள்ளைகளின் நிலை இருக்கு
  என்பதை எவருமே மறுத்திட இயலாது!

  வெளினாடுகளில் வாழ்வோரில்,
  வேலைக்கே செல்லாத தாயாரால்கூட
  சிறப்பான வாழ்வியல் பற்றிய வழிகாட்டல் இல்லாமலேயே... குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்!
  அடிப்படையே இங்குதான் ஆரம்பிக்கிறது!

  இரத்த பந்தங்களுடன் உறவாடவே அவகாசமில்லா
  அவசர யுகத்தில் திரியும் இவர்களுக்கு,
  அயலாருடன் நட்பு பாராட்டவா
  அவகாசம் கிடைக்கப்போகிறது?

  இத்தகைய குடும்பத்தினர்களிடம்தான் தாங்கள் இவ்விதமாய் அனுபவப்பட்டிருக்கிறீர்கள்!

  இதில், ஆய்வு செய்யவும் ஆதங்கம் கொள்ளவும் ஏதுமில்ல!

  இவர்களின் இத்தவறுகளிலிருந்து
  "என்ன செய்யவேகூடாது"
  என்பதை நாம் கற்றுக்கொள்வோம்!

  ReplyDelete