Sunday, May 31, 2015

கல்லூரிக்குப் புதுசா? உங்கள் கவனத்திற்கு...

தன் எதிர்கால லட்சியங்களுக்காக விரும்பிய கல்லூரியில் கல்வியைத் துவங்கும் நாள் இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே உள்ளன எம் இஸ்லாமியப் பெண்களுக்கு.... விதவிதமாய் உடைகள், புதுப்புது உபகரணங்களும் தயாராகிவிட்டிருக்கும்... ஆனால் அதை விட முக்கியம் உள்ளத்தைத் தூய்மையாய் வைத்திருக்க வேண்டிய பயிற்சியல்லவா... சுயமரியாதையை உறுதியாய்ப் பற்றிப்பிடிக்கும் யுக்தியை கடைபிடிப்பதற்கான முயற்சியல்லவா...

கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு சில நிமிடங்கள் அதற்காக ஒதுக்குங்கள்....! 

இன்று உள்ள கல்விச்சூழலில் +2 முடித்த உடன் மேற்படிப்பு படிப்பது என்பது அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாய் உள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. முன்பை விட அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் என நம் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே அமையப்பெற்றது மகிழ்ச்சியான ஒன்றே. அக்கல்லூரிகளையோ அல்லது நாம் விரும்பும் எந்தக் கல்லூரியையோ தேர்ந்தெடுக்கும் முன்பு நாம் யோசிப்பது மிக சொற்பமான சிலவற்றையே. அவை நம்முடைய மதிப்பெண், நம்முடைய விருப்பமான பாடம், நம்முடைய பொருளாதார சூழல், இவற்றிற்கு அடுத்த படியாக நமது பள்ளி நண்பர்களும் அவர்களின் நட்புறவுத் தொடர்ச்சியின் மீதுள்ள ஆவலும். ஆனால் நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்வதற்கு முன் இந்த சில சிந்தனைகள் போதுமானதா? நிச்சயமாக இல்லை.

யோசிக்கவேண்டியவை:


உலகக்கல்வியை தேர்ந்தெடுக்கும் நாம், நம் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமோ ஏதும் இல்லை. அப்படி இருக்க நாம் சிந்திக்கும் மேற்கூறிய சிந்தனைகளில் இஸ்லாம் எங்கே மறைந்தது (மறந்தது)?
பள்ளிப்படிப்பு வரை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சில பல கண்டிப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்கிறோம் அல்லது நடந்து கொள்ள வைக்கப்படுகிறோம். ஆனால் நாம் கல்லூரிப் படிகளில் அடிவைக்கும் போது நமக்கு, நமது பெற்றோர்களாலும் சமூகத்தாலும் சில சுதந்திரங்கள் தரப்படுகின்றன.இந்த சுதந்திரத்தின் தவறான புரிதலே சிறிய பெரிய தவறுகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

சுதந்திரத்தின் வரையறை:


சுதந்திரத்திற்கு வரையறை கொடுக்க இறையச்சத்தினால் மட்டுமே இயலும். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் அனேக கல்லூரிகளில் நம் இஸ்லாத்திற்குப் புறம்பான விஷயங்கள் செய்யப்படுகின்றன அல்லது செய்யத் தூண்டப்படுகின்றன. கல்வி கற்க செல்கிற நாம் அதை ஆமோதிக்கும் நபர்களாய் காலப்போக்கில் மாறிவிடுகிறோம் என்பதே வேதனை.

பட்டப்படிப்பு முடித்ததன் பரிசாக இறையச்சம் குறைந்துவிடுகின்றது. இஸ்லாம் என்பது ஒரு மதமாகி போகின்றது. இதற்கு நாம் வைத்துக்கொள்கின்ற பெயர் முற்போக்குச்சிந்தனை. ஆனால் சுய பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாகி விடுகிறது.

விளைவுகள்:


இந்த சிந்தனையின் செயல்பாடே வேற்று மதத்தவரை மணந்துகொள்வது, வேற்று மதத்தினரோடு காதல் வயப்படுவது, ஆண் - பெண் விதிமுறைகளற்ற நட்பு, பெண்ணியத்தை மறந்துபோவது, பெற்றோர்களையும், பெரியோர்களையும் முந்தைய சமூகமாய் மட்டும் பார்ப்பது, இவ்வாறு இன்னும் இந்தப் பட்டியல் கூடுதல் தாள் வாங்கும் அளவிற்கு நீளலாம். இவைதான் முற்போக்குச் சிந்தனையா?

மேற்கல்வி கற்பதன் நோக்கம்:


மேற்கல்வி கற்பது நமது அறிவைப் பெருக்கி கொள்ளவே அன்றி நமது சுயமரியாதையை, சுயகட்டுபாட்டை, இஸ்லாத்தை, ஈமானை இழப்பதற்காக அல்ல. இதுவரை இக்கட்டுரையை படித்ததின் புரிதலாக கல்லூரிப் படிப்பே கூடாது என்றோ கல்லூரிகளில் கால் பதிக்கத் தயாராகும் மாணவர்களைத் தவறாக கூறுகிறது என்றோ அல்லது இஸ்லாத்தைத் தவிர மற்ற விஷயங்களை எதிர்க்கிறது என்றோ இக்கட்டுரை கூறுகிறது என எண்ண வேண்டாம். மாறாக உலகக் கல்வியின் அவசியத்தையே தங்கள் முன் வலியுறுத்த முயற்சிக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் காலக்கட்டத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் அறிவியல், கலை, மருத்துவம், பொறியியல், மொழி, ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் அவர்களின் கல்வி இஸ்லாத்தையோ ஈமானையோ கடுகளவேனும் பாதிக்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் நெறிமுறைகளால் அவர்களின் ஞானம் மென்மேலும் வலுப்பெற்றது. இவ்வுலகில் வாழ்கின்ற நமக்கு இவ்வுலகில் நாம் வாழ தேவையான வசதியையும், தொழில்நுட்பத்தையும், அறிவையும், செல்வத்தையும் தேடிக்கொள்வது மிக மிக அவசியமாகும். அது இறைக் கோட்பாடுமளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:


நாம் தேர்ந்தெடுக்கப் போகும் கல்லூரியில்

*பெண்கள் புர்கா அணிந்து வர அனுமதி உள்ளதா, 
*ஐவேளை தொழுவதற்கு இடமுள்ளதா,
* ஒழுக்கமுள்ள அல்லது ஒழுக்கம் பேணப்படுகின்ற கல்லூரியா
போன்ற கேள்விகளை முன்வைத்து கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றில் ஏதேனும் தடை இருந்தால் அதற்கான மாற்று முறைகளுக்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பாருங்கள். உதாரணத்திற்கு....

*புர்கா அணிய அனுமதி இல்லையெனில் நம் அணியும் உடையையே ஹிஜாப் முறையில் அணிந்து தலையை மறைத்து வர அனுமதி உள்ளதா
*தொழுகைக்கு இடவசதி இல்லை எனில் கல்லூரி வளாகத்திலேயே, வகுப்புகளிலே தொழுவதற்கு அனுமதி உள்ளதா
என பார்க்கலாம். 

இவற்றில் எவற்றிற்கேனும் குறைபாடுகள் நேரும் பட்சத்தில் அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் நபராய் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு கல்லூரிகளுக்குச் செல்லுங்கள். கல்வியைக் காட்டிலும் உங்களின் மானமும், ஒழுக்கமும், மரியாதையும், கௌரவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உங்களின் வருகையும், சேர்க்கையும், கட்டணமும், பங்களிப்பும் அக்கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது கல்லூரியின் கடமையாகும்.

சிந்திக்க வேண்டியவை:


இந்து மதத்தினர் பொட்டு வைத்துக்கொள்ளவோ, காவி, கருப்பு நிற உடை அணியவோ, கிருஸ்துவ மதத்தினர் சிலுவை அணிந்து வரவோ வெண்மை நிற உடை அணியவோ, சீக்கிய மதத்தினர் டர்பன் அணிவதையோ தடை செய்யாத கல்வி நிறுவனம் இஸ்லாமியர்களாகிய நாம் வைத்துக்கொள்ளும் தாடியையும், அணிகின்ற ஹிஜாப்பையும், தொப்பியையும் தடை செய்கின்றது என்றால் பிரச்சினை யாரிடத்தில் ? சிந்தியுங்கள்.

உங்களிடம் தைரியம் குறைவு, ஒற்றுமை குறைவு, மார்க்கப்பற்று குறைவு என்று எண்ணித்தானே அவர்களின் சட்டங்கள் உங்கள் மீது திணிக்கப்படுகின்றன. நீங்களும் அவற்றை உண்மைபடுத்தும் விதத்தில் தானே நடந்துக்கொள்கிறீர்கள்?

இனியாவது இந்நிலை மாறட்டும். உங்களின் ஒற்றுமையை, மார்க்கப்பற்றை இவ்வுலகிற்கு பறைசாற்றுங்கள். உலக கல்விக்காக மார்க்கத்தையும், சுயமரியாதையையும் பலி கொடுத்த காலம் இன்றோடு ஒழியட்டும். உங்களின் முயற்சியினால் பின்வரும் சமூகத்திற்குக் கல்வியை அழகானதாய் , எளிமையானதாய் ஆக்கி வையுங்கள். நம் சகோதர சகோதரிகளான நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளர்களாய்த் திகழ வேண்டும் (ஆமீன்) என்று இறைவனிடம் இறைஞ்சுபவளாய் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.

ஹபிபா ஜமீல்
பரங்கிப்பேட்டை
read more "கல்லூரிக்குப் புதுசா? உங்கள் கவனத்திற்கு..."

Monday, May 25, 2015

விருந்தோம்பல் எனப்படுவது யாதெனில்..?

நம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக.

 “அட…. எப்படி இருக்கீங்க?வீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு?அவசியம் சாப்பிடும் படி வந்து விட்டு போங்கம்மா….” இப்படி நம் உறவினர்களை பார்த்தாலோ,தெரிந்தவர்களை பார்த்தாலோ இன்முகத்தோடு வீட்டிற்கு அழைப்பது நம் தமிழர்களின் பண்பாடும்,வழக்கமுமாக இருந்து வந்தது…. என்ன இருந்து வந்தது என்று இறந்த காலத்தில் சொல்கிறேன் என்கின்றீர்களா?ஆம்… என் பார்வையில் இந்த பழக்கமும்,வழக்கமும் குறைந்து விட்டதாக தான் நான் எண்ணுகிறேன்.

நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையிலும் சரி,நாம் முஸ்லீம்கள் என்றாலும் சரி.. ஒருமித்த கருத்தாகவும்,பழக்கத்திலும்,சிறப்பாகவும் சொல்லப்படுகின்ற விஷயங்களில் ஒன்று தான் இந்த விருந்தோம்பல் என்பது…அத்தகைய விருந்தோம்பலின் நிலை இன்று எப்படி பெருமளவு குறைந்து வருகிறது என்பதை பற்றிய ஒரு சிறிய ஆய்வுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

விருந்தோம்பல் என்பது :

முதலில் விருந்தோம்பல் என்றால் என்ன? எப்படி நாம் அதை புரிந்து வைத்திருக்கின்றோம்?திருமண நிகழ்ச்சிகள்,வீடு புகும் விழா,பெயர் சூட்டும் விழா இப்படியான விஷேசங்களில் ஊரே பேசும்படி பெரிய பெரிய விருந்துகள் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவது என்பதா?இல்லை பயணம் போனா விருந்து,வந்தா விருந்துன்னு இப்படி ஏற்பாடு செய்யப்படுவது மட்டும்தானா…? என்றால் நிச்சயமாக இல்லை.நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று... இருப்பதைக் கொண்டு அன்புடன் மனதார செய்யும் உபசரிப்பு தான் விருந்தோம்பல் என்பதின் முழுமையான அர்த்தம்.

அன்றையக் காலத்தின் வழக்கம் எவ்வாறாக இருந்தது?

பண்டைக்காலத்தில் நம் தமிழர்களின் வரலாறுகளை தமிழ் வகுப்புகளில் படித்திருப்போம்.அதை கொஞ்சம் அப்படியே திரும்பி பார்த்தோமேயானால்,அவர்கள் தினமும் தன் வீட்டிற்க்கு யாரேனும் வருவதையே விரும்பினார்கள்.அவ்வாறே தினமும் எதிர்பார்த்த வண்ணமும் காத்திருப்பார்களாம்.தன் வசதிக்கேற்றவாறு உணவுகளை தந்து அன்போடு பரிமாறுவதை தங்களது வழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.

அப்படியே நம் இஸ்லாமிய வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தாலும் நமக்கெல்லாம் வழிக்காட்டியாக வாழ்ந்து வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் சரி,அவர்களை பின்பற்றிய ஸஹாபாக்களும் சரி,கஷ்டங்களிலும், போராட்டங்களிலும் மற்றவர்களை உபசரிப்பதில் சிறந்தே விளங்கினார்கள் என்பதை பல வரலாற்று குறிப்புகளின் (ஹதீஸ்களின்)மூலம் பார்க்க முடிகின்றது.

யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

அத்தகைய நற்குணங்கள் அவர்களுக்குள் இருந்ததால் தான் மக்காவிலிருந்து மதீனாவிற்க்கு புலம் பெயர்ந்த நம் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும்,அவர்களை தொடர்ந்து வந்த ஸஹாபாக்களையும் குடும்பத்துடன் இன்முகத்தோடு வரவேற்று ஒவ்வொரு அன்சாரிகளும் ஒருவரை தங்களோடு இணைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கவும் செய்தனர்….

இன்றைய நம் நடைமுறையில் இருப்பது:

இப்படி சிறப்பு மிக்க விருந்தோம்பல் இன்றைய அவசர உலகில் எப்படி இருந்துக் கொண்டு வருகிறது?விருந்தினரை எதிர்பார்க்கும் காலம் போய், ஐய்யோ…. யாராவது விருந்தாளியாய் வீட்டுக்கு வந்து விடுவார்களோ என அச்சம் கொள்வதை தான் நாம் பல இடங்களில்  பார்க்க முடிகின்றது…. அப்படி வீட்டிற்க்கு ஒருவர் வந்து விட்டாலும்,அவர்களுக்கு ஒரு காஃபி போட்டு வைக்கக்கூட யோசிக்கும் சிலரை பார்க்கிறோம்…. அதிலும் நாசுக்காக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்… “நீங்க சாப்பிட்டு போங்கன்னா இருக்கவா போறீங்க… சமைச்சு வச்சிட்டுல்ல வந்திருப்பீங்க” இப்படி சிலர் சொல்லிவிடுவர்… இப்படி சொல்வதை கேட்டதும் அங்கே அதற்கு மேல் இருக்க தோணுமா என்ன?இன்னும் சிலர் நாம் போனதிலிருந்து பேசிக் கொண்டே இருப்பர்… சரி கிளம்புறோமா….. எனக் கூறிவிட்டு கிளம்பும்போது, “இப்படி காஃபி கூட குடிக்காம போறீங்களேம்மா….?”என்று கூறுபவர்களையும் பார்க்கிறேன்… எதையும் எதிர்ப்பார்த்து ஒரு வீட்டிற்கு போக வேண்டும் என்று நான் சொல்ல வில்லை.ஆனால்..? வீட்டிற்கு ஒருவர் வரும் போது நாம் அன்போடு நம்மால் இயன்றதை பரிமாறும் போது அதன் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெரிய விஷேச விருந்துகளில் கூட கிடைக்காது.

“அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு மனிதரிடம் சென்றபோது, அவர் எனக்கு விருந்தளிக்கவில்லை. அதன் பின்னர், அவர் என்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க வேண்டுமா? அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வால் தமது தந்தை வழியாக, நூல்: திர்மிதீ

அதனால் தான் வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவர்கள் கேட்டார்களோ… இல்லையோ…முதலில் உடனே ஒரு சொம்பு தண்ணீர் தருவதை நம் தமிழர்கள் பழக்கமாக வைத்திருப்பர்…காரணம்.. வந்திருப்பவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டு வந்திருக்கக் கூடும்.களைப்பாக இருக்கக்கூடும் என்பதால்தான்…. இன்று நாம் அதைக்கூட செய்கிறோமா என சற்றே சிந்தித்து பார்க்க வேண்டியதாக உள்ளது….

நம் வீட்டில் என்ன செய்திருக்கிறோமோ அதை இன்னும் ஏதேனும் சேர்த்து செய்து, வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவது என்றெல்லாம் இருக்கும் காலம் போய்விட்டது. அப்படி செய்து வைத்தால், “நான் போயிருக்கேன் என்ன செய்து வைத்திருக்காங்க பாரு” எனக் குறை கூறுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.அதையும் மறுப்பதற்கில்லை.இன்றைக்கு அனைவரிடத்திலும் செல்ஃபோன் வந்துவிட்டதால் பெரும்பாலும் முன்பே வருகிறேன் என்று அறிவித்து விட்டுதான் வருகிறார்கள்.நாமும் செல்கிறோம்.முன்பெல்லாம் இந்த வசதிகள் இல்லாத நிலையில்,திடீரென்று உறவினர்கள் வருவர்.அதன் பிறகு தான் கோழியை பிடித்து,வெட்டி,சமைப்பது என்று இருக்கும்.கேஸ் அடுப்பு,மிக்ஸி வசதிகள் கூட இருக்காது இருப்பினும் மணக்க மணக்க சமைத்து பரிமாறும் அந்த சுவையே தனிதான்.

இன்று பாருங்கள்….விருந்தாளிகள் வருவது பெரும்பாலும் முன் கூட்டியே அறிவிக்கப் படும்.முதல் நாளே பொருட்கள் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து விடலாம்.இல்லை ஃபோன் செய்த அடுத்த நொடி வேண்டிய பொருட்கள் அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்… கேஸ்,மிக்ஸி என எத்தனை விதமான வசதி,வாய்ப்புகள் பெருகியுள்ளது.ஆனால் அன்புடன் கூடிய உபசரிப்போ… குறைந்து போய்விட்டது என்பது தான் இங்கே நினைத்து பார்க்கிறேன்.அதிலும் வெளிநாட்டு வாழ் மக்களை இந்த இடத்தில் குறிப்பிடவே விரும்புகிறேன்….

இன்றைக்கு உலகத்தின் பல இடங்களில் எல்லோரும் குடும்பமாக வாழ்கின்ற நிலை இருந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதும், வியப்புக்குரியதும் ஆகும். அவ்வாறு நம் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் இப்போது நான் இருக்கும் சிங்கப்பூரும் ஒன்று… இங்கே ஒருவரையொருவர் சந்திப்பது என்பதையே அபூர்வமாக கொண்டிருப்பார்கள்.அப்படி சந்திப்பது என்றால் கல்யாண வரவேற்பறை விருந்துகளில் தான் இருக்கும்… தப்பித் தவறி ஏதும் ஷாப்பிங் மாலிலோ,வேறேதும் இடங்களிலோ சந்தித்தாலும் கூட நல்லா இருக்கீங்களா..?நல்லா இருக்கேன் அவ்வளவுதான்… நாம் நமக்கே உரிய பழக்கத்தில் வீட்டிற்கு சாப்பிடுவது போல் வாங்கமா என்று கூறினாலும் சிலர் ரொம்ப யோசிப்பாங்க இது ஒரு வகையினர் என்றால்,ம்ம் வருகிறோம் என்று வருவார்கள்.மீண்டும் நான் ஃப்ரீயா இருக்கும்போது இதேப்போல் உங்க வீட்டுக்கு வர்றேன் என கூறுவார்களே தவிர பேச்சுக்கு கூட நீங்களும் வீட்டுக்கு வாங்க எனக் கூற மாட்டார்கள்…. நாமாகவே நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க சும்மா கொஞ்ச நேரம் வந்துட்டு போறோம்னு சொன்னா கூட…  “ நேரமே இல்லமா பசங்களுக்கு ட்யூஷன், வெளியில வேலைன்னு சரியா இருக்குமா… நீங்க ஏன்மா சிரமப்படுறீங்க…. நான் ப்ரீயா இருக்கும் போது நானே உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று சொல்வார்கள்… இதை குறை கூறுவதாக யாரும் எண்ண வேண்டாம்…. நான் சுட்டிக்காட்டி இருப்பதோ ஒரு சில விஷயங்களே…. இதேப்போல் நிறைய உதாரணங்களை அனுபவங்களோடு உணர்ந்துவிட்டேன்.இப்படிப்பட்டவர்கள் நிறையப் பேரை சந்தித்தப் பின் ஏற்பட்ட ஒரு ஆதங்கம் தான் இந்த கட்டுரை எழுத தூண்டியது

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். விருந்தாளிக்குப் பரிசு ஓர் இரவும் ஒரு பகலும், அதிகப்படியாக விருந்து உபசரிப்பு மூன்று நாட்களாகும், அதற்கு பின்னால் உள்ள உபசரிப்பு தர்மமாகும். விருந்தாளி விருந்து கொடுப்பவருக்கு கஷ்டம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. குவைலித் பின் அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

இனி வரும் காலங்களில் நம்முடைய ஒவ்வொரு நடைமுறைகளையும்,பழக்கவழக்கங்களையும் கொண்டு தான் நம் சந்ததிகள் இறைவனின் உதவியால் வளர்ந்து வருவார்கள்… இப்படி யாருடனும் ஒரு ஒட்டுதலும்,உறவுகளின் நெருக்கங்களும், அனைவரும் பகிர்ந்து அன்போடு சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் இல்லையெனில் எப்படிப்பட்ட சுயநலமிக்க குடும்ப சூழ்நிலை உண்டாகுமோ என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கு பயமாக உள்ளது…. இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக….

இதற்கு என்ன தான் வழி:

நம் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழு வயிறு அளவு உணவுக் கூட உண்பதற்கு இல்லாமல் வெறும் பேரிச்சை கொண்டு பசியை போக்கியவர்களாக வாழ்ந்த போதிலும்,அந்த நேரத்தில் பசி என்று வருபவர்களுக்கு இருப்பதையும் கொடுத்து விட்டு தான் வாழ்ந்திருக்கிறார்கள்….அதே போன்று அடுத்தடுத்து வாழ்ந்த ஸஹாபாக்களும்,கலீஃபாவாக இருந்த போதிலும் இந்த நிலையில்தான் வாழ்ந்திருந்திருக்கின்றார்கள்.இருப்பினும் ஒரு நாள் பொழுதில் ஏதேனும் நல்ல உணவுகள் சமைக்க நேர்ந்தாலோ,அல்லது யாரேனும் கொடுத்தாலோ,அதை அனைவரும் பகிர்ந்து உண்கின்ற செய்தியினை வரலாற்றில் பார்க்கின்றோம்.எனவே ஒரு வீட்டிற்கு செல்பவர்களும் சரி,அந்த வீட்டில் உள்ளவர்களும் சரி,மூன்று நான்கு வகைகளாக செய்து சாப்பிட்டால் தான் விருந்து என்று எண்ணம் கொள்ளாமல்.. வீட்டில் இருப்பதைக் கொண்டு சமைப்பதை மனதார சந்தோஷத்துடன் எல்லோரும் பகிர்ந்து சாப்பிடும்போது,அதில் பரக்கத் தான் அல்லாஹ் அளிப்பான்….அதே போல் ஒருவரையொருவர் வீட்டிற்கு அழைப்பது மகிழ்ச்சியோடு செய்யக்கூடிய விஷயம் அதை ஏன் பாரமாக பார்க்க வேண்டும் என எனக்கு புரியவில்லை.

ஒருவேளை பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்வதால் இந்த நிலை என்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக இது போன்ற உறவுகளிடம் நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் விடுவதால் தான் மனம் விட்டு சிரித்து பேசக்கூட ஆளில்லாமல் இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்… நாலு பேரோடு சேர்ந்து விரும்பியதை சமைத்து ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது மனதிற்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இது ஆண்களை விட பெண்களின் கையில் தான் இருக்கின்றது…

ஏன் அவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் ஆண்கள் வீட்டிற்கு ஒருவரை அழைக்க யோசிப்பதே எங்கே மனைவி கோபமடைந்து விடுவாளோ என்ற அச்சம் தான்… அதை தவிர்க்க பெண்கள் பெரும்பாலும் முயற்சி செய்திடுவது நன்று… வேலைக்கு செல்கின்ற பெண்கள் கிடைகின்ற விடுமுறை நாட்களிலும் ஓய்வெடுக்காமல் போய் விடுமே என்று எண்ணுவதும் சரிதான். அதற்காக இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது சரியில்லை… இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன…. அடுப்பு ஊதி சமைக்கும் நிலை இறைவனின் உதவியால் பெரும்பாலும் இல்லை…. அதே போல் உணவுகளை சமைத்து கொடுக்க பல்வேறு வசதிகளும் வந்து விட்ட நிலையில் முடிந்த வரை அவ்வப்போது உறவினர்களை,நண்பர்களை,தெரிந்தவர்களை சந்திப்பது,கலந்துரையாடுவது போன்ற அழகிய சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்தி நம் பிள்ளைகளுக்கும் அவ்வழி கொடுத்து,பகிர்ந்து இன்முகத்தோடு சாப்பிடுவதோடு உறவுகளுடன் கலந்துரையாடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்தலாம் அல்லவா?மனம் விரும்பினால் செயல் என்றென்றும் சிறப்புடன் இலகுவாக அமையும்.

எனவே இந்த விருந்தோம்பல் என்ற சிறப்பான விஷயத்தை உணர்ந்து அதை அவ்வபோது நாம் பழக்கத்தில் கொண்டு செயல்படுத்தி,நம் சந்ததியினரும் அதை பழக்கத்தில் கொண்டு செயல்படுத்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் முனைவோமாக.

யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

சகோதரி
அப்சரா பாரிஸ்

read more " விருந்தோம்பல் எனப்படுவது யாதெனில்..?"

Thursday, May 21, 2015

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)


12ம் வகுப்பு ரிசல்ட் போடப்பட்டதில் இருந்தே இஸ்லாமிய சமுதாயத்தில் சில குரல்கள் பெண் கல்விக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கருத்து சரியில்லை என்று  சுட்டிக் காண்பித்த, சிந்திக்கும் திறன் கொண்ட சகோதரர்களுக்கு நன்றி கூறியவளாய் இக் கட்டுரையை தொடங்குகிறேன்.

ஏற்கனவே சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயம் தான். ஆனாலும் உணர்ச்சி வசப்படுதலில் வெளிப்படும் ஃபத்வாக்கள்..எத்தகு பாரதூரமான விளைவுகளை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு, இந்த பத்வா ஓர் உதாரணம் என்பதால்..மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என உலமாக்கள் தீர்ப்பு கூறி கல்வி கற்பதை விட்டும் நம் மக்களைத் தடுத்தனர். அதன் காரணமாக இன்று வரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உணர்ச்சி வசப்படுதலினால் வந்த விளைவு இது.

இது போல பல பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் ,  மார்க்கம் கற்ற பலர் தொடர்ந்து தீர்ப்பளித்து சமூகத்தின் முன்னேற்றத்தை அழித்து வருகின்றனர். அந்த வரிசையில்  ஒரு வார காலமாக  எட்டாம் வகுப்பு வரை பெண்ணுக்கு கல்வி போதுமென்றும், பத்தாம் வகுப்பு வரை கல்வி போதுமென்றும்,  படிப்பை நிறுத்தி விட்டு மதரஸாவில் சேர்க்கலாம் என்றும், பிரச்சாரம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

இப்போது தான் தட்டுத் தடுமாறி, கல்வியின் அவசியத்தை உணர்ந்து இஸ்லாமிய மக்கள் தன் பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பி வருகிறார்கள். இந்நிலையில் பெண் கல்விக்கு எதிராக இவர்கள் செய்யும் பிரச்சாரத்தை ஒரு சமுதாய பொறுப்பற்ற செயலாகவே  பார்க்க வேண்டியுள்ளது. எல்லாவற்றிலும் மேலாக இது போன்ற செயல்கள் எல்லாமே தன் கடமையிலிருந்து  தப்பிக்க முயலும் யுக்தி என்றே சொல்லலாம்

எப்படி என்று இறுதியில் பார்க்கலாம்.

பெண் கல்வி வேண்டாம் என்பதற்கு இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தீர்வு ஒன்று இருப்பதை மறந்துவிடுகிறார்கள்.
அப்படி என்ன தான் சொல்கிறார்கள் ?  ஏன் பெண் கல்வி வேண்டாம் என மறுக்கிறார்கள் ?

* மாற்று மதத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு ஓடிவிடுகின்றனர். நட்புகளால் தவறான வழிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அதனால் பள்ளி படிப்பு வேண்டாம்.

* பள்ளிக்குச் செல்ல வேன் டிரைவருடன் அல்லது ஆட்டோ ஓட்டுனருடன் அனுப்புவதால் அவர்களால் கவரப்பட்டோ அல்லது அவர்களால் தொந்தரவுகளுக்கோ ஆளாகின்றனர்.

* தொலைவில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பும் சூழல் நிலவுவதால் பெற்றோர் கண்காணிப்பிலிருந்து தவறி,  தவறான வழிக்கு செல்கின்றனர்.

* பள்ளிகளில்..நிர்வாகிகளின் சில்மிஷங்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகவே பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்போடும் பத்தாம் வகுப்போடும் நிறுத்தி விட்டு மதரஸாவில் சேர்த்து இம்மை மறுமை பயனை பெண் பிள்ளைகளுக்கு கிடைக்க பெற்றோர்கள் வழி வகை செய்ய வேண்டும்.. டாட்....

இவர்கள் முன் வைக்கும் கருத்தை மேலோட்டமாக நாம் பார்த்தால் சரியானதாகவே  தோன்றும். ஆனால் தீர்வு ??? பெண் பிள்ளைகள் செய்யும் தவறாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் தீமைகளாலும் அவமானமும் துன்பமும் பெற்றோர்களுக்கே என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இத்தகு விஷயங்களுக்கு தீர்வு என்பது பள்ளிப்படிப்பை நிறுத்துவது அல்ல... இதை நாம் நன்கு சிந்தித்தால் விளங்கும். ஆனால் சிந்திக்கும் மனநிலையில் நாம் இல்லை.

முதலாவதாக....பெண் பிள்ளைகள் மாற்று மதத்தினருடன் காதல் வயப்பட்டு ஓடிச் செல்ல யார் முதல் காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டும். அதிகப்படியான சுதந்திரம் கொடுத்து , எங்கே செல்கிறாள்? யாரை சந்திக்கிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்பதெல்லாம் கண்காணிக்காமல், மார்க்க கல்வியை விட்டும் இஸ்லாம் கூறும் வாழ்வியல் ஒழுக்க போதனைகளை விட்டும் தடுத்த பெற்றோர்கள் அல்லவா இதற்கு காரணம் ?  ஆதலால் பெற்றோர்களை ஊர் விட்டு ஒதுக்கி வைத்து விடுவோமா ?

மேலும் தமிழ்நாடு அரசு மாதந்தோறும்  வெளியிடும் கெசட்டை ஆராய்ந்தால் ஓர் உண்மை நிலை புரியும். இஸ்லாத்தை தழுவியதாக வந்த பெண்களில்  பாதி பேர் இஸ்லாமிய ஆண்களால் காதல் வயப்பட்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டவர்கள். இங்கே  பெண்களுக்கு வழிகேடு என நாம் விதிக்கும் அளவுகோல் காதல் எனில், அதே காதலால் தான் இஸ்லாமிய ஆண்களும் வழி கெட்டு போகிறார்கள்.  பெண் பிள்ளைகள் மட்டுமல்ல, இன்றைய  ஆண் பிள்ளைகளும் மாற்று மத பெண்களுடன் காதல் வயப்பட்டும், மது , சிகரெட் , அந்நியப் பெண்கள் மீது சில்மிஷம் என சீர்கெட்டு ஒழுங்கீனர்களாக உலாவுவது கண்கூடு. ஆனால் இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஆகவே, சம உரிமை பேணும் மார்க்கமாம் இஸ்லாம் வழிமுறை பேணி , ஆண்களையும்  எட்டாம் வகுப்புடன் பள்ளி படிப்பு போதுமென நிறுத்தி மதர்ஸாவில் சேர்த்து தீன் கல்வி புகட்டுவோமா? பாவம் அவர்களும் பெண்களைப் போல் மறுமையின் நன்மையை அள்ளட்டுமே?  ஆண்களாய் பிறந்த ஒரே குற்றத்திற்காக வழி கெட்டு போனாலும் பரவாயில்லை என அவர்களை கண்டுக்காமல்  விடுவது ஆணினத்திற்கு இழைக்கும் அநீதியல்லவோ? வாருங்கள் இருவரின் தவறை உணர்ந்து இரு தரப்பின் கல்வியையும் மூட்டை கட்டி மதர்ஸாவில் கொண்டு போய் சேர்த்து முட்டாள் சமுதாயத்தை உருவாக்குவோம். மதர்ஸாவில் சேர்வது முட்டாள் தனமா என கேட்கலாம்.. தொடர்ந்து வாசியுங்கள்... இன்றைய மதர்ஸாக்களின் நிலையை பின்னர் சொல்கிறேன்.

அடுத்ததாக ஆட்டோ டிரைவருடனும் வேன் டிரைவருடனும் அனுப்புவது குறித்து.. ! மூன்று மைல்களுக்கு மேல் மஹரமின்றி வெளியே செல்லக் கூடாது என்று கூறி வருகிறார்கள். இதன் வரையறை குறித்து சில கருத்துக்கள் உண்டு. போகட்டும்.  இப்போது கேள்விக்கு வரலாம்.   டிரைவருடன் பெண்ணை அனுப்புவது யார் ? பள்ளிக்கு அனுப்ப சரியான ஏற்பாடு செய்து கொடுக்காமல் தன் பொறுப்பை தட்டி கழித்தது யார்?  தகப்பன் எனும் தன் கடமையில் இருந்து தவறி வளைகுடாவில் தன் காலத்தை கழித்தவர் தானே..?  சரி, அவரை குறை சொல்லவும் முடியாது. பொருளாதார தேவை நிறைவேற்றுவது அவரின் கடமை.

ஆனால்..? குடும்ப பொறுப்புக்களை சுமந்து கொண்ட தாய்மார்கள் என்ன செய்கிறார்கள் ? காலைக்கும், மதியத்திற்கும் சேர்த்தே சமைத்து 8மணிக்கு பிள்ளையை அனுப்பியதோடு தன் கடமை முடிந்து விட்டதாய் எண்ணி பக்கத்து வீட்டில் கதை பேசவோ, சன் டிவி சீரியலில் மூழ்கவோ செய்கிறார்கள்.  மாலை மகள் வரும் வரை எந்த கவலையும் இருப்பதில்லை இவர்களுக்கு..ஏன் அவர்களே தன் மகளை தன் நேரடி கண்காணிப்பில் அழைத்துச் செல்ல கூடாது.?  அல்லது திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவை நியமிக்க கூடாது ?  ஆக, எங்கே, யார் மூலம் முதல் தவறு நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். தன் கடமைகளை எளிதாக இன்னொரு இடத்திற்கு கடத்திவிட்டு கல்வி மேல் பழி போடுகிறார்கள். யோசிக்க வேண்டாமா.?  பெற்றோர்களுக்கு  அறிவுரைச் சொல்லாமல் உடனே பெண் கல்வி நோக்கி வருகிறார்கள்.  அது தான் எளிய தீர்வாக அமைந்துவிட்டது இவர்களுக்கு...

பெண்கள் வயதிற்கு வந்ததும் பள்ளி கூடத்தை தீண்டத்தகாத இடம் போல கருதி படிப்பை நிறுத்தி விடுவதால்..எத்தனை, எத்தனை வருங்கால சாதனைப் பெண்களை இச்சமூகம் இழந்திருக்கும் ? ஆயிஷா (ரலி ) வின் அறிவை போற்றும் இச்சமூகம் தான்,  பெண் கல்விக்கு என்று ஒரு குறிப்பிட்ட எல்லை வகுக்கிறது.

ஓர் ஊரில் வருடந்தோறும் 100 மாணவிகள்  கல்வி கற்பதாக வைத்துக் கொள்வோம். அதில் எங்கோ எப்போதோ  சில அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும்.. வயலில் இருக்கும் ஒன்றிரண்டு களைகளுக்காக ஒட்டு மொத்த வயலின் விளைச்சலையும் தடுப்போமா ? ஒன்றிரண்டு பெண்கள் செய்யும் தவறுகளுக்காக மீதமுள்ள பெண்களின் கல்விக்கு தடை விதிப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியல்லவா ?

இருக்கும் பெண்களை எல்லாம் எட்டாம் வகுப்போடும் பத்தாம் வகுப்போடும் நிறுத்தி விடுவதாக வைத்துக் கொள்வோம். வருடந்தோறும் 8ம் வகுப்பு முடித்த 100 ஆலிமாக்களை உருவாக்க முடியும். ஆலிமாக்களை மட்டும் தான் உருவாக்க முடியும். அணுகுண்டு பட்ட இடத்தில் புற்களுக்கு வேலையில்லை என்பது போல் உங்கள் பத்வாக்களால் இஸ்லாமிய பெண்கள் கட்டாயமாக தடம் பதிக்க வேண்டிய துறைகள் பலவற்றுக்கும் வாசல் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டு விடும். அல்லாஹ்விற்கு அஞ்சி சேவை செய்யும் எத்தனையோ பெண்களால் இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களும் பயன் இழப்பர்.

ஓர் உதாரணம் :இராமநாதபுரம் மாவட்டத்தில் மூலைக்கு மூலை பெண் டாக்டர்கள் உண்டு. ஆனால் பிரசவத்திற்கு இராமநாதபுர செய்யதம்மாள் மருத்துவமனையை மக்கள் மதபேதமின்றி நாடி வருகின்றனரே ஏன் ?  அல்லாஹ்விற்கு அஞ்சி அவர்கள் தன் சேவையை செய்வதால்... முழுக்க முழுக்க சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து , முடியாமல் போனால் மட்டுமே சிசேரியன் செய்வார்கள். இதனை எனக்கு சொன்னது  பக்கத்து வீட்டு இந்து மத சகோதரி.

எத்தனையோ கல்லூரி இருந்தும் இஸ்லாமிய கல்லூரியை நோக்கி மக்கள் வருகிறார்களே. ஏன் ? இங்குள்ள நிர்வாகிகள் , பெண்களின் ஒழுக்கத்திலும்,உடையிலும் கவனம் செலுத்துவதால்...   பெண்களுக்கென்று தனி இடவசதியும், பெண் இஸ்லாமிய ஆசிரியையும் நியமிப்பதால்... தன் குழந்தையும் ஒழுக்கத்தை கற்கும் என நம்பி அனுப்புகிறார்கள். இந்த துறைகளில்  முஸ்லிம் பெண்களே இல்லை என்ற நிலையை கற்பனை செய்து பாருங்கள் !!  ஜமாத்தினர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் எல்லாம் தரமற்று இருக்க... பெண்களால் நிர்வகிக்கப்படும் கீழக்கரை , அதிராம் பட்டிணம் மகளிர் கல்லூரிகளின் உச்ச தரத்தை பார்த்தேனும் உங்கள் கருத்துக்களை பரிசீலனை செய்யுங்கள்..

பெற்றோர்கள் தரப்பில் செய்ய வேண்டியவை :

யாரோ ஒருவருடன் பள்ளிக்கு அனுப்புவதை விடுத்து நேரடியாக பெற்றோரோ அல்லது அவர்களால் நேரடியாக நியமிக்கப்பட்ட மணமுடிக்கத் தகாத உறவினர்கள் மூலமாகவோ பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

* பெண் பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் நட்புவட்டம் குறித்தும் செயல்பாடு குறித்தும் நுனிவிரலில் துல்லிய தகவல் பெற்றிருக்க வேண்டும். தான் கண்காணிக்கப்படுகிறோம் என தெரியவரும் பெண்கள் குற்றம் செய்வது குறையும். அதே நேரம் ஹிட்லராக அல்லாமல் பாசமாகவும் தோழியாகவும் இருங்கள்.

தொலை தூரங்களுக்கு மேற்கல்வி படிக்க வைக்கும் சூழல் நிலவினால் பல்லை கடித்துக்கொண்டு மூன்று வருடங்களுக்கு அக்கல்லூரி அருகிலேயே வீடு எடுத்து நேரடி கண்காணிப்பில் கல்லூரிக்கு அனுப்புங்கள். ஹாஸ்ட்டல் பீஸ், சாப்பாடு செலவு , இதர செலவுகள் என பார்த்தால் எல்லாம் சரியாத்தான் வரும்.  மாற்று மத பெற்றோர்கள் இவ்விஷயத்தில் நமக்கு வழிகாட்டி. தன்னால் முடியாத போதும் வீடு வாடகைக்கு பிடித்து பாட்டி தாத்தா கண்காணிப்பில் விடுகின்றனர். தன் பெண்ணுக்கு தேவையான கண்காணிப்பும் கிடைக்கிறது, ஒழுக்க போதனையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் கல்விக்கும் ஒழுக்கத்திற்கான ஏற்பாடுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நமக்கெல்லாம் ஓர் பாடம்.

* இன்றைய கல்வி முறை பெண்களின் திருமண வயதையும் மீறி கல்வி தொடர வைப்பதாக உள்ளது மறுப்பதற்கில்லை. திருமண உணர்வை கட்டுபடுத்தும் பெண்கள் தவறான வழிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. இஸ்லாமும் அதனால் தான் பெண் திருமணத்தை விரைவுபடுத்தச் சொல்கிறது. ஆனால் திருமணத்தால் கல்வி தடைபடும் சூழலும் நிலவுவதால் திருமணம் செய்யவிருக்கும் ஆண்களின் ஒத்துழைப்பும் தேவை. திருமணம் முடித்த பின்னும் கல்வி தொடரச் செய்ய பேருதவி புரிய வேண்டும்.

இன்றைய மேற்கத்திய கல்வி முறை மார்க்க கல்வியை போதிப்பதில்லை என்ற கருத்தும் உண்மையே. அதற்காக கல்வியை தடை செய்வது அதை விட மிகப்பெரும் அபத்தம்.  பெற்றோர்களே நேரடியாக கற்றுக்கொடுக்கலாம், "ஓததெரியாதவங்களாக இருக்கோமே" என பல பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. தமிழிலும் புத்தகங்கள் வந்துவிட்டன. கல்வி தேட வயது வரம்பு தேவையில்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் உங்கள் மார்க்க அறிவை மேம்படுத்த சில மணி நேரங்கள் ஒதுக்கினால் ஓர் வீட்டிற்கு ஓர் தாய் ஆலிமா தயார்.. ஆக பெற்றோர்களும் கற்றுக்கொடுக்கலாம், பகுதி நேர மதர்ஸா கல்விக்கும் அனுப்பலாம்.

பெற்றோர்களே கவனியுங்கள் !

உங்கள் சௌகரியத்திற்காக உங்கள் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்களா ? உங்கள் கடமை குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அசட்டைத்தனத்திற்காக பெண்களின் உரிமையை பறித்துவிடாதீர்கள்.

ஆண்களின் தரப்பிலான இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டியவை :

கரையானிற்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் அறியாத்தனம் மிக மிக குறையானது என்பதை உணர்ந்து சரியான தீர்வை நோக்கி பயணியுங்கள். வட்டி ஹராம் என்றாலும் நிர்ப்பந்தம் காரணமாக அதில் பணபரிமாற்றம் செய்வதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை சொல்கிறோம். நம்மை பள்ளி வாசலில் அனுமதிக்கவில்லை என்பதற்காக மறுமை நலனுக்காகவும் அல்லாஹ்விற்காகவும் அஞ்சி தனி பள்ளிவாசல் கட்டுகிறோம். இப்படியாக மாற்று ஏற்பாடு இல்லாத போது ஹராமை வேண்டா வெறுப்பாய் ஏற்கும் நாம் , தவறான வழிகாட்டலின் போது இறைவனின் உவப்பைப் பெற மாற்று ஏற்பாடாக தனி பள்ளி அமைத்து தீர்வு காண முயலும் நாம் , பெண் என்ற ஒரே காரணத்திற்காக தீர்வுகள் இருந்தும் செய்யாது விடுவது சரியா ?

பெண் குழந்தைகளைப் பற்றி பேசுபவர்கள், தற்கால ஆண்கள் தாம் மணமுடிக்கும் பெண்களைத் தொடர்ந்து படிக்க வைப்பதையும், தகுந்த இடத்தில் வேலைக்கு செல்வதை ஊக்குவிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண் மீதான விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக எளிதான , அதே சமயம் அழிவுக்கான தீர்ப்பை முன்வைப்பதை விடுத்து தொலை நோக்கு பார்வையுடனும் , பின் விளைவுகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையாய் செயல்படும் போக்குடனும் , இஸ்லாமிய முன்னேற்றத்திற்காக தர்க்க ரீதியான தீர்வுகளை  முன் வைக்கும் பக்குவத்துடனும் செயல்பட வேண்டும்.

என்னென்ன செய்யலாம் ?

* பெற்றோர்கள் முதலில் மார்க்க அறிவை வளர்க்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கலாம். இன்றைய முஸ்லிம் பெற்றோர்கள் புர்கா போடுவது மட்டுமே பெண்களின் சட்டம் என நினைக்கின்றனர். மனதை சுத்தப்படுத்தாமல்   உடலை மறைத்து விடுவதால் என்ன பயன் ? பல நாள் சுத்தம் செய்யாத உடலை எவ்வளவு நறுமணம் கொண்டு மறைத்தாலும் அதன் உண்மையான மணம் வெளிப்பட்டு  மற்றோரின் முகச்சுளிப்புக்கு ஆளாக்கி நம்மை தலைகுனியச் செய்வது போலவே அபாயகரமான முறை தான் இது. முதலில் இஸ்லாம் கூறும் பெண் வளர்ப்பை பெற்றோர்களுக்கு போதிக்க வேண்டும்.

* நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். சிறுமிகள் மட்டுமா வழிதவறுகின்றனர் ? பக்குவம் பெற்ற நடுத்தர வயது பெண்கள் வழி கெடுவதில்லையா ? ஆக காரணி என்பது கல்வி அல்ல.. பெண்களிடையே இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. அதை விட மேலாக இஸ்லாமியர்களுடனான தொடர்பு இல்லாமல் இருப்பது. ஆக  ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்களிடையே தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எப்படி ?  தெருவிற்குத் தெரு  பள்ளிவாசல் ஏற்படுத்த முடிந்த நம்மால்  ஊருக்கு ஒன்று வீதம் பெண்களுக்கு தனிப் பள்ளி உருவாக்கி கொடுக்க முடியவில்லை. பள்ளிவாசலை பிரம்மாண்டமாய், விசாலமாய் கட்ட முடிந்த நம்மால் அதில் சிறு பகுதியை பெண்களுக்காக ஒதுக்க முடிவதில்லை.   இப்படி மார்க்க வாசனையே நுகர வைக்க முடியாமல் தடுத்து வைத்திருப்பது நாம் செய்த முதல் பெரிய தவறு.

* பெண்களும் தன் போதனை கேட்க அவர்களின் வசதிக்காக தனி நாளை ஒதுக்கி கொடுத்த நபிகளாரின் வழி வந்த நாம் ஜும்மா உரைகள் கேட்கும் வாய்ப்புகளை  கூட ஏற்படுத்தி தர முடியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒதுக்கி வைப்பதாலையே நம் சமூகம் விட்டு அவர்கள் ஒதுங்குகிறார்கள் என்ற நிதர்சனத்தை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

* இன்றைய நம்மூர்களில் ஜமாத் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் மதரஸாக்களாகட்டும், குர்ஆன் ஓத தெரிந்த பெண்களால் மாலை நேர டியூசன் போல் அமைக்கப்படும் மதரஸாக்களாகட்டும்.. அரபி எழுத்துக்களை கற்று குர்ஆனை ஓத வைக்கவும், ஐந்து கலிமாக்களை மனனம் செய்வதையே தலையாய பணியாக செய்கிறார்கள்.  குர்ஆன் முடித்த மாணவனிடம்  ஃபஜ்ர்க்கு எத்தனை ரக்அத் என கேளுங்கள்.. இன்றைய மதரஸாக்களின் தரம் புரியும்.  மார்க்கத்தையே முழுமையாக போதிக்கத் தவறும் இந்த அமைப்புகளாலா உலக கல்வியை போதிக்க முடியும் ? முதலில் இவற்றை சரி செய்து ஒழுக்கத்தையும் மார்க்க சட்டத்தையும் போதிக்கும் இடமாக மாற்ற வேண்டும்.

உலகக் கல்வியை கற்றுக் கொண்டே மார்க்கக் கல்வியை மாலையில் கற்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். உலக கல்வியுடன் சேர்த்து மார்க்கக்கல்வியும் போதிக்க வைக்க வேண்டும்.  பெண்களுக்கு போதிக்க தனி இடம், தனி ஆலிமா உருவாக்கி தர வேண்டும். இவை அசர் தொடங்கி இஷா வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு பேட்ஜ்களாக வைத்து வசதிபட்ட நேரத்தில் வகுப்பில் கலந்துக்கொள்ளும் படி  செய்ய வேண்டும்.  இவ்வசதி இல்லாததால் தான் பள்ளி படிப்பில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். அல்லது வயதுக்கு வந்ததும் மதரஸாவுக்கு அனுப்புவதை நிறுத்தி விடுகின்றனர்.

* ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிகூடங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  அவை இல்லாத ஊரில் பெண்களுக்கான மார்க்ககல்வி +உலகக் கல்வி போதிக்கும்   புதிய பள்ளிகூடங்கள் ஏற்படுத்தி அவை ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் குறைந்த கட்டண வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.


கீழக்கரை, அதிராம் பட்டிணம் போன்ற ஊர்களில் இருக்கும் இஸ்லாமிய கல்வியை சேர்த்து போதிக்கும் மகளிர் கல்லூரிகளை போல் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலாவது அமைக்க வழிசெய்து நம் பெண்களை அக் கல்லூரிகளில் பயில வைக்க வேண்டும்.

* இஸ்லாமிய நூலகங்கள் அமைத்து பெண்களும் பயன்படுத்தும் வண்ணம் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு வகையிலும் இஸ்லாமிய பெண்களின் மார்க்க அறிவை மேம்படுத்தி இறையச்சத்தை அதிகமாக்க வேண்டும்.

விடுமுறை நாட்களில் வாரந்தோறும் பயான்கள் பெண்களுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.  பெண்கள் பயான் என்றதும் பழைய மாவையே அரைக்காமல் நாட்டு நடப்பையும் போதித்து , இன்றைய இளைய தலைமுறையினர் செய்யும் தவறுகளால் விளையும் தீமைகளையும் எச்சரிக்கைகளாக கூறப்பட வேண்டும்.

* பள்ளிக்கூடத்திற்கு தடை போட்டால் தான் ஆலிமா பட்டம் பெற முடியும் என்ற நிலையை மாற்றி பகுதி நேர கோர்ஸ்கள் மூலம் ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணையும்  ஆலிமாக்களாக்கலாம்.  எட்டாம் வகுப்பு படித்த ஆலிமாவை விட இன்சினியரிங் முடித்த ஆலிமாவால் இன்னும்  சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும் அல்லவா.? நம்மை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சிகளை புரிந்துக்கொள்ள முடியுமல்லவா.?  உலக அரசியலை அறிந்து தக்க விழிப்புணர்வை உருவாக்கும் அல்லவா..?

* மாற்று மத ஆண்களின் வேன்களில் அனுப்புவதால் கவர்ந்திழுக்கும் அச்சம் நிலவினால் அதற்குரிய மாற்று ஏற்பாட்டையும் செய்து கொடுக்கலாமே.. ஊரில் எத்தனையோ  இஸ்லாமிய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களைக் கொண்டு ஜமாத் நிர்வாகத்தினர் வாகன வசதிகளை ஏற்படுத்தி அதற்குரிய தொகையை பெற்றோர்களிடம் வசூலிக்கலாம்.

இப்படி எத்தனையோ வழி இருந்தும் கண்டுக் கொள்ளாமல் எளிதாக பெண் குழந்தைகளின் கல்வியில் கை வைக்கிறோம். இது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் ?

பெண்களுக்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட பெண்களின் நிர்வாகிகளே ! எங்கள் உரிமையை பறிக்க அனுப்பப்பட்டவர்கள் இல்லை நீங்கள் !   நிர்வாகம் என்பது  நேர்த்தியாய்  நடத்தப்பட வேண்டியது, உங்கள் கீழ் இருப்பவர்களை அடிமைகளாக பாவிப்பதற்காக எம் அதிபதி உங்களுக்கு அப்பொறுப்பை வழங்கவில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் இருந்து தவறினால் படைத்தவனிடம் பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.எங்கள் உரிமையை பாதிக்காத வகையில் எங்களை வழி நடத்துவதே உங்கள் கடமை. அல்லாஹ் கொடுத்த பணியை நேர்த்தியாக செய்து முடிப்பதை விடுத்து உங்கள் சௌகரியத்திற்காக இலகுவாக்க முயற்சிக்கிறீர்கள். மறுமை வெற்றி எளிதாக கிட்டும் என்ற நம்பிக்கையா ?

உங்களுக்குரிய பணிகளை முதலில் செய்யுங்கள்.... பள்ளிப்படிப்பை கை விட்டால் தான் ஒழுக்கம் மலரும் என்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையும் பிரச்சாரங்களையும் கைவிடுங்கள். கல்வியறிவு இல்லாத எம் பாட்டிகளால் தான் எம் தந்தைகளை பாலைவன அனலில் கொதிக்க வைத்தோம்.   கல்வி விழிப்புணர்வு இல்லாத எம் தாய்மார்களால் தான் எம் சகோதரர்களை வளைகுடாக்களின் வளர்ச்சிக்கு தாரை வார்த்துக்கொடுத்தோம். கல்வியறிவை மறுத்ததன் காரணமாகத் தான் கணவனால் கை விடப்பட்ட எம் சகோதரிகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளினோம்.  கல்வி தடை செய்ததால் பீடி சுற்றும் தொழிலுக்கு எம் இளைய சமுதாயத்தை கொத்தடிமைகளாக்கினோம்.

அறிவுரை சொல்வது எளிது. அதன் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு இங்கே இருக்கும் நாம்  பொறுப்பேற்கப் போவதில்லை . இனியாவது உணர்ச்சி வசப்படுதலில் கொட்டும் பிரயோசனமற்ற பத்வாக்களை விடுங்கள்... பெண்கள் அவர்களின் உரிமையை பெறட்டும்.

உங்கள் சகோதரி
ஆமினா.

read more "இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)"

Sunday, May 10, 2015

இஸ்லாத்தில் அனுதினமும் அன்னையர் தினமே!


"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது" பெண்மையைப் போற்ற மகிழ்விக்க இதைவிட அற்புத வாசகம் எதுவும் அவசியமில்லை.


பெண்களைப் பெருமைப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும், இறைவனால் அளிக்கப்பட்ட கௌரவமே தாய்மை. பெண்களுக்கு அதிகப்படியான வேதனை என்பதெல்லாம் உருவகப்படுத்தப்பட்டதே.

இறைவன் எந்த ஜீவனுக்கும் சக்திக்கு மீறிய வேதனையைத் தர மாட்டான். மிகவும் பலவீனமாக பெண்களைப் படைத்து, உச்சபட்ச வலியைத் தாங்கும் சக்தியை தந்த இறைவன் எவ்வளவு மகத்தானவன்?

பெண் குழந்தைகளை பால்ய பருவத்திலிருந்தே, பின்னாளில் பிரசவ வலியைத் தாங்குவதற்காக, அதை சாப்பிடு இதை சாப்பிடு என்று அந்நிகழ்வைப் பயமுறுத்தியே வளர்க்கிறார்கள்.

தாய்மை என்பது முழுக்க முழுக்க அனுபவித்து மகிழக்கூடிய ஒன்றே.நான்காவது மாதத்தில் ஏற்படும் முதல் துடிப்பும், அதன் பின்பு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், கடைசி இரு மாதங்களில் அதிகப்படியான உதையும் துள்ளலும் சந்தோஷ பிரளயம்.

மண்ணிலிருந்தும், பின் விந்திலிருத்தும் நாமே படைத்தோம். அலக் என்ற தசைக்கட்டியாக்கி உயிரூட்டி, எலும்புகளுக்கு சதைகளை அணிவித்தோம் என இறைவன் அழகாகக் கருவறை நிகழ்வுகளை திருமறையில் சொல்கிறான்.

அழகான, அற்புத செயலை கேலிக்கூத்தாக்கும் வகையில் "வாடகைத்தாய்" என்னும் பெயரில் கொச்சைப் படுத்துவது காலத்தின் கோலம்.

தாய்க்குக் கொடுக்க வேண்டிய மரியாதை பற்றி நபிகளார் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

"மனிதர்களுள் யாருக்கு நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” நபித்தோழரின் வினா.

"தாய்" என்றார்கள் நபிகளார்.

அடுத்து யார்? என அவர் கேட்க, தாய் என்றே கூறினார்கள்.

மூன்றாவது முறையாகவும் தாய் என்றே பதிலளித்த நபிகளார் நான்காவது முறை தந்தை என்றார்கள். (புகாரி. 4979)


ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய், தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையை விட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம்.

"அவனுடைய அன்னை அவனை சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள்.சிரமப்பட்டுத்தான் அவனை பெற்றெடுத்தாள். மேலும் அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.(அல் குர்ஆன் 46:15)

குழந்தைக்குத் தாய் செய்யும் தியாகத்தை அவள் பாக்கியமாக கருதுகிறாள். குழந்தைக்கு நோயென்றால் தான் பத்தியம் இருக்கிறாள். நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாத போது நலமாயுள்ள தாய் தானும் சிறிது குடிக்கிறாள்.ஏன்? குழந்தை, தனக்கும், தாய்க்கும் ஒரே நோய்தான் என்றெண்ணி ஆறுதல் அடைவதற்காக.

"தாய் தந்தையரிடம் மிகக் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை "சீ" என்று கூட கூறாதீர்.மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர்.மாறாக அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக (17:23)என்று திருமறையில் எடுத்தியம்புகிறான்.

வீட்டின் பெயரோ அன்னை இல்லம், அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பதே சில இடங்களில் இன்றைய நிலை.

உபரி வணக்கங்களை மிக அதிகமாக ஊக்குவிக்கும் அதே சமயம், இத்தகைய வணக்கங்களை விடவும் தாய்க்கு நன்மை செய்வதற்கு இஸ்லாம் முன்னுரிமை அளிக்கிறது.

அன்னையின் அருமையை வருடந்தோறும் மட்டுமின்றி, நாள்தோறும் உணர்ந்து பெருமைப்பட கண்டிப்புடன் வலியுறுத்துகிறது இஸ்லாம்.

இத்தகைய நிலைகளில் நம் அனைவருக்கும் உதவி செய்து.....பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் நற்பாக்கியத்தை நமக்கு இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பில் ஆலமீன்!

உங்கள் சகோதரி,
சித்தி நிஹாரா.
read more "இஸ்லாத்தில் அனுதினமும் அன்னையர் தினமே!"

Thursday, May 07, 2015

சாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா (பாகம் 2)அறிமுகமாகிறது இஸ்லாம்:தேடல்களுக்கு விடை கிடைக்கிறது


ஆச்சாரமான , கட்டுக்கோப்பான குடும்பத்தில்  தான் சகோதரி காயத்ரி பிறந்தார். பல சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு ஊடே தான் அவர் பால்ய காலம் நகர்ந்தது. எப்படி பல கடவுள் இருக்க முடியும் என்ற அவரின் கேள்விக்கு வீட்டினர் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ”இப்படியெல்லாம் சொல்லகூடாது. சாமி அடிக்கும்” என அம்மாவின் அதட்டல்கள் சிறுமியின் சிந்தனைக்கு பூட்டுப்போடவில்லை. பல கடவுள் இருக்க வாய்ப்பே இல்லை எனும் உறுதியுடனேயே இளமைக்காலம் கழிந்தது. டாக்டரான தந்தை, தன் மகளுக்கு சிறப்பான கல்வியை வழங்கியதன் விளைவாக Msc முடித்து 1988 ஜூலை 29 ல் கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் பேராசிரியையாகப் பணி தொடர வந்தார். அப்போதைய இஸ்லாமிய சூழல் சகோதரிக்குள் இனம்புரியாத ஈர்ப்பைத் தந்தது. ”லா இலாஹ இல்லல்லாஹ்”*- என்ற வாசகம் அவரின் நீண்ட நாள் தேடலுக்கு விடை கொடுத்தது. காலை நேர கல்லூரி வணக்கத்தில் ஒவ்வொரு நாளும் குர்ஆன் வசனங்கள் தமிழ் அர்த்தத்துடன் சொல்லப்படுவது வழக்கம். அவையெல்லாம்  அந்த இளம் பெண்ணின் மனதை ஊடுருவிச் சென்றது. தொடர்ந்து நான்கு வருடம் இஸ்லாம் குறித்து ஆராய்ந்தார். 

1991ல் ஒருமுறை அவரின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போக மிகுந்த இக்கட்டான நிலையில் இருப்பதாக மருத்துவர்களும் கைவிட முதன் முறையாக அல்லாஹ்விடம் மன்றாடினார்.  முதன்முறையாகத் தன்னிச்சையாக அவர் மனம் தொழுகையை நாடியது. அவரின் பிராத்தனையை அல்லாஹ் அங்கீகரித்துக்கொண்டான். அன்னை வெகு விரைவில் பூரண குணமானார். இனியும் தாமதிக்க கூடாது என நினைத்த அந்த பெண்மணி நேராகச் சென்றது அப்போதைய தாசீம் பீவி கல்லூரி முதல்வரான சகோதரி நபிஷா-கலீம் அவர்களிடம். தான் முஸ்லிம் ஆக விரும்புவதை சகோதரி சுமையா தெரிவித்ததும் அந்த முஸ்லிம் பெண்மணி உடனே சந்தோஷப்பட்டுவிடவில்லை. அறிவுரை வழங்கினார். ”நீ இன்னும் திருமணமாகாதவள், உன் இந்த முடிவால் உன் வாழ்க்கையின் பாதை மொத்தமாக மாறக்கூடும், உன்னால் இவையெல்லாம் சமாளிக்க முடியுமா என முதலில் யோசனை செய்துகொள். ஒன்றும் அவசரமில்லை, நிதானமாக முடிவெடு” என சமாதானப்படுத்தினார். தன் முடிவில் உறுதியாய் இருந்த அந்த திடப்பெண்மணி பிடிவாதமாய் நின்றார். நவம்பர் 5, 1991ல் சகோதரி நபிஷா கலீம் அவர்களையும் இன்னும் சிலரையும் சாட்சியாக வைத்து கலிமா ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார். அவர் முஸ்லிமாக மாறிய விஷயம், ஏழு மாதங்கள் வரை அவரது வீட்டினருக்குத் தெரியாது. 

வீட்டினருக்குத்  தெரிய வரும்போது  நீங்கள் நினைத்து வைத்திருக்கும் அதே சூறாவளி, பூகம்பமெல்லாம் நிகழவே செய்தது. ஆனால் இஸ்லாமிய ஆணிவேர் ஆழமாய் வேரூன்றிய ஆலமரமாய் நின்ற சகோதரி சுமையாவை அவை சிறிதும் அசைத்துப்பார்க்கவில்லை. தன் கொள்கையில் உறுதியாய் நின்றார். அவர் எண்ணமும் உறுதியும்  போலவே அவருக்கு சிறப்பான வாழ்வை அல்லாஹ் அமைத்துக்கொடுத்தான்.  இன்று அவர் ஓர் ராஜ்ஜியத்தின் ராணி. அவரை அல்லாஹ் கண்ணியபடுத்தினான். சகோதரியைப்  புரிந்துகொள்ளகூடிய முஸ்லிமான சேக்தாவூத் அவர்களை  கரம்பிடித்தார். அவர் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொதுமேலாளராக உள்ளார். ஆரம்பத்தில் வெறுத்த குடும்பத்தினர், தன் மகள் சமூகத்தில் கண்ணியத்துடனும், பேரும் புகழுடனும்  நடத்தப்படுவதைப் பார்த்து,கோபம் மறந்து சமாதானமாயினர்.  சகோதரி சுமையா தன் தாயைப் பற்றி பகிர்ந்த போது , அல்லாஹ் அவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும் என அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். அவரின் ஏக்கம் புரிந்தது. சுவனத்தின் வாசனையைத் தன் தாய்க்கும் கிடைக்க எந்த ஒரு மகளும் விரும்பத்தானே செய்வார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்** வழங்க துஆ செய்வோம். 

பழைய நினைவுகளில் இருந்து மீண்டபோது சகோதரி சொன்ன வார்த்தை வாயடைக்கச்செய்தது. “யாரைப் பார்த்து இஸ்லாமிய சூழலை விரும்பினேனோ அதே மக்கள் ஷிர்க்கில் இருப்பது நினைத்து வேதனையாக உள்ளது.”. அனைவரையும் நேர்வழிபடுத்த அல்லாஹ் போதுமானவன். சுமையா-சேக்தாவூத் தம்பதியினருக்கு இரு குழந்தைச் செல்வங்களை அல்லாஹ் அருளினான். மூத்தவர்  சென்னை ராமசந்திராவில் MBBS படிக்கிறார், இளையவர்  டெல்லியில்  I.I.T ல் படிக்கிறார். 

இஸ்லாம் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?


இந்துவாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள். ஆக இரண்டு சூழலுக்கும் இடையேயான நிலைமை உங்களால் உணர முடியும். இஸ்லாம் என்ற கட்டுபாடு உங்கள் அறிவுக்கு எல்லை விதிப்பதாக நினைத்ததுண்டா? என்று வினவினோம். ”நிச்சயமாக எந்த எல்லையையும் விதித்ததில்லை. மார்க்கத்தின் வழிமுறைகள் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் அவன் கடமை என்ன என்றும் சீரான முறையில் கோடிட்டு காட்டியுள்ளது. இஸ்லாம் என்ற வழிமுறை சிறப்பாக வாழ வழி வகுத்துத்தரும் மார்க்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படும் முஸ்லிம்கள் இஸ்லாம் என்ற கட்டுபாட்டை சுமையாக நினைக்கமாட்டார்கள். முன்பை விட இஸ்லாம் எனக்கு மிகச் சிறப்பான சுதந்திரத்தைத் தந்துள்ளதை என் நடைமுறைகளிலிருந்தே உணர்கிறேன்” என தீர்க்கமாகப் பதிலளித்தார். 

”இஸ்லாம் தான்  என் தனிதன்மை...  ஹிஜாப் தான் என் அடையாளம்... தொழுகை     என் உரிமை, இவற்றை  இழக்க எப்போதும் நான் தயாராக இருப்பதில்லை.  என்னால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் என் உரிமையை விட்டு கொடுக்க முடியாது,  தொழுகை என் பணிகளை குறிக்கிடுமே தவிர என்றுமே அலுவல் பணிகள் என் தொழுகையில் குறுக்கிட விடமாட்டேன். இதில் எவ்வித விட்டுக்கொடுத்தலும் கிடையாது” எனவும் விளக்கினார்.


தாசிம்பீவி கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத்


மேற்கொள்ளும் ஆய்வுகள்:


சகோதரி சுமையாவின்  துறை உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகும். அதில் படித்து, பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கிகொண்டிருப்பது மட்டுமே தன் படிப்பின் நோக்கம் அல்ல என்ற உறுதியுடன் இருந்தவர், அத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள விரும்பினார். இன்று நடைபாதை கடைகளில் உணவு உண்ணும் கலாச்சாரம் அதிகமாகப் பரவிவிட்டது. யாத்ரீகர்கள், பயணிகள், மக்கள் அதிகம் வரக்கூடிய இடங்களான மதுரை, ராமேஷ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுமார் சுமார் 400 உணவு தயாரிப்பாளர்களை சந்தித்து அவர்கள் தயாரித்து அதில் 200 தயாரிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள்  விற்கும் உணவுகளை ஆராய்ந்து ஆய்வு கட்டுரை சமர்பித்தார். இந்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுடன் நில்லாமல் மதுரையில் 50 உணவு தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி எவ்வாறெல்லாம் சுத்தமான மற்றும் ஆரோக்யமான உணவுகளைத் தர வேண்டும் என்பது குறித்தும்  HACCP வழிமுறைகளை பற்றியும் பயிற்சி அளித்தார்.  அரசு சார்ந்த கூட்டமைப்பாக இதனைக் கொண்டு வந்தால் தான் சுகாதாரத்தைக் கடைபிடிக்க முடியும் என்ற தீர்வையும் முன்வைத்தார்.  

அதுமட்டுமா? கடற்பாசிகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்துகிறார். இராமநாதபுர மாவட்ட கடல்களில் எளிதாய் கிடைக்கும் கடற்பாசி குறித்தான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை. 198 வகையான கடற்பாசி இனங்கள் கல்ப் ஆஃப் மன்னாரில் மட்டும் உள்ளது. சைனா,  ஜப்பான் போன்ற நாடுகளில் பதப்படுத்தி உணவுகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். சாலையோரக் கடைகளிலும் கூட கடற்பாசி கொண்டு தயாரிக்கப்படும் சாசேஜ் வகைகள் அதிகம் விற்கபடுகின்றன. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு மைக்ரோ நியூட்ரிஷன் டெபிசியன்சி தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடற்பாசியில் அதிகபடியான தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நிச்சயம் கடற்பாசி அதற்கு தீர்வாக அமையும். இது குறித்து தொடர்ந்து ஆறு வருடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இன்னும் 4 வருடங்களுக்குள் கடற்பாசிகளைக் கடற்கரைகளில் வளர்க்கவும், பதப்படுத்துவதற்குமான தொழில்நுட்பம் இராமநாதபுர மாவட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றும் உந்துதலுடன் முயற்சித்து கொண்டிகிருக்கிறார். அவரின் முயற்சியால் கடற்பாசி கொண்டு சாக்லேட் தயாரித்து PATENTற்கும் பதிவு செய்ய IPRற்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாஷா அல்லாஹ். வாழ்த்துகள் சகோதரி.

இந்தியாவில் இயற்கையாக விளையக் கூடிய தாவரங்கள், மூலிகைகள் விஷயங்கள்  நமக்குத் தெரியாமலேயே உள்ளது. அவையெல்லாம் ஆராய்ந்து அவற்றை கொண்டு புட் ப்ராடெக்ட் டெவலப்மெண்ட் பண்ண வேண்டும்,  மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பது சகோதரியின் ஆவல். அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.   இந்திய நாட்டில் கிடைக்கும் வளங்களை கொண்டு குழந்தைகளுக்கான மைக்ரோ நியூட்ரியன்ட் டெபிசியன்சியை கட்டுபடுத்தவும்,  ஒழிக்கவும் தேவையான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார். 

இப்படி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் நீங்கள் என்றாவது ”சராசரி பெண்ணாய் நாமும் இருந்திருக்கலாமே” என  நினைத்ததுண்டா ? என கேட்டோம், “நான் என்றுமே அப்படிபட்ட எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. இறைவன் கொடுத்த அல் ஹிக்மாவை நாம் வீணாக்கியும் சரியான முறையில் அதை உபயோகப்படுத்தாமலும்  இருந்தால் இறைவன் நம்மை மறுமையில் நிச்சயமாக கேள்விக்கணக்கு கேட்பான். ஆக எந்த இக்கட்டான சூழ்நிலை வந்த போதும் அனைத்தையும் தூக்கிவிட்டு முடங்கி கிடக்க ஒருபோதும் நான் விரும்பியது கிடையாது” என்ற பதிலில் இஸ்லாமியக் கோட்பாடுகளுடனான சமுதாய சிந்தனையும் கலந்துவந்தது. 

ஆற்றிவரும் சமூகப்பணிகள்:


2000 ஆம் ஆண்டில் சீதக்காதி  தன்னார்வ தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டு அதனைத் தமிழக அரசின் தமிழ்நாடு விமன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் கீழ் பதிவு செய்து அதன் மூலம் உதவிகள் செய்து வருகிறார். தற்சமயம் சீதக்காதி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஆபிசராக உள்ளார். இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து வட்டியில்லா கடன் மூலம் சமூகத்தில் புறக்கணிக்கபட்ட பெண்களின் மறுமலர்ச்சிக்கு உதவி வருகிறார். பலவிதத் திறன் நோக்கு பயிற்சிகளை வழங்கி,பெண்களிடையே தைரியத்தை விதைத்து அவர்களை தொழில்முனைவோராக மாற்றி வருகிறார் .

இவ்வளவு கேட்டுவிட்டு இஸ்லாமியப் பெண்மணி பற்றி கேட்காமல் இருக்க முடியுமா? கேட்டே விட்டோம். ”நீங்கள் தொடர்புகொள்ளும் முன்பே நான் சில முறை தளத்தை பார்த்துள்ளேன்.  பல இஸ்லாமிய பெண்கள் இத்தளத்தில் பங்காற்றி கருத்துக்கள் பகிர்ந்து வருவதை கவனித்தேன். சிறப்பான முறையில் இத்தளம் வளர்வதாக உணர்கிறேன்.  சிறப்பாக இதனை நடத்திகொண்டிருக்கிறீர்கள். இதை மேலும் முன்னெடுத்துச் செல்வது மற்ற இஸ்லாமிய பெண்ளுக்கும் நன்மை பயக்கும் விஷயமாகவும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகிறேன்” என்றார். பல லிட்டர் சாத்துகுடி ஜூஸ் குடித்த தெம்பு இப்போது. அவரின் முன்னேற்றத்திற்கும், இன்னும் பல சாதனைகள் படைத்து நம் சமூக்கத்திற்கு பயன்தருவதற்கும், இம்மை மறுமை வெற்றிக்கும் கட்டாயம் துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே!


பேட்டி & ஆக்கம் :
ஆமினா முஹம்மத் 
தொடர்புகொள்ள உதவியவர்கள்:
அன்சார் மீரான், ஜெஹபர் சாதிக்
கூடுதல் தகவல் உதவி:
சகோதரி ராபியா,கீழை இளையவன் ப்ளாக்ஸ்பாட்,பர்வின்பானு,Dr.sumayaa official fb page
போட்டோ உதவி:
நாகூர் மீரான்

*லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரிய இறைவன், அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை

** ஹிதாயத் - நேர்வழி
read more "சாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா (பாகம் 2)"

Monday, May 04, 2015

சாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)இன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜாப் அடிமையின் சின்னமாகவும், முஸ்லிம் பெண்கள் பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகவும் இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஒன்னரை கிலோ பெறுமானமுள்ள  கேவலம் துணியா ஒரு பெண்ணை  சிறைப்படுத்த முடியுமென்பதை அவர்கள் அறிவதில்லை. இவர்களுக்கு   விளக்கம் கொடுப்பதை விடவும் வாழும் உதாரணங்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் அல்லவா... அமெரிக்காவில் வாழும் ஆமினா அசல்மியையோ பிரிட்டனில் வாழும் யுவான்னையோ அழைக்கப்போவதில்லை. இதோ ! இதே தமிழ்நாட்டில்  பிரபலமாய் இருக்கும் இஸ்லாமிய பெண்மணிகளை “சாதனைப் பெண்மணி” எனும் பகுதியில் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அந்த வரிசையில் நாம் இன்று  பார்க்கபோகும் ஆளுமை கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர் DR. சுமையா.  முதலமைச்சரிடம் விருது பெற்ற சகோதரி. சுமையா


கீழக்கரையை தாண்டி  இராமநாதபுர மாவட்டத்தில்  பல  இஸ்லாமியர்களால் அதிகம் அறியப்படுபவர் சகோதரி சுமையா.  சத்தமில்லாத புரட்சி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிறு சிறு உதவிகளுக்குக் கூட கேமரா, வீடியோ  உட்பட மீடியாவையே துணைக்கு  அழைத்துச்செல்லும் இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியில் 15 வருடங்களாக இவரின் சாதனைகள் யாவும் பொது நலனை மட்டுமே சார்ந்திருக்கிறது. தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அவர் முயற்சிக்கவில்லை, அல்லாஹ்வின் உவப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இடைவிடாது உழைத்தார். விருதுக்கும் புகழுக்கும் முயற்சிக்காமலேயே முதலமைச்சரிடம்  ”பெஸ்ட் சோஷியல் வொர்க்கர்” விருது வாங்கும் நிலைக்கு உயர்ந்தார். விருது வாங்கிய அந்த நிமிடம் பற்றி கேட்ட போது  அவர் சொன்ன பதில் ,  “அன்று சரியாக லைலத்துல் கத்ர் ஒற்றைபடை நாள். நோன்புடனேயே விருது பெற்றேன்.  நான் செய்த காரியங்களை அல்லாஹ் அங்கிகரித்து எனக்கு வழங்கிய பரிசாகவே இதனை நினைத்தேன். என் பொறுப்புகள் இன்னும் ஏராளமிருப்பதையும் எனக்கு உணர்த்தியதாக கருதுகிறேன்”. 

2012ல் மாவட்ட சமூக நலத்துறை வழியாக ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அவர்களால்  சகோதரி பெயர்  பெஸ்ட் சோசியல் ஒர்க்கர் அவார்ட்க்கு பரிந்துரைக்கப்பட்டது. மொத்தம் 32 மாவட்டங்களில் இருந்தும்  இதே போல் 32 பெயர்கள் பரிந்துரைக்கபட்டு இறுதியில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் சகோதரி சுமையாவும் ஒருவர்.  பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காகவும், சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதற்காகவும்   இவரின் சேவையை பாராட்டி   2012 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின நிகழ்ச்சியின் போது தமிழக முதலமைச்சர் கையால்   சிறந்த சமூக பெண்மணி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். ”கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி-  இந்த இரண்டும் என்னை   இந்த நிலைக்கு வர வழிவகை செய்தது. வாழ்வின் ஒவ்வொரு அடுத்த கட்ட நகர்தலில் இவை இரண்டுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பையும்  துணைக்கு அழைத்துகொள்வேன்” என்றார் நிதானமாக.  

அவரைப்பற்றி வந்த தகவல்கள் ஆச்சர்யத்தை விதைக்க உடனே அவரைத் தொடர்புகொண்டோம். நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.

தீன் கல்வியில் திளைத்து வளரும் தாசிம்பீவி கல்லூரி மாணவிகள்:


முஸ்லிம்கள் நிரம்பிய கடற்கரை ஊர் கீழக்கரை.  தாசீம் பீவி மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தால் இஸ்லாமிய மணமும் நாளைய சாதனைப்பெண்களான மாணவிகளும் நிரம்பியிருக்கும்  சூழல் நம்மை வரவேற்கும். ஒரு பக்கம் உலகக் கல்வி, இன்னொரு பக்கம் குர் ஆனை ஓதும் மாணவிகள். இஸ்லாமியப் பெண்களுக்கென்று தனியாக என்னென்ன வகுப்புக்கள் நடத்தி வருகிறீர்கள் என விசாரித்தோம். ”முபல்லிகா என்ற  3 வருட பட்ட படிப்பை கட்டாய கல்வியாக எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் எங்கள் வளாகத்தில் இலவசமாகக் கற்கவைக்கிறோம். குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தீனியாத் வகுப்புப் பாடத்திட்டங்கள் அன்றாடம் விடுதியிலேயே நடத்தபடுகின்றன. தஜ்வீதும் உடன் ஓத பயிற்சி கொடுக்கிறோம். தர்ஜுமாவுடன் குரானைப் புரிந்து ஓத ஊக்கப்படுத்துகிறோம்” என்று தன் செயல்திட்டங்களையெல்லாம் சகோதரி ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்ல வியப்பே மிஞ்சியது. சுப்ஹானல்லாஹ். 

ஐவேளையும் தவறாது கேட்கும் பாங்கு சத்தம் அதே கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியிலிருந்து ஒலித்தது.  மாணவிகள் வேகமாய்ப் புறப்படுகிறார்கள், ஜமாஅத்தாய் தொழுவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தால் இமாம் தொழுகை நடத்த ஆயத்தமானார். ஆச்சர்யம் மேலிட்டது.  தொழுகையின் அவசியத்தையும் கட்டாயத்தையும்  உணர்ந்து கல்லூரி வளாகத்திலேயே தொழுகைக்கென்று  கட்டிடத்தை நிறுவியது  மட்டுமல்லாமல்  இமாம் நியமித்து ஜமாஅத் தொழுகை நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்ததை பார்த்த மாத்திரத்தில் சகோதரி சுமையாவின் ஆளுமை வெளிப்பட்டது. இந்த வருடம் தான் நிறுவனர்  மர்ஹூம் அல் ஹாஜ் அப்துர் ரஹ்மான் அவர்களின் பெயரால் தனியாக பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவப்பட்டதாக சகோதரி விளக்கினார். அடடா பெண்கள் ஜமாஅத்தாய் தொழும் பாக்கியம் தமிழக முஸ்லிம் பெண்கள் எத்தனை பேருக்கு கிட்டும் ?  ஒரு பெண்ணிற்குத் தானே இன்னொரு பெண்ணின் ஏக்கம் புரியும். தன் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்லூரியில் மாணவிகளின் மீதான தன் அணுகுமுறையை சகோதரி சுமையாவிடம் கேட்ட போது  ”ஒரு பெண் எப்படி வாழ வேண்டும்,  எவ்வாறான கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட அடையாளங்களுடன் சமுதாயத்தில் வலம் வர வேண்டும்  என்பதை கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே உலக கல்வியோடு பெண்களின் எதிர்கால சமுதாய வாழ்வுக்கும் சேர்த்து பொறுப்பெடுத்துகொள்வது எங்கள் அணுகுமுறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. கல்வி மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கநெறிகளை போதிப்பதில் மிகுந்த கவனத்தை செலுத்துகிறேன். ” என்றார். 

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மாணவிகளைத் தயார்படுத்துதல்:


இஸ்லாமியப் பெண்களிடத்தில் காணப்படும் தற்போதைய கல்வி வளர்ச்சி மற்றும் மார்க்க அறிவு குறித்துத் தனது பார்வையைச் சற்று ஆதங்கத்துடன் சகோதரி பகிர்ந்தார்.  ”பொதுவாக பெண்களின் நிலைகளை விசாரித்தால் வேதனையே மிஞ்சுகிறது. "கணவனுக்கு வேலை இல்லை, விட்டுட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டார், 2 குழந்தைகளை விட்டு இறந்துவிட்டார், குடும்பத்தை வழிநடத்த சிரமமாய் உள்ளது" என ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னும் ஒரு கண்ணீர்க் கதை உள்ளது. முஸ்லிம் பெண்களோ கல்வியறிவு இல்லாததால் வெளிவரவும், பேசவுமே கூச்சபடுகிறார்கள். கல்வியின் அவசியத்தை உணராத பெண்கள் வாழ்வின் துயரங்களின் போது கல்வி இழப்பை எண்ணி வருந்துகிறார்கள். இவர்களில் பலரிடத்திலும் மார்க்க அறிவு என்பதும் குறைவாகவே இருக்கிறது.  இளம் பெண்களை பொருத்தவரை பெரும்பான்மையான  பெற்றோர்கள் தன் மகள் சிறந்த முறையில் பட்டப்படிப்பு பெற வேண்டுமென நினைக்கிறார்களேயொழிய  மார்க்க அறிவை வளர்க்க தாய் தந்தை சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை.  ஆகவே இதன் அவசியத்தை உணர்ந்து உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பாடதிட்டங்கள் நடத்துகிறோம். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கவும் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இருவகைக் கல்வியும் எத்தி வைப்பதால் எங்கள் கல்லூரி  மாணவிகளின் பெற்றோர்களும்  திருப்தியடைகிறார்கள். எங்களை மேலும் சீரிய வழிகளில் பயணிக்க அல்லாஹ் பேரருள் புரிவானாக. எங்கள் கல்லூரி விட்டு, வெளி செல்கையில் முழுமையான பெண்ணாகவே இந்த சமுதாயத்திற்கு ஒப்படைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறேன்” என முடித்தார்.   நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல்மாடல் இருக்கலாம். ஆனால் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சகோதரி சுமையா தான் ரோல் மாடல் . 

கல்லூரியைச் சாதனைகள் நோக்கிக் கொண்டு செல்லும் திறமைவாய்ந்த முதல்வர்


ஒரு பெண்ணாக , 27 வருடங்களாக கல்வித்துறையில் இருப்பதில் சந்தித்த சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என வினவிய போது , “இறைவன் தந்த ஞானமும் அறிவும் எனக்கு  இந்த துறையில் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. தொழுகை என்ற கவசத்தோடு வலம் வருவதால்  எத்தனை சவால்கள் வந்தாலும்  அவை எனக்கு சுமையாக இல்லை. தொழுகையைக் கொண்டும் , பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோருவேன்” என்ற அவரின் அமைதியான பதிலில் வெளிபட்ட ஈமான் நிச்சயம் துவண்டு இருக்கும் பெண்களுக்கு பெரிய  எனர்ஜி டானிக் தான். பெண்கள் நிர்வாகத்திறமையில் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்லர் என்பதற்கு உதாரணமாகச் சட்டென சகோதரி.சுமையாவை கை நீட்டலாம். அவரின் கடும் முயற்சியால் NAAC மற்றும் ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ளது அவரின் உயிர் மூச்சான தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 2005-ல் பல்கலைக்கழக மான்யக் குழுவால் இக்கல்லூரிக்கு 'தன்னாட்சி' அந்தஸ்து * கிடைத்து அழகப்பா பல்கலைகழகத்திலேயே முதல் 'தன்னாட்சி ' பெற்ற தரம் வாய்ந்த கல்லூரியாக இன்னும் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நம்மை இன்னும் ஆச்சர்யபடுத்தும் விஷயமும் காத்திருந்தது. கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்தவர் சகோதரி சுமையா. 1988ல் கிழக்கரையில் தாசீம் பீவி அப்துல் காதர் கல்லூரி நிறுவப்பட்டது. அந்த ஆண்டுதான் முதன் முறையாக கீழக்கரைக்கு , ரஜபுத்திர வமிசத்தை சேர்ந்த காயத்ரியாக  காலடி எடுத்து வைத்தார். ஆம்! சகோதரி காயத்ரி  மூன்றாண்டுகள் இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாமியல் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு,  சுமையாவாக மாறினார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அருளியதுபோல் அவர் தாய் தந்தைக்கு இன்னும் வழங்கவில்லை. சகோதரியின் தந்தை மதுரையில் பிரபல ப்ராக்டிஸ் டாக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   சகோதரியின் தாய்  தன் முதியவயதிலும் பிடிவாதமாக -  இன்னும் இந்துவாக - ஆனால் அதே முஸ்லிம் மகளின் வீட்டில் தான் வசிக்கிறார். அத்தனை வைராக்கியம் கொண்ட பெண்மணியின் மகள் எப்படி சுமையாவாக மாறினார் ? எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொண்டார்?  இஸ்லாம், அவரது வாழ்க்கையை எந்த வகையில் மாற்றியது? மேலும் பல வியக்கவைக்கும் தகவல்கள் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்......

அடுத்த பாகம்
read more "சாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)"