Monday, April 20, 2015

வரதட்சணையை ஒழிப்போம்

நாம் அடிக்கடி குழப்பிக் கொள்ளும் இரு விஷயங்கள் மஹர் மற்றும் வரதட்சணை. ஆனால் இவற்றில் குழப்பம் கொள்ள எவ்வித அவசியமோ தேவையோ கிடையாது. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இரண்டும் தெளிவானவை. ஒன்று இறைவனின் கட்டளை, மற்றொன்று மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்தியது. ஒன்று நேர்வழி, மற்றொன்று வழிகேடு. எனவே நாம் முதலில் மஹர் மற்றும் வரதட்சணையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மஹர் கொடுத்து மணம் முடிக்க வேண்டும் என்பது நம் இறைவனின் கட்டளை. அதை பின்வரும் திருமறை வசனம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்-ஆன் 4:4)

இந்த திருக்குர் ஆன் வசனம் அறியாத எந்த ஆணும் பெண்ணும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு இஸ்லாமியத் திருமணத்திலும் மிக மிக முக்கியமான அவசியமான விஷயமாக இருப்பது மஹர். மஹர் தொகையைத் தீர்மானித்துப் பெறும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது ஏனெனில் திருமண வாழ்வில் அதிகமாக இழப்பது பெண்கள் தாம். இதைக் கருத்தில் கொண்டு தான் இஸ்லாம் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்குக் கொடுத்துள்ளது. இது அப்பெண்ணிற்குப் பாதுகாப்பானதாக உள்ளது.

ஆண்கள், பெண்களுக்குக் கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்பதே நம் இஸ்லாமிய சட்டம். ஆனால் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்கிவிட்டுப் பின்னர் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற எந்த விஷயமும் குர் ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்கவில்லை. இவ்வாறிருக்கையில் வரதட்சணை வாங்கும் பழக்கம் இஸ்லாமியர்களிடையே எப்படி வந்தது எனும் கேள்வி எழலாம். வரதட்சணை வாங்குதல் என்பது மாற்று மதத்தவர்களின் செயல். தங்களது பெண் தன் கணவர் வீட்டிற்குச் செல்லும் போது சீதனத்துடனும், வரதட்சணையுடனும் தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் செயல். 

இதுவே முஸ்லிம்களிடையே வரதட்சணை வாங்கும் பழக்கம் இடம் பெற காரணமாகிவிட்டது.. அக்காலத்தில் மக்கள் செய்த இத்தகைய அறியாமைச் செயலை, இன்று தவறு என்று அறிந்திருந்தும் நாம் தொடர்வது மிகவும் இழிவிற்குறியதாகும். திருமணத்தின் அவசியமான விஷயமாக இருந்த மஹர் மறைந்து இப்போது வரதட்சனையே மிக முக்கியமாக பேசப்படுகிறது. இன்று பெரும்பாலான நாடுகளிலும் திருமணத்தின் போது பெண் வீட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது.. மஹர் கொடுத்து மணமுடிக்கும் வழக்கம் போய் இப்போதோ பெண் வீட்டாரிடமிருந்து என்னென்ன வாங்கலாம், எதையெல்லாம் சுரண்டலாம் என்பதே திருமணம் முடிவானவுடன் பையன் வீட்டாரின் மனதில் எழும் முதல் சிந்தனையாக உள்ளது. பெண் எவ்வளவு படித்திருந்தாலும், மார்க்கப் பற்று உடையவளாக இருந்தாலும், அழகானவளாகவே இருந்தாலும் அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தாலும், தாங்கள் கேட்ட வரதட்சணையைத் தர சம்மதித்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் சூழல் உள்ளது. மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்வதில் சிறிதளவும் அச்சமின்றி மக்கள் உள்ளனர்.

புகாரி ஹதீஸ் 2697. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இப்போதெல்லாம் பெண் பார்க்கச் செல்லும் போதே “முதலில் எத்தனை பவுன்” போடுவாங்க என்பதே முதல் கேள்வியாக உள்ளது. இன்னும் சிலர் இவ்வளவு பவுன் போடணும், சம்மதமா? என்றே நேரடியாகக் கட்டளையிடுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டில் இத்தனை வருடங்களாக ஒன்றுமே இல்லாதது போல், வீட்டு சாமான்கள் அனைத்தையும் அதாவது, கட்டில், மெத்தை, மிக்சி, வாசிங்மெஷின், டி.வி, பாத்திரங்கள், மாப்பிள்ளைக்கு பைக், இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்தால் கார் முதல் கல்யாண செலவு வரை அனைத்தையும் கேட்பார்கள்.

ஆனால் இங்கிதமின்றி அவர்கள் அளிக்கும் வரதட்சணை லிஸ்டிற்கு அவர்கள் அளிக்கும் சமாதானம், “எல்லாம் உங்க பொண்ணு வசதியா இருக்கனும்னு தான்...” சிந்தனை அறவேயற்ற சமாளிப்பு. நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் கூட அவர்களை நன்முறையில் உபசரிக்க நாம் வசதிகள் செய்து கொடுக்கிறோம். இதற்கு அவர்களிடம் எந்த பணமும் லாபமும் பெறாத போது, நம் வீட்டில் நம் குடும்பத்தில் ஒருவராக வாழ வரும் பெண்ணிடமே வரதட்சணை பெற்று, அவள் பெயரைக் கூறி நம் வீட்டிற்கு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் முட்டாள்தனமாகும். 


இப்போ உள்ள காலங்களில் எல்லாம் மாப்பிள்ளைக்கு தனி விலை....Doctor-ஆக இருந்தால் 100 பவுன், Engineer-ஆக இருந்தால் 75 பவுன்... இப்படி மணமகள் Doctor-ஆகவோ Engineer-ஆகவோ நல்ல பதவியில் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களும் இவ்வளவு கொடுத்தே தான் ஆகவேண்டும். 

மணமகனிடம் யாரேனும், ”வரதட்சணை வாங்காதப்பா.. தவறு” என்று சொன்னால், “நான் வாங்கல, எங்க அம்மா தான் கேட்கிறாங்க” என்று தப்பித்து விடுகின்றனர்.. தவறு என்று தெரிந்தால் தடுக்க வேண்டியது தானே? அம்மா பேச்சை இதுவரை தட்டியதே இல்லை என்பது போல் பேசுவது.. பெண் வீட்டினரிடம் பெறும் அனைத்தையும் இவர்களும் சேர்ந்து தான் அனுபவிக்கின்றனர். வரதட்சணையாகப் பெறும் பைக்கை மாமியாரோ மாமனாரோ ஓட்டப்போவதில்லை. ஆனால் அம்மா ஒரு சாக்கு. அம்மாவைப் பேசவிட்டு இவர் வாங்கிக்கொள்வாராம், ஆனால் இவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லையாம்..!! நம்பிவிட்டீர்களா???

தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்வதோ, துணை நிற்பதோ நிச்சயமாகப் பாவம் தான். யார் சொன்னாலும் வரதட்சணை வாங்க மாட்டேன் என்பதில் ஆணும், யார் வற்புறுத்தினாலும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பெண் வீட்டாரும் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்நோயை வேருடன் அழிக்க முடியும். 

இன்னும் இதில் வருத்தப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இதைத் தடுக்க வேண்டிய ஜமாஅத்தார்களோ தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். ஏழைப் பெண்ணாக இருந்தாலும் குறைந்தது 10 பவுனாவது போட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஜமாஅத்தார்களோ, இவ்வாறு கேட்பது தவறு என்று கூட எடுத்துச் சொல்லாமல் தள்ளி நின்று வேடிக்கையே பார்க்கின்றனர். இன்னும் சில ஜமாஅத்களில் “இவர்கள் எங்கள் ஜமாத்தைச் சேர்ந்தவர்களே! இவரது பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்!” என்று கடிதம் எழுதித் தருகின்றனர். பெண் வீட்டார் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு யார் யார் உதவி செய்கிறார்கள் எனக் கேள்விபட்டுள்ளனரோ அவர்களுக்கு எல்லாம் அக்கடிதத்தை அனுப்பி உதவி செய்யும்படி கெஞ்சுகின்றனர். இந்த ஜமாத்தார்கள் நினைத்தால் அவர்களே இதைத் தடுக்க முடியும் (அ) மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி “தவறு” எனப் புரிய வைக்க முடியும். புரியவைப்பது அவர்களது கடமையும் கூட. இவர்களே அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். வரதட்சணை வாங்குவது தவறு என நன்றாகத் தெரிந்தும் தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். எனவே மக்களும் அதைத் தவிர்க்காமல் தாங்கள் செய்யும் தவறுகளில் நிலைத்து நிற்கின்றனர். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட பின் தீர்த்து வைக்க முயற்சிப்பது மட்டுமே ஜமாஅத்தின் கடமையல்ல.. அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி பிரச்சினையில் சிக்கிக்கொள்வதிலிருந்து பாதுகாப்பதும் அவர்களது தலையாயக் கடமையாகும்.

இந்த இடத்தில் ஜமாஅத்தார்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ஜமாஅத்தார்களே! நீங்கள் இல்லாமல் எந்தத் திருமணமும் நடப்பதில்லை. உங்கள் அனுமதி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தால் அதையும் மீறி யாரும் வாங்கப் போவதில்லை. வரதட்சணையை ஒழிப்பதில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே அதை உணர்ந்து செயல்படுங்கள். “வரதட்சணை வாங்கினால் உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மாட்டோம், உங்கள் திருமணத்தில் ஜாமத்தார் முன்னிலை வகுக்கமாட்டார்கள் என்று சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாக பல மக்கள் சிந்திக்கத் தொடங்கி திருந்த முயற்சிப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.

வரதட்சணையைத் தடுக்கும் இஸ்லாம் அப்பெண்ணிற்காக அவளது தந்தை மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்புகளை அனுமதித்துள்ளது.. அதற்கு நபி ஸல் அவர்கள் ஃபாத்திமா ரலி அவர்களுக்கு கொடுத்த அன்பளிப்பு சாட்சியாக உள்ளது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்)

முஸ்லிமல்லாதவர்களே இன்றைய காலங்களில் நிதர்சனத்தைப் புரிந்து, வரதட்சணையின் கொடூரப்பக்கத்தை உணர்ந்து பலர் வரதட்சணையின்றி புரட்சித் திருமணங்கள் நிகழ்த்துகின்றனர். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே நம் இறைவன் நமக்காக மிகத் திறம்பட வகுத்துக் கொடுத்துள்ள சட்டங்களை நாம் பேணி நடப்பது நமக்கே நன்மை பயக்கும். வரதட்சணை ஒழிப்பில் உலகிற்கு என்றும் நாம் தான் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

பெண்குழந்தைகளைப் பெற்றுப் பராமரிப்பவர்களைக் கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் இன்று பெண்குழந்தை பிறந்தாலே, அதன் பெற்றொருக்குக் கவலை அதிகரித்துவிடுகிறது. இத்தகைய இன்னல்களை நம் சமூகத்திலிருந்து களையவும் மார்க்கத்தை நிலைநாட்டவும் நாம் எடுக்கும் முயற்சி சிறந்த பயனுள்ளதாக அமையும். திருமணம் என்பது இருமனங்கள் சேரும் உன்னதமான நிகழ்வு. திருமணத்தையும் வியாபாரமாக்குவதைத் தடுக்கும், எதிர்க்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே இஸ்லாமியர்களே, திருமணம் எனும் பந்தத்தை வரதட்சணை வாங்கி வாட விடாமல், மஹர் எனும் மணக்கொடையை மணப்பெண்ணிற்கு அளித்து மண வாழ்க்கையை தீன் வழியில் மகிழ்வுடன் மலரச்செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக... ஆமின்..

எழுதியவர்
உங்கள் சகோதரி நூர் அல் ஹயா 

7 comments:

 1. /உங்கள் அனுமதி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தால் அதையும் மீறி யாரும் வாங்கப் போவதில்லை. //

  இது ஓரளவுக்குத்தான் வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன். ஏன்னா, வெளியே சொல்லாம மறைச்சு கொடுத்தா யாருக்கு தெரியப்போகுது? மேலும், ”வரதட்சணை இல்லா திருமணம்”னு போர்ட் போட்டு செய்ற பல திருமணங்களிலும், வரதட்சணை மட்டும்தான் இல்லையே தவிர, மற்ற விருந்துகள், சீர்வரிசைகள், செய்முறைகள் எல்லாம் தவறாம நடக்கத்தான் செய்யுது. One-time வரதட்சணையைவிட, கல்யாணத்தின்போதும், பின்னர் வருடா வருடம் செய்யப்படும் இவைதான் பெண்வீட்டாரை பெரும் கஷ்டத்திற்குள்ளாக்குகின்றன.

  எல்லாத்தையும் விட, மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டாலே பெண் வீட்டார் எல்லாரும் எழுஞ்சு நின்னு “மரியாதை” செலுத்துவதிலிருந்தே தெரியும், நம்ம நாட்டு நிலைமை.

  இதெல்லாமே “திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பதில்தான் சேரும்!! ”பலநாள் திருடன் ஒருநாள் (கியாம நாள்) அகப்படுவான்” என்பதை அவர்கள் மற்ந்துவிட வேண்டாம்!!

  ReplyDelete
 2. இவ்ளோ வரதட்சணை, சீர் பழக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளனர் முஸ்லிம்கள். இதையெல்லாம் விட்டுட்டு, இப்ப விவாகரத்தின்போது பெண்வீட்டாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தில் குற்றம் கண்டுபிடிக்கின்றனர்!!

  பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்ததோடு ஒரு தந்தையின் (செலவு) பராமரிப்பு கடமை முடிந்துவிடுவதாக இஸ்லாம் சொல்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படி முடிந்துபோவதில்லை. தொடர்கதையாகத்தான் இருக்கிறது. தந்தை இறந்தால், சகோதரன் பொறுப்பாகிறான் சீர்வரிசைகள் செய்வதற்கு. பெற்ற மகளோடு நில்லாமல், மகள் பெற்ற மகளுக்கும் தாய் வீட்டுச் சீர் தொடர்கிறது. அந்தளவிற்கு இருக்கும்போது, விவாகரத்தில் பெண் வீட்டினர் செய்த செலவை திருப்பிக் கேட்பதை தவறு எனச் சொல்கின்றனர்.

  திருமணம் முழுமையாக இஸ்லாமிய முறைப்படி இருந்தால், (அல்லாஹ் காக்க) விவாகரத்தும் இஸ்லாமிய முறைபப்டி இருக்கும். தமக்குச் சாதகமானவற்றில் மட்டும் இஸ்லாமிய முறையை பின்பற்ற நினைப்பது சரியா என சொல்பவர்கள் யோசிக்கட்டும். (மிகச்சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவானதைத்தான் பேச முடியும்)

  ReplyDelete
 3. சகோ ஹயா,,

  முதல் கட்டுரைக்கான தடயமே தெரியாம அருமையா எழுதி இருக்கீங்க. சீர் நகை எல்லாதையும் வரதட்சணை கணக்கில் சேர்த்தீங்க பாருங்க அங்கே நிக்குரீங்க...சபாஷ்.

  போற போக்குல ஜமாஅத்காரர்களையும் ஒரு காட்டு காட்டிட்டீங்க.. :-)

  சகோதரத்துவத்துடன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. அருமையா எழுதியிருக்கீங்க சகோ..

  பெண்வீட்டார் எவ்வளவு ஏழ்மையாக இருந்தாலும் கைக்கூலி வாங்கும் எங்களின் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று அடம்பிடிக்கும் மாப்பிள்ளைக்கும், வரதட்சனை வியாபாரம் பேசும் மணமகன்வீட்டாருக்கும் தங்களின் எழுத்துக்கள் மூலம் சாட்டைஅடி கொடுத்துள்ளீர்கள்..


  தொடருங்கள் தங்களின் எழுத்து போராட்டத்தை ..

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக..

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நூர் அல் ஹயா...

  உண்மையை அழகாக உரைத்து உள்ளீர்கள்.. வரதட்சணை என்ற கொடுமையால் எத்தனயோ பெண்கள் முதிர் கன்னிகளாகவும், பலர் அப்படி நடக்கும் திருமணத்தால் மீளா கடனாலும் மூழ்கி கிடக்கின்றனர்..

  ஒரு மூமின் கடனுடன் மரணித்தால் அதற்கான பாவங்கள் அதனை ஏற்ப்படுத்த காரணமா இருந்தவர்களுக்கும் போய் சேரும் என்பதை பையனை பெற்ற பல குடும்பங்கள் சிந்திப்பதில்லை...

  நம் தலைமுறை முதலாவது வரதட்சணை இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை ஆண், பெண் வீட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த மாற்றத்தை தரும் என்று நம்புவோம்..

  முதல் தலைப்பிலேயே நச்சுனு எழுதிய சகோதரியின் எழுத்து பணி சிறக்க வல்ல இறைவன் என்றென்றும் உதவி புரிவானாக.. ஆமின்..

  ReplyDelete
 6. வாழ்க்கை வேறு; மதம் வேறு பணம் என்று வரும்போது.

  நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு ஏழைகளுக்கான அரசு விடுதியில் தங்கிப்படித்தேன். இசுலாமியர்கள் நிறைந்த ஒரு பேரூராட்சியது. திருச்செந்தூர் பக்கம். ரமலான மாதமென்றால் எனக்குத் தெரியாது. ஒருநாள் என்னை //காக்கா// (அப்படித்தான் அழைப்போம். அவர் ஒரு இசுலாமிய இளைஞர். என்னை அழைத்து என்னுடன் வா என்றார். விடுதியில் அனைவரும் பக்கத்துக்கு ஊர்க்காரகள் என்பதால், ஞாயிறு விடுதியில் என்னைத்தவிர வேறெவரும் கிடையா. என் ஊர் வெகுதூரத்தில். பக்கத்திலிருந்தாலும் கூட என் பெற்றோர் நீண்ட விடுமுறையில்தான் வரவேண்டும். இரு நாட்கள்; மூன்று நாட்கள் என்றால் வரக்கூடாது. ஏனெனில் அன்று விடுதியில் உணவு கிட்டும். வீட்டில் சங்கடம்.

  காக்கா வெகுதூரம் அழைத்துச்சென்றார். பின்னர் ஒருவீட்டில் நுழைந்தார். என்னை திண்ணை - அவ்வூரில் ஒவ்வொரு வீட்டிலும் பெரிய பெரிய திண்ணைகள் - மேல் அமரச்செய்துவிட்டு உள்ளே போய்விட்டார். வெகுநேரம் ஆனது. இருட்ட ஆரம்பித்துவிட்டதால் பதட்டம். பின்னர் காக்கா வந்தார். என் கையில் ஏதோ திணித்தார். விடுதிக்குப்போய்கொள் என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டார். திறந்து பார்த்தால் ஐந்து பைசா நாணயம். இன்று அதன் மதிப்பு கொஞ்சம்தான் அதிகம்.

  விடுதி வந்து சேர்ந்தேன். அந்த 5 பைசாவுக்கு வாப்பாவிடம் (அக்கடையை ஒரு வயதான முதியவர் நடத்தியது. எல்லாரும் வாப்பா என்றார்கள் நானும் அப்படியே. வாப்பாக்கடையில் பொறிகடலை வாங்கிக் கொறித்துக்கொண்டு விடுதியில் இரவுச்சாப்பாடுக்குக் காத்திருந்தேன். படித்து பல்லாண்டுகளுக்குப்பின் என்னுடன் வேலை செய்த இசுலாமிய நண்பனிடம் கேட்டேன்: ஏன் கொடுத்தார்? அவன் கேட்டான்: அஃதென்ன மாதம்? சொன்னேன். அப்படியானால் ரமலான் மாதம். இம்மாதத்தில் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்தல் மதக்கடமை. அதனால் அவர் உன்னை அவர் வீட்டுக்கழைத்து ஐந்து பைசா கொடுத்தனுப்பினார்.

  நீ அப்படிச்செய்துவிடாதே! குறைந்தது ஐம்பது ரூபாயாவது எனக்குக்கொடு. கொடுத்தான். 75 ஆ கொடுக்கிறேன். ஏன் சினிமா டிக்கட் கூடிவிட்டது தெரியுமலாலே?

  இக்கதைதான் இந்த பதிவைப்படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது. இசுலாமியரிடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது. பணம் என்று வந்தால் அல்லாவைத் தூக்கி அடுப்பங்கரையில் ஒழித்துவைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறார்கள். பண விஷயத்தில் எல்லாருமே ஒற்றுமை. Sorry Mrs Haya. I have hurt you. Take it sportively.

  One more point for you. I find the picture of a woman repugnant to the ethos of Islam. In Islam, I have never seen white purda worn by women. White purda is for jewish women. For e.g Jesus's mother is always seen clad in whitle burda. Why don't you change to black?

  ReplyDelete
 7. நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் கூட அவர்களை நன்முறையில் உபசரிக்க நாம் வசதிகள் செய்து கொடுக்கிறோம். இதற்கு அவர்களிடம் எந்த பணமும் லாபமும் பெறாத போது, நம் வீட்டில் நம் குடும்பத்தில் ஒருவராக வாழ வரும் பெண்ணிடமே வரதட்சணை பெற்று, அவள் பெயரைக் கூறி நம் வீட்டிற்கு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் முட்டாள்தனமாகும். //

  மாஷா அல்லாஹ் அருமையான உதாரணம். அழகான கட்டுரை. ஜமாத்தார்கள் நோக்கி சாட்டையடி கேள்விகள்... செம...

  வாழ்த்துக்கள் ஹயா

  ReplyDelete