Monday, April 06, 2015

நிறை ஆக்குவோம்..!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நாம் வாழும் வாழ்க்கையில்,  ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு ஒவ்வொரு ஆசைகள்.. அதில் சில நிறைவேறும்.. சில ஆசைகள் வெறும் கனவாகவே முடிந்து விடும். இதற்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை...ஆசை படுதலும், அதை அடைய முயற்சி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. இறைவன் மனிதனை ஆசை படுபவனாகத்தான் படைத்துள்ளான்..ஆசைகள்  நியாயமானதாக இருக்க வேண்டும்..வரம்பு மீறியதாக இருக்கக் கூடாது. என்பது மட்டுமே நியதி

திருமணம் ஆகாதவர்களுக்கு தனக்கு ஏற்ற துணை அமைந்து திருமணம்  ஆக வேண்டும் என்ற ஆசை.. திருமணம்  ஆனவர்களுக்கு குழந்தை  பிறக்க வேண்டும் என்ற ஆசை.. .மிக நியாயமான ஆசைகள் தான் ... அதிலும், ''இஸ்லாம் மார்க்கம்'' திருமணத்தை ஒரு வழிபாடு என்கிறது..திருமணம் பண்ணாதவன் என் வழி நடப்பவன் அல்ல என்பது நபிமொழி..திருமணம் செய்து அதன் மூலம் அதிக சந்ததி பெருக்கம் இருக்க வேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் விருப்பம்.

திருமணம் முடிந்ததும் நாம் அனைவரும் விரும்பும் ஒன்று குழந்தை பேறு...மழலை சொல்  விரும்பாதவர் யாரும் இங்கு உண்டா .?  ஒரு குடும்பத்தில், வீட்டின் சந்தோசத்திற்கு மிக முக்கிய காரணமாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது உண்மை. சரி, எல்லாருக்கும் அந்த ஆசை நிறைவேறுகிறதா  என்றால் இல்லை என்ற பதிலை தான் நாம் தர வேண்டிருக்கும்.ஒருவருக்கு குழந்தை பேறு கிடைப்பது என்பது இறைவனின் நாட்டத்தால் தான் அன்றி வேறு இல்லை.


நம் சமூகத்தில், பிள்ளை இல்லாத பெண்கள்..இவை ஏதோ அவர்களின் தனிப்பட்ட செயலாக  பார்க்கப்படுகிறார்கள்.  கணவனும், மனைவியும் என இருவர் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப் பட்டு, அவளின் மீது பரிதாப பார்வைகள் + குத்தலான பேச்சுக்கள் என  அந்தப் பெண்ணை நிலைகுலைய வைக்கிறது. இதன் காரணமாகவே வெளி இடங்களுக்கு வராத பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். 


இந்த இடத்தில் தான் நாம் ஒரு விசயத்தை நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சனையா...? உலகில்  வேறு யாருக்குமே இது போல இல்லையா என கவனித்து பார்த்தால் தெரிய வரும் உண்மை...நம் உறவிலும், நட்பிலும் எத்தனையோ பேர் இது போல இருக்கிறார்கள் என்பது . இது ஏதோ மற்றவர்கள் சொல்வது போல பாவம் செய்ததால் இறைவன் தண்டனை கொடுக்கிறான் என்பது அல்ல...மாறாக, எத்தனையோ ரிஸ்குகளை  கணக்கு பார்க்காமல் நமக்காக அள்ளி வழங்கும் இறைவன் இந்த விசயத்தில்  மட்டும் நாடாமல் இருக்கிறான் என்றால், அவன் இதை தவிர நம்மிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறான் என்பது தான்.

(42:49-50). அல்லாஹ் தான் நாடியோருக்கு  பெண் (குழந்தை)களை வழங்குகிறான்.  தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான்.  அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.  தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான்.  

நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களை வலிய தவிர்க்கிறோம் என்றால்..அது அல்லாஹ்வுக்காகத் தான் இருக்கும். தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனிதனை அல்லாஹ் விரும்புவதில்லை.குழந்தை இன்மைக்காக தன்னை வருத்திக் கொள்ளும் பெண்கள் இதை உணர வேண்டும்.. இறைவன்  அவனின் படைப்பினங்கள் எதற்கும் தாங்கி கொள்ள முடியாத சிரமத்தை கொடுக்க மாட்டான். 

குறை சொல்பவர்களின் நோக்கம்..அதன் மூலம் நாம் மனதளவில் வேதனையையும், சோர்வையும் சந்திக்க வேண்டும் என்பது...அவர்களை வெற்றி கொள்ள விடாமல் நாம் அவைகளை புறந்தள்ளத் தெரிய வேண்டும்.  நமக்கு பிடித்த ஒன்றை இறைவன் நாடா விட்டால், வேறு ஏதோ ஒன்றில் நமக்கான நன்மையை வைத்திருப்பான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..இதை அறியாமல் தான்  ஆணும், பெண்ணுமாகிய நாம், நம்மையும் சிரமப்படுத்தி நம்மை சுற்றியுள்ளவர்களையும் சிரமப் படுத்தி கொண்டு இருக்கிறோம்..மற்றவர்கள் பார்வையில் குறை என்று எண்ணுவதை நிறை ஆக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..


உதாரணமாக... நம் ஆயிஷா ( ரலி ) அவர்களை எடுத்துக் கொண்டால் நபி (ஸல் ) அவர்களுக்கு மிக பிரியமான மனைவியாக இருந்தும், குழந்தைகளை மிக நேசிக்கும் நபி (ஸல் ) அவர்களுக்கு ஆயிஷா (ரலி ) மூலமாக இறைவன் குழந்தையை கொடுக்க வில்லை..இறைவன் நினைத்திருந்தால் அவர்கள் மூலமாக நபி ( ஸல் ) அவர்களுக்கு எத்தனையோ குழந்தைகளை கொடுத்திருக்கலாமே..?? மாறாக... அறிவிலும், மார்க்க விளக்கத்திலும், மிக உயர்ந்த நிலையை பெற்றிருந்த  ஆயிஷா ( ரலி ) அவர்கள் மூலமாகத் நமக்கு பல ஹதீஸ்களை தெரியப் படுத்தினான். அவர்கள் வாயிலாக தான் கணவன்,மனைவி நடந்து கொள்ள வேண்டிய  பல தனிப்பட்ட விசயங்கள் நமக்கு தெரிய வந்தது. மேலும், அவர்களின் அறிவுரைகள் அன்றைய காலக்கட்டதில் எத்தனையோ குழந்தைகளுக்கு வழிகாட்டியாக, அவர்களின் வாழ்க்கை நேராக இருப்பதற்கு உதவியாக  இருந்தது.


குழந்தைகளை நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும், இந்த சமுதாயத்திற்காகவும் நல்லபடியாக வளர்ப்பது எப்படி நமக்கு  ஒரு நன்மையோ...அதே போல அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்கும் பிள்ளைகளை ஆதரிப்பதும்  நமக்கு நன்மையே.இன்னும் சொல்லப்போனால்..குழந்தை பெற்றவர்களுக்கான கேள்விகளை விட குழந்தை பெறாதவர்களுக்கு கேள்விகள் குறைவு.  

அனாதையை ஆதரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் அருகருகே இருப்போம். என்பது நபி மொழி....  நமக்கு முடியும் பட்சத்தில் ஒரு அனாதை குழந்தையை தத்து எடுத்து அதை நல்ல படியாக வளர்க்கும் பொறுப்பை மேற் கொள்ளலாம்..

நம்மை சுற்றிலும் எத்தனையோ பிள்ளைகள் படிக்க ஆசை இருந்தும்,  சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல் படிப்பில்  பின் தங்கி   இருப்பதை பார்க்கிறோம்.அவர்களுக்கு சிறிது  நேரத்தை ஒதுக்கி நமக்கு தெரிந்த கல்வியை  சொல்லி கொடுக்கலாம்...அதே போல நம்மால் வெளியில் போக முடியும் எனில், நம் மார்க்கம் அனுமதித்த வகையில் எத்தனையோ சமூக சேவைகளை செய்யலாம். இன்றைக்கு நம் பெண்பிள்ளைகள் சரியான ஆலோசனைகள் இல்லாமல் வழி தவறிப் போவதை பார்க்கிறோம்..அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பதை தெளிவு படுத்தலாம்.

இதே போல எத்தனையோ  பல நல்ல விசயங்களை செய்து ’’நமக்கான நன்மைகளை அதிகமதிகம் சேர்த்து கொள்ளலாம். குறை என்று எண்ணுவதை நிறை ஆக்குவதில் தானே நம் திறமை இருக்கிறது.சொர்க்கம் நரகத்தை தீர்மானிப்பது நம் செயல்கள் தான்.அது இவ்வுலகமாக இருந்தாலும் சரி..நிரந்தர உலகமாக இருந்தாலும் சரி.

நாம் வாழும் நிச்சயமில்லாத வாழ்க்கையில்.. ஒவ்வொரு நாளுமே நமக்கு இறைவன் கொடுத்த பரிசு. அதை பயனுள்ள விதத்தில், நாமும் சந்தோசமாக இருந்து.. மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருப்பதில் தானே நம் வெற்றி இருக்கிறது?  நாம் அன்னை ஆயிசா ( ரலி ) அவர்களின் வழி வந்தவர்கள்.அவர்களை போல நாமும் அனைவருக்கும் பயன் உள்ளவராக இருக்க  இறைவன்  நாடுவானாக..ஆமீன்..

6:17. “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

உங்கள் சகோதரி
ஆயிஷா பேகம்.

17 comments:

 1. மாஷா அல்லாஹ். அருமையான கட்டுரை ஆயிஷா...

  பல மலர்களில் அந்த இரு வெள்ளை மலர்கள் தனித்து காட்சியளிப்பது கூட அழகுதான்... நம்பிக்க்கையூட்டும் பதிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆமீ..:)

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  பிரச்சனைக்கான உளவியல் ரீதியான ஆதரவையும் அளித்து, தீர்வையும் முன்வைக்கின்றது இக்கட்டுரை. நல்லதொரு ஆக்கம்.

  சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை அறிவார்ந்த முறையில் அணுகும் இத்தளத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குறியவை.

  வாழ்த்துக்கள்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   தங்களை போன்ற சகோதரர்களின் ஊக்கமே எங்களின் பலம்.

   தங்களின், வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 3. வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

  ReplyDelete
 4. வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள்வது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு நமது ஆன்மாவைப் பக்குவப்படுத்துவது. போன்றவற்றை சுமந்து நிற்கிறது இப்பதிவு வாழ்த்துகள். இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் நம்மால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல என்பதை விளங்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அருமையான கருத்துக்கும், வருகைக்கும் நன்றி சகோ..:)

   Delete
 5. சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஊக்கத்துக்கும், வருகைக்கும் நன்றி சகோ..:)

   Delete
 6. ஒரு விடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் சிலருக்கு குழந்தை இருக்கும் கணவன் இருக்க மாட்டார்கள் அப்படிப் பட்ட அபலை பெண்ணை திருமணம் ஆகாத இளைஞனான என் மனைவியின் தம்பி (மைத்துனர்) 5 வயது குழந்தையோடு அந்த பெண்ணை மறுமணம் முடித்துக் கொண்டார். எந்த வரதட்சனையும் இன்றி இவரே அனைத்து செலவும் செய்து மஹர் கொடுத்து அல்ஹம்துலில்லாஹ் மார்க்கம் நம்மில் முழுமையாக மலரும்போது குறைகளற்று அகம் மகிழ முடியும்

  ReplyDelete
  Replies
  1. மாஷா அல்லாஹ்..அல்லாஹ் அந்த சகோதரருக்கு நிறைந்த பரக்கத்தை தந்தருள்வானாக..ஆமீன்.

   Delete
 7. ஒரு முறை என் போஸ்டில் அஸீஸ் லுத்ஃபுல்லாஹ் என்ற சகோதரர் போட்டிருந்த கமெண்ட் மறக்கமுடியாததாக இருந்துச்சு:

  Azeez Luthfullah ......
  இங்கு அடிப்படையான விஷயம் இறைவன் அளித்த அருள்வளங்களை நாம் எப்படிப் பார்க்கின்றோம் என்பதுதான். மற்ற அருள்வளங்களைப் போன்று குழந்தைப்பேறும் ஒரு சோதனையே.

  ஒரு வரலாற்று நிகழ்வை இந்த வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மௌலானா அஷ்ரஃப் அலீ தானவி அவர்கள் தொடர்பான செய்தி இது. மௌலானா அஷ்ரஃப் அலீ தானவி உர்தூ மொழியில் குர்ஆனை மொழிபெயர்த்திருக்கின்றார். எண்ணற்றோரின் வாழ்வில் மாறாத தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்.

  ஒரு முறை அவரைச் சந்திக்க ஒருவர் வந்தார். பேச்சினூடே அந்த மனிதர் ‘மௌலானா உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று வெகுளித்தனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டார். மௌலானால் முகம் மலரச் சொன்னார் : ‘அல்லாஹ்வின் தனிப்பெரும் அருளால் எனக்கு குழந்தைகளே இல்லை’.

  என்ன அல்லாஹ்வின் அருளாலா? என்று அந்த மனிதர் வாய்விட்டுக் கேட்டே விட்டார்.

  மௌலானா சொன்னார்: ‘எனக்கு குழந்தைகள் அருளப்பட்டிருந்தால் அவர்களை வளர்த்து இஸ்லாத்தின் அச்சில் வார்த்தெடுக்கின்ற பொறுப்பு என்மீது விழுந்திருக்கும். நாளை மறுமையில் இந்தப் பொறுப்பு குறித்து நான் கேள்வி கணக்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பேறு இல்லாததால் அந்தக் கவலை எனக்கு இல்லை. இது அல்லாஹ்வின் அருள்தானே.’

  ReplyDelete
  Replies
  1. மாஷா அல்லாஹ்..கிடைப்பது அனைத்தும் அவனின் நாட்டமே என்ற ஆழமான முடிவுக்கு வரும் போது..அனைத்து விஷயத்துக்கும் கவலைப்பட மாட்டோம்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஹுசைனம்மா..:)

   Delete
 8. மாஷா அல்லாஹ்.. அருமையான, தேவையான பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி..:)

   Delete
 9. மா ஷா அல்லாஹ்... அழகிய விதத்தில் பதிந்துள்ளீர்கள்...

  ReplyDelete
 10. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தாஹிரா..:)

  ReplyDelete