Monday, April 27, 2015

முகமாகும் பெண்கள்!!

ன்று அச்செய்தியை வாசித்தபோது வியப்பு தாங்கமுடியவில்லை. அதைப் பார்த்ததும், முன்பு வாசித்த மற்றொரு தகவல் நினைவுக்கு வந்தது. தமிழக தனியார் தொலைக்காட்சியில், சமீபத்தில் ஒரு பெண் தொகுத்து வழங்குகின்ற வயது வந்தோருக்கான ஒரு நிகழ்ச்சி குறித்த முகநூல் விமர்சனங்கள், நிகழ்ச்சியின் தரம் முகச்சுளிக்குமளவு இருப்பதைக் கூறின. இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சாதாரண நிகழ்ச்சிகளிலேயே பலவும் பெரியவர்கள்கூட பார்க்க முடியாதபடி இருக்க, தாம்பத்திய சந்தேகங்கள் குறித்த நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்க வேண்டுமா? பெண்களுக்கு நியாயமான சந்தேகங்கள் இருப்பினும் அதைப்பற்றிக் கேட்டுத் தெளிவதற்கு எந்தவொரு வழியும் இல்லாத நிலையே இந்தியாவில் உள்ளது. படித்தவர்களுக்காவது இணையம் உள்ளது. படிக்காத பெண்களுக்கு?

இந்நிகழ்ச்சிகள் டிவிக்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன என்பதல்லாமல், உரிய சந்தேகங்களை - ஆண்களுக்குக்கூட - நிவர்த்தி செய்ய உதவுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனந்த விகடனில் “பேசாத பேச்செல்லாம்” என்ற தொடரில் திருமதி. ப்ரியா தம்பி, ”தன்னை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதற்கு” அப்பெண் உடன்படுகிறார் என்று இந்நிகழ்ச்சி குறித்து கூறுகிறார்.. இதுவா சுதந்திரம்? தொலைக்காட்சி, வானொலிகளில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் இதுதான் நடக்கிறது.

ந்த வருடம் காதலர் தினத்தன்று, ஒரு தமிழ் வானொலியில் “தன் காதல் துணைக்கு வானொலி வழி சேதி சொல்லும்” ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சியை நடத்திய பெண் தொகுப்பாளரிடம் இதைச் சாக்காக வைத்து வழிந்தவர்கள்தாம் அதிகம். அதிலும் அரைமணிநேரம் ஒலிபரப்பான  அந்நிகழ்ச்சியில் மூவர், காதல் கவிதைகள் வாசித்து அது அந்த தொகுப்பாளருக்கான தன் காதல் தூது என்றும் கூறினார்கள்!!
அதற்கு அப்பெண் சிரித்து மழுப்புவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை – செய்ய இயலவுமில்லை. உலகமே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவரது விருப்பத்திற்கு மாறாக, அது சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஒருவன் தன் காதலைத் தெரிவிக்கிறான் என்றால், அங்கே தான் கண்டிக்கப்பட மாட்டோம் என்பது நிச்சயமாகத் தெரிந்ததால்தானே செய்ய முடிகிறது?

காதலிக்கும் நோக்கம் சற்றும் இல்லை என்ற போதும், “ச்சும்மா” போகிற போக்கில் இப்படி ஒரு அழைப்பில் அப்பெண்ணை இழிவுபடுத்திவிட முடிவது எதனால்? அழைப்பவரின் தொலைபேசி எண் இருக்கும் பட்சத்தில் புகார் செய்வதும், தண்டனை பெற்றுத் தருவதும் முடியாத காரியமல்லவே. எனினும், நிர்வாகங்கள் அப்படி நடப்பதைத்தான் விரும்புகின்றன. டிஆர்பி ரேட்டிங்கிற்காக, இம்மாதிரியான சலம்பல்களை நிர்வாகமே விரும்புகின்றது.

நிர்வாகம்தான் விரும்புகின்றது என்றால், அந்தப் பெண்களும் ஏன் தடுப்பதில்லை? இதுவே அப்பெண்ணிடம் நேரில் ஒருவன் வந்து பொது இடத்தில் காதல் கடிதம் கொடுத்தால், செருப்பைக் கழட்டி அடிக்காத குறையாக அவமானப்படுத்துவார்கள். ஆனால், ஒரு ஊடகத்தில் இது நிகழ்ந்தால், அதே பெண்கள்,  சிரித்துக் கொண்டே கடந்து போகிறார்கள். இதுவும் “தன்னை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது” ஆகாதா? நிகழ்ச்சி நடத்துபவர்கள் மட்டுமல்ல, ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்களிக்கும் பெண்களில் சிலரும், இவ்வாறே தம்மை புகழுக்காகவோ, வெற்றிக்காகவோ தரம் தாழ்த்திக் கொள்கின்றனர்.

டகங்கள் மட்டுமில்லை, அலுவலகங்களிலும் இதை பார்க்கலாம். இன்றைய உலகமயமாக்கலில், அலுவலகங்களின் வரவேற்பறைகளில் இருப்பது பெண்கள் மட்டுமே!! ஏன்? வரவேற்பாளராக, அந்த அலுவலகத்தின் ”முகமாக” ஒரு பெண்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏன்?

வரவேற்பாளர், விமான பணிப்பெண், விற்பனையாளர், காரியதரிசி (secretary, personal assistant), வாடிக்கையாளர் தொலைபேசி சேவை, counter staff போன்ற வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பிலிருக்க வேண்டிய பணிகளில் – அலுவலகத்தின் “முகத்தை” பிரதிபலிப்பவர்களாக பெண்கள்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத நிர்பந்தம் இன்று தொழிலகங்களில் நிலவுகிறது.

அவர்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்; வரும் வாடிக்கையாளரோ, மேலதிகாரியோ எவ்வளவு கோபப்பட்டாலும் புன்னகையோடே எதிர்கொள்ள வேண்டும்; எக்காரணம் கொண்டும் முகம் வாடக்கூடாது. அது மட்டுமல்ல, அவர்கள் உடுத்தும் உடை வரை அலுவலகமே நிர்ணயிக்கின்றது. அதனால் என்ன என்று கேட்பீர்கள்: சீருடை என்றளவில் நிற்பதில்லை அந்த நிர்ணயம். ஆடையின் நீள அகலம் ஏற்ற இறக்கம் வரை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதும் அவர்கள் தீர்மானிப்பதே!!  ஆடையோடு நிற்பதல்ல விதிமுறைகள்: திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றிற்கும் கடவுள் கண்ணை திறப்பதற்கு முன், காரியாலயத்தின் கருணைப் பார்வை முதற்கண் வேண்டும்!!

நான் பணிபுரிந்த காலத்தில், இருவேறு நிறுவனங்களில் நடந்தவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நிறுவனத்தில், வரவேற்பாளினி வேலையை விட்டு நின்றபோது, அடுத்த வரவேற்பாளினி வரும்வரை, அங்கிருந்த ஒரே பெண்ணான என்னை அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்றுப் பேசச் சொன்னார்கள். ஒரு ஆஃபீஸ் பாய் இருந்தும், என்னை அப்பணியைச் செய்ய நிர்பந்தித்ததற்கு, இதே “முகம்”தான் காரணம்!! மற்றொரு நிறுவனத்தில், ஆஃபீஸ் பாய் தவிர “டீ பாய்” என்று ஒருவர் தனியாக இருந்தும், அட்மினிஸ்ட்ரேஷனில் உள்ள பெண்கள்தாம் வரும் விருந்தினர்களுக்கு விருப்பமறிந்து தேநீர் பரிமாறி உபசரிக்க வேண்டுமாம்!!

இவ்விரு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவங்கள் என்பதும், இப்பணியை ஆணையிட்டவர்கள் ஆங்கில தேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்!! நிறுவனத்தின் முகமாக ஒரு “பெண்”தான் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பொதுவான நியதியாகிவிட்டது!!

இன்னும், எல்லாவிதமான விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் பெண்கள் எப்படி “பயன்படுத்தப்” படுகிறார்கள் என்றும் பார்க்கத்தானே செய்கிறோம். இதைத் தனியே விளக்க வேண்டியதேயில்லை.

ப்படி ஏதோ ஒரு நிறுவனத்தின் வெற்றிக்காக, புகழுக்காக, இலாபத்துக்காக பெண்கள் தம்மை அவர்களின் “முகமாக” பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது அடிமைத்தனம் ஆகாதா? வீடுகளில் ஆண் உறவுகளிடம் “பெண்ணுரிமை” பேசி தம் உரிமைகளை நிலைநாட்டத் துடிக்கும் பெண்கள், வேலையிடங்களில் சுயம் இழப்பதுதான் பெண்ணுரிமையா? சில பெண்களுக்கு பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்த நிலை என்பதால், அவர்களின் சம்மதத்தோடுதான் இது நடக்கிறதென்றாலும், இது அவர்களின் அவலநிலையைப் “பயன்படுத்திக்” கொள்ளல் இல்லையா? இதுதான் இந்த சமூகம் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதையா?

ப்படியான சூழலில்தான், இந்தச் செய்தியை வாசித்தபோது வியப்பு தாங்க முடியவில்லை. அண்டை நாடான பாகிஸ்தானில், பெண்களுக்கான பாலியல் சந்தேகங்கள் குறித்து ஒரு நிகழ்ச்சியை HTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது!! ஆண்கள், குழந்தைகள் இல்லாத பகல் நேரத்தில்தான் பெண்களுக்குப் பங்கு கொள்வது வசதி என்பதால் பகலில் நடத்தப் படுகிறது. கிராமத்திலிருந்தும் பெண்கள் அதிகமாகக் கலந்துகொண்டு தம் சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார்களாம்.

எந்த வக்கிரமும் ஆபாசமும் இல்லாமல், எடுத்துக் கொண்ட நோக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி நடத்துவது ஆண் மருத்துவரே என்றபோதும் நிகழ்ச்சியின் நாகரீகம் காரணமாக பெண்கள் கேள்விகள் கேட்க தயங்குவதில்லையாம்.

மேலும், வளைகுடா நாடுகளில் திருமணத்திற்கு முன், ஆண்-பெண் இருவருமே மருத்துவப் பரிசோதனையும் கவுன்சிலிங்கும் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். இன்று நேற்றல்ல, பல வருடங்களாக இவ்விதி நடைமுறையில் இருந்து வருகிறது. அந்நாடுகளில் தரமான மருத்துவமும் அந்நாட்டினருக்கு இலவசம் என்பதால் பெண்களுக்குரிய மருத்துவ ஆலோசனைகளுக்கும், உயர்தர சிகிச்சைகளுக்கும் குறைவில்லை.

மேலை நாடுகளில்கூட, மருத்துவம் விலையுயர்ந்ததாக இருந்தபோதும், தம்மைக் காத்துக் கொள்ளும் பரிசோதனைகள் குறித்த தெளிவும், தக்க சமயத்தில் தக்க மருத்துவம் நாடும் அறிவும் பெண்களுக்கு உள்ளது. இப்படி, பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் என்று குற்றப்படுத்தப்படும் நாடுகளிலும்; மற்றும், பெண்களை ”சம உரிமைக்குரியவர்கள்” என்று பேர்படுத்தி, சுமைகளை இரு மடங்காக்கி உள்ள மேலைநாடுகளிலும்கூட பெண்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகளும் மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பாகக் கிடைக்கிறது.

னால், பெண்களை தெய்வமாக, ஆறுகளாக, பர்வதங்களாக இன்னும் மக்களைத் தாங்கும் பூமித்தாயாக போற்றிப் புகழும் நம் நாட்டில் பெண்கள் வெறும் அலங்காரப் பொருட்களாகவே பயன்படுத்தப்படுவது முரண். காரணம்,  பெண்ணை – நாட்டின், வீட்டின் உந்துசக்தியாக உருவகப்படுத்துவதை இழிவெனக் கருத வைத்து, மாறாக  இதுதான் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்று அப்பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ள வைக்கப்படுகிறார்கள்.


read more "முகமாகும் பெண்கள்!!"

Monday, April 20, 2015

வரதட்சணையை ஒழிப்போம்

நாம் அடிக்கடி குழப்பிக் கொள்ளும் இரு விஷயங்கள் மஹர் மற்றும் வரதட்சணை. ஆனால் இவற்றில் குழப்பம் கொள்ள எவ்வித அவசியமோ தேவையோ கிடையாது. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இரண்டும் தெளிவானவை. ஒன்று இறைவனின் கட்டளை, மற்றொன்று மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்தியது. ஒன்று நேர்வழி, மற்றொன்று வழிகேடு. எனவே நாம் முதலில் மஹர் மற்றும் வரதட்சணையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மஹர் கொடுத்து மணம் முடிக்க வேண்டும் என்பது நம் இறைவனின் கட்டளை. அதை பின்வரும் திருமறை வசனம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்-ஆன் 4:4)

இந்த திருக்குர் ஆன் வசனம் அறியாத எந்த ஆணும் பெண்ணும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு இஸ்லாமியத் திருமணத்திலும் மிக மிக முக்கியமான அவசியமான விஷயமாக இருப்பது மஹர். மஹர் தொகையைத் தீர்மானித்துப் பெறும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது ஏனெனில் திருமண வாழ்வில் அதிகமாக இழப்பது பெண்கள் தாம். இதைக் கருத்தில் கொண்டு தான் இஸ்லாம் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்குக் கொடுத்துள்ளது. இது அப்பெண்ணிற்குப் பாதுகாப்பானதாக உள்ளது.

ஆண்கள், பெண்களுக்குக் கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்பதே நம் இஸ்லாமிய சட்டம். ஆனால் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்கிவிட்டுப் பின்னர் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற எந்த விஷயமும் குர் ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்கவில்லை. இவ்வாறிருக்கையில் வரதட்சணை வாங்கும் பழக்கம் இஸ்லாமியர்களிடையே எப்படி வந்தது எனும் கேள்வி எழலாம். வரதட்சணை வாங்குதல் என்பது மாற்று மதத்தவர்களின் செயல். தங்களது பெண் தன் கணவர் வீட்டிற்குச் செல்லும் போது சீதனத்துடனும், வரதட்சணையுடனும் தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் செயல். 

இதுவே முஸ்லிம்களிடையே வரதட்சணை வாங்கும் பழக்கம் இடம் பெற காரணமாகிவிட்டது.. அக்காலத்தில் மக்கள் செய்த இத்தகைய அறியாமைச் செயலை, இன்று தவறு என்று அறிந்திருந்தும் நாம் தொடர்வது மிகவும் இழிவிற்குறியதாகும். திருமணத்தின் அவசியமான விஷயமாக இருந்த மஹர் மறைந்து இப்போது வரதட்சனையே மிக முக்கியமாக பேசப்படுகிறது. இன்று பெரும்பாலான நாடுகளிலும் திருமணத்தின் போது பெண் வீட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது.. மஹர் கொடுத்து மணமுடிக்கும் வழக்கம் போய் இப்போதோ பெண் வீட்டாரிடமிருந்து என்னென்ன வாங்கலாம், எதையெல்லாம் சுரண்டலாம் என்பதே திருமணம் முடிவானவுடன் பையன் வீட்டாரின் மனதில் எழும் முதல் சிந்தனையாக உள்ளது. பெண் எவ்வளவு படித்திருந்தாலும், மார்க்கப் பற்று உடையவளாக இருந்தாலும், அழகானவளாகவே இருந்தாலும் அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தாலும், தாங்கள் கேட்ட வரதட்சணையைத் தர சம்மதித்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் சூழல் உள்ளது. மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்வதில் சிறிதளவும் அச்சமின்றி மக்கள் உள்ளனர்.

புகாரி ஹதீஸ் 2697. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இப்போதெல்லாம் பெண் பார்க்கச் செல்லும் போதே “முதலில் எத்தனை பவுன்” போடுவாங்க என்பதே முதல் கேள்வியாக உள்ளது. இன்னும் சிலர் இவ்வளவு பவுன் போடணும், சம்மதமா? என்றே நேரடியாகக் கட்டளையிடுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டில் இத்தனை வருடங்களாக ஒன்றுமே இல்லாதது போல், வீட்டு சாமான்கள் அனைத்தையும் அதாவது, கட்டில், மெத்தை, மிக்சி, வாசிங்மெஷின், டி.வி, பாத்திரங்கள், மாப்பிள்ளைக்கு பைக், இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்தால் கார் முதல் கல்யாண செலவு வரை அனைத்தையும் கேட்பார்கள்.

ஆனால் இங்கிதமின்றி அவர்கள் அளிக்கும் வரதட்சணை லிஸ்டிற்கு அவர்கள் அளிக்கும் சமாதானம், “எல்லாம் உங்க பொண்ணு வசதியா இருக்கனும்னு தான்...” சிந்தனை அறவேயற்ற சமாளிப்பு. நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் கூட அவர்களை நன்முறையில் உபசரிக்க நாம் வசதிகள் செய்து கொடுக்கிறோம். இதற்கு அவர்களிடம் எந்த பணமும் லாபமும் பெறாத போது, நம் வீட்டில் நம் குடும்பத்தில் ஒருவராக வாழ வரும் பெண்ணிடமே வரதட்சணை பெற்று, அவள் பெயரைக் கூறி நம் வீட்டிற்கு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் முட்டாள்தனமாகும். 


இப்போ உள்ள காலங்களில் எல்லாம் மாப்பிள்ளைக்கு தனி விலை....Doctor-ஆக இருந்தால் 100 பவுன், Engineer-ஆக இருந்தால் 75 பவுன்... இப்படி மணமகள் Doctor-ஆகவோ Engineer-ஆகவோ நல்ல பதவியில் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களும் இவ்வளவு கொடுத்தே தான் ஆகவேண்டும். 

மணமகனிடம் யாரேனும், ”வரதட்சணை வாங்காதப்பா.. தவறு” என்று சொன்னால், “நான் வாங்கல, எங்க அம்மா தான் கேட்கிறாங்க” என்று தப்பித்து விடுகின்றனர்.. தவறு என்று தெரிந்தால் தடுக்க வேண்டியது தானே? அம்மா பேச்சை இதுவரை தட்டியதே இல்லை என்பது போல் பேசுவது.. பெண் வீட்டினரிடம் பெறும் அனைத்தையும் இவர்களும் சேர்ந்து தான் அனுபவிக்கின்றனர். வரதட்சணையாகப் பெறும் பைக்கை மாமியாரோ மாமனாரோ ஓட்டப்போவதில்லை. ஆனால் அம்மா ஒரு சாக்கு. அம்மாவைப் பேசவிட்டு இவர் வாங்கிக்கொள்வாராம், ஆனால் இவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லையாம்..!! நம்பிவிட்டீர்களா???

தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்வதோ, துணை நிற்பதோ நிச்சயமாகப் பாவம் தான். யார் சொன்னாலும் வரதட்சணை வாங்க மாட்டேன் என்பதில் ஆணும், யார் வற்புறுத்தினாலும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பெண் வீட்டாரும் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்நோயை வேருடன் அழிக்க முடியும். 

இன்னும் இதில் வருத்தப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இதைத் தடுக்க வேண்டிய ஜமாஅத்தார்களோ தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். ஏழைப் பெண்ணாக இருந்தாலும் குறைந்தது 10 பவுனாவது போட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஜமாஅத்தார்களோ, இவ்வாறு கேட்பது தவறு என்று கூட எடுத்துச் சொல்லாமல் தள்ளி நின்று வேடிக்கையே பார்க்கின்றனர். இன்னும் சில ஜமாஅத்களில் “இவர்கள் எங்கள் ஜமாத்தைச் சேர்ந்தவர்களே! இவரது பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்!” என்று கடிதம் எழுதித் தருகின்றனர். பெண் வீட்டார் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு யார் யார் உதவி செய்கிறார்கள் எனக் கேள்விபட்டுள்ளனரோ அவர்களுக்கு எல்லாம் அக்கடிதத்தை அனுப்பி உதவி செய்யும்படி கெஞ்சுகின்றனர். இந்த ஜமாத்தார்கள் நினைத்தால் அவர்களே இதைத் தடுக்க முடியும் (அ) மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி “தவறு” எனப் புரிய வைக்க முடியும். புரியவைப்பது அவர்களது கடமையும் கூட. இவர்களே அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். வரதட்சணை வாங்குவது தவறு என நன்றாகத் தெரிந்தும் தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். எனவே மக்களும் அதைத் தவிர்க்காமல் தாங்கள் செய்யும் தவறுகளில் நிலைத்து நிற்கின்றனர். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட பின் தீர்த்து வைக்க முயற்சிப்பது மட்டுமே ஜமாஅத்தின் கடமையல்ல.. அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி பிரச்சினையில் சிக்கிக்கொள்வதிலிருந்து பாதுகாப்பதும் அவர்களது தலையாயக் கடமையாகும்.

இந்த இடத்தில் ஜமாஅத்தார்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ஜமாஅத்தார்களே! நீங்கள் இல்லாமல் எந்தத் திருமணமும் நடப்பதில்லை. உங்கள் அனுமதி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தால் அதையும் மீறி யாரும் வாங்கப் போவதில்லை. வரதட்சணையை ஒழிப்பதில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே அதை உணர்ந்து செயல்படுங்கள். “வரதட்சணை வாங்கினால் உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மாட்டோம், உங்கள் திருமணத்தில் ஜாமத்தார் முன்னிலை வகுக்கமாட்டார்கள் என்று சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாக பல மக்கள் சிந்திக்கத் தொடங்கி திருந்த முயற்சிப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.

வரதட்சணையைத் தடுக்கும் இஸ்லாம் அப்பெண்ணிற்காக அவளது தந்தை மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்புகளை அனுமதித்துள்ளது.. அதற்கு நபி ஸல் அவர்கள் ஃபாத்திமா ரலி அவர்களுக்கு கொடுத்த அன்பளிப்பு சாட்சியாக உள்ளது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்)

முஸ்லிமல்லாதவர்களே இன்றைய காலங்களில் நிதர்சனத்தைப் புரிந்து, வரதட்சணையின் கொடூரப்பக்கத்தை உணர்ந்து பலர் வரதட்சணையின்றி புரட்சித் திருமணங்கள் நிகழ்த்துகின்றனர். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே நம் இறைவன் நமக்காக மிகத் திறம்பட வகுத்துக் கொடுத்துள்ள சட்டங்களை நாம் பேணி நடப்பது நமக்கே நன்மை பயக்கும். வரதட்சணை ஒழிப்பில் உலகிற்கு என்றும் நாம் தான் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

பெண்குழந்தைகளைப் பெற்றுப் பராமரிப்பவர்களைக் கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் இன்று பெண்குழந்தை பிறந்தாலே, அதன் பெற்றொருக்குக் கவலை அதிகரித்துவிடுகிறது. இத்தகைய இன்னல்களை நம் சமூகத்திலிருந்து களையவும் மார்க்கத்தை நிலைநாட்டவும் நாம் எடுக்கும் முயற்சி சிறந்த பயனுள்ளதாக அமையும். திருமணம் என்பது இருமனங்கள் சேரும் உன்னதமான நிகழ்வு. திருமணத்தையும் வியாபாரமாக்குவதைத் தடுக்கும், எதிர்க்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே இஸ்லாமியர்களே, திருமணம் எனும் பந்தத்தை வரதட்சணை வாங்கி வாட விடாமல், மஹர் எனும் மணக்கொடையை மணப்பெண்ணிற்கு அளித்து மண வாழ்க்கையை தீன் வழியில் மகிழ்வுடன் மலரச்செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக... ஆமின்..

எழுதியவர்
உங்கள் சகோதரி நூர் அல் ஹயா 
read more "வரதட்சணையை ஒழிப்போம்"

Tuesday, April 14, 2015

சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்

இது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.

திருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மனைவியைக் கேலி செய்வதாக நினைத்து அவமானப்படுத்துகிறார்கள். அவள் செய்த ஒரு தவறைப் பொதுவில் சொல்லி சிரிப்பது என்னவோ அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கிறது. ஆனால் அவளின் மனநிலை என்னவாகுமென்று அறியாமல் இவ்வாறு செய்து விடுகின்றனர். தன் மனைவியைக் கேலி செய்தால் என்பது அது தனக்குத்தான் அவமானம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகாமல் இருப்பது மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உரியதாகும்.

மற்றவர் முன் தன் மனைவியைக் குறை கூறினால் அவர்கள் மனமகிழலாம். ஆனால் அது தன் மனைவியின் மனதைப் புண்படுத்தும் என்பது இக்குணம் கொண்ட கணவன்மார்களுக்கு ஏனோ புரிவதில்லை. 

2:187.  அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; 

இறைவன் கணவனை மனைவிக்கும் மனைவியைக் கணவனுக்கும் ஆடையாக உவமைப்படுத்தியுள்ளான். எத்தனை அருமையான, மகத்தான வாழ்வியல் கோட்பாடு இது?! ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது? தன்னைப் போல தன் மனைவியும் சிறு சிறு குறைகளையுடைய ஒரு மனிதப்பிறவி என்றும் தன் குறைகளைப் பிறரிடம் இருந்து மறைக்க நினைக்கும் ஆண்கள் தன் மனைவியின் சிறு பிழைகளைச் சிறிதும் இங்கிதமில்லாமல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது எந்த அளவிற்கு சிறுமைத்தனம்? 

மனைவியானவள் இவ்வாறு அடுத்தவர் முன் தன்னுடைய கணவரை நடத்தமாட்டாள். அடுத்தவர் முன் தன் கணவர் என்றுமே ஒரு கண்ணியமானவராகத் திகழ வேண்டும் என நினைப்பாள்.. அல்லாஹ் தன் மறையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கூற்றிலும் பிரதானப்படுத்தி வைத்திருக்கும் செயலில் பல ஆண்கள் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்).

உங்கள் வாழ்க்கைத்துணையின் குறைகளையே உங்களால் மறைக்க முடியவில்லையெனில், உங்களது ஈமான் மிகவும் பலவீனமானதாக உள்ளது என்றே பொருள். அழகிய முறையில்  பிறரது குறைகளை மறைப்பவர், உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டெடுத்த நன்மையைச் சம்பாதிக்கிறார் (அல்அதபுல் முஃப்ரத்). அல்லாஹு அக்பர்.... ஒரு சில நிமிட சிரிப்புக்காக, எத்தகைய பேற்றை இழந்து விடுகிறோம்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

அடுத்து அவள் செய்யும் சமையலைக் குறித்து பொதுவில் கேலி செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது.. என்னதான் படித்த அறிவாளி பெண்ணாக இருந்தாலும் திருமணமான புதிதில் சமையலில் சொதப்பாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதில் கூட கணவரும் அவரின் குடும்பத்தாரும் அதே சமையலைத் திரும்ப செய்யும் போது பண்ணும் கேலி இருக்கிறதே... அப்பப்பா... அவள் என்னதான் பின்னாளில் சமையலில் புலியாகிப் போனாலும் ஒரு முறை செய்த அத்தவறைச் சொல்லிக்காட்டாமல் இருக்க இவர்களால் முடியாது. 

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

அடுத்து பிள்ளைகளிடம் அம்மாவைப் பற்றி தவறான கருத்தை விளைவிப்பது:

ஒரு குடும்பத்தையே கட்டி ஆளும் வல்லமை கொண்டவளாகவும் அனைத்தையும் தெரிந்தவளாகவும் இருந்தாலும் குழந்தைகளின் முன் டம்மிதான். அதற்குக் காரணம் அவளின் கணவர் ”உன் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது” என்று ஒவ்வொரு முறையும் சொல்வதுதான் காரணம்.

ஒரு முறை மட்டுமே கேலியாக நினைத்து விட நினைக்கும் மனம் அதையே திரும்பத்திரும்ப சொல்லும் போது அவளை உங்களிடம் இருந்து நீங்களே பிரிக்க முயல்கிறீர்கள். உங்களையும் மூன்றாம் நபராகவே அவள் மனம் எண்ணும். இத்தகைய செயல்களே, அவள் உங்கள் குடும்பத்தில் இருந்து விலகி தனியாக இருக்க நினைப்பதைத் துவக்குகிறது.


உங்களால் மட்டுமே இம்மாதிரியான சூழ்நிலைகளைப் பல நேரங்களில் கையாளுகிறார்கள். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. பிழை செய்திடாத மங்கையுமில்லை. உங்கள் வீட்டிற்குத் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து உங்களுக்காக உங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். உங்களுக்குக் கேலி செய்வது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அக்கேலிகளுக்குப்பின் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து செயல்படுங்கள். என்ன செய்தாலும் தன் கணவனின் திருப்தி கிடைக்காது என்ற சலிப்பு ஏற்பட்டுவிட நீங்களே வழிவிடாதீர்கள். அது நிச்சயம் குடும்பத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். கவனமாயிருங்கள்.

தன்னுடையவள் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிண்டலும் அவளுக்கு வலிக்கும். அந்த நேர சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு அடுத்தவர் முன் கண்ணீருடன்தான் நடமாடுவாள். உங்களுடைய இல்லாளுக்கு நீங்கள் செய்யும் நல்லதில் இதுவும் ஒன்று என்று எண்ணி செயல்படுத்துங்கள். இறுதி வரை உங்களுடன் வரப்போவது அவள்தானேயன்றி, உங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. யார் மூலம் துன்பம் ஏற்பட்டாலும் உங்கள் மனைவிக்கு நீங்களும் உங்களுக்கு உங்கள் மனைவியுமே சிறந்த ஆறுதலாக இருக்க வேண்டும். ஆகையால், மற்ற உறவினர்கள், நண்பர்களிடத்தில் உங்களை முன்னிலைப்படுத்துவதற்காக உங்களின் மறுபாதியைச் சீர்குலைத்துவிடாதீர்கள். 

எதையும் சாதிக்கக் கூடியவள் பெண். தவறுகளைத் தனிமையில் கூறுங்கள். நல்லதை சபைகளில் கூறுங்கள், அவளைப் பற்றி எண்ணம் அடுத்தவர் உள்ளத்தில் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் வித்திட வேண்டும். உங்களின் மனைவியிடம் சிறந்தவராக விளங்குவதே மக்கள் அனைவரிடத்திலும் சிறந்தவராக விளங்குவதற்கு வழியாகும் (திர்மிதீ. 1082) என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையேற்றுங்கள்.
read more "சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்"

Wednesday, April 08, 2015

தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..

      பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய "பெண்ணியம்" ,  "பெண்ணியவாதி" ஆகிய பதத்திற்கு  உண்மையான அர்த்தத்தை வெளியுலகிற் கு படம் போட்டு காட்டிய "மை சாய்ஸ்" க்கு கோடான கோடி நன்றிகள்.

        வாட் ஏ வீடியோ, இந்த நூற்றாண்டின் சிறந்த பெண்களுக்கான புரட்சி வீடியோ! (மை சாய்ஸ்).

      பெண்ணியம் என்றால் என்வென்று    யாராவது இனி கேட்டால் , இந்த கலாச்சார, பண்பாட்டு வீடியோவை காட்டினால் போதும். ஒரு நொடியில்  புரிந்துக்கொள்வார்கள், பக்கம் பக்கமா விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.  

           இதை பார்த்துவிட்டு பெண்ணியம் பற்றி நான் புரிந்துக்கொண்ட  விஷயம் என்னவென்றால்? பெண்கள் எல்லாமே அவர்களின்  இஷ்டத்திற்கு தான் செய்வார்களாம், செய்யட்டும்...  எவரும்  கேள்வி கேட்க கூடாதாம். ஆகட்டும்....  என்ன செய்தாலும் சரியே....  ஆனால், தான் என்னென்னெல்லாம் செய்வேன் என தீபிகா சொன்ன விஷயங்களில் தான் பெண்ணியத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

            கவர்ச்சிகரமான ஒளி ஒலி கோர்வை, திமிர்த்தனமான பதில்கள் எளிதில் பெண் சமூகத்தை கவர்ந்திழுக்கும் தான். ஆனால் இதன் விளைவுகளையெல்லாம் தீபிகா படுகோன்கள் அறிய முற்படுவதில்லை. ஒரு காலத்தில்  ஆண்களுக்கு அடங்கி கிடந்தனர் பெண்கள். கல்வியிலும் முன்னேற்றத்திலும் உரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில் போராடி நம் உரிமையை நிலைநாட்டி நின்றோமே அது தான் உண்மையான பெண்ணியமே அன்றி ஆண்களை பார்த்து “எனக்கு அடங்கி கிட” என சொல்வதல்ல...  இன்றைய தீபிகாபடுகோன்கள் அறிமுகப்படுத்தும் உலகம் எவ்வளவு ஆபத்தானது, குழப்பமானது ? சிந்திக்க  கடமைப்பட்டுள்ளோம்.

இந்த வீடியோவில் வரும் வசனங்கள் சிலவற்றை பார்ப்போம்.
"நான் திருமணம் செய்வேன் அல்லது செய்யாமலும் இருப்பேன்" -  என்னோட தேர்வு. (my Choice)
இப்படி சொல்லிவிட்டு அடுத்ததாக,
"திருமணத்திற்கு முன்பு உறவு வைத்து கொள்வேன், திருமணம் முடிந்தபிறகு  திருமண உறவில் இருந்துக்கொண்டே வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பேன் அல்லது உறவே வைத்துக்கொள்ளாமலும் இருப்பேன்" - என்னோட தேர்வு (my choice).
      இதற்கு திருமணம் செய்யாமலே இருந்துவிடலாம், பாவம் அந்த ஆணாவது மானத்தோடு வாழ்வான் இல்லையா? அப்பட்டமான விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் தான் இவர்கள் சொல்லும் பெண்ணியமா? நிச்சயம் இப்படியான பெண்ணியவாதிகளை திருமணம் செய்ய ஆண்களுக்கு மிகப்பெரும் மனதிடம் வேண்டும் தான். அழகான குருவிக் கூட்டை சிதைக்கும் முயற்சி அல்லவா? 

   இதில்  விஷத்தனமான ஒரு கருத்தை ஆழமாக பெண்கள் மனதில் பதிய வைக்கிறார்கள் . என்னவெனில், "Living Together" திருமணம் செய்யாமல் அன்னிய ஆண்களோடு வாழ்வது தவறில்லை ; கல்யாணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்வது தவறில்லை :  கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது தவறில்லை.

       இது தான் பெண்ணுரிமை, இது தான் இந்த பெண்ணியவாதிகள் வைக்கும் பெண்ணுரிமை புரட்சி.

திருமணம் பற்றி புரட்சிகரமாக சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார்,
"நான்   தற்காலிகமாக  விரும்புவேன் அல்லது காமத்திற்காக நிரந்தரமாகவும் விரும்புவேன்" - என்னுடைய தேர்வு (மை சாய்ஸ்).

"ஆண்களையோ, பெண்களையோ அல்லது இருவரையுமோ விரும்புவேன்" - என்னோட தேர்வு (மை சாய்ஸ்).
   ஒரு ஆணும் இந்த மனநிலை கொண்டு  ஒரு பெண்ணை எப்போது வேண்டுமென்றாலும் காதலிப்பதற்கோ கை விடுவதற்கோ எனக்கு உரிமை உண்டு என சொன்னால் ஏற்றுக்கொள்வோமா?  காமத்திற்காக, இச்சைக்காக நிரந்தரமாய் விரும்புவேன் என இதே வார்த்தையை ஆண்கள் சொன்னாலும் இந்த பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதானே தர்மம் ? பெண்களை  பெண்களே இழிவுபடுத்த போதுமானவர்கள். அடிமைப்பட்டு கிடந்த காலத்திலும் கூட , இன்றைய காலம் வரை பெண்கள் மீது இயல்பாகவே பெரும்பான்மையினருக்கு நன்மதிப்பு உண்டு. தயவு செய்து  கெடுத்து விடாதீர்கள்.  தாம்பத்தியமும் குடும்ப அமைப்பும் ஆத்மார்த்தமானது. இச்சைக்காக என சொல்லி கேவலப்படுத்தாதீர்கள்.
அடுத்ததாக  ஆண்களை நோக்கி சொல்கிறார், 
“விடியற்காலை 4 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தால்  வருத்தப்படாதே, மாலை 6 மணிக்கு வந்தால் நல்லவள் என்றும்   நம்பி முட்டாள் ஆகிவிடாதே. என்னுடைய காதல் உனக்காக அல்ல, என்னுடைய தேர்வு ஒரு புதையல் மாதிரி.  நெற்றியிலிருக்கும் குங்குமம்  , விரலில் போடும் மோதிரம், என் பெயருக்கு பின்னால் உன் பெயர் அனைத்தும் அணிகலன் போலவே  தான். எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்வேன் ”

“உன்னுடைய குழந்தையை நான் வைத்து இருப்பது என்னுடைய தேர்வு, 700 கோடி பேரில் உன்னை ஒருவனாய் தேர்வு செய்வதும் என்னுடைய தேர்வு.

“உன்னுடைய  குழந்தையை நான் வைத்து இருப்பதும் இருக்காததும் என்னுடைய  தேர்வு”,


"ஞாபகம் இருக்கட்டும், நான் உன்னை தேர்ந்தெடுத்துள்ளேன், நீ ஒன்றும் எனக்கு சலுகை கொடுக்கவில்லை".
        இது குடும்ப அமைப்பை சீரழிக்கும் விசயமல்லவா?  இப்போது புரிகிறதா? இவர்கள் அறிமுகபடுத்தும் உலகம்?  இதுவரை நீங்கள் படித்தவற்றையெல்லாம் கொஞ்சமாக  சிந்தித்து பாருங்கள். இதுதான்  பெண்ணியமா? பெண்ணுரிமையா? பெண்கள்,  தான் விரும்பியவற்றை செய்யும் முழு உரிமையும் பெறவேண்டும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை.  ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் உயர்ந்திருப்பதும், வேலை,  அரசியல், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை எக்ஸட்ரா எக்ஸட்ரா முன்னேறுவதும் போற்றத்தக்க விஷயமே. ஆனால் விரும்பியவை எவை? செய்ய போகின்ற செயல் எது? இது தான் இங்கு மில்லியன் டாலர் கேள்வி?  ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் சாதிக்க வேண்டும் என்று பெண்ணியம் பேசிவிட்டு, ஆண்கள் கூட நேரடியாக செய்ய துணியாத, செய்ய நினைக்காத காரியத்தை அல்லவா தான் செய்வேன் என காட்டுகிறார்கள்.

மேலே சொன்ன செயல்களுக்காக தான்  பெண்களுக்கு உரிமை வேண்டுமா?
மேலே சொன்ன செயல்களுக்காக தான்  பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமா ?
எனில் இதில் நஷ்டவாளி இவர்களே தான் ! சிந்தித்து பாருங்கள்... உண்மை விளங்கும்.

       இன்று நடு இரவில் கிளப்புக்கு சென்று வருவது ஒரு பெண்ணின் உரிமை என்றால் அவளை கற்பழிப்பது ஒரு ஆணின் உரிமை என்று பேசிய  முகேஷ் சிங் போன்ற ஆண்களுக்கு உங்களின் "மை சாய்ஸ்" ஒரு பெஸ்ட் சாய்ஸ்.. ஆம்!!! உங்களுக்கு உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் என்றால் அதே போல் ஆண்களுக்கும் அவர்கள் விருப்பப்படி நடந்துக்கொள்வது அவர்கள் விருப்பம் தானே!!! அவ்வாறு ஒரு ஆண் விருப்பபட்டு உங்களை அழைக்கும் போது உங்களுக்கு விருப்பமே இல்லையென்றாலும் அவனது விருப்பத்திற்கு கட்டுப்படுவது "ஹிஸ் சாய்ஸ்" அது உங்களின் "மை சாயிஸ்-லிருந்து பிறந்ததே".. உங்கள் புண்ணியத்தில்  உருவாகட்டும் முகேஷ்கள் !

      பெண்களை காமவெறிகொண்டு பார்க்கும் இழிவான கடைந்தெடுத்த சில இழிபிறவி ஆண்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருப்பது தவறல்ல. ஒட்டுமொத்த ஆண்களையும்  கை நீட்டுவது   கவர்ச்சிக்காக மட்டுமே.  இன்றைய தீபிகாக்கள் முன் வைக்கும் பெண்ணியவாதிகளின் உலகில்  அநாதையாக விடபட்டது குழந்தைகளின் நிலை தான். பாவம்  பெண்ணியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள்.  இரு போட்டியாளர்களுக்கு மத்தியிலுள்ள இந்த குழந்தை வர்க்கத்துக்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன ?

    இவர்கள் காட்டும் உலகில் ஆண்களுக்கு மறைமுகமாக லாபம் கொடுப்பதை இவர்கள் அறிவார்களா? உதாரணத்திற்கு தீபிகா ரன்பிரை காதலித்தார், அதன் பின் சித்தார்த் மல்லையாவை  காதலித்தார். இது தீபிகாவின் சாய்ஸ் தான். இதில் யாருக்கு லாபம் ??? ஹாஹாஹா தன் கற்பு உறிஞ்சப்படுவதை  கூட சிந்திக்க முடியாத அளவுக்கு கார்ப்பரேட் இயக்கும் பெண்ணியவாதிகளாக இவர்கள் மாறிவருவதை நினைத்து நிச்சயம் பரிதாபமே மிஞ்சுகிறது. எத்தனை ஆண்களுடன் திருமணத்துக்கு முன் வாழ்ந்தாலும், திருமணத்திற்கு பின் வாழ்ந்தாலும் லாபம் என்னவோ  ஆண்களுக்கு தான். நிச்சயம் இத்தகைய ஆண்களுக்கு உங்கள் வாக்குமூலம் உற்சாகத்தை விதைக்கவே செய்யும். உரிமை என்பது உடையில் மட்டுமே என நினைத்தவர்கள் கொஞ்சம் முன்னேறி கற்பு பகிர்தலில் வந்து நிற்கிறார்கள். அந்தோ பரிதாபம்! அனைத்தும் குறுகிய வட்டம். தீர்வில்லாத திட்டம்.

    பெண்ணியவாதிகள் எழுப்பும் அவர்களின் சாய்ஸ்கள் எல்லாம்,  ஆண்களாலும் சொல்ல முடியும் என்பதே நிதர்சனம். இருவரும் இவ்வாறு முரண்டு பிடிப்பது ஒரு வாகனத்திற்கு இரு ஓட்டுநர்கள் இரு பக்கமும் இயக்க  அடம்பிடிப்பது போன்றது.

           பெண்களை போகப் பொருளாக  ஆண்கள்  காட்டுகின்றனர் என  கூப்பாடு போட்டுவிட்டு , இந்த வீடியோவில் பெண்களை மிக கேவலமாக காண்பித்து இருக்கின்றார்களே?? ஓஹ், இதுதான் பெண்ணியமா?  பெண் தான் இதை செய்ய வேண்டும், ஆண்கள் செய்ய கூடாது. காரணம், இது என்னுடைய தேர்வு (மை சாய்ஸ்). நான் இதை செய்தால் பெண்ணுரிமை, ஆண் இதை செய்தால் ஆணாதிக்கம் - இவர்களின் இலக்கணம் நகைப்புக்குரியது.  பெண்ணியம் பெண்ணுரிமை குறித்து தெளிவான சிந்தனை பெண்களிடத்திலேயே இல்லை என்பது தான் இந்த குறும்படம் காட்டும் உண்மை.  ஆடையை அவிழ்த்தலும்  இவர்களின் விருப்பமெனில் லாபம் என்னவோ விருந்தாக போகும் ஆணின் கண்களுக்கு தான்.
  • ன்னால் முறைதவறி என்னை பயன்படுத்த முடியாது என்பது பெண்ணுரிமையா ? அல்லது கற்பை பகிர்வது பெண்ணுரிமையா ?
  • ன் அங்கங்களை உன்னால் பார்க்க முடியாது என்பது பெண்ணுரிமையா? அல்லது அரைகுறையாடையுடன் வலம் வருதல் பெண்ணுரிமையா?
  • ன்னை பிடிக்கவில்லை என்றால்/ எனக்கு   பிடிக்கவில்லை என்றால்  விவாகரத்து வாங்கி தகுதியான நபருடன் திருமணம் செய்வேன் என்பது பெண்ணுரிமையா? கணவனை தண்டிக்க பல ஆண்களுடன் என்னை பகிர்வேன் என்பது பெண்ணுரிமையா?
  • ன் வயிற்றில் உருவாகிய கருவை பாதுகாப்பேன் என்பது மனிதாபிமானமா? அல்லது எப்படிவேண்டுமென்றாலும் அதை பயன்படுத்துவேன் என்பது பெண்ணுரிமையா?
      சமூகம் என்பது ஆணாலும் பெண்ணாலும் சரிசமமாய் கட்டெழுப்பப்படுவது தான். ஒருவரை ஒருவர் புறக்கணித்து செயல்படுவது இயற்கைக்கு எதிரானது. ஆண் இல்லாமல் பெண்ணால் வாழ முடியாது என ஆணின் திமிர்தனமான பேச்சும் உண்மை தான். அதே சமயம் பெண் இல்லாத உலகம் ஆண்களுக்கு நரகமானது என்பதும் உண்மைதான். ஒருவரை விடுத்து இன்னொருவரால் சாதிக்க முடியாது என்பதே உண்மை.  பெண்களை இழிவாக நடத்தும் ஆணாதிக்கம் ஒழியட்டும்.  ஆபத்தை பரிந்துரைக்கும் பெண்ணியமும் அழியட்டும். சமூகத்தை நன்முறையில் செதுக்கும் மனிதம் மலரட்டும்.

     ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லையை அழகாக வகுத்து கொடுத்து படைத்து இருக்கிறான் இறைவன். அவனுக்கு தெரியும் எது யாருக்கு பெஸ்ட் சாய்ஸ், வொர்ஸ்ட் சாய்ஸ்  என்று . மை சாய்ஸ் என்று  சொல்லிக்கொண்டு  இதுபோல் தான்தோன்றித்தனமாக,  அறிவுக்கு ஒவ்வாத வாழ்வை  வாழ்வதை விடுத்து , இறைவன் வகுத்து கொடுத்த பெஸ்ட் சாய்ஸ்-ல் பண்பாட்டோடு பாதுகாப்பாக வாழ முற்படுவோம். இதுதான் பாதுகாப்பான , நாகரிகமான, குழப்பமற்ற கேடயமாக இருக்கும். இதை தவிர பெரிய  உரிமையை எவராலும் பெண்களுக்கு வழங்கிவிட முடியாது.  புரிந்தவர்கள் புத்திசாலிகள்... புரியாதவர்கள் ஏமாந்தவர்கள்!  pity on you Feminist

உங்கள் சகோதரி,
ஆமினா முஹம்மத்.


read more "தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE"

Monday, April 06, 2015

நிறை ஆக்குவோம்..!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நாம் வாழும் வாழ்க்கையில்,  ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு ஒவ்வொரு ஆசைகள்.. அதில் சில நிறைவேறும்.. சில ஆசைகள் வெறும் கனவாகவே முடிந்து விடும். இதற்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை...ஆசை படுதலும், அதை அடைய முயற்சி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. இறைவன் மனிதனை ஆசை படுபவனாகத்தான் படைத்துள்ளான்..ஆசைகள்  நியாயமானதாக இருக்க வேண்டும்..வரம்பு மீறியதாக இருக்கக் கூடாது. என்பது மட்டுமே நியதி

திருமணம் ஆகாதவர்களுக்கு தனக்கு ஏற்ற துணை அமைந்து திருமணம்  ஆக வேண்டும் என்ற ஆசை.. திருமணம்  ஆனவர்களுக்கு குழந்தை  பிறக்க வேண்டும் என்ற ஆசை.. .மிக நியாயமான ஆசைகள் தான் ... அதிலும், ''இஸ்லாம் மார்க்கம்'' திருமணத்தை ஒரு வழிபாடு என்கிறது..திருமணம் பண்ணாதவன் என் வழி நடப்பவன் அல்ல என்பது நபிமொழி..திருமணம் செய்து அதன் மூலம் அதிக சந்ததி பெருக்கம் இருக்க வேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் விருப்பம்.

திருமணம் முடிந்ததும் நாம் அனைவரும் விரும்பும் ஒன்று குழந்தை பேறு...மழலை சொல்  விரும்பாதவர் யாரும் இங்கு உண்டா .?  ஒரு குடும்பத்தில், வீட்டின் சந்தோசத்திற்கு மிக முக்கிய காரணமாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது உண்மை. சரி, எல்லாருக்கும் அந்த ஆசை நிறைவேறுகிறதா  என்றால் இல்லை என்ற பதிலை தான் நாம் தர வேண்டிருக்கும்.ஒருவருக்கு குழந்தை பேறு கிடைப்பது என்பது இறைவனின் நாட்டத்தால் தான் அன்றி வேறு இல்லை.


நம் சமூகத்தில், பிள்ளை இல்லாத பெண்கள்..இவை ஏதோ அவர்களின் தனிப்பட்ட செயலாக  பார்க்கப்படுகிறார்கள்.  கணவனும், மனைவியும் என இருவர் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப் பட்டு, அவளின் மீது பரிதாப பார்வைகள் + குத்தலான பேச்சுக்கள் என  அந்தப் பெண்ணை நிலைகுலைய வைக்கிறது. இதன் காரணமாகவே வெளி இடங்களுக்கு வராத பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். 


இந்த இடத்தில் தான் நாம் ஒரு விசயத்தை நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சனையா...? உலகில்  வேறு யாருக்குமே இது போல இல்லையா என கவனித்து பார்த்தால் தெரிய வரும் உண்மை...நம் உறவிலும், நட்பிலும் எத்தனையோ பேர் இது போல இருக்கிறார்கள் என்பது . இது ஏதோ மற்றவர்கள் சொல்வது போல பாவம் செய்ததால் இறைவன் தண்டனை கொடுக்கிறான் என்பது அல்ல...மாறாக, எத்தனையோ ரிஸ்குகளை  கணக்கு பார்க்காமல் நமக்காக அள்ளி வழங்கும் இறைவன் இந்த விசயத்தில்  மட்டும் நாடாமல் இருக்கிறான் என்றால், அவன் இதை தவிர நம்மிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறான் என்பது தான்.

(42:49-50). அல்லாஹ் தான் நாடியோருக்கு  பெண் (குழந்தை)களை வழங்குகிறான்.  தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான்.  அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.  தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான்.  

நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களை வலிய தவிர்க்கிறோம் என்றால்..அது அல்லாஹ்வுக்காகத் தான் இருக்கும். தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனிதனை அல்லாஹ் விரும்புவதில்லை.குழந்தை இன்மைக்காக தன்னை வருத்திக் கொள்ளும் பெண்கள் இதை உணர வேண்டும்.. இறைவன்  அவனின் படைப்பினங்கள் எதற்கும் தாங்கி கொள்ள முடியாத சிரமத்தை கொடுக்க மாட்டான். 

குறை சொல்பவர்களின் நோக்கம்..அதன் மூலம் நாம் மனதளவில் வேதனையையும், சோர்வையும் சந்திக்க வேண்டும் என்பது...அவர்களை வெற்றி கொள்ள விடாமல் நாம் அவைகளை புறந்தள்ளத் தெரிய வேண்டும்.  நமக்கு பிடித்த ஒன்றை இறைவன் நாடா விட்டால், வேறு ஏதோ ஒன்றில் நமக்கான நன்மையை வைத்திருப்பான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..இதை அறியாமல் தான்  ஆணும், பெண்ணுமாகிய நாம், நம்மையும் சிரமப்படுத்தி நம்மை சுற்றியுள்ளவர்களையும் சிரமப் படுத்தி கொண்டு இருக்கிறோம்..மற்றவர்கள் பார்வையில் குறை என்று எண்ணுவதை நிறை ஆக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..


உதாரணமாக... நம் ஆயிஷா ( ரலி ) அவர்களை எடுத்துக் கொண்டால் நபி (ஸல் ) அவர்களுக்கு மிக பிரியமான மனைவியாக இருந்தும், குழந்தைகளை மிக நேசிக்கும் நபி (ஸல் ) அவர்களுக்கு ஆயிஷா (ரலி ) மூலமாக இறைவன் குழந்தையை கொடுக்க வில்லை..இறைவன் நினைத்திருந்தால் அவர்கள் மூலமாக நபி ( ஸல் ) அவர்களுக்கு எத்தனையோ குழந்தைகளை கொடுத்திருக்கலாமே..?? மாறாக... அறிவிலும், மார்க்க விளக்கத்திலும், மிக உயர்ந்த நிலையை பெற்றிருந்த  ஆயிஷா ( ரலி ) அவர்கள் மூலமாகத் நமக்கு பல ஹதீஸ்களை தெரியப் படுத்தினான். அவர்கள் வாயிலாக தான் கணவன்,மனைவி நடந்து கொள்ள வேண்டிய  பல தனிப்பட்ட விசயங்கள் நமக்கு தெரிய வந்தது. மேலும், அவர்களின் அறிவுரைகள் அன்றைய காலக்கட்டதில் எத்தனையோ குழந்தைகளுக்கு வழிகாட்டியாக, அவர்களின் வாழ்க்கை நேராக இருப்பதற்கு உதவியாக  இருந்தது.


குழந்தைகளை நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும், இந்த சமுதாயத்திற்காகவும் நல்லபடியாக வளர்ப்பது எப்படி நமக்கு  ஒரு நன்மையோ...அதே போல அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்கும் பிள்ளைகளை ஆதரிப்பதும்  நமக்கு நன்மையே.இன்னும் சொல்லப்போனால்..குழந்தை பெற்றவர்களுக்கான கேள்விகளை விட குழந்தை பெறாதவர்களுக்கு கேள்விகள் குறைவு.  

அனாதையை ஆதரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் அருகருகே இருப்போம். என்பது நபி மொழி....  நமக்கு முடியும் பட்சத்தில் ஒரு அனாதை குழந்தையை தத்து எடுத்து அதை நல்ல படியாக வளர்க்கும் பொறுப்பை மேற் கொள்ளலாம்..

நம்மை சுற்றிலும் எத்தனையோ பிள்ளைகள் படிக்க ஆசை இருந்தும்,  சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல் படிப்பில்  பின் தங்கி   இருப்பதை பார்க்கிறோம்.அவர்களுக்கு சிறிது  நேரத்தை ஒதுக்கி நமக்கு தெரிந்த கல்வியை  சொல்லி கொடுக்கலாம்...அதே போல நம்மால் வெளியில் போக முடியும் எனில், நம் மார்க்கம் அனுமதித்த வகையில் எத்தனையோ சமூக சேவைகளை செய்யலாம். இன்றைக்கு நம் பெண்பிள்ளைகள் சரியான ஆலோசனைகள் இல்லாமல் வழி தவறிப் போவதை பார்க்கிறோம்..அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பதை தெளிவு படுத்தலாம்.

இதே போல எத்தனையோ  பல நல்ல விசயங்களை செய்து ’’நமக்கான நன்மைகளை அதிகமதிகம் சேர்த்து கொள்ளலாம். குறை என்று எண்ணுவதை நிறை ஆக்குவதில் தானே நம் திறமை இருக்கிறது.சொர்க்கம் நரகத்தை தீர்மானிப்பது நம் செயல்கள் தான்.அது இவ்வுலகமாக இருந்தாலும் சரி..நிரந்தர உலகமாக இருந்தாலும் சரி.

நாம் வாழும் நிச்சயமில்லாத வாழ்க்கையில்.. ஒவ்வொரு நாளுமே நமக்கு இறைவன் கொடுத்த பரிசு. அதை பயனுள்ள விதத்தில், நாமும் சந்தோசமாக இருந்து.. மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருப்பதில் தானே நம் வெற்றி இருக்கிறது?  நாம் அன்னை ஆயிசா ( ரலி ) அவர்களின் வழி வந்தவர்கள்.அவர்களை போல நாமும் அனைவருக்கும் பயன் உள்ளவராக இருக்க  இறைவன்  நாடுவானாக..ஆமீன்..

6:17. “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

உங்கள் சகோதரி
ஆயிஷா பேகம்.
read more "நிறை ஆக்குவோம்..!"