Monday, March 23, 2015

நான் புர்காவிற்கு மாறிய கதை - யோவான் ரிட்லி (பகுதி-1)

(தாலிபானால் சிறைபிடிக்கப்பட்ட யோவான் ரிட்லி எனும் ஆங்கிலப் பெண்பத்திரிக்கையாளர், தாலிபான் வாயிலாகவே தான் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டதை விவரிக்கிறார்.  முஸ்லிம் பெண்கள் மீதான உலகின் பார்வையையும் தன் பார்வையையும் சுவைபட விவரிக்கிறார்.)

உலகம் காணும் முஸ்லிம் பெண்கள்:முகத்திரைக்குள் இருக்கும் முஸ்லிம் பெண்களைக் குறித்து எதுவும் அறியாமலேயே இஸ்லாத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதாகப் எழுதுவதில் அரசியல் துறைக்கும் ஊடகத்துறைக்கும் அத்தனை ஆனந்தம்!! 1400 வருடங்களுக்கும் மேலான பழமைவாய்ந்த இஸ்லாத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கண்ணியத்தையோ பாதுகாப்பையோ பற்றி கிஞ்சித்தும் அறியாதவர்கள் அவர்கள். குழந்தைத் திருமணம், பெண்கள் கத்னா, கருணைக்கொலை, கட்டாயத்திருமணங்கள் என்று முஸ்லிம்களிடையே நிகழும் கலாச்சார நிகழ்வுகளைக் கொண்டு இஸ்லாத்தைக் குறித்துத் தாமாகவே தவறான அறிவை வளர்த்துக்கொள்கின்றனர். இஸ்லாத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதற்குத், தன்னாட்டு பெண்களுக்கு வாகனங்கள் ஓட்டும் உரிமையை வழங்க மறுத்த சவூதி அரேபியாவை அவர்கள் உதாரணம் கூறுவதிலிருந்தே அவர்களது அறியாமை எனக்கு நன்கு புலப்படுகிறது.

மேற்கூறப்பட்ட நிகழ்வுகள் உள்பட ஒரு சமூகத்தில் நிலவும் கலாச்சாரங்களைக் கொண்டு அதன் மக்கள் பின்பற்றும் மார்க்கத்தைப் பழித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்ஙனம் அவ்விரண்டையும் ஒன்றொடொன்று ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

முஸ்லிம்கள் தமது மனைவிகளை அடிக்கவும் துன்புறுத்தவும் இஸ்லாம் அனுமதித்திருக்கிறது என்று இல்லாத ஒன்றைப் பற்றி எழுதச் சொன்னால் நான் என்ன எழுதுவது? இது போன்ற தவறான கருத்துகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் சிலர் மேம்போக்காகக் குர் ஆனிய வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அவற்றின் முழு பொருளடக்கத்தை மறைத்தும்விடுகின்றனர். நம்மில் பலர் அறியத் தவறிய குர் ஆனின் கூற்றை இங்குக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்எந்த பெண்ணின் மீதும் சிறு காயமேற்படுத்துவதையும் இஸ்லாம் அடியோடு தடுக்கிறதுஎன்பதே அவ்வுண்மையாகும்.


உலகிலுள்ள அனைத்து பெண்களின் நிலை:


நிச்சயமாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய சில புள்ளிவிபரங்களை உங்களோடு பகிர்கிறேன். National Domestic Violence Hotline எனும் அமைப்பின் தகவல்களின்படி,

## ஒரு வருடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு மில்லியன் அமெரிக்கப்பெண்கள் தமது வாழ்க்கைத்துணைகளால் துன்புறுத்தப்படுகின்றனர்.
## கணவன்மார்களால் அல்லது ஆண் நண்பர்களால் தினமும் கொல்லப்படுபவர்கள் சராசரியாக மூன்று பேர்.
## 9/11 க்குப் பிறகு 5500 பெண்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

 
இவை போன்ற தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருக்கலாம். நான் இதன்மூலம் சொல்லவருவது என்னவென்றால், வன்செயல்கள் என்பவை உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு அநீதியாகும். வன்முறையாளர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரையோ வகுப்பினரையோ மட்டும் சேர்ந்தவர்கள் அல்லர். உலகம் முழுவதிலும் மூன்றில் ஒரு பெண் அவளது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ கற்பழிக்கப்பட்டோ அல்லது வேறு வகையிலோ துன்புறுத்தப்படுகிறாள் என்பதே உண்மை. பெண்களுக்கெதிரான வன்முறை என்பது மனிதர்களின் மதம், செல்வம், வகுப்பு, நிறம் மற்றும் கலாச்சாரம் என அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்ற உண்மை இப்பொழுது வெளியாகிவிட்டது.

இஸ்லாம் என்ற ஒன்று மனிதர்களிடையே அறிமுகப்படுத்தப்படும் வரை பெண்கள் ஆண்களை விட தரம் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர். இன்றும் மேற்குலகில் ஆண்கள் தம்மைத்தாமே மேம்படுத்தப்பட்டவர்களாக கூறிக்கொள்கின்றனர். அதன் அடிப்படையிலேயே அனைத்து வித பணியிடங்களிலும் பெண்களைவிட அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இன்றைய வர்த்தகத்தில் சந்தைப்பொருளாகவும் பாலியல் துறையில் அடிமைகளாகவுமே இன்று மேற்குலகில் பெண்கள் விளம்பரத்தப்படுகின்றனர். நான் முன்பே கூறியது போல்
@பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் பெருகிவிட்டதானதாகவும்
@ஆண் பெண் சமம் என்ற ஒரு மாயை நிறைந்ததாகவும்
@மார்பளவுகளைக் கொண்டே ஒரு பெண்ணின் சக்தியும் ஆளுமையும் கணக்கிடப்படும் வெட்கங்கெட்ட ஒர் இடமாகவுமே 
இச்சமுதாயம் திகழ்கிறது.

நான் காணும் முஸ்லிம் பெண்கள்:


நானும் முன்பு முகத்திரையிட்ட பெண்களை ஒன்றுமறியாதவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் நினைத்திருந்தேன். செப்டம்பர் 2011ல் நான் புர்கா அணிந்து ஆப்கானிஸ்தானில் நுழைந்த குற்றத்திற்காக தாலிபான்களால் கைதுசெய்யப்பட்ட அனுபவத்திற்குப்பின் தான் முந்தைய என்னுடைய பார்வை முற்றிலும் தவறு என அறிந்துகொண்டேன். இன்று அவர்கள் பல்வேறு திறன் படைத்தவர்களாகவும் தடைகளைத் தகர்த்தெறியக்கூடிய பெண்களாகவும் இருப்பதையே காண்கிறேன். முஸ்லிம் பெண்களிடையே ஒளிரும் சகோதரத்துவம்மேற்கத்திய பெண்ணீயத்தை வெளிரச்செய்துவிட்டது. 

நான் பத்து நாட்கள் சிறைத்தளத்தில் இருந்த போது எனக்கும் தாலிபான்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் என்னை விடுவித்தால் நான் குர் ஆனையும் இஸ்லாத்தையும் பற்றி கற்றறிந்துக் கொள்ள வேண்டுமென்பதே அவ்வொப்பந்தமாகும். ஆச்சரியம்…. அந்த ஒற்றை விதியின் பேரிலேயே ஒருமனதாக என்னை  விடுதலை செய்தனர். நன்றிக்கடனாக என் வார்த்தையைக் காப்பாற்றினேன். மேலும் பத்திரிகைத்துறையைச் சேர்ந்த ஒரு நபராக, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் ஒரு மார்க்கத்தைக் குறித்து, நான் அதிகம் அறிந்துகொள்ள ஆவல்கொண்டேன்.

என் பிடியில் தாலிபான்??:

தாலிபானைச் சந்திக்கச் செல்லும் யோவானுக்குத்
தன் துப்பாக்கியை அளிக்கும் பாகிஸ்தான் அதிகாரி

நான் ஏதோ ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம், அதாவது கைது செய்தவர்களின் மீது ஏற்பட்ட பச்சாதாபத்தினால் அவர்கள் மேல் பரிதாபம் கொள்ளும், நோயாளி என எண்ணிகொள்ள வேண்டாம். ஏனெனில் தாலிபானின் பிடியில் நான் இருந்த போது அவர்களை அடித்தும் திட்டியும் சாபம் விட்டும் பழித்துக்கொண்டுமிருந்தேன். அவர்கள் தந்த உணவினை மறுத்து உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டேன். இந்த காரணங்களால் உண்மையில் என்னை அவர்கள் விடுவித்தபோது அதிகம் மகிழ்ந்தது நானா அல்லது அவர்களா என்றே எனக்குத் தெரியவில்லை.

எனக்குக் கிடைத்த இஸ்லாத்தின் அறிமுகம்:


குர் ஆனும் ஒரு சாதாரண புத்தகம் என்றே நினைத்திருந்தேன். அதனைப் படிக்கத் துவங்கிய பின் அதில் ஆணும் பெண்ணும் இறைவழிபாட்டிலும் கல்வியிலும் மதிப்பிலும் சமமானவர்களாகக் கூறப்பட்டுள்ளதை அறிந்து வியந்தேன். தனது குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்துப் பராமரிக்கும் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் கண்ணியத்திற்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். குடும்பத்தலைவிகளாக இருப்பதை ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மிகப் பெருமைக்குரியதாகக் காண்கின்றனர்.

மேலும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) ஒரு வீட்டில் யார் அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கேள்விக்கு தாயே ஆவார் என்று மும்முறை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். சிறந்த தாயாக இருக்கும் ஒரே காரணத்திற்காக,  எத்தனை பெண்கள் இத்தகைய பெருமையை அடைந்திருப்பார்கள்?

இத்தகைய காரணங்களால் அலுவலங்களில் பெரிய பெரிய பதிவிகள் வகிக்கும் பெண்களைப் போலவே வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் இஸ்லாமியப் பெண்கள் மீதான என் பார்வையிலும் எனக்கு மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு பெருகிவிட்டது.

இதற்குப் பின் வாரிசுரிமை, வரி, சொத்துரிமை, விவாகரத்துச் சட்டங்களைப் பற்றி அறிய முற்பட்டேன். விவாகரத்தின் போது முஸ்லிம் பெண்களுக்குரியதை அவர்கள் விரும்பினால் மட்டுமே விட்டுத்தரலாம் எனும் இஸ்லாமிய சட்டத்தைத் தான் இன்றைய மேற்கத்திய விவாகரத்திற்கான சட்டப்புத்தகம் பின்பற்றுகிறது என்று நினைக்கிறேன்.

எத்தனையோ திரை நட்சத்திரங்கள் தங்களுக்கிடையே போடும் விறுவிறுப்பான திருமண ஒப்பந்தங்களைப் பத்திரிக்கைகளில் பாராட்டும்போது வாய்மூடாமல் வியக்கிறோம். ஆனால் முஸ்லிம் பெண்களுக்குத் திருமண ஒப்பந்தம் இயற்கையாகவே கிடைத்த அழகிய வாய்ப்பு. அவர்கள் பணிக்குச் செல்வதும் அவர்கள் சம்பாதித்தவற்றை அவர்கள் செலவு செய்வதும் அவர்கள் சுய விருப்பத்திற்குட்பட்டதாகும். இதுவே ஆண்கள் தமது வருமானத்தைத் தம் குடும்பத்திற்காகச் செலவு செய்ய கடமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

1970களில் எவற்றையெல்லாம் வேண்டி அக்காலத்து பெண்ணீயவாதிகள் போராடினார்களோ அவ்வனைத்தையும் இஸ்லாம் அதன் பெண்களுக்கு  1400 வருடங்களுக்கு முன்பே வழங்கிவிட்டது. நான் முன்பே கூறியது போல் தாயையும் மனைவியையும் இஸ்லாம் கண்ணியப்படுத்துகிறது. நீங்கள் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க நாடினால் தாராளமாக இருந்து கொள்ளலாம். குடும்பத்தலைவியாகவும் உங்கள் குழந்தையின் முதல் ஆசிரியையாகவும் இருந்து கொள்வது உங்களுக்கு அளிக்கப்பட்ட பேருபகாரமாகும்.

பெண்களைக் கல்வி பயிலவும் விரும்பிய பணிகளைச் செய்து கொள்ளவும் வழிகாட்டும் அதே குர் ஆன், அச்செயல்களில் எதுவும் ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் எதிலிருந்தும் தடுத்துவிடக்கூடாது எனவும் அறிவுறுத்துகிறது. ஏனெனில் இறைவனின் பொருத்தத்திலேயே நம் வெற்றி அமைந்துள்ளது.


தொடரும்...

(ஆண்களின் கவலையும் என் கேள்வியும் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்....)

No comments:

Post a comment