Sunday, March 08, 2015

யாருக்கு மகளிர் தினம்???


எங்க பார்த்தாலும், எந்த சேனலைத் திருப்பினாலும் மகளிருக்கு ஒரே வாழ்த்தும், பாராட்டுமாகத் தான் காணப்படுகின்றன. பெண்களுக்கு தான் எவ்ளோ மரியாதையும், மதிப்பும் இந்த நாட்டில்..!!!!!.

சரி செய்திகள் பார்ப்போம் என்று அப்படியே சேனலை மாற்றினால்..கால் சென்டரில் தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை நான்கு வாலிபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லி அவர்களின் முகத்தை துணியால் மறைத்து அழைத்துக் கொண்டு சென்ற காட்சி கண்ணில் தென்பட்டது.

அது ஏன் இப்படி  ஆண்களின் முகத்தை மூடிவிட்டு அழைத்துச் செல்கிறார்களென தெரியவில்லை..

இப்போது எல்லாம் இது போன்ற செய்திகள் மனதிற்குப் பழகி விட்டது. என்றேனும் ஒரு நாள் என்றால் மனசுக்கு பகீரென இருக்கும்..? இப்ப தான் நாம் எல்லாரும் தினம், தினம் இது போன்ற செய்திகளை கேட்டுட்டே தானே இருக்கிறோம். இது மட்டும் தானா..?

புத்தகங்களிலும், முகப்புத்தகங்களிலும் சமீபத்தில் பேசப்பட்ட ஒரு விஷயம்...ஒரு பிரபல நடிகையின் குளியலறை காட்சி பற்றி...அவர் குளித்த ஹோட்டல் அறையில் மறைக்கப்பட்டு இருந்த கேமரா மூலம் அவர் குளிக்கும் படம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது அவர் பிரபல நடிகை என்பதால் அனைவருக்கு வெளியில் தெரிய வந்திருக்கு..இதுவே தெரியாத ஆள் எனில் இணையத்தில் மட்டும் பகிரப்பட்டு மனம் கெட்ட மனிதர்களுக்கு காட்சி பொருள் ஆகி இருக்கும்.

முன்பெல்லாம் கிராமங்களில்.. ஆறு, குளங்களில் பொது வெளியில் பெண்கள் சர்வ, சாதாரணமா குளிப்பதை பார்த்து இருப்போம்..இப்போதும் எங்காவது போகும் போது கண்ணில் இது போல காட்சிகள் தட்டுப்படும்.

அதை எல்லாம் யாரும் உட்கார்ந்து ரசித்துப் பார்ப்பதில்லை....இன்னும் சொல்ல போனால்....''நல்ல ஆண்கள்'' தலையை குனிஞ்சுட்டு வேக, வேகமாக அந்த இடத்தை கடந்து போவார்கள்.

பொது வெளியில்... பட்டப்பகலில் குளித்த அந்த பெண்களுக்கு இருந்த அந்த பாதுகாப்பும், சுதந்திரமும்....இப்போது சில ஆயிரங்கள் செலவழித்து ஹோட்டலில் தனி ரூமில் தங்கி குளிக்கும் பெண்களுக்கு இல்லை.

இப்போது எந்த இடத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்றாகி விட்டது..ஹோட்டல், மருத்துவமனை, பள்ளி, ஆபிஸ், பஸ் என எங்க பார்த்தாலும் கேமராவின் கண்கள்.செல்போன் வைத்திருப்பவர்கள் சிலர் காசு செலவழித்து படிக்காத காமிராமேன் ஆகி விட்டார்கள். பெண்களின் உடலை ஒவ்வொரு கோணத்திலும் போட்டோ எடுப்பது தான் அவர்களின் வேலை.

முன்பு இல்லாத அளவுக்கு பெண்களின் உடலை கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் படம் எடுக்கும் அளவுக்கு அதை - உடலை மட்டுமே பார்க்குமளவு - அந்த உடலில் ஒரு உயிருள்ள மனதும் இருக்கிறது என்பதை மறந்துவிடுமளவு - இன்றைக்கு உடல் - அழகு - காமம் முன்னிறுத்தப்படுகீறது.

பெண்களின் உடல் மீதான வேட்கை என்பது காலங்காலமாக இருந்து வரும் ஒன்று தான்..எத்தனையோ பல பெரிய மனிதர்களின் தலைகுனிவுக்கும், சரிவுக்கும் பெண்களின் மீதான மோகமே காரணமாக இருந்திருக்கிறது.

ஒரு ஆணோ, பெண்ணோ ...விருப்பப்பட்டு தன் உடலை அடுத்தவருக்கோ, அல்லது போட்டோவுக்கோ பகிர்வது என்பது வேறு..அது உடல் தேவைக்காக இருந்தாலும் சரி, அல்லது பணத்தேவைக்காக இருந்தாலும் சரி..அதனுடைய நன்மையும், தீமையும் அவர்களைச் சேர்ந்தது.

நாடு முழுவதும் கேமராக்கள் பொருத்தினால் மட்டும்..பெண்கள் மீதான இது போல குற்றங்கள் குறையுமா? தனி மனிதனுக்கு என்று சுய கட்டுப்பாடும், ஒழுக்கமும் இல்லை எனில் எத்தனை லட்சம் கேமராக்கள் பொருத்தியும் ஒண்ணும் செய்ய முடியாது.

கேமராக்களில் குற்றவாளிகளின் முகம் தெரிந்தும் ...யாரையும் பிடித்து தண்டனை கொடுத்த மாதிரி தெரியவில்லை.. அப்படியே தண்டனை கொடுத்தாலும்..அவன் எந்தக் கவலையுமின்றி ஜெயிலில் அமர்ந்து பணம் வாங்கிக்கொண்டு பேட்டி கொடுத்து தன் தவறை நியாயப் படுத்திக்கொண்டு இருக்கிறான்.

ஆசிட் ஊற்றினானா...? பிடித்து அதே போல பொதுவில் வைத்து முகத்தில் ஆசிட்டை ஊற்று..அப்ப தானே தெரியும் அது எப்படிப்பட்ட வேதனையை அந்த பெண்ணுக்கு கொடுத்து இருக்கும்னு....பலாத்காரமா..? பிடித்து பொதுவில் வைத்து  அவனை தலையில் ஒரே வெட்டா வெட்டு...அப்ப தானே இது போல செய்ய நினைக்கிறவன் பயப்படுவான்.எந்த ஒரு ஆண்... தன்னை நம்பி வந்த பெண்ணின் உடலுக்கும், உடமைக்கும்...அது எந்த இடமாக இருந்தாலும் சரி... கடைசி வரை பாதுகாப்பு கொடுக்கிறானோ அவனே ''நல்ல ஆண்மகன்''

எந்த ஒரு வீடு... பெண்களுக்கான சந்தோஷங்களையும், மதிப்பையும் கொடுக்கிறதோ அதுவே ''சிறந்தவீடு''

எந்த ஒரு நாடு ...வாழும் பெண்களுக்கு அவர்களுடைய உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் உத்திரவாதம் கொடுக்கிறதோ அதுவே ''நல்லநாடு''

பெண்களைக் கடவுளாக மதிக்கும் இந்த நாடு தான்..பெண்களை வக்கிரமாகவும், கேவலமாகவும் நடத்துகிறது .பெண்களை கடவுளாகவும், மதிக்க வேண்டாம்..காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம். சக மனுஷியாக, சக உணர்வாக, சக தோழமையாக மதித்து நடத்தினாலே போதும். இந்த நிலை  என்று  வருகிறதோ அன்று  சொல்லுங்கள் மகளிர் தின வாழ்த்து..


சகோதரி
ஆயிஷா பேகம்.

5 comments:

 1. /அது ஏன் இப்படி ஆண்களின் முகத்தை மூடிவிட்டு அழைத்துச் செல்கிறார்களென தெரியவில்லை..//

  குற்றம் நிரூபிக்கப்படும் வரை, முகத்தைக் காட்ட மாட்டார்கள். குற்றவாளி சாயல் உள்ள பலரைச் சேர்த்து அணிவகுப்பு நடத்தி அதிலிருக்கும் குற்றவாளியை, சாட்சிகள் சரியாக அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை. முதலிலேயே முகத்தைப் பார்த்து விட்டால், சுலபமாக அடையாளம் காட்டி விட முடியுமே... அதனால்... (எனக்குத் தெரிந்த வரை இதுதான் காரணம்)

  ReplyDelete
 2. //முன்பெல்லாம் கிராமங்களில்.. ஆறு, குளங்களில் பொது வெளியில் பெண்கள் சர்வ, சாதாரணமா குளிப்பதை பார்த்து இருப்போம்..//

  எங்க ஊரிலும் பலகாலம் இப்படித்தான் ஆற்றில் குளித்தோம். நல்லவேளை அப்போது கேமரா மொபைல்கள் இல்லை.

  //இப்போதும் எங்காவது போகும் போது கண்ணில் இது போல காட்சிகள் தட்டுப்படும்.//

  பாவம்... வீட்டிலும் குளியலறை வசதிகள் இருக்காது. வேறு வழியின்றி குளங்களில் குளிக்க வேண்டிய அவசியம்... என்னென்ன தொல்லைகளோ... கிராமப்புறம் வெளியே சொல்லவும் முடியாது... சொன்னா, அதுக்கும் பெண்மீதுதான் பழி விழும்.

  ReplyDelete
 3. காலத்திற்கேற்ற அவசியமான பதிவு . தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தும் நன்மைகள் போலவே , சில தீமைகளும் இருக்கு.தீப்பந்தத்தை பிடிப்பவர் பொருத்து .. வெளிச்சம் கொடுப்பதும் , கொளுத்திவிடுவதும் . பெண்மணி எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் வாழ பழகனும் . வாழ்த்துக்கள் ஆயுஷா .

  ReplyDelete
 4. الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ

  Men are the maintainers of women because Allah has made some of them to excel :


  4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

  ReplyDelete
 5. # ஆசிட் ஊற்றினானா...? பிடித்து அதே போல பொதுவில் வைத்து முகத்தில் ஆசிட்டை ஊற்று..அப்ப தானே தெரியும் அது எப்படிப்பட்ட வேதனையை அந்த பெண்ணுக்கு கொடுத்து இருக்கும்னு....பலாத்காரமா..? பிடித்து பொதுவில் வைத்து அவனை தலையில் ஒரே வெட்டா வெட்டு...அப்ப தானே இது போல செய்ய நினைக்கிறவன் பயப்படுவான். #

  நச்சுனு ஒரு பதிவு .!

  ReplyDelete