Monday, March 02, 2015

பீவியம்மாவின் பொறுமை

”பீவி ,இங்க கொஞ்சம் வாயேன்! வெளிய கிளம்பறேன்”

''இந்தா வந்துட்டேங்க...செத்தநேரத்துல சாயா ரெடிஆகிரும் , ஒருவாய் குடிச்சுட்டு போங்களேன்”

சாயாவுக்குத் தண்ணீர் காயும் நேரத்தில் பீவியம்மாவுக்கு பழைய நியாபகங்கள் நிழலாடுகின்றன. இடித்து கட்டவேண்டிய பழையகாலத்து வீடு, கணவரின் வயதான தாயார், இறந்துபோன மகள் நினைவு , இப்படி சில பல விஷயங்கள் கல்யாணம் ஆன முதல் பத்து வருடத்தில் நடந்தேறிவிட்டன.

மனதிற்குள் இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன் ! (நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்) என்ற வசனமும் நிலைத்து விட்டது.

சீமை சம்பாத்தியத்தில், கைக்கும் வாய்க்கும் போக, சிறுகச்சேர்த்து ஈமானை இறுக்கிப்பிடித்து பழைய வீட்டை இடித்து புதியதாய்க் கட்டியாகிவிட்டது. மகளின் பிரிவில் காத்த பொறுமையின் பலனாக அழகான மகனை அல்லாஹ் அருளினான். மகனின் வயதும் ஐந்தாகிவிட்டது ... மகனையும் சீமைக்கு அழைத்துச்செல்ல மகனின் அத்தா (அப்பா) ஊர் வந்திருந்தார்கள்.

”இஞ்சி சாயா கொண்டு கொடுக்கையில் ஒருவார்த்தை சொல்லுவோம் '' மகன் என்னோடே இருக்கட்டும் 12 வருஷம் நாந்தனியா கெடந்த பலன் அவன்” என்று ஒத்திகை பார்த்து வைத்திருந்த வார்த்தைகள்  டம்ளர் காலியான பிறகும் பீவியம்மா வாயில் இருந்து வெளிவரவில்லை. அப்படியே கணவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் பழகிவிட்டது.

மனதிற்குள் இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன் !மகனும் தந்தையுடன் சீமைக்குக் கிளம்பும் பயணக்கிழமையும் வந்து விட்டது. தன் கால்களைக் கட்டிக்கொண்டு "ம்மா நான் உங்கள விட்டு போமாட்டேன் மா.. எனக்கு சீம சொக்கா..சொக்கலேட்டு எதுமே இனிமே வேணாம்மா” என்று மகன் அழுதது பீவியம்மாவின் மனதைப் பிசைந்தது.

”எம்புள்ளைய என்கிட்டையே விட்டுட்டு போங்களேன்" என்று முதல்முறையாய் வாய்விட்டு ஒருவார்த்தை வெளி வந்து விழுந்தது.. அது வார்த்தை அல்ல..ஒருதாயின் பரிதவிப்பு ..வந்தநாள் முதல் ,கணவரின் விருப்பப்படி எல்லாம் நடந்தது போலவே இதுவும் நடந்தது ..மனதிற்குள் இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன் !

பீவியம்மா பரிதவிப்பில் பேசிய வார்த்தை (கணவனுக்கு தவறாகத் தோன்றிய ஒரு வார்த்தை) பிற்காலத்தில் வினையாகிப்போகும் என யாரும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

பாலகனாகத் தன்னை விட்டு போன மகனைப் பலவருடம் ஆகியும் ஊருக்கு அழைத்து வந்து கண்ணில் யாரும் காட்டவில்லை. வாழ்க்கையும் பேப்பர் பூவாய் ஆனதால் பிள்ளைக்கனி இல்லை . பீவியம்மா தன் மகனது வருகைக்காகக் காத்திருந்தார். சில வருடங்கள் கழித்து, மகனுக்கான மணப்பெண்ணைத் தன் சொந்தத்திலேயே முடிவு செய்துவிட்டதாகவும் திருமணத்தை நடத்துவதற்குத் தந்தையும் மகனும் கிளம்பி வருவதாகக் கடிதம் வந்து சேர்ந்தது. பலவருடங்களைத் தனிமையில் வாழ்ந்த பீவியம்மாவிற்கு, மகனின் வருகையும் அவனது நிக்காஹ் மற்றும் புதுமகள் வரவு என உற்சாகத்திற்கு அளவில்லாமல் நாட்கள் கழிந்தன.

பின்வந்த சில வருடங்கள் பேரன்-பேத்தி வளர்ப்பதில் பீவியம்மாவிற்கு உலகமே சொர்க்கபூமியாகவே ஆகிவிட்டது . ஆனால் எல்லாம் குறைந்த காலம் தான் நீடித்தது. மழைக்காலத்தில் உபயோகிக்க விறகு-சுள்ளி சேர்க்கும் நேரம், விஷஜந்து ஒன்று கடித்ததால் மீதி வாழ்க்கையே விஷமாகிப்போகும் கொடூரமும் நடக்கப்போவதை அறியாமல் குடும்பத்துக்காக அனைத்து வீட்டுவேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துகொண்டிருந்த ஒரு காலை வேளையில் தூங்கி எழுகையில் கைகால்களில் திட்டுத்திட்டாகத் தடிப்பு. உள்ளூர் முதல் வெளியூர் வரை.. நாட்டு வைத்தியம் வரை அனைத்து முயற்சிகளும்  தோல்வியிலேயே முடிந்தது. உடல் முழுவதும் நிறம்மாறி அரிப்பும் ஏற்பட்டது. சபூர் வந்த கணவன் தனியறையில் தங்கச் சொல்ல அதையும் மனம்பொருந்தி ஒதுங்கினார் பீவியம்மா. 

பீவியம்மாவைக் காண மருமகள்-பேரன் பேத்தி சின்னஞ்சிறார்களுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சொந்தவீட்டிலேயே அகதியாய் அடைபட்டிருந்த சமயத்திலும் மனதிற்குள் இன்னல்லாஹ ம’அஸ்ஸாபிரீன் !

நாட்கள் செல்லச்செல்ல பீவியம்மாவின் கணவர் வெளிநாடு கிளம்பும் நாளும் நெருங்கி வந்தது. அதிகாலைத் தொழுகைக்குப் பிறகு, தன் அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டுருந்த மனைவியின் காதில் விழும்படியாகவே, ”சீக்குகாரிக்கு இந்த வீட்டில் இடம் இல்லை.. சீக்கிரம் வெளியேறிடணும்'' என்ற வார்த்தைகள் உரத்துச் சொல்லப்பட்டன.

இதை கேட்ட பீவியம்மா மனதிற்குள் இன்னல்லாஹ ம’அஸ்ஸாபிரீன் !

குடும்பப்பெரியவர்கள் வந்து பார்த்தனர். பீவியம்மா வீட்டை விட்டு கிளம்பும் செய்தி மகனுக்கும் தொலைபேசியில் சென்று சேர்ந்தது. மகன் மனம் தாளாமல், ”நாம தனியா போகலாம்மா... என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நீங்க மட்டும் போதும்.. அத்தாவுக்கு சொத்து இருக்கு..உங்க சொத்து நாங்க மட்டும்தான்” என்று மகன் அழுத போதும் ”வேணாம்பா... நான் போறேன்” என்ற பதில் மட்டுமே  பீவியம்மாவிடமிருந்து வந்தது.

போகும்போது ஊரே அதிரும்படி ஒரு உண்மை காரணம் பீவியம்மாவின் வாயில் இருந்து வந்தது. அது “என் மகனைப் பிரிய மாட்டேன்னு அன்னைக்குச் சொன்ன ஒரு சொல்லால் என்மேல் கோவப்பட்டு , அதில் இருந்து என்னோடு பேருக்கு மட்டுமே கணவனாக இருந்தார்கள், என் மகனுக்காக நானும் இவ்வளவுநாள் பொறுத்தேன்..என் மகன் மூலம் பிள்ளைச்செல்வங்களை தந்து, ரப்புல் ஆலமீன் என் கண்குளிர வைத்துவிட்டான்.. என் சீக்கு என் கண்மணிகளுக்கு வேணாம் என்றே என் மனதும் ஆசைபடுது..நான் இவ்வளவு வருஷமாகப் போலியாய் இருந்தேன்..இனி நிம்மதியா இருப்பேன் ...”.

ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்து, மகனின் உழைப்பில் சொந்தமாக தனக்கென்று வீடு கட்டி வாழ்ந்து, மரணிக்கும்போது சொன்னதும் இன்னல்லாஹ ம’அஸ்ஸாபிரீன் !

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அவனிமிருந்தே வந்தோம். அவனிடமே திரும்பிச் செல்வோராக இருக்கிறோம்)

கதை ஆக்கம்: ஹவா நூரியா

6 comments:

 1. மகனை பிரிய மாட்டேன்னு சொன்னதுக்கா இவ்வளவு கோபப்பட்டு விட்டார் - என்ன மக்களோ போங்க ...

  ReplyDelete
 2. பாவம் அப்ப அப்படியெல்லாம் இருந்திருக்காங்க..

  மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது விடும் ஆண்களுக்கு பெண்களின் உணர்வுகள் எப்போதும் புரிவதில்லை...

  ஆணாகினும் பெண்ணாகினும் நாம் இவ்வுலகில் படைக்கபட்டதன் நோக்கம் உணர்ந்து அல்லாஹ் நமக்கிட்ட பொறுப்புகளை சரியாக செய்து ,சொர்க்கவாசிகளாக முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்..

  ReplyDelete
  Replies
  1. நாம் இவ்வுலகில் படைக்கபட்டதன் நோக்கம் உணர்ந்து // உணர்ந்தாலே பிரச்சனைக்கு வேலை இல்லை .. வருகைக்கும்,கருத்துக்கும் ஜசாகல்லாஹ் ஆமினா

   Delete
 3. இப்படியும் ஆண்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் ..சில நேரம் இவர்களெல்லாம் சுயநலவாதிகளோ என்று தோன்றுகிறது ..ஹவா நூரியா ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய வரிகள் நிச்சயமாக நாம் அவனிமிருந்தே வந்தோம். அவனிடமே திரும்பிச் செல்வோராக இருக்கிறோம்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் ஜசாகல்லாஹ் சிஸ்.பாத்திமா !

   Delete
 4. Great story..... yeppadi porumaya iruka vendum endra kathai...kathai padittathum beeviamma mathiri nammalum ella visayathulayun porumaya iruka vendum yena tonuthu

  ReplyDelete