Sunday, February 08, 2015

ஆமினா அஸில்மி: முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது ஏன்?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

முஸ்லிம் பெண்கள் தலையில் முக்காடு அணிவது, அவர்களது தலையை மட்டுமல்ல.. மூளையையும் சேர்த்தே மறைத்து, அவர்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று விநோத கருத்துகள் கொண்டவர்களுக்குத் தக்க, வித்தியாசமான பார்வையில் தன் நேர்நோக்கங்களையும் முஸ்லிம் பெண்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் அருமையான எண்ணங்களையும் சகோதரி ஆமினா அஸில்மி இங்கு பகிர்கிறார்கள்:

தான் சார்ந்திருந்த கிருத்துவ மதத்திற்கு முஸ்லிம்களை மாற்ற நினைத்து, பின் உண்மையறிந்து முஸ்லிமாக மாறியவர் சகோதரி ஆமினா அஸில்மி. இஸ்லாத்தின் மீது கொண்ட பற்றினால் இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் தன்னை வளர்த்துக்கொண்டார். அமெரிக்காவின் சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர். மேலும் சகோதரியைப் பற்றி அறிந்து கொள்ள :ஏன் இஸ்லாம்? - ஆமினா அசில்மி

சகோதரி ஆமினா அஸில்மியின் கருத்து:

நாம் பிறருக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும்பொழுது அவர்கள் புரியும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும். நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளில் இதுவும் ஒன்று: அதாவது முஸ்லிம் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்? நம்மில் பலர் அடிக்கடி எதிர்கொண்ட இக்கேள்வியை நான் முஸ்லிம் பெண்மணிகள் பலரிடமும் கேட்டுவிட்டேன். 99 பேரில் ஒருவர் மட்டுமே இக்கேள்விக்குச் சரியான விடையளித்துள்ளார். 

முஸ்லிம்களே முக்காடு அணிவதற்கான சரியான காரணத்தினை அறிந்திருக்காவிடில், முஸ்லிமல்லாதோரிடம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலை எதிர்பார்க்க முடியும்:? இதற்கான பதில் நம் வேதமாகிய குர் ஆனிலேயே உள்ளது.

முதலாவதாக, நாம் முஸ்லிம்கள் என்று அறிந்துகொள்வதற்காக நாம் முக்காடு அணிகிறோம். இது முதல் காரணம். வாய்மையின் வெளிப்பாடாகவும் முஸ்லிமாக வாழ்வதில் நாம் அடையும்  பெருமையை வெளிப்படுத்தவும் அணிகிறோம். ஆனால், இம்முக்காடு இன்னும் பல ஆழ்ந்த கருத்துகளையும் வெளிக்கொணர்கிறது.உங்கள் முன் முக்காடு அணிந்து நிற்கும்  இப்பெண்ணானவர் அளவில்லாத வலிமைதைரியம், நேர்மையின் உருவமாக இருப்பவர். இவர் பொய்யுரைக்கமாட்டார்; இவர் ஏமாற்ற மாட்டார்; அனைவரையும் விட சிறந்த பணியாளராகவும் இருப்பவர்சிறந்த எஜமானியாகவும் இருப்பவர்; சிறந்த தோழியாகவும் சிறந்த ஆலோசகராகவும் விளங்குபவர்.

ஒரு முஸ்லிமாக இவரை நீங்கள் முழுமையான நம்பகத்தன்மையுள்ளவராக ஏற்றுக்கொள்ளக்கூடியவர். அதே சமயம், ஒரு எச்சரிக்கை விடுப்பவராகவும் இருக்கிறார். ஆம்... தன் சுயமதிப்பை முழுமையாக உணர்ந்த ஒருவரே உங்கள் முன் நிற்பவராவார். இவர் ஒரு விளையாட்டு சாதனம் அல்லர். ஆகையினால், இவரிடம் உங்கள் விளையாட்டுத்தனத்தைக் காட்டுவதற்கு முயற்சி செய்ய எண்ணியும் விடாதீர்கள்.

மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து அறியப்படவேண்டும் எனும் என் விருப்பத்தையே என் ஹிஜாப் நேரிடையாக உலகிற்குக் கூறுகிறது. நான் யார் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதையே நான் உங்களிடமிருந்தும் நீங்கள் என்னிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். ஆகையால்,என்னிடம் நீங்கள் பேச வரும்போது உங்கள் சுயவிபரங்களை எங்கேனும் விட்டுவிட்டு வாருங்கள். அதை அறிந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என்னுடன் பேசுகையில் வேறு யாரைப் பற்றியும் கதைக்காதீர்கள். என் சகோதரனின் சதையை உண்பதற்கு நான் ஒருக்காலும் விரும்பமாட்டேன்.

ஆக, இந்த முக்காடு என்னை முஸ்லிமாக அடையாளம் காட்டுவதோடு மட்டுமில்லாமல்,இன்னும் ஒரு படி மேலே சென்று அது கூறுவது என்னவென்றால் பாலியல் தொந்தரவுகளிலிருந்தும் என்னை அது பாதுக்காக்கிறது. சிலர் பாலியல் தொந்தரவுகளை பாலியல் பலாத்காரத்துடன் இணைக்கின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கும் நிகாபிற்கும் சம்பந்தமில்லை. கற்பழிப்பிற்கும் பாலியல் ஈர்ப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பாலியல் பலாத்காரம் என்பது வன்முறை, வெறுப்பு மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். என்னை விட அதிக வயதான பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்கள் என்ன உடை அணிந்திருந்தாலும் சரியே. வயதிற்கும் உடைக்கும் கற்பழிப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. கற்பழிப்பவர்களின் மனம் முழுவதும் வெறுப்பினால் நிறைந்துள்ளது. இவற்றில் இருந்து பாதுகாப்பு என்பது அவரவர் அணுகுமுறையிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது.

ஏனெனில் என்னைப் பற்றி அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அதுவே இஸ்லாமிய மனப்பாங்கு (islamic attitude) ஆகும். நான் விளையாட்டுப் பொருள் அல்லள். நான் உண்மையானவளாகவும் நேர்மையானவளாகவும் நீங்கள் நம்பக்கூடியவளாகவும் உள்ளேன். இதுவே என் அணுகுமுறை என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நான் ஒரு கடைவீதிக்குச் சென்றால் எனக்காக கடைவாசற்கதவைத் திறக்க பலரும் விரும்புவர். இதையே நான் எதிர்பார்க்கிறேன்.

நான் ஒரு பேருந்தில் ஏறினால் தாம் எழுந்து எனக்காகத் தமது இருக்கைகளை தர பலர் விரும்புவர். இதையே நான் எதிர்பார்க்கிறேன்.

இதுவே அனாவசிய கதை பேசும் கூட்டத்தினர் இருக்கும் அறைக்கு நான் சென்றால் அவர்கள் தமது பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஏனெனில் நான் புறம்பேசுவதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன் என்று அவர்கள் அறிவார்கள். இதுவே இஸ்லாமிய அணுகுமுறை. இதுவே நான் பிறரிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை பிறருக்கு உணர்த்தும்.

அதே வேளை, துயரங்கள் மேலிடும் வாழ்வில் உள்ள ஒருவர், என்னிடம் தமது துயர்களைப் பகிர்ந்து பேசலாம். அவர்களது ப்ரச்சினைகள் அமானிதமாகக் கருதப்படும்; பாதுகாக்கப்படும். மேலும் அவர்களுக்கு என் மூலம் கிடைக்கும் அறிவுரையோ மிக மிகச் சிறந்ததாக அமையும். ஆக, நான் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிமல்லாதோருக்கும் ஆலோசனை வழங்குகிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

இவையனைத்தும் மிகச்சிறிய விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் அவற்றை நான் உங்களிடம் விளக்கியதில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் உணர்ந்தீர்களா? அது உண்மைக்கு அருகில் உள்ளதாகும்.

(இப்பதிவு http://www.youtube.com/watch?v=kdxj_ygsCPQ&feature=youtu.be இந்த வீடியோவின் தமிழாக்கமாகும்)


உங்கள் சகோதரி
பானு

1 comment:

  1. ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சொற்கள் அடங்கிய விளக்கம். உள்ளமிதனை உணர்ந்து செயல்படவேண்டும் உண்மையான முஸ்லீம்பெண்களின் நிலைபாடு இப்படிதானிருக்கவேண்டும்..

    சகோதரிகு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete